Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு

Featured Replies

தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு

 

 

 
sterlite1jpg

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்த அதிகாரிகள். | படம்: என்.ராஜேஷ்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள அந்த ஆலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும் அங்குள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒருபகுதியாக கடந்த 22-ம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். திடீரென ஏராளமானோர் கூடியதால், அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசியது காவல்துறை. போராட்டக்காரர்கள் அதற்கு மசியாமல் போகவே, அவர்கள் மீது தடியடி நடத்தினர். அதற்கும் போராட்டக்காரர்கள் அசைந்து கொடுக்காததால், துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல்துறை.

 
 

இந்த துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்தனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. பலரும் இந்த வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் வலியுறுத்தினர். துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவரிடமும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

lstjpg

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் மக்கள் | படம்: லெட்சுமி அருண்,

 

சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியிடம் தூத்துக்குடி நிலவரம் குறித்து பகிர்ந்துகொண்டார். அதற்குப் பிறகு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது குறித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் பழனிசாமி பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாகத் தெரிவித்தார்.

அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தனர். மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தூத்துக்குடி சார் ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் நல பொறியாளர் லிவிங்ஸ்டன், தூத்துக்குடி வட்டாட்சியர் சிவகாமி சுந்தரி ஆகியோர் ஆலையின் பிரதான நுழைவு வாயிலை பூட்டி சீல் வைத்தனர். அப்போது ஆலை தரப்பில் தலைமை பாதுகாப்பு அதிகாரி சுமித் பர்மன் உடனிந்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article24016181.ece?homepage=true

  • தொடங்கியவர்

இதுவரை எப்போதெல்லாம் ஸ்டெர்லைட் மூடப்பட்டது? எப்படி மீண்டும் திறக்கப்பட்டது? #Recap

 
 

மொத்தம் 13 உயிர்களைக் காவு வாங்கிய பின் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்குத் தடை விதிப்பது புதியது இல்லை. பலமுறை தடையை உடைத்து மீண்டும் தனது கதவைத் திறந்திருக்கிறது, ஸ்டெர்லைட் நிறுவனம். இதற்குப் பின்னால் மிகப்பெரிய வரலாறும் இருக்கிறது. 

ஸ்டெர்லைட்

 

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டபோதே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து மக்களும் போராட்டத்தில் இறங்கினர். சில கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்துக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலைக்கு எதிராக 2 வருடங்களாகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், தகுந்த நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்குதல், மரம் நடுதல் என ஸ்டெர்லைட் மக்களைக் கவரத் தொடங்கியது. மேலும், அப்போது நிகழ்ந்த சாதிச் சண்டை எனப் பல காரணங்களால் போராட்டம் நீர்த்துப் போனது. 

1996-ம் ஆண்டு மக்களின் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்துவிட்டு இயங்கிய ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்சைடுடன் நச்சு வாயுக்களும் வெளியாகின. இதனால் அருகில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டன. வழக்கம் போல மக்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருபடி மேலே போய் ஆலைக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர்.

ஸ்டெர்லைட்

1998 அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. நாக்பூரைச் சேர்ந்த தேசியச் சுற்றுச்சூழலுக்கான பொறியியல் ஆராய்ச்சி மையம் என்ற `நீரி' ( National Environmental Engineering Research Institute ) அமைப்பு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்தக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், ``ஆலை வளாகத்திலும் அதனைச் சுற்றி உள்ள இடங்களிலும் உள்ள நிலத்தடி நீர் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. சுற்றுப்புறக் கிராமங்களில் நிலத்தடி நீரில் குரோமியம், தாமிரம், ஈயம், காட்மியம், குளோரைட், ஃபுளோரைட், ஆர்சனிக் தாதுப் பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது. இதனால் உடலுக்குப் பெரிய ஆபத்து இருக்கிறது" எனத் தெரிவித்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு உடனடியாக ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த அறிக்கையில் உள்ள பிழைகளைத் திருத்திவிட்டோம் என்று சொல்லி உயர் தீமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது, ஸ்டெர்லைட் நிர்வாகம். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவ்வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ``ஆலை இரண்டு மாதங்கள் இயங்கட்டும். அதன் பின்னர் `நீரி' அமைப்பு ஸ்டெர்லைட்டில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்" எனத் தீர்ப்பளிக்க, மீண்டும் திறக்கப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை. 

