Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செல்லுலார் சிறைக்கு ‘காலா பானி’ என்ற பெயர் ஏன்? - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம்!

Featured Replies

செல்லுலார் சிறைக்கு ‘காலா பானி’ என்ற பெயர் ஏன்? - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம்! - மினி தொடர் - பார்ட்1

 

அந்தமான்

அந்தமான் - வங்கக் கடலில் சிதறிக் கிடக்கும் க்ரீன் ஃபாரஸ்ட் கேக் துண்டங்கள். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஃபாரீன் லொகேஷன் போல பிரமை தரும். அருகே சென்று பார்த்தால் தமிழ், இந்தி வாடை வீசி, 'நானும் உங்க ஊர்தாம்ல' எனத் தோளில் கை போடும். அந்த வகையில், அந்தமான் பாரீனும் இல்லாமல், நம்மூர்தான் என நம்பவும் முடியாமல் நம்மை ஆனந்தத் தடுமாற்றத்திற்குள்ளாக்கும் திரிசங்கு சொர்க்கம். 

 

சென்னையிலிருந்து 1,300 கி.மீ தொலைவில் ஜம்மென அமர்ந்திருக்கிறது அந்தமானின் தலைநகரான போர்ட் ப்ளேர். கப்பலில் சென்றால் கிட்டத்தட்ட மூன்று நாள்கள் பயணம். விமானத்தில் இரண்டு மணிநேரம். நாம் தேர்ந்தெடுத்தது இரண்டாவது வழியை. போர்ட் ப்ளேரை விமானம் நெருங்கிவிட்டதை புசுபுசு மேகங்களுக்கிடையே தோன்றி மறையும் சின்னச் சின்னத் தீவுக்கூட்டங்கள் உறுதி செய்கின்றன. சின்னதும் பெரிதுமாக இப்படி மொத்தம் 572 தீவுகள் அந்தமான் மற்றும் நிக்கோபாரில் இருக்கின்றன. விமான நிலையத்தின் ரன்வேயை தூரத்துப் பாலத்திலிருந்து பார்த்தால் அவ்வளவு ரம்மியமாய் இருக்கிறது.

அந்தமானை வடக்கு, தெற்கு, மையம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். போர்ட் ப்ளேர் உள்ளிட்ட முக்கியச் சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் தெற்கு அந்தமானில்தான் இருக்கின்றன. இதனால், அந்தப் பகுதி மக்கள், சுற்றுலா வருவாயைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார்கள். வடக்கு அந்தமானின் முக்கியத் தொழில் விவசாயம். அரிசி, ஆரஞ்சு, காய்கறிகள் என சகலமும் இங்கிருந்துதான் தெற்கு அந்தமானுக்கு அனுப்பப்படுகின்றன.

ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தால் குளுகுளுவென தென்னை, பாக்கு மரங்களோடு நம்மை வரவேற்கிறது போர்ட் ப்ளேர். இங்கு இந்தி, தமிழ், பெங்காலி ஆகியவை பிரதானமாகப் பேசப்படும் மொழிகள். சட்சட்டென ஏறி இறங்கும் நிலப்பரப்புகள், சீதோஷ்ண நிலை, பச்சை வெளிகள், தூரத்தில் தெள்ளிய கடல் எனக் கேரளாவின் ஏதோவொரு நடுத்தர நகரத்தில் இருப்பதைப் போலவே இருக்கிறது நமக்கு. அந்தமானில் திடீர் திடீரென சாரல் அடிக்கிறது. அடுத்த சில நிமிடங்களிலேயே வெயில் சுள்ளென அறைகிறது. ஆகஸ்ட் இறுதி தொடங்கி பிப்ரவரி வரையான சீசன் நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். 

அந்தமான் செல்லுலார் சிறை

போர்ட் ப்ளேரின் முக்கியச் சுற்றுலாத்தலம் செல்லுலார் சிறை. அதன் இன்னொரு பெயர் காலா பானி. இந்தப் பெயருக்குப் பின்னால் ஒரு குரூர வரலாறு இருக்கிறது. சிப்பாய் கலகத்திற்குப் பின்னால் இந்திய விடுதலை அரசியல் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமானது. அவர்களுள் முக்கியமான ஆட்களைத் தொலைதூரத்தில் அடைத்து வைத்துவிட்டால் போராட்டங்கள் நீர்த்துப் போகும் என்ற கணிப்பில் அவர்களுள் சிலரை அந்தமானுக்குக் கடத்தியது ஆங்கிலேய அரசு. அப்படிக் கடத்தப்பட்ட கைதிகளைக் கொண்டே 1896-ல் பிரம்மாண்ட சிறை ஒன்றையும் கட்டத் தொடங்கியது. 1906-ல் கட்டி முடிக்கப்பட்ட அந்தச் சிறைதான் அதன்பின் அந்தத் தொலைதூர தீவில் நடந்த ரத்தவெறியாட்டங்களுக்கான மௌன சாட்சியம்.

