Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிஞர் வைரமுத்துவும் தமிழாண்ட ஆண்டாள் நாச்சியாரும் - சங்கே முழங்கு!

Featured Replies

கவிஞர் வைரமுத்துவும் தமிழாண்ட ஆண்டாள் நாச்சியாரும் -   சங்கே முழங்கு!

பேரா.ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம்

 

கோதை ஆண்டாள் என்றும் தமிழை ஆண்டாள். பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாள் நாச்சியார் ஒருவரே பெண் ஆழ்வார். "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை; தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.", என்று ஆறாம்-ஏழாம் நூற்றாண்டில் திருநாவுக்கரசர் பெருமான் பாடிய அகத்துறைத் தேவாரப்பாடலுக்கும் "உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி" என்னும் நம்மாழ்வார் திருமொழிக்கும்  இலக்கணமாக அவதரித்தவர் தெய்வப்பிறவியான ஆண்டாள் நாச்சியார்.

பெருமாளுக்கே உரியவளாகிய கோதை ஆண்டாள்

பெரியாழ்வார் ஆண்டாளது திருமணம் பற்றிப் பேசியபோது 'மானிடர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன்' என்ற ஆண்டாள் நாச்சியார், யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன்என்று உறுதிபடக் கூறி, திருவரங்கனையே மணாளனாகப் பெற்றார் கோதை ஆண்டாள், தம் 'திருப்பாவை'யாலும், 'நாச்சியார் திருமொழி'யாலும் என்றென்றும் தமிழர்களைத் தம் தமிழால் ஆட்கொண்டவர் என்றால் மிகையல்ல; சமயம் கடந்து தமிழர் அனைவரும் பாராயணம் செய்யும் பாடல்கள் ஆண்டாளின் திருப்பாவைப் பாசுரங்கள். ஆண்டாள் சமயம் கடந்து திருவெம்பாவை-திருப்பள்ளியெழுச்சியுடன் திருப்பாவையும் சைவர்களின் வழிபாட்டுப் பாடலானது ஆண்டாள் நாச்சியார் தமிழின் பெருமையைப் பறைசாற்றும்.

சர்ச்சையும் மன்னிப்பும்

தமிழ்த் தாயின் தலைமகள் ஆண்டாள் நாச்சியாரைக் குறித்துக் கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்த 'ஆண்டாள் தேவதாசி' என்னும் மேற்கோள்  பெரும் சர்ச்சையை உருவாக்கிவிட்டது.

பல்கலைக்கழகங்களில் நிகழும் ஆய்வாளர்கள் கருத்தரங்குகளில் இத்தகைய கருத்துக்கள் ஆய்வுக் களங்களாகவும், விவாதப் பொருளாகவும் காணப்படுதல் இயல்பு. ஆய்வுப்பட்ட மாணவர்களின் முனைவர் பட்டத்துக்கு இத்தகைய கருதுகோள்கள் இருந்தால் அவை சுயமாகச் சிந்தித்த புதிய ஆய்வு முடிவுகள் என்று கொள்ளப்படும் என்ற அளவிலே அக்கருத்துக்கள் பெரும்பாலும், அந்த ஆய்வு அரங்கின் வாயிலைக்கூடத் தாண்டுவதில்லை. கவிஞர் வைரமுத்து அவர்கள் பேசியதாலேயே இது சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகி, மிரட்டலுக்கு உள்ளான, கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டு விட்டார்.

"தமிழுக்கு உரமூட்டிய தகுதிசால் முன்னோர்களை வளரும் தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கில் 'தினமணி' நாளிதழ் தொடர்ந்து வெளியிடும் 'இலக்கிய முன்னோடிகள்' என்னும் பகுதிக்காக, ஆண்டாள் அவதரித்த திருவில்லிபுத்தூர் மண்ணுக்கருகில் உள்ள இராசபாளையத்தில் கவிஞர் வைரமுத்து அவர்கள் முதல்நாள் வாசித்து அரங்கேற்றி, அடுத்த நாள் தினமணியில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதிதான் இங்கு பெரும் சர்ச்சைக்குரிய பொருளாகிவிட்டது.  கவிஞர் வைரமுத்து அவர்கள் தமது உரையின் தொடக்கத்திலேயே ஆண்டாள் அவதரித்த மண்ணைத் தொட்டு வணங்குவதாகக் குறிப்பிட்டே தொடங்கினார். ஆண்டாள் குறித்து உயர்வானதைப் பதிவு செய்த அவரது கட்டுரையில் அமெரிக்க ஆய்வையையும் சுட்டிக்காட்டியது தவறு என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. அந்தக் கருத்தை தமிழர்களின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் தமது நோக்கமே தவிர, அந்தப் பதிவின் மூலம் யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல என்றும், அந்தப் பதிவு பலருடைய உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக வருத்தமும் தெரிவித்திருக்கிறார் என்றும், 'தினமணி' மூலம் அந்தக் கருத்து பதிவாகி இருக்கிறது என்பதால் வாசகர்களுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதிலோ, மன்னிப்புக் கோருவதிலோ எங்களுக்கு சற்றும் தயக்கம் இல்லை. 'தினமணி' வருந்துகிறது!" என்பது தினமணி நாளிதழ் வெளியிட்ட வருத்தத்தின் சுருக்கம்.

மன்னிப்பு கேட்ட பின்னும் தொடரும் சர்ச்சை

இருந்தும் சர்ச்சை விட்டபாடில்லை; தொடர் விவாதப் பொருளாகத் தொடர்கிறது. மன்னிப்பு போதாது; தெளிவான விளக்கம் தந்து, மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று ஆழ்ந்த தமிழ் வாசிப்பு உள்ள அறிஞர் மைத்திரேயன் கூட கருத்து வெளியிட்ட நிலையில்,  இக்கருத்து குறித்து, தமிழ் மக்களுக்கும், ஆண்டாள் நாச்சியாரின் பாசுரங்களில் ஆழங்கால்பட்ட என்போன்ற அன்பர்கள் பலருக்கும் தெளிவான பதிலைத் தரும் ஒரு சிறு முயற்சி.

