Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நாயகனுக்கு இன்று 63ஆவது பிறந்ததினம்

Featured Replies

உலக நாயகனுக்கு இன்று 63ஆவது பிறந்ததினம்

உலக நாயகன்  நடிகர் கமல்­ஹா­ச­னுக்கு இன்று 63 ஆவது பிறந்த தினமாகும்.

1959 ஆம் ஆண்டு ‘களத்தூர் கண்­ணம்மா’ படத்தில் குழந்தை நட்­சத்­தி­ர­மாகத் தொடங்­கிய அவ­ரது சினிமா பயணம் 57 ஆண்­டு­களைத் தாண்டி தொடர்­கி­றது.

kamal.jpg 1975 ஆம் ஆண்டில் ‘பட்டாம் பூச்சி’ படத்தில் கதா­நா­ய­க­னாக அறி­மு­க­மாகி அபூர்வ ராகங்கள், மூன்றாம் பிறை, 16 வய­தி­னிலே, வறு­மையின் நிறம் சிவப்பு, வாழ்வே மாயம், சலங்கை ஒலி, நாயகன், அபூர்வ சகோ­த­ரர்கள், இந்­தியன், ஹேராம், அவ்வை சண்­முகி, தேவர் மகன், விரு­மாண்டி, 10 வேடங்­களில் வந்து திரை­யு­லகை திரும்பிப் பார்க்­க­வைத்த தசா­வ­தாராம் என 220 க்கும் மேற்­பட்ட படங்­களில் நடித்து ஒவ்­வொரு படத்­திலும் தனி முத்­திரை பதித்­தி­ருக்­கிறார்.

தெலுங்கு, கன்­னடம், வங்­காளம், இந்தி திரைப்­ப­டங்­க­ளிலும் நடித்­துள்ளார். உலக நாய­க­னாக விளங்கும் கமல்­ஹாசன் பிண்­ணனி பாடகர், இயக்­குநர், தயா­ரிப்­பாளர் அவ­தா­ரங்­க­ளையும் எடுத்­துள்ளார்.

திரை­யு­லக சாத­னை­க­ளுக்­காக பத்­மஸ்ரீ, பத்ம பூஷண் விரு­து­களை பெற்றார். சிறந்த நடி­க­ருக்­கான தேசிய விரு­து­க­ளையும் பல தடவை வாங்கி இருக்­கிறார்.

18 பிலிம்பேர் விரு­துகள், டாக்டர் ­பட்டம், பிரான்ஸ் நாட்டின் உய­ரிய விரு­தான செவா­லியர் விரு­தையும் பெற்­றுள்ளார்.

விரைவில் அர­சி­யலில் குதிக்க முடி­வெ­டுத்­துள்ள கமல் அதற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­வ­தோடு அடுத்து இயக்­குநர் சங்கர் இயக்­கத்தில் ‘இந்­தியன் 2’ படத்தில் நடிக்கவுள்ளார்.

இன்று பிறந்தநாளை முன்னிட்டு ‘விஷ்வரூபம் 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

http://metronews.lk/?p=16892

  • தொடங்கியவர்

கமல் 63: சுவாரஸ்ய தகவல்கள்

கமல் ஸ்ரீதேவி ரஜினிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா

கமலின் 63 ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த சுவாரஸ்யமான 63 தகவல்கள் இங்கே.

1. பரமக்குடியில் வழக்கறிஞராக இருந்த டி. சீனிவாசனுக்கும், ராஜலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர் கமலஹாசன்.

2. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், மற்றும் நளினி. இவர்களில் கமல்தான் கடைக்குட்டி.

3. கமல் நடித்த முதல் படம் களத்தூர் கண்ணம்மா.

4. களத்தூர் கண்ணம்மா படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல்.

5. கமல் களத்தூர் கண்ணம்மாவில் நடிக்க காரணமாக இருந்தவர் அவரது குடும்ப மருத்துவர். அவர்தான் துறுதுறு என்று இருந்த கமலை ஏவி. மெய்யப்ப செட்டியாரிடம் அறிமுகபடுத்தியவர்.

 

6. அதன் பின் குழந்தை நட்சத்திரமாக கமல் பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, வாணம்பாடி, ஆனந்த ஜோதி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக கமல் நடித்தார்.

7. குழந்தை நட்சத்திரமாக அப்போதைய முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேஷனுடன் கமல் நடித்துள்ளார்.

8. கமலுக்கு திருப்புமுனையாக அமைந்தது 1973-ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் திரைப்படம்தான்.

9. நடிப்பு பற்றி அனைத்து அடிப்படை நுணுக்கங்களையும் கமல் கற்றது அவ்வை டி. சண்முகத்திடம் தான்.

கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநினைத்தாலே இனிக்கும் படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப்

 

 

படம்

 

 

10. கமல் கதாநாயகனாக உருவெடுத்தது ஒரு மலையாள படம் மூலம் தான். அந்த திரைப்படத்தின் பெயர் கன்னியாகுமரி. அந்த படம் வெளியான ஆண்டு 1974.