நடுவே மைய கோபுரம், அதிலிருந்து பிரியும் ஏழு நீண்ட வராண்டாக்கள் (தற்போது மூன்று) என நட்சத்திர வடிவில் இருக்கிறது செல்லுலார் ஜெயில். உள்ளே நுழைந்தவுடனேயே வலது புறத்தில் அமைதியாய் அமர்ந்திருக்கிறது தூக்கு மேடை. வரிசையாய்த் தொங்கும் மூன்று தடித்த கயிறுகள்தான் இந்தச் சிறையின் எண்ணற்ற கைதிகளைக் கடைசியாய் அணைத்த கொடூரக் காதலிகள். மூன்றடி அகல வாசல், அதை மறித்து நிற்கும் இரும்புக் கம்பிகள் - இவற்றைக் கடந்து உள்ளே நுழைந்தால் எட்டுக்கு ஐந்து பரப்பளவில் வரவேற்கின்றன அறைகள். முன்னால் இருக்கும் சின்ன வாசலும், பின்சுவரில் எட்டடி உயரத்தில் இருக்கும் ஜன்னலும்தான் கைதிகளுக்கும் வெளியுலகிற்குமான தொடர்பு சாதனங்கள். இப்படியாக மொத்தம் 696 அறைகள்.

ஒவ்வொரு வராண்டாவிற்கும் தரைத்தளம் உள்பட மூன்று தளங்கள். அதில் மூன்றாவது தளத்தின் மூலை அறையில்தான் அடைபட்டு இருந்திருக்கிறார் இந்தச் சிறையில் பல போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய சாவர்க்கர். மகாவீர் சிங், யோகேந்திர சுக்லா, மெளல்வி லியாகத் அலி போன்ற எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்கள் அடைந்து கிடந்ததும் இந்தச் சிறைச்சாலைகளில்தான். வராண்டாக்களைத் தாண்டி மைய கோபுரத்தின் உச்சி ஏறினால்தான் மொத்தச் சிறையின் பிரம்மாண்டமும் உறைக்கிறது.

சுற்றிலும் பிரம்மாண்ட சுவர்கள், அதைத் தாண்டிச் சென்றாலும் கைதிகளை வரவேற்கப் போவது நான்கு புறங்களிலும் சூழ்ந்து நிற்கும் பிரம்மாண்டக் கடல்தான். இந்தச் சிறையை நிர்வகித்தவர்களிலேயே படுபயங்கரமான ஜெயிலர் எனக் கருதப்படும் டேவிட் பேரி கைதிகளை மிரட்டுவதற்காக அடிக்கடி சொல்லும் சொற்றொடர் இது. 'ஏ அற்ப சிறைவாசிகளே, இந்தச் சிறைதான் உங்களின் இறுதித் தங்குமிடம். இங்கிருந்து தப்பிக்கவே முடியாது. காரணம், சுற்றி பல மைல்களுக்குக் கடல்... கடல்... கடல்... மட்டும்தான். இந்த மொத்த சாம்ராஜ்யத்திற்கும் நான்தான் கடவுள். என்னை வணங்குங்கள்'. ஆம், சுற்றுச்சுவர்களில் ஆர்ப்பரித்தபடி வந்து மோதும் கடல் தப்பிக்க நினைக்கும் யாரையும் அசைத்துப் பார்த்துவிடும். இதனால்தான் இந்த இடத்திற்கு 'காலா பானி' (கறுத்த நீர் பிரதேசம்) என்ற பெயரும் வந்தது.

அந்தமான்

சிறை வளாகத்தில் ஒவ்வொரு மாலையும் நடக்கும் லைட் அண்ட் சவுண்ட் ஷோ மிகவும் பிரபலம். முதலில் இந்தியிலும் பின் ஆங்கிலத்திலும் நடக்கிறது இந்த ஷோ. ஸ்பீக்கர் வழியே கசியும் உருக்கமான குரல், வளாகம் முழுவதிலும் பொருத்தப்பட்டிருக்கும் கலர் கலர் விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டே சிறையின் தோற்றம், கறுப்புப் பக்கங்கள், சிறைவாசிகளின் போராட்டங்கள், அவர்களுக்குக் கிடைத்த குரூர தண்டனைகள், இரண்டாம் உலகப் போரில் இந்தச் சிறையை ஜப்பானியர்கள் கைப்பற்றியது போன்றவற்றைப் பற்றி தெளிவாக விளக்குகிறார்கள். சிறை கட்டப்படுவதற்கு முந்தைய காலம் தொட்டு இங்கு வேர் விட்டு கிளை பரப்பி நிற்கும் அரச மரம் ஒன்றுதான் இந்த ஷோவின் கதை சொல்லி. அந்தமான் செல்பவர்கள் மிஸ் பண்ணக்கூடாத இடம் இந்த செல்லுலார் சிறை.

