Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்? - ஜெயமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்?

ஜெயமோகன்

ஓவியம்: ஷண்முகவேல்

ஓவியம்: ஷண்முகவேல்

காவியத்திற்கும் நாவலுக்குமான வேறுபாடு என்ன? காவியம் என்பது ஒரு பண்பாட்டில் புழங்கும் கதைகளையும் அடிப்படைப் படிமங்களையும் தொகுத்து ஒற்றைக் கட்டுமானமாக ஆக்குகிறது. அதன் வழியாக ஒரு மையத்தை நிறுவுகிறது. அது அந்தக் காவியத்தின் தரிசனம் என்கிறோம்.

கேரளத்திலுள்ள ஆலயங்களில் மையத்தில் குடம் என்ற அமைப்பு உண்டு. எல்லா உத்தரங்களும் ஒன்றுசேரும் இடம். குடம்பூட்டுவது பெருந்தச்சன் செய்யவேண்டிய பணி. காவியம் என்பது ஒரு சமூகத்தின் குடம்.

ஒருசமூகம் என்பது மக்கள் சேர்ந்து ஒன்றாக வாழும்போது உருவாவது. அவர்கள் சேர்ந்து சிந்திக்கும்போது உருவாவது பண்பாடு. மக்கள் கதைகளினூடாக படிமங்களினூடாகச் சிந்திக்கிறார்கள். அவை அவர்களின் வாழ்க்கையிலிருந்து எழுபவை. அவற்றுக்கு ஒரு வெளிப்படையாக ஒரு மையமோ இலக்கோ இருப்பதில்லை. காவியம் அவற்றை அளிக்கிறது.

ஆகவே காவியகர்த்தர்களே பண்பாட்டை உருவாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு பண்பாடு முழுமையாக அழிந்தபின் அதில் ஒரு நூல் மட்டும் எஞ்சுமென்றால் அந்நூலில் இருந்து அப்பண்பாட்டை ஏறத்தாழ மீட்டுவிட முடியும் என்றால் அதுவே காவியம்.

காவியம் அப்பண்பாட்டுக்கு மையத்தை உருவாக்கி அளிக்கிறது காலப்போக்கில் அந்த தரிசனத்தை அந்தப் பண்பாடு தன்னுடையதென்று ஏற்றுக்கொள்கிறது. அந்தக் காவியத்தை அது பலநூறு துண்டுகளாக உடைத்து விரிவாக்கிக் கொள்கிறது.  அதன் வழியாக அந்த மையத்தை அது பலகோணங்களில் விவாதிக்கிறது. அதன் வழியாக அந்தக் காவியம் அச்சமூகத்தில் வேராக மாறுகிறது

காட்டில் ஒர் இடத்தில் வரிசையாக ஒரே இனத்தைச் சேர்ந்த மரங்கள் நிற்பதைக் காணலாம். அவற்றுக்கு அடியில் முன்பு விழுந்து மண்ணுக்குள் புதைந்த தொன்மையான மரம் ஒன்று உண்டு. அந்தமரமே கணு தோறும் முளைத்து ஏராளமான மரங்களாக மாறியிருக்கிறது. தோண்டினால் அந்த மூலமரத்தையே நம்மால் காணமுடியும். தொன்மையான பெருங்காவியங்கள் அத்தகையவை.

மகாபாரதம் ஜய என்ற பேரில் கிருஷ்ண த்வைபாயன வியாசனால் எழுதப்பட்ட வெற்றியின் கதை. அது அவருடைய மாணவர்களால் விரிவாக்கப்பட்டது. அதன்பின் நூற்றுக்கணக்கான காவியங்களாக முளைத்தது

இந்தியமரபில் மகாபாரதத்தை மீண்டும் எழுதும் மரபு இரண்டாயிரமாண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. கன்னடத்தின் குமாரபாரதம், தமிழின் வில்லிபாரதம் போன்று மகாபாரதகாவியங்கள் உள்ளன. சாகுந்தலம், சிசுபால வதம் போல சிலபகுதிகள் விரிவாக்கப்பட்டுள்ளன

இந்திய மறுமலர்ச்சியின்போது நவீனகவிதையும், உரைநடை இலக்கியமும் உருவாகி வந்தன. மீண்டும் மகாபாரதம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. தாகூரின் சித்ராங்கதா, பாரதியின் பாஞ்சாலி சபதம்போல. இந்தியமொழிகளில் எல்லாம் மகாபாரத மறு ஆக்கங்களான பெரும் படைப்புகள் உள்ளன. நரேந்திர கோலியின் மகாசமர் [ஹிந்தி] எஸ்.எல்.பைரப்பாவின் [பர்வா] கே.எம்.முன்ஷியின் கிருஷ்ணாவதாரம் [குஜராத்தி] வி.எஸ்.காண்டேகரின் யயாதி [மராத்தி] பி.கே.பாலகிருஷ்ணனின் இனி ஞான் உறங்கட்டே [மலையாளம்] ஆகியவை அவற்றில் பேரிலக்கியங்கள்.

