Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கங்குலி Vs சேப்பல் அத்தியாயம் எங்கு தொடங்கியது? ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை

Featured Replies

கங்குலி Vs சேப்பல் அத்தியாயம் எங்கு தொடங்கியது? ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 1 #ACenturyIsNotEnough

 

கங்குலி

"ஐந்து ஆண்டுகள் இந்த அணியின் கேப்டனாக இருந்திருக்கிறேன். செங்கல் செங்கலாக இந்த அணியை உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய பேட்டிங் பொசிஷன்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். இந்திய வீரர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக எதிரணி கேப்டன்களோடு சண்டையிட்டிருக்கிறேன். இந்திய அணியை சுமார் 200 போட்டிகளில் வழிநடத்தியுள்ளேன். ஆனால், இப்போது திடீரென்று அணியைச் சீரழிப்பவனாக மாறிவிட்டேனா...?"  - இது கங்குலியின் ஆதங்கம்.  இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆளுமை, எதற்கும் அடங்காத அந்த வங்கப்புலி, சரத் பவார் சொன்ன வார்த்தைகளால் ஆடிப் போயிருந்தது. இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த சரத் பவார் அப்படி என்ன கேட்டார்...? ஏன் கேட்டார்...? கங்குலி அதற்குக் கலங்க வேண்டிய காரணம் என்ன...? அந்த நிலைக்கு அவர் ஏன் தள்ளப்பட்டார்...? எப்படித் தள்ளப்பட்டார்...? இதுதான் 'A Century is not enough' புத்தகம். 

 

ஆம், கங்குலி எழுதியிருக்கும் புத்தகம். முதல் புத்தகம்! ஆனால், கங்குலியின் முதல் அகவையிலிருந்து இது தொடங்கவில்லை. கங்குலியின் கடைசி சர்வதேசத் தொடரிலிருந்து தொடங்கும் புத்தகம் non-linear பாணியில் பல விஷயங்களைப் பேசுகிறது. 2008 பார்டர் - கவாஸ்கர் தொடரிலிருந்து தொடங்கி, புனே வாரியர்ஸ் அணியுடன் முடிந்த ஐ.பி.எல் தொடர்வரை முழுக்க முழுக்க, தன் கிரிக்கெட் வாழ்வின் அந்திமக் காலத்தைப் பற்றி இந்தப் புத்தகத்தின் வாயிலாகப் பேசுகிறார் கங்குலி. அவருடன் சேர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர், கங்குலியின் நண்பரான கௌதம் பட்டாச்சார்யா.A Century Is Not Enough 

புத்தகத்தின் அட்டையிலேயே 'My roller-coaster ride to success' என்று போட்டிருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டின் கருப்புப் பக்கமாய்த் திகழும் 'கங்குலி vs சேப்பல்' அத்தியாயத்தைப் பற்றி, இந்திய அணிக்குள் தான் மீண்டும் வருவதற்கு இருந்த தடங்கல்களைப் பற்றி, அணியில் ஆடாத நேரத்தில் தன் மனநிலையைப் பற்றி, அனைவரும் வியக்கும் வகையில் கம்பேக் கொடுத்தது பற்றி... இன்னும் நிறைய விஷயங்களைப் பேசுகிறது 'A Century is not enough'. 13 ஆண்டுகள் ஆகியும், கங்குலி - சேப்பல் மோதல் மீதான சுவாரஸ்யம் குறையவில்லை. அதைப் பற்றி ஏற்கெனவே பல விஷயங்கள் தெரிந்துள்ள நிலையில், புதிதாக, கங்குலி எதுவும் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது. 

கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோதும், அணியிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டபோதும் தன் மனநிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி இதில் விவரிக்கிறார் சவுரவ். ஆனால், தனக்கும் சேப்பலுக்கும் இடையில் நடந்த விவாதங்களைப் பற்றிய புதிய தகவல்கள் பெரிய அளவில் இல்லை. அதேவேலையில், கங்குலி - சேப்பல் அத்தியாயத்தின் ஆரம்பத்தைப் பற்றி பேசியிருக்கிறார். மேலும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியிலிருந்து தான் கழட்டிவிட்ட நிகழ்வுகளின் தொகுப்பையும் இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். 

