Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரணிலின் வடக்கு விஜயம்! பிராந்தியத்தில் உணர்த்தப்படும் செய்திகள்?

Featured Replies

ரணிலின் வடக்கு விஜயம்! பிராந்தியத்தில் உணர்த்தப்படும் செய்திகள்?

 
ranil-maithree.jpg

கடந்த சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கும், கிளிநொச்சிக்கும் விஜயம் செய்தார். இங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் தொடக்கி வைத்தார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவர் இந்தியாவின் நிதி உதவியுடனான அவசர அம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்வை இந்தியப் பிரதமர் மோடி இந்தியாவிலிருந்தபடி இலத்திரனியல் திரை மூலம் தொடக்கி வைத்தார். நிகழ்வில் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. மோடி சிங்களத்திலும், தமிழிலும் வணக்கம் சொன்னார். இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பைப் பற்றிப் போற்றிப் பேசினார்கள்.

அதே நாளில் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் வேறு சில சந்திப்புக்களிலும் கலந்து கொண்டார். இந்தியாவின் உதவியுடன் பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பது, காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பது ஆகிய இரு வேறு திட்டங்களை அமுல்ப்படுத்துவதற்கான தேவை மதிப்பீட்டுச் சந்திப்புக்கள் அவை என்று கூறப்படுகின்றது.

இது நடந்த அடுத்த நாள் மைத்திரி பொலநறுவையில் ஒரு வைத்தியசாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். அந்த வைத்தியசாலைக்கான நிதி உதவியை சீனா வழங்குகிறது. இவ்வைபவத்தில் வைத்து இலங்கைக்கான சீனத்தூதுவர் சீனத்தலைவரின் அன்பளிப்புப் பணத்தையும் மைத்திரியிடம் கையளித்தார்.

இந்நன்கொடையை எல்லா மாவட்டங்களுக்குமான வீட்டுத் திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப் போவதாக மைத்திரி கூறியிருக்கிறார். இந்நிகழ்வில் முதலில் சீன தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னரே சிறீலங்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இது நடந்த அடுத்தடுத்த நாள் கொழும்பில் சீனாவுக்குச் சொந்தமான சங்கரில்லா நட்சத்திர விடுதியில் ஒரு வைபவம் நடந்தது. சீன செஞ்சேனையின் 91 ஆவது சம்மேளன நிகழ்வு அது. சிறீலங்காவின் படைப்பிரதானிகள் பங்குபற்றிய அந்நிகழ்வில் இலங்கையின் ஆளுங்கட்சிப் பிரதானிகள் பங்குபற்றியிருக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மகிந்தவும், கோத்தபாயவும் சம்பந்தரும் பங்குபற்றியிருக்கிறார்கள். மகிந்த சகோதரர்கள் சம்பந்தரோடு பலதைப்பற்றியும் பேசியிருக்கிறார்கள்.

இதே காலப் பகுதியில் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த பிரதானிகளும் இலங்கை அரச மற்றும் படைப் பிரதானிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

மிகக் குறுகியகால இடைவெளிக்குள் இடம்பெற்ற சந்திப்புக்கள் இவை. வழமையான நிகழ்வுகள்தான் என்றாலும் இவை யாவும் ஒன்றைக் காட்டுகின்றன. சிறிய இலங்கைத்தீவின் கேந்திரக் கவர்ச்சி எந்தளவுக்குள்ளது என்பதை இவை காட்டுகின்றன. அதைவிட முக்கியமானது மேற்படி கேந்திரக் கவர்ச்சியை வைத்துக் கொண்டு முப்பெரும் வல்லரசுகளுக்கிடையில் இக்குட்டித் தீவு எப்படிக் கெட்டித்தனமாகச் சுழித்துக் கொண்டோடுகிறது என்பதையும் இது காட்டுகிறது.

யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தையும், பலாலி விமானத்தளத்தையும் விஸ்தரிப்பது தொடர்பாக சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது. இவற்றோடு மன்னாருக்கும் – ராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து பற்றியும் பேசப்பட்டு வருகிறது. இலங்கை அரசாங்கம் இவற்றுக்கு கொள்கையளவில் ஒப்புதல் கொடுத்தாலும் பிரயோக நிலையில் இத்திட்டங்களை அமுல்ப்படுத்த தயாரில்லை என்று ஓர் அவதானிப்பு உண்டு.