மகாபாரதத்தைச் சார்ந்த காவியங்களுக்கும் இன்றைய நாவல்களுக்கும் என்ன வேறுபாடு? காவியங்கள் மையங்களை உருவாக்குகின்றன. உறுதிப்படுத்துகின்றன. நாவல்கள் மையங்களை அவிழ்த்துப்பார்க்கின்றன, மறுபரிசீலனை செய்கின்றன,ஆராய்கின்றன.

ஏனென்றால் இன்று இலக்கியத்தின் பணி மாறிவிட்டிருக்கிறது. நேற்று இலக்கியம் சிதறிப்பரந்து கிடந்த சமூகங்களில் இருந்து ஒரு பண்பாட்டை திரட்டி உருவாக்க முயன்றது. இன்று உறுதிப்படுத்தப்பட்டவற்றை நெகிழ்த்தி நோக்க முயல்கிறது. ஒட்டுமொத்தத்தையும் சாராம்சத்தையும் அல்ல. தனித்துவங்களையே அது தேடுகிறது. இன்று ஒன்றாக்குவது அல்ல பலவாக்குவதே அதன் பணி.

உதாரணமாக, வியாசர் பெருவீரர்கள், முனிவர்களுக்கே கதையில் இடமளித்துள்ளார். குந்தி,காந்தாரி, திரௌபதிகூட அக்காவியத்தில் பெரிய கதாபாத்திரங்கள் அல்ல. விசித்திர வீரியன்,சித்ராங்கதன், பாண்டு போன்ற பலவீனர்களுக்கும் இடமில்லை. நான் இன்று மகாபாரதத்தை திரும்ப எழுதும்போது இந்த சிறியகதாபாத்திரங்களை நோக்கி மேலும் அதிகக்கவனத்தை கொடுக்கிறேன். அவர்களை விரிவாக்கம் செய்கிறேன்.

என் நாவலில் பாண்டு மிகப்பெரிய கதாபாத்திரம். மகாபாரதத்தில் பெயர் கூட சொல்லப்படாத, பிற்கால நூல்களில் மட்டும் பெயர் சொல்லப்படுகிற, துரியோதனனின் மனைவி பானுமதியும் துச்சாதனனின் மனைவி அசலையும் பெரிய கதாபாத்திரங்கள். விகர்ணனின் மனைவிக்கு பெயரும் முகமும் அளிக்கிறேன். வரலாறு அவர்களின் வழியாக எப்படி தெரிகிறது என காட்டுகிறேன்.

அடுத்ததாக ஒவ்வொரு படைப்பும் அதற்கு அடித்தளமாக உள்ள அறிவுத்தளம் மீது அமைந்துள்ளது. காவியங்கள் பழைய அறிவுத்தளம் மீது அமைந்தவை. உதாரணமாக மகாபாரதம் பண்டைய வேதங்கள், வேதாங்கங்கள், உபவேதாங்கங்கள்,உபவேதங்கள் ஆகியவற்றின் மேல் அமைந்தது.

இன்றைய இலக்கியம் சென்ற முந்நூறாண்டுகளில் உருவான அறிவுத்தளம் மீது அமைந்தது. இன்று அரசியல்கோட்பாடுகள், சமூகவியல் கொள்கைகள், நவீன வரலாற்று ஆய்வுமுறைகள் நம் சிந்தனையை வடிவமைத்துள்ளன. அந்தக்கோணத்தில் மகாபாரதத்தை மறுபடியும் ஆராய்கிறோம்.

உதாரணமாக, கிருஷ்ணன் ஒரு பேரரசை உருவாக்கினான். அந்த அரசின் அத்தனை குடிகளும் குருஷேத்ரத்தில் அவனுக்கு எதிராக நின்றன. அவன் அண்ணன் பலராமன் எதிர்த்து ஒதுங்கினான். மைந்தன் பிரத்யும்னன் அவனை ஆதரிக்கவில்லை. கீதையில் முதலில் உறவினரைக் கொலைசெய்வது பற்றி அர்ஜுனன் கேட்கும் கேள்வி கிருஷ்ணன் தனக்குத்தானே கேட்பது. யாதவர்படைகளை முழுமையாக அழித்தவன் கிருஷ்ணன் அல்லவா?

