Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’கர்ப்ப நிலம்’

 

குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார்.

பீட்டர் துரைராஜ்

peter-durai-raj.jpg?w=150&h=115 பீட்டர் துரைராஜ்

இலங்கை எழுத்தாளர் குணா கவியழகன் தமிழுக்கு தந்து இருக்கும் புதிய நாவல் – கர்ப்ப நிலம். ” புலிகளோடு களத்தில் இருந்தவர் குணா கவியழகன் எனவே அவரது வருணனைகள் மிக யதார்த்தமாக இருக்கும் ” என்றார் எழுத்தாளர் முருகவேள். இதனை படித்து முடிக்கையில் இரா.முருகவேள் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. இளந்தமிழகம் இந்த நாவல் குறித்து ஒரு விமர்சனக் கூட்டத்தை சமீபத்தில் நடத்தியது.மேலும் பல கூட்டங்களுக்கு பொருத்தமானதுதான் இந்த நாவல்.

யாழ்ப்பாணம் நகரை காலி செய்யும்படி விடுதலைப் புலிகள் பொதுமக்களை கேட்டுக் கொள்கிறார்கள். ‘புலிகள் சொன்னால் ஏதோ காரணத்திற்காகத்தான் இருக்கும் என்று யாழ்பாணம் நகரை மக்கள் காலி செய்கிறார்கள்; அனைவரும் காட்டிற்கு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். இந்த நூலுக்கு ‘ வனமேகு காதை’ என பொருத்தமான அடைமொழி இட்டிருக்கிறார் நாவலாசிரியர். கிட்டத்தட்ட இந்த இடப்பெயர்வின் காலத்தில் நடக்கும் சம்பவங்களின் கோவைதான் இந்த நாவல்.

யாழ்ப்பாணம் நகரை காலிசெய்யும் மருத்துவக் கல்லூரி மாணவி கனிமொழி தன் காதலை இந்தக் கதை முடிவதற்குள் தனது சீனியர் டாக்டர் மதிக்குமாரிடம் சொல்லிவிடுவாளா ? தன் குடும்பத்தை எதிர்த்து அந்தோணியை திருமணம் செய்து கொண்ட தேவி பிரசவிக்க இருக்கும் நாளில் இடப்பெயர்வு தொடங்குகிறது. அவளால் எப்படி நடக்க முடியும்? அவளுக்கு யார் பிரசவம் பார்ப்பார்கள்? ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடையாக புலம்பெயர்கிறார்கள். இவர்களோடு நாம் மனரீதியில் பயணம் செய்கிறோம். ஒருவேளை அதில் உங்கள் அப்பா இருக்கலாம்; அத்தை இருக்கலாம், சகோதரன் இருக்கலாம். யார் கண்டது ?

யாழ்நகரை வெற்றி கொள்கிறது இராணுவம்; யாழ் கோட்டையில் சிங்கக் கொடி ஏற்றப்படுகிறது. இந்த வெற்றிக்கு யார் காரணம்? யார் பெயரை தட்டிக் கொள்வது ? இராணுவமா ! அரசியல் தலைமையா! இவையெல்லாம் இந்த நாவலில் பேசப்படுகிறது.

சிங்கள அரசியல்வாதி ஆரிய ரத்னா இந்த வெற்றியைக் கொண்டாட குயின்ஸ் ஹோட்டலில் விருந்து வைக்கிறார். இதில் இராணுவ மேஜர் நுவான், சட்டத்தரணி காரிய விக்ரமசிங்க , நீதிபதி,எஸ்.பி, பத்திரிக்கையாளர் கமால , மகளிர் அணித்தலைவி சந்திரா களுநாயக்கா கலந்து கொள்கிறார்கள். இவர்களுக்கு இடையே நடைபெறும் கேளிக்கை, சல்லாபத்திற்கிடையே இலங்கை அரசியல் பேசப்படுகிறது; புலிகள் வீழ்ச்சி பேசப்படுகிறது. மிக நுட்பமாக தகவல்களை தந்திருக்கிறார். ” பாத்திரங்கள் என்னோடு மெய் பேசுவதுபோல மனிதர்கள் ஒருபோதும் பேசுவது இல்லை ” என்று ஆசிரியர் சொல்லுவது உண்மைதானோ என்னவோ !