தமிழர்களிடமுள்ள தொன்மையான நூலான தொல்காப்பியம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையது; தொல்காப்பியத்தின் சூத்திரங்கள் பலவும் 'என்மனார் புலவர், என்ப' போன்ற சொற்களுடன் முடிவது நமக்கு உணர்த்தும் செய்தி, தொகாப்பியத்துக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி இலக்கணம் உருவாகியிருக்கவேண்டும் என்பதுவும், அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மொழி செழித்து வளர்ந்திருந்ததாலேயே இலக்கணம் உருவாகும் நிலைக்கு உயர்ந்திருக்கவேண்டும் என்பதுதான். தமிழ் மொழியின் பல சொற்களும் உருவான காலத்தில் கொள்ளப்பட்ட பொருளுக்கு முற்றிலும் மாறுபட்ட பொருளை காலவோட்டத்தில் பெறுவதை உற்றுநோக்கினால் புரிந்துகொள்ள முடியும்.

'இடம்-காலம்' மாறியதால் பொருள் மாறிய 'நாகரிகம்'

எடுத்துக்காட்டாக, 'நாகரிகம்' என்னும் சொல்லுக்கு நகர்+இகம் என்று பதம் பிரித்து, நகரவாழ்க்கை முறைகளின் முன்னேற்றம் என்னும் பொருள் கொள்ளுகிறோம்; இது, நடை, உடை, பாவனை என்ற தளங்களில் நகர வாழ்க்கையின் முறைகளை, கிராம மக்கள் கைக்கொள்ளுதலைக் குறிப்பதாகத் தற்காலத்தில் பொருள் கொள்ளுகிறோம்.

பண்டை இலக்கியங்களிலே நாகரிகம் - கண்ணோட்டம்  - அதாவது, அன்பின் மிகுதியால் தோன்றும் ஏற்புடைமை, இரக்கம், கருணை என்ற பொருளில் வழங்கி வந்திருக்கின்றது. நகரங்களில் தோன்றி வளரும் நடையுடை பாவனைகளை நாகரீகம் என்ற சொல்லால் குறிக்கும் இக்காலத்தில், பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் கூறிய 'பெயக்கண்டும் நஞ்சுண்டமைவர்' என்னும் குறள் பொருளற்றுப் போய்விட்டது என்று மாணவர்களிடம் இரு தினங்களுக்கு முன்தான் பேசியிருந்தேன்; என் கன்னத்தில் ஓங்கி அறைவிழுந்ததைப் போல் இருந்தது எனது கேள்வி ஒன்றுக்கு நண்பர் ஒருவர் தந்த பதில்.

பொருள் மாறாத 'பொய்யாமொழி'

தன் வீட்டில் டீ, காபி அருந்தும் பழக்கமில்லாத என் நண்பர், தமது நண்பர்கள், உறவினர் வீடுகளில் உபசரித்துத் தரும் டீ, காபி மட்டுமல்ல, அவருக்குப் பிடிக்காத உணவுகளைக்கூட மறுக்காமல் அப்படியே மிகவும் ரசித்து உண்பார்; பொறுத்துக்கொள்ள முடியாமல், ஒருநாள் "ஏன் இந்த இரட்டை வேடம்" என்று கேட்டே விட்டேன். "அன்புடன் நமக்காக உபசரித்து வழங்குவதை வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் மனம் வருந்தும்; மேலும், டீ, காபி வேண்டாம் என்றால், அவர்கள் பூஸ்ட், போன்விட்டா, குளிர்பானம் என்று உங்களுக்கு எது பிடிக்கும் என்று கேட்டு, மெனக்கிடுவார்கள். அதுக்குத்தான்" என்றார் அமைதியாக.

 ஓ! இதுதான் "பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர், நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர்" என்று வள்ளுவன் சொன்ன நாகரிகம் என்பது என் மரமண்டைக்குப் பளிச்செனப் புரிந்தது. பொய்யாமொழி என்றும் பொய்ப்பதில்லை. பின்னொருநாள், சங்கஇலக்கியத்தில் ஆழங்கால்பட்ட பேராசிரியர்-நண்பர் நற்றிணையிலிருந்து "முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்" என்ற பாடலைச் சொன்னபோது, ஏற்கனவே பளிச்சென்றிந்த என் மரமண்டைக்கு "முந்தையிருந்து நட்டோர்' என்னும் சொற்கள்  பலமடங்கு தெளிவு தந்ததால் வந்த மகிழ்வில் ஆயிரம் வாட்ஸ் எல்.ஈ.டி. பல்பு ஒளிர்ந்தது.

எப்படியிருந்த 'நாற்றம்' இப்படியாயிற்றே!

கண்ணனை அடைய மார்கழி மாதம் முழுவதும் நோன்பு நோற்றும் கண்ணன் வராததால், காமனே வேங்கடவற்கு என்று என்னை விதிஎன்று காமனைக் கேட்கிறார் ஆண்டாள் நாச்சியார். அவர் அருளிச் செய்த நாச்சியார் திருமொழியில் இத்தகைய பாசுரங்களையெல்லாம் காணலாம். கடல் வெண்சங்கைப் பார்த்து வெண்சங்கே பாஞ்ச சன்னியமே! நீ பெற்ற பேறே பேறுஎனக் கூறி பின்வருமாறு பாடுகிறார்.

கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ

மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே - நாச்சியார் திருமொழி

 

நாம் பூசைக்கு ஏற்றும் கற்பூரம்(சூடம்) வேறு; ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில் சொல்லும் 'கற்பூரம்' தற்போது 'பச்சைக் கற்பூரம்' என்றழைக்கப்படுகின்றது. ஒருகாலத்தில் தமிழகத்தில் இருந்த கற்பூரமரம் இன்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் விலை அதிகம்.

உப்புக்கடலில் பிறந்து கண்ணனின் கையில் உள்ள வெண்சங்கல்லவா கண்ணனின் பவளவாய் தொட்டு ருசிக்கும் பாக்கியம் பெற்றது! அதனிடம் தானே கண்ணனின் திருவாயமுதம் எப்படி இருக்கும் என்று கேட்டு அறிந்து கொள்ள முடியும் என்பதால் ஆண்டாள் நாச்சியார் ஆழிவெண்சங்கிடம் கேட்கிறார், "கண்ணனின் பவள வாய் எப்படி மணக்கும்? பச்சைக்கற்பூர மணம்போல் மணக்குமா? தாமரைப் பூவின் மணம் மணக்குமோ? பவளம் போன்ற அந்த செவ்வாய் மிக இனிப்பாக இருக்குமோ? மாதவனின் வாயின் சுவையும் மணமும் எப்படி இருக்கும் என்று விருப்பம் உற்றுக் கேட்கின்றேன்  என்னிடம் சொல்லேன் கடல் வெண்சங்கே!"

'ஐயோ! வெறும் முத்தம் அல்லவே! வாயின் சுவை' என்ற நாச்சியார், 'கண்ணனின் இதழ்களைச் சுவைத்திருப்பாய் தானே வெண் சங்கே!" என்று ஆசையுடன் சங்கிடம் குசலம் விசாரிக்கிறார். இப்பாசுரத்தில் 'நறுமணம்' என்ற பொருளில் உயர்ந்த இடத்தில் இருந்த 'நாற்றம்' என்னும் சொல் இப்போது 'கெட்டவாடை' என்னும் பொருளில் ஆகிப்போன அவலத்தை நாம் அறிவோம். 'தேவதாசி'யும் அப்படியே!

சமகாலத்தில் 'இடம்' மாறுவதால் 'பொருள்' மாறும் சொல்

ஒரே சொல், ஒரே காலத்தில், இருவேறு ஊர்களில் வேறுவேறு பொருளைத் தரும் ஒரு உதாரணமும் இங்கு குறிப்பிடத்தக்கது. என் மாணவப் பருவத்தில் நடந்த நிகழ்வு. நெல்லையிலிருந்து மாறுதலாகி, கோவில்பட்டிக்கு வந்த ஒரு அரசு அலுவலரின் மகன் என் வகுப்புத் தோழன். முதல்நாள் என்னிடம் "உங்கப்பா என்ன சோலி பாக்காரு?" என்றான்;   மொத்த வகுப்புமே சிரிப்பில் அதிர்ந்தது; மாணவிகள் முகங்கள் கோபத்தில் சிவந்தன. கோவில்பட்டியிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெல்லை மக்களுக்கு 'சோலி' என்பது 'வேலை' என்னும் சொல்லுக்கான வட்டார வழக்கு. கோவில்பட்டி மக்களுக்கோ 'சோலி' என்பது கெட்ட வார்த்தை.

'தேவரடியார்', 'தேவதாசி' என்னும் புனிதமான சொற்கள்

இப்போது கவிஞர் வைரமுத்து சொன்ன 'தேவதாசி' என்னும் சொல்லுக்கு வருவோம். சைவ, வைணவ பக்தி இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தை சமணம், பௌத்தம் என்னும் இரு சமய ஆதிக்கத்திலிருந்து வீறுகொண்டு மீட்டெடுத்த காலத்தில், இறைவன்மேல் அன்புகொண்ட அன்பர்கள் தங்களை இறைவனின் அடியவர்கள் என்று அழைத்துக்கொள்வதைப் பெரும்பேறாகக் கருதினர். சைவர்கள் தங்களை 'சிவனடியார்' என்றும், வைணவர்கள் தங்களைத் 'திருமால் அடியார்' என்றும் அழைத்தனர்; சரணாகதி என்பது அடியார்கள், எவ்வித பலன் கருதாமல், தங்களை உடல் அளவிலும், ஆன்ம அளவிலும் முழுவதுமாக, பரம்பொருளிடத்தில் ஒப்புவிக்கும் பக்தி. திருமாலிடம் சரணாகதி அடைந்தவர்கள், தங்களையே 'தாசன்' என்று அழைத்துகொள்வர். திருவாங்கூர் மன்னர்கள் தங்களை 'பத்மநாப சுவாமி'யின் தாசர் என்றே அழைப்பர்.

இல்லறம் துறந்து, திருக்கோவிலைச் சுத்தம் செய்தல், அலகிடல், பூத்தொடுத்தல், இறைவன் புகழ்பாடும் இசைமாலை பாடல், இறைவனின் அற்புதங்களை நாட்டிய வடிவில் மக்களிடம் பரப்புதல் போன்ற திருப்பணிகளுக்கே தங்கள் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த்த சைவ, வைணவ பெண் அடியவர்கள்  தங்களைத் 'தேவர்அடியார்' அல்லது 'தேவதாசி' என்று இறையன்போடு அழைத்துக்கொண்டனர்.

மாணிக்கவாசகரின் திருவெம்பாவை சொல்லும் சாட்சி

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையில் ஒரு காட்சி.  'எம் கொங்கை நின் அன்பரல்லாதார் தோள் சேரற்க' (இம்மேற்கோள் மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவையின் பகுதி; கவிஞர் வைரமுத்து அவர்களின் கட்டுரையில் ஆண்டாள் அருளிய திருப்பாவை என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) என்று சிவபெருமானின் அடியவர்களே தங்கள் கணவராக வரவேண்டும் என்று பாவை நோன்பு நோற்கும் பெண்கள், தங்களுக்குள் இறைவனின் பெருமைகளைப் பேசிக்கொண்டே, நீராடப் பொய்கையை நோக்கிச் செல்கின்றனர்.

