Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சியைக் கலைக்க ரஜினி நிபந்தனை! - காய் நகர்த்தும் கவர்னர்

Featured Replies

மிஸ்டர் கழுகு: ஆட்சியைக் கலைக்க ரஜினி நிபந்தனை! - காய் நகர்த்தும் கவர்னர்

 
 

 

p42dd_1516988849.jpg

குடியரசு தினத்தன்று காலையில், நெஞ்சில் தேசியக்கொடியைக் குத்திக்கொண்டு கம்பீரமாக வந்தார் கழுகார். எழுந்து நின்று சல்யூட் அடித்து, ‘‘ரஜினி தனது முதலாவது மக்கள் மன்றத்தைத் தைக் கிருத்திகை நாளன்று சென்னையில் ஆரம்பிக்கச் சொல்லியிருக்கிறாரே... ஏதாவது விசேஷம் உண்டா?’’ என்று கேட்டோம்.

‘‘ரஜினி படு ஸ்பீடில் போகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ‘இது வழக்கமான குடியரசு தினம் என்று நினைக்கவேண்டாம். தமிழக மக்களைச் சுரண்டும் குறுநில மன்னர்களிடமிருந்து விடுதலை வாங்கித்தர சபதம் எடுக்கும் நாள்’ என்று ரஜினி மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர் சொன்னாராம். இப்போது, மன்றத்தில் உறுப்பினர் களைச் சேர்க்கும் வேலைகள் ஜரூராக நடந்துவருகின்றன. வருகிற தமிழ்ப் புத்தாண்டு நேரத்தில், மக்களைச் சந்திக்க சுற்றுப்பயணம் போகிறார் ரஜினி. அதற்கான டூர் புரோகிராம் ரெடியாகிவருகிறது. ரஜினியுடன் இணைய பி.ஜே.பி தயார். ஆனால், சில நிபந்தனைகளை மத்திய அரசிடம் ரஜினி வைத்திருப்பதாக பி.ஜே.பி வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதற்கும் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்வதற்கும் தொடர்பு இருக்கிறது.’’

‘‘என்ன அது?’’

‘‘கவர்னரின் நடவடிக்கைகளில் ஓர் அவசரம் தெரிவதை உணர்ந்திருப்பீர். தமிழக மக்கள் மத்தியில் அவர் நன்றாக அறிமுகமாகிவருகிறார். ஆங்காங்கே, மக்கள் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்கிறார். ஆட்சியாளர்களுக்கு இணக்கமாக இருந்து தப்புச் செய்யும் அதிகாரிகள் யார் யார் என விசாரிக்கிறார். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன்... கடந்த ஆறு ஏழு வருடங்களாக மாவட்ட கலெக்டர் பதவியில் இருப்பவர்கள் சுமார் 10 பேர். அதேபோல், மாவட்ட எஸ்.பி-யாகப் பல வருடங்களை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள் எட்டு பேர். இவர்கள் மட்டும் ஏன் இப்படித் தொடர்ச்சியாக பதவிகளில் இருக்கிறார்கள் எனத்  தலைமைச் செயலாளரிடமும் தமிழக டி.ஜி.பி-யான ராஜேந்திரனிடமும் கேட்டாராம். இந்தமாதிரி தகவல்களை கவர்னருக்கு யார் சொல்கிறார்கள் தெரியுமா? எந்தக் கட்சியிலும் இல்லாத நடுநிலை யாளர்கள்தான். தன் கவனத்தை ஈர்த்த சில பிரமுகர்களின் பெயர்களைத் தன் லேப்டாப்பில் பதிவுசெய்து வைத்திருக்கிறார். ‘நான் தமிழ் கற்று வருகிறேன். நீங்கள் பேசுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நான் அடுத்தமுறை உங்களிடம் தமிழில் பேசுவேன்’ என்று சொல்கிறார் கவர்னர்.’’ 

p42_1516988811.jpg

‘‘இவர்களை கவர்னரின் ஸ்லீப்பர் செல் என்று சொல்லலாமா?’’

