Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகையர் திலகம் - திரை விமர்சனம்

Featured Replies

நடிகையர் திலகம் - திரை விமர்சனம்நடிகையர் திலகம் - திரை விமர்சனம்

 
 

நடிகையர் திலகம் - திரை விமர்சனம்

 

சினிமாவில் இப்போதெல்லாம் ஏதேதோ கதைகளை வைத்து படங்கள் எடுக்கப்படுகிறது. பேய் படங்கள் காலங்கள் போய் அடல்ட் படங்கள் அடியெடுத்து வைக்க தொடங்கிவிட்டது.

அதற்கிடையில் சினிமா வட்டாரமே நடிப்புக்காக ஏங்கிய பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை படமாக வெளிவந்துள்ளது.

என்ன சொல்கிறார் இந்த நடிகையர் திலகம்? மகாநதியாக உருமாறிய இவரின் பயணம் பக்கம் நாமும் போகலாம்..

கதைக்களம்

ஒரு காலகட்டத்தில் சினிமா வட்டாரமே கர்ஜித்த பெயர் நடிகை சாவித்திரி. நடிகையர் திலகமாக நடிகை கீர்த்தி சுரேஷ். ஒரு சிறுமியாக, வளர்ந்த பெண்ணாக பின் ஒரு நடிகையாக மாறுகிறார்.

இந்த பயணத்தில் அவரின் வாழ்க்கையில் பல திருப்பங்கள். சாதாரண பெண்ணாக சினிமா துறையில் நுழைந்து நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து ஒரு பெரும் புகழை பெற்றவர்.

அப்படியான புகழ் பெற்ற அவரின் வாழ்வில் ஒரு காதல் இவரையும் கடந்து போகிறது. இதில் மற்றொரு பிரபல நடிகர் ஜெமினி கணேசனும் முக்கிய பங்காற்றுகிறார்.

பிரபலங்களுக்கான காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படியிருந்தார்கள், கடைசி வரை காதல் ஜோடியாக இணை பிரியாமல் இருந்தார்களா?

மேலும் சாவித்திரியின் கடைசி ஆசையை யார் நிறைவேற்றினார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கீர்த்தி சுரேஷ் படத்தின் மிக முக்கிய கேரக்டர். தமிழ், தெலுங்கு என பல படங்களில் நடித்த இவர் ஒரு பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்குமளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

சாவித்திரி சாதாரணமானவர் அல்ல. சகாப்தம் படைத்தவர். அப்படியான ஒருவராக இப்படத்தில் தன்னையே மாற்றியிருக்கிறார். ஏற்கனவே படங்களில் கீர்த்தி சுரேஷின் சில ரியாக்சனை கேலி கிண்டல் செய்தார்கள்.

ஆனால் இப்படத்தின் மூலம் அவருக்கு அந்த நிலை மாறலாம். இனிவரும் காலத்தில் இதே பெயர் அவருக்கு பொருந்தினாலும் ஆட்சேபனையில்லை என சொல்லலாம்.

ஜெமினி கணேசனாக மலையாள சினிமாவின் பிரபல நடிகர் துல்கர் சல்மான். இவருடன் கீர்த்திக்கும் காதல் மலர்கிறது. ஒரு நடிகரின் மேனரிசத்தை உள்வாங்கி அதை பிரதிபலிப்பது சாதாரணமான விசயமல்ல.

அவ்வகையில் துல்கர் தைரியமாக இறங்கியிருக்கிறார். மேலும் ஒரு தமிழ் படத்திற்காக அவர் முதன்முறையாக தனது சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். ஆனால் முழுமையான ஜெமினி கணேசனாக எல்லாரிடமும் இடம் பெற்றாரா என்றால் கொஞ்சம் சந்தேகம் தான். சில அம்சங்கள் குறைந்து போல இருந்தது.

ஆனால் குடிப்பது போன்ற காட்சியில் கீர்த்தியுடன் இவர் பேசும் போது பார் (மதுக்கடை) பற்றி ரைமிங்காக ஒரு டையலாக் சொல்வார். அதற்கு நல்ல ரீச் இருந்தது.

நடிகை சமந்தா மதுரவாணியாக ஒரு பெண் பத்திரிக்கையாளராக வந்திருக்கிறார். சாவித்திரியை பற்றி விசயங்கள் பெரிதளவில் தெரியாவிட்டாலும் பின் தன் ஆராய்ச்சியால் ரசிகையாக மாறிப்போகிறார்.

இவருக்கும் விஜய் அந்தோனியாக வரும் விஜய் தேவரகொண்டாவுக்கும் காதல் மலர்கிறது. இவர்களுக்கிடையில் காதல் ஓடுகிறது. கலாச்சாரம் ஜெயித்ததா, காதல் வென்றதா என்பது ரகசியம் (படத்தில் பாருங்க).

மேலும் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், பானுமதி ஆகியோரும், தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களும் இதில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் கதாபாத்திரமாக மாறி இடம் பிடித்திருக்கிறார்கள்.