அவர்களுக்கு முன்னமே அப்பொய்கையில் நீராடிக்கொண்டிருக்கும் திருக்கோயில் தொண்டுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட பெண்பிள்ளைகளைக் கண்டு அவர்களிடம் இறைவனைப் பற்றி அறிந்துகொள்ள வினாத் தொடுக்கிறார்கள்,

"சிவத்தொண்டு புரியும் குற்றமற்ற குலத்தையுடைய சிவபெருமானின் திருக்கோயில் பிணாப்பிள்ளைகளே! 

நம் இறைவனின் பாதமலர்களோ கீழுலகமாகிய பாதாளம் ஏழையும் கடந்து, எல்லையற்று உள்ளது!

இறைவனது திருமுடியோ நிலையியல் பொருள், இயங்கியல் பொருள், வன்பொருள், நுண்பொருள் உள்ளிட்ட அனைத்துப் பொருள் வடிவையும் கடந்து நிற்கும் எல்லையற்றது!

அம்மையைத் தன்னில் பாதியாகக் கொண்ட நம் இறைவனின்  திருமேனி இதுவே என்று எவராலும் அறுதியிட்டுக் கூற இயலாத பெருமையுடையவன்! 

வேதங்கள் தொடங்கி, விண்ணோர்களும், மண்ணுலகில் வாழ்வோரும் ஒன்றாகக் கூடித் துதித்தாலும் சொல்ல இயலாத பெருமையுடையவன் நம் இறைவன்!

உங்களுடன் தோழனாக வாழும்  இறைவனை நீங்கள் அல்லவா நன்கு அறிந்தவர்கள்! தயைகூர்ந்து எங்கள் ஐயத்தை நீக்கியருள வேண்டும்!

ஏது நம் இறைவனின் ஊர், ஏது அவன் பெயர், யார் அவனுக்கு நெருக்கமானவர்கள், அவனுக்கு அயலார் யார், அவனை எவ்வாறு பாடித் துதிப்பது என்பதை எமக்கு விளக்கிச் சொல்லி வழிகாட்டுங்கள்!" என்று வேண்டுகிறார்கள்.

மூன்றாம் நூற்றண்டிலேயே, திருக்கோயில் இறைத்தொண்டுக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்த பெண்கள், 'குற்றமில்லாத குலத்தையுடைய  இறைவனின் பிணாப்பிள்ளைகள்' (கோதில் குலத்து அரன்தன்  கோயில் பிணாப்பிள்ளைகாள்!) என்று மிகஉயர்ந்த குலமாக மதிக்கப்பட்டு, சமுதாயத்தில் மற்றவர்களுக்கு வழிகாட்டி வந்தனர் என்பதை நிறுவும் சாட்சி மணிவாசகர் அருளிய பின்வரும் திருவெம்பாவைத் திருவாசகம்.

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர்!

போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே!

பேதை ஒருபால், திருமேனி ஒன்று அல்லன்!

வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

ஒத உலவா ஒரு தோழன், தொண்டர் உளன்!

கோது இல் குலத்து அரன்தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்!

ஏது அவன் ஊர்? ஏது அவன்பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்?

ஏது அவனைப் பாடும் பரிசு? ஏல் ஓர் எம்பாவாய்:  திருவெம்பாவை-10

 

புனிதமான சொற்கள் 'பொதுமகள்' என்றானது

இறைப்பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இறைத்தொண்டர்களான திருக்கோயில் பிணாப்பிள்ளைகள் 'குற்றமற்ற உயர் குலத்தோர்' என்னும் பொருளில் தேவர்+அடியார் = தேவரடியார் என்ற புனிதமான சொல் கொண்டு அழைக்கப்பட்டனர்; இப்புனிதமான சொல் மருவி, 'தேவடியார்' என்றானது. கோவில் நிர்வாகத்தில் இருந்த அரசர்களும், நிலவுடைமை மேலாதிக்க வல்லவர்களும் முறைதவறி நடந்து, அவர்களுடைய பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாகப் பயன்படுத்தி,  இறைப்பணிக்கே தம்மை அர்ப்பணித்துக்கொண்ட தேவரடியவர்களான இவ்வுயர்குலப் பெண்களைப்  'பொதுமகளிர்' என்னும் இழிகுலப் பெண்களாக்கிய ஆக்கிய அவலங்கள் பிற்காலத்தில் நிகழ்ந்தேறியபோது, "தேவடியாள்", "தேவதாசி" என்னும் சொற்கள் பொதுமகளிரைக் குறிக்கும் அவலச் சொல்லாகப் பொருள் திரிந்தது. இப்பொருள் மாற்றம் நிகழ்ந்தது பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிற்காலத்திலேயாகும் என்பதை அறிக..

