Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அழகி - க.கலாமோகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அழகி - க.கலாமோகன்

நான் அவளது அழகில் மயங்கிவிடவில்லை. பலர் அவளது அழகின் நிழலைத் தொடுவதற்குக் கனவு கண்ட வேளைகளில் நானோ அவளது நிர்வாணத்தின் உரிமையாளன் ஆக. அவள் ஓர் பண்டம் அல்லாத போதும் எனது மனைவியாகிய தினத்திலிருந்து என்னைக் கடவுள் எனக் கருதுவதற்கு எமது திருமணம் வலிந்தே நடத்தப்பட்டதை ஓர் காரணமாகச் சொல்லலாம். எனக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை எல்லாம் கிடைத்தபோதும் இந்தத் திருமணக் கேள்வியில் உண்மையிலேயே ஓர் குருடனாக இருந்துவிட்டேன்.

ஆம், திருமணத்துக்கு முன்னர் எனக்கு அவளது முகம் தெரியாது. அவளது மனத்தின் ஆசைகளும் தெரியாது. ஆம், என்னைப் பெற்றவர்கள் கேட்ட சீதனத் தொகை என்னைக் குருடனாக்கியது என்பதுதான் உண்மை. அவள் அழகி என்பதுகூட திருமண முதல் நாளில்தான் எனக்குத் தெரியும்.

ஆனால் முதலிரவில் அவள் என்னிடம் "மன்னிக்கவும்! நான் உங்களிடம் ஒன்று சொல்லலாமா?" எனக் கேட்டாள். "சொல்!" என்றேன். "நான் உங்களை விரும்பவில்லை." பதில் என்னைத் திகைக்க வைத்தது, ஆனால் நான் கலங்கிவிடவில்லை. நான் அமைதியான சுபாவம் கொண்டவன். பதிலைச் சொல்லியபின் அவள் திரும்பி விட்டாள்.

அவளது மெல்லிய மேனி ஓர் தென்னை மரம்போல லாவகமாய் வளைந்திருந்தது. மல்லிகைப் பூ மாலையால் கறுப்புக் கொண்டை மிகவும் கவனமாகச் சுற்றப்பட்டு, நறுமணம் கக்கியபடி. தமிழ் செங்கால இலக்கியங்களில் சொல்லப்படுவது போன்ற ஓடியும் இடையக் கொண்டிருந்தாள். ஆம், எந்தச் சந்தேகமுமே இலை. அவள் ஓர் கனவுத் தேவதைதான்.

முதலிரவிற்கு முதல்நாள் திருமண விழாவிற்கு வந்தோர் தமது வாழ்த்துகளால் எனக்குக் களைப்பைத் தந்தனர். குறிப்பாக ஆண் நண்பர்கள் எனது காதுக்குள் "நீ அதிர்ஷ்டக்காரன்" என சொல்லிக் கொண்டனர். ஆம், எனக்குக் கிடைத்த சீதனம் பெரியது. இதற்குக் காரணம் நான் இஞ்சீனியர் என்பதுதான். இந்தத் தகைமை எனது சீதனத் தொகையைக் கூட்டுவதற்கு ஓர் வலிவான காரணியாக இருந்தது. இதைவிட எங்கள் சமூகத்தில் நான் ஆணாகப் பிறந்ததையும், பட்டதாரி என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். எங்கள் சமூகத்துள் ஆணாகப் பிறப்பதே ஓர் பட்டம்போல என்பதை நான் தொடக்கத்திலிருந்தே அறிவேன். அவள் எப்படியிருப்பாள் எனும் கேள்வி எனக்குள் திருமணத்துக்கு முதல் ஏற்பட்டதேயில்லை. ஆனால் அவள் நல்ல அழகியென எனது உறவினர்கள் என்னிடம் திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கும்போதே சொல்லிவிட்டனர். சில திருமணங்களின்போது, சீதனம் கூட என்றால் அதைக் குறைப்பதற்கான வழிகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தேடப்படும். எனது விடயத்தில் அப்படியல்ல. கேட்ட தொகை எந்தக் கேள்வியும் இல்லாமல் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டது. அவளது பெற்றோர் செல்வந்தர்கள்.

