Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தியா, எம்.ஜி.ஆர், சோ, ஜெயலலிதா... இது போயஸ் கார்டன் வீட்டின் கதை!

Featured Replies

சந்தியா, எம்.ஜி.ஆர், சோ, ஜெயலலிதா... இது போயஸ் கார்டன் வீட்டின் கதை!

 
 

போயஸ் கார்டன்

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக நடந்துவரும் வருமானவரித்துறை ரெய்டு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் இல்லங்களில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனை, அதிர்ச்சிகரமாக இப்போது ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்தையும் தொட்டிருக்கிறது.

 

மனிதர்கள் வாழ்வில் வீடு என்பது மனித உறவுகளுக்கு ஈடான ஓர் பந்தம் கொண்டது. ரத்தமும் சதையுமாக மனிதர்கள் எப்படி உணர்வுபூர்வமானவர்களோ அப்படி செங்கற்கள், சிமென்டினால் கட்டப்பட்ட வீடுகளுக்கும் அந்த மனிதர்களோடு அவர்கள் வாழும் காலத்திலும் அதன்பின்னும் நெருக்கமான ஒரு பந்தம் இருப்பதுண்டு. அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டை, போயஸ்கார்டனில் 81, இலக்கமிட்ட வேதா இல்லம் வெறும் விலாசம் அல்ல; ஜெயலலிதா என்ற தமிழக ஆளுமையின் அடையாளம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் இந்த இல்லத்துடன் இன்றுவரை ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். போயஸ் இல்லம் 'ஜெயலலிதாவின் அழுகையை ஆறுதல்படுத்தியிருக்கிறது.’ ‘தனிமையை தட்டிக்கொடுத்து மறக்கச்செய்திருக்கிறது.' 'துயரத்தைத் துடைக்க முயற்சித்திருக்கிறது.' 'மனச்சோர்வுக்கு மருந்தாக இருந்திருக்கிறது.' இப்படி ஜெயலலிதாவின் இளமைக்காலம் துவங்கி இறப்பின் இறுதிநிமிடங்கள் வரை அந்த வீட்டில் மிதந்துகிடக்கிற உணர்வுகளுக்கு வயது கிட்டதட்ட அரை நூற்றாண்டு. 

போயஸ் கார்டன் இல்லம் ஜெயலலிதா வாழ்வில் இடம்பெற்றது எப்படி...

சந்தியா

50-ம் ஆண்டில் கணவர் ஜெயராமின் திடீர் மறைவையடுத்து மைசூரில் இருந்து சென்னைக்கு தன் இரு குழந்தைகளுடன் குடிபெயர்ந்தார் சந்தியா. தங்கையும் அன்றைய பிரபல நடிகையுமான வித்யாவதி வீட்டில் தங்கியிருந்தபோது சினிமா வாய்ப்புகள்  அவரைத் தேடிவந்தன. சில கன்னடப்படங்களில் அவர் நடித்தார். கொஞ்சம் வசதி வந்ததும் அடையாறு, காந்தி நகரில், நான்காவது மெயின் ரோட்டில் ஓரளவு வசதிகொண்ட ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். ஜெயலலிதா, ஜெயக்குமார் இருவரின்  பால்ய வயதும் இங்குதான் கழிந்தது. சினிமாவில் ஓரளவு புகழடைந்தபின் தி.நகர் சிவஞானம் தெருவுக்கு இடம்பெயர்ந்தார் சந்தியா.  

jaya_aval_pop_15041.jpgபின்னாளில் ஜெயலலிதாவுக்கு கன்னடப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அதன்மூலம் இயக்குநர் ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை என்ற படத்தில் முதன்முறையாக அறிமுகமானார். பிறகு, எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் வாய்ப்பு, ஒரே நாளில் அவருக்கு புகழ் தேடித்தந்தது. சில வருடங்களில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையானார். அதன்பிறகு மகளின் கால்ஷீட்டை கவனித்துக்கொண்டு வீட்டோடு முடங்கினார் சந்தியா.

1960 களின் பிற்பகுதியில் ஜெயலலிதா புகழின் உச்சியில் இருந்தபோது, மகளின் வருங்காலத்துக்காக பிரமாண்டமாக ஒரு வீட்டை கட்டி எழுப்பும் ஆசை சந்தியா மனதில் உருவானது. தேனாம்பேட்டை பகுதியில் 1967-ம் ஆண்டு 10 கிரவுண்ட் இடத்தை வாங்கினார் சந்தியா. ஜெயலலிதாவின் விருப்பத்துக்காக பலமுறை இந்த வீட்டின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக தற்போது முன்பகுதியில் உள்ளதுபோல் கட்டப்பட்டது. இப்படி சிமென்ட் ஜல்லியோடு மகளின் எதிர்காலத்தையும் குழைத்துக் கட்டிய வீடு போயஸ் கார்டன் இல்லம். ஆனால், பார்த்துப்பார்த்து மகளுக்காக எழுப்பிய இல்லத்தின் கிரகப்பிரவேசத்தின்போது சந்தியா இல்லாமல் போனாதுதான் ஜெயலலிதா வாழ்வில் நிகழ்ந்த துரதிர்ஷ்டம். 

