Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்! #MerciWenger

Featured Replies

வெங்கர்... வெற்றிக்கு ஓடியவர்களிடையே கால்பந்தின் அழகியலை ஆராதித்தவர்! #MerciWenger

 

ஓர் அணியின் வரலாறு... அடையாளம்... தனி மனிதன் ஒருவரின் கையில் கொடுக்கப்படுகிறது. அந்த நாட்டில் வேறு எந்த அணிக்கும் இல்லாத சிறப்பு அது. அதை அப்படி எந்த அணியும் எளிதில் ஒரு தனி நபருக்குக் கொடுத்துவிடாது. ஆனால், அர்செனல் கொடுத்திருக்கிறது. பிரீமியர் லீகில் எந்த அணியும் கொண்டிருக்காத 'invincibles' கோப்பையை அர்சென் வெங்கர் கைகளில் கொடுத்துவிட்டது அர்செனல். ஏன்..? அதை அவர்தான் வென்று கொடுத்தார் என்பதற்காக அல்ல. உலகின் ஒவ்வொரு மூளையிலும் இந்த லண்டன் கிளப்பின் லோகோவில் இருக்கும் பீரங்கியின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அவர்தான். அந்த அணிக்கு அவர் அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை, ஒரு வரலாற்றையும் கொடுத்துள்ளார். அணியின் வரலாற்றை வடிவமைத்தவருக்கு அந்தக் கோப்பை பெரிய விஷயமல்ல. ஆனால், அது அவர் கைகளை அலங்கரித்தபோது எமிரேட்ஸ் அரங்கில் எழும்பிய அந்த கோஷம்... 60,000 ரசிகர்களின் ஆரவாரம், பலகோடி ரசிகர்களின் கண்ணீர்... அதுபோதும்! #MerciWenger

வெங்கர்

 

அர்சென் வெங்கர் - 22 ஆண்டுகளாக ஓர் அணியின் பயிற்சியாளராக இருந்து சரித்திரம் படைத்தவர். அதிக பிரீமியர் லீக் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்தவர் என்ற சாதனை படைத்தவர். இதையெல்லாம் தாண்டி, தன் சொந்த ரசிகர்களாலேயே பயங்கரமாக வெறுக்கப்பட்டவர். கடந்த நான்கைந்து ஆண்டுகளில், எவரும் சந்திக்காத விமர்சனங்களைச் சந்தித்தவர். உலகின் பல்வேறு தரப்பட்ட கால்பந்து ரசிகர்களால் கேலி கிண்டல் செய்யப்பட்டவர். கடந்த 3 ஆண்டுகளாக இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருந்தவர், மேனேஜர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டார். இத்தனை நாள்கள் எமிரேட்ஸ் அரங்கில், அவருக்கு எதிராக  'Wenger Out' என்று பதாகை பிடித்தவர்கள், இப்போது 'நன்றி வெங்கர்' (Merci Wenger) என்று உணர்ச்சிகளைக் கொட்டிக்கொண்டிருக்கின்றனர். உலகுக்கு இது பிரிவு உபசாராமாகத்தான் தெரியும். ஆனால், கால்பந்து காதலர்களுக்குத் தெரியும் அவரை எப்படிக் கொண்டாடவேண்டுமென்று. ஏனெனில், அந்த 22 ஆண்டுகளும் அவர் வெற்றிகளுக்காக உழைக்கவில்லை. அவர் எதிர்பார்த்ததும், கொடுத்ததும், கொண்டாடியதும் கால்பந்தின் அழகியல் மட்டுமே!

விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பவர்கள் இரண்டே ரகம்தான். ஒன்று, வெற்றியைக் கொண்டாடுபவர்கள். இன்னொன்று, அந்த விளையாட்டைக் கொண்டாடுபவர்கள். கால்பந்து ரசிகர்களும் அப்படித்தான். எப்படியாவது தங்கள் அணி வெற்றிபெற வேண்டும் என்று நினைப்பார்கள். இல்லையேல், தோற்றாலும், தங்கள் அணியின் ஆட்டத்தை, அழகை ஆழமாக ரசிப்பார்கள். ஒவ்வொரு அணிக்கும் இப்படி இரண்டு வகையான ரசிகர்கள் உண்டு. அப்படி வெற்றிகளைப் பிராதனப்படுத்திய அர்செனல் ரசிகர்களின் போராட்டம் வெங்கரின் 22 ஆண்டுகால சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. பிரீமியர் லீக் வென்று 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக நான்காம் இடமே நிரந்தரம் என்றும் ஆகிவிட்டபடியால் பொறுக்க முடியாத ரசிகர்கள் பொங்கிவிட்டனர். 

