Jump to content

கனவுக் கன்னி


Recommended Posts

பதியப்பட்டது

கனவுக் கன்னி

 

 
kadhir2

'கனவுக்கன்னி' என்ற வார்த்தை எப்போது தமிழில் அறிமுகமாகியிருக்கும்? நிச்சயம் அது தனித் தமிழ் வார்த்தை கிடையாது.
எல்லோருக்குமே தான் நேசிக்கும் நடிகைகள் கனவில் வந்து விடுகிறார்களா என்ன? எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு நாள் நடிகை கஜோல் என்னுடைய கனவில் வந்து ஆச்சரியம் தந்தார். 
கஜோலை எனக்கு அவ்வளவு பிடிக்கும். இப்போது அவர் கொஞ்சம் குண்டாகி விட்டார்.
என் கனவில் ரொம்பவே ஒல்லியாக, கௌபாய் உடை அணிந்து, தற்காப்பு வித்தைகளை எனக்கு செய்து காட்டினார். கௌபாய் உடை என்றாலும் அந்தத் தொப்பியை அவர் அணிந்திருக்கவில்லை.
கராத்தே ஸ்டெப்சுகளை செய்து காட்டி விட்டு, என்னைத் தாக்க வரும் போது, நான் திருப்பித் தாக்குவது போல பாவனை செய்தால், காதலனைப் பார்த்து வெட்கப்பட்டு ஓடும் நங்கையைப் போல ஓடினார். அவரது வீரம், வெட்கமாக மாறி விடும்.
இப்படி நான்கைந்து முறை என்னைத் தாக்க வந்து, வெட்கமுற்றார் கஜோல்.
இதுதான் அந்தக் கனவு. 
"கனவுக்கன்னி' என்ற வார்த்தைக்கு பொருத்தமான கனவுதான் இது. இருந்தாலும் என்னுடைய நிஜ வாழ்க்கையில் நடிகை கஜோல் பெரும் புயலைக் கிளப்பி, என் இல்லற வாழ்க்கையின் வில்லியாக மாறியிருந்தார். 
மருத்துவம்தான் தொழில் என்றாலும் இசை மீது எனக்கு கொள்ளைப் பிரியம். அதுவும் இசைப் புயல் ரஹ்மானின் பாடல்கள் என்றால், சாப்பாடு கூட என் வயிறு கேட்காது. 
ரஹ்மானின் இந்திப் பாடல்களைக் கூட பொருள் புரியாவிட்டாலும், அனாயசமாக மந்திரத்தைப் போல உச்சாடனம் செய்வேன். ஆனால் சினிமா பார்ப்பதில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. 
கல்லூரி நாட்களின் போது வெளியான, "மின்சாரக் கனவு' திரைப்படத்தின் பாடல்கள் என்னை ஒரு மந்திர சக்தி போல மயக்கி வைத்திருந்தது. உச்சாடனம்... உச்சாடனம்... எப்போதுமே, வெண்ணிலவே... வெண்ணிலவே... பாடல் வரிகளே! 
இசை உலகில் இதுவரை வந்த பாடல்களில் அதுதான் சிறந்த பாடல். அது மட்டுமே சிறந்த பாடல். இனி அந்தப் பாட்டின் இசைக் கோவையைப் போல யாரும் மீட்ட முடியாது என்ற அளவுக்கு புளகாங்கிதம் அடைந்து மனதில் தீர்மானம் இயற்றி இருந்தேன். 
ஒருமுறை, தொலைக்காட்சியில் அந்தப் பாடலைப் பார்க்கும் பேறு பெற்றேன். 
என் ரசனை உணர்வே, அன்று தலைகீழாக மாறியது என்றுதான் சொல்ல வேண்டும். 
பாவாடை, தாவணி, கொஞ்சம் கறுப்பு மேனி - இதுதான் "அழகு' என்று கணித்து வைத்திருந்த என் இளமைப் பருவ ஆராய்ச்சி முடிவுகளை, சுக்கு நூறாக உடைத்து நொறுக்கினார் கஜோல். 
அந்தப் பாடலைப் பார்க்கப் பார்க்க, கஜோலின் நடனத்தை ரசிக்க ரசிக்க, உலகமே என் கால்களுக்கு கீழே நழுவிச் செல்வதைப் போல உணர்ந்தேன். 
அழகியலைப் பற்றிய புரிதலில் பெரிய மாற்றம் என் உள்ளத்தில் ஏற்பட்டது. வட இந்தியப் பெண்களே கொள்ளை அழகிகள் எனப் பிதற்றித் திரிந்தேன். 
வட இந்தியப் பெண்களின் அழகு மயக்கம், பாட்டியின் முயற்சியால் தெளிந்தது. 
""மதி, உன் அத்தை மகளை உனக்கு பேசி முடிக்கலாமா?'' ஒரு நாள் பாட்டி கேட்டாள். 
நான் திடுக்கிட்டேன். எந்த அத்தை, எந்த மகள்? 
அத்தைகளுக்கும் முறைப் பெண்களுக்கும் எனக்கு பஞ்சமில்லை. 
என் வலது கன்னத்தில் இருக்கும் மச்சங்களெல்லாம், சிறு வயதில் அத்தை மகள்கள் கொடுத்த முத்தங்கள்தான் என்று கிளுகிளுப்பாக சொல்லித் திரிந்த காலம் ஒன்று உண்டு. 
அவ்வளவு கன்னத்து மச்சங்களும், அத்தை மகள்களும் இருந்தாலும்,
இப்போது கஜோல் மட்டுமே என் நினைவில்... 