71-ம் ஆண்டின் மத்தியில் வீடு கட்டும் பணி நிறைவடைந்திருந்த நிலையில் ஒருநாள் (அக்டோபர் 31-ந் தேதி) திடீரென ரத்த வாந்தி எடுத்தார் சந்தியா.  பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மறுநாள் நவம்பர் 1-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். வீட்டின்  பூமி  பூஜை நடந்த சமயம் அதுதொடர்பாக உறவினர்களுக்கு சேலை எடுப்பது தொடர்பாக  'எங்கிருந்தோ வந்தாள்' படப்பிடிப்பிலிருந்த மகளிடம் பேசவந்தார் சந்தியா. அப்போது இருவருக்குமிடையே சிறு சிறுவாக்குவாதமானது. அப்போதுதான் அமங்களமாக தாயிடம் சொன்ன ஓர் வார்த்தை பலித்துவிட்டதாக ஜெயலலிதாவே சொல்லி வருந்தியிருக்கிறார் பின்னாளில். 

1972-ம் வருடம் மே மாதம் 15-ம் தேதியன்று போயஸ் கார்டன் இல்லம் கிரகப்பிரவேசம் நிகழ்ந்தது. மகளோடு மகிழ்ச்சியாக அந்த நாளை கொண்டாடியிருந்திருக்கவேண்டிய சந்தியா வீட்டின் சுவரில் புகைப்படமாக தொங்கிக்கொண்டிருந்தார். 

வீட்டுக்குத் தாயின் நினைவாக அவரது இயற்பெயரான வேதா என்பதை சூட்டினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் தவிர, தமிழகத்தின் பிரபலங்கள் பலரும் ஆஜராகியிருந்தனர். ! அப்போது எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்குமிடையே ஏதோ பிரச்னை எனப் பேசப்பட்டது. ஆனால், உதவியாளர் மூலம் விலையுயர்ந்த பரிசுகளை அனுப்பிவைத்திருந்தார் எம்.ஜி.ஆர். கோபத்தில் அவற்றைத் திருப்பியனுப்பினார் ஜெயலலிதா.

விழாவில் வீணை வித்வான் சிட்டிபாபு நிகழ்த்திய சிறப்புக் கச்சேரியின்போது ‘வேதா நிலையத்தின்’ பெயரிலேயே ஒரு பாடலை புனைந்து பாடி ஜெயலலிதாவை மகிழ்வித்தார். வேதங்களையும், வேதங்களின் ஆகம சூத்திரங்களையும் கொண்டு புனையப்பட்ட அப்பாடலை கேட்டு உருகிநின்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவுக்கு இந்த கிரகப்பிரவேசத்தின்போது இன்னொரு மறக்கமுடியாத சம்பவமும் உண்டு. அது விழாவை சோ புறக்கணித்தது. ஜெயலலிதாவின் இளமைக்கால நண்பரான சோ, குடும்ப நண்பரும்கூட. தனது வீட்டு நிகழ்ச்சிகளை சோ இன்றி நடத்தியதில்லை சந்தியா. அதனால் கிரகப்பிரவேசத்தில் சோ வை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஜெயலலிதா. உள்ளூரில் இருந்தும் சோ விழாவுக்கு வரவில்லை. காரணம் கேட்டதற்கு 6 பக்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார் சோ. பத்திரிகையை நேரில் தராமல் தன்னை அவமதித்துவிட்டதாக அக்கடிதத்தில் குறிப்பிட்ட சோ, கர்வத்தினால், தான் செய்த தவறுக்கு வருந்துவதாக கூறியிருந்தார்.

தென்னகத்தின் புகழ்மிக்க நட்சத்திரமாக ஜெயலலிதா நூறாவது பட கொண்டாட்டத்தைக் கண்டது, நம்பிய மனிதர்களால் நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளானது, உறவினர்களால் நடுவீதிக்கு கொண்டுவரும் நிலை உருவானது, வாய்ப்புகள் குறைந்து பொருளாதாரப் பிரச்னைக்காக நாட்டியக்குழுவை நடத்தி சிரமப்பட்டது, அ.தி.மு.க-வில் சேர்ந்தது, அடுத்தடுத்து அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்தது என ஜெயலலிதா என்ற பெண்மணி சினிமாவில் வெளிப்படுத்திய சோகம், ஆனந்தம், துக்கம், விரக்தி வெறுமை என அத்தனை உணர்ச்சிகளையும் நிஜமாய் அனுபவித்தது இந்த வீட்டில்தான்.

ஜெயலலிதா

ஜெயலலிதா வேறு வழியின்றி தன் சித்திகள் மற்றும் உறவினர்களோடு போயஸ் கார்டன் இல்லத்தில் வாழத்துவங்கினார்.

கார்டன் இல்லம் வடிவமைப்பு...