#MerciWenger

அர்செனலின் எமிரேட்ஸ் மைதானத்தில் மட்டுமல்லாமல், அவே கேம்களிலும் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். உலகின் மற்ற நாடுகளிலும் அர்செனல் ரசிகர்கள் அதைத் தொடர்ந்தனர். இந்தியாவில் நடந்த அண்டர் 17 உலகக்கோப்பையின்போது, ஐ.எஸ்.எல் போட்டிகளின்போதும்கூட 'Wenger Out' பேனர்கள் காணப்பட்டன. அந்த அளவுக்கு அந்த வார்த்தை உலக அளவில் டிரெண்டிங்கிலேயே இருந்தது. வழக்கமாக கடைசி இரண்டு மாதங்கள் வரை சாம்பியன் பட்டத்துக்கான ரேசில் இருக்கும் அந்த அணி, இம்முறை சாம்பியன்ஸ் லீக் இடத்தையே தாரை வார்த்துக் கொடுத்துவிட்டதால் போராட்டம் பலமடங்கு வலுத்துவிட்டது. ஆனால், இந்த அர்சென் வெங்கர் முதல் வகை விளையாட்டு ரசிகர்களுக்கானவர் அல்ல. விளையாட்டை, அது விளையாடப்படும் முறையை ரசிக்கும் அந்த இரண்டாவது வகை ரசிகர்களுக்கு வெங்கர் 'டெய்லர் மேட்'! வெற்றிகளை முக்கியமாகக் கருதியவர்தான். ஆனால், 'எப்படி வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியம்' என்று சொல்பவர். 

wenger

போட்டியின் தொடக்கத்தில் ஒரு கோல் அடித்துவிட்டால், தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி ஆட்டத்தை வென்றுவிடலாம். தங்களைவிட பலமான அணிகளுடன் மோதும்போது 'டிஃபன்சிவ்' பிளானோடு களமிறங்கி தோல்வியைத் தவிர்த்து, போட்டியை டிரா செய்து 1 புள்ளி பெறலாம். வெற்றிகள் வசப்பட்டுக்கொண்டிருந்தால், கடைசிவரை பதவிக்கு எந்தப் பாதகமும் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட வெற்றிகள் தேவையில்லை என்று கருதுபவர் வெங்கர். வெற்றி என்பது 90 நிமிடத்துக்குப் பின்பு கிடைக்கும் மகிழ்ச்சி மட்டுமே. அதைக் கொடுப்பதல்ல அவரின் நோக்கம். தன் அணி களத்தில் இருக்கும் அந்த 90 நிமிடங்களையும் ரசிகர்கள் கொண்டாடவேண்டும். அவர்கள் ஆடும் கால்பந்தின் அழகில் அவர்கள் சிலாகிக்க வேண்டும். தங்கள் அணி ரசிகர்கள் மட்டுமல்ல, அந்த விளையாட்டை ரசிக்கும் ஒவ்வொருவரும் கால்பந்தோடு கலக்க வேண்டும். அப்படிப்பட்ட ஸ்டைல்தான் வெங்கரின் ஸ்டைல். 