ரங்கன் சிரித்துக்கொண்டு என்னை நோக்கி வந்தான். அவனை எனக்கு பள்ளியிலிருந்து தெரியும். ஆனால் என்னைப்போல பல்கலைக்கழகம்வரை சென்றவன் அல்லன். அவன் ஓர் சுழட்டல் மன்னன். பல பெண்களிடம் அடி வேறு வாங்கியுள்ளான். அவனது திருமணம் விவாகரத்தில் வந்து முடிந்தது. "நீ கொடுத்து வைத்தவன்! குட் லக்!" என்றான். "நான் ஏன் கொடுத்துவைத்தவன்? " என மெதுவாக அவனிடம் கேட்டேன். "உனக்குக் கிடைத்த பெண்போல ஓர் பெண் கிடைப்பது என்பது என்ன சின்ன விசயமா? அவள் போன்ற அழகுத் தேவதையை நீ எங்காவது கண்டதுண்டா?" " அவள் அழகி என்பது உண்மைதான், ஆனால் எனக்கு அவள் யார் என இன்றுவரை தெரியாது. இது ஓர் பேச்சுக் கல்யாணம் என்பதை மறந்து விடாதே." "அது எனக்குத் தெரியும். உனக்கு ஒரு விஷயம் சொல்லவா?" "சொல்!" "அவளது பெயர் ராதிகா. பல வருடங்களாக நான் அவளை மயக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். ஹ்ம்ம், எல்லாம் தோல்வியில்தான் முடிந்தன. அவளைப்போன்ற அழகியை நான் ஒருபோதுமே கண்டதில்லை. அவள் எனது கனவுக் காதலியாக இருந்தாள். இந்த உண்மையைக் கேட்டுப் பொறமைப்பட்டுவிடாதே. நான் இங்கே வந்தது உன்னை வாழ்த்தவே." "நன்றி" நான் ஒருபோதுமே எந்தப் பெண்ணையும் காதலித்ததில்லை. சில பெண்கள் என்னை வசீகரித்தபோதும், காதலித்தால் எனது பெற்றோர் அதனை ஓர் குற்றமாக நினைத்துவிடுவர் என நான் எண்ணிக்கொண்டேன். எங்கள் குடும்பத்தில் பழைய கலாசாரம் கவனமாகக் கட்டிக் காக்கப்பட்டது. நான் இந்தக் கலாசாரத்தின் அடிமையாக இருந்தேன்.

முதலாவது இரவில் அவளது மூடப்பட்ட முதுகை நான் நெடுநேரம் பார்த்துக்கொண்டு நின்றேன். அவளின் சுவாசிப்பு மட்டுமே எனக்கு மெல்லியதாகக் கேட்டது. சொல்கள் அழிந்த ஓர் வயலுள் நான் விழுந்துபோனதாக உணர்ந்து கொண்டேன். அந்தக் கணத்தில் வார்த்தைகளும் விளக்கங்களும் எனக்குத் தேவைப்படவில்லை. "ராதிகா! நீ இந்தக் கட்டிலில் தூங்கு!” என்றேன். அவள் தனது முகத்தை என் பக்கம் திருப்பாமல், "நான் உங்களின் சொத்தாகிவிட்டேன். உங்களது பசியை எனக்காக ஒழிக்க வேண்டாம்." என்றாள். "நீ சொல்லுவது எனக்கு விளங்குகின்றது. நான் உன்னை எனது சொத்தாக நினைக்க மறுக்கின்றேன். நீ கட்டிலில் படு. நான் நிலத்தில் படுக்கின்றேன்." "பாய் இல்லை. நீங்கள் நிலத்தில் படுக்கவேண்டாம். கட்டிலில் படுங்கள்." "நான் படுத்தால் நீயும் கட்டிலில் படுப்பாயா?" "நீங்கள் படு என்றால் என்னால் அதற்கு மறுப்புச் சொல்லமுடியுமா?" "ஏன் முடியாது?" "மறுப்பும் ஓர் சுதந்திரம் என்பது உங்களிற்கு விளங்கியிருந்தால், ஏன் பேச்சுக் கலியாணத்திற்கு ஆம் போட்டீர்கள்?" "நான் குருடனாக இருந்தேன். அது சரி நீ என்னை விரும்பவில்லை என்பதை ஏன் உனது பெற்றோரிடம் சொல்லவில்லை?" "நான் பெண்ணாக உள்ளேன்." "இந்த இரவில் நானும் நீயும் தனித் தனியாகப் படுப்போம்." "இனி வரும் இரவுகளில்? " "இனி வரும் இரவுகளும் இந்த இரவைப்போலவே இருக்கும்." அவளது முகம் திரும்பியிருந்தபோதும், அவள் களைத்துப் போயிருந்தாள் என்பதை நான் விளங்கிக்கொண்டேன். சடங்குத் தினங்களில் மாப்பிளையும் பெண்பிளையும் மட்டுமல்ல, அனைவருமே களைத்துப் போய்விடுவதை நான் பல தடவைகள் கண்டதுண்டு. "ராதிகா! நீ தூங்கு! இந்தக் கட்டிலில். நான் நிலத்தில் தூங்குகின்றேன்." முடிவில் அவள் கட்டிலில் தூங்கச் சம்மதித்துக் கொண்டாள். முதாவது இரவில் நானும் அவளும் தனித்தனியாகத் தூங்கினோம்.