ராஸ் தீவின் திகில் கிளப்பும் சிதிலங்கள், நார்த் பே தீவின் பக்பக் ஸ்கூபா டைவிங் போன்றவை அடுத்த பகுதியில்...

http://www.vikatan.com/news/india/104129-a-travelogue-on-andaman-trip-part-1.html

  • தொடங்கியவர்

சிதிலங்களாக நிற்கும் அமானுஷ்யத் தீவு! - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம் - பார்ட் 2

 
 

அந்தமான்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

 

அந்தமான் போர்ட் ப்ளேர் படகு குழாமில் இருந்து பார்த்தால் பச்சை பஞ்சு மிட்டாய் போல அடர்த்தியாய் உட்கார்ந்திருக்கிறது ஒரு தீவு. அதுதான் ராஸ். அங்கே செல்ல சிறிதும் பெரிதுமாக எக்கச்சக்க தனியார் படகுகள் இருக்கின்றன. நீண்ட க்யூவில் காத்திருந்து படகு ஏறினால் 20 நிமிடங்களில் நம்மை வாரி அணைத்துக்கொள்கிறது ராஸ் தீவு. 

ராஸ் தீவைச் சுற்றிப் பார்ப்பதற்கு முன் அதன் வரலாற்றைப் பார்த்துவிடலாம். முதன்முதலில் ஆங்கிலேயர்கள் அந்தமானுக்கு வந்தது 1788-ல். அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிய ப்ளேரின் நினைவாகத்தான் அவர் தரையிறங்கிய இடத்துக்கு 'போர்ட் ப்ளேர்' எனப் பெயர் வைக்கப்பட்டது. அங்கே குட்டியாய் ஒரு குடியிருப்பை அமைத்தவர் நான்காண்டுகள் கழித்து அருகிலிருந்த தீவு ஒன்றில் ஒரு மருத்துவமனையைக் கட்டினார். ராஸ் தீவில் கட்டப்பட்ட முதல் கட்டடம் இதுதான்.  

அதன்பின்னான 60 ஆண்டுகளில் ராஸ் தீவில் மட்டுமல்ல மொத்த அந்தமானிலும் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. சிப்பாய்க் கலகத்துக்குப் பின்னால், கைதிகளை அடைத்து வைக்க அந்தமான் சிறந்த இடம் என முடிவுசெய்த ஆங்கிலேய அரசு, நூற்றுக்கணக்கான கைதிகளையும் சில அரசு அதிகாரிகளையும் போர்ட் ப்ளேருக்கு அனுப்பி வைத்தது. அங்கே ஜாகை புரிந்தவாறு கைதிகளைக் கொண்டு அருகே இருந்த வைப்பர் என்ற தீவில் சிறை கட்டத் தொடங்கினார்கள் அதிகாரிகள். (அந்தமான் தீவுகளின் முதல் சிறை இதுதான். அதன்பின் கட்டப்பட்டதுதான் செல்லுலார் சிறை) ஆனால், போர்ட் ப்ளேரில் நிலவிய கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஆங்கிலேய அதிகாரிகளை வேறு புகலிடம் தேட வைத்தது.  

அந்தமான்

அப்படி தஞ்சம் புக, சிறந்தத் தீவாக தேர்ந்தெடுக்கப்பட்டது ராஸ். வைப்பர் தீவிலிருந்து கைதிகள் இங்கு அழைத்து வரப்பட்டார்கள். காடு, மரங்களை எல்லாம் அழித்து ஒரு பக்காவான ஆங்கிலேய காலனியை அமைக்கவேண்டியது கைதிகளின் கடமை என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி சிப்பாய்களுக்கான பெரிய தங்குமிடம், கவர்னர் மாளிகை, அதிகாரிகளுக்கான குவாட்டர்ஸ், கிரிக்கெட் மைதானம், டென்னிஸ் கோர்ட், ஆங்கிலேயர்களுக்கு உணவு தயாரிக்க ஒரு பேக்கரி, ஓய்வெடுக்க லேக் ஹவுஸ், நீச்சல் குளம், தேவாலயம், க்ளப் என அனைத்தும் கட்டப்பட்டன. விஷக் காய்ச்சலால் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட, அதைத் தடுப்பதற்காகவே பிரத்யேகமாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றையும் அமைத்தார்கள். அந்த அளவுக்கான பக்கா செட்டப் அது. வெறும் 0.12 சதுர மைல் அளவேயுள்ள கரடுமுரடு தீவில் இத்தனைக் கட்டடங்களைக் கட்டியதே ஆச்சர்யம்தான்.  