11. 1970 களில் கமல் ரஜினியுடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார். அவை நினைத்தாலே இனிக்கும், 16 வயதினிலே, அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது. இவை அனைத்தும் வெற்றி படங்கள்.

12. நினைத்தாலே இனிக்கும் படம்தான் கமலும் ரஜினியும் இணைந்து நடித்த கடைசிப் படம்.

13. கமல் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகியது அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலமாகதான். கே. பாலசந்தர் இந்த திரைப்படத்தை இயக்கினார். இப்படத்திற்காக, கமலுக்கு ஃபிலிம்பேர் விருது கிடைத்தது.

14. ராஜபார்வை திரைப்படம் வெற்றிபடமாக அமையாவிட்டாலும், கமலுக்கு பரவலான பாராட்டையும், விருதுகளையும் பெற்றுதந்தது இந்த திரைப்படம்.

15. எண்பதுகளில் கமல் இந்தி திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இந்த காலகட்டங்களில்தான் ஏக் துஜே கே லியே, சாகர், ராஜ் திலக் ஆகிய படங்களில் நடித்தார். இவை வெற்றிபடங்களாகவும் அமைந்தன.

கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா

16. நட்புக்கு எப்போதும் மரியாதை கொடுப்பவர் கமல். அதற்கு ஓர் உதாரணம், கமலின் தந்தை சீனிவாசனின் உடல் தகனத்திற்காக வைக்கப்பட்டு இருக்க, உடலை சுற்றி சந்திரஹாசன், சாருஹாசன், கமல் ஆகியோர் நிற்கிறார்கள். சிதையின் அருகில் இருந்த ஆர்.சி.சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா இருவரையும் கமல், `அண்ணா... நீங்களும் வாங்க` என்று கொள்ளி வைக்க அழைக்கிறார். இருவரும் நெகிழ்ந்து விட்டார்கள்.

17. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமலஹாசன்.

18. கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர்கள் ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா.

19. ஃபிலிம் ஃபேர் விருதை 18 முறைக்கும் மேல் வாங்கிய ஒரே இந்திய நடிகர் கமலஹாசன்தான். இனி எனக்கு விருது தராதீர்கள் புதிய இளைஞர்களுக்கு தாருங்கள் என்று ஃபிலிம் ஃபேருக்கு கமல் கடிதம் எழுதியதால், இந்த எண்ணிக்கை இத்தோடு நின்றது.

20. ஒரே வருடத்தில் ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் கமலஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அந்த படங்கள் வாழ்வே மாயம்; மூன்றாம் பிறை; சனம் தேரி கஸம்; சகலகலா வல்லவன்; ஹே தோ கமல் ஹோகயா

21. எண்பதுகளின் மத்தியில் `மய்யம்` என்ற இலக்கிய இதழை சிறிது காலம் நடத்தினார் கமல்.

22. மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார் கமல்.

23. தொடக்கத்தில் சிவாலயா என்ற நடனக் குழுவை நடத்தினார் கமல்.

24. தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகளுக்கு நடன மாஸ்டராக இருந்திருக்கிறார் கமல். அவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, மற்றும் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு `நான் ஏன் பிறந்தேன்`, சிவாஜிக்கு `சவாலே சமாளி`, ஜெயலலிதாவுக்கு `அன்புத்தங்கை`.

25. தன் உடலை தானம் செய்திருக்கிறார் கமல். தமிழ் திரை உலகத்தில் இதில் முன்மாதிரி இவர்தான்.

கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதன் உடலை தானம் செய்திருக்கிறார் கமல்

26. கமலின் விருமாண்டி, சுவாதி முத்யம், சாகர சங்கமம் படங்களுக்கு சவுத் ஏஷியன் இண்டர்நேஷனல் விருதுகள் தரப்பட்டுள்ளது.

27. எட்டு முறை மாநில அரசின் விருதை பெற்று இருக்கிறார் கமல். அதுபோல இரண்டு முறை ஆந்திர அரசின் விருதையும் பெற்று இருக்கிறார்.

28. கமல் இதுவரை ஐந்து மொழிகளில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

29. கமலின் ஆத்மார்த்தமான நண்பராக இருந்தவர் மறைந்த அனந்து.

30. கமல் இப்போது அரசியல் பேசவில்லை எண்பதுகளிலேயே பேசி இருக்கிறார். இலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, தமிழகத்தில் பேரணி நடத்தியவர் கமல்.

31. கமல் குடும்பத்தில் இருந்து மட்டும் மூன்று பேர் தேசிய விருது பெற்றிருக்கிறார்கள். அவர்கள் கமல், சாருஹாசன் மற்றும் சுஹாசினி.

32. கமலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து 2005-ம் ஆண்டு கெளரவித்தது சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம்.

33. கமலின் அற்புதமான நடிப்புதிறமைக்காக 1990-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதுபோல, 2014-ம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

34. கமல் முதன்முதலில் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது மலையாளபடமான கன்னியாகுமரி திரைப்படத்திற்காக.

35. தமிழில் முதல் ஃபிலிம்ஃபேர் விருது வாங்கித் தந்தப் படம் அபூர்வராகங்கள்.

36. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஃபிரஞ்ச் ஆகிய மொழிகளை சரளமாக பேசக்கூடியவர் கமல்.

37. தன் திரைப்படங்களுக்காக அதிக பிரச்னைகளை சந்தித்தவர் கமல். இதில் நகைமுரன் என்ன்வென்றால், பிரச்னையை சந்தித்த இவருடைய படங்கள் விருமாண்டி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், விஸ்வரூபம் அனைத்தும் மெகா ஹிட்.

38. உங்களது படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படம் எது? என்று கேட்டால், நான் நடிக்கப் போகும் அடுத்த படம் என்பார் கமல்.

39. பாலுமகேந்திரா மற்றும் பாரதிராஜா ஆகிய இரண்டு திரை ஆளுமைகளின் முதல் பட நாயகன் கமலஹாசன்தான். பாலுமகேந்திராவின் முதல் படம் கன்னடத்தில் வெளிவந்த கோகிலா. பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே.

40. கமல் பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து எழுதி ஒரு கட்டுரை தொகுப்பை வெளியிட்டார். அந்த தொகுப்பின் பெயர் `தேடி தீர்ப்போம் வா`.

கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதயம் பேசுகிறது வார இதழில் கமல் `தாயம்` என்ற தொடர்கதையை எழுதினார்

41. ரஜினிக்கு பிடித்தபடமான `முள்ளும் மலரும்` வெளியாவதற்கு காரணமாக இருந்தவர் கமல். அந்த படத்திற்கு பொருளாதார உதவிகளை செய்திருக்கிறார்.

42. இதயம் பேசுகிறது வார இதழில் கமல் `தாயம்` என்ற தொடர்கதையை எழுதினார். இந்த தொடர்கதைதான் பின்பு ஆளவந்தான் திரைப்படமாக உருமாறியது.

43. மெட்ராஸ் பாஷையை சரளமாக பேச கூடியவர் கமலஹாசன். மெட்ராஸ் பாஷைக்கு கமலின் குரு லூஸ் மோகன்.

44. சினிமா சென்டிமென்ட்களில் சிறிதும் நம்பிக்கையற்றவர் கமல். ஹே ராம் படத்தின் முதல் வசனமே, "சாகேத்ராம்... திஸ் இஸ் பேக் அப் டைம்". `பேக் அப்` என்ற வார்த்தையை முதல் வசனமாக வைப்பது சினிமாவில் கெட்ட சகுனமாக பார்க்கப்படும்.

45. கமலின் நற்பணி இயக்கத்தினர், இதுவரை 10,000-க்கும் அதிகமான ஜோடி கண்களை தானம் செய்திருக்கிறார்கள்.

46. முட்டையில் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக்கருவில் மிளகுப்பொடி தூவிச் சாப்பிடுவது கமலுக்கு பிடித்தமான உணவு. கமல், பிளாக் டீ பிரியரும் கூட.

47. முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தவர் கமல். மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபையில் அவரின் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.

48. உள்ளூர் அரசியல் மட்டும் அல்ல, உலக அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல்.

கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகமல்

49. கமல் தனது வீட்டில் மிகப்பெரிய வீடியோ லைப்ரரியை வைத்திருக்கிறார். அதில் உலக சினிமா தொடங்கி உள்ளூர் சினிமா வரை அனைத்து மொழி திரைப்படங்களும் உள்ளன.

50. கமல் உற்சாகமான மூடில் இருந்தால், தான் எழுதிய கவிதை லயத்தோடு நண்பர்களுக்கு பாடிகாட்டுவார்.

51. கமலுக்கு பிடித்தமான தலைவர் காந்தியடிகள்.

52. கமல் கோலிவுட் என்ற வார்த்தையை உச்சரிக்கமாட்டார். எப்போதும் `தமிழ் திரையுலகம்' என்று அழுத்தி உச்சரிப்பதே கமலின் வழக்கம்.

53. கமல் முதன் முதலில் தொடங்கிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் ஹாசன் பிரதர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் ராஜபார்வை திரைப்படத்தை தயாரித்தார். பின் அந்த நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டு, ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் புதிய நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார்.

54. தசாவதாரம் திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கமல்.

55. தற்போது ஆனந்த விகடனில் கமல் எழுதி வரும் `என்னுள் மையம் கொண்ட புயல்` என்ற தொடர் பல சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

கமல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஉள்ளூர் அரசியல் மட்டும் அல்ல, உலக அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பவர் கமல்

56. கமல் திரைப்படங்கள் பார்ப்பதைவிட அதிக நேரம் புத்தகம் படிப்பதில்தான் செலவிடுவார். அதுபோல, திரைப்பட தொழிற்நுட்பங்களை விரல் நுனியில் வைத்திருப்பார் கமல்.

57. இப்போது உலக நாயகன் என்று அழைக்கப்படும் கமலின் ஆரம்பகால அடைமொழி காதல் இளவரசன்.

58. டைம் இதழ் வெளியிட்ட உலகின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் நாயகன் திரைப்படமும் ஒன்று.

59. பாலசந்தர் கமலுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம், "மை டியர் ராஸ்கல்" என்று தொடங்கும்.