‘‘அப்படித்தான் வைத்துக்கொள்ளும்! தமிழக சட்டசபை முடங்கி, ஆட்சி கலைக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அந்த நேரத்தில், தமிழகத்தை ஆளப் போவது கவர்னர்தான். அப்போது, இந்த ஸ்லீப்பர் செல்தான் கவர்னருக்கு உதவப்போகிறது. தமிழக அமைச்சர்கள் பற்றிய ஊழல் புகார்கள் மலைபோல கவர்னரிடம் குவிந்துவிட்டன. ‘தமிழக மக்கள் எரிச்சலில் இருக்கிறார்கள்’ என்பதைப் பல்வேறு வகையில் மத்திய அரசிடம் கவர்னர் தெரிவித்துவிட்டாராம். இவருக்குத் தகவல் உதவியை சென்னையில் உள்ள மத்திய உளவுத் துறையின் உச்ச அதிகாரி எடுத்துத் தருகிறாராம். ‘நான் ரெடி’ என்கிற நிலையில்தான் கவர்னர் இருக்கிறார்.’’

‘‘அப்படியானால், எடப்பாடி அரசு அவ்வளவுதானா?’’

‘‘அநேகமாக நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் நடக்கும். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, ஜனாதிபதி ஆட்சி வந்துவிடும். ‘சட்டசபையில் யாருக்கு மெஜாரிட்டி?’ என்றெல்லாம் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்க்க கவர்னர் விரும்பவில்லை. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் தகுதிநீக்கம் குறித்த வழக்கு, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தது தொடர்பான வழக்கு ஆகியவற்றின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் வழங்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தத் தீர்ப்புகளையொட்டி, ஆட்சியைக் கலைப்பதற்கான வேலைகள் டெல்லியிலிருந்து வேகம் பிடிக்கும். அநேகமாக, மார்ச் மாதத்தில் தமிழகத்தை டெல்லி க்ளியர் செய்து கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’’

‘‘இதுவும் ரஜினி வைத்த நிபந்தனைகளில் ஒன்றா?’’ 

‘‘ஆமாம்! பஸ் கட்டண உயர்வை எதிர்த்து பி.ஜே.பி நடத்திய போராட்டத்தில், வழக்கத்தைவிட கடுமையான வார்த்தைகளில் தமிழக ஆட்சியாளர்கள் விமர்சிக்கப்பட்டனர். ‘தமிழக பி.ஜே.பி தலைவர்களுக்கு டெல்லியிலிருந்து சில ரகசிய அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன’ என்கிறார்கள். பி.ஜே.பி-யில் பலரும் ரஜினியை ஆதரித்துப் பேசிவருகிறார்கள். ரஜினியும் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். ரஜினி நற்பணி மன்ற முக்கியப் பிரமுகர்களின் குடும்பத்தினருக்கு இப்போதே மறைமுகத் தொந்தரவுகள் ஆரம்பித்துவிட்டனவாம். ‘ரஜினி பிரசாரம் கிளம்பினால், போலீஸ் அனுமதி மறுக்கும். நீதிமன்றத்துக்கு அலைந்து திரிந்துதான் அனுமதி வாங்கவேண்டிவரும்’ என்று டெல்டா மாவட்ட ஆளும்கட்சிப் புள்ளி ஒருவர் வெளிப்படையாக மன்ற நிர்வாகியை எச்சரித்தார். இந்தத் தகவல் ரஜினியின் கவனத்துக்கு உடனே போனது. கொஞ்சம் கலவரமானார். ‘இப்படியெல்லாம் டார்ச்சர் கொடுக்கத் திட்டமிடும் அரசாங்கம் இருக்கவே கூடாது. ரஜினி பிரசாரத்துக்குச் செல்லும்போது, கவர்னர் ஆட்சிதான் தமிழகத்தில் இருக்கவேண்டும்’ என்று ரஜினி தரப்பில் விவாதிக்கப்பட்டதாம். இதுபற்றி மத்திய அரசின் தூதுவர்களிடம் தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. பலத்த யோசனைக்குப் பிறகு, டெல்லியிலிருந்து கிரீன் சிக்னல் கிடைத்து விட்டதாம்.’’