இந்தக் கட்டமைப்பு காரணமாகவே இங்கு குடும்பம் குடும்பமாக வந்து குடியேறினார்கள் ஆங்கிலேய அதிகாரிகள். விளைவு, அந்தமானின் தலைநகராக மாறியது ராஸ் தீவு. 1941-ல் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தீவில் பிளவுகள் தோன்றின. உயிருக்குப் பயந்த அதிகாரிகள் வந்தது போலவே கும்பலாக போர்ட் ப்ளேருக்கு இடம் மாறினார்கள். எஞ்சியிருந்த ஒன்றிரண்டு குடும்பங்களும் ஜப்பான் அந்தமானைக் கைப்பற்றிய சமயம் வெளியேறின. 

1947-க்குப் பின் ஆள் நடமாட்டமற்ற அமானுஷ்யத் தீவாக இருந்த ராஸ், 1979-ல் இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இந்தத் தீவின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்த கடற்படை அங்கிருந்த கட்டட சிதிலங்களை லேசாகப் புனரமைத்து சுற்றுலாத்தலமாக மாற்ற, இப்போது ஆயிரணக்கணக்கில் மக்கள் வந்து போகிறார்கள். படகில் சென்று இறங்கியவுடன் முதலில் வரவேற்பது ஜப்பான் வீரர்கள் இரண்டாம் உலகப்போர் சமயம் கட்டிய பங்கர் ஒன்றுதான்.

சின்னத் தீவுதான். ஆனாலும் புள்ளிமான்கள், முயல்கள், மயில்கள் என கண்ணை நிறைக்கும் விலங்குக் கூட்டம் உள்ளே நுழையும்போதே நமக்குள் சிலிர்ப்பையும் மெல்லிய பரவசத்தையும் வரவழைக்கிறது. தீவில் முழுமையான கட்டடம் என எதுவுமே இல்லை. எல்லாமே காலப்போக்கில் சிதிலமடைந்து மரங்களின் வேர்கள் படர்ந்து காணப்படுகின்றன. 'இதுதான் பேக்கரி, இதுதான் க்ளப்' என முன்னால் இருக்கும் அறிவிப்புப் பலகைகள்தான் அறிவுறுத்துகின்றன. ஒரே ஒரு உறுத்தல் சிதைந்து கிடக்கும் சுவர்களில் தங்களின் வக்கிரங்களை கொட்டி சிலர் எழுதியுள்ள கிறுக்கல்கள். கடல் தாண்டி வந்தும் கழிப்பறை சுவர் போல வரலாற்றுச் சிதிலங்களை வதைப்பதெல்லாம் கொடுமை!

தீவின் பிரதான கட்டடம் கவர்னர் மாளிகைதான். ஒரு காலத்தில் பர்மா தேக்கும் பளிங்குக் கற்களும் சீனக் கண்ணாடிகளுமாய் காட்சியளித்த அந்த மாளிகை இன்று பாழடைந்த பேய்ப் பங்களா போல இருக்கிறது. 'நீ ஒருகாலத்துல இந்தத் தீவையே கட்டியாண்டிருக்கலாம். ஆனா, நான்தான் எப்பவுமே ராஜா' என சொல்வதுபோல இயற்கை தன் மரக் கரங்களால் சுவர்களைத் துளைத்து கம்பீரமாய் நிற்கிறது. ஆட்டமாய் ஆடும் சாம்ராஜ்யங்களின் முடிவு என்ன என்பதை இதைவிடத் தெளிவாக எப்படி உணர்த்த முடியும்? 

