Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு

Featured Replies

கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு

 

 
nellaijpg

நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். 4 பேரும் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் காசிதர்மம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1). இவர்கள் 4 பேரும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (திங்கள்கிழமை) தீக்குளித்தனர்.

 

 

இது குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் கோபி கூறும்போது, "என்னுடைய அண்ணன் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை தங்கம்மா என்பவரிடம் கொடுத்திருந்தார். 8 மாதங்களுக்கு முன் வாங்கிய இந்தக் கடன் தொகைக்காக தங்கம்மா ரூ.2,34,000 வட்டி செலுத்தியிருக்கிறார். இந்நிலையில் அசல் தொகை ரூ.1.45 லட்சத்தை தருமாறு முத்துலட்சுமி என் அண்ணிக்கு நெருக்கடி கொடுத்தார். மிரட்டல் விடுத்துவந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் முகாமின்போது 6 முறை மனு கொடுத்தோம். மனுவை எஸ்.பி., அலுவலகத்துக்கு அவர்கள் மாற்றிவிட்டனர். எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அச்சன்புதூர் காவல்நிலையத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. ஆனால், அச்சன்புதூர் காவல்துறையினர் முத்துலட்சுமி தரப்புக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, மிகுந்த மன உளைச்சலோடு இன்று மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். நான் கழிவறை சென்று திரும்புவதற்குள் என்னுடைய சகோதரர் குடும்பத்தினர் இந்தக் கோர முடிவை எடுத்துள்ளனர். என் சகோதரர் குடும்பத்தினர் உயிரிழந்தால் அதற்கு மாவட்ட ஆட்சியரேப் பொறுப்பேற்க வேண்டும்" என்றார்.

90% தீக்காயம்:

நெல்லை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசக்கிமுத்து குடும்பத்தாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. 4 பேருக்கும் 90% தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் உறுதி:

பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டி பிரச்சினை நிலவுவதாக தகவல்கள் வருகின்றன. கந்துவட்டிப் புகார்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க, வருவாய்த் துறையினருடன் இணைந்து காவல்துறையில் தனி செல் அமைக்கப்படும். இதற்காகப் பிரத்யேகத் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்படும். இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்படும். கந்துவட்டி கொடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும்" என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19905023.ece?homepage=true

  • தொடங்கியவர்

நெல்லை தீக்குளிப்பு சம்பவத்தின்போது படம் மட்டும்தான் எடுத்தார்களா பத்திரிகையாளர்கள்? - விகடன் நிருபரின் நேரடி சாட்சியம்

 

தீக்குளிப்பு

கந்து வட்டிக் கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்பு சம்பவம் பல்வேறு தரப்பினரிடமும் அதிர்வு அலைகளை எழுப்பியுள்ளது. தொலைக்காட்சியில் அல்லது புகைப்படங்களில், உடல் முழுவதும் பற்றி எரியும் நெருப்புடன் தகிக்கும் அனலின் கொடுமையைத் தாங்க முடியாமல் அலைமோதும் பிஞ்சுக் குழந்தைகளின் உருவம் மனதை என்னவோ செய்கிறது. 

 

வழக்கமாகத் திங்கள்கிழமைகளில் பணிக்கு வரும்போது உற்சாகம் கரைபுரண்டு ஓடும். அதேபோல காலையிலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தோம். ஒவ்வொரு வாரமும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு வரக்கூடிய பொதுமக்கள் பல்வேறு குறைகளுடன் வருவார்கள், கிராமப் பகுதிகளிலிருந்து வரக்கூடிய பொதுமக்கள், ’மாவட்ட ஆட்சியரை எங்கு சென்று சந்திப்பது, மனு கொடுப்பது எப்படி’ எனக் கேட்கும் அப்பாவி மக்களுக்கு உதவி செய்வதுடன், அவர்கள் கொண்டு வரும் பிரச்னைகளைச் செய்தியாகப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். 

தீக்குளிக்க முயற்சி

ஆனால், 23-ம் தேதி வழக்கமான நாளாக இருக்கப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. காலை 9.30 மணிக்குப் பொதுமக்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். அப்போது, தென்காசியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்ற 77 வயது முதியவர் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். அவர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றினார். இதனால் பரபரப்பு அடைந்த போலீஸார், அவரிடமிருந்து கேனைப் பறித்ததுடன், உடனடியாக அவரை அழைத்துச் சென்றனர்.

அவரிடம் என்னவென்று விசாரித்தோம். அவருக்குச் சொந்தமாக காலிமனையும் வீடும் இருந்துள்ளது. காலிமனையை மட்டும் ஒரு நபரிடம் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். ஆனால், அவருக்குத் தெரியாமல் வீட்டையும் சேர்த்து எழுதி எடுத்துக் கொண்டார்களாம். அதனால், வீட்டையும் நிலத்தையும் இழந்து தவிக்கும் அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மனம் வெறுத்த அவர் தீக்குளிக்க முடிவெடுத்துள்ளார். அவரை போலீஸார் கலெக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். 

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின் பாதுகாப்புக்காக நெல்லையிலிருந்து போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டனர். அதனால் வழக்கமாக வரக்கூடிய அளவுக்கு போலீஸார் வரவில்லை. அத்துடன், வாயில்களில் எப்போதும் போல போலீஸார் நிறுத்தப்படவில்லை. நெடுஞ்சாலை ரோந்து வாகனத்திலுள்ள போலீஸார் மட்டுமே ஆட்சியர் அலுவலகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உறுதுணையாகச் சில காவலர்கள் மட்டுமே இருந்தனர். 