இந்த விருந்திற்காகும் செலவை ஒரு மத்தியதர சிங்கள குடும்பத்திலிருந்து வந்த விஜயதாசா செய்கிறான்; ஆரிய ரத்னா செய்ய வைக்கிறார். அவனுக்கு அரசியலில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால் தான் செய்து வரும் மரக்காலை ( மரம் அறுக்கும் ஆலை!) தொழிலுக்கு காவல்துறையின் ஆதரவு, அதிகாரி ஆதரவு தேவை. கால ஓட்டத்தில் இவனுக்கு சிங்கள அரசியலில் முக்கிய இடம் கிடைக்கக்கூடும். சட்ட விரோதச் செயல்களின் கூட்டணியில் பங்கு பெறுவான். இவனைப் போன்றவர்கள் வகுக்கும் கொள்கைகளைப் பொறுத்துதான் ஜனநாயகம் அமையும்! இவன் தன் மைத்துனன் மனைவியோடு உறவு கொள்ளும் அத்தியாயம் நாவலில் வரும் ஒரு ரசிக்கத்தக்க பகுதி.

இந்த நாவல் தமிழ் மக்களின் அவலம் குறித்த நாவல். ஆனால் இதில் என் மனதைக் கொள்ளை கொண்டது சிங்களக் குடும்பம்தான். தன் பேரன் சுனில் இராணுவத்தில் சேருவதை சீயா(தாத்தா) ரத்னாயக்கவால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரைப் பொறுத்தவரை துவக்கை தூக்குவது என்பதே காசுக்காக கொலை செய்வதுதான். அறம் சார்ந்த வழியில் இருந்து கிஞ்சிற்றும் விலக வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. வளவுக்காரர்களை ( அப்படி என்றால் யார்?) எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தன் மகன் விஜயதாசாவைக் கெடுத்தது அவர்கள்தான். தமிழர்கள் தங்கள் மண்ணைக் காக்க போராடுகிறார்கள் ; அதில் தவறு ஏதும் இல்லை என்பது அவர் கருத்து. மன்னர் காலத்தில் இருந்து தன் குடும்ப தொடர்ச்சியை அவரால் பகுத்தாராய முடிகிறது. தன் குடும்பம் தழைத்து இருப்பதற்கு காரணம் கடனாக புகையிலை, சுருட்டைத் தந்து விற்கச் செய்த தமிழ்க் குடும்பம்தான். அவர் மூத்த மகன் முன்பொரு காலம் புரட்சியில் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் அவர் எழுப்பும் கேள்விகள் இன்னமும் அவசியமானவை. இடதுசாரி அரசியல் குறித்த சாதகமான பார்வை நாவலில் வருகிறது..

சிங்கள சுனிலுக்கு ஏறக்குறைய சம கால தமிழ்ச் சிறுவன் கதிர். இவனுக்கு வரலாறெல்லாம் தன் தாத்தா நாகமணி மூலம் சோற்றோடும், கதையோடும், பேச்சோடும் சொல்லப்படுகிறது. தன் நிலத்தை இடப்பெயர்வில் வரும் மக்களுக்கு கொடுத்து தங்க வைப்பதில் அவருக்கும் அவர் மனைவிக்கும் எந்த சுணக்கமும் இல்லை. தன் மருமகள் முணுமுணுப்பைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. மனிதாபிமானம்தான் அவருக்கு அளவுகோள்.

கதை , சிறுவன் கதிர் ‘ இடம் வலம் இடம் வலம் இடம் வலம் ‘ என்று சொல்லுவதில் கதை தொடங்குகிறது என்றால் சிங்கள இராணுவச் சிப்பாயாக இருக்கும் சுனில் ‘ லெப்ட், ரைட். லெப்ட் ,ரைட் என்று நடப்பதில் முடிகிறது. வன்னிக்காட்டில் கதை தொடர்ந்து நடக்குமோ ? ஒருக்காலத்தில் பரஸ்பரம் ஆதரவோடு இருந்த ரத்னாயக்க – நாகமணி வாரிசுகள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்ள நேரிடுமோ !

குணா கவியழகன் செய்நேர்த்தியில், அரசியலில், சுவாரசியத்தில், கலைமதிப்பில், பாத்திரப்படைப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். இந்த நாவலின் கட்டுக்கோப்பும் அழகியலும் இவருடைய மற்ற நாவல்களை படிக்க தூண்டுகிறது.

அகல் வெளியீடு, 348 டிடிகே சாலை,சென்னை-14 / பக்கம் 336/ விலை ரூ.300/முதல் பதிப்பு ஜனவரி 18.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.