“ என் சுயசரிதை வெளிவந்தால் பலருடனும் பல பிரச்னை எழும். பெரிய பூகம்பங்கள் வெடிக்கும்" என்று சில ஆண்டுகளுக்கு முன்னாள் சொல்லியிருந்தார் கங்குலி. அவர் மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்பதால் இந்தப் புத்தகம் அப்படி நிச்சயம் பல பூகம்பங்களைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'இது என் சுயசரிதை அல்ல. வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட பயணம்' என்று அவர் புத்தகம் வெளியான அன்று கங்குலி சொல்லியிருந்தார். ஆக, சர்ச்சைகளைக் கிளப்புவதற்கான விஷயங்கள் இதில் அதிகம் இல்லை. ஆனால், கங்குலி எனும் வீரனை, அவரது மொழியில் அறிந்து கொண்டாடுவதற்கான புத்தகம் இது. 

கங்குலி என்ற பெயரைக் கேட்டாலே ஆர்ப்பரிக்கும் அவரது டை ஹார்ட் ரசிகர்களுக்கான பொக்கிஷம் இது. வெறும் கிரிக்கெட்டோடு மட்டுமல்லாமல், ஆங்காங்கே, வாழ்க்கையைத் தொடர்புபடுத்தி எழுதியிருப்பதால், அவர் ரசிகர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் நெருக்கமாக அமையும். சர்ச்சைகளைக் கிளப்புவாதாக இல்லாமல் இருந்தாலும், சிலபல சர்ச்சைகளுக்கும் இந்தப் புத்தகம் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். டிராவிட், சச்சின் போன்றோருடன் தான் கொண்டிருந்த நம்பிக்கை பற்றியும் சில இடங்களில் அவர் வெளிப்படுத்துகிறார். சரி, அந்தப் புத்தகத்துல வேற என்னதான் இருக்கு...? அதைத்தான் இன்னும் சில தினங்கள் பேசப் போகிறோம்... கங்குலி ரசிகர்களுக்காக... சாரி, தாதா வெறியர்களுக்காக!

கங்குலி

``நீ எடுக்கும் முடிவுதான் நீ யார் என்பதைத் தீர்மானிக்கும். அதுவே உன் வாழ்க்கையையும் தீர்மானிக்கும். உனக்கு முன்பிருந்தவர்கள் சாதிக்காத ஒரு விஷயத்தைச் செய்வதற்கு, எதற்காகத் தயங்கவேண்டும்? நான் ரிஸ்க் எடுக்கத் தயங்குவதில்லை" - 2003-04 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார். ஓய்வுபெற்று 10 ஆண்டுகள் ஆன பின்பும், அசைக்க முடியாத ஆளுமையாக அவர் வலம்வரக் காரணம் இந்த ஆட்டிட்யூட்தான்!

சாதாரணமாகப் பார்த்தால் அது வெறுமனே ஒரு டெஸ்ட் தொடர்தான். ஆனால், கங்குலிக்கு அது சாதாரண டெஸ்ட் தொடர் அல்ல. தன் அணி போராடப்போகும் மிகப்பெரிய யுத்தம். கிரிக்கெட்டின் ராஜாவை வீழ்த்தி, அந்த அரியணையில் ஏறுவதற்கான நுழைவுவாயில் அந்தத் தொடர். அதை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. டிசம்பர் மாதம் தொடங்கிவிருந்த தொடருக்கு, 5 மாதங்கள் முன்பிருந்தே தயாராகியிருக்கிறார் கங்குலி. அதுவும் சாதாரணமாகவா...? இந்திய வீரர்களுக்கே தெரியாமல், இந்திய மீடியாவுக்குத் தெரியாமல், அவரைப் பின்தொடர்ந்துகொண்டேயிருக்கும் கொல்கத்தா மீடியாவுக்குத் தெரியாமல் ஆஸ்திரேலியா பயணப்பட்டுள்ளார் கங்குலி. யாருக்கும் தெரியாமல் எதற்காக இப்படி ஒரு பயணம்?

2003 - ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் உச்சிக் கொம்பில் நின்றுகொண்டிருந்தது. அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது. அதுவும் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்துவதென்பது சாதாரண விஷயமல்ல. 23 ஆண்டுகளாக இந்தியாவால் அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில்கூட வெற்றி பெற முடியாமல் இருந்தது. இதையெல்லாம் உடைக்கவேண்டும். இந்திய அணிக்குப் புதிய அடையாளத்தைத் தரவேண்டும். அதற்கு, தான் முன்னால் நின்று வழிநடத்தவேண்டும். ஆஸ்திரேலியா பயணித்தார். ஒவ்வொரு மைதானத்தையும் பார்வையிட்டார். அதன் தன்மையை அறிந்தார். அப்போதே திட்டங்கள் வகுத்தார். அதுவும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக... 

