Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாராவியின் வரலாறு

Featured Replies

https://assets.roar.media/assets/BKplGqi7iIg7tTss_dharavi.jpg?w=1080

 

பாரெங்கும் நிறைந்திருக்கிறது, தமிழ் சாதி... ஒரு காலத்தில் சூரியன் மறையாத நாடாக பிரிட்டன் புகழப்பட்டது. உலகின் ஏதோ ஒரு திசையில் யூனியன் ஜாக் பறந்து கொண்டே இருந்தது. சூரியனை பார்த்து நகைத்துக் கொண்டே இருந்தது. அதற்கு நிகராக உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள் தமிழர்கள். உலகின் ஏதோ ஒரு திசையில் தமிழன் சூரியனை பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒரு திசையில் சூரிய உதயத்தை பார்க்கும் தமிழன் வேறொரு திசையில் அதன் நேரெதிர் திசையில் சூரிய அஸ்தமனத்தையும் பார்த்துக்கொண்டே இருக்கிறான். மலேசியா, சிங்கப்பூர், மொரீஸியஸ், பிஜி தீவுகள், கரீபியத் தீவுகள், ஐரோப்பா, அமெரிக்கா, ஆஃப்ரிக்கா ஆஸ்திரேலியா என்று தெற்காசியாவையும் தாண்டி உலகம் முழுவதும் தமிழனின் கொடி பறக்கிறது.  ஆனால் இதில் பெருமை பட்டுக்கொள்ள பெரிதாய் ஒன்றுமில்லை என்பதுதான் பெருஞ்சோகம். 
கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்ற தமிழ்ப் பெருமையின் ஊடாக பார்த்தால் பஞ்சம் பிழைக்கவும், அடிமையாகவும், அதிக்கத்தை எதிர்த்து அகதியாகவும் தமிழன் பரவிய சோகக் கதையும் வெளிப்படும். எப்படிச் சென்றால் என்ன கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடித் தமிழனுக்கு உலகமே சொந்தம் தானே...  

மும்பையின் தாராவி

அதில் மும்பை மட்டுமென்ன விதிவிலக்கு. மும்பையின் தாராவி தமிழகத்தின் பெருநிலப் பரப்பில் இல்லை. அது மட்டும் தான் குறை. மற்றபடி அதுவும் தமிழ்நாடுதான். தமிழர்களால் உருவாக்கப்பட்டு, தமிழர்களால் உரிமைப் போராட்டம் நடத்தப்பட்டு, தமிழர்களால் நிறைந்திருக்கிறது தாராவி. மும்பையின் மத்தியப்பகுதியில் இருந்தாலும் தாராவி, குட்டி தமிழ்நாடாகவே இருக்கிறது. தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் அங்கும் கிளைவிட்டுள்ளன.  அரசியல் அமைப்புகளின், இயக்கங்களின் கிளைகள் அங்கும் வேர்விட்டுள்ளன. தமிழகத்துப் பொருட்கள் அனைத்தையும் அங்கே காணலாம். தமிழன் தமிழ் மொழியோடு சேர்த்து, சாதி, மதம், மூடப் பழக்கங்கள் என அனைத்தையும் அங்கேயும் கொண்டு சேர்த்துள்ளான்.  
தன்னகத்தே உழைக்கும் மக்களின் வாழ்க்கையையே ஒரு முழுமையான  வரலாறாக கொண்டிருக்கும் தாராவி உருவான கதை சற்றே நெருடலானது. 

mk9tPGZ6sxAEPMc7_dharavi_2network1.jpg?w=750

Dahravi Map (Representative Pic: buddesign)

