Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தது நீ தானா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்தது நீ தானா …-சிறுகதை

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%
 

விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில்  இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட  அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி  கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்கு என்பதைப்போல இளையராஜா  வாரிசுகளால் இசையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லையென்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே டிக் , டிக், டிக் படத்திலிருந்து “ஓ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே” பாடல் ஒலிக்கத் தொடங்கியிருந்தது. கண்ணைத் திறந்து பார்க்காமலேயே மனத்திரையில் சவுக்குத் தோப்பில் கமலும் அவர் பின்னல் மாதவி நீச்சலுடையில்  ஓடிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் திடீரென எனக்கு அவனின் நினைவு மீண்டும்  மூளை மடிப்புக்களிலிருந்து சிரமப்பட்டு வெளி  வந்தது.

அவன் உருவம் கூட சிகரெட்டின் புகையிலிருந்து கிளம்பும்  வடிவங்களைப்போல மங்கலாக  நினைவில் உள்ளது. எண்பதுகளின் இறுதி நான் தாய்லாந்தில் புக்கெட் நகருக்கு அருகில் தங்கியிருந்த காலம். தங்கியிருந்தது வீடா, குடிசையா என்று பட்டிமன்றமே நடத்தலாம். கீழ் பாதி சீமெந்து. மேல் பாதி மரப்பலகைகள் பொருத்தப்பட்டுக் கூரைக்குத் தகரம் போடப்பட்ட ஒரேயொரு சிறிய அறை. அதற்கு தகரத்தாலான கதவு. முன்னால்  மூன்று பக்கமும் மூங்கில் பாய்களால் மறைக்கப்பட்ட காற்றோட்டமான சிறிய கூடம். இந்தக் குடிசை வீட்டில் ஒரு மின்னடுப்பு சில அலுமினியப் பாத்திரங்களோடு ஆங்கிலம் மூலம் தாய் மொழி கற்றுக்கொள்ளும் புத்தகமும். பெறுமதியான பொருட்கள் என்றால் சிறிய கலர் தொலைக்காட்சியும் வி சி ஆரும் தான். அப்போ தமிழ் சேனல்கள் எல்லாம் இல்லை. எனவே சிங்கப்பூரிலிருந்து தமிழ்ப் பட கசெட்டுக்களை தபாலில் எடுத்து பார்ப்பதுதான் பொழுதுபோக்கு. அதைவிட என்னிடம் ஒரு வாக் மேனும் இருந்தது.

அன்று மதியம்  தனியொருவனுக்காக எப்படி விதம் விதமாக சமைக்க முடியும்? ஒரு வெறுப்போடு “வெந்ததை தின்று வேகின்ற உடல்” என்கிற பட்டினத்தார் பாடலைப்  பாடிய படியே மின் அடுப்பில் கொதிக்கத் தொடங்கிய உலையில் அரிசி, பருப்பு, கீரை, வட்டமாக வெட்டிய காரட் எல்லாவற்றையும் போட்டு அலுமினிய சட்டியின் வாயை மூடி விட்டு பொரிப்பதற்காக பொலிதீன் பையில்  கட்டி வாங்கி வந்த தவளைக் கால்களை, அதன்  பையைப் பிரித்து ஒரு தட்டில் போட்டு கொஞ்சம் உப்பும் மிளகாய் தூளும் பிரட்டி ஊற வைத்து விட்டு, வாங்கி வந்த கூலான பியர் போத்தல் ஒன்றை எடுத்து மூடியை பல்லால் கடித்து திறந்து சில மிடறு  விழுங்கிய போதுதான் அன்றைய கொடும் வெக்கையும் ,சந்தைக்கு  கெந்திக் கெந்தியே நடந்து போய் விட்டு வந்த காயம் பட்ட காலின் வலியும் கொஞ்சம் குறைந்தது போலவிருந்தது. இரண்டாவது சத்திர சிகிச்சையின் பின்னர் உடைந்த எலும்பை தகடுகள் வைத்து பொருத்தி விட்டிருந்தார்கள். வெளிக் காயம் தான் ஆற வேண்டியிருந்தது. அதுக்கு ஒவ்வொரு நாளும் எனக்கு நானே மருந்து கட்டிக் கொள்வதுதான் அன்றாட கடமை. அடுப்பில் குழையல் சோறு வெந்த பின்னர் இரவுக்கு கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு. ஊற வைத்த தவளைக் கால்களை பொரித்து  இன்னொரு பியரையும் குடித்து சாப்பிட்டு விட்டால், பாயை விரித்து சுவரோடு தலைகாணியை அணைத்து  சரிந்திருந்த படியே எப்போதுமே வழைமையாக கேட்கும் வீடியோ காசெட்டை போட்டு விடுவேன். ஊமை விழிகள் படத்தின் தோல்வி நிலையென நினைத்தால் பாடல் போய்க் கொண்டிருக்கும்போது உணர்ச்சி வசப்பட்டாலும், அடுத்து எங்கள் தமிழினம் தூங்குவதோ  என்கிற பாடலின் போது எப்படியும் நித்திரையாகிப் போய் விடுவேன்.