கங்குலி

சொல்லப்போனால், இந்தப் பயணம்தான் கங்குலிக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. ஆகச்சிறந்த ஆஸ்திரேலிய அணியை, தான் ஆட்டுவிக்கக் காரணமாக இருந்தது இந்தப் பயணம்தான். அதேசமயம், தன் கிரிக்கெட் வாழ்வின் அஸ்திவாரத்தை ஆட்டிப் படைத்து அதைத் தரைமட்டமாக்கியதும் இந்தப் பயணம்தான். ஆம், கங்குலி - சேப்பல் முதல் சந்திப்பு இந்தப் பயணத்தின்போதுதான் நிகழ்ந்துள்ளது. கங்குலி வேண்டி விரும்பிய பயணம், மிகவும் நேசித்த பயணம், தன்னை மெருகேற்றியதாக நினைத்த பயணம்... தன் வில்லனையும் கண்முன்னே காட்டியது. 

 

கங்குலி எதற்காகச் சேப்பலைச் சந்தித்தார்...? அந்தப் பயணத்தில் என்ன நிகழ்ந்தது...? அசைக்க முடியாத அணியான ஆஸ்திரேலியாவைச் சாய்க்க அப்படி என்னென்ன யுக்திகளை தாதா கையாண்டார்...? அடுத்த பாகத்தில்...!

https://www.vikatan.com/news/sports/117616-introduction-about-sourav-gangulys-book-a-century-is-not-enough.html

  • தொடங்கியவர்

சேப்பலுடன் 7 நாள்கள்... ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 2 #ACenturyIsNotEnough

 
 

 

கங்குலி

 

டிசம்பர்  4, 2003 - இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பைத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதாக இருந்தது. அதற்கு முந்தைய தொடரை (2001-ல் இந்தியாவில் நடந்தது) இந்தியாதான் வென்றிருந்தது. அதுவும் ஆஸ்திரேலியாவின் தொடர்ச்சியான 15 டெஸ்ட் வெற்றி பயணத்தை உடைத்து... இந்த முறை ஆஸ்திரேலியாவில். இதுவரை அங்கு தொடரை வென்றதேயில்லை. அதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடியிருந்த 28 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்றிருந்தது. அதுவும், அசார் (1991-92), சச்சின் (1999-00) தலைமையிலான கடைசி இரண்டு தொடர்களில் 8 போட்டிகளில் 7 தோல்விகள். இந்த வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற மிகப்பெரிய தாகம் கொண்டிருந்தார் அன்றைய கேப்டன் சவுரவ் கங்குலி.

பௌன்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத இந்திய ஆடுகளங்களில் நெட் பிராக்டீஸ் எடுத்துக்கொண்டும், ஏ.சி அறையில் அமர்ந்து ஆலோசித்துக் கொண்டும் இருந்தால், எதையும் மாற்ற முடியாது என்று உணர்ந்திருந்தார். என்ன செய்வது? A Century Is Not Enough புத்தகத்தில், தான் இதற்காக ' கிரிக்கெட் உளவு' செய்ததாகக் குறிப்பிடுகிறார் தாதா. அதென்ன கிரிக்கெட் உளவு...?

யுத்த களத்துக்கே சென்று, போருக்கான திட்டங்களை வகுப்பதுதான் கங்குலியின் திட்டம். ஆஸ்திரேலிய மைதானங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார். ஜூலை மாதமே அங்கு போக தயாரானார். தன் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டுமென்பதும் அந்தத் திட்டத்தின் ஓர் அங்கம். இந்தத் திட்டத்தில் தனக்கு உதவுவதற்காக கங்குலி தேர்வு செய்த ஆள்தான் சேப்பல்!

