Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எலியம் - உமா வரதராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எலியம் - உமா வரதராஜன்

 

கொஞ்சம் பழைய வீடுதான். ஆனால் அது ஓர் அழகான வீடு. பக்கத்துக் கொன்வென்றில் இருந்து வாத்தியம்மா சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை அப்படியே ஒப்புவிக்கும் பாலர்களின் ஒருமித்த குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும். வைத்தியசாலை வெகு கிட்டத்தில் இருந்தது. சந்தை கூட அவ்வளவு தூரத்தில் இல்லை. இவன் வீட்டுக்கு நேர் எதிரே புகைப்படப் பிடிப்பு நிலையம் ஒன்று இருக்கிறது. தேவையானால் இவன் தன் வீட்டிலிருந்தே ஒப்பனைசெய்து கொண்டுபோய்ப் படம் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய பௌடரையும், ஒல்லாந்தர் காலத்து அழுக்கு நிரம்பிய சீப்பையும் பாவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்குப் பக்கத்திலுள்ள பேக்கரியில் பாண் போடுவார்கள்; 'கேக்'கும் போடுவார்கள். ஆனால் இரண்டுக்கும் இடையில் அதிக வித்தியாசமிருப்பதாக இது வரை தெரியவில்லை. பாண் வேகும் முறுகலான மணம் அவ்வப்போது வீசிச் கொண்டிருக்கும். 

இவையெல்லாம் அந்த வீட்டுக்கு குடிவந்த அவனை சந்தோஷமடையச் செய்தன. ஆனால் அந்த வீட்டில் எலிகள் இருக்கும் என அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. 

எலிகளை அவனுக்கு எப்போதுமே பிடிக்காது. இவனைப் போலவே எலிகளைப் பிடிக்காத ஒருவன்தான் உயிரியல் பயிற்சி வகுப்புக்கு எலிகளை வெட்டி ஆராயும் முறையைக் கொணர்ந்திருக்க வேண்டும். எலிகளை மாத்திரமல்ல-பல்லி, கரப்பான் பூச்சி, பூரான், நத்தை... எல்லாவற்றுக்கும் மேலாக மிக அவதியுடன் கழிப்பறைக்குள் நுழையும் போது வழி மறித்துக் கொண்டு பேந்தப் பேந்த விழித்தபடி காத்துக் கொண்டிருக்குமே அந்தத் தேரை... இவற்றையெல்லாம் அவனுக்கு கண்ணில் காட்டக் கூடாது.

எலி பிள்ளையாரின் வாகனம் என அம்மா அடிக்கடி செல்லுவா அதனால் எலியை துன்புறுத்துவது தெய்வ நிந்தனையாம். ஆனால் பள்ளி நாட்களில் எலி வேண்டும் என உயிரியல் வாத்தியார் சொல்லியதைத் தெரிவித்த போது அம்மா மௌனமே சாதித்தாள். அன்று மாமா என்னமாய்க் கஷ்டப்பட்டு எலிபிடித்துத்தந்தார். எதிர்காலத்தில் ஒரு பெரிய வைத்திய கலாநிதியாக ஆஸ்பத்திரி விறாந்தையில் இவன் உலாவருவது போலவும், இவன் பின்னால் இவனுடைய 'ஸ்டெதெஸ்கோப்'பை ஏந்திய படி தான் வருவது போலவும் மாமா எலியை அமுக்கிப் பிடித்த அந்தத் தருணத்தில் கனவு கண்டிருக்கக் கூடும். 

