Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கற்பு!

Featured Replies

கற்பு!
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1515148781.jpeg
 

'வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது...' என்று, 30 ஆண்டுகளுக்கு முன், லட்சுமி, தன்னிடம் சொன்ன இடத்தில், அவளுக்காக காத்திருந்தார், செல்வம்.
''என்னோட வரவுக்காக, வழிமேல் விழி வெச்சு காத்திருக்கீங்க போல...'' என்ற குரலை நோக்கி, ஆர்வத்துடன் திரும்பிய செல்வத்தை பார்த்து, மென் முறுவல் பூத்தாள், லட்சுமி. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். முதிர்ச்சியின் அடையாளமாய், உருவம் மாறி, கேசம் நரை கண்டிருந்தது.
''ஆரம்பிச்ச இடத்துலேயே ஆரம்பிக்கலாமா...'' குழந்தையின் குதுாகலத்துடன் கேட்டார், செல்வம்.
முகவுரையையும், முடிவுரையையும் குழந்தைத்தனமாய்தான் படைத்திருக்கிறான், இறைவன். இடையில் தான், நம்மைப் பற்றி நாமே கிறுக்கிக் கொண்ட ஏராளமான பைத்தியக்காரத் தனங்கள் வந்து போகின்றன.


''உங்களப் பற்றி எனக்கு தெரியாதா...'' என்று பையிலிருந்து இரண்டு எலெக்ட்ரிக் டிரெயின் டிக்கெட்களை எடுத்துக் காட்டிச் சிரித்தாள், லட்சுமி. காலம் துடைத்தெறிய மறுத்த சிரிப்பு; களங்கமற்ற பெண்மையிடம் மட்டுமே காணக்கிடைக்கும் சிரிப்பு!
அது, 1987ம் ஆண்டு -
'இந்த ஞாயிற்றுக் கிழமை மெட்ராசை நீளமாய் பாக்கலாம்ன்னு இருக்கேன்; வர்றீங்களா...' என்று லட்சுமியிடம் கேட்ட செல்வம், அந்தக் கால பெல் பாட்டமும், பெரிய காலர் வைத்த கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்தான்.
'வர்றேன்... ஆனால், அதென்ன
நீளமாய் பாக்கறது... அப்ப மெட்ராசை அகலமா எப்படி பாக்கிறது...' என்று கேட்டாள், லட்சுமி.
'நீளமாய் பாக்கணும்ன்னா பீச்லேர்ந்து தாம்பரத்துக்கு டிரெயின்ல போகணும்; அகலமா பாக்கணும்ன்னா, ஆவடியிலேர்ந்து திருவான்மியூருக்கு பஸ்ல போகணும்...' என்றான், செல்வம்.


'அடேங்கப்பா, வந்த கொஞ்ச நாளிலேயே மெட்ராசை கரைச்சு குடிச்சுட்டீங்க போல...' என்று அந்த ஞாயிற்று கிழமைக்கு ஒப்புதல் தருவது போல் தலையாட்டினாள், லட்சுமி.
இருவரும் அவரவர் ஊர் விட்டு சென்னை வந்து ஒரே கம்பெனியில் சேர்ந்து, அறிமுக காலங்களில் அவதானித்து பேசி, நம்பிக்கையும், நாகரிகமும் போட்ட உணர்வில், சாலையில் மெல்ல இணைந்து நடக்கத் துவங்கியிருந்தனர். அது கொடுத்த துணிவு தான், அந்த ஞாயிற்றுக்கிழமை காலை,
'பீச் ஸ்டேஷனில்' அவர்களை நிறுத்தியுள்ளது.
'ஒன்டே பாஸ் வாங்கிட்டேன்; எத்தனை தடவை வேணும்ன்னாலும் பீச்சுக்கும், தாம்பரத்துக்கும் போயிட்டு வந்துட்டே இருக்கலாம்...' என்று உற்சாகமாய் சொல்லியபடி வந்தான், செல்வம்.
ஞாயிறு காலை என்பதால் மின்சார ரயில்கள் காத்தாடின. இளமை பொல்லாதது தான்; ஆனால், கண்ணியத்தை உபபண்பாய் பெற்ற இளமை, காண்பதற்கும், அனுபவிப்பதற்கும் அளப்பரிய ஆனந்தத்தை தருவது. எனவே தான், அன்று லட்சுமியால், செல்வத்தின் தோளில் நம்பிக்கையுடன் தலை சாய்க்க முடிந்தது.
கடல் அற்ற சிறு நகரத்தில் இருந்து இடம் பெயர்ந்த அவ்விருவருக்குமே, கடல் குறித்து மிகுந்த குதுாகலம் இருந்தது. 'பூங்கா' ஸ்டேஷன் தாண்டியவுடனேயே இருவரும், ரயிலின் வாயில் அருகே வந்து கம்பியை பிடித்தபடி நின்று கொண்டனர். 'கோட்டை' கடந்த பின், கடல், அருகில் இருப்பதாக சொல்லி, காற்று அவர்களை தொட்டுச் சொன்னது.