 

https://thetimestamil.com/2018/06/20/இலங்கை-இடப்பெயர்வின்-கு/

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குணா. கவியழகனின் கர்ப்பநிலம் நாவலை சற்றுமுன்னர்தான் வாசித்து முடித்தேன். இது வனமேகு காதை என்று ஒரு பெரும்காவியத்தின் ஒரு நாவல் என்று சொல்லியுள்ளார்.

யாழ்ப்பாண இடப்பெயர்வை மிகவும் உணர்வுபூர்வமாக இந்த நாவலின் சில அத்தியாயங்கள் சொல்கின்றன. 

பிடித்த வரியொன்று:

”யதார்த்தத்தை நோக்கி இலட்சியத்தைத் திருப்பினால் அவன் வியாபாரி. இலட்சியத்தை நோக்கி யதார்த்தத்தைத் திருப்பினால் அவன் போராளி”

 

ஆனால் ஏதோ காழ்ப்புணர்வு காரணமாக ஊழிக்காலம் எழுதிய தமிழ்க்கவி அம்மா (அவரும் முன்னர் புலிகளின் அரசியல் பிரச்சாரம் செய்தவர்) விமர்சனம் என்று வன்மத்தைக் கொட்டியிருக்கின்றார்.

 

ச(க)ர்ப்ப நிலம்-நூல் விமர்சனம்-தமிழ்க்கவி

NL_large_1519992989.jpg?resize=300%2C181

 

மிக சாதுரிமாக சில உண்மைகளை புனைவுக்குள் புகுத்தி உண்மைகளையும் பொய்யாக்கி துவழ்கிறது நாவல். “ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை”அந்த மட்டில் இது புலம்பெயர்நாடுகளில் சர்க்கரையாகலாம் என்றாலும் அங்கும் சம்பவங்களுடன தொடர்புபட்டவர்கள் நிரம்பிவிட்டதால் கஸ்டம்தான்.

ஒரு காலத்தில் குணா கவியழகனின் எழுத்துக்களை விரும்பிப் படிக்க முடிந்தது. அவரது அரசியற் கல்வியானது திரு.மு. திருநாவுக்கரசு அவர்களின் அடியொற்றியது. அது அவரது மேடைப்பேச்சுகளிலும் அவதானிக்கப்பட்டது. எம்மைப்போல அது பல்கலைக்கழக பேராசிரியர்களின் கற்பித்தல், அனுபவம் என்பவற்றைக் கொண்டதல்ல. எனினும் அவர் இயக்கத்தின் கல்விப்பிரிவின் பொறுப்பாளராகவிருந்தார். இவரே சகல பிரிவினருக்குமான அரசியல் வகுப்புகளை நடாத்தும் பொறுப்பிலிருந்தவருமாவார். அது தவிர இறுதிக்காலங்களில் ‘விடுதலைப்புலிகள்’; என்ற இயக்கத்தின் முக்கிய பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் இருந்தார். மக்கள் இவரது அரசியற் பத்திகளையே பெரும்பாலும் பத்திரிகைகளில் படித்து வந்தனர் எனக்குத் தெரிய பெண்கள் பத்திரிகையான “சுதந்திரப்பறவைக்கும்”-கூட, இவரே தன் மனைவிக்காக ஆசிரிய தலையங்கம் எழுதினார் என்பது, எங்களில் பலருக்குத் தெரிந்து, அது பெரிய விவகாரமாக்கப்பட்டது என்றாலும் தமிழ்ச் செல்வனின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்.

இதனால்தான் அவர் துணிந்து ‘நஞ்சுண்டகாட்’டை அப்பவே எழுதினார். அது அப்பவே தடை செய்யப்பட்டது. அதிலுள்ள பயிற்சிமுகாம்பற்றிய செய்திகள் முன்பே வெளிவந்திருந்தால் புதிய போராளிகளை இணைப்பது முடியாமலே போயிருக்கும்.

குணா கவியழகனின் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒவ்வொரு விடயங்களையும் தத்துவபூர்வமாக விளக்கும் எழுத்துக்கள் எனக்குப்பிடிக்கும். அதுவும் நேராக சொல்லக்கூடிய ஒரு விசயத்தையும் மிக அழகாக புதிர்போட்டு விளங்கவைக்கும் தன்மை கொண்டது அவரது எழுத்து. அந்த பிரத்தியேக எழுத்து நடைபற்றி நான் பலமுறை வியந்து போயுள்ளேன். ஒரு ஒரேயொரு கருத்தைப்  பல கோணங்களில் ஆய்வு செய்து விபரிக்கக்கூடிய திறமை இவருக்குண்டு. அரசியல் ஆய்வாளர்களாக சிலரை இயக்கம் தேர்வு செய்தபோது இவரும் அதற்குள் கொண்டுவரப்பட்டார்.

“ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது” முது மொழி என்றாலும் இது இப்போது வழக்கொழிந்து விட்டது என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதே. காரணம் ஏடுகளில் எழுதப்படுபவை பலருடைய சம்பாத்தியத்துக்கும் வாழ்க்கைக்கும் பெருமளவில் தொண்டு புரியக்கூடியதாக அமைகின்றன. இந்த வகையில் அண்மையில் வெளிவந்துள்ள குணா கவியழகனின் “ கர்ப்பநிலம்” என்ற புத்தகத்தை கூறலாம். புனைகதைகளின் ஒரு பெரும் தத்துவமாக இதை அவர் நகர்த்த முனைந்தாலும் அது மிக, மிகமிக வருத்தத்துடன் நகர்கிறது.  பெரும் சிரமங்களின் மத்தியில் இந்த புத்தகத்தைப் பெற்றேன்.

அதை பெற்றதும் கொஞ்சநேரம் ஆரத்தடவி மகிழ்ந்து கையில் பெருமையுடன்  வைத்திருந்து, வீட்டில் ஆரவாரமில்லாத ஒரு நல்ல பொழுதில் திறந்து படிக்க ஆரம்பித்தேன். எப்போதும் முன்னுரைகளை இறுதியாகவே படிப்பேன். காரணம் சில முன்னுரைகள் எம்மை சுதந்திரமாக எமது நோக்கில் புத்தகம் வாசிப்பதை திசை திருப்பி விடுகின்றன. பல புத்தக வெளியீடுகளில் விமர்சனத்திலேயே விமர்சகர் புத்தகத்தை பக்கம் பக்கமாக வாசித்து ஒப்பிப்பது போல முன்னுரைகளிலும் நடந்து விடுகிறது.

ஒரு வகையில் இதற்காகவே நான் வெளியீடுகளில் புத்தகம் கைக்கு வந்ததும் வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி விடுகிறேன். நல்ல வேளையாக கர்ப்பநிலத்துக்கு முன்னுரை எதுவும் இல்லை. என்சொல் என்று ஆசிரியரின் சொல் மட்டும் ஒரு பக்கத்தில் அமைகிறது. வலு சுதந்திரமாக, புத்தகத்துள் இறங்கிவிட்டேன்.

மிகக் கடினமான பயணமாக அது இருந்தது. குடும்பங்களின் பின்னலில் மனம் ஒட்ட மறுத்தது. சம்பவங்களைத் தொகுப்பதில் கதாசிரியரியரின் திறமை வெளிப்படாது  ஒருவித அலுப்பே நிரம்பிக் கிடக்கிறது. சினிமாக்களில் திகைப்பான ஒருநிலையில் ரசிகர்களைக் கொண்டு வந்துவிட்டு ஒரு ‘டூயட’ போடுவார்களே அதுபோல, மனம் சம்பவக்கோர்வைகளில் லயித்துப்போகவில்லை. பாத்திரங்கள் ஒரு வாசகனைக் கட்டிப்போடும் திராணியற்றிருப்பதால் சம்பவங்களை கதை தனது பற்றுக்கோடாக கொண்டு செல்லமுனைகிறது. ( நல்ல வேளையாக குடும்ப வாரிசுநிலை பின்னால் தரப்பட்டுள்ளது. அது இல்லாது போனால் எல்லோரும் அநாதைகளே மிக முக்கியமாக நான் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்).

ஒரு காதல். கதைமுடிவில் அது காதலல்ல காமமே என்பது உறுதியானாலும் ஆரம்பத்தில் அது சித்தரிக்கப்படும்போது மிகக்கடினமான எண்ண ஓட்டங்களைக் கொண்டு விபரிக்கப்படுகின்றது. அந்த இரண்டு மனங்களுக்குமிடையே நடக்கும் போராட்டம் பின்னணியுடன் பத்துப்பன்னிரண்டு பக்கங்களில் வந்தாலும் ரொம்ப அலட்டலாக இருந்தமையால்  எனக்குப் பக்கங்களை கடக்க வெகு சிரமமாக இருந்தது.

