Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ; நாளை ஆரம்பம் : அச்சுறுத்தலாக அமையும் காலநிலை

Featured Replies

கோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ; நாளை ஆரம்பம் : அச்சுறுத்தலாக அமையும் காலநிலை

 

கடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெற்றுவரும் கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் கோல்கோஸ்ட் நகரில் ஆரம்பமாகின்றது.

gold-coost.jpg

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து இந்த கொமன்வெல்த் விளையாட்டு போட்டி இடம்பெற்று வருகின்றது.

இம்முறை பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் (கொமன்வெல்த் விளையாட்டு) 6, 600 வீர வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர்.

இம்முறை நடைபெறவுள்ள போட்டிகளில் ஆண் பெண் இருபாலாருக்கும் சரிசமமான தங்கப்பதக்கங்கள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான கொமன்வெல்த் விளையாட்டுப்போட்டி அவுஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் நாளை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.

 

இம்முறை 21 ஆவது தடவையாக இடம்பெறும் கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 19 விளையாட்டுகளில் 275 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

பெண்கள் ரக்பி, பீச் வொலிபோல் ஆகிய போட்டிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. இதில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பங்காளதேஷ், பாகிஸ்தான், ஜமைக்கா, நைஜீரியா, கனடா, ஸ்கொட்லாந்து, தென்னாபிரிக்கா, மலேசியா, இலங்கை உட்பட 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர்.

இதில் போட்டியை நடத்தும் அவுஸ்திரேலியா அதிகபட்சமாக 474 வீரர்-வீராங்கனைகளை களம் இறக்குகிறது. இந்த போட்டியை பொறுத்தமட்டில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளே பெரும்பாலும் பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப்பிடித்து வருகின்றன. 

 

வரலாற்றில் முதன்முறையாக

வரலாற்றில் முதன்முறையாக விளையாட்டுப் போட்டிகளில் ஆண் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் சமமான பதக்கங்களை வழங்கும் முறையை கோல்ட் கோஸ்ட் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுவரை காலமும் ஆண்கள் பிரிவுகளிலேயே அதிகளவான தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இம்முறை சரிக்கு சமமாக இந்த பதக்க எண்ணிக்கை போட்டிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டித் தொடரிலும்கூட இந்த சமப் பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவில்லை. அதன்படி இம்முறை மொத்தம் 275 தங்கப்பதக்கங்கள் பகிரிந்தளிக்கப்படவுள்ளன. இதில் 133 ஆண்களுக்கான போட்டிகளும் 133 பெண்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு 133 பதக்கங்கள் வீதம் இருபாலருக்கும் சரிசமமாக வழங்கப்படவுள்ளன. ஏனைய 9 பதக்கங்கள் இருபாலாரும் பங்கேற்கும் கலப்பு பிரிவுகளுக்கு வழங்கப்படவுள்ளன.

 

இலங்கையின் வாய்ப்பை தட்டிப்பறித்த கோல்ட் கோஸ்ட்

2018 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவது எந்த நகரம் என்ற போட்டியில் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகருமே மோதின. இதில் ஹம்பாந்தோட்டை நகரம் 27 வாக்குகளைப் பெற கோல்ட் கோஸ்ட் நகரம் 43 வாக்குகளைப் பெற்று போட்டியை வாய்ப்பை இலங்கையிடமிருந்து பறித்துக்கொண்டது.

 

வரலாறு

கொமன்வெல்த் போட்டிகளானது முதன்முதலில் பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள் என்ற பெயரில் 1930ஆண்டு ஹமில்டனில் நடத்தப்பட்டுள்ளது. 

அதன்பிறகு 1954ஆம் ஆண்டு இப்பெயரானது பிரித்தானியப் பேரரசு மற்றம் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்று மாற்றம்பெற்றது. மீண்டும் 1970 ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள் என மாற்றப்பட்டது. அதன்பிறகு 1978 ஆம் ஆண்டு முதல் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்ற பெயரால் அதிகார்பூர்வமாக நடத்தப்பட்டு வருகின்றது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 71 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐக்கிய இராச்சியம் நான்கு அணிகளாக பிரிந்து இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றன. ஆனாலும் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாட்டு அணியாக கலந்துகொள்ளும் ஐக்கிய இராச்சியமானது இதில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவையாக பிரிந்துள்ளது. அதேபோல் அவுஸ்திரேலியாவும் இரண்டு அணிகளை அனுப்புகின்றது. அதேபோல் நியூஸிலாந்து அணிகள் இரண்டும் கலந்துகொள்கின்றன.