கடலுக்கென்று ஒரு வாசம் உண்டு; அது, அம்மாவின் மடி தரும் வாசனை போன்று பாதுகாப்பும், உற்சாகமும் தரும் என்பாள், லட்சுமி. அந்த வாசனை, காற்றில் வேகம் பிடித்து இருவரின் மெய் தழுவி, நுரையீரலில் இறங்கியது. கோட்டைக்கும், பீச் ஸ்டேஷனுக்கும் இடையில் ஓரிடத்தில் ரயில் சற்று உயரத்தில் வளைந்து திரும்பும். அப்போது துாரத்தில், கடலின் தரிசனம் கிடைக்கும். அதைப் பார்த்ததில் ஏற்பட்ட மகிழ்ச்சி, சில நொடிகளில் மறைந்தது. கடலுக்கும் அவர்களுக்கும் இடையே துறைமுகம் குறுக்கிட ஆரம்பித்தது. பீச் ஸ்டேஷன் அடையும்போது, கடல் அவர்களின் பார்வையிலேயே இல்லை.
ஸ்டேஷன் வெளியே வந்தவுடன், அந்த பக்கம் இந்தப் பக்கம் சற்று துாரம் நடந்து பார்த்தும், கடலுக்கு போகும் வழியேதும் இல்லை. பர்மா பஜார் கடைகள் தான் அவர்களை வரவேற்றன. அப்போதுதான் செல்வம் முதன் முதலாய், 'பீச்ன்னு ஒரு ஸ்டேஷனுக்கு பேர் வச்சுட்டு, அங்க, பீச் இருக்க வேணாமா...' என்றான். பின், ஒவ்வொரு முறையும் பீச் ஸ்டேஷனுக்கோ, மெரினாவுக்கோ செல்லும் போதெல்லாம், இதை, ஒரு முறையேனும் சொல்லி விடுவான்.
அதன்பின் பல ஞாயிறுகள் பீச்சுக்கும், தாம்பரத்துக்கும் இடையே அவர்கள் தங்கள் உணர்வையும், உறவையும் வளர்த்தனர். 'ஒன்டே பாஸ்' எடுத்து, ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இறங்கி ஏறுவர். கிண்டி வரை ரயில் பாதையின் இருபுறமும் நெருக்கமாக வரும் கட்டடங்கள், பின் குறைந்து, நகரமே சற்று விசாலமானது போல் தோன்றும். பரங்கிமலை, மீனம்பாக்கம் கடக்கும்போது தொலைதுார வானமும், பிய்த்துக்கொண்டு போகும் காற்றும், அவர்கள் இருவரையும் கைகோர்க்க வைக்கும்.
அதிக மகிழ்ச்சியோ, கவலையோ, முக்கியமான விஷயமோ பேசும்போது, செல்வத்தின் கையை தன் இரண்டு கைகளுக்குள் வைத்து மூடிக்கொள்வாள், லட்சுமி. வாழ்வே ஒரு பத்திரமான பயணமாக மாறிவிட்டது போல் இருவருக்கும் தோன்றும். உடனே, இருவரும் மவுனத்தில் ஆழ்ந்து விடுவர்.
அப்படித்தான் ஒருமுறை இருவரும் மவுனத்திருந்த நொடியில், பரங்கிமலையில் ரயில் நின்றது. வெள்ளை நிற நீள் தாடியும், சற்றே அழுக்கடைந்த ஆடையுமாய் புல்லாங்குழலுடன் ஒரு முதியவர் ஏறினார். அதுவரை, ரயிலில் யாசகம் கேட்டு வருவோர், பிரபலமான பாடல்களை மட்டுமே பாடுவர். ஆனால், அப்போது, அவ்வளவாக பிரபலமாகாத, 'மழை தருமோ என் மேகம்...' என்ற பாடலை பாடத் துவங்கினார், அம்முதியவர். மதிய நேர வெயிலிலும், அவரின் பாடல், மழையை எதிர்பார்க்க வைத்து விட்டது. 'இந்தப் பாட்டு எந்தப் படத்துல...' என்று கேட்டாள், லட்சுமி.