படத்திற்கான காட்சிகள் அக்காலம் போல அருமையாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். படத்திற்கான பின்னணி இசை, பாடல் வரிகள் என மனதோடு ஒன்றிவிடுகிறது.

கிளாப்ஸ்

கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக மாறிய தைரியத்தை பாராட்டலாம்.

அக்கால காதலை இக்கால தலைமுறைக்கு இயல்பாக எடுத்து சொன்னவிதம் நன்று.

வாழ்க்கை வரலாற்று படத்தை அழகாக கொடுத்த இயக்குனரின் அழகான முயற்சி.

நிறைவான காட்சிகளால் சிலிர்ப்புடன் வரும் சிரிப்பு.

பல்பஸ்

சில இடங்களில் கீர்த்தி சுரேஷ் வழக்கமான அசைவுகள் ஃபிளாஷாக தெரிந்தது.

டப்பிங் சில இடங்களில் பொருந்தவில்லை என தோன்றவைத்தது.

மொத்தத்தில் களங்கம் சுமத்தபடும் நடிகைகளுக்கு பின்னால் களங்கமில்லா ஒரு நல்ல மனது இருக்கிறது என நடிகையர் திலகம் காட்டுகிறது.

http://www.cineulagam.com/films/05/100930?ref=reviews-feed

  • தொடங்கியவர்

''வாவ்... சாவித்திரி ஒப்பிட முடியாத ஒரு துருவ நட்சத்திரம்தான்!" - நடிகையர் திலகம் விமர்சனம்

 
 

உலகெங்கும் சாதனையாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி பல பயோபிக் திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. அதில் பெண்களுக்கான பிரத்யேக பயோபிக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். `நடிகையர் திலகம்' சாவித்திரி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை அசத்தலாக தெலுங்கில் மகாநடி'யாகவும், தமிழில் நடிகையர் திலகம் எனவும் பதிவு செய்திருக்கிறார்கள்.

நடிகையர் திலகம்

 


நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை எழுதும் அசைன்மென்ட் மதுரவாணிக்குக் (சமந்தா) கிடைக்கிறது. சாவித்திரியின் வாழ்க்கையை எழுத விரும்பாத சமந்தாவை, கொஞ்சம் கொஞ்சமாக கன்வின்ஸ் செய்கிறார் ஆன்டனி (விஜய் தேவரகொண்டா). இருவருக்குமான காதல், சமந்தா சந்திக்கும் சூழல்கள், சாவித்திரியின் வாழ்க்கை, சாவித்திரி சந்திக்கும் சூழல் போன்றவற்றை கச்சிதமாகச் சொல்லி, கதையை நகர்த்தியிருக்கிறார்கள். 


பொதுவாக பயோபிக் என்றால், முழுக்க முழுக்க முதன்மை கதாபாத்திரத்தின் வாழ்க்கையை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். அதைக் காட்சிப்படுத்த நினைக்கும் எழுத்தாளர் அல்லது இயக்குநரின் வாழ்க்கையைச் சற்று குறைவான காட்சிகளே திரைக்கதையில் சேர்த்திருப்பார்கள். இதில் இரு கதைக்கும் தேவையான அளவு காட்சிகளை வைத்திருக்கிறார்கள். 1980 களில் சாவித்திரியின் கோமா ஸ்டேஜில் ஆரம்பிக்கும் கதை, சாவித்திரியின் அத்தை துர்காம்பா (பானுப்பிரியாவின் ) வரிகளில் விரிகிறது. 

நடிகையர் திலகம்


இருபதாம் நூற்றாண்டில் தென்னிந்திய சினிமாவின் ஆளுமையாகக் கருதப்படும் சாவித்திரியாக, அச்சு அசலாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.  தோழி சுஷீலா (ஷாலினி பாண்டே ) வுடன் சுற்றித் திரிவது, வெகுளித்தனமாக விஜயவாஹிணி ஸ்டுடியோவில் உலா வருவது, இறுதி வரை உதவிக் கொண்டே இருப்பது, மருத்துவமனைக் காட்சிகள், மதுக்கோப்பைகளுடன் வாழ்வது, முதல் முறை கேமராவைப் பார்க்கும் போது வெட்கப்படுவது,  இத்தனை ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களை எல்லாம், இந்த ஒற்றைப் படத்தின் பெர்ஃபாமன்ஸ் மூலம் ஓவர்டேக் செய்கிறார் கீர்த்தி சுரேஷ். 14 வயது முதல் 43 வயதில் மரணப் படுக்கையில் தள்ளப்படும் வரை, ஒவ்வொரு ஃபிரேமிலும் கீர்த்தி நடிப்பும், உடல்மொழியும், அபாரம். அதிலும் ஜெமினி கணேசனின் பிரிவுக்குப் பின்னான காட்சிகளில் அத்தனை தத்ரூபமான நடிப்பு. உடல் எடை அதிகமாகத் தோன்றும் காட்சிகளில், அப்படியே சாவித்திரியை பிரதிபலிக்கிறார் கீர்த்தி. ஹேட்ஸ் ஆஃப்!