60. ஆர்.எஸ்.மனோகரின் இலங்கேஸ்வரன் நாடகத்தைப் திரைப்படமாக மாற்றும் விருப்பம் கமலுக்கு உள்ளது.

61. பாலச்சந்தரை அப்பா என்றும், பாரதிராஜவை அண்ணன் என்றும் கமல் அழைப்பார்.

62. கடந்த ஓராண்டாக சமூக ஊடகங்களில், குறிப்பாக ட்வீட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார் கமல்.

63. ட்வீட்டரில் 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்திருக்கிறார் கமல்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-41889341

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“ஏவிஎம்-ன் கார்தான் என் சம்பளம்!” ‘களத்தூர் கண்ணம்மா’ கமல் டு ‘இந்தியன்’ கமல்... ஒரு பார்வை!

 
 

கமல்... வயது 63. அனைத்துத் தளங்களும் அப்படித்தான் சொல்கின்றன. ‘பம்மல் கே சம்பந்தம்’, ‘வசூல்ராஜா’, ‘வேட்டையாடு விளையாடு’ பட சமயங்களில் இருந்த உடல்வாகுகூட இப்போது இல்லை. அறுபதைக் கடந்தபின் இன்னும் இளமையாகிக்கொண்டே வருகிறார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் பல சமயங்களில் அவர் சிரிக்கும்போது, ஏனோ, ‘களத்தூர் கண்ணம்மா’வில் ஜெமினி கணேசன் தூக்கிக்கொஞ்சும் காட்சியில் இருக்கும் சிரிப்புதான் நினைவுக்கு வரும். ‘தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் ஹட்டன்’ (The curious case of benjamin hutton) திரைப்படம் போல், வயதாக ஆக, இளமையாகிக்கொண்டே வருகிறார் கமல்.  

கமல்

 

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகுபவர்களில் எத்தனை நடிகர்கள் பெரியவனாகி சோபிக்கிறார்கள் என்கிற எண்ணிக்கையை எடுத்துப்பார்த்தால், கமல் மட்டுமே தனித்து நிற்பார். பதின்ம வயதில் அவருக்குமே, ஹீரோவின் அண்ணன் (குறத்தி மகன்) போன்ற வேடங்கள்தான் கிடைத்தன. மலையாளக் கரையோரம்தான் கமலை முதலில் தனி நாயகனாக அறிமுகம் செய்தது. கலைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்தமைக்குக்கூட கேரளத் திரையுலகம்தான் விழா எடுத்து கவுரவித்தது என்பது தனிக்கதை. 

தன் முதல் படத்தில் ஏவி.எம்.மிடம் காரை சம்பளமாகக் கேட்டது முதல் கமலின் பல செய்கைகள் ஆச்சர்யம்தான். ஏனோ இந்தக் கலைஞன் திரைக்குப் பின்னால் மட்டுமே இருந்திருந்தால், இன்னும் நிறைய நல்ல சினிமாக்கள் தமிழில் வந்திருக்குமோ என்கிற எண்ணம் எப்போதுமே இருந்ததுண்டு. காரணம் அவர் இயக்கிய ‘ஹே ராமு’ம், ‘விருமாண்டி’யும். ‘கமல் தான் திரைக்கதை எழுதிய பல படங்களின் ஒன் லைனர்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார்’ என்கிற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், அவர் திரைக்கதை எழுதும் அனைத்துப் படங்களிலும், ஒவ்வொரு கதாபாத்திரமும், அதன் முழு வடிவம் பெற்றிருக்கும். 

ஒரு புறம் தூக்குத் தண்டனை கூடாது என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்யும் ‘விருமாண்டி’, மற்றொருபுறம் ‘தீவிரவாதிகளைச் சுட்டுத்தள்ளலாம்’ என்று சுபாஷ் சந்திரபோஸாக மாறும் காமன் மேன்; ‘யாருன்னே தெரியாத ஒருத்தருக்குக் கண்ணீர் சிந்தும் ஒருவன் கடவுள், ஏன் நானுமேதான் கடவுள்’ என அன்பு பேசும் நல்லசிவம், ‘கடவுள் இருந்தா நல்லாருக்கும்’ என நக்கல் செய்யும் கோவிந்தராஜன், ‘எந்தக் கடவுள்’ என விரக்தி மனநிலையில் கேட்கும் விஸாம் அகமது கேஷ்மிரி, ‘ஞாபகம் ஒரு வியாதி’ என்கிற நந்து, ‘மறதி ஒரு தேசிய வியாதி’ என்கிற காமன் மேன்... இப்படி 90களுக்கு அடுத்து தான் நடித்த படங்களில் அத்தனை களேபரங்கள். 

ஏனோ தான் தயாரித்த முதல் படத்திலேயே, ‘படம் பிடிக்கலைன்னா காசு கொடுக்க வேணாம்’ என்பார் ரகு என்கிற கதாபாத்திரம். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் தன்மையில் முழுமையானதாகவே இருக்கும். ‘விஸ்வரூபம்’ படத்தின் மீதோ, ‘ஹே ராமி’ன் மீதோ, ‘தேவர் மகனி’ன் மீதோ நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், திரைப்படமாக அவற்றுள் வரும் கதாபாத்திரங்கள் கதைக்கு நியாயம்தான் செய்திருக்கும். 