இரண்டு மாடிகளுள்ள போயஸ் கார்டனின் முன்பக்க வீட்டில் (பழைய வீடு) கீழ்தளத்தில் நான்கு அறைகள் பெரிய வராண்டா டைனிங் ரூம் கெஸ்ட் ரூம்  இரண்டு ஆபிஸ் ரூம்கள் சமையலறையை ஒட்டி 2 பெரிய ஸ்டோர் ரூம்கள் இரண்டாவது மாடியில் இரு அறைகள். இந்த வீட்டுக்குப் பின்புறம் வீட்டின் வேலையாட்களுக்கு என தனியே கட்டப்பட்ட தனியறைகள் உண்டு. இதுதவிர வீட்டின் பின்புறமுள்ள கார்ஷெட்டுக்கு மேல் பெரிய ரூம்கள் இருந்தன. முதல் மாடியில்தான் ஜெயலலிதாவின் பிரமாண்ட படுக்கை அறை இருந்தது. இதனருகில் உள்ள பெரிய அறைகளில் ஜெயலலிதாவின் பரிசுப்பொருள்கள், அவரது பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகள் இருந்தன. ஜெயலலிதாவின் முதல் மாடி அறையிலிருந்து நேரே கார்ஷெட்டுக்கு மேலே உள்ள அறைக்குச் செல்ல  மாடியிலேயே ஒரு பாலம் அமைக்கப்பட்டது. பின்னாளில் அவர் முதல்வரானபின் இதில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வீட்டின் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டபின் 36, 31 ஏ என இரு இலக்கங்கள் அளிக்கப்பட்டன. பழைய வீட்டின் கிழக்குத்திசையில் 31 ஏ என இலக்கம் குறிப்பிடப்பட்ட பகுதி 1995-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 5 மாடிகள் உண்டு...

வீட்டின் முதல்மாடியில் உள்ள அவரது பிரத்யேக அறை.  உறவுகளால், நெருங்கிய நண்பர்களால், தன்னால் அதிகம் நேசிக்கப்பட்டவர்களால் காயமடைந்த சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவுக்கு 'கன்பெஷன்' அறையாக இருந்திருக்கிறது. பல பிரச்னைகளுக்கான தீர்வை அவர் கண்டெடுத்த  இடம் அந்த அறைதான்.

எத்தனை பெரிய பிரச்னைகளோடு அந்த அறையில் நுழைந்தாலும் மீண்டும் கதவு திறக்கப்படும்போது புது மனுஷியாக முகத்தில் தெளிவோடு வெளியே வருவார். இப்படி அவரின் கோபதாபங்கள், சாந்தம், கொண்டாட்டம் என அந்தந்த நேர உணர்வுகளின் ஜெயலலிதா வெளிப்படுத்திய உஷ்ணங்களை சுமந்துகொண்டிருக்கிற இல்லம் போயஸ் கார்டன்.

ஜெயலலிதா

விரக்தியின் விளிம்பில் நின்று இந்த வீட்டில் இருமுறை தன்னை மாய்த்துக்கொள்ளும் முடிவைக் கூட அவர் எடுத்ததாகச் சொல்வார்கள். 
ஒருமுறை போயஸ் கார்டனில் படியேறும்போது ஜெயலலிதா மயக்கமுற்று விழுந்தார். தலையில் அடி. பதறிய ஊழியர்கள்  எம்.ஜி.ஆருக்குத் தகவல் சொன்னார்கள். விரைந்து வந்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத் தயாரானார். அப்போது உதவிக்கு ஜெயலலிதாவின் சித்திகளைத் தேடினார். ஆனால், அவர்கள் மாடியில் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதாக வேலைக்காரர்கள் கூறினார்கள். 'மகள் மயக்கத்தில் கிடக்க, அப்படியென்ன அவர்களுக்குள் வாக்குவாதம்' எனக் குழப்பத்துடன் எம்.ஜி.ஆர் மாடிக்குப் போனார். அங்கு, “ஜெயலலிதாவுக்கு ஏதாவது ஆனால் கொத்துச்சாவியை யார் வைத்துக்கொள்வது” எனச் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர் சித்திகள். கோபமாகப் பேசி அவர்களிடமிருந்து சாவியைப் பிடுங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார். சில மணிநேரங்களுக்குப்பின் ஜெயலலிதா கண்விழித்தபோது கொத்துச்சாவியுடன் நின்றிருந்த எம்.ஜி.ஆர், “அம்மு யார் எதிரிகள், யார் உறவுகள் எனப் பிரித்தறிந்து ஜாக்கிரதையாக இரு”என அறிவுரை கூறினார்.

எம்.ஜி.ஆரின் அறிவுரைக்குப்பின் உறவினர்களிடமிருந்து சற்றுத் தள்ளியே நிற்கத்துவங்கினார். 1976-க்குப்பின் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட விரக்தியினால் வெளியுலகத்திலிருந்து தன் வெளியுலகத்தொடர்புகளை துண்டித்துக்கொண்டு  சுமார் 4 வருடங்கள் இந்த வீட்டில் முடங்கிக்கிடந்தார். அந்த நேரத்தில் ஜெயலலிதாவின் தனிமைக்கு மருந்தாக இருந்தது போயஸ் இல்லம்தான். 96-ம் ஆண்டு இந்த வீட்டில் ஒரு முறை ரெய்டு நடந்ததுண்டு. அதன்பேரில் அவர் கைதுசெய்யப்பட்டதும் தமிழக அரசியல் வரலாறு.