குறிப்பாக மகிந்தவின் காலத்திலிருந்தே காங்கேசன்துறைமுகத்தை விஸ்தரிப்பது தொடர்பில் இந்தியா ஆர்வம் காட்டியது. ஆனால் மகிந்த ஓர் உயர்மட்டச் சந்திப்பின் போது ஏனைய நாடுகளிடம் அத்திட்டம் வழங்கப்படுவதை எதிர்க்கும் இந்தியா தானும் அதைப் பொறுப்பேற்கத் தயாரில்லை என்ற தொனிப்படக் கருத்துத் தெரிவித்ததாக ஒரு தகவல் உண்டு.

அதே சமயம் பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்கு விக்னேஸ்வரன் தடையாக இருப்பதாக ஓர் அபிப்பிராயம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக வட்டாரங்களில் முன்பு காணப்பட்டது. சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பிலும் இவ்வாறு சம்பந்தர் எதிர்ப்பதாக இந்தியத்தரப்பில் கருதப்பட்டது.

ஆனால் சம்பந்தரோ விக்னேஸ்வரனோ அந்தளவுக்கு சக்தி மிக்கவர்களா? இருவரும் தரமுடியாது என்று கூறுமளவுக்கு சக்தி மிக்க தலைவர்களா? இல்லை. அவர்கள் இல்லை என்று கூறினார்களோ இல்லையோ இலங்கை அரசாங்கம் அவ்வாறு கூறுகிறது என்பதே சரி.

குறிப்பாக பலாலி விமான நிலையம் ஒரு பிராந்திய விமான நிலையமாக விஸ்தரிக்கப்பட்டால் என்ன நடக்கும்? புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் நேரே இங்கு வந்து இறங்கப் பார்ப்பார்கள். அல்லது தமிழ் நாட்டில் இறங்கி அங்கே வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு நேராகப் பலாலிக்கு வருவார்கள்.

அதனால் இவ்வளவு காலமும் கட்டுநாயக்காவை நோக்கித் திறக்கப்பட்டிருக்கும் வாசல் இடம்மாறி பலாலியை நோக்கித் திறக்கப்பட்டுவிடும். இது வருமான ரீதியாகவும் கட்டுநாயக்காவிற்கும் இழப்பாயிருக்கும். அதே சமயம் தமிழ் நாட்டிற்கும் பலாலிக்குமிடையிலான பொருளாதரப் பாதை ஒன்று திறக்கப்பட்டு விடும். இது தமிழ்ப் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சிகளுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

அது மட்டுமல்ல பலாலி விமானத்தளம் எனப்படுவது வடக்கின் படைத்துறைத் தலைமையகம் மற்றும் கேந்திர மையம் ஆகும். அதை சிவில் போக்குவரத்துக்காகத் திறந்து விடும் போது அது அதிகமதிகம் சிவில் மயப்படும். அதாவது தவிர்க்க முடியாதபடி ராணுவமய நீக்கம் நிகழ வேண்டியிருக்கும். தனது வடக்குக் கேந்திரத்தில் இப்படியாக ஒரு பொருளாதாரப் பாதையும், புலம் பெயர்ந்த தமிழர்களுக்கான வாசலும் திறக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் எப்படிப் பார்க்கிறது?

இது போன்றதே காங்கேசன்துறைத் துறைமுகமும். இத்துறைமுகத்தை விஸ்தரித்து சிவில் போக்குவரத்திற்குத் திறந்து விட்டால் அது பலாலியைப் போலவே ஒரு வணிக வாயிலாக மாறும். அதன் வழி ஒரு கடல் வழி வணிகப்பாதையும் திறக்கப்படும். இப்பொழுது காங்கேசன்துறை துறைமுகம் ஆனது வடக்குப் படைக்கட்டமைப்பின் கடல் வாயிலாகக் காணப்படுகிறது. அதை சிவில் வணிக வாயிலாகத் திறந்து விட்டால் என்ன நடக்கும்?