ஜெமினி கணேசனின் கதாபாத்திரத்தில் ஒரு நடிகனாக ஜெமினியை விடவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார் துல்கர் சல்மான். ``என்னோட எல்லா கிரெடிட்டையும் நீயே எடுத்துக்கற... தோல்விக்கான கிரெடிட்டையாவது எனக்குக் கொடு " என போதையில் இயலாமையின் உச்சத்தில் உதாசீனப்படுத்தப்பட்ட ஒரு மனிதராக அசத்துகிறார் துல்கர் சல்மான். ஒவ்வொரு காட்சியிலும், தான் ஒதுக்கப்படுவதை, `மக்களுக்கு ருசிக்காத சாம்பார் கணேசனாக 'தான் இருப்பதாக மீடியாக்கள் எழுதுவதை எரிச்சலுடன் கடந்து செல்கிறார். ஆனால், அது ஜெமினியை நினைவுக்குக் கொண்டு வருகிறதா என்றால், அது சற்று சந்தேகம்தான். முழு படத்திலும் ஜெமினி பாத்திரத்தின் மேக்கப்பும் அதீத யதார்த்தமான நடிப்பும் ஏனோ உறுத்துகிறது. 

நடிகையர் திலகம்


சாவித்திரிக்கும் ஜெமினிக்குமான வாழ்க்கையை `உனக்கு வெட்கம் இல்ல... எனக்கு புத்தி இல்லை ' என ஒற்றை வரியில் கடத்துகிறார் வசனகர்த்தா மதன் கார்க்கி. வசன வரிகளில் ஈர்க்கும் மதன் கார்க்கி, ஏனோ பாடல் வரிகளில் பெரிதாக ஈர்க்கவில்லை. 


சாவித்திரியாக கீர்த்தி வரும் காட்சிகள் ஒரு கலர்; படத்துக்குள் வரும் படமாக்கப்படும் காட்சிகள் ஒரு கலர்; சமந்தாவின் காட்சிகள் வேறொரு கலர் என மூன்று டோன்களில் பயணிக்கும் கதையில், டானி சா லோவின் ஒளிப்பதிவு கச்சிதம். அதே போல், ஜெமினி சாவித்திரி கணேசனின் காதல் காட்சிகள், படமாக்கப்பட்ட விதமும் அழகு. மெட்ராஸ் சென்ட்ரலின் முகப்பு, MCP நம்பருடன் சாலையில் நகரும் கார்கள், விஜய வாஹிணி ஸ்டுடியோஸ், சந்திரலேகா போஸ்டர், டிராம், பழைய கால கேமரா, மைக் என ஆர்ட் டிரைக்ஷனின் உழைப்பு அபாரம். அதிலும், அந்த மாயாபஜார் காட்சியின் மறுஉருவாக்கம் டாப் கிளாஸ். பின்னால் இருக்கும் நடிகைகளின் இடைவெளி வரை பார்த்துப் பார்த்து அப்படியே மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள். ஜெமினியுடனான சண்டைக்குப் பின்னர், கதவை மூடுகிறார் சாவித்திரி. அது அப்படியே நாகேஷ்வர ராவுடன் நடிக்கும் காட்சியில் தொடர்கிறது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படத்தின் க்ளைமாக்ஸ் எனப் பல காட்சிகள் அதி அற்புதம். 

 

சாவித்திரி எப்பேர்ப்பட்ட நடிகை என்பதைக் காட்ட, ஒரு காட்சி விவரிக்கப்படுகிறது. 'செட்'டில் அசிஸ்டென்ட் டீம் சொதப்ப , அந்தக் காட்சியை சாவித்திரி ஒரே 'டேக்'கில் ஓக்கே செய்ய வேண்டும். அது தான் படத்தில், கீர்த்தி சுரேஷின் அறிமுகக் காட்சி. அவ்வளவு சிறப்புமிக்க காட்சியை , ஏனோ அசால்ட்டாக எடுத்து சொதப்பிவிட்டார் இயக்குநர் நாக் அஷ்வின் என்றே தோன்றுகிறது. 


சாவித்திரியின் வெற்றிகளையும், கருணையுள்ளத்தையும் அதீதமாக காட்சிப்படுத்தியிருக்கும் அதே வேளையில், தோல்விகளுக்கும், மதுப் பழக்கத்திற்கும் முழுவதுமாக பிறரையே குற்றம் சாட்டி புனிதத் தன்மைக் கொடுத்து, இது உண்மையிலேயே பயோபிக் சினிமாவா இல்லை, ஒரு தலைபட்சமான போற்றதலுக்குரிய சினிமாவா ? என்னும் கேள்வியை எழுப்புகிறது. அதே போல், டப்பிங் என்றாலும் கூட, படத்தில் வரும் தமிழ் காட்சிகளில் கூட , லிப் சிங் இல்லாமல் இருப்பது பெரிய உறுத்தல். 