எலிகள் என்றதும் அந்தத் திருட்டு முழிகள்தான் முதலில் மனதில் தோன்றுகின்றன. தேங்காய், மாங்காய், அரிசி, பருப்பு...... எவற்றை இந்த எலிகள் விட்டுவைக்கின்றன? நேற்று வாங்கிய புத்தம் புது மணச்சவர்க்காரத்தை இன்று காணவில்லை. எலிக்கு எதற்கு மணச் சவர்க்காரம் என அவனுக்கு புரியவில்லை. ஒரு வேளை எலிஸாவுக்குக் கொண்டு போய்ச் சேர்க்காவிட்டால் முகத்தைத் திருப்பிக் கொள்ளுமோ? (எலியின் மனைவி அல்லது காதலியின் பெயர் எலிஸாவாக இருக்க வேண்டும் என்பது அவனது ஊகம்)

எலிகளுக்கும் அவனுக்குமிடையே யுத்தப்பிரகடனம் நேற்றிரவு ஏற்பட்டுவிட்டது. லதா மங்கேஷ்காரின் மீராபஜனையை அவன் நேற்றிரவு கேட்டுக்கொண்டிருந்தான். எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் மீரா பஜனுக்கும், இதற்கும் உள்ள பிரத்தியேக விசேஷங்கள் குறித்து அவன் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோது தொப்பென்று ஓர் எலி கட்டிலில் வீழ்ந்தது. அது வழி தடுமாறி அவனுடைய கால் வழியாய்க் கடக்க முற்படுகையில், அவன் காலை உதறிக் கட்டில்மீதேறித் துள்ளிக் குதித்தான். கட்டில் என்பதைத் செய்யும் தச்சர்கள் படுப்பதை உத்தேசித்தே செய்திருப்பார்கள். அவன் இவ்விதம் துள்ளிக் குதிப்பான் என முன்னரே தெரிந்திருந்தால் இன்னமும் பலமான மரத்தை கட்டில் செய்த தச்சன் இவனுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். கட்டிலின் குறுக்குப் பலகை சடசடவென்ற ஒலியுடன் முறிய அவனுடைய ஒற்றைக் கால் பள்ளத்தில் இறங்கிப் தரையைத் தொட்டது. கைகளை மெல்ல ஊன்றியவாறு வெகு பிரயாசையுடன் அவன் தன் காலை விடுவித்தான். முழங்கால் வலித்தது. தீக்குச்சி அளவில் முழங்காலில் ரத்தக்கீறல் ஒன்று.

இந்தச் சம்பவத்துடன் எலியை அவன் தன் மாபெரும் எதிரியாகப் பிரகடனம் செய்தான். தேரை, தவளை, பாம்பு, பல்லி, ஓணான், பூரான், கரப்பான் ...... இவற்றைப்பற்றிக் கூட இந்தளவுக்கு அவன் கவலைப்பட்டதில்லை. அவற்றால் இந்தளவு அவஸ்தையை அவன் அனுபவித்தது கிடையாது. 

அவனது வீட்டின் பின்புறம் ஒரு பாழ்வளவு இருக்கிறது. குட்டையாகவும், நெட்டையாகவும் பற்றைகள் அங்குண்டு. அந்த வளவுக்குள் வெறுங்காலாய் நடந்தால் உடைந்த போத்தல் ஓடுகளோ, கறள் ஆணிகளோ, முட்களோ காலில் சேதம் விளைவிப்பது நிச்சயம். குப்பை கொட்டும் பிரதேசமாக அயலவர்கள் அதை ஆக்கி வைத்திருந்தனர். அந்த வளவு மூலையில் ஓர் அனாதைக் கார் குப்புறக் கிடந்தது. இந்த நாடு இறக்குமதி செய்த முதல் நூறு கார்களுள் இதுவும் ஒன்றாக இருந்திருக்கும். இந்தக் காரை வாங்கியவனின் பேரனோ அல்லது கொள்ளுப்பேரனோ காலப்போக்கில் இந்தக் காரின் வடிவமைப்பையும், தாத்தாவின் ரசனையையும் சகிக்க முடியாமல் தீ மூட்டிக், கொளுத்தி இப்படிப் போட்டிருக்க வேண்டும். 

தனக்கு அச்சம், அருவருப்புத் தரும் அத்தனை ஜீவராசிகளும் அந்தப் பாழ்வளவுக்குள் இருந்துதான் படையெடுத்துவருவதாக அவனுக்குத் தோன்றிற்று. பாழ்வளவுக்கும், இவன் வீட்டுக்கும் நடுவில் இருக்கும் வேலியில் இரவில் சரசரப்புக் கேட்கும் போது அது பாம்பா, எலியா, வேறெதுவோ எனப் புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தான். 


