Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5 வருட கால போர் நிறுத்தம்: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்

Featured Replies

5 வருட கால போர் நிறுத்தம்: எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்

இலங்கைத் தீவில் சுமார் 3 தசாப்தங்களாக நிலவுகின்ற இனமோதுகைக்கு தீர்வு காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் நிலையானதும் பிரதானமானதுமான போர் நிறுத்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. குறித்த 5 ஆண்டுகளுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் சாதித்ததை விட அது உண்டாக்கிய எதிர்பார்ப்புகள் அதிகம். இதில் அதிகமான எதிர்பார்ப்பு மக்களிடமிருந்தே வெளிப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இன்றைய நிலையால் பெரிதும் ஏமாற்றம் அடைந்திருப்பவர்கள் சகல இனக்குழுமங்களையும் சார்ந்த பொதுமக்களே.

இதற்கான அடிப்படை காரணங்களில் ஒன்றாக பொது மக்களிடம் காணப்படுகின்ற அரசியல் மற்றும் சர்வதேச சமூகத்தின் பல்பரிமாண நடவடிக்கைகள் தொடர்பான அறிவு போதுமானதாக இல்லை எனலாம். உலக அரசியல் என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டே நகர்கிறது. ஒரு தேசத்தின் இருப்புக்கு இராணுவ பலம் அதிமுக்கியமானது. ஆனால் அந்த இராணுவ பலம் என்பது பொருளாதாரத்தின் நிலைப்பட்டே கட்டியெழுப்பப்படுகிறது.

இலங்கை இனக்குழும மோதுகையை பொறுத்தளவில் வெளிப்படையில் எல்லாம் இராணுவ மயப்பட்டதாகவே காணப்பட்டாலும் உலகளாவிய நிலை அவ்வாறானதொன்றல்ல. சர்வதேசம் தனது நிலையிலிருந்தே இலங்கையின் இனக்குழும மோதுகையை நோக்குகிறது. உலகமோ இலங்கைத் தீவின் நிலைக்கு இறங்கி வருவதாக தெரியவில்லை. அதேவேளை இலங்கைத் தீவும் ஆக்கபூர்வமான செயல்முறைக்காக சர்வதேசத்தை நோக்கி நகரவில்லை. இது சமாதான பேச்சுவார்த்தைக்கான அனுசரணையாளர்களுக்கும் சமாதான பேச்சுவார்த்தையின் பிரதான தரப்பினர்களுக்கும் இடையிலான இடைவெளியை வெளிப்படுத்துகிறது. இது ஒரு சாதாரண இடைவெளியன்று. மாறாக இந்த இடைவெளி பாரிய வல்லமை கொண்டது. அந்த `வல்லமையின் தாக்கமும் முழுத்தோல்வி நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் இனகுழும மோதுகைக்கு காரணமாகும். (உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்விகளோடு ஒப்பிடுமிடத்து இலங்கையில் இன்று பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை முடிந்து விட்ட ஒரு அத்தியாயமாகவோ அல்லது படுதோல்வியை அடைந்து விட்டதாகவோ அழுத்திக் கூற முடியாது.)

தீவிரமடைந்துள்ள போரின் தன்மை சமாதானப் பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை முற்று முழுதாகவே சாத்தியம் அற்றதாக்கிவிட்டதாக கூறமுடியாது. ஏனெனில் போர்கள் கூட சமாதானப் பேச்சுவார்த்தைக்கான நுழைவாயிலை ஏற்படுத்துகின்றன. தற்போது 5 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் கூட இலங்கைத் தீவில் உண்டான இராணுவ சமநிலையால் ஏற்பட்டதொன்றே என்பதை மறுக்க முடியாது. போர்க்காலத்தில் நிலைநாட்ட முடியாத பல விடயங்களை போர் நிறுத்த ஒப்பந்த காலத்தில் நிலைநாட்டியதனூடாக போர்நிறுத்த ஒப்பந்தத்தின் வலுவினை கணிக்கலாம். ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தம் இனக்குழும மோதுகைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு நுழைவாயில் மட்டுமே. மாறாக இது அரசியலமைப்புக்கு சவால் விடக் கூடியதோ இல்லையேல் அதனை சமாளிக்கக் கூடியதோ அல்ல. ஆகவே நியாயமான, நீதியான அரசியலமைப்பு இருக்கும் பட்சத்திலேயே நிலையான கௌரவமான சமாதானத்தை எதிர்பார்க்க முடியும். ஆனால் சிறிலங்காவினுடைய அரசியல் அமைப்பினை அத்தகைய ஒன்றாக கருதமுடியாது என்பது பலருடைய கருத்தாக காணப்படுகிறது.

அடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தரப்பினரின் ஈடுபாட்டு தன்மை போதுமானதாக இருக்கவில்லை. அத்துடன் போர்நிறுத்தம் தொடர்பாகவும் பேச்சுவார்த்ததை தொடர்பாகவும் சிங்கள மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சமாதான நடவடிக்கைகளுக்கு சார்பான அணிதிரட்டுகை இடம்பெறவில்லை. இவையே போர்நிறுத்த ஒப்பந்தத்தின் இன்றைய `கோமா நிலைக்கான காரணமாகும். இவ்வாறன நிலை இலங்கைத் தீவுக்கு மட்டும் ஏற்பட்டதொன்றல்ல. உலகம் இவ்வாறான பல இடர் நிலைகளை முன்னரே எதிர்கொண்டுள்ளது. அவற்றுள் சில விடயங்களை தேவை கருதி இங்கு அலசுவோம். அதனூடாக மக்களிடம் உண்டான எதிர்பார்ப்பு நிறைவேறக் கூடியதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.

1990 தொடக்கம் 1999 இன் இறுதிப்பகுதி வரை உலகெங்கும் 80 அரசுகளும் இரு துணை அரசுப்பிராந்தியங்களும் சம்பந்தப்பட்ட 118 ஆயுத மோதுகைகள் இடம்பெற்றன. இவற்றின் விளைவாக சுமார் அறுபது இலட்சம் மக்கள் மரணமடைந்தனர். இனக்குழும மோதுகை ஆயுத யுத்தமாக வளர்வதை தடுப்பதற்கு நாம் முனைவதாயின், அல்லது அதில் தோல்வியடைகின்ற போது குறைந்தபட்சம் இயன்றவரை விரைவாகச் சண்டையை நாம் நிறுத்த வேண்டுமாயின், அத்துடன் தோற்றுவாயில் தீர்வொன்று காணப்பட்ட பின்னர் மீண்டும் போர் ஏற்படுவதைத் முற்றுமுழுதாக தவிர்க்க வேண்டுமாயின் ஆயுத மோதுகைகளையும் அவற்றிற்கான காரணங்களையும் முதலில் நாம் சரிவர தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட்டவர்கள் அதனை சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. தெரிந்து கொண்டவர்கள் கூட சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வகையில் நெளிவு சுழிவுகளை பயன்படுத்தினார்கள்.

1990 தொடக்கம் 1999 இன் இறுதிப்பகுதி வரை இடம்பெற்ற 10 மோதுகைகளை அரசுகளுக்கிடையிலான மோதுகைகளென உறுதியாக வரையறுக்கலாம்..

5 மோதுகைகளை சுதந்திரத்துக்கான போர்களென உறுதியாக வரையறுக்கலாம். ஆனால் பயங்கரவாத போர்களும் தம்மை நியாயப்படுத்துவதற்காக சுதந்திரப் போராட்டங்களாக தமது நடவடிக்கைகளை வரையறுத்ததனால் நியாயமான சுதந்திரப் போராட்டங்கள் சோதனைக்குள்ளா கியுள்ளன. ஏனைய சுமார் நூறு போர்கள் பெரும்பாலும் அடிப்படையில் அல்லது முற்றுமுழுதான உள்ளக மோதுகைகளாயிருந்தன

உலகளாவிய மட்டத்தில் பெருமளவான பழைய மோதுகைகள் இன்று தொடர்ந்த வண்ணமுள்ளன. 1999இல் தீவிரமாயிருந்த ஆயுத மோதுகைகளில் 66 சதவீதமானவை ஐந்தாண்டுகளுக்குக் கூடிய பழைமையானவையாகவும், 30 சதவீதமானவை 20 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தனவாகவும் இருந்தன. இந்த நெடுங்கால ஆயுத மோதுகைகளை முடிவுக்குக்கொண்டுவருதல் மிகக்கடினமானதொன்றென்ற கருத்து ஆழமாக நிலவுகிறது.