அந்தமான்

 

ஒவ்வொரு சிதிலமும் ஒவ்வொரு கதை சொல்கின்றன. அமைதியாய் அவற்றின் முன் நின்றால் அது புரியும். தீவின் மறுமுனையில் ஒரு வியூ பாயின்ட் அமைத்திருக்கிறார்கள். அங்கிருந்து காணி நிலத்தைக்கூட நீங்கள் கண்ணால் காண முடியாது. நீலப்போர்வையை போர்த்தியபடி சாதுவாய்த் தூங்குகிறது பிரமாண்டக் கடல். கேளிக்கைகள் நிறைந்திருந்த ராஸ் தீவை 'கிழக்கு தேசங்களின் பாரீஸ்' என்பார்களாம் ஆங்கிலேயர்கள். வரலாற்றில் ஆர்வமுடையவர்களுக்கும் போட்டோகிராபர்களுக்கும் ராஸ் தீவு பாரீஸ் அல்ல, பேரடைஸ்!

http://www.vikatan.com/news/india/104187-a-travelogue-on-andaman-part-2.html

  • தொடங்கியவர்

கடலுக்கடியில் வாக்கிங், மீன்களோடு நீச்சல்! - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம் பார்ட் 3

 

சுற்றிலும் சத்தம் போடும் கடலும் குதிக்கும் அலைகளும் இருக்கும் இடத்தில் விளையாட்டுகளுக்கு மட்டும் பஞ்சமா என்ன? ஸ்பீட் போட் போன்ற சாதாரண விளையாட்டுகள் தொடங்கி ஸ்கூபா டைவிங், ஸீ வாக்கிங் போன்ற பக்பக் சாகசங்கள் வரை சகலமும் கோலாகலமாக நடைபெறுகின்றன அந்தமான் போர்ட் ப்ளேரைச் சுற்றியுள்ள தீவுகளில். அதிலும் போர்ட் ப்ளேரில் இருந்து அரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் நார்த் பே தீவு, முழுக்க முழுக்க நீர் விளையாட்டுகளுக்காகவே திறந்திருக்கும் தீவு. 

Andaman

 

 

நார்த் பேயின் முக்கிய நீர் விளையாட்டுகள் ஸ்னார்க்கலிங், ஸ்கூபா டைவிங், ஸீ வாக்கிங் ஆகிய மூன்றும்தான். ஸ்னார்க்கலிங்தான் இதில் முதல்நிலை சாகசம். நமக்கு மிதவை ஜாக்கெட்டை அணிவித்துவிட்டு மூச்சு விடுவதற்கு வசதியாக ஒரு குழாயையும் பொருத்திவிடுவார்கள். நீரின் மட்டத்தில் மிதந்தபடியே கொஞ்சம் கொஞ்சமாக கடல் பரப்புக்குள் இழுத்துச் செல்லப்படுவோம். உடன் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர் வருவார் என்பதால் பயப்பட வேண்டியதில்லை. நீர் மட்டத்தில் இருந்தபடி அடியில் நீந்திச் செல்லும் மீன்களையும் மின்னி மறையும் பாசிகளையும் கண்டு குதூகலிக்கலாம்.

ஸீ வாக்கிங் - 'எனக்கு தண்ணின்னா கொஞ்சம்....' என தயங்குபவர்களுக்கான விளையாட்டு இது. பெரிய படகு ஒன்றிலிருந்து ஏணி ஒன்று நீருக்குள் இறங்கும். அதைப் பிடித்தபடி நீருக்குள் இறங்கவேண்டும். அதிகமெல்லாம் இல்லை. இருபதடி, முப்பதடி ஆழம்தான். மூச்சுவிட வசதியாய் பெரிய பலூன் போன்ற மாஸ்க் ஒன்றைப் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மறுமுனை மேலே கப்பலில் இருக்கும் ஆக்ஸிஜன் குழாயோடு இணைக்கப்பட்டிருக்கும். கடல் மண்ணில் கால் பதிந்ததும் அப்படியே நடந்து போக வேண்டியதுதான். இறங்கும்போது ஓவர்டைம் பார்த்துத் துடிக்கும் இதயம் பாதம் வருடும் மணலையும் நம்மை உரசி நெளியும் மீன்களையும் பார்த்து மெல்ல மெல்ல சகஜமாகிறது. அப்படியே காலார நடை போட்டுவிட்டு மேலே ஏறினால் நீங்கள் நடந்ததும், விளையாடியதும் படங்களாகவும் வீடியோவாகவும் பதிவாகி இருக்கும். வருங்கால சந்ததியினருக்குக் காட்டி பெருமைபட்டுக்கொள்ளலாம்.

ஸ்கூபா டைவிங் -  சாகச விரும்பிகளுக்கான விளையாட்டு இது. இந்தியாவிலேயே அந்தமான்தான் ஸ்கூபா டைவிங் செய்ய சிறந்த இடம் எனச் சொல்லப்படுகிறது. நீச்சலுடை, ஆக்சிஜன் மாஸ்க் போன்றவற்றோடு இடுப்பை இருக்கும் கயிறு ஒன்றையும் கட்டிவிடுவார்கள். அதில், கடலுக்கடியில் நம்மை அழுத்தி வைத்திருக்க உதவும் கனமான கற்கள் சங்கிலி போல கட்டப்பட்டிருக்கும். பின் கால் மணி நேரத்துக்கு அனுபவம் வாய்ந்த ஸ்கூபா டைவர்கள் பயிற்சி தருவார்கள். நீருக்கடியில் உண்டாகும் அழுத்தத்தை சமாளிக்கும் டிப்ஸ், பயிற்சியாளரோடு பேசிக்கொள்ள சின்னச் சின்ன சைகைகள் போன்றவற்றை சொல்லித் தருவார்கள். 