அவன் ஒரு தீர்மானத்திற்கு வந்தான். அவனுக்கு நல்ல ஞாபகம். பாட்டியுடன் அவன் இருந்த காலத்தில் அவள் ஒர் எலிப்பொறி வைத்திருப்பாள். பாட்டியின் வீட்டு அறையுள் அடுக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளைத்தேடி வரும் எலிகள் இவனைப் போலவே பாட்டிக்கும் அந்தக் காலத்தில் பெரும் பிரச்சினையைத் தந்தன. தேங்காய்த் துண்டை நறுக்கியெடுத்து, நெருப்பில் சுடுவாள் பாட்டி. பின்னர் பொறியில் பொருத்திவிட்டு இவனும், பாட்டியும் தூங்கப் போவார்கள். எனினும் எலிகள் ஒரு நாளும் அகப்படவில்லை. பொறியில் தேங்காய்த் துண்டு அப்படியே இருக்கும், ஒவ்வொருநாளும் மூட்டையிலிருந்து கொட்டுப்பட்டு, சிதறிக் கிடக்கும் நெல்மணிகளுக்கு குறைவில்லை. 

இப்போது எலிப்பொறியை நம்புவதைத் தவிர இவனுக்கும் வேறு வழி இருக்கவில்லை. கடைக்காரன் நாலைந்து விதமான எலிப்பொறிகளைத் தூக்கிக் காண்பித்தான். பாட்டியின் வீட்டுப் பொறிக்கும், இந்தப் பொறிக்கும் எவ்வளவு வித்தியாசங்கள். அது வெறும் தகரத்துண்டு. இந்தப் பொறிகளின் வடிவமைப்பே அலாதியானது. இந்தப் பொறிகளைத் தயாரித்த நாட்டின் பெயரைக் கடைக்காரன் தெரிவித்த போது அவனுடைய நம்பிக்கை மேலும் அதிகரித்தது. இந்த உலகுக்கும் அப்பால், பல கிரஹங்களிலும் எவ்வளவு சாதனைகள் புரிந்தவர்கள், புரிகின்றவர்கள் அந்த நாட்டினர். அவர்களுடைய தொழில்நுட்பத்தின் முன்னால் இந்தச் சுண்டெலிகள் எம்மாத்திரம்? அவன் ஒரு பொறியைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டான்.

பாட்டியின் உத்தியை அவன் கையாளவில்லை. தேங்காய்த் துண்டுக்குப் பதிலாக நெத்திலிக் கருவாட்டை சூடு காட்டிப் பொறியில் பொருத்தி வைத்தான். எலிகள் அதிகளவில் புழங்கிய பிரதேசம் எனக் கருதப்பட்ட இடத்தில் பொறி வைக்கப்பட்டது. வாய்திறந்து காத்திருக்கும் முதலை போல அது அப்போது தோன்றியது. 

அவன் தூங்கப்போனான். தூக்கம் வரவில்லை. கருவாட்டுக்காக மூஞ்சியை நீட்டி, மரண அடி வாங்கப்போகும் எலியை நினைத்துக் கொண்டதும் குதூகலம் சூழ்ந்துகொண்டது. ஏதோ ஒரு கட்டத்தில் கேட்கப்போகும் எலியின் கீச்சிடலுக்காகக் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டிருந்த அவன் ஒரு கட்டத்தில் தவறி, அப்படியே தூங்கியும் போனான். 

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக எலிப்பொறியைப் பார்க்க அவன் ஓடிப்போனான். எலிப்பொறியில் இருந்த கருவாட்டுத் துண்டை எறும்புகள் மொயத்திருந்தன. எலிகள் எல்லாம் சைவத்தைத் தழுவிவிட்டனவா என எண்ணி அவன் எரிச்சலடைந்தான். 

