Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி! - டெல்லி நெக்ஸ்ட் பிளான்

Featured Replies

மிஸ்டர் கழுகு: வருகிறது மேலவை... நுழைகிறது பி.ஜே.பி! - டெல்லி நெக்ஸ்ட் பிளான்

 

p42a_1529668698.jpgழுகார் வந்ததுமே அலுவலக நூலகத்துக்குள் போனார். பழைய ஜூ.வி ஃபைல்களுடன் வந்தவர், ‘‘தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சத்தமில்லாமல் நடந்துவருகின்றன. சட்டமன்ற அலுவலகத்தில் சீனியர் அதிகாரிகள் சிலர் இதற்காகத் தனியாக உட்கார்ந்து வேலை பார்க்கிறார்கள். எல்லாம் சரியாக நடந்து முடிந்தால், அநேகமாக இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ‘சட்ட மேலவையை மீண்டும் அமைப்பதற்கான மசோதா’ அறிமுகம் செய்யப்படலாம்’’ என்றார்.

‘‘அவ்வளவு வேகமாகவா வேலை நடக்கிறது?’’

‘‘ஆமாம். ஜெயலலிதா உறுதியாக எதிர்த்த சட்ட மேலவையை, பி.ஜே.பி-க்காக மீண்டும் கொண்டு வரும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது எடப்பாடி அரசு. சட்டசபைக்குள் பி.ஜே.பி கால் பதிக்க முடியாத நிலையில், மேலவை வழியாக உள்ளே நுழைய டெல்லி மேலிடம் பிளான் செய்திருக்கிறது.’’

‘‘ஓஹோ!’’

‘‘மேலவையின் வரலாற்றை முதலில் சொல்லிவிடுகிறேன். இப்போதும் சில மாநிலங்களில் மேலவைகள் இருக்கின்றன. தமிழகத்திலும் முன்பு இருந்தது. மேலவையில் ராஜாஜி, அண்ணா, ம.பொ.சி, கருணாநிதி, எம்.ஜி.ஆர் என்று நிறையப் பிரபலங்கள் இடம்பெற்றிருந்தனர். 1986-ம் ஆண்டு வரையில் செயல்பட்டு வந்த இந்த மேலவைக்கு, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் மூடுவிழா நடத்தினார். திவால் நோட்டீஸ் கொடுத்திருந்த நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவை உறுப்பினராக அவர் நியமித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், மேலவையைக் கலைத்தார். மேலவையைக் கலைக்க வகை செய்யும் தீர்மானம் 14.5.86 அன்று சட்டசபையில் கொண்டுவரப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்குப் பிறகு 1.11.86-ல் மேலவை கலைக்கப்பட்டது. மேலவை கலைக்கப் பட்ட நேரத்தில், அதன் தலைவராக ம.பொ.சி-யும் எதிர்க்கட்சித் தலைவராகக் கருணாநிதியும் இருந்தனர். இதன் பிறகு இரண்டு திராவிட கட்சிகள் காட்டிய வேகம் ‘ஏட்டிக்குப் போட்டி’தான்.’’

p42_1529668718.jpg

‘‘அடுத்தடுத்து வந்த தீர்மானங்களைச் சொல்கிறீர்களா?’’

‘‘ஆமாம். 1989-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க., மீண்டும் மேலவையைக் கொண்டு வருவதற்கான தீர்மானத்தைச் சட்டசபையில் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அடுத்து 1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, மேலவையை ரத்து செய்யும் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். 1996-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., சளைக்காமல் மேலவையை ஏற்படுத்தக் கோரும் தீர்மானத்தைச் சட்டசபையில் நிறைவேற்றியது. 2001-ல் ஜெயலலிதா போட்டித் தீர்மானம் கொண்டு வந்து, மேலவை வராமல் பார்த்துக்கொண்டார். 2006-ல் கருணாநிதி மீண்டும் வந்தார். ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் மேலவையைக் கொண்டு வருவதற்காக முயற்சிகள் எடுத்துச் சட்டசபையில் தீர்மானமும் போட்டார். மேலவை தீர்மானத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலும் கிடைத்துவிட்டது. மேலவைத் தேர்தலுக்கான வேலைகளைத் தேர்தல் கமிஷனும் தொடங்கிவிட்டது. ஆனாலும், 2011 சட்டசபைத் தேர்தல் வந்துவிட்டதால் மேலவை கிடப்பிற்கு போனது. அதன் பிறகு 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா வழக்கம் போல மேலவையை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினார்.’’

