Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்!

Featured Replies

கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்!

 

white_spacer.jpg

கிருஷ்ண ரேகையோடு பிறந்தவன்! white_spacer.jpg
title_horline.jpg
 
ம.காமுத்துரை
white_spacer.jpg
‘‘நா ப்பது வயசுல ரெண்டாங் கல்யாணம்கறது, அவன் முடிவு செஞ்சது சாமி! அதுதே நடக்கணும்னு எழுதி இருந்தா நாம என்னா செய்ய முடியும்... என்னா?’’

புது மாப்பிள்ளை மினுமினுப்பில் இருந்தான் குருசாமி. சிவப்புத் தோலும், இழுத்துச் சீவி ஒட்ட வெட்டிய கிராப்பும், வெள்ளை முடி வெளிக்கிளம்பா வண்ணம் நாளரு தரம் சவரஞ் செய்து செய்து பச்சை படர்ந்த முகமும், முன் உதட்டில் ஒதுக்கிய வாசனைப் புகையிலையின் வீச்சும், பேச்சின் ஒவ்வொரு வரியின் முடிப்பிலும் ‘என்னா?’ என்கிற கேள்வியில் இயல்பாக விரிந்த சிரிப்பும், அந்தச் சமயம் வெளிப்படுகிற முன்னித்திப் பல்லின் பழுப்பு நிறமும்கூட கூடுதல் வசீகரம் தந்தது அவனுக்கு.

p140d.jpg

‘‘பொம்பளைக்காக காசு செலவழிசாத்தே தப்பு! உள்ளதச் சொன்னா, எனக்கு அவகள்ல செலவழிக்கறாக..!’’

குருசாமி புகையிலையை ஒதுக்குவதே அலாதியாய் இருக்கும். அந்த பாக்கெட்டைக்கூட சேப்பிலிருந்து எடுக்க மாட்டான். இடுப்பு வேட்டியைச் சரிசெய்வது போல இருக்கும்... கையில் புகையிலைப் பை வந்து நிற்கும். பையை விரித்து, ஆள்காட்டி - பெருவிரலால் ஒரு பிடி எடுத்து, இடது உள்ளங் கையில் போடுவான். உடனே பை மடிக்கப்பட்டு இடுப் புச் சொருகலில் மறையும். உள்ளங்கைப் புகையிலையை விரித்துப் பார்ப்பான். ஏதாவது ஒரு இணுக்கை எடுத்துக் கீழே போடுவான். அது கட்டையா, தூசா தெரியாது - சுத்தமாகப் போடுகிறானாம்.

எதிராளியிடம் இயல்பாகப் பேசிக்கொண்டே, பின்புறம் திரும்பி எச்சிலைத் துப்பிவிட்டு, கீழுதட்டை இழுத்து புகையிலை உருண்டையை ஒதுக்கிக் கொள்வான். அருகில் யாராவது பெண்மணி வெற்றிலை போட்டுக் கொண்டு இருந்தால், சுண்ணாம்பு தீட்டுகையில் அவள் விரலில் ஒட்டியிருக்கும் கொஞ்சூண்டு சுண்ணாம்பை தன் விரலால் சுரண்டி எடுத்துச் சேர்த்துக்கொள்வான்.

அப்படி சுண்ணாம்பு வாங்கியதில் தான், எல்லம்மா ரெண்டாந்தாரமாக வந்தாள். எஸ்.எம்.கே. மில்லில் உண் டான பழக்கம். இவன் ஃபிட்டராக இருந்தான். எல்லம்மா கோன் வைண்டிங்கில் சைடர். மெஷினில் ஏற்படுகிற அத்தனை கோளாறுகளையும் குருசாமி தான் சரி செய்ய வேண்டும். எல்லம் மாவும் வெத்திலை பார்ட்டி. சுண்ணாம்பு நீட்டிய கை, சோத்து சட்டி யையும் நீட்டியது.

அவளது சமையல் ருசியாக இருப் பதற்குப் பலப்பல காரணங்களைக் கண்டுபிடித்துச் சொன்னான். அந்தக் கண்டுபிடிப்புகள் அவளுக்குள் ஒரு சுரப்பை உண்டுபண்ணின. உணவுப் பதார்த்தங்களோடு தன்னைச் சார்ந்திருக்கும் உறவுகள் பற்றியும் பகிர்ந்து கொண்டாள். தாயும், தானும், தன் அக்காளும், தன்னை விட்டுப்போன புருசனும்... இன்ன பிற கொடுக்கல் வாங்கல் உறவுகள்...