அடுத்து ஐரோப்பாவை நோக்குவோமானால், 1980களின் பிற்பகுதியில் அல்லது 1990களின் தொடக்கத்தில் ஆரம்பமான ஆயுத மோதுகைகளில் பெரும்பாலானவை, இப்போது தீவிரமிழந்துள்ள போதிலும், உண்மையில் அவற்றுக்கு ஒரு நிலையான கௌரவமான தீர்வு முடிவாக காணப்படவில்லை. சரியாகச்சொல்வதாயின் அவை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆகவே அவற்றை முடிவு காணப்பட்ட மோதுகைகள் எனக் கூற முடியாது. `முடிவுற்றுப் போனது மற்றும் `இடைநின்றது என்பவற்றுக்கிடையிலான வேறுபாடு இன்றைய ஆயுத மோதுகை பிரச்சினையை விளங்கிக்கொள்வதற்கு அவசியமானது. போர் நிறுத்தங்கள் கைச்சாத்திடப்பட்ட பின்னர் மட்டுமன்றி, சமாதான உடன்படிக்கைகள் முடிவாக்கப் பெற்றதன் பின்னர் மீண்டும் தொடங்குகின்ற போர்களால் சர்வதேச அரசியற் காட்சிப்பரப்பு உருக்குலைகின்றது. கடந்த தசாப்தத்தில் மட்டும், போர்நிறுத்தங்கள் அல்லது வெளிப்பார்வைக்கு சமாதான உடன்படிக்கைகள் போன்றமைந்தவை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், மீண்டும் தொடங்கிய போர்களில் அங்கோலா, புருண்டி, கம்போடியா, செச்னியா, குரோசியா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, எரித்திரேயா, எதியோப்பயா, கொசோவோ, லைபீரியா, பிலிப்பைன்ஸ், ருவண்டா, சியராலியோன் ஆகியவற்றில் இடம்பெற்றனவற்றைக் கூறலாம். இவற்றுடன் இலங்கைத் தீவினையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த போர்கள் பெரும்பாலும் முன்னரை விடத் தீவிரத்தன்மை கூடியதாகவும் பொதுமககளுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் நடைபெறுகின்றன.

போர் மீண்டும் தொடங்குவதற்கு அனேக வேறுபட்ட காரணங்கள் உள்ளன. அவற்றை நான்கு தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.

முதலாவது, ஒரு தரப்பின் அல்லது இருதரப்புகளினதும் ஒளிவுமறைவற்ற நேர்மையீனம் சியராலியோனில் புரட்சிகர ஐக்கிய முன்னணி (Revolutionary United Front-RUF) இதற்கொரு நல்ல உதாரணமாகும், எந்தவொரு உடன்படிக்கையும் பேணப்படும் என்று நம்பவே முடியாது.

இரண்டாவது, ஒரு தரப்பினது அல்லது இரு தரப்புகளினதும் ஏமாற்றம். வெளியிலிருந்து பார்க்கும்போது இதுவும் பெரும்பாலும் அதே நேர்மையற்றதாகத் தோன்றலாம். சமாதான உடன்படிக்கையொன்று ஒரு தரப்பால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றமை நிபந்தனைக்குட்பட்டதான அநேக சந்தர்ப்பங்கள் உள்ளன. எனினும், அந்நிபந்தனை பகிரங்கமாகத் தெரியப்படுத்தப்படுவதோ, உடன்படிக்கையின் ஒரு பகுதியாகவோ இருப்பது இல்லை. அதனை கடுமையான இராஜதந்திர அணுகுமுறை எனலாம். (Hard Diplomacy Approach) சிலசமயங்களில் யுத்தத்துக்குப் பிந்திய தேர்தலில் ஒரு தரப்பு வெற்றி பெறவேண்டுமென பெரிதும் எதிர்பார்ப்பதனால், அக்காரணத்துக்காக மட்டும் சமாதான உடன்படிக்கையில் கையொப்பமிட உடன்படுகின்றமை பின்னர் அவ்வெதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் அவை மீண்டும் யுத்தத்துக்குச் செல்கின்றன. இதற்கு அங்கோலாவின் `யுனிட்டா (UNITA) ஓர் உதாரணமாகும். கடுமையான இராஜதந்திர அணுகுமுறை அல்லது கடும் அதிகார அணுகுமுறை(Hard Power Approach) ஒன்றையே சர்வதேச சமூகம் 2006 இன் ஆரம்பத்தோடு தமிழீழ விடுதலைப் புலிகளோடு கையாண்டது. 2006ன் நடுக் கூற்றோடு அது தீவிரமடைந்தது. இருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்கு வளைந்து கொடுக்கவில்லை. ஆனால் அந்த சூழல் தமிழீழ விடுதலைப் புலிகளை புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்ப நகர வேண்டிய கட்டாய சூழலை உண்டாக்கியது. அந்த புதிய உலக ஒழுங்குதான் முன்னரை விட அதிதீவிரமான மற்றுமொரு ஓயாத அலை போன்ற வலிந்த தாக்குதலை தாமதப்படுத்துகிறது.