 

ஒரு வழியாக வளர்மதி என் வாழ்க்கைத் துணையாகினாள். அவள் கஜோல் அளவுக்கு இல்லையென்றாலும், கஜோலின் தங்கை என்று சொல்லிக் கொள்ளுமளவுக்கு அழகிதான். 
கஜோல் மீதான என் ஈர்ப்பு பற்றி, வளர்மதியிடம் கொஞ்சம் அதிகமாகவே சொல்லியிருப்பாள் போல பாட்டி. முதலிரவு - அதனைத் தொடர்ந்து ஒரு வாரம் வரை அசடாக காட்சியளித்த வளர்மதி, அதன் பின்பு அசல் பெண்ணைப் போல மாறினாள். 
அந்த மாற்றத்தை லதா அத்தை வீட்டில்தான் பார்த்தேன். 
விருந்துக்கு சென்றிருந்த போது, அருகில் வந்து அமர்ந்த லதா அத்தையின் மகள் கனிமொழி, ""மாமா, பெர்ஃபெக்ட் மேட்ச்'' என்றாள் மகிழ்ச்சி பொங்க...
""என்ன?'' 
அவளின் பேச்சை விரும்பாதவளாய் கேட்டாள் வளர்மதி.
""இல்ல, நீ மாமாவுக்கு சரியான ஜோடின்னு சொன்னேன்''
வளர்மதியும் கனிமொழியும் ஒரே வயதுதான் என்றாலும், இவளைவிட தான் முந்தி விட்டேன் என்பது போல என்னைப் பார்த்து புருவத்தை உயர்த்தினாள் வளர்மதி.
""ஏங்க, இதுக்கு முன்னாடி யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா?''
கனிமொழி உள்ளே சென்ற நேரம் பார்த்து கேட்டு வைத்தாள். 
வளர்மதியை அசல் பெண்ணாக உணர்ந்த அந்த தருணத்தில், நானும் என் சேட்டையை ஆரம்பித்தேன்.
""ஆமா, கனிமொழி மேல எனக்கு விருப்பம் இருந்திச்சி. ஆனா, இவள லவ் பண்ணல''
""அப்ப, யார?'' முறைத்தாள்.
நான் பயந்து விட்டேன். கனிமொழியிடம் இதைக் கேட்டு விடுவாளோ?
""எங்க... எங்களுக்குத்தான் கொடுத்து வைக்கல. நீ அதிர்ஷ்டக்காரிதான்...''
லதா அத்தை எதார்த்தமாக சொல்லிக் கொண்டு அருகில் வந்தார். அவர் வந்தது எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. பேச்சு வேறு திசையில் திரும்பியது. 
இத்தோடு வளர்மதியின் புலனாய்வு தீவிரமானது. நான் யாரைக் காதலித்தேன் என்பதை அறிந்து கொள்ள எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டாள். அது எதுவும் எனக்கு தெரியவில்லை. 
""மதி, எனக்கு அடையாறு ரெட் பஸ் ஹாஸ்பிடல்ல வேலை கிடைச்சிருக்கு''
அவள் பெயரைச் சுருக்கி, எல்லோரும் என்னை அழைக்கும் பெயரால், அவளை நான் அழைத்தேன்.
""ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. ஆனா பயமா இருக்குங்க'' 
""பயமா?'' என் முகம் விகாரமானது.
""இல்ல, நீங்க நல்லவருதான்... ஆனா, அங்க நிறைய லேடி டாக்டருங்க, நர்ஸýங்க ஒர்க் பண்ணுவாங்க. அதான்...''இழுத்தாள். 
நான் எதுவும் பதில் சொல்லவில்லை.