கங்குலி - சேப்பல்

'Seven days with Greg Chappell' என்ற பகுதியில், இந்தப் பயணம் குறித்து எழுதியிருக்கும் கங்குலி, தனக்கும் சேப்பலுக்கும் இடையில் நடந்த சம்பவங்கள் பற்றியோ, உரையாடல்கள் பற்றியோ பெரிதாக விளக்கவில்லை. அந்த ஒரு வாரம் நல்ல படியாக முடிந்ததாக மட்டுமே குறிப்பிடுகிறார். இந்தப் பகுதியில் சேப்பல் பற்றிப் பேசத் தொடங்கிய தாதா, பின்னர் தன் முழு கவனத்தையும் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரிலேயே செலுத்திவிட்டார். அந்தத் தொடருக்குத் தயாராக, என்னென்ன மாதிரியான ஆலோசனைகள் செய்தேன் என்று குறிப்பிட்ட இடங்களில்தான் பின்னர் சேப்பல் பெயர் அடிபட்டது. அந்த வகையில், இந்த 'சேப்டர்' முழுமை அடையாதது போன்றதோர் உணர்வைக் கொடுத்தது. ஆனால், அந்த டெஸ்ட் தொடர் திட்டங்களைப் பற்றி கங்குலி சொன்ன விஷயங்கள்... "கேப்டன்னா இப்டித்தான் இருக்கணும்" என்று நம்மை புல்லரிக்கச் செய்யும். அதைப் பற்றிப் பார்ப்போம். 

அப்போது சேப்பல் மீது கங்குலி நல்ல அபிப்ராயம் வைத்திருந்தார். சேப்பலின் கிரிக்கெட் அறிவு தன்னைக் கவர்ந்ததால், அவரிடம் ஆலோசனை பெற விரும்பினார் சவுரவ். ஆஸ்திரேலியா கிளம்பும் முன்னதாக சேப்பலிடம் பேசி அவரது விருப்பத்தை அறிந்த பிறகு, யாருக்கும் தெரியாமல் சென்றிருக்கிறார். அதுதான் சேப்பல் - கங்குலி அத்யாயத்தின் தொடக்கம். ஏழு நாள்கள். ஆஸ்திரேலிய தொடருக்கான தன் திட்டங்களுக்குத் தேவையான விஷயங்களையெல்லாம் அவரிடம் ஆலோசிக்கிறார். தன் பேட்டிங்கிலும் கவனம் செலுத்துகிறார். 

இந்தியா ஆடவிருக்கும் ஒவ்வொரு மைதானங்களைப் பற்றியும் case study செய்திருக்கிறார் தாதா. இந்திய ஆடுகளங்களில் தாங்கள் காண முடியாத 'பெரிய பௌண்டரி எல்லை'யை எப்படிச் சமாளிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்தியுள்ளார். 'ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பௌலர்கள் எந்த லெங்தில் பந்துவீசவேண்டும்? எந்த ஆஸ்திரேலிய மைதானத்தில் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்க வேண்டும்? எந்த எண்ட்-ல் இருந்து ஸ்பின்னர் பந்துவீசுவது உகந்தது? காபா (Gabba) மைதானத்தில் எந்தெந்த பௌலர்களைக் களமிறக்குவது நல்லது? அடிலெய்ட் போன்ற செவ்வகமான மைதானத்தில் எப்படி ஃபீல்டர்களை நிறுத்துவது?' என்று சின்னச்சின்ன விஷயங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளார் கங்குலி. 

கங்குலி

இதெல்லாம் கூட பரவாயில்லை. ஒரு மைதானத்தில் நின்று, ஜாஹிர் பந்துவீசுவது போலவும், அந்தப் பந்து ஹெய்டன் பேட்டில் பட்டு எட்ஜாவது போலவும், அதை டிராவிட், லட்சுமண் இருவரில் ஒருவர் பிடிப்பது போலவும் கற்பனை செய்து பார்த்துள்ளார். அந்தக் கற்பனை டிராவிட், லட்சுமண் இருவரும் சரியான இடங்களில் நிற்கிறார்களா என்று மனதில் கணக்கிடுகிறார். கேட்ச் வந்தால் அவர்களைத் தாண்டியோ, அவர்களுக்கு முன்னாலோ விழுந்துவிடுமோ என்று எண்ணி, அவர்கள் சரியாக எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்றெல்லாம் 'கால்குலேஷன்' போட்டுள்ளார். வீட்டில் விளையாட ஆளில்லாத சிறுபிள்ளை தன்னைச் சுற்றி எல்லாம் நடப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு விளையாடுவது போல் ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் கற்பனைகளின் நடுவே, கனவுலகத்தில் வாழ்ந்துள்ளார். ஆஸ்திரேலிய அணியை அவர்கள் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்பதில் அவ்வளவு வெறி.