இப்படி சிற்சில குறைகள் இருந்தாலும், கீர்த்தி சுரேஷின் நடிப்புக்காகவும், பார்வையாளனை வியக்க வைக்கும் சாவித்திரி பற்றிய நெகிழ்ச்சி தொகுப்புகளுக்காகவும், இந்த ' நடிகையர் திலகத்தை ' கண்டு மகிழலாம். 

https://cinema.vikatan.com/movie-review/124799-nadigaiyar-thilagam-review.html

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: நடிகையர் திலகம்

 
சினிமா விமர்சனம்: நடிகையர் திலகம்படத்தின் காப்புரிமைTWITTER

தமிழ்த் திரையுலகிலும் தெலுங்கு திரையுலகிலும் 50களிலும் 60களிலும் கோலோச்சிய சாவித்ரி தேவியின் பிரகாசமும் துயரமும் நிரம்பிய வாழ்க்கைக் கதைதான், நடிகையர் திலகம். தெலுங்கில் மகாநதி என்ற பெயரில் வெளியானது இந்தப் படம்.

   
திரைப்படம் நடிகையர் திலகம்
   
நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்ட, ராஜந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், நாகசைதன்யா, பானுப்ரியா
   
இசை மிக்கி ஜே மெயர்
   
வசனம் மதன் கார்க்கி
   
இயக்கம் நாக் அஸ்வின்

1980. பெங்களூரில் பேச்சு மூச்சற்றுக் கிடக்கும் ஒரு பெண்மணியை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பிறகு, அவர்தான் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான சாவித்ரி என்பது தெரியவருகிறது. அவரது வாழ்க்கைக் கதையை எழுதுவதற்காக வருகிறார் அப்போதுதான் பணியில் சேர்ந்திருக்கும் மதுரவாணி.

மதுரவாணியின் தேடல், சாவித்ரியின் வாழ்க்கைக்குள் நம்மை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது. சிறுவயதிலேயே தந்தையை இழந்த சாவித்ரி, தன் உறவினர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

குழந்தையாக இருக்கும்போதே நடனம் கற்க ஆரம்பித்து நாடகங்களில் நடிக்கும் சாவித்ரி, பிறகு சென்னைக்கு வந்து வாய்ப்புகளைத் தேடுகிறார். மெல்ல மெல்ல வாய்ப்புகள் வர ஆரம்பிக்கின்றன. அதே நேரத்தில் ஜெமினி கணேசனின் பழக்கமும் ஏற்படுகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்தும் ரகசியமாக திருமணம் செய்துகொள்கிறார்கள். அதற்குப் பிறகும் தொடர்ந்து புகழேணியில் ஏறிக்கொண்டேயிருக்கிறார் சாவித்ரி.

ஆனால் ஜெமினி கணேசனின் திரையுலக வாழ்வில் ஏற்படும் வீழ்ச்சி, சாவித்ரியைப் பார்த்துப் புழுங்க வைக்கிறது. பிறகு, ஜெமினி கணேசனின் பேச்சைக் கேட்காமல் படங்களை இயக்க ஆரம்பித்து, தயாரித்து பெரும் கடனில் வீழ்கிறார்.

ஜெமினி கணேசனுக்கு பிற பெண்களுடன் இருக்கும் தொடர்புகளால் அவரைவிட்டும் விலகுகிறார். மதுவிற்கு அடிமையாகி, கோமாவில் வீழும் சாவித்ரி, 19 மாதங்களுக்குப் பிறகு மரணமடைகிறார்.

இந்தக் கதையை கொஞ்சம் கொஞ்சமாகக் கோர்க்கும் மதுரவாணி, சாவித்ரியின் துணிச்சலால் தூண்டப்பட்டு தன் தந்தை பார்த்துவைத்திருக்கும் மணமகனை மறுத்துவிட்டு, காதலனைத் தேடிச் செல்கிறாள்.

சினிமா விமர்சனம்: நடிகையர் திலகம்படத்தின் காப்புரிமைTWITTER

ஒரு வாழ்க்கைக் கதையை சினிமாவாக்குவதில் பல பிரச்சனைகள் இருக்கின்றன. உண்மையான சம்பவங்களை அப்படியே சொல்ல முடியாதது ஒரு பக்கமென்றால், சுவாரஸ்யத்திற்காக வேறு எதையும் சேர்க்கவும் முடியாது. அதனால், அந்தத் திரைப்படம் ஒரு ஆவணப் படத்தைப்போல முடிந்துவிடும் ஆபத்து உண்டு. இந்தக் கதைக்கும் அந்தப் பிரச்சனைகள் உண்டு.

ஆனால், சாவித்ரியின் வாழ்வே கொண்டாட்டமும் பரவசமும் சந்தோஷமும் துயரமும் நிரம்பிய சாகஸம் என்பதால், அந்த விபத்து இந்தப் படத்தில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. தவிர, நேரடியாக சாவித்ரியின் கதையைச் சொல்லாமல், ஒரு பத்திரிகையாளரின் தேடலின் மூலம் கதையைச் சொல்வது, அலுப்பைத் தவிர்க்கிறது.