ஏற்கனவே காங்கேசன்துறையிலிருந்து சிதம்பரத்துக்குக் கப்பல் விடுமாறு ஈழத்துச் சிவசேனை கேட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இக்கடல் வழியை ஆன்மீக வழியாக யாத்திரிகர்களுக்குத் திறந்துவிடுமாறு ஈழத்துச் சிவசேனை கேட்டு வருகிறது. ஈழத்துச் சிவசேனையின் பின்னணி தொடர்பில் பல கேள்விகள் உண்டு. ஏற்கெனவே இந்திய அரசாங்கம் திறக்க முயற்சித்த ஒரு கடல்வழியை ஆன்மீகத் தேவைக்காகத் திறக்குமாறு சிவசேனா கேட்டு வருகிறது. ஒரு ராஜிய விவகாரத்தை ஆன்மீக விவகாரமாகச் சிவசேனை மாற்றியது தற்செயலானதா?

எனவே காங்கேசன்துறையை விஸ்தரித்துத் திறப்பதும் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை படைத்துறை நலன்களோடு தொடர்புடைய ஒன்றுதான். இது போன்றதே மன்னார் – ராமேஸ்வரம் கடல் பாதையும். இதுவும் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் இடையிலான ஒரு வணிக வழியாக மாறிவிடும்.

எனவே காங்கேசன்துறை, பலாலி, மன்னார் என்று மூன்று வாசல்களைத் தமிழகம் நோக்கித் திறக்கும் திட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தயங்கித் தயங்கியே முடிவெடுத்து வருகிறது. இப்பொழுதும் கடந்த கிழமை உடன்படிக்கை எதுவும் கைச்சாத்தாகவில்லை. பதிலாக தேவை மதிப்பீட்டுச் சந்திப்புக்களே நடந்திருக்கின்றன.

குறிப்பாக பலாலி விமான நிலைய விஸ்தரிப்புத் தொடர்பாக கடந்த ஆண்டு தமிழ் மக்கள் பேரவை ஒரு முடிவை எடுத்தது. திருகோணமலையில் நடந்த பேரவைக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டது. மேலதிகமாகக் காணிகளை சுவீகரிக்காமல் விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன் விஸ்தரிப்பது என்பதே அத்தீர்மானம்.

இத்தீர்மானத்தை வடமாகாணசபையில் நிறைவேற்றுவதற்கு விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்தார். அத்தீர்மானம் வடமாகாண சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட அதே நாளில் வேலையற்ற பட்டதாரிகள் திடீரென்று வடமாகாண சபையின் வாசலை அடைக்கும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள். அதனால் முதலமைச்சர் கைதடியில் உள்ள மாகாண சபைக் கட்டடத்துள் நுழைவது தடுக்கப்பட்டது. எனினும் முதலமைச்சர் இல்லாமலேயே அவைத்தலைவர் மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இத்தீர்மானம் அதிகம் வெளியுலகின் கவனத்தை ஈர்க்கவில்லை. சில கொழும்பு மைய ஊடகங்கள் விக்னேஸ்வரனை விமர்சிக்க இத்தீர்மானத்தைப் பயன்படுத்தியதிற்கும் அப்பால் இத்தீர்மானம் தொடர்பில் அதிகம் விவாதிக்கப்படவில்லை. ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ரணில் விக்ரமசிங்க ஒரு விடயத்தை மிகவும் சூசகமாகப் பிடிகொடாமற் தெரிவித்திருந்தார். ‘ஆம் பலாலி விமானத்தளத்தை விஸ்தரிக்க வேண்டும். ஆனால் யாரை வைத்து அதைச் செய்வது என்று இனிமேற்தான் முடிவெடுக்க வேண்டும்’ என்ற தொனிப்பட அவருடைய பதில் அமைந்திருந்தது.

இப்பொழுது இந்தியாவின் உதவியுடன் அதைச் செய்வதற்கு அவர் ஒத்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. எனினும் எழுத்து மூல உடன்படிக்கை கைச்சாத்தாகும் வரை இது தொடர்பில் எதையும் உறுதியாக எதிர்பார்க்க முடியாது. ஆனால் கடந்த கிழமை தனது ஒருநாள் விஜயத்தின் போது யாழ்ப்பாணத்தில் வைத்து இந்தியாவுடன் தொடர்புடைய மூன்று திட்டங்களில் ஒன்றை அவர் தொடக்கி வைத்திருக்கிறார். இரண்டிற்குரிய தொடக்கச் சந்திப்புக்களை ஏற்பாடு செய்திருக்கிறார்.