அது ஓர் புதிய இரவு. புத்தம் புதிய இரவு. வெளியே திருமணத்திற்கு வந்தவர்களும் போகின்றவர்களும் எழுப்பிய சத்தங்கள் எனக்குக் கேட்டன. அறைக்குள்ளிருந்து எனக்குக் கேட்டது அவளது மூச்சுச் சத்தமே. இந்த இரவு இப்படியாகிப் போனதிற்காக எனக்குள் எந்த வருத்தமும் ஏற்பட்டதுபோல எனக்குப்படவில்லை. உள்ளே நுழைய முன்னர் சாப்பிட்டபோதும் எனக்குப் பசியெடுத்தது. ஆனால் வெளியே போகும் தைரியம் வரவில்லை. அவளுக்கும் பசிக்குமா இந்தக் கணத்தில்? அவள் தூங்குவதுபோல பட்டது. உண்மையிலேயே அவள் தூங்குகின்றாள்தானா என்பது எனக்குத்தெரியவில்லை. ஓர் காதல் பாடல் வெளியால் இருந்து என் காதுவரை வந்தது. இந்த இரவுக்கு முதலிய தினங்களில், நான் காதலிப்பவன் இல்லாதபோதும், காதல் பாடல்களின் ரசிகனாக இருந்தேன். இன்றோ எனது காதுவரை வந்த காதல் பாடல்கள் கசத்தன. வாழ்வு அதிர்ச்சிகளைத் தாங்கிய ஓர் கடகம் என்பது எனக்குத் தெரிந்தபோதும் எனது முதாவது இரவு இப்படியொரு சதியைச் செய்யுமென நான் எதிபார்த்திருக்கவில்லை. நான் விழிகளை சிரமப்பட்டு மூடி துக்கத்தை அழைத்தேன்.

மறுநாள். ராதிகா வெட்கத்தோடும், நான் ஒரு சிறிய சிரிப்போடும் வெளியே வந்தோம். எங்களுக்காக நிறைய வாழ்த்துகளும் பரிசில்களும் காத்திருந்தன. ஆனால் ஒரு வெறுமை என் இதயத்தை நிரப்பிக்கொண்டிருந்தது. நான் பலர் மத்தியில். எனக்குள் நிறையக் கேள்விகள் தலைகளை நீட்டியபடி. இந்தக் கேள்விகளை நான் எவரிடமாவது பதில்களைப் பெறக் கேட்கவேண்டுமா? அவளது மனத்துள் முளைக்கும் கேள்விகளை என்னால் அறிய முடியுமா?

Wallpapers for Desktop with opera, speaker, background=++++++++++++++++++++++++++++++++++++++

திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. உறவினர்களதும் நண்பர்களதும் முகங்களின் முன்னே நாங்கள் சந்தோசமாக வாழும் தம்பதிகளாக எம்மைக் காட்டப் பழகிக்கொண்டோம். நாங்கள் ஒரு வீட்டில் வாழ்ந்தாலும் ஒன்றாக வாழாமல். இந்த இரண்டு வருடங்களுள் உடலுறவு எனும் சொல் எமக்கு மறந்தே போய்விட்டது. அவள் என்னைக் குடையாதிருப்பதுபோல் நானும் அவளைக் குடையாதிருந்தேன். நாங்கள் நண்பர்களாக எங்களை மாற்றிக் கொண்டோம்.