மறுநாளும் பொறியில் சுட்ட கருவாடு இடப்பட்டது. பொறி வைக்கப்படும் இடத்தை மட்டும் அவன் மாற்றிக்கொண்டான். படுப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த போது பொறி மேலெழும்பி விழுந்ததற்கு அடையாளமான ஒரு சத்தமும், எலியின் கீச்சிடலும், பொறி இழுபட்டுச் செல்லும் ஓசையும் கேட்டன. அவன் பரபரப்புடன் ஓடிப்போய் விளக்கைப் போட்டான். ரத்தச் சொட்டுக்கள் நிலத்தில் கிடந்தன. கழுத்து நெரிபட்ட எலியின் பற்கள் அகோரமாய் வெளியில் தெரிந்தன. சண்டையிடும் நாய்களின்; வாய் பிளந்து, மேலுதடு விரிந்து பற்கள் தெரியும் தோற்றம். 

'ஹா! முதற்பலி'. 
குரூரமான ஒரு சந்தோஷம், வெற்றிப் பெருமிதம் எல்லாம் அவனை ஆட்கொண்டிருந்தன. வெளியில் வந்து, மண்ணைக் கிண்டி, சின்ன மடுவொன்றைப் போட்டான். எலியைப் பொறியினின்று மெதுவாக எடுத்து, அதன் வாலைப் பிடித்தவாறு கொண்டுபோய் மடுவில் வீழ்த்தினான். பொறியை நன்றாகக் கழுவி, துடைத்து எண்ணெய் தடவினான். எலிகள் சாமர்த்தியம் மிக்கவை. அவற்றுடைய 'ரத்தத்தின்' வாடைகூட 'ரத்தத்தின் ரத்தங்களு'க்கு வீசக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். மறுபடியும் பொறி கருவாட்டுத் துண்டு வைத்து நாணேற்றப்பட்டது. அவன் மிக மகிழ்ச்சியுடன் தூங்கிய நாளது. 

காலையில் எழுந்ததும் ஒரு விரிந்த மலர் போல மறுபடியும் சந்தோஷம் காத்திருந்தது. அடுத்த எலி! வயிற்றுப் பாகம் அரைவாசி பிளந்தபடி பொறியில் கிடந்தது இந்த எலி. பொறியின் உதவிகொண்டு உலகத்தின் அத்தனை எலிகளையும் ஒழித்துக்கட்டுவேன் என அவன் தனக்குள் ஒரு தரம் சொல்லிக் கொண்டான். கர்ணனுக்குக் கிடைத்த நாகாஸ்திரத்தை ஒத்த இந்த எலிப்பொறியைத் தடவிப் பார்ப்பதில் சந்தோஷமடைந்தான். 

அலுவலகம் சென்றதும், கையெழுத்துக்கூடப் போட மறந்து அங்குள்ள நண்பர்களிடம் மிகவும் மகிழ்ச்சியாகச் சொன்னான். ''ஒரே இரவில் ரெண்டு எலிகள் குளோஸ்! ஹா.... ஹா....'' 

அவர்கள் அவனை ஒருவிதமாக உற்றுப் பார்த்தனர். 'இவர்களைப் போன்ற விபரமறியாத பேர்வழிகள் ஒரு காலத்தில் ஆர்கிமிடீஸை கூட அப்படித்தான் பார்த்திருப்பார்கள், பரவாயில்லை' அவனுக்குப் புரியவில்லை.

''நம்பவில்லையல்லவா?...... நம்பமாட்டீர்கள்..... இரண்டு எலிகள்! ஒரே ராத்திரியில் முடித்துவிட்டேன் நண்பர்களே''

நண்பர்கள் அதற்குப் பிறகு ஒன்றும் பேசவில்லை. அவர்களுடன் மேற்கொண்டு இது சம்பந்தமாகப் பேச அவனும் விருப்பமில்லாதவனாகவே இருந்தான். 'அப்பாவி உயிர்கள்' என்று கூறி எலிகளுக்காக அவர்கள் வக்காலத்து வாங்கக்கூடும். அல்லது ஜீவகாருண்ய சங்கத் தலைவர் யாருக்காவது இந்த விஷயத்தை இவர்கள் தெரியப்படுத்த முனையலாம். அவரும் தன் கடிதத்தாள் ஒன்றை விரயம் செய்து 'அப்பாவி உயிர்களை கொல்லும் உன்மேல் நாங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கலாகாது' என மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பக் கூடும். எனவே தற்போதைக்கு அவையடக்கம் ரொம்பவும் முக்கியம் என அவனுக்குத் தோன்றியது. 