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பிலிருந்து இன்றுவரை, காங்கிரஸும் பாஜகவும் கைகோத்தது இல்லை. ஆனால், அதையும் செய்யவைத்தது கமலின் ‘ஹே ராம்’ திரைப்படம். கூட்டாக நின்று இரு கட்சியும் படத்தை தடை செய்ய போராடியது. காந்தியைத் தவறாகச் சித்திரித்தது என்ற குற்றச்சாட்டு முதல் எண்ணற்ற சர்ச்சைகள். உண்மையில் காந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நாடாக இருந்திருக்க வேண்டும் எனப் பொது மேடைகளில் பேசிய ஒரே நடிகர் கமல்தான். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும், குரல் கொடுத்தது தனி வரலாறு. ஆனால், அவ்வளவு போராட்டங்களை மீறி வெளியான திரைப்படம், கமலை ‘விக்ரம்’ திரைப்படத்துக்குப் பின் இரண்டாம் முறையாகப் பொருளாதாரத்தில் ஜீரோவாக்கியதுதான் மிச்சம். ஆனால், தன் படங்களின் தோல்வியின்போது ஒருமுறை கூட கமல் மக்களின் ரசனையைக் கேள்விக்கு உட்படுத்தியதே இல்லை. 

கமல் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பர மாடலாக நடிக்கிறார் என்ற போதே, விமர்சனங்கள் பலவாறு எழுந்தன. அதைவிட அதிகமாக சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் போது வந்தது. வாய்ப்புகள் குறைந்ததால், சின்னத்திரைக்குக் கமல் வந்துவிட்டார் என்றது முதல், கமலின் செயற்கைத்தனம் அப்பட்டமாக இருக்கிறது என்றதுவரை எண்ணற்ற விமர்சனங்கள். ஆனால், இதெல்லாம் இரு வாரங்கள் மட்டுமே. மூன்றாவது வாரத்திலிருந்து, கமல் வரும் வாரஇறுதி நாள்களுக்காகவே ரசிகர்கள் காத்துக்கிடந்தார்கள். உண்மையில் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சி, கமலை பாமர ரசிகனிடமும் குடும்பங்களிடமும் கொண்டு சென்றது என்றால் அது மிகையல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் கமல் இவ்வாறாக சொல்வார். ஒப்பந்தத்தில் செய்வோம் என கையெழுத்திட்ட பிறகு, அதற்கு ஒத்துழைக்காமல், இப்படி பிடிவாதம் பிடிப்பது எந்த வகையில் சரி ?. எப்படி உங்களை எல்லாம் நம்பி சினிமாவில் வாய்ப்பு கொடுப்பார்கள். அரசியல், ட்விட்டர் புரட்சி என ஆயிரம் வேலைகள் இருந்தாலும், இன்னும் தன் கையில் இருக்கும் படங்களான இந்தியன் - 2, விஸ்வரூபம் -2 , சபாஷ் நாயுடு படங்களை முடித்துவிட்டுத்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார் கமல். 

ஆனந்த விகடனில் என்றோ படித்த நினைவு, சினிமாவுக்கு எந்தத் தொழில்நுட்பம் புதிதாக வந்தாலும், அதை முதலில் சென்று பார்ப்பதும், அதைத் தன் திரைப்படங்களில் பயன்படுத்துவதும் கமல்தான். புதிதாக வந்திறங்கிய ஒரு கருவியைக் காண, இரவு முழுக்க காத்துக்கிடப்பதுதான், இந்த வயதிலும் கமலை அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற்றுகிறது. பாரதிராஜா முதல்முறை கமலிடம் ‘16 வயதினிலே’ கதையைச் சொல்ல, அதற்கேற்ப சட்டையை அழுக்காக்கிக்கொண்டு, அலுவலகத்திலேயே நடித்துக் காண்பித்தாராம். 

கமல்

இளைஞராக இருந்தபோது படப்பிடிப்பினால் கால் உடைய, அந்தச் சமயத்தில் சங்கீதம் கற்க ஆரம்பித்தவர் பின் அதனை சினிமாக்களில் பயன்படுத்தினார். இந்த முறை தன் ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து கால் தவறி விழ, சில நாள்கள் பொறுத்துப்பார்த்துவிட்டு, ஆங்கிலத்தில் பிளாக் எழுதுவது; சின்னத்திரை என வந்துவிட்டார். என்றோ கற்ற நடனம், ‘விஸ்வரூபம்’ வரை பயன்பெற்றது. தாளம் தப்பித்தப்பி ஆடும், ‘துள்ளி துள்ளி’ பாடல் முதல், ‘உனைக் காணாது நான்...’ என உருக்கும் தௌஃபிக் வரை கமல் கிளாஸ்தான். பள்ளிப்படிப்பைத் தாண்டாத கமல், கற்கவும், புத்தகங்கள் படித்து தன்னை அப்டேட் செய்துகொள்ளவும் என்றும் தயங்கியதே இல்லை.