சாவித்ரியாக நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு, அவரது திரைவாழ்வின் மிக முக்கியமான படமாக நடிகையர் திலகம் இருக்கும். சென்னைக்கு துள்ளலோடு வந்து இறங்கும் இளம் பெண்ணாக, மிகப் பெரிய நடிகையாக, ஜெமினி கணேசனின் இரண்டாவது மனைவியாக, குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி வீழும் நட்சத்திரமாக என பிரமிக்கவைத்திருக்கிறார்.

இரண்டு இடங்களில் அவரது நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். சாவித்ரி அவ்வப்போது தனது கீழ்த் தாடையை இடமிருந்து வலமாக அசைப்பார். அது அவரது பாணியாகவே இருந்தது. அதை நுணுக்கமாகக் கவனித்து செய்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அதேபோல, சாவித்ரி குடிக்கு அடிமையான பிறகு, முகமெல்லாம் வீங்கியிருக்கும் காட்சிகள். இந்தக் காட்சிகளிலும் பின்னியெடுக்கிறார் கீர்த்தி சுரேஷ். சாவித்ரி பாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் இனி நினைத்துப் பார்க்க முடியாது என்பதே அவரது வெற்றி.

ஜெமினி கணேசனாக வரும் துல்கர் சல்மானை நிஜ ஜெமினி கணேசனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் சற்று ஏமாற்றமாக இருக்கலாம். நமக்குத் திரைப்படங்கள் மூலமாகத் தெரியவந்த ஜெமினி கணேசன், சற்று நளினமானவர். மென்மையானவர். ஆனால், துல்கர் சல்மானின் தோற்றம் அவருக்கு ஒரு முரட்டுத்தனமான இமேஜை அளிக்கிறது.

அது மட்டுமே நெருடல். மற்றபடி, சாவித்ரியை வளைக்கும் தருணத்தில் கொஞ்சிப் பேசுவதாகட்டும் பிறகு அவரது வளர்ச்சியைப் பார்த்து புழுங்குவதாகட்டும் துல்கரின் நடிப்பில் குறை சொல்ல முடியாது. ஒரு பெண் மையப் படத்தில் தனக்கான குறைவான இருப்பை உணர்ந்தே இந்தப் பாத்திரத்தை ஏற்றிருக்கும் துல்கர், மிகச் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.

சினிமா விமர்சனம்: நடிகையர் திலகம்படத்தின் காப்புரிமைTWITTER

சாவித்ரியின் கதையில் ஜெமினி கணேசனைத் தவிர்த்த எல்லோருமே துணைப் பாத்திரங்கள்தான். இருந்தாலும் அவருடைய மாமாவாக வரும் ராஜேந்திர பிரசாத், தயாரிப்பாளர் அலூரி சக்கரபாணியாகவரும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் அந்தந்தப் பாத்திரங்களோடு பொருந்திப் போகிறார்கள்.

இணை கதையாக வரும் மதுரவாணியின் கதையில், மதுரவாணியாக வரும் சமந்தாவுக்கும் இது மிக முக்கியமான படமே. அப்பள நிறுவனத்தைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் துவக்க நிலை பத்திரிகையாளர் என்ற நிலையிலிருந்து மெல்ல மெல்ல தன்னுடைய தேடலின் மூலம் ஒரு நல்ல பத்திரிகையாளராகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாகவும் உருவெடுக்கும் மதுரவாணியின் பாத்திரம் இவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறது.

இந்தப் படத்தின் திரைக்கதையில் சில பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன. சாவித்ரியின் கதை துவங்கி, அவருக்கு சினிமாத் துறையில் வாய்ப்புக் கிடைக்கும் வரை படம் மிக மெதுவாக, தகவல் சார்ந்ததாக, ஒரு ஆவணப் படத்தைப்போலவே நகர்கிறது.

மேலும் இந்தப் படம் அடிப்படையில் ஒரு தெலுங்குப் படம். அதனால், சாவித்ரிக்கும் தெலுங்குத் திரையுலகிற்கும் இடையிலான உறவை மையப்படுத்தியே படம் முழுக்கவும் நகர்கிறது.

சினிமா விமர்சனம்: நடிகையர் திலகம்படத்தின் காப்புரிமைTWITTER

தமிழில் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சாவித்ரியின் வாழ்க்கைக் கதையில், சிவாஜி கணேசன் என்ற பெயர் ஒன்றிரண்டு இடங்களில் போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. பிற்காலத்தில் சாவித்ரியின் நண்பராக இருந்த சந்திரபாபு, கதையிலேயே இல்லை. சாவித்ரி நடித்திருக்கும் படங்கள் வரும் காட்சியிலும் பெரும்பாலும் தெலுங்குப் படங்களும் பாடல்களுமே காட்டப்படுகின்றன.

நீண்ட நாட்களுக்குப் பிறகு படம் நெடுக, கவனிக்க வைக்கும் வசனங்கள். எழுதியவர் மதன் கார்க்கி. பாராட்டப்பட வேண்டிய மற்றொருவர் கலை இயக்குனர். 50களின் திரையுலகை மீண்டும் உயிர்த்தெழச் செய்ய ரொம்பவுமே பாடுபட்டிருக்கிறார் மனிதர்.