அன்றிரவு மீண்டும் பொறி தயார் நிலையில் வைக்கப்பட்டது. அகழி நிறைய முதலைகளும், கோட்டையின் அரண்கள் தோறும் ஆயுதம் ஏந்திய சிப்பாய்களும் கிடைக்கப்பெற்ற அரசனாகத் தன்னை நினைத்து அவன் படுக்கைக்குப் போனான். 

ஆனால் அன்றிரவு எதிர்பாராத இரு சம்பவங்கள் நடந்தன. ஒன்று. பின்னிரவில் கொஞ்சம் மழை பெய்தது. அந்த மழைச் சத்தத்தைக் கேட்டபடியே அவன் தூங்கிப் போனான். மற்ற சம்பவம் முக்கியமானது. எலியொன்று தன்னிஷ்டத்துக்கு நேரம் எடுத்து, அவனுடைய நேசத்துக்குரிய சட்டையொன்றை குதறிவிட்டுப் போயிருந்தது. வரைபடத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாக் கண்டத்தை ஞாபகப்படுத்தும் ஒரு கிழிசல் சட்டைப் பையிருக்கும் இடத்தில் தோன்றியிருந்தது. 

காலையில் சட்டையைக் கையிலெடுத்து அவன் வெகு நேரம் வரை திகைத்துப் போயிருந்தான். அந்தச் சட்டையை இனி அணிய முடியுமென அவனுக்குத் தோன்றவில்லை. கிழிசல் உள்ள சட்டைகளை அணிகின்ற ஒரு நாகரீகம் இந்த நாட்டில் வரும் வரைக்குமாவது அவன் பொறுத்திருக்க வேண்டும். 

உலகத்தின் கெட்ட வார்த்தைகளை எல்லாம் சொல்லி அவன் எலிகளை திட்டினான். வைத்த இடத்தில் பொறி அப்படியே இருக்க, கருவாடு மட்டும் காணாமற்போன மாயம் ஆச்சரியம் ஊட்டியது. எறும்புகள் அபகரித்தனவா அல்லது சாமர்த்தியம் மிக்க எலிகளின் 'தோலிருக்க சுளை முழங்கும்' சாகஸவேலையா என அவன் யோசித்தான். முதல் தடவையாக பொறியின் மீது அவன் நம்பிக்கை இழந்தது அப்போதுதான். 

எலிகளின் தொல்லைகுறித்து யாரிடமாவது கூறி ஆலோசனை கேட்க வேண்டுமென இப்போது அவனுக்குத் தோன்றியது. பக்கத்து வீட்டுக்காரரான லோரன்ஸை நாடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. லோரன்ஸை நாடுவதற்கு சில காரணங்கள் உண்டு. 

லோரன்ஸ் கோழிகளைச் சத்தமில்லாமல் அமுக்குவதில் அதிதிறமைசாலி. இரவில் மரக்கிளைகளில் தங்கிவிடும் கோழிகளை எவ்விதச் சத்தமுமில்லாமல் கைப்பற்றுவது எப்படி என்பதை ஒரு தடைவ அவர் காட்டித் தந்திருக்கிறார். பொந்துக்குள் உடும்பொன்று ஒரு நாள் போய்ப் புகுந்து கொண்டது. உடும்பின் வால் மாத்திரம் வெளியிலெடுத்து சுழற்றிய வேகமும் அற்புதம். மறுகணம் நிலத்தில் முகம் மோதி அவருடைய கையில் இருந்து விழுந்தது உடும்பு. கூடுமானவரை அவருடைய வேட்டை அனுபவங்களை கேட்பதை அவன் தவிர்த்தே வந்திருக்கிறான். ஏனெனில் முயல் வேட்டை அனுபவத்தைச் சொல்லி முடிக்க அவர் கிட்டத்தட்ட முப்பது நிமிஷங்களும், வேட்டையாடப்பட்ட ஜீவராசி காட்டெருமையாக இருந்தால் ஏறத்தாழ இரண்டு மணித்தியாலங்களும் எடுப்பார். எனவே சிறிய ஜீவராசிகளுடன் அவர் நடத்திய போராட்டங்கள் சுருக்கமாக முடிவதால் அவற்றைக் கேட்கவே அவன் பிரியப்படுவான். லோறன்ஸ் மரை இறைச்சி கொண்டு வருவதாகக் கூறி கடந்த இரண்டு வருடங்களாகின்றன தன்னுடைய பற்கள் உதிர்ந்து பொக்கை விழுந்த பின்னராவது அவர் வேட்டையாடி மரையைக் கொண்டு சேர்த்துவிடுவார் என்பது நிச்சயம் என அவருக்குத் தெரியும். பெரிய ஜீவராசிகளோடெல்லாம் போராட்டம் நடாத்தும் லோறன்ஸுக்கு எலி ஓர் அற்ப விடயம் என அவன் நினைத்துக் கொண்டான். 