கமலுக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் விஸ்வநாத்தும் ஒருவர். ‘சலங்கை ஒலி’ படத்தில் வரும் இறுதிக்காட்சிதான் கமலின் ஆல்டைம் ஃபேவரைட். அரங்கமே கூடி இருக்க, ரசிகர்கள் கைத்தட்டும் காட்சி, இன்னும் இன்னும் என அந்தக் கலைஞன் நாற்காலியில் அமர்ந்திருப்பான். ஏனோ, அதுதான் நிஜ கமல் எனப் பலமுறை தோன்றும். கமல் திரைக்குப் பின்னால் இருந்திருந்தால், நல்ல சினிமாக்கள் கிடைத்திருக்கும் என்பதெல்லாம் நிஜம்தான். ஆனால், இத்தனை ஆண்டுகாலம் கமல் திரையுலகில் நீடித்து இருப்பாரா என்பதும் சந்தேகமே. கமர்ஷியல் வெற்றிகளில் வரும் பணத்தை, பரிசோதனை முயற்சிகளில் முதலீடு செய்வது என்பது கமலின் வாடிக்கை.  

பெரும்பாலும் பெரிய நடிகர்களுக்கான பாடல்களில், காட்சிகளில் அவர்களுக்கென சில வரிகளை பாடலாசிரியர்கள், கதாசிரியர்கள் எழுதுவார்கள். சமயங்களில் கமலே அவற்றை செய்ததுண்டு. ‘உத்தமவில்லன்’ படத்தில் மகன் கதாபாத்திரம் கமலிடம் பேசும் அந்தக் காட்சி, "ஒரு நல்ல ஸ்கிரீன் பிளே எழுதணும், கோடம்பாக்கத்துல இருக்குற எல்லாருக்கும் நீங்க யாருன்னு காட்டணும்" என வரும் வசனம் தனக்காகவே எழுதிய ஒன்றாகத்தான் தோன்றும். ‘வசூல் ராஜா’ படப் பாடலில் வருவதுபோல் கமல், ‘சமுத்திரம் இல்லை, ஆனால், நிச்சயம் தேன்தான்’. 

நம்மைப்பொறுத்தவரை, கமல் ஒரு வெற்றியாளன்தான். ஆனால், அவரைப் பொறுத்தவரை, கமல் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டிருக்கும் ஒரு கலைஞன் அவ்வளவே. இப்போது அரசியலில் அடியெடுத்துவைக்க நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார். இது சினிமா இல்லை. நாள்களும் அதிகம் இல்லை என்பது கமலுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான், இவ்வளவு யோசித்துக்கொண்டிருக்கிறார். வழக்கம்போல், முதலிரண்டு அத்தியாயங்கள் சொதப்பலாம். ஆனால், முழுமையாகக் கற்றுக்கொண்டால், அரசியலிலும் சாதிப்பார் என்றே தோன்றுகிறது!

கமலுள் மையம் கொண்ட புயல், தமிழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு உதவட்டும். 

 

வாழ்த்துகள் கமல்!

https://cinema.vikatan.com/tamil-cinema/107100-the-man-who-learns-daily-has-a-name-he-is-kamal.html

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: கமல்- இந்திய சினிமாவின் விஸ்வரூபம்!

 

 
kamaljpg

பட உதவி: ஏஞ்சலின் ஜெயா.

நடிகர் கமல்ஹாசன் தனது 63-வது பிறந்தநாளை இன்று (நவம்பர் 7) கொண்டாடி வருகிறார். அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கமல் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்த நெட்டிசன்கள் கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

வாசுகி பாஸ்கர்

'அபூர்வ சகோதரர்களி'ல் இருந்து 'அவ்வை சண்முகி', 'இந்தியன்' வரை அவர் தன்னை வித்தியாசப்படுத்தி நடித்த கதாபாத்திரங்களுக்கு அவர் செய்த நியாயம், தனி புத்தகமாகவே போடுமளவு அசாத்தியம்.

எல்லா கமர்ஷியல் படங்களிலும் கமல் தனக்கான ஸ்கோப்பை "இந்தப் படத்துக்கு இது போதும்" என்று இருந்திருக்க மாட்டார், கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நியாயத்தை செய்வதில் கமல் குறையே வைத்ததில்லை.

இப்போல்லாம் குடிச்சவன் மாதிரி நடிக்கணும்னா, உண்மையாவே கொஞ்சம் குடிச்சிட்டு நடிக்குறாங்க. அமெரிக்காவின் கடும் குளிர் காலத்தின் பனியின் சாரல் முகத்தில் அடித்தால் எப்படியிருக்குமென்று, வேலூர் வெப்பத்தில் நின்று நடிக்கக் கூடியவர் கமல்.

கலையின் ஆதர்சத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கிருஷ்ணா அறந்தாங்கி

'பதினாறு வயதினிலே' படத்தில் பலமுறை ரஜினி 'இது எப்படி இருக்கு' என்ற வார்த்தையை சொல்லும்போதெல்லாம் கிடைக்காத கைதட்டல், கமல் ஒருமுறை சொல்லும்போதே கிடைக்கும்... கமல் நடிப்பின் நினைவுகள் எப்போதும் சுகம் தான்.