‘‘இப்போது அ.தி.மு.க ஆட்சியிலேயே மேலவை வரப் போகிறதா?’’

‘‘ஆமாம். ‘மேலவை வேண்டாம்’ என்பதுதான்         எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வின் நிலைப்பாடு. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு எல்லாமே தலைகீழாக மாறியிருக்கிறது. தமிழக சட்டமன்றத்துக்குள் பி.ஜே.பி நுழைய முடியாவிட்டாலும், அவர்கள் சொல்படிதான் அரசு நடைபெறுகிறது. சட்டமன்றத்துக்கு நிகராக இருக்கும் மேலவையில் பி.ஜே.பி-யினர் வந்து விவாதங்களில் பேசவேண்டும் என்பதற்காகவே இப்போது மேலவையை மீண்டும்  அமைக்கிறார்கள். ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் உதய் மின் திட்டம், துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை, உணவுப் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றை எடப்பாடி அரசு ஆதரிக்க ஆரம்பித்துவிட்டது. இப்போது ஜெயலலிதா எதிர்த்த மேலவையை பி.ஜே.பி-க்காக கொண்டுவரப் போகிறார்கள். அத்துடன் கட்சியில் பதவி இல்லாமல் இருக்கும் பலருக்கு வாய்ப்புகள் தரவும் முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி.’’

‘‘மேலவையில் எத்தனை உறுப்பினர்கள் வர முடியும்?’’

‘‘மீண்டும் மேலவை அமைக்கப்பட்டால் அதில் 78 உறுப்பினர்கள் இருப்பார்கள். பதவிக் காலம், ஆறு ஆண்டுகள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளிலிருந்தும், 12-ல் ஒரு பகுதி உறுப்பினர்கள் பட்டதாரிகளாலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் 12-ல் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஆசிரியர்கள் சார்பிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் பல்வேறு துறைகளிலிருந்து கவர்னரால் நியமனம் செய்யப்படுவார்கள். கவர்னரால் நியமிக்கப்படுகிற பலரும் பி.ஜே.பி-யினராகத்தான் இருப்பார்கள். எப்படி புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ-க்களாக பி.ஜே.பி-யினரை நுழைய வைத்தார்களோ, அதுபோலதான் இங்கேயும் ஏற்பாடுகள் நடக்கின்றன. மேலவைத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்பே உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்’’ என்ற கழுகாரை வேறு செய்திகள் பக்கம் திருப்பினோம்.

‘‘18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா நியமிக்கப்பட்டுள்ளாரே?’’

‘‘நீதிபதி விமலா, மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியவர். 2002-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மகிளா நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2011-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் குடும்பநல வழக்குகள், பெண்கள் நலன் சார்ந்த வழக்குகளை அதிகம் விசாரித்து பல முக்கியமான தீர்ப்புக்களை வழங்கியவர். ‘அரசியலமைப்புச் சட்டம் குறித்த வழக்குகள் அவருக்கே மிகவும் புதிது. அந்த வகையில், இந்த வழக்கு நீதிபதி விமலாவுக்கு மிகப்பெரிய சவாலாகத்தான் இருக்கும்’ என்கின்றனர் நீதிமன்ற வட்டாரத்தில்.’’

‘‘எஸ்.வி.சேகருக்கு ஒரு வழியாக ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதே?’’

