Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரம்மோபதேசம்

Featured Replies

பிரம்மோபதேசம்

 

 
kadhir3

சுப்பிரமணியனுக்கு உபநயனம்! 

அதாவது பூணூல் கல்யாணம் என்கிற பிரம்மோபதேசம். முகூர்த்த நாள் எல்லாம் குறித்தாகிவிட்டது. ஒற்றைப் படை வயதில்தான் பூணூல் போட வேண்டும் என்பது சம்பிரதாயம்! ஏழாவது வயதில் பூணூல் போடுவது சிலாக்கியம். காமம் மனதில் நுழைவதற்கு முன் பூணூல் போட்டு விட வேண்டும். சுப்பிரமணியனுக்கு இப்போது பதின்மூன்று வயது பிறந்திருக்கிறது. கல்யாண முஹூர்த்தம் எளிதில் கிடைத்துவிடும் பூணூலுக்கு முஹூர்த்தம் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. "எல்லாருக்கும் சொன்னோம். ஆனால்  அண்ணாவுக்கு சொல்ல வேண்டாமா?' என்றாள் அம்மா. அம்மாவின் ஒரே அண்ணா  ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் மிகவும் ஆச்சாரமானவர். அடுத்தவர்கள் வீட்டில் ஜலம் கூட குடிக்க மாட்டார். அதோடு, குடும்பத்திற்கு அவர்தான் பெரியவர். முறைப்படி முதலில் அவரோடு கலந்து ஆலோசித்த பின்புதான் முடிவு செய்திருக்க வேண்டும்.

 

 

ஆனால், அவரோடு கலந்தாலோசிக்க வேண்டாம் என்றுதான் முதலில் கணேசன் நினைத்திருந்தான். சரி, எல்லாவற்றையும்  முடிவு செய்த பின்பு அவரிடம் சம்பிரதாயத்திற்கு சொல்லிக் கொள்ளலாம்; அவரிடம் முன்பே இது பற்றி சொன்னால் எதாவது பிரச்னையைக் கிளம்புவார் என்றுதான் பேசாமல் இருந்தான். இருந்தாலும் அம்மா, "எனக்கு இருப்பது ஒரே ஒரு அண்ணா' என்றாள். சொன்னாலும் பிரச்னை சொல்லாமல் விட்டாலும் தப்பு! நடப்பது நடக்கட்டும் என்று எல்லாவற்றையும் முடிவு செய்த விஷயத்தை மறைத்து, அவரிடம் இதைப் பற்றி ஆலோசனை கேட்பது போலப் பேச்சை ஆரம்பித்தான்.

கணேசன் நினைத்தது போலவே நடந்தது. சுப்பிரமணியனுக்கு பூணூல் என்கிற பேச்சை ஆரம்பித்தவுடனேயே ருத்ரமூர்த்தி ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். அவர் பழைய சம்பிரதாயம், சாஸ்திரங்களில்  ஊறிப்போனவர்.

""என்ன கணேசா! என்ன உளர்றே! ஒனக்கு பைத்தியம் ஒண்ணும் பிடிக்கலியே! என்ன பேசறே? சுப்பிரமணியனுக்கு  பூணலா? அதுக்கு இப்போ என்ன அவசியம்? அதுவும் இல்லாம ப்ரம்மோபதேசம்னா என்ன அர்த்தம்னு ஒனக்குத் தெரியுமா? அவனுக்கு எப்படி பூணல் போட்டு வைக்க முடியும்? மொதல்லே அவன் ப்ராம்மணனாங்கறதைச் சொல்லு!''

""மாமா! கொஞ்சம் மொள்ள பேசுங்கோ! நாம பேசறது சுப்பிரமணி காதுல விழுந்துடப் போறது. அவன் அடுத்த ரூம்லேதான் படிச்சிண்டு இருக்கான்! இது வரைக்கும் அவன் யார்னு அவனுக்கு எதுவும் தெரியாது!  இனி மேலேயும் தெரியக் கூடாது!'' என்று கண்டிப்பான குரலில் பேசினான் கணேசன். 