ஜெயலலிதா

 

நாய்ப்பிரியரான ஜெயலலிதா இந்த வீட்டில் சினிமாவில் இருந்த காலம் முதலே 40க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பியதும் முதலில் சந்திப்பது இந்த நாய்களைத்தான். வீடு திரும்பும் அவரை வரவேற்பதும் முதலில் இந்த நாய்கள்தான். அத்தனை பிரியம் வைத்திருந்தார் அவைகள் மீது. 90-களுக்குப்பின் பரபரப்பான அரசியலுக்கு வந்தபின்னர்தான் கட்சிக்காரர்கள் வருகை அதிகரித்தது. இதனால் நாய்கள் தொந்தரவாக இருக்கும் என அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றினார். ஜெயலலிதாவின் இல்லத்தில் அவர் விரும்பி மாட்டிய படம் பாப் கட்டிங்கில் அவரது 4 வயதில் எடுக்கப்பட்ட படம். ஜெயலலிதாவின் வாழ்வில் லட்சக்கணக்கான படங்கள் அவர் எடுக்கப்பட்டாலும் இந்த ஒரு  புகைப்படத்தை அவர் இறுதிவரை ரசித்து பாதுகாத்தார். காரணம் அந்த படம் 1961-ம் ஆண்டு அகில இந்திய புகைப்படக் கண்காட்சியில் முதலிடம் பெற்ற படம் அது. அவரது இறுதிக்காலம் வரை அந்த புகைப்படம் அவரது தனியறையில் மாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் திடீர் அரசியல் தலைவியாக விஷ்வரூபம் எடுத்த சசிகலா, தன் அரசியல் வாழ்வுக்கு சாதகமான விஷயமாக போயஸ் இல்லத்தையே தனது விலாசமாக்க முயற்சி எடுத்தார்.

ஆனால், சசிகலா போயஸ் இல்லத்தில் வசிப்பது  தங்கள் அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல எனக் கணக்குப்போட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக்குவதாக அறிவித்தது. அதற்கு ஜெயலலிதா  ரத்த உறவுகளான அண்ணன் மகன், மகளிடம் இருந்து  சட்டப்படியான எதிர்ப்பு கிளம்பும் எனத்தெரியும். அப்படி சசிகலா குடும்பத்தினரிடமிருந்து போயஸ் இல்லம் வாரிசுகள் கைக்கு செல்வதும் ஒருவகையில் தங்களுக்கு வெற்றி என்றே கணக்கு போட்டது எடப்பாடி தரப்பு. இப்போது அவர்கள் நினைத்ததுதான் நடந்திருக்கிறது. போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமை கொண்டாடி தீபா மற்றும் தீபக் கொடி பிடித்திருக்கிறார்கள். 

ஜெயலலிதா என்ற பெண்மணியின் வாழ்வில் இடம்பெற்ற தனிமனிதர்களை வேட்டையாடிவரும் வருமானவரித்துறை இப்போது அவரது வாழ்வை கிட்டதட்ட அரை நூற்றாண்டுகாலம் பகிர்ந்துகொண்ட போயஸ் இல்லத்தையும் தீண்டியிருக்கிறது. அதிகார மையமாக இருந்தபோது, தன் அருகில் இருந்தவர்களின் ஆட்டங்களை தெரிந்தோ தெரியாமலோ கண்காணிக்கத் தவறவிட்டதற்காக இப்போது ஜெயலலிதாவின் ஆத்மா நிச்சயம் ஒருமுறை வருந்தியிருக்கும்.

https://www.vikatan.com/news/tamilnadu/108218-jayalalithaa-memories-with-poes-garden-a-flashback.html

  • தொடங்கியவர்

போயஸ் கார்டன் வீடு என்னவாகும் இனி?! #VikatanExclusive

 
 

போயஸ் கார்டன் வீடு, ஜெயலலிதா இருந்தவரை, தமிழகத்தின் அதிகார மையம். அ.தி.மு.கவினரின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இரும்புக் கோட்டை. சசிகலா அந்த வீட்டில் இருந்தவரைக்கும்கூட அதுதான் நிலைமை. ஆனால், இன்று வாழ்ந்து கெட்டவர்கள் வீடு என்பதற்கு கண்முன் சாட்சியாக நிற்கிறது போயஸ் கார்டன். அதன் தேஜஸில் சாம்பல் படியத் தொடங்கிவிட்டது. இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, அது தங்களுக்குச் சொந்தம் என்கின்றனர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் வாரிசுகளான தீபா-தீபக். அரசாங்கம் அந்த வீட்டை நினைவு இல்லமாக அறிவித்து இருக்கிறது. அதே நேரத்தில் சசிகலாவின் உடமைகளும் அந்த வீட்டில் இருக்கின்றன. அரசாங்கத்தின் அறிவிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் தீபா. இனி போயஸ் கார்டன் வீடு என்னதான் ஆகும். 