உருவான கதை

மெட்ராசும், கல்கத்தாவும், ஆசியாவையே ஆண்டுகொண்டிருந்த காலம் அது. போர்த்துகீசியரிடமிருந்து வரதட்சனையாக ஆங்கிலேயர்களின் கைகளுக்கு பம்பாய் நகரம் வந்தபிறகு கொஞ்சம் வளர்ச்சியடைந்திருந்தது. அந்த நேரத்தில் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூளவே, பம்பாய் நகரம் அசுர வளர்ச்சியடைந்தது.  பம்பாய் நகரின் அசுர வளர்ச்சி ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. நகரத்தின் வளர்ச்சி கிராமங்களை தன்னகத்தே ஈர்த்தது. நகரங்கள் செழித்து வளர்ந்த அதேநேரம் கிராமப் பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாட, கிராமத்து உழைக்கும் வர்க்கம் நகரத்தை நோக்கித் தள்ளப்பட்டார்கள். உற்றுநோக்கினால் நகரங்களின் வளர்ச்சிக்கு கட்டுறுதியான அத்தகைய உழைக்கும் வர்க்கம் தேவையும் பட்டார்கள்... பம்பாய் நகரத்தின் தேவையும், நம்மிடம் உருவான வறுமையும், இயலாமையும், தமிழர்களை பம்பாயை நோக்கித் தள்ளியது. அன்றைய மெட்ராஸ் மாகானத்து மக்களே பெரும்பாலும் அதற்குப் பயன்பட்டார்கள்.  திருநெல்வேலி, வட ஆற்காடு, சேலம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிழைப்புக்காக பம்பாயை நோக்கிச் செல்லத்துவங்கினர். புதிதாக உருவாக்கப்பட்ட தொடருந்தில் பலர் சென்றார்கள் என்றால், இன்னும் பலரோ நடந்தே கூட சென்றிருக்கிறார்கள். செல்வோருக்கெல்லாம் பம்பாய் வேலை கொடுத்தாலும் தங்க இடம் கொடுத்திருக்கவில்லை. இப்போது இருப்பது போல அல்ல அப்போதைய பம்பாய். ஏழு தீவுகளை கொண்டிருந்தது. அப்படியான நில அமைப்புதான் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐரோப்பியர் அந்நிலத்தை தேர்ந்தெடுக்க காரணமாகவும் அமைந்தது. 

18 வது நூற்றாண்டில் தாராவி தீவாகவே இருந்தது. 19 ம் நூற்றாண்டின் இறுதிக்கும் முன்வரைகூட தாராவியின்  நிலப்பரப்பு பெரும்பாலும் சதுப்பு நிலப்பகுதியாக இருந்தது. பள்ளிக்கரனை சதுப்புநிலத்தை குடியிருப்பாக மாற்றும் முன்னரே தமிழன் தாராவி சதுப்பு நிலத்தை குடியிருப்பாக மாற்றியிருந்தான். பம்பாய் வேலை கொடுத்தாலும் வாழ நிலம் கொடுக்கவில்லை. எனவே தமிழர்கள் வேறு வழியின்றி வாழவழியில்லாத அந்த நிலத்தை பண்படுத்தி இருப்பிடமாக்கி கொண்டனர்.

Vn3s3H96pMTHcOwF_1200px-Dharavi_Slum.jpg?w=750

Bridge (Pic: wikipedia)

மீனவ மக்களும் தாராவியும் 

அதற்கு முந்தைய கால கட்டத்திலேயே ‘கோலி’ என்று அறியப்படுகிற மீனவ மக்கள் குடியேறினார்கள். ஆனால், மீன்பிடி தொழில் அந்த பகுதி குடியேற்றங்களுக்காக நிரப்பட்ட பொழுது வழக்கொழிந்து போனது. தாராவிக்கு அடுத்தாற்போல் உள்ள சயான் பகுதியில் வந்த அணைக்கட்டு தீவுப்பகுதியாக இருந்த தாராவியை மும்பை என்னும் தீவு நகரத்தோடு இணைக்கும் பணியை விரைவாக செய்து முடித்தது. நகரமயமாக்கல் சூழலை அழித்து பம்பாயை வளர்த்தெடுத்தது. தாராவி தன் மரபு சார்ந்த மீன்பிடி தொழிலை இழந்தது. அதுவே, பிழைப்பு தேடி வரும் புதிய சமூங்களுக்கான குடியேற்றமாக மாறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது. தாராவியில் தமிழர்கள் மட்டுமே குடியேறியிருக்கவில்லை, தெழுங்கர்களும், பிறபகுதி மராத்தியர்களும், குஜராத்தியர்களும், உத்திரப்பிரதேசிகளும், என நாடு முழுவதுமிருந்து உழைக்கும் மக்கள் பம்பாய்க்கு படையெடுத்தனர். குஜராத்திலிருந்து குடியேறிய உழைக்கும் மக்கள் மண்பாண்டம் செய்வதை தொழிலாக கொண்டனர். தமிழகத்திலிருந்து குடியேறியவர்கள் பெரும்பாலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் தங்கள் வாழ்வாதரத்தை அமைத்துக் கொண்டனர். இவர்களோடு மராத்தியத்தை சார்ந்த ‘சமார’என்று அறியப்படுபவர்களும் இணைந்து தோல் பதனிடும் தொழிற்சாலைகளை நிறுவினர். உத்திரபிரதேசத்திலிருந்து குடியேறியவர்கள் எம்ப்ராய்டரியை தமது தொழிலாக கொண்டனர்.