‘‘அந்த நேரத்தில் அதிகாரிகளின் கை ஓங்கி யிருக்குமே! அவர்கள் ரஜினிக்கு ஆதரவாக இருப்பார்களா?’’

‘‘சென்னை தலைமைச் செயலகத்தில் லஞ்ச் நேரத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யாராவது ஒருவரின் அறையில் இணைந்து அமர்ந்து சாப்பிட்டபடி, நடப்பு அரசியல் பற்றிப் பேசுவார்கள். இப்போதெல்லாம் அவர்கள் பேசும் சப்ஜெக்ட், ‘சிஸ்டம் மாறவேண்டும்’ என்று ரஜினி சொன்ன டயலாக். இவர்களில் பலர் ரஜினியின் அனுதாபிகளாக மாறிவிட்டார்கள். இவர்கள் தினமும் ஒரு பிரச்னையை முன்னிறுத்தி விவாதம் நடத்துகிறார்கள். இப்படி ஒரு நிகழ்வு நடப்பது, அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ள மன்றப் பிரமுகர் மூலம் ரஜினிக்கு அடிக்கடி போகிறது. இதைக் கேட்டு ரஜினி ரொம்ப சந்தோஷப்பட்டாராம். இதேபோல, ஓய்வுபெற்ற அதிகாரிகளையும் ஒருங்கிணைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள ஆறு லட்சம் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ரஜினி மன்றத்தின் செயல்பாடுகளில் பங்குபெற வைக்கப் பேச்சுவார்த்தைத் தொடங்கிவிட்டது.’’

‘‘எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார்?’’

‘‘அவர் இதற்கெல்லாம் கவலைப்படாமல், தன்னை முன்னிலைப்படுத்தும் வேலைகளுக்காக மிகவும் மெனக்கெடுகிறார்; ஒவ்வொன்றிலும் தன் பெயரைப் பதிக்கும் வேலைகளைப் பார்த்துப் பார்த்துச் செய்கிறார். ஜனவரி 22-ம் தேதி, புதிய இன்னோவா காரில் அவர் கோட்டைக்கு வந்தார். அந்தக் காரின் பதிவு எண் TN07 CM2233. அதுதான் தற்போது கோட்டை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.’’

p42b_1516988879.jpg

‘‘இதில் என்ன இருக்கிறது?’’

‘‘காரின் நம்பரை ஒருமுறை நன்றாகப் பாருங்கள். அதில் ‘சி.எம்’ என்று இருக்கிறது. எந்த நேரத்தில் ஆட்சி கவிழும் என்று யாருக்கும் தெரிய வில்லை. ஆனால், இவர் ‘நான் சி.எம்’ என்பதை எல்லா விஷயங்களிலும் அடையாளப்படுத்தும் வேலைகளுக்கு இவ்வளவு மெனக்கெடுகிறார். இதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சிசெய்த முதல்வர்களில், எம்.ஜி.ஆர் அவருடைய இனிஷியலைப் பதிவுஎண்ணாகக் கொண்ட காரைத்தான் பயன்படுத்தினார். ஜெயலலிதாவின் கார் ‘ஜெ’ என்ற எழுத்துடன் இருந்தது. ஆனால், ‘சி.எம்’ என்று முன்னிலைப்படுத்துவதில், அவர்களையெல்லாம் எடப்பாடி பழனிசாமி மிஞ்சிவிட்டார். கோட்டை வட்டாரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் அவருடைய ஆதரவாளர்கள், ‘தமிழக முதல்வர்களில் யாருக்கும் வராத துணிச்சலும், யோசனையும் கொண்டவர் எங்கள் முதல்வர் எடப்பாடி’ என்று பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள்.’’ 

‘‘அரசியல்வாதிகள் என்ன செய்தாலும், அதற்குப் பின்னால் ஒரு உள்குத்தும் இருக்குமே?’’