இதற்கு மகாபாரதம் பெரிய விளக்கம் அளிப்பதில்லை. ஒரு சிறிய கதையை அது தருகிறது. கிருஷ்ணன் தூங்கும்போது அர்ஜுனன் காலடியில் அமர்ந்தான், துரியோதனன் தலைமாட்டில் அமர்ந்தான். விழித்தெழுந்த கிருஷ்ணன் தன் ஆதரவை முதலில் கண்ணுக்குத்தெரிந்த அர்ஜுனனுக்கு அளித்தான். அதை நிகர்செய்ய படைகளை துரியோதனனுக்கு அளித்தான். பிற்காலக் கதை இது. குழந்தைத்தனமானது

நடந்தது வேறு என இன்றைய சமூகவியல் அரசியல் பார்வை நமக்கு காட்டுகிறது. அந்த கைவிடல் ஏன் என மகாபாரதத்தை வைத்து ஆராயலாம். அதற்கான விடையை நோக்கி என் நாவல்வழியாகச் செல்கிறேன். அப்படி ஆயிரம் கேள்விகளை மகாபாரதம் சார்ந்து கேட்டுக்கொள்கிறேன். அதுவே வெண்முரசு.

கடைசியாக, அப்படி ஏன் மகாபாரதத்தை ஆராயவேண்டும்? நான் முன்னரே சொன்ன பதில்தான். அந்த பழைய மரம் உள்ளே கிடக்கிறது. உயிருடன். அது முளைத்துக்கொண்டே இருக்கிறது. இன்றைக்கும் இந்திய சமூகத்தை ஆள்வது மகாபாரதம் உருவாக்கிய அடிப்படையான தொல்படிமங்களும் [ஆர்கிடைப்] நம்பிக்கைகளும்தான்.

இந்திய மனத்தை வடிவமைத்திருப்பது மகாபாரதமே. ஒவ்வொருநாளும் இங்கே பல்லாயிரம் இடங்களில் மகாபாரதம் கதை சொல்லப்படுகிறது, நடிக்கப்படுகிறது. தெருக்கூத்தாக, கதகளியாக, தொலைக்காட்சித் தொடர்களாக. நம் சினிமாக்கள் அனைத்துமே மகாபாரத தொல்படிமங்களின் மறுவடிவங்களே. ஆகவே இந்திய சமூகத்தின் ஆழத்தை ஆராய, அதை மறுபரிச்சீலனை செய்ய மகாபாரதத்தை எழுதவேண்டியிருக்கிறது

அதோடு மகாபாரதம் ஒரு மாபெரும் படிமக் களஞ்சியம். கலைக்கு அடிப்படையாக இருப்பது படிமங்கள். நவீனபடிமங்களுக்கு எல்லை உண்டு. மகாபாரதம் அளிக்கும் படிமங்கள் பலவகைகளில் விரிவாக்கம் செய்யத்தக்கவை. அம்பை பீஷ்மரை சாபமிட்டுச்சென்று மூன்று தலைமுறைக்குப்பின் போர் நிகழ்கிறது. அழியாத கண்ணீர் என்பதற்கு அதைவிடச்சிறந்த படிமம் வேறில்லை. அம்பையில் இருந்து திரௌபதிக்கு ஒரு கோடு கிழித்தால் அந்த படிமம் பேருருவம் கொள்கிறது.

ஆகவேதான் மகாபாரத்த்தை மீண்டும் எழுதுகிறோம். ஆயிரமாண்டுகாலம் கழித்து செவ்வாயிலோ வேறு கோள்களிலோ குடியிருக்கும் நம் வழித்தோன்றல்களும் அன்றைய தேவைக்காக எழுதிக்கொள்வார்கள்.

திருவனந்தபுரத்தில் 4-2-2018 அன்று நிகழ்ந்த மாத்ருபூமி சர்வதேச இலக்கியவிழாவில் தொன்மங்களின் மறுஆக்கம் இலக்கியத்தில் என்னும் கருத்தரங்கில் பேசிய உரை

 

http://www.jeyamohan.in/106484#.WneDibunxR4

  • கருத்துக்கள உறவுகள்

தொன்மையான அந்த மரத்தினின்று மீண்டும் ஒரு துளிர்....வளரட்டும்.....!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.