மிக்கி ஜே மெயர் இசையில் 'மௌன மழையிலே', 'மஹாநதி' பாடல்கள் அசத்துகின்றன. பின்னணி இசையிலும் மெச்சத்தக்க ஒரு படம் இது. இருவேறு காலகட்டங்களுக்கேற்றபடி வெவ்வேறுவிதமான இசை பாணிகளை பின்பற்றியிருப்பதும் அசத்தல்.

சாவித்ரி திரையுலகில் கோலோச்சிய காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இந்தப் படம் ஒரு மறக்கமுடியாத மீள் பயணமாக இருக்கும். மற்றவர்கள் கீர்த்தி சுரேஷைப் பார்க்கப் போய், சாவித்ரியை சந்தித்து வருவார்கள்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44095397

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: நடிகையர் திலகம் - ”கீர்த்தியை பார்க்கவில்லை... சாவித்ரியைத்தான் பார்த்தேன்”

 

 
kljpg

‘நடிகையர் திலகம்’ சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும்  வெளியாகியுள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படம் குறித்தும்,  கீர்த்தி சுரேஷ் நடிப்பு குறித்தும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்..

B.Hariharaselvam

 

‏நான்தானானு என்னாலேயே நம்ப முடியவில்லை. முதல் நாளே புக் பண்ணி, பஸ் கிடைக்காம 3 கிமீ நடந்து அப்பறம் ஆட்டோ பிடிச்சு எந்த படத்துக்கும் இவ்வளோ மெனக்கிட்டது இல்ல. எல்லாம் என் தலைவி @KeerthyOfficial க்காக #NadigaiyarThilagam

AR Bharaty

‏வெகுநாளைக்கு பிறகு என் கண்களையும் நெஞ்சையும் கனக்க வைத்துவிட்டாள் #Mahanati #NadigaiyarThilagam ;ஒரு பெண்ணின் நெஞ்சு இவ்வளவு வலி தாங்குமா?! நெஞ்சம் உடைந்துசொல்கிறேன் #saavithri அம்மாவுக்காக இதயம் துக்கம் கசிக்கிறது! @KeerthyOfficial இப்படம் உன் வரலாறில் பேசும்! வாழ்த்துக்கள்!   

உதயா

‏மக்கள் மனச பிடிச்சிட்டிங்க தலைவி

இமிட்டேஷன் தானேன்னு சுலபமா சிலர் சொல்லலாம். ஆனா அந்த முகபாவம், அசைவு, உடல்மொழி எல்லாத்தையும் இவ்வளவு தூரம் கண்முன்னே கொண்டு வர அபார திறமையும் உழைப்பும் வேணும்!

D

‏தெலுங்கு மலையாளம் தமிழ்னு பெரிய பெரிய தலைங்க எல்லாம் கீர்த்தி புகழ்ந்து தள்றானுவ

Keerthana

‏படத்துல நீங்க நடிக்கல சாவித்திரி அம்மா மாதிரியே வாழ்ந்து இருக்கீங்க

jkpng
 

மு.வி. நந்தினி

சாவித்ரியின் அலங்கோல, அகால மரணத்துக்கு மிக முக்கியமான காரணம், அவருடைய கணவரும் காதலருமான ஜெமினி கணேசன். தன் மனைவி அல்லது காதலி தன்னைவிட செல்வாக்கு மிக்கவராக இருப்பதை ஆணாதிக்க சமூகத்தைச் சேர்ந்த எந்த ஆணாலும் சகித்துக்கொள்ள முடியாது. அன்பின் பேரில் சுரண்ட ஆரம்பித்து, தோற்றுப்போய், ஒதுக்க ஆரம்பிக்கும் ஆண்களின் சூழ்ச்சியில் தெளிவில்லாத எந்தப் பெண்ணும் வீழ்ந்துதான் போவார். சாவித்ரியின் வீழ்ச்சி அத்தகையதே. சாவித்ரியின் நடிப்பு, திறமை எக்ஸ்ட்ரா..எக்ஸ்ட்ராவை புகழ்ந்துவிட்டு, ஏதோ சாவித்ரியின் குடிப்பழக்கம் மட்டுமே அவருடைய அத்தனை வீழ்ச்சிகளுக்கும் காரணமென பல ஆண்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் எப்போதும் ஆண்கள்தான். முற்போக்கென்ன, பிற்போக்கென்ன

Kayal Devaraj

‏#NadigaiyarThilagam கீர்த்தியை பார்க்கவில்லை. சாவித்ரியைத்தான் பார்த்தேன்.

வியப்பாக இருக்கிறது.