ஆனால் அன்று அடுத்த பாடல் போய் லேசாக கண்கள் செருகிக் கொண்டிருந்த போதே வாசலில் ரகு அண்ணையின் மோட்டர் சைக்கிள் வந்து நின்றது. அருகிலிருந்த பியர் போத்தலை அவசரமாக தலகணைக்கு கீழே மறைத்து விட்டு எழும்பி நின்றேன். கூடவே இன்னொருத்தன். அப்போதுதான் வளர்த்த மீசையை வளிதிருப்பான் என தோன்றியது. கையில் கொண்டு வந்த பையை மார்போடு கட்டியனைத்த படியே வயதுக்கு வந்த பெண்ணைப்போல  ரகு அண்ணனுக்கு பின்னல் நெளிந்த படி நின்றிருந்தான்.

“என்ன அண்ணை  திடீரெண்டு?” என்று கேட்டதும்,

 “ஒண்டுமில்லை இவனுக்கு இங்கை மசாஜ்  பழக்கி அனுப்ப வேணுமாம். இரண்டு நாளைக்கு உன்னோடை வைச்சிரு. பிறகு வந்து கூட்டி போயிடுவன்.” என்றார்.

ஆயுத பயிற்சிக்குதானே உலகம் முழுக்க ஆக்களை அனுப்புவினம். இதென்ன புதிசா மசாஜ் பழக அனுப்பியிருக்கு? தலைவருக்கு ஒரு வேளை நாரிப்பிடிப்பு ஏதும் வந்திருக்குகுமோ? அப்பிடியிருந்தாலும் கேரளா மூலிகை மசாஜ் தானே நல்லது. எதுக்கு தாய்லாந்து? என்று யோசித்தாலும் கேள்வி எதுவும் கேட்க முடியாதே…ரகு அண்ணா போய் விட்டார். ஆனாலும் பையை கட்டிப்பிடித்து நின்றவனிடம்,

 “உன்ரை   பையை ஒருத்தரும் களவெடுக்க மாட்டினம். எங்கையாவது வை”.  என்றுவிட்டு “சாப்பிட்டியா?” என்றேன் . “ம்.. ” என்று தலையை மட்டும் ஆட்டினான்.

நான் சமைத்ததை யாருக்காவது கொடுக்க வேண்டும் என்கிற என்னுடைய பழி வாங்கும் உணர்ச்சி அன்றும் தோல்வியடைத்து போனது. சரி இரண்டு நாளைக்கு இங்கை தானே இருக்கப் போறான் அப்ப பாக்கலாம் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு, எனக்காக அங்கு ஒரு பாய் தலைகாணி  மட்டுமேயிருந்ததால் அவனுக்கு என்னத்தை கொடுக்கலாமென யோசிக்கும் போதே தனது பையை திறந்து ஒரு சாறத்தை எடுத்து உதறி நிலத்தில் விரித்து விட்டு அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியை பார்க்கத் தொடங்கி விட்டிருந்தான்.