பின்னர், முதல் போட்டி நடக்கும் பிரிஸ்பேன் நகருக்குத் தன்னை அழைத்துச்செல்லும்படிக் கேட்டிருக்கிறார் சவுரவ். பனி அதிகமாக இருந்ததால், பிரிஸ்பேன் மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அதனால், அத்துடன் தன் பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். அப்போது, தான் சேப்பல் மீது அதீத நம்பிக்கை வைத்திருந்ததாகக் கூறுகிறார். "அந்தப் பயணம் என் பேட்டிங்கில் நல்லதொரு முன்னேற்றத்தைக் கொடுத்தது. மிகவும் மகிழ்ச்சியாக அங்கிருந்து கிளம்பினேன். அப்போது அவருக்கு மனதார நன்றி சொன்னேன்" என்று கூறும் கங்குலி, "அந்தப் பயணம்தான் நான் தவறான முடிவெடுப்பதற்குக் காரணமாக அமைந்துவிட்டது" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மீபத்திய தென்னாப்பிரிக்க அணியுடனான இந்திய அணியின் டெஸ்ட் தொடர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை  ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் அறிந்திருந்தது. அதற்கு 12 நாள்கள் முன்பு வரை 'கைப்புள்ள' இலங்கை அணியை துவைத்துக் காயப்போட்டுக் கொண்டிருந்தது இந்திய அணி. சரியாக ஒரு வாரம் முன்பு தென்னாப்பிரிக்காவில் தரையிறங்கினார்கள் இந்திய வீரர்கள். ஒரு பயிற்சி போட்டி கூட இல்லை. வெறும் வலை பயிற்சியோடு கேப்டவுனில் களம் புகுந்தனர். தோல்வி. ஒரு தொடருக்கு தொடக்கம் என்பது எவ்வளவு முக்கியம்...? அதைச் சாதகமாகப் பயன்படுத்தத் தவறிய இந்திய அணி, அடுத்த போட்டியில் தொடரையும் இழந்தது.

Ganguly

ஒரு முக்கிய அணியுடனான டெஸ்ட் தொடரை எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு கேப்டன் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கங்குலி அப்படிப்பட்டவர். அந்த ஆஸ்திரேலிய தொடருக்கான அட்டவணை தயாரானது. கங்குலிக்கு அது போதுமானதாகத் தெரியவில்லை. அன்றைய பி.சி.சி.ஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு போன் செய்கிறார். ``நாங்கள் போட்டி தொடங்குவதற்கு 3 வாரத்துக்கு முன்பே ஆஸ்திரேலியா செல்ல வேண்டும். 3 பயிற்சி போட்டிகளிலாவது பங்கேற்க வேண்டும்" என்கிறார். கேப்டனின் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. இந்தியா 3 பயிற்சி போட்டிகளில் விளையாடுகிறது. ஆஸ்திரேலிய சீதோஷ்ண நிலைக்கு.. அந்த ஆடுகளங்களுக்கு... அதன் பௌன்ஸுக்கு... இந்தியா தயார்.

பிரிஸ்பேனில் முதல் போட்டி. அந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணி 20 செஷன்கள் பயிற்சிபெற்ற அனுபவத்தைப் பெற்றிருந்தது. கேப்டன் கங்குலி சதம் அடிக்கிறார். போட்டி டிரா. அடுத்த போட்டியில் டிராவிட் சதம். வெற்றி. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி. 3-வது போட்டியில் தோல்வி. 4-வது போட்டி... ஸ்டீவ் வாஹ் என்னும் ஜாம்பவானின் கடைசிப் போட்டி. மைதானத்தில் உணர்ச்சிப் பெருக்கு. கிரிக்கெட் உலகைக் கட்டியாண்ட ஸ்டீவ், தன் கடைசிப் போட்டியில், தன் சொந்த மண்ணில், தன் அணியின் தோல்வியைத் தவிர்க்கப் போராடுகிறார். இந்தியா உலக கிரிக்கெட்டில் சூப்பர் பவராக உயர்ந்த தருணம் அது. தொடர் முடிந்தது. கோப்பை வாங்கச் செல்கிறார் கங்குலி. சொந்த ஊரைப் போன்ற கரகோஷம். இந்திய அணிக்கு அவ்வளவு மதிப்பு கொடுத்தார்கள். ஆசியக் கண்டத்துக்கு வெளியே இந்திய அணிக்குக் கிடைத்த முதல் கௌரவம்!