ஏற்கனவே திருமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களில் ஒரு பகுதியை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் குத்தகைக்குக் கொடுத்திருக்கிறது. அதன் பின் மத்தள விமானநிலையம் தொடர்பாக இப்பொழுது பேச்சுக்கள் நடந்து வருகின்றன. இது விடயத்தில் தனது பேரத்தை உயர்வாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது.

அதே சமயம் இலங்கைத்தீவின் கட்டுமானப் பணிகளில் 70 விகிதத்திற்கும் அதிகமானவற்றை சீன நிறுவனங்களே செய்து வருவதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கடந்தவாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார். கொழும்பு துறைமுக நகரத் திட்டம், அம்பாந்தோட்டைத் துறைமுகம் கொழும்பில் மருதானையில் அமைக்கப்படும் தாமரைக் கோபுரம் முதலாய பிரதான பொருளாதாரத் திட்டங்களை சீனா முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்படியாக வெளிச்சக்திகளுக்குத் தனது வளங்களை விட்டுக்கொடுக்கும் ஒரு சிறிய நாடு உள்நாட்டில் தமது உரிமைகளுக்காகப் போராடும் தமிழ் மக்களுடன் வளங்களைப் பங்கிடத் தயாராக இல்லை என்பதே இலங்கைத்தீவின் எல்லாத் துயரங்களுக்கும் காரணம் ஆகும். உலகில் உள்ள முப்பெரும் வல்லரசுகளுக்கிடையில் சுழித்துக்கொண்டோடுவதன் மூலம் தனது பேரத்தை உயர்வாக வைத்திருக்கும் ஒரு குட்டித்தீவு உள்நாட்டில் தீர்க்கப்படாத இனப்பிரச்சினை மூலம் தனது பேரத்தைத் தாழ்த்தி வைத்திருக்கிறது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் கோத்தபாய போட்டியிடக் கூடாது என்று அமெரிக்கா விரும்புவதாகத் தெரிகிறது. இச்செய்தி ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கூடாக ஒரு தமிழ் பத்திரிகையின் நாளாந்தப் பத்திக் கூடாகவே வெளியிடப்பட்டது என்று நம்பப்படுகிறது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யார் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதைத் தீர்மானிக்க முயல்கிறார். அதே சமயம் சீனாவின் நட்சத்திர விடுதியில் கோத்தபாயவும் சம்பந்தரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். மகிந்தவுக்கு தேர்தல் காலத்தில் சீன நிறுவனம் ஒன்று பண உதவி செய்ததாக நியூயோர்க் ரைம்ஸ் கூறுகிறது. அதே சமயம் கடந்த கிழமை அதைவிடப் பெரிய தொகையை சீனத்தலைவர் மைத்திரிக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறார். சீனாவின் உள்நுழைவால் இச்சிறிய தீவின் வரைபடமே மாறியிருக்கிறது.

கொழும்பில் உள்ள துறைமுக நகரம் சீனாவிற்கு. அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு. தாமரைக் கோபுரம் சீனாவுக்கு. திருமலையில் உள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்கு. மத்தள விமான நிலையம் இந்தியாவுக்கு. பலாலி விமான நிலையம் இந்தியாவுக்கு. காங்கேசன் துறைமுகம் இந்தியாவிற்கு.

ஆயின் இலங்கை வாழ் மக்களுக்கு எது? தமிழ் மக்களோடு நாட்டின் வளங்களை பங்கிடத் தயாரற்ற சிங்களத் தலைவர்கள் வெளிச் சக்திகளுக்கு நாட்டின் கேந்திரங்களையும் வளங்களையும் குத்தகைக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சகஜீவிகள் தங்களுக்கிடையில் பங்கிடத் தயாரற்ற ஒரு குட்டித்தீவை பேரரசுகள் பிச்சுப் பிடுங்கிக் கொண்டு போகின்றன.

தமிழ்மக்களைத் தோற்கடிப்பதற்காக மகிந்த நாட்டை சீனாவிற்குக் கொடுத்தார். இப்பொழுது ரணில் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்றிடமும் கொடுக்கிறார். தமிழ் மக்களுடன் நாட்டைப் பங்கிடத் தயாரில்லை என்றால் வெளிச்சக்திகளிடம் நாட்டை விற்கவேண்டியிருக்கும் என்ற பேருண்மையை சிங்களத் தலைவர்கள் விளங்கிக் கொள்வது எப்பொழுது?

 

http://athavannews.com/category/weekly/அரசியல்-கட்டுரைகள்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.