தேவதாசி முறையை தூக்கிப்பிடித்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் நரிவாலை நறுக்கிய முத்துலட்சுமிரெட்டி அம்மையார்

குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரையே வழிவழியாக கட்டாயப்படுத்தி 'தேவதாசி'களாக்கும் முறை பொதுமகளிர் என்னும் சமூக அவலங்களை உருவாக்கியதால், ஆங்கிலேயர் காலத்து நீதிக்கட்சி ஆட்சியில், அப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர். முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தேவதாசி தடுப்புச் சட்டத்தை முன்மொழிந்தார். அப்போது சட்டசபை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் தேவதாசி ஒழிப்புச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்துத் தம் சட்டமன்ற உரையில் பேசியபோது "தேவதாசிகள் புனிதமானவர்கள்; அவர்கள் கடவுளுக்கு சேவை செய்ய பிறந்தவர்கள்; அவர்கள் அடுத்த பிறப்பில் சுவர்கத்தில் பிறப்பார்கள்", என்றும் "தேவதாசிகளே இல்லாமல் போனால், கோவில் வேலைகளையும், பொதுமகளிர் வேலையையும் யார் பார்ப்பார்கள்? சமூகத்தில் எம்குலப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமே?" என்றும் சட்டசபையில் திருவாளர் சத்தியமூர்த்தி அவர்கள் எழுப்பிய கேள்வியும், அக்கேள்விக்கு, மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் "சுவர்கத்திற்கு தேவதாசிகள் செல்வதாக இருந்தால், இனிமேல் சத்திய மூர்த்தி அவர்கள் தங்களது வீட்டுப்பெண்களை தேவதாசிகளாக ஆக்கி அவர்கள் அடுத்த பிறவியில் சுவர்கத்தில் பிறக்க உதவலாமே! ஆகையால், பலநூறு ஆண்டுக்காலம் இப்பணியில் உழன்ற எம்குலப் பெண்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும்; திருவாளர் சத்தியமூர்த்தி அவர்களின் குலப்பெண்கள் ஒரு சில நூற்றாண்டுகள் அப்பணிகளைச் செவ்வனே செய்து அடுத்த பிறவியில் சுவர்க்கத்தில் பிறக்கட்டும்", என்று சொன்ன பதிலும் சட்டப்பேரவைக் குறிப்பில் காணலாம். 'சுவர்க்கம் செல்லலாம்' என்று ஆசைகாட்டி, மனிதர்களை பிறப்பினால் நான்கு வர்ணம் பூசி அடிமைகொள்ளும் ஆரியர்களின் 'வர்ணாசிரம சநாதனதர்மம் என்னும் மனுதர்மம்'  எவ்வாறு காலப்போக்கில் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று முழங்கிய வள்ளுவம் வகுத்த தமிழர் அறத்தை ஊடுருவிச் சீரழித்தது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழக சட்டசபையில் ஆடிய நரித்தந்திரம் ஒன்று போதும்.

தமிழர் சமயப்பண்பாட்டுத் தத்துவமரபுகள் அறியாதவர்களின் அபத்தமான ஆய்வுகள்  

ஆண்டாள் நாச்சியார் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டில் 'தேவதாசி' அல்லது 'தேவரடியார்' என்னும் சொற்கள் புனிதமான பொருளிலேயே வழங்கிவந்தன என்பது தெளிவு.  தமிழ் மொழி வரலாறு, தமிழர்கள் வரலாறு, தமிழர் பக்தி-இலக்கிய வரலாறு, தமிழர் பண்பாட்டுத் தடங்கள், தமிழர் சமயப் பண்பாட்டுத் தத்துவ மரபுகள் போன்றன முறையாகப் பயிலாத, அறியாத ஐரோப்பிய ஆய்வாளர்களும், சனாதனிகளான வடஇந்தியர்களும் பதிவிடும் ஆய்வுமுடிவுகள் அபத்தமாகத்தான் இருக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

தவறான மேற்கோள்

அபத்தமான அத்தகைய ஒரு ஆய்வு முடிவை தாம் ஏன் இங்கு சுட்டிக்காட்டுகின்றார் என்பதைக் கவிஞர் பின்வருமாறு குறிக்கின்றார்: "ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்தவர் இல்லையாதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக்கட்டுமானம் உள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும், சமூகமும் அங்கீகரித்ததாலும், கலாச்சார அதிர்ச்சி தரத்தக்க சில முடிவுகளுக்கு ஆய்வாளர்கள் ஆட்கொள்கிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து வெளியிடப்பட்ட ஒரு நூலில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அதில் ஒரு சின்ன பதில் இருப்பதாகக் கருதுகிறேன். பக்தர்கள் பலர் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதனை நான் அறிவேன். இப்படி ஒரு ஆய்வை ஆண்டாளுக்கு முன் வைப்பதை நவீன உலகத்தின் சிந்தனைப் போக்குக்கு ஒரு குறி காட்டுவதாக நான் கருதுகிறேன். அமெரிக்கா இன்டியானா பல்கலைக்கழகம் சுபாஸ் சந்திர மாலிக்கை ஆசிரியராகக் கொண்டு வெளியிட்ட "Indian Movement: Some aspects of dissent, protest and reform" என்ற ஆய்வு நூலில் ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது: "Andaal was herself a Devadasi, who lived and died in the SriRangam Temple". பக்தர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; ஆனால், ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும், சமய, சமூக மறுப்பாளர்களும், இதை எண்ணிப் பார்ப்பார்கள்".

இடமும், காலமும் அறியாத குள்ளநரி சனாதனிகளின் பிரதிநிதிகளுள் ஒருவரான சுபாஸ் சந்திர மாலிக்கினால் தொகுக்கப்பட்ட இந்திய நூலில் (published by Indian Institute of Advanced Study, Shimla in 1978) சொல்லப்பட்ட அரைவேக்காட்டு ஆய்வை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து  கவிஞர் சுட்டிக்காட்டியது தவறான மேற்கோள். பெண்ணடிமை, தீண்டாமை, சாதிவருண மேலாதிக்கம் ஆகியவற்றைத் தூக்கிப்பிடிக்கும் சனாதனிகளின் ஆதிக்க உணர்வைக் காட்டும் உள்நோக்கம் கொண்ட ஆய்வை, ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும், பெண்ணுரிமைப் போராளிகளும், சமய, சமூக மறுப்பாளர்களும் எண்ணிப் பார்ப்பார்கள் என்று கவிஞர் வைரமுத்து குறிப்பிடுவது முரண்பாட்டின் உச்சமும், நகைப்புக்குரியதும் (நகைமுரண்) ஆகும்.