Srinivasan J

இந்திய சினிமா வரலாற்றில் கமல்ஹாசன் என்ற ஒரு நடிகருக்கு தவிர்க்க முடியாத இடம் ஒன்று உள்ளது. கமல் செய்யாத சாதனைகளே கிடையாது.

நான்கு முறை தேசிய விருதும், மூன்று முறை சர்வதேச விருதும் பெற்ற ஒரே இந்திய நடிகர். இதுவரை இந்திய நடிகர்களிலேயே இவர் நடித்த படங்கள் தான் அதிக முறை (7 முறை) ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது.

ஒரே வருடத்தில் ஐந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்தவர் கமல்ஹாசன். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. அந்த படங்கள் 'வாழ்வே மாயம்'; 'மூன்றாம் பிறை'; 'சனம் தேரி கஸம்'; 'சகலகலா வல்லவன்'; 'ஹே தோ கமல் ஹோகயா'. இதுவரை உலகிலேயே அதிக விருதுகள் (170க்கும் அதிகம்) பெற்ற ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.

நாடி நரம்பு சதை, ரத்தம் முழுவதும் கலை உணர்வு இருப்பவனால்தான் சினிமாவில் இவ்வளவு சாதனைகளை செய்ய முடியும். பிறவிக் கலைஞன் உலக நாயகனுக்கு இந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

Ramani Murugesh

ஜெயலலிதா, விஜயகாந்த், ஹெச். ராஜாவுக்கெலாம் அரசியலில் இடம் கொடுத்திருக்கிறோம். அவர்களையெல்லாம் விட கமல் முதிர்ச்சியான அரசியல்வாதியாகவே இருப்பார் என்றே நம்புகிறேன்!

அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Priya Murali

நல்லது செய்தால் மட்டும் போதாது, அது சரியாக, சரியானவர்களுக்கு செய்ய வேண்டும். தப்பான ஆளுக்கு தானத்தை கொடுப்பது தவறு. நல்லது செய்வதையும் ஜாக்கிரதையாக செய்யவேண்டும்...#கமல்

Parthiban Radhakrishnan

நேற்று பெய்த மழையில்

இன்று முளைத்த காளான் அல்ல.

என் ரசனை முளைக்கக் காரணங்களில்

முக்கியமானது கமல் என்ற கலைமழை!

இருவிதழ்களுக்கிடையே

சிறு முத்தமாய் அந்'நன்றி'

Senthil Jagannathan

தேடித்தேடி கற்றலும், தீவிர பயிற்சியும், திறன் நிரூபிக்கும் முயற்சியையும் தொடர்ந்து.. செய்பவனே தன்னுடைய தொழிலில் பண்டிதனாக முடியும். அப்படியான ஒரு மறுக்க முடியாத சினிமா பண்டிதன் மகா கலைஞன் கமலஹாசன்.

அவர் சினிமாவை வெறும் தொழிலாக பார்க்காமல் தன்னடைய வாழ்க்கை முறையாக மாற்றிக் கொண்டதே, இன்று இந்திய சினிமாவின் முதன்மை ஆளுமையாக அவரை அமர வைத்திருக்கிறது.

இந்திய சினிமாவின் விஸ்வரூபம் கமல்ஹாசனுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

Sridhar Venkatesan

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்யப்பட்ட நாள் - இன்று. #கமல்ஹாசன்

Vasmathyya Joghee

தமிழுக்கே அகராதி தேட வைத்த, கலையுலக ஆண்டவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Maggie @maggi2261974

என் மூச்சு உள்ளவவரை, கமல் என்னும் விஸ்வரூப கலைஞனுக்கு மட்டுமே ரசிகை.

iamcybersimman @iamcybersimman

தொழில்நுட்பப் புரிதல் மிக்கவர் கமல்; அதற்காக அவரை ஆதரிக்கலாம் எனத்தோன்றுகிறது. #MaiamWhistle

Ezhilan M

கமல் நடித்ததில் எனக்கு பிடித்தது.. #BigBossTamil

ரஹீம் கஸாலி

நான் அரசியலுக்கு வந்தால், என்னை நோக்கியும் கேள்விகள் எழுப்பப்படலாம் - கமல்.

இங்கே கடவுளையே கேள்வி கேட்பாங்க. ஆழ்வார்பேட்டை ஆண்டவரையா விட்டுடுவாங்க?

Mynthan Shiva

கமல் எடுத்த ‘மிக மோசமான’ முடிவு அரசியலுக்குள் இறங்குகிறேன் என்பது. அதற்குள் அவரை இழுத்துவந்தது, இல்லை இல்லை தள்ளிவிட்டது, தொடர்ச்சியான பட தோல்விகள்.

அதற்கு காரணம் அவரது பரீட்சார்த்த முயற்சிகள். எது எப்படியோ, ஒரு அற்புத திறமையாளனை இழந்துவிட்டோம்.