எலிப்பாஷாணத்தை கலந்து வைக்கும் முறையைத்தான் லோறன்ஸ் அவனுக்கு சிபாரிசு செய்தார். எலிப்பாஷாணம் வாங்க மருந்துக் கடைக்குச் சென்ற போது கடைக்காரன் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தான். இரண்டு வாரமாக சவரம் செய்யாத முகத்துடன் தான் வந்து எலிப்பாஷாணம் கேட்டிருக்கத் தேவையில்லை என அவனுக்குத் தோன்றிற்று. 

'எலிக்குத்தானே?' என்ற ஓர் அபத்தமான கேள்வியுடன் கடைக்காரன் மருந்துப் போத்தலைத் தந்தான். 

அன்றிரவு ஒரு கோப்பை உணவுடன் அவன் மருந்தைக் கலந்த போது லோரன்ஸூம் கூட இருந்தார். 

''இன்றைக்கு இரவைக்குப் பாருங்க முசுப்பாத்தியை'' என்றார்.

விடிந்தது. 

உணவுப் பாத்திரத்தைச் சுற்றிவர எலிகளின் பட்டாளமொன்று செத்து வீழ்ந்து கிடக்குமென்று நம்பிச் சென்றவனுக்கு காலையில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. சோற்றுப்பருக்கைகள் இறைபட்டுக் கிடந்தன. 

எலிகளின் ஆரவாரம் இப்போது இல்லாத போதிலும் அவன் உற்சாகமிழந்தவனாக ஒவ்வொரு நாளையும் கழித்தான். அவன் மனம் நாடியதெல்லாம் எலிகளின் பிணங்கள். 

சரியாக மூன்றாம் நாள் அலுவலகத்திலிருந்து வந்து வீட்டுக் கதவைத் திறந்த போது அவனுடைய மூக்கில் அந்தத் துர்நாற்றம் வந்து மோதியது. அவன் மூக்கைப் பிடித்துக் கொண்டு அறைக்குள் போனான். அந்தத் துர்நாற்றத்தின் பிறப்பிடம் மர அலுமாரியின் பின்புறம்தான் எனத் தோன்றிற்று. மெதுவாக அலுமாரியை நகர்த்தியதும் 'அது' அவனுக்குத் தெரிந்தது. 'அதன்' உடலில் உண்டான புழுக்கள் நெளிந்தபடி இருந்தன. ஒரு தடித்த அட்டையில் எலியின் உடலை அள்ளி, வெளியில் கொண்டு வந்து போட்டான். திடீரெனத் தோன்றிய காகம் அதைக் கவ்விற்று. 

வீட்டினுள் நுழைந்தவன் மீண்டும் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தான். எலிகளின் உடல்களைத் தேட வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கேற்பட்டுவிட்டதை அவன் புரிந்து கொண்டான். தேடல் வேட்டை ஆரம்பமாயிற்று. எலிப்பாஷாணத்தினால் அங்குமிங்குமாக செத்துப்போன எலிகளை மீட்பது எவ்வளவு கடினமான, வயிற்றைப் புரட்டும் வேலை என எண்ணி அவன் சலிப்புற்றான். 