போயஸ் கார்டன் வீடு

 

மன்னார்குடி குடும்பத்துக்கு இல்லை!

போயஸ் கார்டன் வீட்டின் உரிமையில் சசிகலா குடும்பத்துக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்கள் அந்த வீட்டில் ஜெயலலிதாவால் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அதனால், சசிகலா, இளவரசி, இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனின் முகவரியாக போயஸ் கார்டன், வேதா நிலையத்தின் விலாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனால் மட்டும் அவர்கள் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், சசிகலாவின் அக்கா வனிதாமணியின் கடைசி மகன் சுதாகரனை (தினகரன், பாஸ்கரனுக்கு அடுத்தவர்) வளர்ப்பு மகனாக தத்தெடுத்து இருந்தார். ஆனால், அதனாலும் அந்த வீடு சுகதாகரனுக்கோ, அல்லது சசிகலா குடும்பத்தில் வேறு யாருக்கோ சொந்தமாகாது. ஏனென்றால், இந்து வாரிசுரிமைச் சட்டமும், தத்தெடுக்கும் நிபந்தனைச் சட்டமும் அப்படித்தான் இருக்கிறது.  

வி.என்.சுதாகரன் வாரிசா?

sudhakaran_11206_22516_16450.jpg

பொதுவாக ஒரு பெண் (ஆணுக்கு இது பொருந்தாது) இறந்துவிட்டால், அவருடைய சொத்துக்களுக்கு அவருடைய பிள்ளைகள் மற்றும் கணவர் வாரிசு ஆவார்கள். அவர்கள் இல்லாதபோது, பெண்ணின் பெற்றோருக்கு அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும். தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை, அவருக்கு பெற்றோர் உயிருடன் இல்லை. திருமணம் ஆகவில்லை. குழந்தைகள் இல்லை. ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் என்று யாரும் இல்லை. ஆனால், 1995-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் வி.என்.சுதாகரனை, தனது வளர்ப்பு மகன் என்று அறிவித்தார். அவரை ஜெயலலிதா வளர்ப்பு மகன் என்றுதான் அறிவித்தாரே தவிர, சுதாகரனை தத்தெடுக்கவில்லை. ஏனென்றால், இந்து தத்தெடுப்புச் சட்டப்படி, ஒரு குழந்தையை ஒரு பெண் தத்தெடுப்பதற்கு  பல நிபந்தனைகள் உள்ளன.

தத்தெடுக்க சட்டம் விதிக்கும் நிபந்தனைகள்...

இந்து தத்தெடுப்புச் சட்டப்படி, திருமணம் ஆகாத அல்லது விவாகரத்தான பெண்ணும் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கலாம். குழந்தையை தத்துக் கொடுப்பவர், குழந்தையை தத்தெடுப்பவர் இருவரும் இந்துக்களாக இருக்க வேண்டும்.  ஒரு பெண் ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுக்கும் போது, அந்தப் பெண்ணுக்கும், அந்தக் குழந்தைக்குமான வயது வித்தியாசம் குறைந்தது 21-வயதாக இருக்க வேண்டும். 

தத்தெடுக்கப்படும் குழந்தைக்கு 15 வயது நிரம்பி இருக்கக்கூடாது. தத்தெடுப்பு என்பது இந்துமத முறைப்படியான சடங்குகளைப் பின்பற்றியோ அல்லது பதிவு செய்த தத்தெடுப்பு ஆவணம் மூலமாகவோ நடக்கலாம். இந்த சட்ட அடிப்படையில் பார்த்தால், வி.என்.சுதாகரன் ஜெயலலிதாவின் தத்துப் பிள்ளையாக ஆக முடியாது. அதனால்தான், ஜெயலலிதாவே  சுதாகரனை வளர்ப்பு மகன் என்று அறிவித்தார். அதனால், சுதாகரன் ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு கிடையாது. அவர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமைகோரவும் முடியாது.

(அதன்பிறகு, 1996-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த பிறகு, சுதாகரனை ஜெயலலிதாவீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். சுதாகரன் தன்னுடைய வளர்ப்பு மகன் இல்லை என்றும் பின்னாளில் அறிவித்தார்.)

ஜெயலலிதாவின் சொத்துக்கள் என்ன ஆகும்?

jaya_last_16247.jpg

இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துக்கள் முதலில் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும். மகன் அல்லது மகள் அல்லது கணவர் என்று யாருமே இல்லாதபோது, அந்தப் பெண்ணின் கணவருடைய வாரிசுகளுக்கு சென்று சேரும். அதாவது, கணவருடைய தாய், கணவருடைய வேறு தாரத்தின் பிள்ளைகளுக்குச் சென்று சேரும். 

ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும் போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துக்கள் போகும். பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும். ஒருவேளை அந்தப் பெண்ணின் தந்தைக்கும் வாரிசுகள் இல்லையென்றால், தாயின் வாரிசுகளுக்கு சென்று சேரும். இந்த சட்டங்களின்படி பார்த்தால், ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவருடைய தந்தை ஜெயராமனின் வாரிசான, ஜெயக்குமாரின் வாரிசுகளுக்குப் போகும். அதாவது, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபக் ஜெயக்குமார், தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமைகோர முடியும். 

மேலேசொன்ன இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துக்கள் குறித்து, உயிலோ அல்லது வேறு ஆவணங்கள் எதுவும் எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும். ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. சட்டம் அதற்கு வழி செய்கிறது. அப்படி, ஜெயலலிதா வேறு யாருக்கும் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைக்காத நிலையில்தான், அதற்கு அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா உரிமைகோர முடியும். ஒருவேளை, ஜெயலலிதா உயில் எழுதிவைத்திருந்தால், அந்த உயிலில் ஜெயலலிதா யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அவருக்குத்தான் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும். 

தீபக், தீபாவுக்கு சொத்துக்கள் போகுமா?

ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைத்துள்ளாரா? இல்லையா? என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. உயிலைப் பொறுத்து, அதைப் பதிவு செய்ய வேண்டியது என்பது கட்டாயம் இல்லை. பதிவு செய்யாத உயிலாக இருந்தாலும் அது செல்லும். அந்த உயில் குறித்து, சம்பந்தப்பட்டர்கள் வெளியில் சொல்லாதவரை யாருக்கும்  தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அந்தச் சொத்துக்களை விற்க முயன்றால் அது தெரியவரும்.

போயஸ் கார்டன் முன்பு ஜெ.தீபா

ஜெயலலிதாவுக்கு சொந்தமாக சென்னையில் உள்ள சொத்துக்கள் குறித்து உயில் எழுதப்பட்டு இருந்தால், அந்த உயில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ・புரபேட்・செய்யப்பட வேண்டும். அப்போதுதான், அந்த உயில் செல்லும். உதாரணத்திற்கு,, ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக, போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு குறித்து அவர் உயில் எழுதி இருந்தால், அது சென்னை உயர் நீதிமன்றத்தில் புரபேட் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அந்த உயில் குறித்து நமக்குத் தெரியவரும். அதன்மூலம்தான், ஜெயலலிதா அந்த வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் என்பதும் தெரியவரும். ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா தவிர வேறு மூன்றாம் நபருக்கு (சசிகலா உள்பட) தனது சொத்துக்களை ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால், தீபக்கும் தீபாவும் அந்த உயிலின் செல்லும் தன்மை குறித்தும், புரபேட் வழங்கக்கூடாது என்றும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காட முடியும். தமிழகத்தில் சென்னை தவிர்த்து, வேறு ஊர்களில் ஜெயலலிதாவுக்கு சொத்து இருந்தால், அது சம்பந்தமாக அவர் உயில் எழுதி இருந்தால், அதை புரபேட் செய்யத் தேவை இல்லை. ஆனால், அந்த உயில் சென்னையில் எழுதப்பட்டு இருக்குமானால், மேலே சொன்ன புரபேட் நடவடிக்கைகள் பொருந்தும்.

போயஸ் கார்டன் வீடு யாருக்கு?

ஜெயலலிதாவுக்குச் சொந்தமானவை என்று என்று சொல்லப்படும் பல நிறுவனங்கள், எஸ்டேட்டுகள், சொத்துக்கள் வேறு நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஜெயலலிதாவே உயிரோடு இருந்தால்கூட உரிமை கொண்டாட முடியாது. ஆனால், போயஸ் கார்டன் வேதா நிலையத்தைப் பொறுத்தவரை அந்தக் குழப்பமே கிடையாது. அது முழுக்க முழுக்க ஜெயலலிதாவின் பெயரில்தான் உள்ளது. அந்த இடம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா வாங்கியது. ஆனால், அது ஜெயலலிதாவின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சம்பாத்தியத்தில் வந்த தொகையில்தான் வேதா நிலையம் வீடு கட்டப்பட்டது. அதன்பிறகு அதில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் எல்லாமும் சேர்த்து ஜெயலலிதாவின் பெயரில்தான் உள்ளது. இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துக்கள் முதலில் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும். மகன் அல்லது மகள் அல்லது கணவர் என்று யாருமே இல்லாதபோது, அந்தப் பெண்ணின் கணவருடைய வாரிசுகளுக்கு சென்று சேரும். அதாவது, கணவருடைய தாய், கணவருடைய வேறு தாரத்தின் பிள்ளைகளுக்குச் சென்று சேரும். 