‘‘ஆம். எடப்பாடி பழனிசாமியின் கார் எண்ணிலும் அப்படி ஓர் உள்குத்து இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘கட்சியிலும் ஆட்சியிலும் எல்லாமே நான்தான்’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ‘ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும்’ என்று காத்திருக்கும் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும், ‘நான்தான் நிரந்தர முதலமைச்சர்’ என்று எடப்பாடி மெசெஜ் சொல்வதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. சமீபகாலமாக கட்சி சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் நடக்கும் நிகழ்ச்சிகளில், எடப்பாடியின் படமே பிரதானமாக இடம்பெறுகிறது. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்கள் சிறிய சைஸில் ஓர் ஓரத்தில் ஒதுங்கிவிட்டன. ஜனவரி 24-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘ஸ்போர்ட்ஸ் மீட்’ நடை பெற்றது. அதற்கான வரவேற்பு பேனர்களில் எடப்பாடியின் படம் மட்டுமே இருந்தது.’’

‘‘குட்கா விவகாரத்தில் புதிது புதிதாக திருப்பங்கள் நிகழ்கின்றனவே?’’

‘‘அதில் அவ்வளவு வில்லங்கங்கள் இருக்கின்றன. அதனால், புதுப்புது திருப்பங்கள் நிகழ்கின்றன. இரண்டு இதழ் களுக்கு முன்பே, ‘அந்த விவகாரம் சி.பி.ஐ வசம் போகப்போகிறது’ என்று ஜூ,வி நிருபர் குறிப்பிட்டி ருந்தாரே... அது நிஜமாகப் போகிறது. இப்போது ‘சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், சென்னையின் கூடுதல் போலீஸ் கமிஷனர்களை இடம்மாற்றும் ஃபைல், முதல்வர் எடப்பாடியின் டேபிளில்  இருக்கிறது’ என்றெல்லாம் தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்து, ‘அடுத்த டி.ஜி.பி யார், சென்னை போலீஸ் கமிஷனர் யார்?’ என ஆரூடம் சொல்லும் ‘வாட்ஸ்அப்’  குரூப் ஒன்றும் வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.’’

‘‘அப்படியா?’’

‘‘இப்போது கூடுதல் டி.ஜி.பி.ரேங்கில் இருக்கும் கருணாசாகர் அந்தப் பதவியைப் பிடிக்க டெல்லியில் லாபி செய்துகொண்டிருக்கிறாராம். இதையடுத்து, கருணாசாகர் மீதான குற்றச்சாட்டுகளின் பட்டியலையும், தற்போதைய சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் ஆளுமைகளையும் ஒப்பீடு செய்து பரபரப்பாகத் தகவல்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில், ‘2017 ஜனவரி 1 முதல் 31 டிசம்பர் வரை பான் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்ற 3,281 பேரைப் பிடித்து, வழக்குகள் போடப்பட்டுள்ளன’ என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து செய்திக்குறிப்பு வெளியானது. இதையடுத்து, ‘ஏ.கே.விஸ்வநாதன் மே 15-ம் தேதிதான் கமிஷனராக வந்தார். அதற்குமுன்பு குட்கா வழக்குகளைப் பிடித்தது யார்... அதையும் சொல்லப்பா’ என்று இன்னொரு குரூப் கேள்வி கேட்டது. இந்தக் களேபரங்களுக்கு நடுவில், டி.ஜி.பி பதவிக்குத் தகுதியுள்ள அதிகாரிகள் என கே.பி.மகேந்திரன், ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட ஐந்து ஐ.பி.எஸ்-களின் பெயர்கள், வாட்ஸ்அப் குரூப்பில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.’’

‘‘போலீஸ் உயர் அதிகாரிகளும் அரசியல் வாதிகளைப்போலாகிவிட்டனர். அப்படியானால், அரசியல்வாதிகள் எந்த அளவுக்குப் போவார்கள்?’’