 

 

தன் வாழ்நாளில் மறக்க முடியாத வெற்றியாக இதைக் குறிப்பிடுகிறார் கங்குலி. ஸ்டீவ் வாஹ் தலைமையிலான ஒரு அணியை தடுமாற வைத்த அந்தத் தருணத்தை யாரால் மறந்திட முடியும். எதிரணி வீரர்களைப் பெரிதாக மதிக்காத ஆஸ்திரேலிய வீரர்கள், இந்த இந்திய அணியிடம் அடங்கிய அந்த தருணத்தை யாரால் மறந்திட முடியும். அந்த உற்சாகம்தான் கங்குலிக்கு சேப்பல் மீது இருந்த மரியாதையை அதிகப்படுத்தியது. அடுத்த பயிற்சியாளராக அவர் வரவேண்டுமென சண்டையிடச் செய்தது. தனது முடிவாலேயே தன் கிரிக்கெட் வாழ்க்கையின் அஸ்தமனத்தை முடிவு செய்யச் செய்தது. இதைப் பற்றி எழுதிய இடத்தில், கங்குலி இந்த வரிகளைச் சாதாரணமாக எழுதியிருப்பார் - ``மொத்த தேசத்தையும் ஆட்கொண்டேன்... அதன் ஒரு குடிமகனைத் தவிர..." ஆனால், அவரை வெறித்தனமாக ரசித்த கிறுக்கர்களால் அதைச் சாதாரணமாக கடந்துவிட முடியாது. காரணம், அந்த வார்த்தை... 3 ஆண்டு போராட்டத்தின் வலி... புறக்கணிப்பின் வலி...!

``சச்சினுக்கு நீ கேப்டனா...? வெக்கமாயில்ல...!" - கங்குலியிடம் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த ஜாம்பவான் யார்...? அடுத்த பாகத்தில்...

https://www.vikatan.com/news/sports/117698-sourav-ganguly-toured-australia-alone-to-plane-for-the-border-gavaskar-trophy.html

  • தொடங்கியவர்

``சச்சினுக்கு நீ கேப்டனா... அசிங்கமாயில்ல...?" ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 3 #ACenturyIsNotEnough

 

 

கங்குலி

"சச்சின் போன்ற வீரர் விளையாடும் அணிக்கு நீ தலைமை தாங்குகிறாயா...? சச்சினுக்கு நீ கேப்டனா...? இது உனக்கு அசிங்கமாயில்லை?" பேட்டிங் செய்துகொண்டிருந்த கங்குலியின் காதுகளில் இந்த வார்த்தைகள் விழுந்தன. அவர் நிற்பது ஆஸ்திரேலியா என்பதை நன்கு உனர்ந்திருந்ததார். பிரெட் லீ வீசும் பந்தின் வேகத்தைவிட வார்த்தைகளின் வேகம் அதிகமாக இருக்கும். பௌலரை எதிர்கொள்வதா, இல்லை ஸ்டம்புகளுக்குப் பின்னால் நிற்பவர்களை எதிர்கொள்வதா என்ற குழப்பம் எப்பேர்பட்ட பேட்ஸ்மேனுக்கும் எழும். கங்குலி - கோபக்கார கிரிக்கெட் வீரராக இன்றும் அறியப்படுபவர், அமைதியாகவே இருந்தார். மேத்யூ ஹெய்டன், ஸ்டீவ் வாஹ் இருவரும் பேசிய வார்த்தைகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. 

ஸ்டுவார்ட் மெக்கில் வீசிய அந்தப் பந்தை ஸ்வீப் செய்துவிட்டு ஓடுகிறார். இரண்டாவது ரன்னை ஓடி முடித்துவிட்டு ஆர்ப்பரிக்கிறார். சதம். ஹெய்டன் கைதட்டி வாழ்த்துகிறார். அவருக்கான பதில் இப்படித்தான் கிடைத்தது. ஆனால், கடைசிப் போட்டி முடிந்ததும், தன்னைப் பழித்த ஸ்டீவ் வாஹ் முன்பு... தன் கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொண்டிருந்த அந்த ஜாம்பவான் முன்பு கோப்பையைத் தூக்கியபோது ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கும் பதில் கிடைத்திருக்கும். 