பெண் பத்திரிகையாளர்களைப் பற்றிய தரக்குறைவான பதிவை ஷேர் செய்த எஸ்.வி.சேகர்மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், அவரைக் கைது செய்யவில்லை. இந்த விவகாரம் காவல்துறை வட்டாரத்திலேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்துக்குப் பிறகு ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த எஸ்.வி.சேகர், ‘என்னைக் கைதுசெய்ய முடியாது’ என்ற பாணியில் பேசியிருந்தார். உடனே சில போலீஸ் அதிகாரிகள் அவரைக் கைதுசெய்ய அனுமதி கேட்டார்களாம். ஆனால், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், ‘என் இடத்தில் இருந்து பார்த்தால்தான், அவர்கள் சொல்வது நடக்காத காரியம் என்று புரியும்’ என நொந்து கொண்டாராம். இதனால், போலீஸ் பாதுகாப்புடனே எஸ்.வி.சேகர் தைரியமாக ‘உலா’ வர முடிந்தது.’’

‘‘நீதிமன்றத்துக்கும் எஸ்.வி.சேகர் பந்தாவாகத்தான் வந்தார் போல?’’

‘‘ஆம். மயிலாப்பூர் கூடுதல் ஆணையர் சரவணன், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எஸ்.வி.சேகரை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தார். எழும்பூர் நீதிமன்றம் வந்த எஸ்.வி.சேகருக்கு, அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் வெளியில் தடுத்து நிறுத்திவைக்கப்பட்டனர். 10.15 மணிக்கு நீதிமன்றம் வந்த எஸ்.வி.சேகரை, ஜாமீன் மனுத் தாக்கல் செய்யச் சொன்னார் நீதிபதி மலர்விழி. அதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. அதுவரை தவிப்புடன் காத்திருந்தார் எஸ்.வி.சேகர். பின் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி மலர்விழி உத்தரவிட்டார். அதன்பிறகு நீதிமன்றத்தின் பின்வாசல் வழியே எஸ்.வி.சேகர் வேறொரு காரில் கிளம்பிச் சென்றுவிட்டார். நீதிமன்றத்தின் முன் வாசலில் நின்ற கார், சிறிது நேரம் கழித்துக் கிளம்பிச் சென்றது.’’

‘‘ஆற்காடு இளவரசர் தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளதே?’’

‘‘ஜூன் 7-ம் தேதி அ.தி.மு.க சார்பில் சென்னையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தமிழகத்தின் முக்கிய ஹாஜிக்கள், ஆற்காடு இளவரசர் உள்பட பலர் மேடையில் அமர்ந்திருந்தனர். ஆற்காடு இளவரசருக்கு ஒரு பக்கத்தில், அவரின் மனைவி அமர்ந்திருந்தார்; மறுபக்கத்தில், ஹாஜி ஒருவரும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அமர்ந்திருந்தனர். அந்த நிகழ்வு குறித்த படங்கள், மறுநாள் செய்தித்துறை சார்பில் வெளியிடப் பட்டன. ஆற்காடு இளவரசர் அமர்ந்திருந்த இடத்தில் அவரின் மனைவி இருப்பது போன்று ‘போட்டோஷாப்’ செய்யப்பட்டு இந்தப் படம் வெளியாகியிருந்தது. அதாவது, வேண்டு மென்றே ஆற்காடு நவாப் வெட்டி நீக்கப்பட்டுவிட்டார். ஆளும்கட்சியின் சார்பில் வெளியாகும் ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழும் அதே படத்தைத்தான் வெளியிட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆற்காடு இளவரசர், முதல்வர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘எனது படத்தை வேண்டுமென்றே புறக்கணித்துள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டு கடுமை காட்டினார். பதறிப்போன முதல்வர் அலுவலக அதிகாரிகள், தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, கூடுதல் இயக்குநர் எழிலின் மேற்பார்வை யில் இந்தப் படம் வெளியாகியிருப்பதாக சிலர் முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள்.’’

p42d_1529668675.jpg

‘‘ஓஹோ!’’

‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இப்படி போட்டோஷாப் செய்து முதல்வர் படத்தை அடிக்கடி வெளியிட்டவர் எழில். அந்த வேலைதான் அவரைக் காப்பாற்றியது. இப்போது, அதுவே அவருக்கு சறுக்கலாக மாறிவிட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் தனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளிடம் விசாரிப்பதாகச் சொல்லி, தற்போதைக்குத் தப்பியுள்ளார்.’’

‘‘ஒருவழியாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவாகியுள்ளதே?’’

‘‘ஆம். இந்த விவகாரத்தில்கூட ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் மோதல் இருந்தது. கடைசியில் ஜெயித்தது ஓ.பி.எஸ்-தான். தஞ்சாவூர் அருகே செங்கிப்பட்டியில் இதை அமைக்க வேண்டும் என எடப்பாடி ஒற்றைக்காலில் நின்றாராம். தோப்பூருக்குத்தான் வேண்டும் என்று பன்னீர்செல்வம் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டாராம். இருவரும் மாறி மாறி பிரதமருக்கு பிரஷர் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். ‘எய்ம்ஸ் மருத்துவமனை அமையத் தேவையான கட்டமைப்பு இரண்டு ஊர்களில் எங்கு இருக்கிறது’ என்பதைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட கமிட்டியிடம் மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன், தோப்பூரில் இருக்கும் வசதிகளைக் குறிப்பிட்டு விளக்கமாக ஃபைல் ரெடிசெய்து கொடுத்தாராம். ஓ.பி.எஸ் கட்டளைப் படி, ராஜ்யசபா எம்.பி-யான மைத்ரேயன் இதற்காக லாபி செய்திருக்கிறார். இதன் விளைவாக எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு வருவது உறுதியானதும், வேறுவழியின்றி எடப்பாடி பழனிசாமியும் ஆதரவு கொடுத்துவிட்டாராம்’’ என்ற கழுகார் பறந்தார்.


நிருபர்களே இல்லாத பிரஸ்மீட்!

கோ
ட்டை வரலாற்றில் முதல்முறையாக, நிருபர்களே இல்லாத பிரஸ்மீட்டை நடத்தி சாதனை படைத்திருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய மத்திய அரசு ஒப்புதல் தந்துள்ள செய்தி ஜூன் 19 இரவு வெளியானது. அடுத்த நாள் காலை கோட்டையில் உள்ள முதல்வரின் அறையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதற்கான ஆணையுடன் முதல்வரைச் சந்தித்தனர்.

p42c_1529668646.jpg

போட்டோகிராபர்கள் மட்டும் இதைப் படமெடுக்க உள்ளே அழைக்கப்பட்டனர். உற்சாகமாக போஸ் கொடுத்த எடப்பாடி, அப்போதுதான் சேனல் மைக்குகள் எதுவும் இல்லாததைக் கவனித்தார். ‘‘எய்ம்ஸ் பற்றி நான் பேட்டி கொடுக்கணுமே. சேனல்காரங்களைக் கூப்பிடுங்க’’ என்றார் முதல்வர். அதிகாரிகள் வெளியே ஓடிவந்து சேனல்களின் கேமராமேன்களை மட்டும் உள்ளே கூப்பிட்டனர். ‘‘நிருபர்கள் இல்லாம எப்படி முதல்வர் பேட்டி கொடுப்பார்? நாங்களும் உள்ளே வர்றோம்’’ என டி.வி நிருபர்களும் வந்தார்கள். ‘‘கேமராமேன்களுக்கு மட்டும்தான் அனுமதி’’ என்று ஸ்ட்ரிக்டாகச் சொன்ன அதிகாரிகள், நிருபர்களைத் தடுத்துவிட்டார்கள். 

கேமராமேன்கள் மட்டும் உள்ளே போக, எல்லா மைக்குகளும் முதல்வரின் டேபிளில் வைக்கப்பட, கேமரா ஓடத் தொடங்கியதும், எய்ம்ஸ் சாதனையைப் பேசி, நிருபர்களே இல்லாத பிரஸ்மீட்டை முடித்தார் எடப்பாடி. 