‘இத்தனை சடவுகளையும் தாங்கிக் கொண்டு வேலைக்கும் நீ சளைக்காமல் வந்து சம்பாதிச்சுக் கொட்டு வதற்குப் பின்னால், உனக்கு ஏதோ ஒரு பெரிய நல்லது கெடைக்க இருக்குங் கறதுதான் என் கணிப்பு’ என்று அவள் மனசை ஈரப்படுத்தினான்.

ஒரு நாள் அவனது சம்சாரத்தைப் பார்க்க அவளுக்கு வாய்த்தது. மில்லுக்குச் சோறு கொண்டுவந்திருந் தாள். ஏதோ ஒரு காரணத்துக்காக ‘கேட்’டுக்கு வந்த இவளிடம் அந்தச் சோத்து வாளியைக் குடுத்துவிட்டார் வாட்ச்மேன். ‘‘இத பிட்டர் குருசாமி கிட்ட குடுத்திரும்மா!’’

‘‘வெரசா குடுத்துரு தாயி! காலம்பற கஞ்சி குடிக்காம வந்திருச்சு. பசி பொறுக்காத யெம!’’ என்றாள் அந்தம்மா. பின் கொசுவம் வைத்துச் சேலை கட்டியிருந்தாள். சாதாரண நூல் சேலை. கரையெல்லாம் சுருங்கிக் கிடந்தது. தலையில் முடியை அள்ளிச் சொருகி இருந்தாள். தலைக்கு பின்பாரம் ஏற்றியது போல முடி ‘பொம்’மென இழுத்துத் தொங்கியது. கழுத்திலோ, காதிலோ எதுவுமில்லை. தாலியைக் கூடக் காணோம். வளத்தியான ஒடம்பு. பாசம் பிடித்த தண்ணித் தொட்டி போல சோபை இழந்த முகம்.

‘‘இவுகதே அவுக பொஞ்சாதியா?’’ -வாட்ச்மேனிடம் வியந்து கேட்டாள் எல்லம்மா. ‘‘பொருத்தமே இல்ல!’’

‘‘அவன் மைனருமா. கேளு, இத அவன் அக்காம்பான். விட்டா ஆத்தான்னும் சொல்லுவான்!’’ - கிண்டல் செய்தார்.

அந்த வார சம்பளத்தில், சன்ன கரை வைத்த சேலை ஒன்றை முதன்முதலாக எல்லம்மாளுக்கு எடுத்துத் தந்தான் குருசாமி. வாங்கிக் கொள்ள மனம் ஒப்பவில்லை.

‘‘உன் வீட்டுக்காரிக்குக் குடு!’’ - அந்தம்மாளின் கரை சுருங்கிய நூல் சேலை மனசைப் பிசைந்தது.

‘‘இத அவளுக்குதே எடுத்தே! வேணாண்ட்டா!’’ என்றான்.

‘பயங்கர ஃபிராடுப் பய..! வெந்த சோறயே அரிசியாக்கிடுவானே!’ - வாட்ச்மேனின் குரல் அசரீரி வாக் காகக் கேட்டது.

‘‘ஏனாம்?’’ என்றாள் எல்லம்மா.

‘‘உனக்குக் குடுக்கச் சொல் லிட்டா!’’

‘‘எனக்கு எதுக்கு?’’ - இமைகள் சிறகடித்தன.

‘‘ம்... ஒன்னிய வச்சிருக்கனாம்!’’

இன்னதென்று உணர முடியாத ஒரு இறுக்கத்தில் சிக்கிக்கொண்டாள் எல்லம்மா. வாய் பேச வரவில்லை.

‘‘ஒரு அஞ்சாயிரம் ரூவா, பொரட்ட முடியுமா எல்சா..?’’ அவளை வேறு யோசனைக்குள் விழுந்துவிடாமல் இழுத்தான். ‘‘வேற ஒண்ணுமில்ல... பெரிய பிள்ளைக்கி ஒரு களுப்பு கழிச்சிடலாம்னு பாக்குறேன். அது வேற உறுத்தலா இருக்கு. ஆயிரந்தே அள்ளிக் குடுத்தாலும், அப்பன்கிற கடமைக்கி அது ஒண்ணக் கழிச்சிட்டா, பெரிய பாரந் தொலையும்! ஆரும் நம்மள கை நீட்டிக் குத்தஞ் சொல்லிரக் கூடாது பாரு..!’’