இரண்டு நாளில் வருவதாகச் சொன்ன ரகு அண்ணன் மறுநாள் மாலையே வந்து அவனைக்கூட்டிக் கொண்டு போய் விட்டார். அந்த ஒரு நாளில் நானும் அவனும் கதைத்த வார்த்தைகளை எண்ணி விடலாம். எனக்கும் அதிகம் கதைக்கும் பழக்கம் இல்லை. ரகு அண்ணா வரும்போது சில சினிமா பட கசெட்டுக்களையும் கொடுத்துவிட்டுப் போனதால் பொழுதுபோய் விட்டது. சுமார் இரண்டு மாதம் கழித்து மீண்டும் அவனை ரகு அண்ணன் என்னோடு கொண்டு வந்து விட்டு  இன்னொரு பாயும் தலைகாணியும் வாங்கிக் கொடுத்து விட்டே போனார். இந்தத்தடவை நானும் அவனும் சில வார்த்தைகள் அதிகமாகப் பேசியிருப்போம். ஒருநாள் இரவு சாப்பிட்டு விட்டு கமல் நடித்த டிக், டிக், டிக் படத்தை பல தடவை பார்த்து மனப்படமாகிப் போயிருந்தாலும் அதில் மாதவியைப் பார்ப்பதற்காகவே அன்றும் கசெட்டை போட்டு ஓட விட்டேன். அதில் கமல் மசாஜ் செய்துகொள்வதைப்போல ஒரு காட்சி வரும். அப்போ தான் அவனிடம்,

“நீயும் மசாஜ் பழகினனி தானே இப்படியெல்லாம் செய்ய வருமா?” என்று கேட்டதும் கொஞ்சம் யோசித்தவன்,

“உடுப்பு எல்லாத்தையும் கழட்டிப்போட்டு துவாயை கட்டிக்கொண்டு குப்புற படுங்கோ.” என்றவன், சமையலுக்கு வைத்திருந்த தேங்காய் எண்ணையை எடுத்துக் கொண்டு வந்து உள்ளங் கையில் எடுத்த எண்ணையை பாயில் குப்புறப்படுத்திருந்த என் பிடரியிலிருந்து சொட்டு சொட்டாக நடு முள்ளந்தண்டு வழியே வழிய விட்டுக்கொண்டு இடுப்புவரை சென்றவன், கட்டியிருந்த துவாயை சட்டென்று உருவி விட்டு தொடர்ந்தும் கால்களின் இறுதி வரை எண்ணையை பூசி முடித்தான். சட்டென்று துவாயை உருவியெடுத்ததை எதிர்பாக்காத நான் “டேய்”. என்றபடி எழும்ப முயன்றபோது .”அசையக் கூடாது”. என்று அவனது கட்டளை கடுமையாகவே வந்ததால் அப்படியே படுத்து விட்டேன். முள்ளந்தண்டின் ஒவ்வொரு மூட்டுகளிலும் அவனது விரல்கள் விளையாடியதில் என் முதுகிலும் டிக்,டிக், டிக் ..

கால் வரை சென்றவன் இப்போ திரும்பி படுக்கச்சொன்னான். தொடைகளுக்கு நடுவே துவாயால் மறைத்தபடி திரும்பி படுத்துக் கொண்டேன். இப்போ நெற்றியிலிருந்து தொடங்கினான். உடலில் புத்துணர்வு மட்டுமல்ல ஔவையார் சொன்ன பத்தாவது உணர்வும் சேர்ந்தே கிளர்ந்து நின்றது. கற்று வந்த மொத்த வித்தையையும் என்மேல் இறக்கி வைத்து விட்டு குளிக்கப் போய் விட்டான். இன்னொரு தடவை இவன் கையால் மசாஜ் செய்தால் நிச்சயம் நான் ஓரினச்சேர்க்கையாளனாக மாறிவிடுவேன் என்கிற பயம் எழுந்திருந்தது. சில நாட்களிலேயே ரகு அண்ணன் வந்து அவனை கூட்டிப் போய் விட்டார். கடைசி வரை அவன் பெயரை நான் கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் அவன் உண்மை பெயரை சொல்லாமல் வாயில் வந்த ஏதாவதொரு பெயரைத்தான் சொல்லியிருப்பான். அவனும் என் பெயரை கேட்கவேயில்லை. கேட்டிருந்தாலும் இங்கேயும் அதே நிலைமைதான். நானும் சில நாட்களின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு விட்டிருந்ததோடு அவனையும் மறந்து விட்டிருந்தேன் .