கூடுதலாக மரபுசார் மண்பாண்டம், மற்றும் நெசவுத்தொழில், ப்ளாஸ்டிக் மீள் உற்பத்த்தி என்பதோடு மட்டுமில்லாமல் கழிவுகளை மீளுறபத்தி செய்யும் தொழிற்சாலைகளும் பரவலாக இங்கு உள்ளன. 

UXzz8WQUp6xvV3QJ_PeterPereira-IndiaFishingVillage-04.jpg?w=750

Fishermen (Pic: 4seephoto)

தொடும் தூரத்தில் மும்பை

தாராவியில் இருந்து மும்பையின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் சென்றுவிடலாம். அதாவது, மும்பை விமான நிலையம் 12 கி.மீ.,தூரத்திலும், 4 ரயில் நிலையங்கள் நடந்து செல்லும் தூரத்திலும் உள்ளது. இதனால், இங்கு அதிகளவிலான மக்கள் நெரிசலுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலான வீடுகள், குடிசை அல்லது தகரத்தால் ஆனது. வீடுகள் 100 முதல் 200 சதுர அடி அளவில் தான் இருக்கும். மும்பையின் நடுப்பகுதியில் உள்ள தாராவின் மொத்த பரப்பளவு 520 ஏக்கர். அதில், 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மிக குறுகிய அளவிலான வீடுகளில் மக்கள் நெருக்கத்துடன் வசித்தாலும், டிவி, பீரோ, மிக்ஸி, மொபைல்போன் என அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளனர். பெரும்பாலான வீடுகளில் கழிவறை இருப்பதில்லை. பொது கழிவறையை தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். மும்பையிலேயே மிகவும் நெருக்கடியான தாராவியில் தற்போது நிலம் வாங்குவது குதிரை கொம்பாக மாறியுள்ளது. தாராவியின் இந்த விலையேற்றத்திற்கு பிறகும், இங்கு வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு குடிப்பெயர முயல்வதில்லை. இங்கு வசிக்கும் பலரும் தங்கள் பொருளாதார நிலைகளை உயர்த்தி உள்ள போதும், இங்கிருந்து இடமாறவில்லை

S0u4K2kcRmTXrAWs_people-3089621_960_720.jpg?w=750

Kid in dharavi (Pic: pixabay)

தாராவியின் பிரச்சனைகள்

தாராவி அதன் தொடக்க காலம் தொட்டு சந்தித்து வரும் பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை சுகாதாரம் தொடர்பானது. கழிவறை வசதி இன்றுவரை நேர் செய்யப்படவில்லை. ஸ்லம்டாக் மில்லியனரில் நாயகச் சிறுவனை நினைத்துக் கொள்ளுங்கள். கழிவறைக்கு காத்திருக்கும் நேரத்தில் காதலிக்கும் சூழல் தான் நிலவுகிறது, காலாவில் ரஜினியே அப்படித்தான் காதலித்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அது தான் எதார்த்தமும் கூட. இருக்கும் பொது கழிவறைகள் கூட சரியாக சுத்தப்படுத்தப்படுவதில்லை. நவம்பர் 2006 இன் படி 1440 நபர்களுக்கு ஒரு கழிவறை என்ற விகிதத்தில்தான் தாராவியில் கழிவறைகள் உள்ளன. இன்றளவும் திறந்தவெளி கழிப்பிடங்களைத் தான் மும்பையின் மத்தியப் பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். அதனூடாக தொற்றுநோய் பரவல் என்பது விரைவாக நடக்குமிடமாக இன்றளவும் தாராவி உள்ளது. தண்ணீரை பொறுத்தவரை தண்ணீர் விநியோகம் சீராக கிடையாது. அப்படியே வரும் தண்ணீர் குழாய்கள் சாக்கடைகள் வழியாக வருவது, அந்த குழாய்கள் துருப்புடித்து, ஓட்டை விழுந்து சாக்கடை நீர் கலந்து வரும் நீரையே மக்கள் பயன்படுத்தும் சூழல் இன்றளவும் நிலவுகிறது. 