"நீங்கள் என்னை விட்டுப் பிரிந்து வேறு ஒரு பெண்ணுடன் வாழலாம்தானே!" ராதிகா ஓர் மாலை தினத்தில் என்னிடம் சொன்னாள். “எனது காதல்கள் ஒழிப்பானவையாக இருந்தன.” "காதல் உணர்வுகள் இயல்பானவை. அது உங்களுக்குள் இருந்திருக்கலாம், ஆனால் அவைகளை நீங்கள் வெளியே காட்டத் தயங்கி இருப்பீர்கள்." "நீ சொல்வது உண்மைதான். நான் பல பெண்களை விரும்பினேன், ஆனால் அந்தப் பெண்களுக்கு நான் காதலித்த விஷயம் தெரியாது. உனக்கு எதையும் ஒழிக்க நான் விரும்பவில்லை. நான் நிறைய நடிகைகளைக் காதலித்தேன். இவள்கள் எனது பல இரவுகளின் துணைவிகளாக இருந்தனர். நீ என்னைக் காதலிக்காததுபோல நானும் உன்னைக் காதலிக்கவில்லை. நீ அழகி என்பதும், நீ ஆண்களது கனவுளின் தேவதையாகவும் இருப்பாய் என்பதை உன்னைக் கண்ட முதலாவது தினத்திலேயே ஊகித்துக்கொண்டேன். எனக்கு உன்னைதொடும் உரிமை இருந்தபோதும், இந்த "உரிமை" எனக்குள் கேள்வியாக மாறியதால்தான், நான் இன்றுவரை உன்னைத் தொடாமல் இருக்கின்றேன். நீ அழகி. நான் கனவில் காதலித்த நடிகைகளைக் காட்டிலும் நீ அழகி. நீ எனக்காகத் தெரிவு செய்யப்பட்டதற்கு உனது குடும்பம் செல்வக் குடும்பம் என்பது மட்டுமல்ல உனது அழகுமே காரணம். நீ எவரையாவது காதலித்தாயா?" "ஆம்! எனக்கு ஓர் காதலன் உள்ளான்." "திருமணத்துக்கு முன்னர் உனது காதலை நீ உனது பெற்றோருக்கு சொன்னாயா?" "சொல்லவில்லை! சொல்லவேண்டியது அவசியமாகவும் எனக்குப் படவில்லை." "உனது காதலன் உன்னைத் தன்னுடன் வருமாறு அழைக்கவில்லையா?" "அழைத்தான்! எனக்குத் தைரியம் வரவில்லை. நானும் உன்னைப்போல குடும்பத்தின் கைதியாக என்னை வரித்துக் கொண்டேன்." "நீ பொருளாதாரத்தில் பட்டம் பெற்றதாக நான் அறிவேன். நாங்கள் இருவரும் படித்தவர்களாக இருந்தபோதும், இந்தப் படிப்புகளால் நாங்கள் குடுப்பத்தின் அடிமைகளாக இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