'மனிதரில் இத்தனை நிறங்களா என்ற படம்; ஷியாம்ன்னு ஒருத்தர் மியூசிக் போட்டது. அவரோட எல்லா பாட்டுமே நல்லா இருக்கும்...' என்றான் செல்வம்.
உடனே, இதழ் குவித்து, 'மழை தருமோ... என் மேகம்...' என்று சொல்லிப் பார்த்து, 'நல்லாருக்குல்ல...' என்று சிரித்தாள், லட்சுமி.
அவர்களை நோக்கி வந்த முதியவரிடம் சற்றும் யோசிக்காது, 50 ரூபாயை தந்தாள். கைகூப்பிய அவர், 'ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீகளா...' என்றார். அக்கேள்வியே இருவரிடத்திலும் ஒரு மகிழ்ச்சியை கூட்டியது. பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை போலும். 'நல்லாயிருங்க...' என்று சொல்லி, அடுத்த இருக்கைக்கு நகர்ந்தார்.
சில மாதங்களிலேயே அந்த முதியவரின் வாக்கு பலித்தது; ஆனால், அவர்கள் இருவரும் நினைத்தபடி அல்ல!
காலம், எப்போது யாரை, யாரோடு, எதை, எதோடு ஒட்டும் அல்லது வெட்டும் என்பது, அது மட்டுமே அறிந்த ரகசியம்.
செல்வமும், லட்சுமியும் இப்படித்தான் காலத்தின் கைகளால் ஒட்டப்பட்டு, பின், திசைக்கொன்றாய் வெட்டப்பட்டு சிதறினர்.
விடுமுறைக்கு ஊருக்கு போன லட்சுமி, அதன்பின் வேலைக்கு வரவில்லை. சில வாரங்கள் பித்து பிடித்தது போல் இலக்கின்றி திரிந்தான், செல்வம். அனிச்சை செயலாய் இரண்டு டிக்கெட்டுகள் எடுத்து, ஒற்றை ஆளாய் தாம்பரத்துக்கும், பீச்சுக்கும் ரயிலில் மீண்டும் மீண்டும் சென்று வந்தான்.
தண்டவாளங்கள் பிரியும் இடத்தை கடக்கும் ரயில்கள் சற்று தடதடக்கத்தானே செய்யும்... அதற்காக, அங்கேயேவா நின்று விடுகிறது ரயில்... இழப்பு, எத்தனை தாக்கம் மிக்கதாயினும், அதிலிருந்து மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பும் அனுபவம் தானே வாழ்க்கை... அப்படித்தான் காலம், அவர்களையும் இயல்பு நிலைக்கு திருப்பியது.
அவரவர் வாழ்வு, குடும்பம் குட்டியென்று அடுத்த, 30 ஆண்டுகள் ஓடி விட்டன.