 

ஆரம்பவிழா

கோல்ட் கோஸ்ட் நகரின் கராரா மைதானத்தில் நாளை அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 8 மணிக்கு 21 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்பவிழா நடைபெறவுள்ளது. ஆரம்ப விழாவில் பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது பாரியார் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளனர். 

1930 ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டுவரை நாடுகளின் அணி வகுப்பில் பிரித்தானிய ஒன்றியக் கொடியை ஏந்திச் செல்லும் ஒருவர் மட்டுமே முன் செல்வார். அது பிரித்தானியப் பேரரசில் பிரிட்டனின் முதன்மையான இடத்தைப் அடையாளப்படுத்தியது. அதன்பிறகு அந்த மரபில் மாற்றம் செய்யப்பட்டது. 

1958ஆம் ஆண்டிலிருந்து பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து தொடக்க விழா நடைபெறும் இடம்வரை தடகள வீரர்கள் கோல் ஒன்றினை ஏந்திச் செல்லும் தொடர் ஓட்டம் ஒன்று நடத்தபட்டுள்ளது. இந்தக் கோலினுள்ளே தடகள வீரர்களுக்கான ராணியின் வாழ்த்துச் செய்தி இருந்துள்ளது. கோலினை கடைசியாக ஏந்திச் செல்பவர் வழக்கமாக போட்டியினை நடத்தும் நாட்டின் பிரபல வீரராக இருப்பார். 

தொடக்க விழாவில் அனைத்து நாடுகளும் ஆங்கில எழுத்துமுறை வரிசைப்படி அணிவகுத்து செல்வார்கள். அத்தோடு இதற்கு முன் போட்டிகளை நடத்திய நாட்டு வீரர்கள் அணி வகுப்பில் முதலவது அணியாகச் செல்வார்கள். அதேபோல் தற்போது தொடரை நடத்தும் நாடு கடைசி அணியாக அணி வகுப்பில் கலந்துகொள்ளும்.

இலங்கை அணி

இம்முறை இலங்கை 13 வகையான போட்டிகளில் பங்குபற்றுகின்றது. இதற்கு மொத்தம் 80 வீரர்கள் வரை வருகை தந்துளனர். பயிற்சியாளர்களுடன் சேர்த்து மொத்தம் 150 பேர் இம்முறை போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.

இதில் மெய்வல்லுனர் போட்டிகளில் 13 வீரர்களும், பளுதூக்கல் போட்டிகளில் 11 பேரும், மல்யுத்தம் 6, எழுவர் றக்பி 12 பேர் கொண்ட அணிகளே அதிக வீரர்களை உள்ளடக்கி இம்முறை போட்டிகளில் கலந்துகொள்கின்றனர்.

இன்றைய ஆரம்பவிழா அணிவகுப்பில் இலங்கைக் கொடியை ஏந்திச் செல்லப்போவது பளுதூக்கல் வீரரான சிந்தன கீதால் விதானகே. இவர் பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை இம்முறை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பளுதூக்கல் பிரிவில் தங்கப்பதக்கம் ஒன்று வெற்றிகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

உச்சபட்ச பாதுகாப்பு

குயிண்ட்ஸ்லான் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1000 இற்கும் அதிகமான விசேட பாதுகாப்பு படையினரும், 3500 பொலிஸாரும் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அத்தோடு ஜெட் வகை யுத்த விமானங்கள்( Fighter Jets) மற்றும் ட்ரோன் துப்பாக்கிகளும் (Drone guns) பயன்படுத்தப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த போட்டிகளுக்காக உலக நாடுகளிலிருந்து 6 இலட்சத்து 72 ஆயிரம் பேர்வரை வருகைத் தரவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. 