உயர்ந்த நோக்கத்திற்கா அரசியல் சாயம்?

"தமிழுக்கு உரமூட்டிய தகுதிசால் முன்னோர்களை வளரும் தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கில் 'தினமணி' நாளிதழ் தொடர்ந்து வெளியிடும் 'இலக்கிய முன்னோடிகள்' என்னும் பகுதிக்காக கவிஞர் எழுதிய கட்டுரை என்பதால், ஆய்வு நோக்கில் கவிஞர் மேற்கோள் காட்டுவதற்கும், தம் கருத்தைப் பதிவு செய்வதற்கும் முழு உரிமை பெற்றவர் என்பதையும் அறிவுசால் தமிழ் உலகம் புரிந்துகொள்ளவேண்டும்.

கடவுள் என்பது வழிபடுபொருள்.

அது எட்ட முடியாதது.

எல்லார்க்கும் வாய்க்காதது.

அந்த எட்ட முடியாத கடவுளையும் எட்டமுடியும்;

கணவனாகவே கைத்தலம் பற்ற முடியும்.

இடையறாது நினைந்து காதலுற்றுக் கனிவதொன்றே கடவுளை எட்டும் வழி

என்று குறியீட்டு முறையில் சொன்ன கோட்பாடுதான் ஆண்டாள் என்று எண்ணத் தோன்றுகிறது"

என்று ஆண்டாள் நாச்சியார் கண்ணனுடன் கொண்ட பக்தியின் உச்சத்தை அழகு தமிழில் அணிசெய்து,  அழகு பார்த்து, சாமானியனுக்கும் ஆண்டாளின் தெய்வத்தமிழைக் கொண்டு செல்லும் கவிப்பேரரசுவின் கவியுள்ளத்தைச் சந்தேகிப்பது பண்பாகாது! பெண்ணின் தூய்மையைத் தீப்புகுந்து மெய்ப்பிக்கச்சொல்லும் சமூகத்தில், மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் மாண்பை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சர்ச்சைக்குரிய சில பகுதிகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஆண்டாளின் தமிழுக்கும், திருப்பாவைப் பனுவலுக்கும் இதுவரை நாம் காணாத புதிய நல்விளக்கங்களைக் கொடுத்து, புத்தொளி பாய்ச்சியுள்ளார் கவிப்பேரரசு. ஓரிரு சர்ச்சைகளில், அப்பெரும் பங்களிப்புகளை நாம் இழந்துவிடக் கூடாது. வருங்காலம் கவிப்பேரரசின் இப்பங்களிப்புகளைக் கொண்டாடி மகிழும் என்பது உறுதி.

  

தவறான மேற்கோளாக இருப்பினும், அதை ஆய்வுக் கண்ணோட்டத்தில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, ஆன்மீகச் சாயம் பூசி, அரசியல் ஆக்குவது அநாகரிகத்தின் உச்சம். அவர் கருத்துடனும், மேற்கோள் காட்டிய ஆய்வின் கருத்துடனும் நாம் மாறுபடலாம்; அது குறித்து நம் பார்வையை எதிர்வினைக் கட்டுரைகளாக வரையலாம்.

கண்டனத்தை பதிவிடுதலில் பண்பாட்டைக் கடைப்பிடித்தல்

ஆன்மிகப் பேச்சாளரும், வைணவ குலத் தமிழ்அந்தணரும், தமிழ், சமற்கிருதம் ஆகிய இருமொழிப் புலவரும், வைணவத் தத்துவ அறிஞருமான திருவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் இந்த சர்ச்சை குறித்து வெளியிட்ட கண்டனப் பேச்சின் மிக உயர்ந்த கண்ணியம் இங்கு குறிப்பிடத்தக்கது. எந்த இடத்திலும் கவிஞர் வைரமுத்து அவர்களின் பெயரையோ, அல்லது அவரது சொற்களையோ குறிப்பிடாமலேயே ஆண்டாள் நாச்சியாரின் அவதார மகிமையையும், அது குறித்து ஐயம் கொள்வோரின் பொருத்தமற்ற நிலைப்பாட்டை, தமிழ் மரபையும், பாரத மரபையும் மேற்கோள் காட்டி விளக்கியும், தமிழின் தொன்மை சமற்கிருதத்தை விடவும் ஒருபடி மேல் என்பதைக் குறிப்பிட்டும், வைணவ முறையில் ஆழ்வார்களின் தமிழ்ப்பாசுரங்கள் முதலிலும், சமஸ்கிருத ஸ்லோகங்கள் பின்பும் பாடப்படும் மரபையும், தமிழ்மொழியும்-பக்தியும் மாணிக்கமும், அதன் ஒளியும் போலப் பிரிக்கமுடியாதவை என்றும் சிறப்பாக விளக்கி, தம் கருத்தைப் பதிவுசெய்து, யூட்யூப்-இல் வெளியிட்டிருந்தார். கண்ணியத்தோடு பதிவுசெய்யப்படாவிட்டால் கண்டனம் நீர்த்துப்போய்விடும். எடுத்துக்காட்டாக, கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் உரைத்த இரண்டு கருத்துக்கள் எமக்கும் உடன்பாடு இல்லாதது. அவை குறித்த எமது கண்டனத்தை தமிழ் மரபுவழி பின்வருமாறு பதிவு செய்கிறோம்.

ஆண்டாள் தமிழ்க் குலவிளக்கு

 "குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக்கட்டுமானம் உள்ள சமூகம் தயங்கியிருக்கலாம்" என்ற கவிஞரின் கருத்தில் எமக்கு உடன்பாடு இல்லை.