உதவும் செய்தியாளர்கள்

இந்தச் சூழலில் முதியவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், வாசுதேவநல்லூர் அருகே உள்ள பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள், புதிய தமிழகம் கட்சி நிர்வாகியின் தலைமையில், திரண்டு வந்தனர். தங்கள் கிராமத்தின் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி, கோஷமிட்டபடி அவர்கள் வந்தனர். அவர்களைத் தடுக்க போதுமான அளவுக்குக் காவல்துறையினர் அந்த இடத்தில் இருக்கவில்லை. அதனால் மனு கொடுக்கும் அறையில் முன்பாகப் பாதுகாப்புக்கு நின்ற ஓரிரு காவலர்களும் ஓடோடி வந்தார்கள். 

மீடியா முழுவதும் அதைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினார்கள். அப்போது, திடீரென மக்கள் எதிர் திசையில் இருந்த, அதிகாரிகள் மனு வாங்கிய அறையை நோக்கி ஓடினார்கள். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாத நிலையில், அந்தப் பகுதியை நோக்கி ஓடினோம். 10 அடி தூரம் ஓடியபோது கரும்புகை தெரிந்தது. மனு நீதி நாள் முகாம் நடக்கும் அறையின் எதிரில் ஏதோ தீப்பிடித்து விட்டதோ என்கிற எண்ணத்தில் ஓடோடிச் சென்றதும், அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ஓர் உருவம் உடல் முழுவதும் தீயுடன் அங்கும் இங்குமாக ஓடியது. 

அருகில் ஆண் ஒருவர், உடல் முழுவதும் வெந்த நிலையில் தரையில் அமர்ந்து இருந்தார். ஒரு பெண் அலறியபடி ஓடினார். அவருக்கு அருகில் இரு குழந்தைகள் உடலில் பற்றி எரியும் நெருப்புடன் அலைமோதியபடி இருந்தன. பெண்ணின் உடலில் பற்றிய தீயை அங்கு கிடந்த மணலை அள்ளிப் போட்டு அங்கிருந்தவர்கள் அணைத்தார்கள். அந்தக் குழந்தைகளின் மீது பற்றிய தீயையும் சுற்றிலும் இருந்த பொதுமக்கள் அணைத்துக்கொண்டிருந்தார்கள். 

உதவி

நடக்கும் சம்பவத்தின் கோரத்தைக் கண்டதும் நமது புகைப்படக்காரர் சில படங்களை அவசரமாக எடுத்தார். பின்னர், கேமராவை அவசரமாக பேக்கின் உள்ளே வைத்து விட்டு உதவி செய்யத் தொடங்கினார். அவரும் அந்தக் குழந்தைகள் மற்றும் பெண்ணின் மீது பற்றி எரியும் தீயை அணைக்க உதவினார். அதேபோல தினகரன் புகைப்படக்காரர்களான ராஜசேகரன், முருகன் ஆகியோரும் பதைபதைப்புடன் உதவிகளைச் செய்தனர். தினகரன் நாளிதழின் மூத்த செய்தியாளரான அய்.போபால்சாமி நடந்த சம்பவத்தைப் பார்த்ததும் பதைபதைத்தார்.

அவர், தீயை அணைக்க முயற்சி செய்ததுடன் ‘இந்தப் பச்சைக் குழந்தைகள்மீது தீ வைத்துக் கொளுத்த எப்படிய்யா மனசு வந்துச்சு’ என்று நொந்தபடியே அந்தக் குழந்தைகள் உடலில் ஒட்டியபடி எரிந்துகொண்டிருந்த துணிகளைப் பிய்த்து அகற்றினார். நாமும் உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் கொடுக்க போன் செய்தபோது முழு ரிங் சென்று கட்டாகியது. அடுத்து செய்வதறியாமல் திகைத்தபடியே இருந்தபோது ஒன்றரை வயது குழந்தையான அட்சய பரணிகா தீயின் கொடுமையைத் தாங்க முடியாமல் தரையில் குப்புற விழுந்தார்.

 

அருகில் தீயில் வெந்துகொண்டிருந்த 5 வயதுக் குழந்தையான மதி சரண்யா, தன்மீது எரியும் நெருப்பையும் பொருட்படுத்தாமல் தனது தாய் கதறுவதைப் பார்த்து, அவருக்கு அருகில் ஓடிச் சென்று தீயை அணைக்க முயற்சி செய்தாள். ஆனால், தீயின் கொடுமை தாங்காமல் தாய் தரையில் விழுந்ததும் துடித்துப்போன அந்தச் சிறுமி, அருகில் நின்று உரத்த குரலில் அழுததைப் பார்த்து அங்கிருந்தவர்கள் திகைத்தார்கள். 

நமது 20 வருட செய்திப் பணியில் எத்தனையோ இறப்புகளைப் பார்த்திருக்கிறோம். விபத்துகளைச் சந்தித்திருக்கிறோம். ஆனால், இது போன்ற கொடூரமான சம்பவத்தை இதுவரை சந்தித்ததே இல்லை. துடிக்கத் துடிக்க கண் முன்பாக கொளுந்துவிட்டு எரியும் குழந்தைகள் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை, அந்தக் குழந்தையின் கடைசி நேரத் தவிப்பு, கண்களைவிட்டு அகல மறுக்கிறது. இனி எப்போதும் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது என்கிற பரிதவிப்போடு செய்தியைப் பதிவு செய்தோம். ஆனாலும், அந்தச் சோகத்தின் கணம் நமது மனதில் புகையாக நிழலாடிக்கொண்டுதான் இருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/105777-does-the-reporters-to-be-blamed-in-the-nellai-family-torch-issue.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.