வீரர்கள் தங்கியுள்ள விளையாட்டு கிராமத்திற்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு கிராமத்திற்குள் அனுமதியற்ற எவருமே நுழைய முடியாதவகையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு கிராமத்திற்கு மேலாக விமானங்கள் ஹெலிகொப்டர்கள் பறப்பதற்கும் தடைவிதிக்ப்பட்டுள்ளது. ட்ரோன் கெமராக்கள் எனப்படும் பறக்கும் கெமராக்களை விளையாட்டு கிராமத்திற்கு மேலாக பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பறந்தால் சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

காலநிலை குறித்து அச்சம்

ஆரம்பவிழாவிற்கு மழையினால் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய நாளிலும் இடையிடையே மழை பெய்துகொண்டிருந்தது. இதே காலநிலை நாரளையும் தொடரும் பட்சத்தில் ஆரம்ப விழா நிகழ்வுகள் பாதிக்கப்படக்கூடும். விழா நடைபெறவுள்ள காராரா மைதானத்தில் 35ஆயிரம் பேர்வரையில் அமர்ந்து பார்க்ககூடிய அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பெய்தால் அதில் 5000 பேர்களுக்கு மட்டுமே கூரையுடன் கூடிய இருக்கைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை ஆரம்பமாகும் பொதுநலவாய விளையாட்டு விழா மொத்தம் 11 நாட்கள் நடைபெற்று எதிர்வரும் 15 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது. இதில் மொத்தம் 25 வகையான விளையாட்டு பிரிவுகளில் 275 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரையில் நடைபெற்றுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க பட்டியலின் அடிப்படையில் 852 தங்கப்பதக்கங்களுடன் 2218 மொத்தப் பதக்கங்களைப் பெற்று அவுஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது இடத்தில் 669 தங்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும், கனடா 469 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

கொமன்வெல்த் விளையாட்டு போட்டி நாளை இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமாகின்றது. 

ஆரம்ப விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது. தினசரி போட்டிகள் இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.

அவுஸ்திரேலியாவில் கொமன்வெல்த் விளையாட்டு போட்டி இடம்பெறுவது இது 5 ஆவது  தடவையாகும். 

ஏற்கனவே 1938 (சிட்னி), 1962 (பெர்த்), 1982 (பிரிஸ்பேன்), 2006 (மெல்போர்ன்) ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்றது. 

இந்த போட்டியின் மூலம் அதிகமுறை கொமன்வெல்த் போட்டியை நடத்திய நாடு என்ற பெருமையை அவுஸ்திரேலியா பெறவுள்ளது.  கனடா 4 முறை இந்த போட்டியை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அவுஸ்திரேலிய கோல்ட் கோஸ்டிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)

http://www.virakesari.lk/article/32189

  • தொடங்கியவர்

காமன்வெல்த் 2018: ஆஸ்திரேலியக் கொடியை ஏந்தும் இந்திய பெண்

 
ருபிந்தர் கவுர்படத்தின் காப்புரிமைRUPINDER KAUR WRESTLER/FACEBOOK

ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவிருக்கும் கிராமத்தில் நான் நுழைந்தபோது ஓர் இந்திய பெண் டிராக் சூட்டுடன் கையில் ஆஸ்திரேலிய கொடியை வைத்திருந்ததை பார்த்தேன். அவரிடம் பேசியபோது, அந்த பெண்ணின் பெயர் ருபிந்தர் கவுர் சந்து என்பதும் காமன்வெல்த்தில் 48கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக அவர் கலந்து கொள்கிறார் என்பதும் தெரியவந்தது.

கடந்த வருடம் அந்த பெண் ஆஸ்திரேலியாவில் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு ஆஸ்திரேலியாவுக்காக வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.

கிளாஸ்கோ காமன்வெல்த்தில் விதி அவருக்கு சாதகமாக இருக்கவில்லை. ருபிந்தர் கலந்துகொள்ள விரும்பியது 48 கிலோ எடைப்பிரிவில். ஆனால் அவர் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 200 கிராம் கூடுதலான எடையை கொண்டிருந்தார். இதனால் அவர் 53 கிலோ எடைப்பிரிவில் உள்ள வலுவான மல்யுத்த வீரர்களுடன் போட்டிபோட வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கே அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை.

ருபிந்தர் கவுர் சந்துவுக்கு இப்போது 33 வயதாகிறது. பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸில் இருந்து 10 வருடங்களுக்கு முன்பு அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டார். சாஹிபா என்ற பெயர் கொண்ட அவரது குழந்தை பிறந்து பதினைந்து மாதமாகிறது.

கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் 2018:படத்தின் காப்புரிமைCOMMONWEALTH GAMES

ஜலந்தருக்கு அருகில் உள்ள பராஸ்ராம் பூரில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் மல்யுத்தத்தில் ஈடுபட்டார் ருபிந்தர். இரண்டு வருடங்களுக்கு பிறகு துருக்கியில் நடந்த ஒரு போட்டியில் இந்தியாவுக்காக கலந்துகொண்டு தங்கம் வென்று தந்தார் ருபிந்தர் சந்து. மல்யுத்தப் போட்டியில் புகழ் பெற்ற போகத் சகோதரிகள் ருபிந்தருக்கு நெருங்கிய நண்பர்களாவர்.

ஆஸ்திரேலியக் கொடியேந்தும் மார்க் நோல்ஸ்

கோல்ட் கோஸ்ட் மக்கள் தங்கள் உள்ளூர் நாயகன் சாலி பியர்சனுக்கு காமன்வெல்த் துவக்க விழா நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியக் கொடியை ஏந்தி வலம்வரும் பொறுப்பு கொடுக்கப்படும் என நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் அந்த பொறுப்பு தற்போது பிரபல ஹாக்கி வீரரும் அணியின் கேப்டனுமான மார்க் நோல்ஸிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்காக நோல்ஸ் 300-க்கும் அதிகமான ஹாக்கி போட்டிகளில் விளையாடியுள்ளார். ஏதென்ஸ் ஒலிம்பிக் மற்றும் கடைசியாக நடந்த மூன்று காமன்வெல்த் போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவுக்காக அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பியர்சனுக்கும் துவக்க விழாவில் முக்கியமான பொறுப்பு தரப்படும் என ஆஸ்திரேலிய விளையாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கர்ராரா ஸ்டேடியத்துக்கு அருகிலுள்ள தெருவில் உள்ள வீட்டில் பிறந்தவர் பியர்சன். காமன்வெல்த் போட்டிகளில் நூறு மீட்டர் தடை தாண்டி ஓடும் பந்தயத்தில் தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற பெண்மணி சாலி பியர்சன்.

மார்க் நோல்ஸ்படத்தின் காப்புரிமைHAGEN HOPKINS/GETTY IMAGES

உலகம் முழுவதும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதை விட ஹாக்கி வீரர்கள் குறைவாக சம்பாதிக்கிறார்கள் என்ற கூற்று ஆஸ்திரேலியாவுக்கு பொருந்துமா? 33 வயது ஹாக்கி வீரர் நோல்ஸ் அந்நாட்டில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சம்பாதிப்பதை விட இருபது மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்.

நோல்ஸின் குடும்பத்தின் ரத்தத்தில் ஹாக்கி இருக்கிறது. நோல்ஸின் மனைவி ஆஸ்திரேலியாவின் சிறந்த வீராங்கனையான சிமி டயரின் தங்கை கெல்லி.

இவர்கள் இருவருக்கும் பிறந்த மூன்று குழந்தைகளான ஃபிலின், லூக்கா மற்றும் ஃபிராக்கி ஆகியோரும் ஹாக்கி விளையாடுகின்றனர்.

http://www.bbc.com/tamil/sport-43632743

  • தொடங்கியவர்

காமன்வெல்த்தில் தனது முதல் பதக்கத்தை வென்றது இந்தியா

கர்நாடகாவின் குந்தாபூரை சேர்ந்த குருராஜின் தந்தை ஓட்டுநர் ஆவார். குருராஜின் உடன் பிறந்தவர்கள் எட்டு பேர்.படத்தின் காப்புரிமைMIB

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது. 56 கிலோ பளு தூக்கும் போட்டியில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த கே.பி. குருராஜ் வெள்ளிபதக்கத்தை வென்றுள்ளார்.

கர்நாடகாவின் குந்தாபூரை சேர்ந்த குருராஜின் தந்தை ஓட்டுநர் ஆவார். குருராஜின் உடன் பிறந்தவர்கள் எட்டு பேர்.

கர்நாடகாவின் தக்ஷின் கன்னடா மாவட்டத்தில் கல்வி பயின்ற குருராஜ் தனது பளுதூக்கும் கனவை அங்கிருந்தே தொடங்கியுள்ளார்.

கவுஹாத்தியில் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய போட்டிகளில் தங்க பதக்கத்தையும் வென்றுள்ளார் குருராஜ்.

http://www.bbc.com/tamil/sport-43650903

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.