00000000000000000000000000000

அந்த நாட்டில் புதிதாக பதவிக்கு வந்திருந்த அரசுத் தலைவருக்கும் அதே நாட்டிலேயே தன் இனத்துக்காகப் புதிதாக அரசமைக்கப் போராடிக்கொண்டிருக்கும் தலைவருக்குமிடையில்  பொது எதிரியை விரட்ட  இரகசியப் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளதாக அறிந்துகொண்டேன். அரசுத் தலைவருக்கும் அரசமைக்கப் போராடிக்கொண்டிருந்த தலைவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தது. இருவருமே சாதியப் படி நிலைகளில் கீழிருந்து வந்தவர்கள். தன் சார்ந்தவர்களுக்கும் தன்னை நம்பியவர்களுக்கும் எது வேண்டுமானாலும் கொடுப்பார்கள். ஆனால் தங்கள் இருப்புக்கோ பதவிக்கோ ஆபத்து என்று நினைத்து விட்டாலே அது யாராக இருந்தாலும்  போட்டுத் தள்ளிவிட்டு போய்க் கொண்டிருக்கும் நபர்கள். இந்த இருவருக்கிடையிலும் தான் பேச்சுவார்த்தை. பேச்சுவார்த்தையைத் தொடங்கும்போதே பொதுப் பிரச்சனையான இனப்பிரச்சனையை தீர்ப்பது என்று பேசிக்கொண்டாலும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ஒருவரை மற்றொருவர் தீர்த்து விடுவது என்பதுதான் அவர்களது திட்டம். ஆனாலும் இருவருக்குமான பொது எதிரிகளை முதலில் முடித்துவிடுவோம், பின்னர் எங்கள் பலத்தை பரிசீலிக்கலாம் என்கிற ரீதியில் பேச்சுக்கள் போய்க்கொண்டிருந்தது .

பிரதி நிதிகளுடனான பல சுற்று பேச்சுக்கள் முடிந்த பின்னர்  நட்சத்திர விடுதியொன்றில் தலைமைச் சிங்கத்தை, தலைமை தாங்கிய சிங்கம் சந்தித்துக் கொண்டது. பேசி முடித்த இறுதியில்,

“நீங்கள் களைத்தது போல உள்ளது. இவன் நல்லதொரு மசாஜ் நிபுணன். நீங்கள் விரும்பினால் இவன் உடல் பிடித்து விடுவான் கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ளுங்கள்.” என்றது தலைமை தாங்கிய சிங்கம். சிறிது யோசித்த தலைமைச் சிங்கம் தனது மெய்ப்பாதுகாவலர்களைப் பார்த்து தலையசைத்து விட்டு அறை ஒன்றில் புகுந்து கொள்ள, அவனைத்  தனியாக அழத்துச் சென்ற பாதுகாவலர்கள் உடல் முழுதும் பரிசோதனை செய்துவிட்டு அந்த அறைக்குள் அனுப்பிக்  கதவைச்  சாத்திவிட்டார்கள். அவர் அதுவாம், சைக்கிள் ஓடுவதில் வல்லுனராம் என ஏற்கனவே அவரைப்பற்றிய கிசு கிசுக்கள் பரவியிருந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே உள்ளூர் அழகியை திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் கிசு கிசுப்புகளுக்கு பஞ்சமிருக்கவில்லை. பக்கத்து அறையிலேயே ஐஸ்கட்டியை கரைத்துக் கொண்டிருந்த விஸ்கியை அருந்தியபடி அணைந்து போகும் சிகரெட்டில் அடுத்த சிகரெட்டை பற்றவைத்த படியே கைக்கடிகாரத்தை பார்த்து பெருமிதத்தோடு புன்னகைத்துக் கொண்டது தலைமை தாங்கிய சிங்கம். அடிக்கடி நட்சத்திர விடுதியில் பேச்சுவார்தைகள் நடந்து கொண்டிருந்தாலும் சுவி மட்டும் தலைவரின் வீட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் போகும் அளவுக்கு நெருக்கம் இறுக்கமாகியிருந்தது.