கங்குலி - சச்சின்

கங்குலி எப்படிப்பட்ட கேப்டன் என்பதை ஸ்டீவ் வாஹ் பின்பு நன்கு உனர்ந்துவிட்டார். ``இந்திய அணி கிரிக்கெட் ஆடிய விதத்தை மாற்றிய முதல் கேப்டன் கங்குலிதான். இன்று இந்திய அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் பெரிய வித்தியாசமில்லை" என்று சமீபத்தில் அவரே கூறினார். இதுதான் கேப்டனாக கங்குலி சாதித்த மிகப்பெரிய விஷயம். கேப்டனாக நியமிக்கப்பட்ட அந்தத் தருணம், அவர் கண்ட கனவு இதுதான். ஆம், இந்திய அணி கேப்டனாகப் பதவியேற்றதும் அவர் லட்சியமாக நினைத்தது.

'கேப்டன் பதவியை நான் வேறு மாதிரி அணுகினேன். பயமறியாது ஆக்ரோஷமாகச் செயல்படவேண்டும் என்று முடிவெடுத்தேன். இந்த அணிக்குப் புதிய அடையாளம் கொடுக்கவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்தேன். நான் செய்யவேண்டும் என நினைத்தது இரண்டு விஷயங்கள். வெளிநாட்டுத் தொடர்களில் வெற்றிபெற வேண்டும். அடுத்து, இந்திய அணியின் பாடி லேங்குவேஜை மாற்ற வேண்டும். இந்த இரண்டு விஷயமும் மாறினால், இந்தியாவுக்கான அடையாளம் மாறும் என்பதில் நம்பிக்கையாக இருந்தேன்' என்று புத்தகத்தில் கூறியுள்ளார் கங்குலி. 

ஆனால், கங்குலி கேப்டனாகப் பதவியேற்ற தருணம் சாதாரணமானது அல்ல. கிரிக்கெட் உலகே அசாதாரண சூழலில்தான் இயங்கிக் கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் சூதாட்டப் புகார்கள். இப்படியொரு தருணத்தில் அத்தனை வீரர்களும் மனம் தளர்ந்திருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் வீரர்களை ஒன்றிணைத்து, அவர்களின் அணுகுமுறையை மாற்றி, வெற்றிகளின் பின்னால் பயணிக்க வைப்பதென்பது... அப்பப்பா சாதாரண விஷயமல்ல. 'கடினமான சூழ்நிலைகளிலிருந்துதான் கதாநாயகர்கள் உருவாகிறார்கள்' என்கிறார் கங்குலி. ஆம், அதுதானே இத்தனை ஆண்டுகள் கழித்தும் அவரைப் பற்றிப் பேசவைத்திருக்கிறது.

கங்குலி

புத்தகத்தின் இந்தப் பகுதியை எதிர்பார்ப்போடு படிக்கும்போது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. சூதாட்டத்தைப் பற்றிப் பேசிய கங்குலி, அதன் முழு தாக்கத்தைப் பற்றியும் எழுதவில்லை. 'அணி வீரர்கள் அந்தப் பிரச்னையால் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒரு சில வீரர்களை அழைத்து தரகர்கள் தொடர்புகொண்டார்களா எனக் கேட்டேன். அப்படி எதுவும் நிகழாதது நிம்மதியாக இருந்தது. இந்தப் பிரச்னைகள் நடந்துகொண்டிருந்ததால் இளம் வீரர்களுக்கு சூதாட்டத்தின் சிக்கல்கள் புரிந்தன' என்ற வகையில் நிறுத்திக்கொண்டார். அன்றைய பயிற்சியாளர் கபில் தேவ் இந்தப் பிரச்னையினால் தவித்தது தனக்கு வருத்தமளித்ததாகவும் குறிப்பிட்டுள்ள கங்குலி, அப்போது அவர்களுக்கு இடையே உரையாடல்கள் ஏதேனும் நிகழ்ந்ததா என்பது பற்றிக் குறிப்பிடவில்லை. 