புதிய வேலை. புதுப் புது அனுபவங்களை தினந்தோறும் வளர்மதியிடம் இரவில் பகிர்ந்து கொண்டேன்.
அதில் ஒரு நாள் பிரியாவைப் பற்றியும் சொன்னேன்.
என்னுடன் பணிபுரியும் பிரியாவின், மருத்துவ பராக்கிரமங்களை பல முறை வியந்து பாராட்டி இருக்கிறேன்.
நாளுக்கு நாள் பிரியா புராணம் அதிகரிக்க அதிகரிக்க, வளர்மதிக்கு சந்தேகம் துளிர்த்தது. 
பிரியாவை நான் காதலிப்பதாக கற்பனை செய்து கொண்ட வளர்மதி, என்னிடம் தேவை இல்லாததற்கெல்லாம் சண்டை போடத் தொடங்கினாள்.
அப்போது எனக்கு இருந்த ஒரே ஆறுதல் ரஹ்மானின் இசைதான். "உயிரே' படத்தின் பாடல்கள் அனைத்தும் அப்போது செம்ம ஹிட்.
ஆனாலும் நான், "வெண்ணிலவே, வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா' என அதிலிருந்து வெளியே வராமலேயே இருந்தேன்.
அன்று மருத்துவமனை ஆய்வக ஊழியரின் போன், "வெண்ணிலவே, வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா' பாடலை இன்னிசைத்தது.
அந்த ரிங் டோனை அனுப்பச் சொல்லி அவரிடம் கேட்டேன். கேட்டேன் என்பதைவிட கெஞ்சும் தொனியில் கேட்டுக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கோ ஆச்சரியம். 
""சாருக்கு, அந்த ரிங் டோன நான்தான் மெúஸஜில் அனுப்பினேன்'' மருத்துவமனை முழுவதும் அதைச் சொல்லித் திரிந்தார். 
யார் எனக்கு போன் பண்ணினாலும், எனக்குப் பிடித்த இசையில் என் போன் இப்போது ஒலித்தது.
மகிழ்ச்சியாக இருந்த நான், அன்றிரவு வீட்டில் பிரியா புராணம் பாடவில்லை. வளர்மதிக்கு ஆச்சரியம். 
ரஹ்மானின் இசை, ரிங் டோன் இப்படியே பேசி தூங்கிப் போனேன்.
காலையில், வளர்மதி என் போனை ஆய்வு செய்திருப்பாள் போல...
பிரியாவுடன் என் காதல் வலுத்து விட்டதாக அவள் உறுதியாக நம்பினாள். அதற்கு ஆதாரம் கிடைத்து விட்டது போலவும் என்னுடன் சண்டை பிடித்தாள்.
அந்த மருத்துவமனையில் இருந்து விலகி, அதை விட கொஞ்சம் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு சேர்ந்திருந்தாள் பிரியா.
இந்த தகவலை வளர்மதியிடம் சொன்னேன். அவளின் மகிழ்ச்சிக்கு அளவில்லை.
அந்த மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக நான் ஒரு காரியம் செய்தேன்.
பிரியா வேலைக்கு சேர்ந்த அதே மருத்துவமனையில் வேலைக்கு சேர நானும் முயன்றேன். வருமானத்தைக் கணக்கில் கொண்டு நான் இந்த முடிவை எடுத்தேன். வேலையும் கிடைத்தது.
ஆனால், வளர்மதியிடம் எப்படி இதனைச் சொல்வது? 
வேறு வழி கிடையாது. சொன்னேன். மீண்டும் வேதாளம் சந்தேகம் மரம் ஏறியது. 