மத்திய, மராத்திய அரசுகளின் கடைக்கண் பார்வை கூட கிடைக்காத அந்தத் தாராவி இன்று மும்பை பெருநகரின் மையப் பகுதியானதும், பெரும் ரியல் எஸ்டேட் காரர்களின் கழுகு கண்களில் விழுந்திருக்கிறது. வளர்ச்சி, தூய்மை போன்ற வாசகங்கள் அவர்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. ரியல் எஸ்டேட் அதிபர்களும்,  அரசாங்கமும் தாராவியை கையகப்படுத்த பலமுறை முயற்சித்திருக்கின்றன. ஆனால், ஒருபோதும் அதில் அவர்கள் வெற்றி பெற்றதில்லை. மாநகரின் மையத்தில், மிகத் துரிதமான போக்குவரத்து இணைப்பில் தாராவி இருப்பதால் எப்போதும் இந்த இடத்துக்கு ஏக கிராக்கி. இப்போது அரசாங்கம் தன்னால் முயன்ற அளவுக்கு பல நலத்திட்டங்களை தாராவியில் செயல்படுத்தி வருகிறது. ‘‘மேம்பாடு என்றால் கண்ணாடி கட்டடங்களும், மால்களும், ஆபீஸ்களும் மட்டுமல்ல. உயர்ந்த கட்டடங்களைக் கட்டினால் சிறுகுறு தொழிற்சாலைகளுக்கு எங்கு இடமிருக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை. நாடெங்கிலும் இருந்து மும்பைக்கு பிழைக்க வருகிறவர்கள் தாராவியில்தான் அடைக்கலமாகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்வளிக்கும் தாய், ஒருபோதும் ஷாப்பிங் மால், கண்ணாடிக் கட்டடங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்ள மாட்டார்’’ என்று சொல்லும் அப்பகுதி வாசிகள், போதுமான நீர்வசதிகளும் கழிவறைகளும் தாராவியில் இல்லை என வருத்தப்படுகிறார்கள். 

vowGG3ekBV8OhT1y_1440501881-1139_4.jpg?w=750

Shaggy (Pic: scroll)

மீள்கட்டமைப்பு

1997 முதல் ஹாங்காங்கில் உள்ள தய் ஹாங் என்ற குடிசைபகுதி மீள்கட்டமைப்பு செய்யப்பட்டதை முன்மாதிரியாக கொண்டு தாராவியை மீள்கட்டமைப்பு செய்வதற்கான பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 2004 இல் மீள் கட்டமைப்பிற்கான திட்ட மதிப்பீடு 5000 கோடியை தாண்டிவிட்டது. 2010 இல் இதே மதிப்பீடு 15000 கோடியை தாண்டியிருக்கிறது, முன்னேற்றமும், மீள்கட்டமைப்பும் ஆங்கங்கே, அவ்வப்போது மட்டுமே  எட்டி பார்க்கிறது என்பதுதான் எதார்த்தம். தாராவியின் முன்னேற்றம் என்பதாக முன்வைக்கப்படும் திட்டங்களுக்கு உலக அளவிலான நிறுவனங்கள் ஏலத்தில் பங்கெடுக்கின்றன. காலம், காலமாக வாழவே தகுதியற்றிருந்த மண்ணை வாழ பண்படுத்திய மக்களை முன்னேற்றம், மீள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் மக்களுக்கு பங்களிப்பது போல தோற்றம் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக, அது தாராவி வாழ் மக்களை மெல்ல வெளியேற்றி பன்னாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமிப்பதற்காகவே அமையும் என்பதை உலகமயமாதலின் வரலாறறிந்தவர்களால் தொடர்ந்து முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆகும்.. 