முன்னைநாள் பாதுகாப்பு அமைச்சர் ,முன்னைநாள் முப்படைத்தளபதி, கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் என ஒரு தரப்பிலும், தனிநாட்டுக்கு வாக்கு கேட்டு பாராளுமன்றம் போன தலைவர், மாற்று அமைப்பு உறுப்பினர்கள் என இந்து சமூத்திரத்தில் மிதக்கும் தீவின் ஆறுகளிலும் குளங்களிலும் பிணம் மிதக்கும் தீவாகிப் போனது. அப்போதுதான் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் டெனிஸ் விளையாடும் நெட்டையான உள்ளூர் அழகியின்  குட்டைப் பாவாடையில் பிட்டம்   தெரியும் படமொன்று வெளியாகியிருந்தது. அதனை அப்படியே வெட்டி நான் வசித்த வீட்டின்  தட்டையான தகர கதவில் ஒட்டியிருந்தேன். சில நாட்களிலேயே அந்த படத்தை எடுத்த பத்திரிகையாளரை காணவில்லை என்கிற செய்தியும் வந்திருந்தது.

௦௦௦௦0000000000000000000000000

நகருக்கு வெளியே இருந்த ரம்புட்டான் காட்டுக்கு நடுவே அமைந்திருந்த ஆடம்பரமான சிறிய பங்களாவுக்குள் அவனை ஏற்றி வந்த கார் நுழைந்தது. சாதாரணமாக வெளியேயிருந்து பார்த்தால் அப்படியொரு பங்களா இருப்பதே தெரியாது. மெய்ப்பாதுகாவலர்களின் உடல் சோதனையை முடித்துக் கொண்டு அரசுத் தலைவரின் அறைக்குள் அவன் நுழைந்திருந்தான். வழக்கத்தை விட அன்று அந்த அறை முழுதும் வெள்ளை மலர்களாலும் தென்னோலை குருத்தினாலான வண்ண வண்ண வடிவங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருக்க நடுவே வெள்ளை வெளேரென்ற கட்டிலில் ஒற்றைத் துணியில்லாமல் உருண்டு திரண்ட கறுத்த உருவம் அவனை,

“வா நண்பா. நண்பா வா. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் யாருமே இல்லை. அனைவரையும் ஒழித்து விட்டேன். என் உள்ளம் உற்சாகமாக உள்ளது. அதைப்போலவே என் உடலையும் உற்சாகப்படுத்து”. என்று  அழைத்தார். அங்கிருந்த குளியலறைக்குள் புகுந்து  ஆடைகள் அனைத்தையும் களைந்து குளித்துவிட்டு வெளியே வந்தவன், அங்கிருந்த குடுவையை கையிலெடுத்தபடி கட்டிலுக்கு அருகே மசாஜ் செய்வதற்காகவே பிரத்தியேகமாக செய்யப் பட்டிருந்த  சிறிய வாங்கில் குப்புறப்படுத்திருந்தவரின் பின்பக்கமாக குடுவையிலிருந்த மூலிகை எண்ணையை வழியவிட்டு தொடங்கிய மசாஜ் ஒரு மணி நேரத்தின் பின்னர் அங்கிருந்த கட்டிலில் முடிவடைந்திருந்தது.