ஒரு சில மாதங்களில், நகரிலேயே மிகப் பிரபலமான மருத்துவமனையில் பிரியா வேலைக்குச் சேர்ந்தாள். ஒரு சில நாட்களில் எனக்கும் அங்கேயே வேலை வாங்கித் தந்தாள்.
நல்ல வருமானம்தான் என்றாலும், வளர்மதிக்கு குழப்பம்.
""உங்களுக்கு எப்படி அங்க, வேலை கிடைச்சது? நீங்க ட்ரை பண்றத பத்தி ஒண்ணுமே சொல்லலியே''
நான் எதையும் மறைக்க விரும்பவில்லை.
""பிரியா இப்ப அங்கதான் வேலை செய்யுறா... அவதான் எனக்கும் ஏற்பாடு செஞ்சா?''
""அப்ப அங்க போக வேணாம்''
""ஏன்?''
""வேணாம்னா வேணாம்''
""அதான் ஏன்? அங்க பிரியா வேலை பார்க்குறதுனாலயா...''
""ஆமாம்... அவ உங்களுக்கு பொண்டாட்டியா, இல்ல... நானா?''
""நீயே சொல்லு''
நானும் விடாமல் மல்லுக்கட்டினேன்.
""அவ எங்கெல்லாம் போறாளோ, நீங்களும் பின்னாடியே போறீங்க''
""அசிங்கமா பேசாத''
""உங்க அசிங்கம் எனக்குத் தெரியாதா?''
""என்ன தெரியும் உனக்கு?''
""நீங்க முதன்முதலா வேலைக்கு சேர்ந்தீங்களே...அங்கேயே நீங்க பிரியாவ லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க''
""லூசா நீ... அவ தங்கச்சி மாதிரி''
""தங்கச்சி மாதிரியா... ஏன் நடிக்கிறீங்க?'' நமட்டு சிரிப்பு சிரித்தாள்.
""மதி...சொல்றத நம்பு''
""எத நம்பச் சொல்றீங்க...டழ்ண்ஹ்ஹ ச்ஹப்ப் ண்ய் கர்ஸ்ங்-ன்னு மெúஸஜ் வந்தத எப்படி நம்புறதாம்?''
""என்ன மெúஸஜ்?''
""திரும்ப திரும்ப எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க'' 
நான் சண்டையை நீட்டிக்க விரும்பவில்லை. அமைதியானேன். என்ன மெúஸஜ் என்ற சிந்தனையிலேயே உறங்கி விட்டேன்.
நான் அமைதியானது அவளுக்கு அர்த்தப்பூர்வமானதாக மாறியது. நான் தவறு செய்து விட்டதை ஒப்புக் கொண்டது போல என் அமைதியை வளர்மதி புரிந்து கொண்டாள்.