சமீபத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் மீள்கட்டமைப்பு திட்டம் அமெரிக்க வாழ் முகேஷ் மேஹ்தாவால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்படி தாராவியில் வசிக்கும் 57,000 குடும்பத்திற்கு சேவை செய்யும் பொருட்டு 7ல் மூன்று பங்கு குடியிருப்பு, பள்ளி, விளையாட்டு திடல், சாலை போன்றவை அமைக்கப்படும். ஆனால், விற்பனைக்காக கட்டப்படப் போகும் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்காக இன்னபிற வசதிகளுக்காக பயன்படுத்தப்படப் போகும் நில அளவு எவ்வளவு தெரியுமா? 7ல் 4 பங்கு. வாழ பண்படுத்திய மக்களுக்கு 3 கோடி சதுர அடி, பணம் வைத்திருக்கும் ஒரே காரணத்திற்காக தாராவி பக்கம் வரவே முகம் சுழிக்கும் மக்களுக்காக 4 கோடி சதுர அடி.. ஆக, மக்களுக்கு வசதிகள் செய்து தரப்போகிறோம் என்கிற பெயரில் கொள்ளையடிக்கப் போவது சில நிறுவனங்களும், அரசு அதிகாரிகளும், முதலாளிகளும்தான். காலப்போக்கில் விலைவாசி ஏற்றம், வசதி வாய்ப்பு பணக்காரர்களுக்கான தாராவியாக மாறும் பொழுது கிடைக்கும் இடமும் பிடுங்கப்படும் அல்லது மக்களே விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை இயல்பாக உருவாகும் என்பதைத் தான் அரசியல் அறிந்த தாராவிவாசிகள் முன் வைக்கின்றனர். அப்படியான உண்மையான நெருக்கடியைத்தான காலா பதிவு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். 

இதில் இரண்டாயிரமாவது ஆண்டிற்கு முன்பு குடியிருந்தவர்களுக்குதான் வீடுண்டு. இத்தனை ஆண்டுகாலமாக சொந்த வீடில்லாது, வாடகை வீட்டிலேயே 10-15 ஆண்டுகளை ஓட்டிவிட்ட, வறுமையில் வாடும் குடும்பத்திற்கு வீடு கிடையாது. வீடு கிடைப்பவர்களுக்கும் எத்தனை சதுர அடியை அரசு முன்வைத்திருக்கும் திட்டத்தின்படி தருவதாக கூறியிருக்கிறார்கள் என்றால் 225 சதுர அடி. இந்த 225 சதுர அடி என்னும் அநீதிக்கு எதிராக மக்களிடையே கடும் எதிர்ப்பு இருந்து வருவதுதான் உண்மை நிலவரம். அதோடு, இத்தனை ஆண்டுகாலமாக சிறு பெட்டிக்கடை, மளிகைக்கடை மட்டுமில்லாமல் கடலை, மிக்சர், சிப்ஸ் போன்றவை தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் வைத்து தம் பிழைப்பை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு தமது கடையும், பிழைப்பதற்கான வாய்ப்பும் மீண்டும் அமையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வாழ்வாதாரம் போன பிறகு வாழ இடம் மட்டும் இருந்து என்ன பயன் என்பது தான் தாராவி வாசிகளின் குமுறலாக உள்ளது. இது போன்ற ஐயங்களுக்கு அரசின் பதில் என்னவென்றால் சுற்றுசூழலை மாசுபடுத்தாத வணிக நிறுவனங்களை மீண்டும் சட்டபூர்வமாக இடமாற்றம் செய்து தரும் என்கிறது.

u9BpGUThpH9bTskT_413180-dharavi.jpg?w=750

Reconstruction around (Pic: dnaindia)