மூஞ்சி கறுத்த ஒரு எலியின் உடல் பழைய பத்திரிகைகளின் இடுக்கில் கிடந்தது. இன்னொன்று அவனுடைய பழைய சப்பாத்துக்குள். மற்றது மோட்டு வளையுள். எல்லாவற்றையும் நல்லடக்கம் செய்தபின் அவன் தலை முழுகினான். 

அதன் பிறகு கொஞ்ச நாட்களாக எந்தப் பிரச்சினையும் எழவில்லை. அவனை யாராவது வந்து இது பற்றிக் கேட்டால் தொலைக்காட்சி நிருபருக்கு பேட்டியளிக்கும் பாவனையில் தோள்களை சற்றுக் குலுக்கி கொண்டு '.....ஆம்!

மிகவும் மனவருத்தம்தான். ஆனால் இது தவிர்க்கப்பட முடியாதது. இந்த முடிவைத் தவிர எந்த முடிவும் எடுக்கப்பட முடியாதது' எனச் சொல்வற்கு அவன் தயாராக இருந்தான். 

மூன்று வாரங்கள் போயிருக்கும் அவனுடைய எதிரி மறுபடி தோன்றிற்று. கண்ணாடிக் குவளை ஒன்றை தட்டிவிட்டு கண்ணெதிரே சுவர் ஏறி ஓடியது. தான் முறிந்து விழுவதைப்போல உணர்ந்தான். அடுத்த கட்ட ஆலோசனைக்காக லோரன்ஸ் வீட்டுக்கு மறுபடியும் போக வேண்டி வரும் என அவன் நினைக்கவேயில்லை. 

அவன் போன போது லோரன்ஸ் கோழியொன்றை உரித்துக் கொண்டிருந்தார். அரைக்கால் பங்கு உயிருடன் கோழி மன்றாடிக் கொண்டிருந்தது. 

விஷயத்தை அவன் லோரன்ஸிற்குச் சொன்னான். தான் சொல்வதை லோரன்ஸ் கவனிக்கிறாரா அல்லது கோழியின் பித்தப்பை அகற்றுவதில்தான் கண்ணுங்கருத்துமாக இருக்கிறாரா எனத் தீர்மானிக்க இயலாத நிலையில் அவன் இருந்தான். 

லோரன்ஸ் சாதாரணமாகப் பதில் சொன்னார். ''ஒரு சுலபமான வழி இருக்கிறது. பூனை வளர்த்தால் எலி கிட்டேயும் வராது. பூனை ஒன்றை வளருங்கள்''.

இது ஒரு புதுவிதமான அணுகுமுறை என்றே அவனுக்கும்பட்டது. பூனையை உடனே அவன் வரவழைத்து விட்டான். அதற்கு ஓர் ஆங்கிலப்பெயரை அவன் சூட்டினான். தமிழ்ப் பெயர்கள் செல்லப் பிராணிகளுக்கு ஏனோ அவ்வளவு பொருந்துவதில்லை. (தேவருடைய படங்களைத் தவிர) 

பூனை வந்ததும் வீடு முழுக்க மியாவ் மியாவ் சத்தத்தால் நிரம்பியது. எலிகளின் கீச்சிடலை விட பூனைகளின் மியாவ் மியாவ் எவ்வளவோ மேலானது என அவன் நினைத்துக் கொண்டான். வீட்டின் சகலபகுதிகளுக்கும் சென்று பூனை உரிமை கொண்டாடிற்று. அது தன் கட்டிலில் சில வேளைகளில் சுருண்டு படுப்பதைக் கூட அவன் பொறுத்துக் கொண்டான். ஜேம்ஸ்பாண்ட் படத்து வில்லன் போல மடியில் அதைத் தூக்கி வைத்து, தடவவும், கொஞ்சவும் அவன் தயாராய் இருந்தான். 

அது ஒரு ஞாயிற்றுக் கிழமை, அதிகாலையில் தேவாலயம் சென்று பசியுடன் திரும்பியவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கறிச்சட்டியில் இருந்தவற்றைக் காலி பண்ணிய திருப்தியுடன் இவனை நிமிர்ந்து பார்த்து 'மியாவ்' என்றது சனியன்.