‘‘அதற்கு உதாரணமாகவும் ஒரு மேட்டர் இருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் முன்னாள் அமைச்சர் மதுசூதன னையும், மதுசூதனனின் ஆதரவாளர்கள் ஜெயக்குமாரையும் கடந்த ஒரு மாதமாக வாட்ஸ்அப் குரூப்பில் மாற்றி மாற்றிக் காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அச்சிலேற்ற முடியாத அந்த ‘வசைகளின் தொகுப்பு’ இப்போது கட்சிக்காரர்களுக்கும், வடசென்னைவாசி களுக்கும் மனப்பாடமாகிவிட்டது. இதுதான் அரசியலில் இப்போதைய ட்ரெண்ட்.’’

p42a_1516988787.jpg

‘‘உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவது பற்றிப் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறதே?’’

‘‘ஆம். கடந்த ஜூ.வி-யில் நான் சொல்லியிருந்தேனே. சரியாக அந்த இதழ் கடைகளில் வெளியான அன்று, சைதாப்பேட்டை எம்.எல்.ஏ-வான  மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், உதயநிதியும் அதையே வழிமொழிந்தார். ‘மு.க.ஸ்டாலினின் சில வேலைகளைப் பகிர்ந்துகொள்வதற்கு நம்பிக்கையான ஆள் வேண்டும்’ என ஸ்டாலின் மனைவி துர்க்கா நினைப்பதுதான் காரணம். அதுபோல், ரஜினி, கமல் அலையைச் சமாளிக்க தி.மு.க-வுக்கு ஒரு ஸ்டார் வேல்யூவும் தேவைப் படுகிறது என்று நினைக்கின்றனர். அதனால்தான், இந்த அரசியல் பிரவேசம். எல்லா ஊடகங்களும் சமூக வலைதளங்களும் உதயநிதி பற்றி பேசுகின்றன. ஆனால், தி.மு.க-வின் அதிகாரபூர்வ ஏடான ‘முரசொலி’ அதுபற்றி ஒன்றும் சொல்லவில்லை. இதில் ஸ்டாலினும் துர்க்காவும் கவனமாக இருக்கின்றனர்’’ என்ற கழுகார் பறந்தார்.

படங்கள்: தி.விஜய், கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு
அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி


p42c_1516988765.jpg

பாதை அமைத்தவரைப் பறித்த காலன்!

மிழகமே பதறித்துடித்த உடுமலை சங்கர் கொலை வழக்கில், தேசத்தையே திரும்பிப்பார்க்க வைத்த தீர்ப்புக்குச் சொந்தக்காரர் நீதிபதி அலமேலு நடராஜன். 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நிகழ்ந்தது உடுமலைப் பேட்டை சங்கரின் கொடூரக் கொலை. சாதிய ஆணவக் கொலையாளிகளின் கூட்டம் சங்கரின் படுகொலையைக் கொண்டாடியபோது, சாதி மறுப்புத் திருமணம் செய்ய நினைப்பவர்க்கெல்லாம் இனி சங்கரின் நிலைமைதான் என்று கொக்கரித்தபோது, ஆணவக் கொலைக் கும்பல்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் மகத்தான தீர்ப்பை வழங்கி அறம் காத்தவர் நீதிபதி அலமேலு நடராஜன்.

அவருடைய திடீர் மரணம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யிருக்கிறது. 52 வயதான அலமேலு நடராஜன், சில வருடங்களாகவே சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னைக்குச் சிகிச்சை எடுத்துவந்தார். இந்த நிலையில், ஜனவரி 20-ம் தேதியன்று மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்தது அப்போது கண்டுபிடிக்கப்பட்டது. 25-ம் தேதியன்று காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

சாதிய ஆணவக் கொலை வழக்குகளை இனி இந்திய நீதித்துறை எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்பதற்குப் பாதை அமைத்தவரை, காலன் இன்னும் சில காலம் வாழ வைத்திருக்கலாம்.


ஓமந்தூராருக்கு அரசு விழா!