பெரியாழ்வார் நந்தவனத்தில் கண்டெடுத்த ஆண்டாள் நாச்சியாருக்கு முன்னமே இராமாயணக் காவியத்தலைவி சீதாதேவியும் ஜனகமன்னனின் கொழுமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்குழந்தைதான். ஜனகரின் மனைவிக்குப் பிறந்த பெண் அல்லள் என்ற காரணத்தால் சீதைபிராட்டியாரை குலமறியாதவள் என்று இராமாயணக் காலத்திலிருந்து இன்றுவரை யாரும், எங்கும் குறிப்பிட்டதே இல்லை.

அதேபோல், ஆண்டாள் நாச்சியாரைக் குலமறியாதவள் என்று ஆண்டாள் அவதரித்த காலம் தொட்டு, இன்றுவரை தமிழ் மண்ணில் யாரும் கூறியதில்லை. இத்தகைய ஐயம் மேலை-ஆய்வு முறை நூல்களைப் படித்துக் குழம்பியமையால் கவிஞருக்கு வந்திருக்கலாம்.

ஜனகரின் மகள் என்பதாலேயே சீதாபிராட்டியார் ஜானகி என்றழைக்கப்பட்டார். ஊரறிய, உலகறிய, ஜானகிக்குச் சுயம்வரம் அறிவித்தார் மாமன்னர் சனகர். சீதாதேவையைப் பட்டத்து அரசியாக, குலமகளாகக் கொள்ள மன்னர்கள் பலரும் போட்டிபோட்டு சுயம்வரத்தில் கலந்துகொண்டனர்; சிவதனுசை அசைக்கக்கூட இயலாமல் தோல்வியைத் தழுவினர்.

இராமபிரான் சிவதனுசைக் 'கையில் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர்' என்று கவிச்சக்கரவர்த்தி கம்பன் வர்ணிப்பதுபோல, வில்லொடித்து வெற்றிவாகை சூடிய இராமபிரானுக்கு, ஜனகமகாராஜா தனது குலக்கொடி ஜானகியை முறைப்படி இராமபிரானுக்குத் தாரைவார்த்துக் கொடுக்க,  சீதையைத் தன் குலமகளாக ஏற்றுக்கொண்டார் இராமபிரான் என்பது வரலாறு.

தமிழ் பக்தி மரபைச் சிறுமைப்படுத்தியது கண்டனத்துக்குரியது

தமிழ் பக்தி மரபில், உயிர்கள் அனைவரும் பெண்கள்; இறைவன் ஒருவனே ஆண் என்பதை நன்கு அறிந்த  கவிப்பேரரசு கவிஞர் வைரமுத்து அவர்கள் "சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும்" என்று தமிழ் பக்தி மரபை சிறுமைப்படுத்தும் கருத்து கண்டனத்துக்குரியது

ஆணாகப் பிறந்தும், திருமணமே செய்துகொள்ளாமல் இறைவனையே நாயகனாகக் கருதி, "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்; பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்; அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்; அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை; தன்னை மறந்தாள்; தன் நாமம் கெட்டாள்; தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.", என்று ஆறாம்-ஏழாம் நூற்றாண்டில் பாடிய திருநாவுக்கரசர் பெருமான் பாடிய தேவாரம்  காதல் வயப்பட்ட பெண்கூற்றான அகத்துறைப் பாடல்;

மாணிக்கவாசகர் பெருமான் அருளிய திருக்கோவையார் முழுவதும் சங்க இலக்கியத்துக்கு நிகரான ஒப்பற்ற அகப்பாடல்கள்; 'பாலியல் சொல் விடுதலை' என்னும் சொல்லால் பெண்மொழியில் பாடும் இவ்வகப்பாடல்களையெல்லாம் கவிஞர் வைரமுத்து சுட்டிக்காட்டாமல், 'மானிடர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன்' என்ற நிலைப்பாடு கொண்ட ஆண்டாள் திருமொழிக்குக்குக் கற்பிப்பது,  ஆண்டாள் நாச்சியார் என்னும் படைப்பாளிக்குச் சொந்தமான தனிமனித விடுதலையை 'பெண்' என்னும் வட்டத்திற்குள் அடைக்கும் ஆணாதிக்கத்தின் மிச்ச-சொச்ச எச்சமாகும்.

இறைக்காதலின் முதிர்ந்த பரவசநிலையில் நாயக-நாயகி பாவனையில் ஆண்களாகிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் பெண்மொழியில் பாடிய அகத்துறைப் பாடல்கள் பக்தியின் உச்சம்.

கருத்து களங்கள், ஆய்வு நிலைகள், தத்துவ நிலைப்பாடுகள் என்று பல தளங்களில் வேறுபாடுகள்  தமிழர்களுக்குள் இருந்து வந்துள்ளன; தொன்றுதொட்டு, ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் வேறுபாடுகளுக்குத் தீர்வுகள் காணப்பட்டும் வந்துள்ளன.

சில நேரங்களில், தொடர்புள்ள இரு தரப்பும், கருத்து வேறுபாடுகள் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும் என்று முடிவுசெய்து, ஒருவர் நிலைப்பாட்டை மற்றவர் ஏற்றுக்கொண்டு, இணக்கமாக வாழும் சூழலை உருவாக்கி, ஒன்றாக வாழ்ந்தும் காட்டியுள்ளனர்.

புறச்சக்திகளின் சதிவலை

தமிழர்களின் ஆரோக்கியமான வாழ்வியல் சூழலைச் சீர்குலைக்கப் பல்லாண்டு காலங்கள்  புறச்சக்திகள் தமிழர்களை அடிமைகொள்ளும் நோக்கில் அமைத்த மனித விரோதச் சித்தாந்தங்களை மனுநீதி என்ற பெயரிலும், சநாதன தர்மம் என்ற பெயரிலும் புகுத்தக் கருத்தியல் போர்களைத் தொடர்ந்து  நிகழ்த்திய பின்னும் தோற்றே வந்துள்ளனர்.