''மணி அஞ்சாச்சு, நீங்க வந்தாச்சா?'' என்று கேட்டாள், லட்சுமி.
''ஓ.எஸ்., மீனாவும் இங்கதான் இருக்காங்க; ரெண்டு பேருமே காரை, லைட் அவுஸ் பக்கத்துல தான் பார்க் பண்ணியிருக்கோம்,'' என்றார் லட்சுமியின் கணவர், சிவா.
சில நிமிடங்களில், 'ஹோ...'என்ற சிரிப்புடன் செல்வத்தின் மனைவி மீனாவும், அவர்களுடைய பிள்ளைகளும், லட்சுமியின் கணவர் மற்றும் அவர்களின் பிள்ளைகளும், செல்வத்தையும் - லட்சுமியையும் சுற்றி வளைத்தனர்.
''அம்மா... உங்க லவ்வரோட பயங்கர ரவுண்டு போல...'' என்று சீண்டினான், லட்சுமியின் மகன்.
''அப்பா முகத்துல தெரியிற பிரகாசமே ஆயிரம் கதை சொல்லுதே,'' என்றாள், செல்வத்தின் மகள்.
சிவாவும், மீனாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தனர்.
''நேத்து ராத்திரி ஆபிசிலிருந்து வந்த பிறகுதான், மீனாவும், என் மகளும், 'நாளைக்கு உங்களுக்கு பிடிச்ச ஒருத்தர, ரொம்ப நாளைக்கு அப்புறம் பாக்க போறீங்க'ன்னு பீடிகை போட்டாங்க...'' என்று சொன்ன செல்வம், திடீரென்று உணர்ச்சிவயப்பட்டவராக, ''உங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல...'' என்றபடி சிவாவின் கைகளை பிடித்துக் கொண்டார்.


''நாங்க லட்சுமிகிட்ட ஒரு வாரம் முன்னாடியே சொல்லிட்டோம்; ஒரு வாரமா, அவ, கால் தரையில பாவாம தான் சுத்திகிட்டுருந்தா,'' என்றார், சிவா.
''ஆன்ட்டியோட போன் நம்பர், மெயில் ஐடியெல்லாம் வாங்கிட்டீங்களா அப்பா... அப்புறம் எங்கள கேட்டு தொந்தரவு பண்ணக் கூடாது,'' என்று பொய் கோபம் காட்டினாள், செல்வத்தின் மகள்.
மீனா, லட்சுமியின் தோளை அணைத்து, ''பீச்சுக்கு வந்துட்டு கால் நனைக்கலைன்னா எப்படி...'' என்றபடி, அனைவரையும் கடலை நோக்கி அழைத்தாள்.
ஊழியின் ஆதி நண்பனான கடல், அவர்கள் அனைவரின் பாதங்களையும் கழுவ, ஆர்வமுடன் ஆர்ப்பரித்து வந்தது.
தொடுவானத்தை பார்த்தபடி மீனா, ''கல்யாணம் செய்ய நினைச்சு, முடியாமப் போனதாலேயே ஒரு உறவு வெட்டுப்படணும்ன்னு அவசியமில்ல. ஒரு உறவுக்கு உண்மையா இருக்க, அதுக்கு முன்னாடி இருந்த உறவை மறக்கணும்ன்னோ, இழக்கணும்ன்னோ அவசியமில்ல. அது, அவங்கவங்க மன நேர்மையை பொறுத்தது. வாழ்க்கைங்கறது, காலத்துக்கு உண்மையா இருக்கறது. அதில்லாம வேற யாருக்கும், எதுக்கும் உண்மையா இருந்தாலும் அது போலித்தனம் தான்,'' என்றாள்.
உடனே, சிவா, ''ஆமாம்; அவங்க சொல்றது உண்மை தான். கிடைக்காம போன எல்லாத்தையும் நம்மால மீட்டெடுக்க முடியாது; வயசாக வயசாக அதுக்கான அவசியமும் குறைஞ்சுகிட்டே போயிரும். வயசான காலத்துல, மனதில் எங்கோ ஒரு மூலையில ஒதுங்கியிருக்கிற அந்தக் கால நினைவுகள், இந்த சந்திப்பு மூலம், செல்வத்துக்கும், லட்சுமிக்கும் ஒரு சின்ன சந்தோஷத்த கொடுக்கும். அதை பெற வேண்டியது அவங்க உரிமையும் கூட. அதுக்கு உறுதுணையா இருக்க வேண்டியது நம்மோட கடமை...'' என்றார்.


'நீங்க நாலு பேரும் ரொம்ப நல்லவங்க மட்டுமில்ல, ரொம்ப அதிர்ஷ்டக்காரங்களும் கூட...' என்று அவர்களின் பிள்ளைகள் கை தட்டி மகிழ்ந்தனர்.
காலத்துக்கு உண்மையாக இருக்க முயலும் இத்தகைய அரியோரைத் தேடித்தான், கரை நோக்கி வந்தபடி இருக்கிறதோ இந்த அலைகள்!

http://www.dinamalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.