""எப்பிடித் தெரியாமல் இருக்க முடியும்?  என்னிக்காவது ஒருநாளைக்கு தெரிஞ்சுதானே ஆகணும்! இப்போ உண்மையை மறைச்சு பூணூல் போடணுங்கறியா? என்கிட்ட இதைப் பத்தி பேசாதே! பெரியவா நீங்க எல்லாம் முடிவு பண்ணிட்டா அப்பறம் என்கிட்ட கேக்க என்னயிருக்கு? மொதல்லே ஒங்கம்மா எப்பிடி இதுக்கு சம்மதிச்சா?''

அம்மாவிற்கு ரெண்டு பக்கமும் பேச முடியல்லே! ஒருபக்கம் அண்ணா  என்கிற உறவு, இன்னொரு பக்கம் பிள்ளை, பேரன் என்கிற பாசம்! இந்த விஷயத்தில் ருத்ரமூர்த்தி மாமாவின் தலையீடு கணேசனின் மனைவி விமலாவிற்கு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. என்ன செய்வது? மாமியாரின் அண்ணா ஆயிற்றே! இப்போது இதில் தலையிட வேண்டாம்; என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று மெளனம் காத்தாள்.

 

 

இப்போது நடந்ததுபோல இருக்கிறது! கண்மூடித் திறப்பதற்குள் பன்னிரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. சுப்பிரமணிக்கு இப்போது பதின்மூன்று வயது. 

ஏழு வயதிலேயே பூணூல் போட்டிருக்க வேண்டும். இதே காரணத்திற்காகவே தள்ளிக் கொண்டே போய்விட்டது. அம்மா சுப்பிரமணி மீது பாசத்தைக் கொட்டி வளர்த்தாலும் அண்ணாவுக்காக பயந்தாள். இனி எத்தனை நாட்களுக்குத்தான் பயந்து கொண்டே இருப்பது? இருந்தாலும் ஆச்சார சீலரான அண்ணாவை  எதிர்க்கவும் துணிவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கணேசனிடம் சொன்னாள்-
""கணேசா! எனக்கும் வயசாகிண்டே போறது! சுப்புணிக்கு (ஆத்துக்காரர் பெயர் சுப்ரமணிய ஐயர். எனவே பேரனின் முழுப் பெயரைச் சொல்லிக் கூப்பிடாமல் சுப்புணி என்று தான் சொல்லுவாள்) இந்த வருஷமாவது பூணூல் போட்டா நல்லது! கண்ணை மூடறதுக்குள்ளே பாத்துட்டு சந்தோஷமா கண்ணை மூடுவேன்! ஒத்தைப் படை வயசுலேதான் போடணும்'' என்றாள் .
""அதுக்குள்ளே என்ன அவசரம்? சுப்புணிக்கி கல்யாணம்  பண்ணி ஒரு கொள்ளுப் பேரனையோ பேத்தியையோ பாக்க வேண்டாமா?'' என்று சொன்னாலும், இப்போதே அம்மாவுக்கு எண்பது   வயதாகிறதே என்கிற பயம் உள்ளூர இருந்து கொண்டே  இருந்தது. அதன் விளைவுதான் இந்தத் தீர்மானம் விவாதம் எல்லாம்.

 

 

பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால்...