மூன்றாவது காரணம் ஒரு தரப்பில் அல்லது இரு தரப்புகளிலும் காணப்படும் உள்ளகக் கருத்துவேறுபாடுகளும், தரப்புகளின் துண்டாடப்பட்ட தன்மையுமாகும். இதுகூட நேர்மையீனமானதாகத் தோன்றலாம். சமாதான உடன்படிக்கைகள் பெரும்பாலும் ஒவ்வொரு தரப்பினுள்ளும் காணப்படும் பதற்றங்களையும், மோதுகைகளையும் வெளிக்கொணர்கின்றன. போர்க்காலத்தில் காணப்பட்ட ஒற்றுமை சமாதானம் ஏற்படும்போது விரைவாகச் சிதைந்துவிடுகின்றது. இதற்கான இலங்கைத் தீவின் உதாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அதன் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி வெளியேற்றப்பட்டதைக் கூறலாம். அத்துடன் இனக்குழும மோதுகைக்கு தீர்வு யோசனைகளை முன்வைக்கின்ற போது சிங்கள பெருமான்மை கட்சிகளிடையே மேலெழும் தொடர்ச்சியான தீவிர எதிர் நிலையை குறிப்பிடலாம்.

மோதுகையின் ஒரு பக்கத்திலுள்ள கூட்டமைப்பின் ஒரு பகுதியினருக்கு நெருங்கிவருகின்ற சமாதானம், நீண்டகால இலக்குகளை நிறைவேற்றுவதற்கான அவர்களின் ஆற்றலைக் குலைக்கின்ற ஓர் அச்சுறுத்தலாகப் பெரும்பாலும் தோன்றக்கூடும். இச்சூழமைவில், வட அயர்லாந்தில் `ஐஆர்ஏயிலிருந்து பிரிந்து சென்ற பிளவுபட்ட குழுக்களை, அல்லது இஸ்ரேலிலும், மேற்குக் கரையிலும் இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீனிய போராளிகளினால் சமாதானச் செயல்முறை நிராகரிக்கப்பட்டமையையும் எண்ணிப்பாருங்கள்.

யுத்தம் மீண்டும் தொடங்குவதற்கான நான்காவது காரணம் ஆயுத மோதுகையின் அடிப்படைக் காரணங்கள் தொடர்ந்தும் காணப்படுதல். மோதுகையின் நீண்டகாலக் காரணங்களில் கவனஞ்செலுத்தத் தவறுதல் புனரமைப்புக்கான எல்லா முயற்சிகளும் ஆகக்கூடியது வெறும் வெளிச்சோடனையாக மட்டுமே அமைய முடியுமென்பதைத்தான் காட்டுகிறது. பொஸ்னியா - ஹெர்ஸி கொவீனாவில் போர் முடிவுக்கான டேற்றன் உடன்படிக்கையின் ஐந்தாண்டுகளின் பின்னரும் அவதானிப்பாளர்கள் சர்வதேச ஆயுத சமாதானப்படை மீளப்பெறப்பட்டால் போர் மீண்டும் தொடங்குமென்ற கடும் ஆபத்தை உண்டுபண்ணும் எனக் கூறியதை நினைவிற்கொள்ளலாம்.

மேற்கூறியவை ஒரு உலகளாவியரீதியில் நிலவிய போர்கள், அதனால் உண்டான போர் நிறுத்த ஒப்பந்தங்கள், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சமாதான செயல்முறைகளின் நிலைகள் ஆகும். அத்துடன் இலங்கைத் தீவின் சமாதான செயல்முறைகள் வெற்றியடையாமைக்கான காரணங்களை ஆராய்ந்தோம். இந்த நிலையில் இலங்கைத் தீவின் அடுத்த கட்டம் என்ன என்பதை மிகச் சுருக்கமாக நோக்குவோம்.

`போர் என்பது நமது பகைவன் நாம் விரும்புவதை செய்ய வேண்டும் என நிர்ப்பந்திப்பதுவும் ` அதே கொள்நெறியை வேறு வழிமுறைகளால் நடத்தி செல்வதுவும் ஆகும் என புகழ்பூத்த பரஸ்ஸிய படையியல் தத்துவஞானி குளோஸ்விற்ஸ் (1832 / 1976) கூறியுள்ளார்.

இலங்கைத் தீவிலுள்ள ஒரு தரப்பினுடைய தொடர்ச்சியான வலிந்து தாக்குதல்களும் இன்னொரு தரப்பினுடைய இனம் புரியாத மௌனமும், குளோஸ்விற்ஸின் கூற்றை இலங்கைத் தீவின் சார்பிலும் விரைவில் நிரூபணமாக்கவுள்ளது.

ஐந்து வருட சமாதானத்தின் அடுத்த வெளியீடாக அதுவே இருக்கப்போகிறது.

-ச.ப.நிர்மானுசன்-

[thinakkural.com]

சரியான இணைப்பிற்கு இங்கே அழுத்தவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.