தொழில் மற்றும் வணிகம்

520 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ள தாராவியில் கொழிக்கும் தொழில்களின் மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் டாலர்கள்! அதாவது தோராயமாக 6 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய்.  தாராவியில் இண்டு இடுக்கெல்லாம் நிறைந்திருக்கும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பன்மொழி பேசும் மக்களின் கடின உழைப்பால்தான் இந்த மாற்றம் சாத்தியமாகி இருக்கிறது. ஒரு காலத்தில் தொழில்மயமாக்கலின் இருண்ட பகுதியாக, ஏழைகளின் வாழிடமாக, அரசுக்கு சங்கடம் கொடுக்கும் நிலப்பரப்பாகக் கருதப்பட்ட தாராவியின் பொருள் உற்பத்தியை கணக்கில் எடுத்தால், அது அம்பானிகளுக்கே சவால் விடும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதை அறிய முடியும்.  தோல்தொழில், டெக்ஸ்டைல்துறை, உணவுத்துறை என சகலவிதங்களிலும் வணிகப்பேட்டையாக மாறியிருக்கிறது.   அங்கு தயாரிக்கப்படாத பொருட்களே இல்லையெனும் அளவிற்கு அங்கு ஏராளமான தொழில் முனையப்படுகின்றன. 

தாராவியில் தடுக்கி விழுந்தால் ஒரு தொழில் முனைவோரைப் பார்க்கலாம். அவர்கள் அனைவருமே தங்களை அரவணைக்கும் தாயாகத்தான் தாராவியைத் துதிக்கிறார்கள். இந்தியாவின் வணிக நகரமாக மும்பை இருப்பதால், இம்மாநகரத்தின் மையப் பகுதியான தாராவியும் செழித்தோங்கி வளர்கிறது. டெக்ஸ்டைல் மற்றும் தோல் பொருட்களின் சொர்க்க புரியாகவும், தொழிலாளர்கள் அதிகம் கிடைக்கும் இடமாகவும் தாராவியே திகழ்கிறது.  தாராவில் உற்பத்தியாகும் பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பா என்று உலகம் முழுவதும் ஏற்றுமதியாகின்றன. 15000 க்கும் மேற்பட்ட ஒரு அறைத் தொழிற்சாலைகள் தாராவியில் உள்ளன. குண்டூசி, செருப்பு, சீப்பு, கண்ணாடி, விளக்கு, முறுக்கு, என்று கிட்டத்தட்ட 5000 வகையான தொழில்கள் தாராவியில் மேற்கொள்ளப்படுகின்றன. 

9szBxkFyC3SZpdGo_An_embroidery_unit_in_Dharavi%2C_Mumbai.jpg?w=750

Embroidery (Pic: wikimedia)

சேறிச் சுற்றுலா

தற்போது சேரி சுற்றுலாவும் அதிகரித்து வருகிறது. நுகர்வு கலாச்சாரத்தில் ஊறித் திளைக்கும் மேற்கத்திய சுற்றுலா பயணிகள் வறுமையில் வாழும் மக்களைப் பார்த்து அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை ரசிப்பது, அல்லது அதைப் பார்த்து வருத்தப்படுவது, இரக்கப்படுவது என்று தங்கள் ஆழ்மனது ஆன்மாவைத் திருப்திப்படுத்திக்கொள்ள தாராவிக்கு படையெடுக்கின்றனர். வறுமையுடனான மக்களின் போராட்டத்தை ‘உண்மையில் ஏழைகள்தான் மகிழ்ச்சியாக இருக்காங்க’ என்று தங்களைத் தாங்களே ஆறுதல்படுத்திக்கொள்ளவோ அல்லது நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று திருப்திபடுத்திக் கொள்ளவோ இந்த சேரி சுற்றுலாவை மேற்கொள்கின்றனர். 