ராமேஸ்வரம் கடற்கரையில் கண்டெடுத்த புதையல்தான் சுப்புணி என்கிற சுப்பிரமணி. சுப்பு ஐயர் தவமாகத் தவமிருந்து, காசி, ராமேஸ்வரம் என்று திருத்தலங்களையெல்லாம் சுற்றி பெற்ற பிள்ளைதான் கணேசன். சுப்பு ஐயர் ஒரு வித்யாசமான பிராமணர். பணம் காசால் உதவ முடியாவிட்டாலும், உடல் உழைப்பால் உதவுவதில் முன் நிற்பார். யாருக்காவது ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் உதவ முன்னால் நிற்பார். பிறர் தொடத் தயங்கும் எத்தனையோ அனாதைப் பிணங்களை சுமந்து சவ சம்ஸ்காரம் செய்தவர். எனவே அவரிடம் ஜாதி மதம் என்கிற வேறுபாடு கிடையாது. ராமருக்கு ஒரு வானர சேனைபோல இவருக்கு உதவ ஒரு இளைஞர் பட்டாளமே உண்டு... அவர்களின் உதவியுடன் சுடுகாட்டிற்கு  சாலை அமைத்தார் என்கிற பெருமையும் அவருக்கு உண்டு. ஒவ்வொரு வருடமும் அப்பாவிற்கு திவசம் செய்யும்போதும் நாகநாத  வாத்யார் கணேசனிடம் சொல்லுவார் -
""கணேசா! உங்கப்பா அந்தக் காலத்துல எத்தனை  அனாதை பிணங்களை சொமந்திருப்பர் தெரியுமா? அவர் பண்ணின ஒவ்வொரு சவ ஸம்ஸ்காரமும் ஒரு அஸ்வமேத யாகத்துக்கு சமானம்! அவரோட பிள்ளையான ஒனக்கு வம்சம் விளங்க ஒரு குழந்தை இல்லாம போய்டுத்தேங்கறதை நெனைச்சா வருத்தமா இருக்கு'' என்பார்.
""கணேசா! அவர் மாதிரி நீயும் ஒரு தடவை ஏன் ராமேஸ்வரம் போய்ட்டு வரக் கூடாது? ராமநாத ஸ்வாமி கண் திறப்பார்!'' என்றார்.
கணேசனுக்கும், விமலாவுக்கும் கல்யாணமாகி பத்து வருஷத்துக்கு மேலே ஆகிவிட்டது. எல்லா மருத்துவ சோதனைகளும் ஆகிவிட்டன. பலன் பூஜ்யம்தான். மருத்துவமும், கடவுள் நம்பிக்கையும் பொய்த்துப் போன நிலைமையில் கணேசன் யோசித்தான்.
குழந்தை பிறக்கிறதோ இல்லையோ, அது வேறு விஷயம். அம்மாவுக்கும் காசி ராமேஸ்வரம் போக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. ஒரு தடவை போய்விட்டு வந்தால் என்ன என்கிற எண்ணத்திற்கு வடிவம் கொடுத்தான். மூவரும் ராமேஸ்வரம் போனபோது, சுமக்கவில்லை, பிரசவ வேதனைப் படவில்லை... பருத்தியே புடவையாகக் காய்த்தது!

 


கணேசனும் விமலாவும் ராமேஸ்வரத்தில் இருள் பிரியாத நேரத்தில் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தபோது, அவனது அம்மா மங்களம் கடற்கரையில் சிறிது நேரம் காலாற நடந்துவிட்டு வருகிறேன் என்று போனவளுக்கு, ஜனகருக்கு நிலத்தை உழுதபோது சீதை கிடைத்ததுபோல, கடற்கரையில் யாரோ ஒரு கன்னித்தாய் துணியில் சுற்றி, விட்டு விட்டுப் போன  ஒரு குழந்தை கிடைத்தது.
இரண்டு நாட்களில் ஊர் திரும்ப வேண்டிய கணேசன், ஒருவாரம் ராமேஸ்வரத்திலேயே தங்க வேண்டியதாகிவிட்டது.
குழந்தையைக் கண்டெடுத்த இடத்தில் அதே துணியுடன், குழந்தையுடன் காத்திருந்ததுதான் மிச்சம் எந்தக் குந்திதேவியும், குழந்தையைத் தேடி வரவில்லை. நஞ்சு கூட வெட்டப்படாத அந்த சின்னஞ்சிறு சிசுவை மங்களம்தான் பிரித்து எடுத்து சுத்தப் படுத்தினாள். தொலைந்து போயிருந்தால்தானே தேடிவர? வேண்டுமென்றே தொலைத்துவிட்டுப் போனவள் எப்படித் திரும்பி வருவாள்? நல்ல  வேளையாகக் குழந்தையைக் கடலில் வீசி எறியாமலோ, கழுத்தை நெரித்துக் கொல்லாமலோ அப்படியே விட்டுவிட்டுப் போனாளே! அதுவரை  அவள் புண்ணியவதிதான்!
""போலீஸில் புகார் கொடுக்கலாமா?'' என்று கணேசன் சொன்னபோது, விமலாவும் மங்களமும் பிடிவாதமாக தடுத்து விட்டார்கள்.
""குழந்தை வரம் கேட்டு ராமேஸ்வரம் வந்திருக்கிறோம்! குழந்தை பிறக்க வேறு வழியே இல்லை என்பதால் ராமநாத ஸ்வாமியே பார்த்து இந்தக் குழந்தையை நமக்குக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் என்ன செய்வார்களாம்? இரண்டு நாட்கள் காத்திருந்து பார்த்துவிட்டு, ஏதாவது அனாதை ஆஸ்ரமத்தில் சேர்த்துவிட்டு அக்கடாவென்று இருப்பார்கள். அது தவிர, குழந்தை வேண்டும்  என்று தவமிருக்கும் நம் கையில் ஏன் அது  கிடைக்க வேண்டும்? இது பகவானாகப் பார்த்து நமக்குக் கொடுத்த பிரசாதம் என்று எடுத்துக் கொண்டு போகலாம்'' என்று விமலா கெஞ்சினாள்.
ஒரு வாரம் அந்தக் குழந்தையுடன் இருந்து கவனித்துக் கொண்டிருந்ததால் அதை விட்டுப் பிரிய அவளுக்கு மனம் இருக்கவில்லை. அவளுடைய வேண்டுதலுக்கு கணேசன் செவி சாய்ப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