நீண்ட நாட்களாக பிறகு ரசித்த தமிழ் படம் #நடிகையர்திலகம் பாத்திரமாகவே மாறிப்போனார் கீர்த்திசுரேஷ்..

senthil Jagannathan

தன் கணவர் ஜெமினி கணேசன் இன்னொரு பெண்ணுடன் தனியறையில் இருப்பதையறிந்து ஆற்றாமையும்,கோபமும் பொங்க அந்தப் பெண்ணை அடிக்க ஓடும் காட்சியில் சாவித்ரியை திரையில் கொண்டுவந்தார் கீர்த்தி சுரேஷ்.

நடிகையர் திலகம் நினைவு வரும்போதெல்லாம் இனி கீர்த்தியும் அதனோடு இணைந்துகொள்வார்!

Raja Sundararajan

நடிகையர் திலகம் படம் பிற்பகுதியின் அவலக்காட்சிகளைத் தவிர்த்து நல்லதோர் ஆக்கம்தான். நடிகை கீர்த்தியைப் பாராட்டவேண்டும். பாடுபட்டிருக்கிறார். சமந்தாவும் தூள் கிளப்புகிறார்.

ஸ்ரீஹரி

‏நடிகையர் திலகம் ,தங்களின் திரையுல வாழ்க்கையில் ,  கிடைத்த வரம்...! வாழ்த்துக்கள்.

Sheik Mohamed

‏பகடிகள் திறனால் மழுங்கடிக்கப்பட்டது.

Bharath SM

‏நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடித்த  கீர்த்தியை பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை. நடிப்பின் உச்சகட்டம். அழகான காட்சிகள். தரமான திரைப்படம்.

The Rockstar AK      

‏டப்பிங் படம்னு பாக்காம தவிர்த்துடாதிங்க.. இது மூவி லவ்வர்ஸ்க்கு ஒரு அட்டகாசமான அனுபவத்த தர்ற எபிக் படம்.. சந்தோஷம், சோகம், எமோஷன், மெசேஜ், இன்ஸ்பிரேஷன், Goosebumps , claps , whistles னு ஒரு பக்கா தியேட்டர் எக்ஸ்பீரயன்ஸ மிஸ் பண்ணிடாதிங்க..

Cable Sankar

‏சிறந்த காஸ்டிங், டெக்னீஷியன்கள், நீட்டான எக்ஸிக்யூஷன் என எல்லாவிதத்திலும் சிறப்பு. நம்மூர் சிவாஜி, எம்.ஜி.ஆர் பற்றி ஏதும் சொல்லாததை தவிர, பார்க்க, பாராட்ட வேண்டிய பயோபிக். தெலுங்கில் பார்ப்பது சிறப்பு

Subash Prabhu R

‏நடிகையர் திலகம் சாவித்திரி அவர் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது, கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக   வாழ்த்துள்ளார் வாழ்த்துக்கள்       

agizo

‏எங்கம்மா கீர்த்தி சுரேஷ் விசிறி ஆகிட்டாங்கோ தலைவி ராக்ஸ்

mohan

‏கீர்த்தி சுரேஷ் #சாவித்ரி யாக

நடிக்கவில்லை....

#சாவித்திரி யாகவே வாழ்ந்து

இருக்கிறார்....

வாழ்த்துக்கள்....

நீண்ட இடைவெளிக்கு பின்

சிறந்த திரைப்படம் ....

http://tamil.thehindu.com/opinion/blogs/article23864165.ece

  • தொடங்கியவர்

"அம்மாவின் கடைசி நாள்கள்... உண்மையைச் சொன்ன படத்துக்கு நன்றி !'' - சாவித்திரியின் பிள்ளைகள் உருக்கம் #VikatanExclusive

 
 

லைமுறை வித்தியாசமின்றி நடிகையர் திலகத்தை எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள். நடிகை சாவித்திரி ஓர் அம்மாவாக எப்படி இருந்தார்? முதலில், அமெரிக்காவில் இருக்கும் மகன் ஸ்ரீராம நாராயண சதீஷ்குமாரிடம் பேசினோம். இரவு 11.45 மணிக்கு வாட்ஸ்அப் காலில் வந்தார். வேலை காரணமாக சில நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

தன் இரு குழந்தைகளுடன் சாவித்ரி

 

``நானும் அக்காவும் போன வாரமே ஹைதராபாத்தில் 'மகா நடி' ப்ரிவியூ பார்த்துட்டோம். அம்மாவின் வாழ்க்கையை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. அம்மாவுக்கு இந்தத் தலைமுறையிலும் ஃபேன்ஸ் இருக்கிறதை நினைச்சு பெருமையா இருக்கு. அம்மாவின் கடைசி நாள்களில் பக்கத்திலேயே இருந்தவன் நான். அப்போ எனக்கு 14 வயசு. புத்தி தெரிஞ்ச வயசுதான். அம்மாவின் கடைசி நாள்களில் எல்லோரும்  நினைச்சுட்டிருக்கிற  மாதிரி அவங்க தனியா இல்லை. தேங்க் காட்... உண்மையில் என்ன நடந்ததோ, அதை மட்டுமே படத்தில் காட்டியிருந்தாங்க" என்கிறார் நிம்மதிப் பெருமூச்சுடன்.