படங்கள்: கே.ஜெரோம்


நிதியமைச்சர் யார்?

லகக்கோப்பை கால்பந்து போட்டியில் சேம்சைடு கோல்கள் அதிகம் போடப்படுகின்றன. அப்படி ஒரு விஷயத்தைச் செய்து பி.ஜே.பி-யை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஓய்வில் இருக்கிறார். அதனால் அந்தத் துறையை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வருகிறார்.

p42b_1529668616.jpg

இந்நிலையில், ‘‘யார் நிதியமைச்சர் என இந்த நாட்டுக்குப் பிரதமர் சொல்ல வேண்டும்’’ என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி ட்விட்டரில் கேட்டிருந்தார். இதைப் பார்த்த சுவாமி, ‘எங்கள் கட்சி இதற்குப் பதில் சொல்ல வேண்டும். மோடி அரசாங்கத்திலிருந்து நிதி அமைச்சகம் தனியாகப் பிரிந்துவிட்டதா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒரு பேட்டியிலும் அருண் ஜெட்லியைக் கடுமையாகத் தாக்கினார் சுவாமி. ‘‘பிரதமர் அலுவலக இணையதளத்தில் அருண் ஜெட்லியை ‘இலாகா இல்லாத அமைச்சர்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். பியூஷ் கோயல்தான் நிதியமைச்சர் என்று உள்ளது. நிதி அமைச்சக இணையதளத்தில் அருண் ஜெட்லியை ‘நிதி அமைச்சர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டு பேரும் எப்படி நிதி அமைச்சராக இருக்க முடியும்?’’ என்று காட்டமாகக் கேட்டார் சுவாமி.

தன் பதவியை  சில தினங்களுக்கு முன் ராஜினாமா செய்த மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும், அருண் ஜெட்லியை தனது ‘பாஸ்’ எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.


ஸ்டெர்லைட் - தீப்பற்றினால் ஆபத்து!

ஸ்
டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, மே 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கந்தக அமில ஸ்டோரேஜ் டேங்குகளில் கசிவு இருப்பதாக ஜூன் 17-ம் தேதி சொன்ன தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அதை உடனடியாகச் சரிசெய்துவிட்டதாகவும் அறிவித்தார். ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை டேங்கர்களில் ஏற்றி விற்பனைக்கு அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

p42e_1529668594.jpg

இந்நிலையில், ‘ஆலையின் மின் இணைப்பு எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் துண்டிக்கப்பட்டது. இதனால், பராமரிப்புப் பணிகளைச் செய்ய முடியவில்லை. ஆலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள வேதிப்பொருள்களை முறையாகப் பராமரிக்காவிட்டால் ஆபத்து’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பீதியைக் கிளப்பும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது ஸ்டெர்லைட் நிறுவனம்.

‘‘தாமிரத்தை உருக்கும்போது கிடைக்கும் மற்ற பொருள்களை சல்பியூரிக் ஆசிட், பாஸ்பாரிக் ஆசிட், ஹைட்ரோ புளூரிக் ஆசிட் ஆகிய வடிவங்களில் டேங்குகளில் சேமித்து வைக்கிறோம். இவற்றை மூலப்பொருளாகக் கொண்டு  இயங்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வந்தோம். இந்த டேங்குகளைப் பராமரிக்கவில்லை. இவற்றில் ஏதாவது  கசிவு ஏற்பட்டால், காற்று அதிகம் வீசும் காலம் என்பதால் தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. அமிலங்கள் பற்றி எரிந்தால், விளைவுகள் பயங்கரமாக இருக்கும்’’ என்கிறது அந்த நிறுவனம். ‘ஆலையைத் திறப்பதற்கு இது மறைமுக முயற்சியா’ என ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்குழு சந்தேகப்படுகிறது.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.