மூவாயிரம் கொடுத்தாள். சடங்குக்கு அம்மாவோடு வந்து 1,001 மொய்ப் பணம் எழுதினாள். அப்பவே அம்மா தடுத்தது. ‘‘இது நல்லதுக்கு இல்ல... ஒம் போக்கு பெரும்போக்கா இருக்கு...’’ என்றது.

‘‘யேன்... ஒம் மூத்த மகளுக்குச் செஞ்சிருந்தா நல்லதா இருக்குமோ?’’ - சுரீரெனக் கேட்டுவிட்டாள் எல்லம்மா. வந்த இடத்தில் சச்சரவு வேண்டாமென அடங்கிப்போனது அம்மா. வீட்டுக்கு வந்த பிறகும்கூட ஒரே வரியில் முடித்துக்கொண்டது... ‘‘ஆயிரந்தா அடிச்சுக்கிட்டாலும், அவ ஒன்னோட உடம்பொறப்பு. இன்னிக்கி வெதச்சா, நாளக்கில்லே நாளன்னிக்கிப் பயிராகும்..!’’

‘‘நானும் வெதச்சுதா விட்ருக்கேன். இது மொய்யி!’’

சடங்குக்கு வாங்கிய பணத்தை மதுரையில் வந்து அவளிடம் ஒப்படைத்தான் குருசாமி. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா பார்க்க வந்த கூட்டம் கங்கு கணக்கில்லாமல் இருந்தது. கல் பாலத்தருகே அழகர் இறங்கினார். போலீசும், பெரிய ஆபீசர்களும், பெண்களும் அந்த அதிகாலைப் பொழுதிலேயே கூடி இருந்தனர்.

இவர்கள் இருவரும் முதல் நாள் இரவு தேனியில் கூடிப் புறப்பட்டு வந்தனர். வீதியெல்லாம் பாட்டும், கூத்தும் கேட்டுவிட்டு, சாமி புறப்பாடான சமயம் ஒரு கட்டணக் குளியலறையில் குளித்துப் பெரிய பாலத்தில் நின்றுகொண்டனர். பாலமே நொறுங்கிப்போகுமோ என்கிற மாதிரி சனக்காடு. எல்லம்மாளுக்குப் பின்னால் நின்று தாய்க் கோழியாக அவளைத் தன்னுள் பொதித்துக்கொண்டான். அவள் இன்னும் ஒடுங்கி அவனுள் இறுகிக்கொண்டாள்.

தரிசனம் முடிந்ததும், உறக்கச் சடவாக இருப்பதாகச் சொன்னவன், ஏதாவது ஒரு லாட்ஜில் தூங்கி எழுந்து போனால், மில்லில் நைட் ஷிப்ட் பார்க்க தோதுவாக இருக்கும் என்றான். லாட்ஜ் வாசலில் ஒரு பீர் பாட்டிலும், சின்னதாக ஒரு பிராந்திப் பாட்டிலும் வாங்கிச் சொருகிக்கொண்டான். அறைக்குள் நுழைந்ததும் குமுறிக் குமுறி அழுதான். ‘‘எம்புட்டுதேஞ் சம்பாரிச்சுப் போட்டாலும் வீட்ல நல்ல பேர் கெடையாது. சின்னப்பிள்ள கிட்டக்கூட மருவாதி கெடைக்கல. சுருக்கமாச் சொன்னா எந்த வகை யிலயும் எனக்குப் பொருத்தமான புள்ள அமையல, பொண்டாட்டி அமையல!’’

அன்றைக்கு அவளும் கொஞ்சம் பீர் குடித்தாள். அதே லாட்ஜில் மூன்று நாட்கள் களித்தனர். திருச்செந்தூர், கன்னியாகுமரி, குருவாயூர், சென்னை என்று கைப் பணம் தீருமட்டும் சுற்றிவிட்டு 26 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வந்தனர். அதற்குள் ஊருக்குள் எத்தனையோ நடந்துவிட்டது. எல்லம்மாளின் தாயும், குருசாமியின் சம்சாரமும் சண்டை போட்டு குடுமிப் பிடி நடத்தி, பின் இருவரும் சேர்ந்து தேடி, ஓய்ந்துபோயினர்.

‘ரெண்டு பேரையும் ஒண்ணா வச்சுக்கறேன்... அக்கா தங்கச்சியா இருந்தா சம்மதிக்க மாட்டியா..?’ - சற்றும் சங்கடப்படாமல் சம்சாரம் காலில் விழுந்தான் குருசாமி.