போயஸ் கார்டன் வீடு

ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும் போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துக்கள் போகும். பெற்றோர் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து சென்று சேரும். ஒருவேளை அந்தப் பெண்ணின் தந்தைக்கும் வாரிசுகள் இல்லையென்றால், தாயின் வாரிசுகளுக்கு சென்று சேரும். இந்த சட்டங்களின்படி பார்த்தால், ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவருடைய தந்தை ஜெயராமனின் வாரிசான, ஜெயக்குமாரின் வாரிசுகளுக்குப் போகும். அதாவது, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபக் ஜெயக்குமார், தீபா ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமைகோர முடியும். அந்தவகையில் தற்போது போயஸ் கார்டன் வீட்டில் தீபா, தீபக் இருவருக்கும் பங்கு உண்டு. ஆனால் அதே சமயம், மேலேசொன்ன இறங்குரிமை என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துக்கள் குறித்து, உயிலோ அல்லது வேறு ஆவணங்கள் எதுவும் எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும். ஜெயலலிதா தன்னுடைய சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். அதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு. சட்டம் அதற்கு வழி செய்கிறது. அப்படி, ஜெயலலிதா வேறு யாருக்கும் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைக்காத நிலையில்தான், அதற்கு அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா உரிமைகோர முடியும். ஒருவேளை, ஜெயலலிதா உயில் எழுதிவைத்திருந்தால், அந்த உயிலில் ஜெயலலிதா யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அவருக்குத்தான் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும். 

அரசு கையகப்படுத்தினால்...

போயஸ் கார்டன் வீட்டு முகப்பு கேட்

 

போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அப்படி ஒரு தனியார் சொத்தை பொது நோக்கத்துக்காக அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டுமானால், அதுபற்றி யாரிடமும் கேட்கத் தேவையில்லை. ஆனால், அந்தச் சொத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடும்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. தற்போது போயஸ் கார்டன் வீட்டை அரசாங்கம் கையகப்படுத்தியதை எதிர்த்து, ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் தீர்ப்பு வரும்வரை, போயஸ் கார்டன் வீடு யாருக்கு என்பதில் சிக்கலே நீடிக்கும். ஒருவேளை நீதிமன்றம், ‘போயஸ் கார்டன் வீடு ஜெயலலிதாவின் வாரிசுகளுக்குச் சொந்தம் என்றோ... அல்லது அதற்கான இழப்பீட்டை அவர்களுடைய வாரிசுகளுக்கு வழங்க வேண்டும்” என்றோ தீர்ப்பளித்தால், அது தீபா-தீபக்குக்கே செல்லும்.

https://www.vikatan.com/news/coverstory/108267-what-will-happen-to-poes-garden.html

  • தொடங்கியவர்

அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்ட போயஸ் கார்டன்...!

 
 

மோடியுடன் ஜெயலலிதா - போயஸ்கார்டன்

Chennai: 

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திற்கும், தமிழக அரசியலுக்கும் ஏன்... இந்திய அரசியலுக்கும்கூட மிக நெருங்கிய தொடர்பும், சுவாரசியமான வரலாறுகளும் உண்டு.

 

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, 1970-களில் தொடங்கி இப்போதுவரை திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கமே இருந்து வருகிறது எனலாம். 1967-ம் ஆண்டு, அப்போது வலுவாக இருந்த காங்கிரஸ் பேரியக்கத்தை வீழ்த்தி, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகத்தான வெற்றிக்கு திரைப்படத்துறையில் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் முக்கியப் பங்குவகித்தார். திரைப்படத்துறையில் வசன கர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் திகழ்ந்த இப்போதைய தி.மு.க தலைவர் மு.கருணாநிதியின் வசீகர மேடைப்பேச்சும், பேரறிஞர் அண்ணாவின் அலங்கார மொழியிலான கவர்ச்சியான சிலேடைப் பேச்சும், தி.மு.க-வின் தீவிர இந்தி மொழி எதிர்ப்பு நிலைப்பாடும், காங்கிரஸ் கட்சியை அப்போது படுதோல்வி அடையச் செய்ததுடன், இன்றுவரை தமிழகத்தில் அரியணை ஏறவிடாமல் தடுத்துவிட்டது. இந்த வரலாறெல்லாம் நாம் அறிந்ததே...!

அந்தவகையில், திரைப்படத் துறைக்கும் தமிழக அரசியலுக்கும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அ.தி.மு.க-வை உருவாக்கி, எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்தது, அவர் மறையும்வரை தமிழகத்தின் முதல்வர் பதவியை வகித்தது, பின்னர் அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது எல்லாமே தனியான வரலாறுதான். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், பிளவுபட்ட அ.தி.மு.க. 1989-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்குப் பின், ஜெயலலிதா தலைமையில் ஒன்றிணைந்த அ.தி.மு.க, 1991-ல் ராஜீவ் படுகொலைக்குப் பின் ஆட்சியைப் பிடித்தது.