கபில்தேவ் ராஜினாமா செய்வதாக முடிவெடுத்தபோது கங்குலி இந்தியாவில் இல்லை. டிராவிட், கங்குலி இருவரும் இங்கிலாந்தில் கவுன்ட்டி கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். 'யூ டியூப் - இன்டர்னெட் தலைமுறைக்கு முந்தைய காலம் என்பதால், தகவல் தாமதாகவே தெரிந்தது' என்று குறிப்பிட்டுள்ள கங்குலி, சற்றும் தாமதிக்காமல் தன் துணைக் கேப்டனிடம் ஆலோசனை செய்துள்ளார். அப்போது டிராவிட் விளையாடிவந்த 'கென்ட்' அணியின் பயிற்சியாளராக இருந்தார் ஜான் ரைட். அவரை டிராவிட், கங்குலியிடம் அறிமுகம் செய்து வைக்க, தாதாவுக்கு ரைட்டைப் பிடித்துப்போனது. உடனே ஓகே சொல்லிவிட்டார். காரணம் டிராவிட் மீது அவருக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. தன் முதல் தேர்வுக்குழுக் கூட்டத்தில் ''உங்களுடைய துணைக் கேப்டனாக யாரை நியமிக்கலாம்" என்று கேட்டதற்கு, துளியும் யோசிக்காமல், ''டிராவிட்" என்று சொல்லியவரல்லவா. இப்போதும் அந்த நம்பிக்கை நீடித்தது. 

கங்குலி - தோனி

வெறுமனே அணியை வழிநடத்துவதோடு அல்லாமல், இளம் திறமைகளைக் கண்டறிவதில் மிகவும் ஆர்வம் கொண்டார். யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், சேவாக் எனப் பலரை அவர் அடையாளம் கண்டதை உலகறியும். அவர்களை அணியில் அறிமுகமாக்கியதைப் பற்றியும் இந்தப் புத்தகத்தில் கங்குலி பேசியுள்ளார். மேலும், 'மஹேந்திர சிங் தோனியை எனக்கு முதல் நாளில் இருந்தே பிடித்துவிட்டது. இந்திய அணிக்கு முக்கியமான மேட்ச் வின்னராக அவர் வருவார் என்று நினைத்தேன். எனது கணிப்பு தவறவில்லை' என்று எழுதியுள்ள கங்குலி, அந்த இடத்தில் தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். 

'2003 உலகக்கோப்பைத் தொடரில் தோனி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்... அந்தச் சமயம் அவர் இந்திய ரெயில்வேயில் டிக்கெட் விற்றுக்கொண்டிருந்தார் எனக் கேள்விப்பட்டு திடுக்கிட்டேன்' என்று கூறும் அவரது வார்த்தையில் பலத்த ஏமாற்றம். ஆம், ஓர் இடத்தில், உலகக்கோப்பையை வாங்காதது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்ததென்றும் அவர் குறிப்பிடுகிறார். ஒருவேளை அவர் நினைத்ததுபோல் தோனி இருந்திருந்தால், அது இந்திய அணிக்குச் சாதகமாக இருந்திருக்குமோ என்னவோ!

கங்குலி - கும்பிளே

அதேபோல், ஹர்பஜன் சிங் பற்றி தேர்வாளர் ஒருவர் கங்குலியிடம் கூறினாராம். அதுவரை ஹர்பஜன் பற்றி கங்குலி அறிந்திருக்கவில்லை. பாஜியை இந்திய அணி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த இடத்துக்கு வரச் செய்திருக்கிறார். அவர் வந்ததும், கும்பிளேவிடம் அவரை ஒப்படைத்துவிட்டாராம். அன்று ஹர்பஜனின் எதிர்காலத்தை கும்பிளேவின் கையில் ஒப்படைத்த அந்த மனிதன், சில ஆண்டுகளுக்குப் பிறகு அதே கும்பிளேவுக்குப் போன் செய்கிறார் - "உங்களுடைய பிளேயிங் லெவனில் நான் ஆட்டோமேடிக் சாய்ஸ் இல்லையா...?" 

 

ஆம், அந்த 3 ஆண்டுகளில் எத்தனையோ நிகழ்ந்துவிட்டன. சூதாட்டச் சிக்கலுக்குப் பிறகு இந்தியக் கிரிக்கெட்டின் கறுப்புக் காலம் அதுதான். இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பை இளைஞர்கள் கொண்டு வடிவமைத்தவரின் முதுகெலும்பை உடைத்து அனுப்பியது காலம். அது நாளை...

https://www.vikatan.com/news/sports/117819-sourav-gangulys-days-as-captain.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.