எல்லம்மாளும், ‘‘எனக்கு இனிமே புள்ளைக வாண்டாம். ஒங்க புள்ளைக எம் புள்ளைக!’’ என்றாள். ஆனால், குருசாமியின் சம்சாரம் கடைசிவரை மசியவில்லை.

வேறு வழி இல்லாமல், எல்லம்மா வீட்டில்தான் அவன் தங்க வேண்டி வந்தது. எல்லம்மாளின் தாய் கிளப்பிய எதிர்ப்பு பலிக்கவில்லை. அடுப்படி தான் அவளுக்கு மிஞ்சியது. ஆனா லும், மருமகப் பிள்ளையை அவளால் மறுக்க முடியவில்லை. பிள்ளை இல்லை என்பதற்காக மலடி என்று ஒதுக்கி வைக்கப்பட்டவளுக்கு மறு வாழ்வு தந்திருப்பவன். இருந்தாலும், வயசுப் பிள்ளைக்குத் தகப்பனானவன் என்பதைத்தான் பெத்த மனசு புரட்டிப் புரட்டிப் பார்த்தது.

‘‘என்ன செய்ய... இந்த மட்டுல யாச்சும் அவளுக்கு மாலப் பொருத்தம் வாச்சுதே!’’ என்று சமாதானப்படுத் திக்கொண்டாள்.

எஸ்.எம்.கே. மில்லிலிருந்து குருசாமி, எல்லம்மா இருவரையும் வேலையைவிட்டு விலக்கினார்கள். அடுத்த வாரமே எல்லம்மா சாப் டெக்ஸ் மில்லில் சேர்ந்துவிட்டாள். இவனுக்கு தான் எதுவும் அமையவில்லை.

எஸ்.எம்.கே. மில்லில் மூத்தாளுக்கு வேலை கிடைத்தது. அதில் பிரச்னை இல்லை. ஆனால், சடங்கான தன் மகளுக்கும் அதே மில்லில் வேலை போட்டுத் தந்ததுதான் குருசாமிக்குத் தாங்க முடியாத துயரமாக இருந்தது. அன்றிலிருந்துதான் குடித்துவிட்டு வீதியில் சலம்பலானான். எஸ்.எம்.கே. மில் கேட்டில் வந்து நின்று முதலாளியை ஏசினான். ‘பொம்பளைகள வேலைக்கு வச்சுருக்கீகளா, வேல பாக்கறீகளாடா?’ என்றபடி, முதலாளியின் காரை மறித்தான். போலீஸ் வந்து பிடித்துப்போனது.

எல்லம்மாளோடு அவள் தாயார், மூத்தாள், மகள் என நான்கு பெண்களும் பதறிக்கொண்டு காவல் நிலையம் வந்தனர். உடுப்புகளைச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு இருளடைந்த ஒரு மூலையில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தான் குருசாமி. முகத்தில் கண்ணீர்த் தாரையும் உடம்பில் நடுக்க ரேகையும் ஓடிக்கொண்டு இருந்தது.

‘‘யாரென்ற கேள்விக்கு, மூத்தா ளும் எல்லம்மாவும் ‘பொஞ்சாதிங்க’ என்று சொன்ன தோரணை காவலரைத் திடுக்கிடச் செய்தது. ‘‘நாலு பேருமா!’’ என்றார் அதிர்ந்து. பின், அங்கிருக்கும் அதிகாரிகளை எண்ணி, எல்லாருக்கும் வடை, டீ வாங்கித் தந்துவிட்டு கூட்டிப் போகச் சொன் னார். ரைட்டரோ, ‘பேப்பரும் கார்பன் ஷீட்டும் சேர்த்துக்க’ என்றார்.

‘ஊர் எல்லை வரைக்கும் உடுப்ப உடுத்திக்கக் கூடாது. இப்பிடியேதே நடந்து போகணும்’ என்ற நிபந்தனை யோடு அனுப்பினார்.

‘‘எங் கைரேகையப் பாத்தீல்ல... கிருஷ்ண பரமாத்மாவோட அம்ச ரேகை என்னுது. என்னா..?’’ - நாலு பெண்களுக்கு நடுவில், ரெண்டு பக்கமும் சேப்பு வைத்த ஜட்டியோடு அவன் நடந்து வந்ததைப் பார்த்த வர்களிடமெல்லாம் தாளம் மாறாமல் சொல்லித் திரிகிறான் குருசாமி, இன்னிக்கும்.

https://www.vikatan.com

  • கருத்துக்கள உறவுகள்

வெத்து வேட்டு.... இப்படி பந்தா காட்டும் ஆசாமிகள் நிறையவே உண்டு.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.