arsene wenger

தன் அணி இப்படித்தான் ஆடவேண்டும் என்று ஒவ்வொரு பயிற்சியாளரும் விரும்புவார். ஆனால், அதற்கேற்ப ஒருசில வீரர்கள் செட் ஆகமாட்டார்கள். பல முன்னணி மேனஜர்களும் இப்படியான பிரச்னைகளைச் சந்தித்துள்ளனர். ஆனால், வெங்கர் இதில் மாஸ்டர். தன் ஸ்டைலை வீரர்களுக்கு அப்படியே புகுத்திவிடுவார். ஒட்டுமொத்த அணியின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும். 11 பேரின் வேவ்லென்த்தும் ஒரே மாதிரி இருக்கும். ஒரு மிட்ஃபீல்டரிடம் பால் இருக்கிறதென்றால் அவர் யாருக்குப் பாஸ் செய்வார், எப்படியெல்லாம் பாஸ் செய்வார் என்பதை அவர் பாஸ் செய்வதற்கு முன்பே மற்ற வீரர்கள் கணித்துவிடுவார்கள். கிரவுண்ட் பாஸா, கிராஸா, லோப் பாஸா எதுவானாலும் அதற்கு தகுந்தாற்போல் அவர்களின் 'மூவ்மென்டை' முடிவு செய்துகொள்வார்கள். மற்ற வீரர்கள் எப்படி ரியாக்ட் செய்வார் என்பதை அந்த மிட்ஃபீல்டரும் கணித்து மிகத்துல்லியமாக அந்த பாஸை நிறைவு செய்வார். Anticipation என்னும் வார்த்தையின் வீடியோ ரெஃபரன்ஸ் - அர்செனல்!

wenger farewell

கால்பந்தை முதல் முறையாகப் பார்ப்பவனுக்கு, கால்பந்து ரசிகர்கள் ரெகமண்ட் செய்யும் அணி அர்செனலாகத்தான் இருக்கும். எந்த இடத்திலும் அவர்களின் ஆட்டத்தில் தொய்வு இருக்காது. எதிரணி 3 கோல்கள் முன்னணியில் இருந்தாலும் கடைசி நிமிடம் வரை கடுமையாகப் போராடுவார்கள். அதனால்தான் மான்செஸ்டர் யுனைடட் அணிக்கு அடுத்தபடியாக, இந்தியர்களின் ஃபேவரிட் பிரீமியர் லீக் கிளப்பாக இருக்கிறது அர்செனல். 2003-04 சீசன். எந்த அர்செனல் ரசிகனாலும் மறந்திட முடியாது. 'இன்வின்சிபிள்ஸ்' (Invincibles).. பேரைக் கேட்டாலே பிரீமியர் லீக் அதிரும். ஒரு போட்டியில் கூடத் தோற்காமல் சாம்பியன் பட்டம் வென்றது அர்செனல். அதுவும் அட்டகாசமான ஃபுட்பால் ஸ்டைலோடு, இன்றுவரை ஐரோப்பாவில் 5 அணிகள் மட்டுமே இத்தகைய சாதனையைச் செய்துள்ளன. வெங்கர் அப்படிப்பட்ட சாதனையை, மிகவும் கடினமான பிரீமியர் லீக்கில் செய்து காட்டியவர். 

wenger

சரி, அப்போ ஏன் வெங்கருக்கு இவ்வளவு எதிர்ப்பு? அதற்குக் காரணம் வெங்கரின் நிர்வாகத் திறன். ஒருவர் நல்ல டீச்சராக இருக்கலாம். ஆனால், எல்லா நல்ல டீச்சரும் ஹெட் மாஸ்டர் ஆகிட முடியாது. வெங்கரின் வீக்னஸ் அதுதான். அதேபோல் ஓர் அணியின் வெற்றி தீர்மானிக்கப்படுவது பந்து தங்கள் வசம் இல்லாதபோது ஒரு அணி எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான். அதாவது, 'performance off the ball' என்பார்கள். அந்த இடத்திலும் தன் அணியை மெருகேற்றத் தவறிவிட்டார் வெங்கர். அதனால்தான் பெரிய அணிகளுக்கு எதிராக அவர்கள் அதிக கோல்கள்விட நேர்ந்தது. உண்மையில், அவர் மிகச்சிறந்த பயிற்சியாளர். நல்ல tactician. ஆனால், அவர் சிறந்த மேனேஜரா என்பது மிகப்பெரிய கேள்வி. மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரொனால்டினோ போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களை ஒப்பந்தம் செய்யக்கூடிய வாய்ப்பை வீணடித்திருக்கிறார் இந்த பிரெஞ்சுப் பயிற்சியாளர். 