HBD பாப்பூ @SolitaryReaper

கமல் உடனே செய்ய வேண்டியது:

1. மீடியாவை இன்னும் துளி பொறுமையோடு கையாள்வது

2. எதற்கெடுத்தாலும் சினிமாவை ஒப்புமை செய்வதைத் தவிர்ப்பது

Hariharasuthan Thangavelu

பொதுவாக கமல் படங்களில் கதாநாயகனுக்கென பிரத்யேக ஸ்டைல் இருக்காது! அப்படி ஏதேனும் அவர் செய்திருந்தால் அது காலங்கள் கடந்தும் கமல் பெயர் சொல்லும் ஸ்டைலாக மாறிவிடும். 'சத்யா'வில் காப்பை கையில் இறுக்கிவிட்டு அடிக்கும்போது ஒவ்வொரு ரசிகனும் அடுத்த காட்சிக்கு டிக்கெட் வாங்கினானோ இல்லையோ முதலில் ஒரு காப்பை வாங்கி கையில் மாட்டிக்கொண்டான், படம் வெளியாகி 30 வருடங்கள் கழித்து இதை எழுதிக் கொண்டிருக்கும் என் கைகளிலும் காப்பு இருப்பதற்கு காரணம் கமல்! 'தேவர் மகன்' பங்க் முடி மற்றும் அரிவாள் மீசை, 'விருமாண்டி'யில் கிருதாவை கனெக்ட் செய்த கிருதா மீசையெல்லாம் காலத்திற்கும் கமல் பெயர் மட்டுமே சொல்லும்.

25 வயதில் 'ராஜ பார்வை' பார்த்தவர், தன் 63 வது வயதில் ராஜ மகுடத்தை பார்க்கிறார்! தமிழ் சினிமாவின் ஆளவந்தானும், தமிழகத்தை ஆள வந்துகொண்டிருப்பவரும் ஆன கலையின் மகன் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பா. வெங்கடேசன்

ஒரு பெண்ணை உலகமே அக்கா, அக்கான்னு கூப்பிடும்.அந்த பெண்ணிடம் 'லவ் யூ' சொல்லி மனசுல தனியா இடம் பிடிப்பான் பாரு ஒருத்தன்! அவனுக்கு "அபூர்வ ராகங்கள் கமல்" என்றே பெயர்!

Baradhi Kalyan

அடடா... அடடா ...

கமல் மழைடா ..!!

Live @ Let Live

தமிழர் நலன் கருதி பணி தொடங்கிவிட்டார் #கமல்ஹாசன்.

kadhalan

'அம்மாவும் நீயே' டூ 'ஆண்டவர்'

DOAUKU-UIAA6ZeL
 

Nelson Xavier

கமல் என்பதற்கு 'தாமரை' என்றே பொருள் அருள்கிறது அகராதி !

அருண்காந்த் @IamHarunKanth

தத்ரூபங்களுக்காக தனது ரூபம் மாற்றி வியக்க வைக்கும் 'விஸ்வரூபம்'. அற்புத நடிப்பின் 'மகாநதி' பிரவாகம். கலைகளின் நாயகன் கமல்ஹாசன், #HBDkamalhaasan.

Pattukkottai Prabakar Pkp

உங்கள் மொழியறிவும், வார்த்தைப் பிரயோகங்களும் பல சமயம் வியக்க வைக்கின்றன. மெச்ச வைக்கின்றன. ஆனால் நீங்கள் கற்றவர் சபையில் மட்டும் கைத்தட்டல் பெற்றால் போதுமா? அதிகம் கல்லாதவர் சபைக்கும் உங்கள் கருத்துகள் சென்றடைய வேண்டுமென்றால் மொழி நடையில் எளிமை அவசியமில்லையா?

நீங்கள் தீவிர அரசியலுக்கு வந்தால்.. சினிமாவில் தொடர முடியாது என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் ரசிகர்களில் ஒருவனாக அது எனக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் ஒரு இழப்பே.

'ராஜ பார்வை', 'நாயகன்', 'குருதிப் புனல்', 'தேவர் மகன்', 'நம்மவர்', 'உன்னால் முடியும் தம்பி', 'அன்பே சிவம்', 'விருமாண்டி', 'ஹேராம்', 'மகாநதி' என்று தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டும் படங்களைக் கொடுத்த ஒரு அற்புதக் கலைஞனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Vini Sharpana

அதிகம்பேர் அரசியலுக்கு வந்தால்தான் போட்டியில் மக்களுக்கான சிறப்பான திட்டங்களை செயல்படுத்த முடியும்; அரசியல்வாதிகளும் ஒழுங்காக இருப்பார்கள். இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆண்டுகொண்டிருந்தால் 'இவங்க கொஞ்சமா தப்பு பண்ணிருக்காங்க.... அவங்க அதிகமா தப்பு பண்ணியிருக்காங்க... அதனாலதான் இவங்களுக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வச்சோம்' என்பதைத்தான் திரும்பத் திரும்ப மக்களும் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதனால் எந்த நன்மையும் நடக்கப்போவதில்லை. கமல் அரசியலுக்கு வரட்டும்..!

பிறந்தநாள் வாழ்த்துகள் கமல்.

http://tamil.thehindu.com/opinion/blogs/article19997481.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.