அடுத்த நாள் காலையில் ஏதோ நினைவு வந்தவனாக, வளர்மதியை சமாதானப்படுத்தினேன்.
""மதி, அந்த மெúஸஜ், ஒரு ரிங் டோன்-மா''
அசூசையாக என்னைப் பார்த்தாள்.
""மின்சார கனவு படத்துல வருமே, வெண்ணிலவே வெண்ணிலவே அந்தப் பாட்டோட ரிங் டோன் மெúஸஜ்தான், அது... மதி...''
""ரிங் டோனா...டழ்ண்ஹ்ஹ ச்ஹப்ப் ண்ய் கர்ஸ்ங்-ன்னு ஒரு ரிங் டோனா?'' எகத்தாளமாகப் பார்த்தாள்.
அவள் கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.
""டழ்ண்ஹ்ஹ ச்ஹப்ப் ண்ய் கர்ஸ்ங்-ன்னு எப்ப, என்ன மெúஸஜ் வந்தது?'' 
எனக்கு பிடிபடவே இல்லை. 
நாட்கள் ஓடியது. வளர்மதியின் சந்தேகம் தீரவே இல்லை. 
2ஜிலாம் மாறி 4ஜி அளவுக்கு வளர்ந்து விட்டது. நஙநலாம் காலாவதியாகி விட்டது. ஆப்பிள் போன், கர்வ்ட் சாம்சங் டிவி இத்யாதி இத்யாதி... என் வருமானம் அதிகரித்திருந்தது. கூடவே வசதிகளும்... அத்தனையையும் அனுபவித்தாள் வளர்மதி. சந்தேகத்தையும் சேர்த்து... 
மகிழ்ச்சியின்றி, வாழப் பிடிக்காமல் என் வாழ்நாட்கள் நகர்ந்தன. 
அன்றொரு நாள் விடுமுறையில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். வளர்மதியும் அத்தையும் படத்தைப் பார்த்துக் கொண்டே சமையல் வேலைகளில் மும்முரமாக இருந்தனர். 
"மின்சார கனவு' படம் ஓடிக் கொண்டிருந்தது. இன்றைக்காவது இந்தப் படத்தை முழுவதுமாக பார்த்து விட வேண்டும் என முடிவு செய்தேன்.
கஜோலை - கனவுக்கன்னியைப் பார்ப்பது எனக்கு உற்சாகத்தையும், துக்கத்திலிருந்து வெளியேற சந்தர்ப்பம் தருவதாகவும் அமைந்தது.
அமைதியாக படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
""தாமஸ் அழகா இருக்கான்ல''
""தேவா வந்த பின்னாடிதான் படம் சூடு பிடிக்குது''
அந்தப் படத்தில் வரும் கேரக்டர்களின் பெயரைக் குறிப்பிட்டு நடிப்பைப் பாராட்டிக் கொண்டிருந்தார் அத்தை. சீரியல்களின் கதாபாத்திரம் பெண்களின் உளவியலில் ஏற்படுத்திய தாக்கத்தை உணர முடிந்தது.
நடிகர்களின் பெயர் தெரிந்திருந்தாலும் அந்தக் கதாபாத்திரங்களாகவே அவர்களைப் பார்த்தார்கள்.
"வெண்ணிலவே... வெண்ணிலவே... விண்ணைத் தாண்டி வருவாயா...'
பாடல் காட்சி வந்தது. யானையைக் கண்ட சிறுவன் போல, கண்கள் விரிய, பாடல் காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.
வாய் பிளக்காத குறையாக பாடலை ரசித்துக் கொண்டிருப்பதை எகத்தாளமாக பார்த்தாள் வளர்மதி. அவளின் பார்வையை நான் கவனித்து விட்டேன்.
பாடல் முடிந்து, கொசு வலை போர்த்திய கட்டிலில் படுத்திருக்கும் கஜோல், அருகிலிருக்கும் பொம்மையை பார்ப்பார். ஆணும் பெண்ணும் திருமண உடையிலிருக்கும் அந்த பொம்மை ஆடுவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். கஜோல் காதல் உணர்வின் உச்சத்திலிருப்பார். பின்னணியில், "வெண்ணிலவே வெண்ணிலவே' பாடலின் இசைக் கோவை ஒலிக்கும்.
""சன்னியாசியா போறேன்னு சொன்ன பிரியாவுக்கு இப்ப லவ் வந்திடுச்சி'' அத்தை திரைக் காட்சிகளை விளக்கினார்.
""டழ்ண்ஹ்ஹ ச்ஹப்ப் ண்ய் கர்ஸ்ங் அத்த'' நான் எதார்த்தமாக சொன்னேன்.
அப்போது, தீயால் சுட்ட கணத்தை உணர்ந்தவர்கள் போல நானும் வளர்மதியும் பார்த்துக் கொண்டோம்.
""ஓஹோ அந்தப் பிரியாதானா, இந்தப் பிரியா'' வளர்மதி ஆச்சரியமாக கேட்டாள். 
கண்களை அகல விரித்து கன்னங்களைக் குவித்து அப்பாவியாகப் பார்த்தேன்.
வளர்மதி உள்ளே சென்ற கொஞ்ச நேரத்தில், போனில் "வெண்ணிலவே வெண்ணிலவே' பாடல் ஒலித்தது. அறையில் இருந்த என் போனை எடுக்க எழுந்தேன். அவளது போனில் அவள் பேசிக் கொண்டே என்னைப் பார்த்து கண் சிமிட்டியவளாக வந்தாள். அவளும் அந்த ரிங் டோனுக்கு அடிமையாக, வளர்மதிக்கும் கஜோலே கனவுக்கன்னியாகி விட்டாள்.

http://www.dinamani.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட இந்தக் கதைதான் என்னையே எனக்கு உணர்த்தி விட்டிருக்கு......இனி நானும் "அலெட்ரா" ஸ்ரேயாவின் ரிங்டோனில் இருந்து வேறொன்றுக்கு மாறவேண்டும்......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.