எம்.ஜி.ஆர். இருந்தவரை அவரின் இல்லம் அமைந்துள்ள ராமாவரம் தோட்டம், எவ்வளவு பிரபலமோ, அதேபோல், அவரின் மறைவுக்குப் பின் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டம் அ.தி.மு.க-வினரிடையே மிகுந்த பிரபலத்தை எட்டியது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதே, அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர், சத்துணவுத் திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் என கட்சியின் பல்வேறு பதவிகளை ஜெயலலிதா வகித்து வந்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் இரு அணிகளாகப் பிரிந்து அ.தி.மு.க. போட்டியிட்ட நிலையில், ஜெயலலிதா தலைமையிலான அணியே 27 எம்.எல்.ஏ-க்களைப் பெற்று, சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இதன்மூலம் ஜெயலலிதா முதல்முறையாக தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரானார். இதன்மூலம் போயஸ்கார்டனில் அரசியல் பரபரப்பு, 1984-ம் ஆண்டுகளிலேயே தொடங்கி விட்டது எனலாம். 1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர், போயஸ்கார்டன் இல்லம், அதிமுக்கியத்துவம் பெறத் தொடங்கியது. 

அத்வானியுடன் ஜெயலலிதா

அப்போது முதல், ஜெயலலிதாவைச் சந்திப்பதற்காக போயஸ்கார்டன் இல்லத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, தேசியக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தேர்தல் கூட்டணிக்காகவும், நட்புரீதியாகவும் வந்து, ஜெயலலிதாவைச் சந்தித்துச் சென்றுள்ளனர்.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பதற்கு முன், ஒருமுறை அவர் சென்று கொண்டிருந்த கார், மாமண்டூர் அருகே விபத்துக்குள்ளாகி, அவரும், அவருடன் பயணம் செய்த சசிகலாவும் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது, ஜெயலலிதாவைப் பார்ப்பதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் வந்து, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 

தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் - அ.தி.மு.க. கூட்டணி 1991-ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எனினும், 1996-ல் இந்தக் கூட்டணி, தோல்வியைத் தழுவியது. மீண்டும் 1998-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிற்கு, பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்கள் வந்து பேச்சு நடத்தினர். ஓராண்டு காலம் பி.ஜே.பி-யுடன் கூட்டணியில் இருந்த ஜெயலலிதா, பின்னர் அதனை முறித்துக் கொண்டார். மீண்டும் 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எல்.கே. அத்வானியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. என்றாலும், அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே மத்தியில் மீண்டும் வெற்றிபெற்றது. 

அருண் ஜேட்லி  - ஜெயலலிதாஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும், அவர் முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலகத்திலும், அருண் ஜெட்லி, எல்.கே. அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியுள்ளனர். தவிர, தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்து மதிய உணவு சாப்பிட்ட நிகழ்வும் உண்டு. குஜராத் முதல்வராக மோடி 2012-ம் ஆண்டு பதவியேற்றபோது, ஜெயலலிதா அந்த விழாவில் பங்கேற்றார். மேலும், ரவிசங்கர் பிரசாத் போன்ற பி.ஜே.பி-யின் முன்னணி தலைவர்களும் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளனர். 

இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான பிரகாஷ் காரத், ஏ.பி. பரதன், சுதாகர் ரெட்டி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்டோரும் கூட்டணி குறித்து போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, எண்ணற்ற தலைவர்கள் வந்து செல்லும், முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படும் கேந்திரமாகத் திகழ்ந்தது போயஸ் கார்டன். சுமார் 30 ஆண்டுகள் தன் அரசியல் சகாப்தத்தை போயஸ்கார்டனில் அரங்கேற்றிய ஜெயலலிதா வாழ்ந்த இல்லம், தற்போது சர்ச்சைக்குரிய இடமாக மாறியுள்ளது.

'ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவிடமாக மாற்றப்படும்' என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்கள் முன்பு அறிவித்தார். மேலும், அவரின் இறப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, தற்போது நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டுள்ளார். 

போயஸ்கார்டன் பாதுகாப்புஅரசியல் பரபரப்பு நிறைந்த இல்லமாகத் திகழ்ந்த, ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட வீடு, தற்போது பல விமர்சனங்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, "தன் அத்தையின் பரம்பரை சொத்தான போயஸ்கார்டன் வீடு தனக்கும், தன் சகோதரர் தீபக்கிற்கும்தான் சொந்தம்; தாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மையான, சட்டப்பூர்வமான வாரிசு" என்றும் தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வீட்டில் ஜெயலலிதாவுடன் வசித்த சசிகலா, இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் தற்போது சிறையில் உள்ளனர். இளவரசியின் மகன் விவேக், தற்போது மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். 

இந்தச் சூழ்நிலையில்தான், ஜெயலலிதாவின் வீட்டில் திடீரென்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. 1996-ம் ஆண்டு, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதும் போயஸ்கார்டன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்திய பின்னர், 21 ஆண்டுகளுக்குப் பின் தற்போது ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. 

 

தமிழகத்திலும், இந்திய அளவிலும் எத்தனையோ அரசியல் மாற்றங்களுக்குக் காரணமாகத் திகழ்ந்த போயஸ்கார்டன் இல்லம், இப்போது மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது....!

https://www.vikatan.com/news/tamilnadu/108284-jayalalithaas-poes-garder-house-and-indian-politics.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.