முதல் அறிக்கையில் காட்டமாகப் பதிவு செய்திருந்த நீரி அமைப்பு, இரண்டாவது ஆய்வின் அறிக்கையில் நீர்த்துப்போன தகவல்களைத் தந்தது. மாறிப்போய் இருந்தது. இதனால் தொடர்ந்து இயங்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது வேதாந்தா நிறுவனத்துக்கு உற்சாகத்தையும், உள்ளூர் மக்களுக்கு வேதனையையும் கொடுத்தது. இங்குதான் தனது முதல் தடையை உடைத்து மீண்டும் இயங்கியது ஆலை. 

உயர் நீதிமன்றம்

இதற்கிடையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் 1996 நவம்பர் 7-ம் தேதி முதன் முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 2010 செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பு கிடைத்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்ற சென்றதும் ஆலை நிர்வாகம். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் `உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஏற்கும்படியாக இல்லை. நூறுகோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து மீண்டும் ஆலையை இயக்கலாம்" எனத் தீர்ப்பளித்தது. 
இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி வைகோ சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், 2013 ஏப்ரல் 2-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைச் சீராய்வு செய்து திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். 2012 செப்டம்பர் 28-ல் ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் 2013-ம் ஆண்டு நடந்த பெரும் விபத்து காரணமாக, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைபடி ஸ்டெர்லைட்டை இழுத்து மூடினார். 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருந்தாலும், தமிழக அரசின் சார்பில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூட உத்தரவிட்டதால் ஆலையைத் திறக்க முடியவில்லை. அதற்காகத் தென்னிந்திய தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிறுவனம் வழக்கை தாக்கல் செய்தது. அதில் தமிழக அரசின் சார்பில் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டாலும், அவ்வழக்கை டெல்லி பசுமைத் தீர்ப்பாய அமர்வுக்கு மாற்றியது தென்னிந்திய தேசியப் பசுமைத் தீர்ப்பாயம். வழக்கம்போல, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து நச்சு வாயு வெளியேறியதற்கான அறிவியல் ஆதாரம் இல்லாததால் அந்த ஆலையைத் திறக்க டெல்லி தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. 2013-ல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி அளித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டனர். 

தடியடி

20 ஆண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் சிப்காட் விரிவாக்கப் பகுதியில் தனது 2-வது ஆலையின் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது, ஸ்டெர்லைட் நிர்வாகம். இதை எதிர்க்கும் வகையில் 22.05.2018-ம் தேதியன்று குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கி, ஸ்டெர்லைட்டை மூடிட வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பேர் தூத்துக்குடியில் 144 தடையை மீறி பேரணியாகச் சென்றனர். காவல்துறையினர் போராடிய மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிலையில் சென்னை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் `ஸ்டெர்லைட் ஆலையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்துக்குத் தடை' விதித்துள்ளது. 

 

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவன உரிமையாளர், அனில் அகர்வால் `ஸ்டெர்லைட்டை மீண்டும் திறப்போம்' என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு நடந்த பின்னர், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க விடமாட்டோம் என உறுதி காட்டுகிறார்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர். ஆனால், இப்போது தமிழக அரசு அரசாணை மூலமாகச் சொல்லியிருக்கும் ஸ்டெர்லைட் மூடலை நிச்சயமாக அந்நிறுவனம் உடைக்க முயலும்; வரலாறும் அதைத்தான் சொல்கிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/126152-when-was-the-last-time-sterlite-closed-and-how-did-it-got-reopened.html

  • தொடங்கியவர்

மராட்டியர்களால் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் காலூன்றியது எப்படி?

உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த ஆலை எப்படி பயணித்து வந்திருக்கிறது என்பது குறித்த ஒரு பார்வை.

ஸ்டெர்லைட் ஆலை

கடந்த 1992-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் கொங்கன் பிராந்தியத்தில் உள்ள ரத்னகிரியில், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று கூறி, முதன் முதலில் கால் பதிக்க ஸ்டெர்லைட் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. கட்டுமானப் பணிகளும் துவங்கிவிட்டன. ஆனால், அந்தப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பால், அடுத்த ஆண்டே அந்தத் திட்டத்தை நிறுத்த அரசு உத்தரவிட்டது.