அந்தமான்

அதன்பின், நீங்கள் சில வினாடிகள் கண்களை மூடி மல்லாக்க மிதந்தவாறு சூரிய வெப்பத்தை ரசிக்கலாம். விழித்துப் பார்க்கும்போது கடல் ஆழத்தில் பயணப்பட்டுக்கொண்டிருப்பீர்கள். உங்களைப் பின்னால் இருந்து பிடித்தபடி பயிற்சியாளரும் நீந்தி வந்துகொண்டிருப்பார். சர்சர்ரென கூட்டம் கூட்டமாக கடந்து செல்லும் மீன்கள் கூட்டத்தோடு நீங்களும் ஆனந்தமாய் செல்லலாம். அடியாழத்து மண்ணைக் கிளறி விளையாடலாம். தொட்டாச்சிணுங்கி போல சுருங்கி விரியும் பவளப் பாறைகளை பட்டும்படாமல் தொட்டுப் பார்க்கலாம். முப்பது நிமிட ஆழ்கடல் விளையாட்டுக்குப் பிறகு நீங்கள் கரையேறுவீர்கள். வெளிநாடுகளில் பெரும்பாலும், நீச்சல் தெரியாதவர்கள் ஸ்கூபா டைவ் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அந்தமானில் எல்லாருமே ஸ்கூபா டைவ் செய்யலாம். வயது பாரபட்சம் கூட இல்லை. சாகசம் முடிந்த பின்னர் பங்கேற்றதற்கு சாட்சியாக சான்றிதழ் வழங்குவார்கள்.

இதுதவிர, டால்ஃபின் ரைட், ஜெட் ஸ்கீயிங் என எக்கச்சக்க ஆப்ஷன்கள் இருக்கின்றன. உங்கள் பர்ஸின் கனத்தைப் பொறுத்து, நீங்கள் நீரில் முங்கி எழலாம். ஸ்கூபா டைவிங், ஸீ வாக்கிங் இதில் ஏதாவது ஒன்றைச் செய்ய ஒரு ஆளுக்கு 3500 ரூபாய் செலவாகும். மற்றதெல்லாம் கொஞ்சம் கம்மிதான்.

ஹேவ்லாக் தீவு:

போர்ட் ப்ளேரின் நகர நெரிசலில் இருந்து தப்பிக்க விரும்புபவர்கள் தஞ்சமடைவது ஹேவ்லாக் தீவுகளில்தான். கண்களை நிறைக்கும் அதி அற்புதமான கடற்கரைகளைக் கொண்டது இந்தத் தீவு. போர்ட் ப்ளேரில் இருந்து இரண்டரை மணிநேரம் கப்பலில் பயணம் செய்தால் ஹேவ்லாக்கை அடையலாம். தனியார் கப்பல்கள், அரசுக் கப்பல்கள் என எக்கச்சக்கமான கடலூர்திகள் ஹேவ்லாக்கை முற்றுகையிடுகின்றன. இந்தக் கப்பல்களில் பணிபுரிபவர்களில் 80 சதவிகிதம் தமிழர்களே!

கப்பல் பயணம் நெடுக, நம்மோடு கொஞ்ச தூரம் பயணித்துவிட்டு விடைகொடுக்கின்றன குட்டிக் குட்டித் தீவுகள். அடர்ந்த காடுகள், அதில் படியும் பனி, பனியைக் கலைக்க கீழேயிருந்து எகிறிக் குதிக்கும் அலைகள் என அனைத்தும் படு ரம்மியம். இதில் லயித்திருக்கும் கண்களை கப்பலின் ஹாரன் சத்தம் திடுக்கென எழுப்புகிறது. ஹேவ்லாக் வந்துவிட்டதற்கான அறிவிப்பு அது. பாக்கும் தென்னை மரங்களும் நிறைந்த தீவு ஹேவ்லாக். அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள், பத்தடி அகலமே உள்ள சாலை, சாலைகளில் வழிந்து ஓடும் ஓடை நீர் என கேரளாவின் குட்டிக் கிராமத்தை அப்படியே கண் முன்நிறுத்துகிறது ஹேவ்லாக். 