திரைப்பட பயிற்சிப் பட்டறைகள் இங்கு ஏராளமாக இருக்கின்றன. வெளிநாட்டு டூரிஸ்ட்டுகளுக்கு இடங்களை சுற்றிக்காட்டுவதும், டாகுமெண்டரி படங்கள் எடுக்க உதவுவது என  வழிகள் இங்கு அதிகம். தாராவியை மையப்படுத்தி பல திரைப் படங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் வெளியான தரமான திரைப்படமாகக் கருதப்படும் நாயகன் திரைப்படம் தாராவியையே மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அதேபோல ஏஆர் ரகுமானுக்கு ஆஸ்கரை பெற்றுத் தந்த ஸ்லம் டாக் மில்லியனர் திரைப்படமும் தாராவியை மையமாக வைத்து எடுக்கப்பட்டதே. ராம் கோபால் வர்மாவின் ”இந்தியன் கேங்ஸ்டர் ட்ரையாலஜி”, அனுராக் காஸ்யாப்பின் ”பிளாக் ஃபிரைடே”, ”நோ ஸ்மோக்கிங்” போன்ற படங்களும் தாராவியை மையமாக கொண்டவையே. தற்போது ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா... தாராவியை மையமாக வைத்து தாராவி மக்களின் பிரச்சனைகளை பேசிய திரைப்படமே... அந்த மக்களின் மிக முக்கியப் பிரச்சனையான நிலம் சார்ந்த பிரச்சனையையே காலா பட்டவர்த்தனப் படுத்தியுள்ளது... 

KggOrlBqXR5pyu50_imgHandler.jpg?w=750

Dharavi Trip (Pic: lavacanza)

தாராவிக்குடியினர்

தமிழகத்திலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் குடியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் இஸ்லாமியர்கள், ஆதி திராவிடர்கள், தேவர் மற்றும் நாடார் சமூகத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர். 1920 க்கு பிறகு இவர்களது வரவு எண்ணிக்கை அளவில் அதிகரித்தது. மும்பையின் முதல் தமிழ் பள்ளியும், இவர்கள் வருகைக்கு பின் 1924 இல் நிறுவப்பட்டது. அடுத்த 40 ஆண்டுகளில் தாராவியில் இருந்த ஒரே தமிழ் பள்ளியாகவும் இதுவே திகழ்ந்தது.  தாராவியில் பெரும்பகுதி தமிழ் மக்களேஆட்கொள்கிறார்கள். மும்பை தென்னிந்திய ஆதி-திராவிட மகாஜன சபையின் சார்பாக தமக்கான பிள்ளையார் கோவிலை நிறுவியிருக்கிறார்கள். இந்த அமைப்பின் சார்பாக ஒரு பள்ளிக்கூடமும் சமீபத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. மேலும் தக்ஷிணமாற நாடார் சங்கத்தின் சார்பாக தொடங்கப்பட்ட “காமராசர் உயர்நிலைப் பள்ளி” ஏழை தாராவி மாணவர்களின் கல்வியின் ஏற்றத்தில் பெரும்பங்கு வகித்தது. 

WX7RzpTn7kKTs6a1_govandi-8.jpg?w=750

Dharavi Dwellers (Pic: bhindibazaar)

ஏராளமான தமிழர்கள் செல்வாக்கு பெற்று இருக்கின்றனர். மஹாராஸ்டிர சட்டமன்றத்திலும் சரி, மும்பை மாநகராட்சி மன்றத்திலும் சரி தமிழர்களின் குரல் ஒலித்திருக்கிறது. ” நிறைய கழிவறைகள் கட்டணும். போக்குவரத்து நெரிசலைப் போக்க பாலங்கள் அமைக்கணும். பிள்ளைகள் விளையாட மைதானங்கள் உருவாக்கணும். சுகாதாரப் பணிகள்ல கவனம் செலுத்தணும். குடிசை மாற்றுத் திட்டம் செயல் இழந்து கிடக்கு. அதுக்கு உயிர்கொடுத்து மக்களுக்கு நிறைய வீடுகள் கட்டித் தரணும்...’’ - சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றவுடன்  தமிழ்ச்செல்வன் சொன்ன வார்த்தைகள் இவை...   1984ல் மாதுங்கா தொகுதியில் வெற்றி பெற்ற சுப்பிரமணியனுக்குப் பிறகு மகாராஷ்டிர சட்டமன்றத்தில் கால் வைக்கும் இரண்டாவது தமிழர் இவர். சிவசேனா, பாஜக, காங்கிரஸ் போன்ற அனைத்து கட்சிகளிலும் தமிழர்கள் இந்த பகுதிகளில் செல்வாக்கு பெற்று விளங்குகின்றனர். 

Web Title: The History of Dharavi

Featured Image Credit: 99acresர்

https://roar.media/tamil/main/life/history-of-dharavi/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.