அடுத்த ஆண்டே, தமிழகத்தில் அந்த ஆலையின் பிரவேசம் துவங்கியது.

கடந்த 1994-ஆம் ஆண்டு தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கியது. 1995-ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது.

உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் அதை எதிர்த்து பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

மராட்டியர்களால் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் காலூன்றியது எப்படி?படத்தின் காப்புரிமைREUTERS

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி அனுமதி வழங்கலாம் என்று நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவிட்டது.

நீதிமன்ற ஆணையின் பரிந்துரை என்ன?

1996-ல் தன்னார்வ அமைப்பு தொடர்ந்த வழக்கில், நீரி என்ற தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல்மாசு தொடர்பாக ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தது. 1998-ல் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல்பாடுகள் காணப்படுவதாகவும் கூறியிருந்தது.

அதனடிப்படையில், 1998-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி அந்த ஆலையை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த மாதம், தனது உத்தரவை மாற்றியமைத்த நீதிமன்றம், ஆலை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கியதுடன், நீரின் அமைப்பு குறித்து மீண்டும் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அடுத்த இரு மாதங்களுக்குள் அறிக்கை அளித்த நீரி, அந்த ஆலை முழுத்திறனுடன் செயல்பட அனுமதி வழங்கியது.

இந்திய உச்ச நீதிமன்றம்

நீதிமன்ற ஆணைப்படி, சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான மதிப்பீடு சோதனை நடத்த ஆலை முழுத்திறனுடன் இயங்கவும் பரிந்துரைத்தது. அதன்பிறகு, பல முறை, அந்த ஆலை அனுமதிக்கப்பட்ட அளவை விட பலமடங்கு அதிகமாக உற்பத்தியில் ஈடுபட்டதாகவும் புகார்கள் வெளிவந்தன.

அதன்பிறகு தொடர்ச்சியாக பொதுமக்கள் தரப்பிலிருந்து பல புகார்கள் கூறப்பட்ட நிலையில், 2004-ல் உச்சநீதிமன்றக் குழு மேற்கொண்ட ஆய்வில் பல விதிமீறல்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்டெர்லைட் ஆலையில் பெரும் வாயுக்கசிவு ஏற்பட்டதாக வந்த புகாரை அடுத்து, அந்த ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், அந்த வாயுக்கசிவு தங்களால் ஏற்பட்டதல்ல என்றும், சிப்காட் தொழில் வளாகத்தில் உள்ள வேறு எந்த ஆலையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று ஸ்டெர்லைட் வாதிட்டது.

ஆனால், அதற்கு அடுத்த மாதம், அந்த ஆலை செயல்பட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், அந்த ஆலையின் சுற்றுச்சூழல் மாசு காரணமாக பாதிக்கப்படும் மக்களுக்காக 100 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அந்த உத்தரவு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிப்பு

மேலும், அந்த ஆலை உற்பத்தித் திறனை அதிகரித்தால், அதற்கு ஏற்றவாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிய விதிமுறைகளை அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தது.

ஸ்டெர்லைட்படத்தின் காப்புரிமைVEDANTA Image captionஸ்டெர்லைட் ஆலை.

இந்த ஆண்டு, ஜனவரி மாதம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அந்த ஆலையில் சோதனை நடத்தியது. அந்த ஆலை, விதிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்று கண்டறிந்த வாரியம், 90 நாள் கெடு விதித்தது. அதன்பிறகு, ஏப்ரல் மாதம் மீண்டும் ஆய்வு நடத்தி, அப்போதும் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறியது.

அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் மாதம் அந்த ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டிருக்கிறது.

இரண்டாவது பிரிவின் நிலை

இதே நேரத்தில், கடந்த ஆண்டு இந்த ஆலையின் இரண்டாவது பிரிவைத் துவக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஒப்புதல் வழங்கியது.

இதை எதிர்த்து, பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. பிப்ரவரி மாதம் அந்தப்பிரிவுக்கான கட்டுமானப்பணி துவங்கியது.

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை Image captionமூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை

இந்நிலையில், சமீபத்தில் வெளியான சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவில், அந்த கட்டுமானப் பணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் அனுமதிக்கு, சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பான ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டது.

மேலும், நான்கு மாதங்களுக்குள் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது, ஆலையின் முதல் பிரிவை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இரண்டாவது பிரிவும் சாத்தியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-44286013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.