ஹேவ்லாக்கின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்கள் எலிபென்ட் பீச்சும், ராதாநகர் பீச்சும்தான். எலிபென்ட் பீச் - அலைகள் அதிகம் வராத அமைதியான கடற்பரப்பு. அதனால் இங்கும் நீர் விளையாட்டுகள் அதிகம் விளையாடப்படுகின்றன. ஆனால், வானிலை மோசமானால் பீச்சுக்குச் செல்லும் சாலைகள் சிதிலமடைந்துவிடுகின்றன. மறுசெப்பனிடும்வரை பீச்சுக்குச் செல்ல முடியாது. எலிபென்ட் பீச்சைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்றால் பளபளவென வரவேற்கிறது ராதாநகர் கடற்கரை. டைம்ஸ் இதழால் 'ஆசியாவின் மிக அழகான கடற்கரைகளுள் ஒன்று' என புகழப்பட்ட உப்பு வாடைப் பிரதேசம்.

அந்தமான்

 

உண்மைதான். ஏதோ பாரீன் லொக்கேஷனுக்குள் வந்துவிட்ட உணர்வைத் தருகிறது இந்தக் கடற்கரை. வான் நீல நிறத்தில் தண்ணீர், அதன் கீழிருந்து நம் பாதங்களை மோகத்தோடு இழுக்கும் பளிங்கு மணல் என பரவசத்தை டன்கணக்கில் வழங்குகிறது ராதாநகர். ஒருபக்கம் அடர்ந்த காடு. அதன் பச்சைப் போர்வை முடியும் இடத்தில் பளிங்கு மணல், அதில் ஊறும் உப்புநீர் - கவிஞர்களுக்கான சொர்க்கபூமி அது. காடுகளுக்கே உரிய பிரத்யேக 'ர்ர்ர்ர்ர்ர்ர்' என்ற ரீங்காரமும் கடலுக்கே உரிய சலசலப்பும் இணைந்து கொடுக்கும் மன அமைதியை வார்த்தைகளால் உணர்த்த முடியாது. ஆழத்தில் இருக்கும் கொசகொசப்புகள் எல்லாம் வெளியேறி நீரைபோலவே லேசாகிறது மனது. அதை உணர, போய் வாருங்கள் ஹேவ்லாக்கின் ராதாநகர் கடற்கரைக்கு.

http://www.vikatan.com/news/india/104452-a-travelogue-on-andaman-part-3.html

  • தொடங்கியவர்

தனியே... தன்னந்தனியே... நண்டுகள் ஓடும் தீவு - அந்தமான் எனும் திரிசங்கு சொர்க்கம் மினி தொடர் - பார்ட் 4

 

அந்தமான்

போர்ட் ப்ளேரின் பரபரப்பான நகரச் சந்தடி, ஹேவ்லாக் தீவிற்கு வந்து குவியும் சுற்றுலாவாசிகள், ராஸ் தீவின் சிதிலங்களோடு செல்ஃபி எடுத்துக்கொள்ளும் இளைஞர்கள், நார்த் பே தீவின் சலசலக்கும் நீர் விளையாட்டுகள் போன்றவற்றிலிருந்து ஒதுங்கியிருக்க நினைக்கும் அமைதி விரும்பிகளுக்கு ஏற்ற இடம் நீல் தீவுகள். அந்தமான் போர்ட் ப்ளேரிலிருந்து 42 கி.மீ தொலைவில் இருக்கிறது இந்தத் தீவு. கப்பலில் ஒன்றரை மணிநேரப் பயணம். 

 

ஹேவ்லாக் போன்ற தீவுகளை ஒப்பிடுகையில் நீல் ரொம்பவே குட்டித் தீவுதான். மொத்தப் பரப்பளவு 14 சதுர கி.மீ. சிப்பாய்க் கலகத்தில் இந்திய வீரர்களை அடக்கி வழிக்குக் கொண்டுவந்த பிரிட்டிஷ் ஜெனரல் ஜேம்ஸ் நீல் நினைவாக இந்தத் தீவிற்கு அவரின் பெயர் சூட்டப்பட்டது. வேறு எந்தத் தீவுகளிலும் இல்லாத அளவிற்கு இங்கே வங்காள மொழியின் வாடை தூக்கலாக அடிக்கிறது. காரணம், பங்களாதேஷ் பிரிவினையையொட்டி நடந்த போரில் அகதியான ஏராளமான மக்கள் நீல் தீவில் வந்து குடியேறினார்கள். அவர்களின் வம்சாவழியினர்தான் இன்றும் இங்கே பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். 