முடிவில் நாம் எங்களை ஒருவரும் மற்றொருவரும் விரும்பாத ஓர் குடும்பப் பள்ளியில். ராதிகா, நீ உனது காதலனோடு சென்று வாழ்வதையே நான் விரும்புகின்றேன். நீ அவனோடு செல்ல நான் அனைத்து உதவியும் செய்வேன்." "அவன் இப்போது வெளிநாட்டில். கடந்த கிழமை இங்கே வந்த எனது சிநேகிதி என்னிடம் சொன்னாள். என்னால் அவனது மனம் உடைந்துவிட்டது. நான் அவன் முகத்தில் விழிக்கத் தயங்குகின்றேன்." "இரண்டு வருடங்களாக இப்படி வாழும் முறை கொடுமையானதல்லவா?" "உண்மைதான்! நீ கொடுமையானவன் அல்லாத படியால் தினங்கள் எப்படியோ கழிந்து போகின்றன." அவள் தனது காதலனுடன் போகமுடியாமலும் என்னோடு காதல் இல்லாமலும். நானும் அப்படியே, அவளோடு காதல் இல்லாமல். நாங்கள் வாழ்வது ஒரு சிறை போல எனக்குப்பட்டது. இந்தச் சிறைக்குள் இன்பக் கேள்விகள் தலையை நீட்டுவதே இல்லை. ஆனால் எங்களிற்கு பேச்சுச் சுதந்திரம் இருந்தது. நாங்கள் எங்களது தனிமையையும், உடல் தொடர்புகள் இல்லாத இரவுகளையும் "திணிப்புகள் தடைசெய்யப்பட வேண்டும்" எனும் கருத்தால் நியாயித்துக் கொண்டோம். நானும் ராதிகாவும் ஒருவரை ஒருவர் பலவந்தம் செய்யாமல் பேசக் கற்றுக் கொண்டதற்கு நாங்கள் படித்தவர்கள் என்பது காரணமா? இந்தப் படிப்பு என்னைக் குடும்பத்தின் அடிமையாக இருப்பதில் இருந்து தப்பச் செய்யவில்லை.

நானும் அவளும் விவாகரத்து எடுப்பது ஓர் தீர்வாக எனக்குப் பட்டது. எனது முடிவை நான் அவளிடம் சொன்னேன். "விவாகரத்தா?" என்றபடி அவள் தனது சிறிய விழிகளைப் பெரிதாகத் திறந்தாள். "இதுதான் நாம் எமது சுதந்திரங்களை வாழுவதற்கான ஓர் தீர்வாக எனக்குப்படுகின்றது." "நீ சொல்வது சரி. ஆனால் நான் இன்னும் எமது சமூக ஒழுக்கங்களின் கைதியாகவே இருக்கின்றேன். விவாகரத்தின் பின்னர் என்னால் நிம்மதியாக தலையைக் காட்ட முடியுமா? எனக்கு இனிமேல் வாழ்க்கை இல்லை என்றே நினைக்கின்றேன்." "ராதிகா! நாம் வாழும் விதம் போலியானதல்லவா? நாங்கள் எங்களது உடல் தாகங்களை அழித்துக் கொண்டிருக்கின்றோம். உனக்கு இன்று நான் ஓர் உண்மையச் சொல்கின்றேன். என்னை செக்ஸ் ஆசைகள் குத்திக் குதறுகின்றன." "உன்னை மட்டுமல்ல, என்னையும்தான்." "உண்மை! ஆனால் உனக்கு எப்படி எனது உடல் ஓர் ஈர்ப்பைத் தராது உள்ளதோ , அதுபோல நீ அழகியாக இருந்தாலும் எனக்கு உனது உடல் எந்த ஈர்ப்பையும் தராது உள்ளது. இந்த இரண்டு வருடத் தனிமை வாழ்வால் எனக்குள் இருந்த காதல் மயக்கங்கள் உடைந்துவிட்டன. ஆனால் எனக்குள் செக்ஸ் தாகம் எரிந்து கொண்டுள்ளது."

அன்றைய இரவும் அவர்கள் தனித்தனியாகவே படுத்தனர். இரண்டு உடல்களும் தனித்தனியாக எரிவின் கிடங்குள். அவர்களிடம் இருந்து எழுந்த மூச்சு ஒலிகள் ரகசிய சேதிகளை வெளியின் வாசிப்புக்காக விட்டன. அவள் தொலைந்துபோன காதலனை நிர்வாணமாக்கிய அந்தக் கணத்தில், அவன் சில தினங்களின் முன்னே கண் சிமிட்டிய விபச்சாரியின் வீட்டிற்குள் நுழைவதற்குத் தோதான நேரம் எதுவெனத் தேடிக்கொண்டிருந்தான். தூரத்தில் உள்ள ஓர் ஏழைக் குடிசையுள் இரண்டு உடல்களின் இருள் போரால் கட்டிலின் ஒருகால் உடைந்தது.

(நன்றி: தாமரை, 2014, தமிழ்நாடு)

http://www.thayagam.com/azhaki/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.