செ
ன்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் பொறுப்பை வகித்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அவருடைய பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என 21.01.18-தேதியிட்ட ஜூ.வி-யில் செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஜனவரி 23-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘ஓமந்தூராரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்’ என்று அறிவித்துள்ளார். பிப்ரவரி 1-ம் தேதி ஓமந்தூராரின் பிறந்த நாள். அன்று, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு விழாவாக அந்த நாள் கொண்டாடப்படும்.


p42d_1516988650.jpg

dot_1516988669.jpgஉணவுத்துறை சார்பில் விநியோகிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகளில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் கார்டுகளில் பல்வேறு குளறுபடிகள். சரியான ஆவணங்களை மக்கள் கொடுத்தும், அவற்றை அச்சிட்டதில் நிறைய தவறு செய்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையின் பெண் அதிகாரியிடம் சொன்னால், ‘‘ஆன்லைனில் பிரச்னையைச் சரிசெய்துகொள்ளுங்கள்’’ எனச் சாதாரணமாகச் சொல்கிறாராம். இதைச் செய்யத்தெரியாமல், மக்கள் தவிக்கிறார்கள். 


dot_1516988669.jpgஇந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக இருக்கும் ஜெயா ஐ.ஏ.எஸ்., நிர்வாகத்தில் கறாரானவர். ஆனால், அவருக்கு மீடியா என்றாலே ஆகாது. துறைரீதியான கருத்து கேட்கப் போகிறவர்களை, பலமுறை அலையவிட்டுத் திருப்பி அனுப்புகிறாராம். இதை மீடியாக்காரர்கள் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் சொல்லிப் புலம்புகிறார்கள்.    

dot_1516988669.jpg தமிழகத்தில் மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் 11 இயங்குகின்றன. இவர்கள் ஆட்சியாளர்களுக்கு முறையாக ‘தட்சணை’ தருவது வழக்கம். இவற்றில் இரண்டு நிறுவனங்களைத் தவிர, மற்றவை இதைத் தவணை முறையில் தருகின்றனவாம். இதில் நிறைய பாக்கி உள்ளதாம். ‘இனி காத்திருக்க முடியாது. பாக்கியை செட்டில் செய்யுங்கள். அதன்பிறகுதான், புதிதாக ஆர்டர் தருவோம்’ எனக் கறாராக ஆளும்கட்சி மேலிடம் சொல்லிவிட்டதாம். எல்லாம் ஆட்சிக் கலைப்பு பீதியின் விளைவாம். இதே கோணத்தில்தான் மதுபான நிறுவனங்களும் தயங்குகின்றனவாம்.

dot_1516988669.jpg தலைமைச் செயலகத்தில் சார்பு செயலர், துணைச் செயலர் பதவிகளில் அமர புரமோஷனில் வருகிறவர்கள், கண்டிப்பாக தமிழகத்தில் உள்ள கிராம அளவிலான அரசு அலுவலகம் ஏதாவது ஒன்றில் ஆறு மாதங்கள் பணிபுரிந்து ஃபீல்டு அனுபவம் பெற்று வரவேண்டும். சென்னையிலேயே பழகிவிட்ட ஒரு தரப்பினருக்கு இதில் விருப்பம் இல்லை. அதனால், மாற்றுத் திட்டம் ஒன்றைத் தயாரித்துவிட்டார்களாம். இதற்கு சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் உடந்தை. 

dot_1516988669.jpgதமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் சொந்த சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி. இது, ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. அந்த வகையில், இரண்டு முறை அங்கு போட்டியிட்டுத் தோற்றுப்போனார். அதனால், வருகிற தேர்தலில் மீண்டும் அங்கே போட்டியிடத் தயங்குகிறாராம். அவர் குறிவைப்பது, திருச்சி தொகுதியை! ஒருவேளை தி.மு.க கூட்டணி அமைந்தால், திருச்சி அவருக்கு நிச்சயம். இதைக் கேள்விப்பட்ட, திருச்சி தி.மு.க-வினர் ஏகத்துக்கும் கடுப்பில் இருக்கிறார்கள்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.