அந்தமான்

நீல் தீவின் முக்கியச் சுற்றுலாத்தளங்கள் மூன்று. சீத்தாப்பூர் கடற்கரை, ஹவ்ரா இயற்கைப் பாலம், பரத்பூர் கடற்கரை. வழக்கமான கடற்கரைகளைப் பார்த்துப் புளித்துப்போன கண்களுக்குச் சீத்தாப்பூர் கடற்கரை பஃபே விருந்தே அளிக்கிறது. பாசி படர்ந்த வழுக்குப் பாறைகள் கடற்கரை முழுவதும் புதைந்து கிடக்கின்றன. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு பச்சை மார்பிள் பதிக்கப்பட்ட புது வீட்டுத் தரை போல மின்னுகிறது. சன்னமான ஒலியோடு வந்து மோதும் நீரலைகளால் இந்தப் பாறைகளில் சின்னச் சின்ன நீர் வழித்தடங்கள் உருவாகியிருக்கின்றன. ஒவ்வொரு அலையின்போதும் தெளிந்த தண்ணீர் அந்தத் தடங்களில் குபுகுபுவென மேலேறி மணலைத் தொட முயல்வதும் அதைப் பாறைகள் கீழே தள்ளுவதுமாக அந்த விளையாட்டை மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதிகாலை வேளைகளில் சூரிய உதயத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் இந்தக் கடற்கரையில் குவிகிறார்கள்.  

அந்தமான்

ஹவ்ரா இயற்கை பாலம் - இந்த ஆர்ச் வடிவ பாறைகளைப் பல சினிமாக்களில் பார்க்கலாம். இந்தப் பாலத்தை அடையும் வழியே கொஞ்சம் கரடுமுரடாய்த்தான் இருக்கிறது. வழுவழு பாசி படர்ந்த பாறைகள், பாதங்களை லேசாகக் கீறும் கூர்மையான கற்கள் போன்றவற்றின் மீது நடந்துதான் இந்தப் பாலத்தை அடைய முடியும். போகும் வழி எல்லாம் நண்டுகளும் நத்தைகளும் ஊறிக் கிடக்கின்றன. ஆனால், விண்ணென ஓங்கி நிற்கும் பாலத்தைக் காணும்போது கால் பட்ட வலிகள் எல்லாம் மறந்தே போகின்றன. 'உன்னை நீ வேணா பெரியாளா நினைச்சுக்கலாம். ஆனா, என் முன்னாடி நீ ஒண்ணுமே இல்ல' என இயற்கை தன் பிரம்மாண்டத்தைக் காட்டி மிரட்டுகிறது.

நீல் தீவின் படகு குழாம் அமைந்திருப்பதே பரத்பூர் கடற்கரையில்தான். பார்க்க அலைகளே வராத ராமேஸ்வரம் கடல் போலத்தான் இருக்கிறது. கடலுக்குள் நூறடி தூரம் சென்றாலும் ஆழம் வெறும் ஒன்றரை அடிதான் அதனாலேயே குடும்பம் குடும்பமாக இங்கே தண்ணீரில் ஊறித் திளைக்கிறார்கள். துறுதுறு வாண்டுகளையும் நம்பிக் கடலுக்குள் விளையாட விட்டுவிட்டு கரையில் ஓய்வெடுக்கலாம். போக, இங்கேயும் ஸ்னார்க்கலிங், ஸ்கூபா டைவிங் போன்ற சாகசங்கள் நடைபெறுகின்றன.

 

அந்தமானைப் பொறுத்தவரை சுற்றச் சுற்றத் தீராத தீவுகள், பார்க்கப் பார்க்க சலிக்காத கடற்கரைகள் என லிஸ்ட் கொஞ்சம் நீளம்தான். குடும்பமாகவோ, கும்பலாகவோ சென்று ரிலாக்ஸாக ஓய்வெடுத்துவிட்டு வரலாம். போர்ட் ப்ளேர் தவிர மற்றத் தீவுகளில் மொபைல் நெட்வொர்க் தெளிவாக இருக்காதென்பதால் நச்சரிக்கும் செல்போனிடமிருந்தும் விடுதலை. இந்தத் தொடரில் சொல்லப்பட்ட இடங்கள் எல்லாமே தெற்கு அந்தமானில் இருப்பவைதான். வடக்கு அந்தமானில் இன்னும் ஏராளமான சுற்றுலாத்தளங்கள் இருக்கின்றன. வாய்ப்பிருந்தால் அந்தத் இடங்களையும் தரிசித்தப்பின் சந்திக்கலாம்.  

http://www.vikatan.com/news/india/104583-a-travelogue-on-andaman-part-4.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.