அத்தகைய சக்திகள் இப்போது புதிய வேகத்துடன் தமிழர்களுக்குள் ஏற்படும் சிறு கருத்து வேறுபாடுகளையும் ஊதிப் பெருக்கி, தமிழர்களிடம் தோற்றுப்போன தங்கள் சநாதன மனிதவிரோத மனுதர்ம ஆதிக்கத்தை எப்படியாவது நிலைநாட்டி, தமிழகத்தின் அமைதிச் சூழலைக் கெடுக்க முயலுகின்றன. 

அதன் ஒரு பகுதியாகவே, கவிஞர் வைரமுத்து அவர்களின்மேல் நிகழ்த்தப்படும் மிகக் கீழ்த்தரமான தனி மனிதத் தாக்குதலை நாம் காண்கிறோம்.

கவிப்பேரரசை அநாகரிகமாகத் தாக்கியதை வன்மையாகக் கண்டிப்போம்!

இப்படித் தரக்குறைவான, நாக்கூசும் கேடுகெட்ட கெட்டவார்த்தைகளை வெட்கமில்லாமல் பொதுவெளியில் பேசுவது ஒரு மூத்த தேசீயக் கட்சியின் தலைவர் என்பதும், அவரைக் கண்டிக்காமல், அக்கட்சியின் ஏனைய தலைவர்கள் வேடிக்கை பார்ப்பது அக்கட்சியின் உண்மையான முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.  தமிழர்கள் அனைவரும் ஒரே குரலில் கவிஞர் வைரமுத்து மீது கீழ்த்தரமான வார்த்தைகளால் தாக்குதல் நிகழ்த்தியதற்கு எதிரான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்; வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.

இறுதியாக . . .

Ø  காலமும் இடமுமே 'சொல்'லின் பொருளைத் தீர்மானிக்கின்றன என்பதைத் தெளிவோம்;

Ø  திருவரங்கப் பெருமாளுக்கே தம்மை அர்ப்பணித்துக்கொண்ட ஆண்டாள் நாச்சியாரை, 'தேவதாசி' என்று தற்காலப் பொருளில் குறிப்பிட்ட அரைவேக்காட்டு ஆய்வுகள் குப்பைத்தொட்டியில் போடவேண்டியவை.

Ø  கட்டுரையாளர்கள் தமிழரின் பக்தித்தமிழ் மரபறியாத குப்பை ஆய்வுகளை தமிழ் ஆன்றோர் அவையில் மேற்கோள் காட்டி, அக்குப்பைகளைக் கோபுரத்தில் ஏற்றும் அறியாமைகளைக் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.

Ø  தமிழியல் ஆய்வுகளின் தரம் தீர்மானிக்கும் உச்சநீதிமன்றக்களம் தமிழ் அறிஞர்களையும், சான்றோரையும் பெரும் எண்ணிக்கையில் கொண்டிருக்கும் தமிழ்கூறும் நல்லுலகான தமிழகமே அன்றி புறத்தார் அன்று.  

Ø  புனிதமாகப் பிறந்த 'தேவதாசி' அல்லது 'தேவரடியார்' என்னும் தமிழ்ச்சொற்கள், தமிழரிடையே ஊடுருவிய புறச்சக்திகளின் சதியாலேயே, 'பொதுமகள்' என்னும் பொருளில் பிற்காலத்தில் கீழ்நிலை அடைந்தன என்று தெளிவோம்;

Ø  கருவாச்சிக் காவியம், கள்ளிக்காட்டு இதிகாசம், தண்ணீர்த்தேசம் என்று விருதுகளை வென்றெடுத்த பல காப்பிய அணிகலன்களைத் தமிழ்த்தாய்க்குச் சூட்டி மகிழ்ந்த தமிழ்மகன் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஒருக்காலும் தமிழை ஆண்ட கோதை ஆண்டாள் நாச்சியார் போன்ற பேராளுமைகளின் புகழுக்குக் களங்கம், ஊறு விளைவிக்கும் செயலைக் கனவிலும் நினையார் என்பதை 'தமிழை ஆண்டாள்' என்னும் அவர் கட்டுரையின் பலபகுதிகளும்  உறுதிசெய்கிறன என்பதால், அவர் வருத்தம் தெரிவித்தது இதயபூர்வமாகவே என்பதை உணர்ந்து, இச்சர்ச்சைக்கு உடனே முற்றுப்புள்ளி வைப்போம்;

Ø  கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை அவமதிப்பதோடு, அவர்பால் தமிழருக்கு வெறுப்பை ஊட்ட முயற்சிக்கும் அந்நிய சக்திகளின் சதிச்செயல்களுக்குத் தமிழர்கள் ஒருபோதும் துணைபோவதில்லை என்னும் உறுதிமொழி ஏற்போம்;

Ø  எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணும் அறிவை நம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வோம்.

Ø  தமிழ்ப் பேராளுமைகளான ஆழ்வார்களையும், நாயன்மார்களையும், ஏனைய அருளாளர்களையும் அவமதிக்கும் தரம்கெட்ட ஆய்வுகளைப் புறம்தள்ளுவோம்.

Ø  நம் காலத்தின் மாபெரும் படைப்பாளிகளான கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட அறிஞர் பெருமக்களைக் கண்போல் போற்றி மதிப்போம்;

Ø  குறிப்பாக, தமிழர்களுக்குள் சாதி,மத உணர்வுகளைத் தூண்டிவிட்டுத், தமிழ்ப் படைப்பாளிகளை அவமதிப்பு செய்யும் புறச்சக்திகளை முற்றாகப் புறக்கணிப்போம் என்று தமிழர் அனைவரும் சூளுரை மேற்கொள்ளுவோம்.

எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாவது கண்டு!

பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு! - புரட்சிக்கவிஞர்

 

வாழ்க தமிழ்! வெல்க தமிழர் ஒற்றுமை!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.