வெறிபிடித்தவன் போல் பூனையை அவன் துரத்தினான், சாது வேஷத்துடன் மியாவ், மியாவ் என்று பதிலுக்குக் கத்தியபடி அவனிடமிருந்து தப்பி ஓடியது அந்தப் பூனை. அவ்வளவும் பாசாங்கு! 'திருட்டுப் பூனையே, ஒழிந்து போ' என அவன் பொல்லால் எறிந்தான். அதன் பின்பும் கொஞ்ச நாட்கள் வரை அது வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தது. பின்னர் ஒரு நாள் காணாமலே போயிற்று.

லோரன்ஸிடம் இனிப்போனால் நாய் வளர்க்கும் ஆலோசனையை சமர்ப்பிக்கக்கூடும் என அவனுக்குத் தோன்றிற்று. அவன் சுயமாக ஒரு முடிவுக்கு வந்தான். பின்னால் இருக்கும் பாழ்வளவை சுத்தப்படுத்திவிட்டால் எலிகள் மட்டுமல்ல, அவன் அருவருக்கும் எந்த ஜீவராசிகளும் இனி தலை காட்டப்போவதில்லை. 

கூலியாட்களை அவன் வரவழைத்தான். பாழ்வளவைத் துப்புரவு செய்யும் வேலை தொடங்கிற்று. வேலியில் படர்ந்திருந்த கல்யாணப்பற்றையில் அவர்கள் ஆரம்பித்தார்கள். வளவை சுத்தம் பண்ணும் போது நிறைய பொந்தெலிகளும், பாம்புகளும் அகப்பட்டதாக கூலிக்காரர்கள் சொன்னார்கள். ஆனால் அவன் பார்க்கவில்லை. 

குப்பைகள் ஒரு மூலைக்குக் கூட்டியெடுக்கப்பட்டு அன்று மாலை தீயிடப்பட்டது. நத்தைகளின் ஓடுகள் வெடிக்கும் சத்தம் வெகு நேரம் வரை கேட்டது. 

அதன் பின்பே அவன் நிம்மதியடைந்தான். ஒரு நாள் லோரன்ஸிடம் காட்டை அழித்தது குறித்து வேடிக்கையாகச் சொன்னான். ''முதலில் செய்ய வேண்டிய காரியத்தை நாம் கடைசியில் செய்திருக்கிறோம்.''

அதன் பின்னர் அவன் எலிகள் பற்றி மறந்தே போனான். வோல்ட் டிஸ்னியின் படம் பார்க்கும் போது மாத்திரம் எலியின் ஞாபகம் வந்தது. எல்லா எலிகளும் வோல்ட் டிஸ்னியின் மிக்கி மௌஸைப் போல இருந்தால் என்ன என்று அப்போது நினைத்துக் கொண்டான்.

வீட்டின் பின்புறம் ஒருநாள் தற்செயலாக பார்த்தவன் மறுபடியும் உன்னிப்பாக பார்வையை செலுத்தினான் 'பச்சைகள்' மறுபடியும் தலை தூக்கியிருந்தன. 'மண்ணுக்குள் வேர்களை விட்டுவைத்தால்தான் தங்களுக்கு மறுபடியும் வேலை வரும்' என யோசித்த கூலிக்காரர்களின் தந்திரத்தை, சாமர்த்தியத்தை எண்ணி அவன் புன்னகைத்தான்.

அன்றிரவு பத்துமணியளவில் கட்டிலில் அவன் காலடியில் தொப்பென ஏதோ விழுந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்து விளக்கைப் போட்டான். எலியொன்று ஓடி மறைந்தது. 'மறுபடியும் எலி' என அவன் ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டான்.

இப்போது எலிகளை அழிக்கும் எண்ணம் அவனிடம் இல்லாமல் போயிற்று. எலிகளிடமிருந்து தன்னை எவ்விதம் காப்பது என்ற பயம் மேலோங்கத் தொடங்கியிருந்தது.

கார்த்திகை 1987
சுபமங்களா

 

http://umavaratharajan.com/sirukathai/eliyam.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.