இருவருமே லேசாகக் களைத்துப்போயிருந்தனர். கட்டிலில் இருந்து எழும்பியவன் குளியலறைக்குள் சென்று ஆடைகளை அணிந்துகொண்டு வெளிய வந்தபோது, இடுப்பில் ஒரு துண்டை  மட்டும் கட்டிக்கொண்டு நின்றிருந்தவர் திடீரென அவன் முன்னால் வந்து நின்று கையில் இரண்டாக மடிக்கப் பட்ட வெற்றிலையில் இருந்த  மோதிரத்தை எடுத்து அவன் இடதுகை விரலில் மாட்டிவிட்டு, “இனிமேல் நீ என்னை முதலாளி என்று அழைக்கக் கூடாது. நண்பன் என்றே அழைக்கலாம்.” என்றதும், அவரின் செய்கை எவ்வித உணர்வுகளையும் கொடுத்ததாக அவன் முகத்தில் தெரியவில்லை. லேசாகச் சிரித்தவன், விரலில் இருந்த மோதிரத்தை தடவிப் பார்த்தபடியே “உங்களை நண்பன் என்று அழைக்க மனம் வரவில்லை முதலாளி என்றே அழைக்கிறேன். அது மட்டுமல்ல விரைவில் நானும் உங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கவிருக்கிறேன்”. என்றபடியே அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டான்.

௦௦௦௦௦00000000000000000000000

இப்போதெல்லாம் முதலாளிகளும் அரசியல் கட்சி தலைவர்களும் கொண்டாடும் நாளாகிவிட்ட மேதினக் கொண்டாட்டத்தை நடத்த அரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தது  மட்டுமல்லாமல் ஊர்வலத்துக்கு  அவரே தலைமையும் தாங்கினார். வழியெங்கும் காவல்துறையின் பாதுகாப்போடு தலைவர் முன்னால் நடந்துவர, தொண்டர்களில் “தலைவன் வாழ்க” கோசம் நகரையே அதிர வைத்தபடி அந்த ஊர்வலம் பிரதான சந்தியை அண்மித்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த காவல் நிலையத்துக்கு முன்னாலேயே அவரின் தொண்டர்கள் சிலர் சுருட்டியிருந்த கோர்வை பட்டாசுகளை வீதியில் பரப்பத் தொடங்கினார்கள். அப்போதான் எதிர்த்திசையில் சைக்கிளில் வந்துகொண்டிருந்தவனைப் பாதுகாப்பு கடமையிலிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே அதனைக் கவனித்த தலைவரோ, “அவன் எனது நண்பன். அவனை விடுங்கள்.” என்றதும், சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு அவரை நோக்கி சென்றவன், “முதலாளி நான் சொன்ன பரிசை உங்களுக்கு இப்போ தரப் போகிறேன்” என்றபடியே இறுக்கி அணைத்தபோது வீதியில் பரப்பி முடித்த பட்டாசுகளில் ஒருவன் நெருப்பை வைத்தான். பட பட வென்ற பட்டாசு சத்தங்களோடு டமாரென்ற பெரும் சத்தம்…. அவன் உடலில் கட்டியிருந்த குண்டு வெடிக்க தசைத் துண்டுகள் எங்கும் சிதறியது.

அதுவரை அனைவரும் வாழ்த்திய தலைவனும் வாழ்த்திய தொண்டர்கள் பலரும் உடல் சிதறி இறந்துபோய்க் கிடந்தார்கள். மிகுதிப்பேர்  ஒரு தடவை வெடித்த குண்டு மறுபடி வெடிக்காது என்பதைக்கூட யோசிக்காமல் பயத்தில் எங்கு ஓடுவது என்று தெரியாமலே ஓடிக்கொண்டிருந்தார்கள் .

௦௦௦௦௦0000000000000000000000000

இப்போதெல்லாம்  breaking news க்கு நடுவே பிரதான செய்திகள் சொல்லிப் பழகிவிட்ட தமிழ் ஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில் ஹாங் ஹாங் விமான நிலையத்தில் ஒரு விமானத்துக்காக காத்திருக்கும் மண்டபத்தில் சி என் என் தொலைக் காட்சி செய்திகளை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது திடிரென போடப்பட்ட  “breaking news”அந்த நாட்டின் அரசுத் தலைவர் தற்கொலை குண்டு தாரியால் கொல்லப்பட்டுள்ளார். தற்கொலை குண்டுதாரியின் பெயர் சுவி  என அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்” .என்று ஒரு புகைப் படத்தையும் காட்டினார்கள் . “அட செய்தது நீ தானா” என்று மனதில் நினைத்தபடியே அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டேன் ..

சாத்திரி -பிரான்ஸ்

%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0% 

http://www.naduweb.net/?p=6909

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.