#MerciWenger

ஆனால், ரசிகர்களின் கோபமெல்லாம், இவர் ஓரளவு சூப்பர் வீரர்களைக்கூட வாங்காமல் சுமார் வீரர்களாக வாங்கியதுதான். போதாக்குறைக்கு ஃபேப்ரகாஸ்(Fabregas), வேன் பெர்ஸி(Van Persie) என்று அணியின் நம்பிக்கை நாயகர்கள் வெளியேறத் தயாரானபோது, 'நான் என்ன செய்ய முடியும்' என்று அமைதி காத்தார். அதிக லாபம் வந்தபோதும், அணியின் முன்னேற்றத்துக்காக முதலீடு செய்யாமலேயே இருந்த நிர்வாகத்துக்கு எதிராக பெரிதாக குரல் எழுப்பவும் தயங்கினார். அதனால், 'அதே டெய்லர், அதே வாடகை' மோடில் தொடர்ந்து நான்காம் இடமே பெற்றுக்கொண்டிருந்தது. பரம வைரி டாட்டன்ஹாம் இரண்டு முறை டைட்டிலுக்கு டஃப் கொடுத்தது. கத்துக்குட்டி லெய்செஸ்டர் கோப்பையே வென்றுவிட்டது. அர்செனல் தூங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால், ரசிகர்கள் தூங்கவில்லை. 

football managers

எத்தனை எதிர்ப்புகள் வந்தபோதும் அசராமல் நின்றார் வெங்கர். ஒருமுறை கோப்பை வென்றுவிட்டுத்தான் விடைபெறுவேன் என்று சபதம் எடுத்திருந்தாரோ என்னவோ! தங்கள் சொல்லுக்கு எதிர்ச்சொல்லே சொல்லாத அந்த மனிதனை நீக்க அர்செனல் நிர்வாகத்துக்கும் மனமில்லை. அதனால்தான் மற்ற அணிகள் போர் அடிக்கும்போதெல்லாம் மேனேஜரை மாற்றிக்கொண்டிருந்தும், 22 வருடங்களாக இவரையே 'பெட்'டாக வைத்திருந்தனர். அதனால் நிர்வாகத்தின் மீதிருந்த அதிருப்தியெல்லாம் அறியாப் பிள்ளை வெங்கர் மீது மொத்தமாகத் திரும்பியது. மற்ற அணி ஆதரவாளர்கள் எல்லாம் அந்த மனிதனைக் கிண்டல் செய்யும் அளவுக்கு ஆனது. எல்லாம் எல்லையை மீற, இப்போது அந்த முடிவை அறிவித்துவிட்டார் வெங்கர்.

 

அர்செனல் இனி வேறொரு புதிய மேனேஜரை நியமிக்கலாம், அவர் மீண்டும் பிரீமியர் லீக் சாம்பியன் ஆகலாம், ஐரோப்பிய அரங்கில் கூட ஜாம்பவானாக உருவெடுக்கலாம், ஒவ்வொரு 90 நிமிடமும் முடிந்த பின் அர்செனல் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கலாம். ஆனால், அந்த 90 நிமிடத்தை அவர்களால் ரசிக்க முடியுமா, அந்த கால்பந்து ஸ்டைலில் உலகம் மறந்து சிலிர்க்க முடியுமா..? மிகச்சிறந்த மேனேஜர் கிடைத்தாலும் வெங்கர் போன்ற ஒரு பயிற்சியாளர் அர்செனலுக்குக் கிடைப்பது சந்தேகம்தான். இதுநாள் வரை அர்செனலின் ஃபுட்பால் ஸ்டைலுக்கு இருந்த உலகளாவிய மதிப்பு தொடருமா என்பதும் சந்தேகம்தான். எமிரேட்ஸ் அரங்கில் விடைபெற்றபோது "கடைசியாக ஒரேயொரு வார்த்தை சொல்ல ஆசைப்படுகிறேன். I will miss you" என்றார் வெங்கர். ஆனால், தங்கள் அணிக்காக இத்தனை ஆண்டுகள் உழைத்த இந்த மனிதனை அர்செனல்தான் மிஸ் செய்யும். சொல்லப்போனால், கால்பந்தின் அழகியலை ரசிக்கும் ஒவ்வொரு கால்பந்து ரசிகர்களும் இவரை மிஸ் செய்வார்கள் #MerciWenger

https://www.vikatan.com/news/sports/124982-arsene-wenger-says-good-bye-to-arsenal-after-22-years.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.