கதை என்னவோ சூரியக்கதிர் நடவடிக்கைக்குள்தான் தொடங்குகிறது என்றாலும்  அந்த வைரமாளிகைக்கிழவர் எப்படி மறுஜென்மம் எடுத்தார் என்பது புரியவேயில்லை. நானும் யாழ்ப்பாணத்துக்கதான் அவரைக்காணாமல் திரிஞ்சனோ?! கவியழகனின் வயதுக்கு அந்தக்கிழவரை அவர் கண்டிருக்க வாய்ப்பே இல்லை. உயரமான வைரமாளிகை எனற பட்டியை அணிந்து கொண்டு

“வந்தா ஒருலச்சம் போனா அம்பேயம்”

என்று தேசிய ஆஸ்பத்திரி லொத்தர் டிக்கற் விற்ற அந்தக்கிழவருக்கு அறுபத்து ரெண்டாம் ஆண்டே… வயது அறுபதுக்குமேல இருக்குமே..

நாகமணி, கிளி குடும்பத்தைச்சுற்றி ஒரு பெருங்கதை சில உபகதைகளுடன் திரிகிறது. இதில் முக்கிய நிகழ்வு என்னவென்றால் நாகமணியர் காணுகின்ற கனவு, இருந்தாற்போல  சூரியக்கதிர் போர்க்களத்துள் இறங்கி ஒரு நீச்சலடித்துவிட்டுத்திரும்பி, கொழும்பு அரசியலுக்குள் நுழைந்து விட்டது. அங்கிருந்து அவர் செய்யும் விவகாரமான செயல்களாவன, மனிதர்களின் அந்தரங்கங்களை அருகிலிருந்தே குறிப்பெடுத்ததுதான். அவை கதைக்கு எவ்விதத்திலும் தேவையற்றதாயினும், கவர்ச்சிகருதி புகுத்தியிருப்பாரோ…?

நிலம் விட்டு வெளியேறிய சம்பவங்களும் மிக முக்கியமானது,  நாவற்குழி வீதியில் ஒரு பிரசவம் நிகழ்கிறது. போர்க்காலங்களில் இப்படி எத்தனையோ பிரசவங்கள் நடந்துள்ளனவாயினும். கண்டவரைக்கேட்டு கதாசிரியர் பார்க்கும் பிரசவம்‘நண்பன்’ படத்தில் விஜய் பார்த்த பிரசவத்தை விஞ்சி எங்கோ போய்விட்டது. யாராவது அத்தகைய கொலைமுயற்சியில் இறங்க வேண்டாமென இந்த நூல் விமர்சனத்தின் ஊடாக ஒரு மருத்துவ தாதியாக இருந்தவள் என்ற முறையில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சூரியக்கதிரின் மனிதப்பேரவலத்தை இப்படி கேலிக்கூத்தாக்கி  இருக்க வேண்டாம். அன்றைய நாளில் அந்த மக்கள் கூட்டத்துள் நானும் நடந்தேன் என்பதாலும் மட்டுவிலில் மட்டுமல்லாமல் தென்மராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் திரிகிற வேலையே செய்ததாலும் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாகியிருந்தேன். வேதனை சுமந்த மக்களின் வாழ்க்கையை நாகமணியர்  உறவுகளுடன் சுருக்கிவிட்டார்.

‘சைக்’ தொடங்கியது முதல் எதிர் கருத்துக்களையே எழுதுகிறேனே எதாவது நல்ல கருத்து இருக்காதா ? என மறுபடி மறுபடி புத்தகத்தை புரட்டுகிறேன். கடைசியில் வறுமை காரணமாக ‘காமென்ரு’களில் தைத்துப் பிழைக்கும் பெண்களையும்…கேவலமானவர்களாக்கி தன் சொந்த வரலாற்றை முடித்திருக்கிறார். இது கர்ப்ப நிலமல்ல தமிழர்கள் மீது ஏவப்பட்ட சர்ப்பநிலம்.  என்பதை அவரது என்சொல்லிலேயே அவர் குறித்துரைக்கிறார்,

“மனிதர்கள் தாம் ஏற்கிற பாத்திரம்போலதான் வாழ்வு அவர்களை நடிக்கத்தூண்டுகிறது. தாங்கள் என்னவாக இருக்கிறோம் என்பதையே அறிய இயலாத மனச்சிக்கலுக்குள் மாட்டிவிடுகிறார்கள். ஆனால் ஒரு எழுத்தாளனின் கையில் பாத்திரமாக சிக்கும்போது கட்டிய வேசமெல்லாம் அவிழ்த்துப் போட்டு தம் மன நிர்வாணத்தைக் காட்டுகிறார்கள்”

தமிழ்க்கவி இலங்கை 

 

http://www.naduweb.net/?p=8131

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.