அடுத்து, சாவித்திரி மகள் விஜய சாமூண்டீஸ்வரியிடம் பேசினோம். அம்மா மற்றும் அப்பா பற்றிய சின்னச் சின்ன சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். 

சாவித்ரி மகன்மகள்

``அம்மாவை, 'அம்மாடி' என்றுதான் அப்பா பாசமா கூப்பிடுவார். அதைப் படத்திலும் காட்டியிருக்காங்க. அப்பாவை, 'கண்ணா' என்றுதான் அம்மா கூப்பிடுவாங்க. என்னையும் தம்பியையும் விஜிக்குட்டி, கண்ணு அப்படின்னு கூப்பிடுவாங்களே தவிர, முழுப் பெயர் சொல்லிக் கூப்பிடதே இல்லை. மற்ற அம்மாக்கள் மாதிரி காலையில் கண் விழிச்சதிலிருந்து நைட்டு தூங்கப்போகும் வரை எங்களோடு அம்மாவால் இருக்க முடிஞ்சதில்லை. ஆனால், எங்களுக்கு ஸ்கூல் லீவு விட்டுட்டா, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூப்பிட்டுப் போயிடுவாங்க. அங்கே போர் அடிச்சதுன்னா, நானும் தம்பியும் ஸ்டூடியோவின் ஒவ்வொரு மாடிக்கும் போய் மத்தவங்களுடைய ஷூட்டிங்கை வேடிக்கைப் பார்த்துட்டிருப்போம். அம்மாவுடன் பட்டாம்பூச்சி மாதிரி நாங்க சுத்தித் திரிஞ்ச சந்தோஷமான காலம் அது.

அம்மாவுக்கு மழையில் விளையாட ரொம்பப் பிடிக்கும். தூறல் ஆரம்பிச்சுட்டாலே, எங்களை வீட்டிலிருந்து லாபினுக்கு கூப்பிட்டு வந்துருவாங்க. குளிரால் உடம்பு நடுங்கும் வரை மழையில் குதிச்சு  குதிச்சு விளையாடுவோம். எல்லோரும் நாய்க்குட்டி, பூனைக்குட்டி, முயல் மாதிரியான பிராணிகளைத்தானே வீட்டில் வளர்ப்பாங்க? நாங்களோ, மான் குட்டி, புலிக்குட்டி எல்லாம் வளர்த்திருக்கோம். மான் சாது மிருகம்னாலும் துள்ளிக்குதிக்கும் விலங்கு இல்லையா? அதனால், மான் வளர்க்கக்கூடாதுனு அப்பா சொல்லிட்டார். ஒரு தடவை, புதுக்கோட்டை மகாராஜா வீட்டுக்குப் போயிருந்தப்போ, அவர் பங்களாவில் இருந்த புலிக்குட்டிகளை நான் ஆசையோடு பார்த்துட்டிருந்தேன். உடனே, ரெண்டு புலிக்குட்டிகளை எனக்குப் பரிசா கொடுத்துட்டார். நாங்களும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டோம். அன்னிக்கு சாயந்திரம் அப்பா ஷூட்டிங் முடிஞ்சு வந்தபோது,  அம்மா, நான், தம்பி மூணு பேரும் புலிக்குட்டிகளோடு விளையாடிட்டிருந்தோம். ரொம்ப டென்ஷன் ஆகிட்டார். 'இன்னிக்கு குட்டியா இருந்தாலும் இது காட்டு விலங்கு'னு சொல்லி, மிருகக்காட்சி சாலையில் ஒப்படைச்சுட்டார். அன்னிக்கு நானும் அம்மாவும் ரொம்ப நேரம் அழுதுட்டிருந்தோம்.

 

ஒவ்வொரு கிறிஸ்துமஸ் அன்னிக்கும் அம்மா எங்களை ஸ்பென்சர் பிளாஸா கூட்டிட்டுப் போயிடுவாங்க. எதுக்கு தெரியுமா? அங்கே இருக்கும் சாண்டா கிளாஸைப் பார்க்க. எங்க காலத்து மால், ஸ்பென்சர் மட்டும்தானே. கடைசியா ஒரு விஷயம், 'நடிகையர் திலகம்' படம் வர்றவரை அம்மாவின் கடைசிக் காலத்துல அவங்க கதியின்றி இறந்தாங்க என்றுதான் எல்லாரும் நினைச்சுட்டிருந்தாங்க. ஆனால், இந்தப் படம் மூலமா அப்படி இறக்கலை. அம்மாவை அப்பா கைவிடலைன்னு உலகத்துக்குச் சொல்லமுடிஞ்சிருக்கு. உண்மையைச் சொன்ன படத்துக்கு நன்றி. இதுபோதும் எனக்கும் என் தம்பிக்கும்'' என்கிற சாமூண்டீஸ்வரி குரலில் நிறைவும் நெகிழ்வும். 

https://www.vikatan.com/news/miscellaneous/125050-legendary-actress-savithris-children-talks-about-her-last-moments.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.