 


எதற்கும் ஒருவாரம் அங்கேயே  காத்திருந்து பார்க்கலாம் என்று கணேசன் சொன்னபோது, அரைகுறை மனதுடன் அவள் சம்மதித்தாலும்,  குழந்தையைத் தேடிக்கொண்டு யாரும் வந்து விடக்கூடாது என்று தினமும் ராமநாத ஸ்வாமியிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்தாள். அவள் பிரார்த்தனை வீண் போகவில்லை. மூன்று பேராகச் சென்றவர்கள் நான்கு பேராகத் திரும்பினார்கள்.
ஊருக்குத் திரும்பியபோது, கணேசனுக்கு கன்யாகுமரிக்கு மாற்றல் ஆர்டர்  காத்திருந்தது. அதுவும் நல்லதுக்குதான். இந்த ரகசியம் யாருக்கும் தெரியாமல் போகட்டும் என்று உடனே திருச்சியிலிருந்து கன்யாகுமரிக்கு குடி பெயர்ந்தார்கள்.
அம்மாவின் விருப்பப்படியே குழந்தைக்கு சுப்பிரமணியன் என்று அப்பாவின் பெயரையே நாமகரணம் செய்வித்தார்கள். சுமக்கவில்லை, பெறவில்லை என்றாலும் அது அவர்கள் குழந்தைதான். பாசத்தைக் கொட்டி வளர்த்தார்கள். இந்த ரகசியம் அவனுக்குத் தெரியக் கூடாது என்பதிலேயே மிகவும் கவனமாக இருந்தார்கள்.
இதெல்லாம் நடந்துபோன கதை .இப்போது சுப்பிரமணிக்கு பூணூல் போட வேண்டும் என்று நிச்சயித்தபோதுதான் இந்தப் பிரச்னை எழுந்திருக்கிறது.
அம்மாவின் சொந்த அண்ணா என்பதால் அவருக்கு மட்டும் குழந்தை கிடைத்த ரகசியம் தெரிந்தால் பரவாயில்லை என்று நினைத்ததுதான் தவறாகிவிட்டது! இந்த நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்கிற கவலையில் ஆழ்ந்தான் கணேசன். 
இவர்கள் இப்போது எந்தக் காலத்தில் இருக்கிறார்கள்? உலகமே மாறிவிட்டபோது இவர்கள் மட்டும் ஏன் மாற மறுக்கிறார்கள்?  இப்போதெல்லாம் மலட்டுத் தன்மை என்பது ஆண், பெண் இருவரிலும் மிகவும் சாதாரணமாகிவிட்டது. 

 


பலவிதமான செயற்கை கருத்தரிப்பை விட, தத்து  எடுப்பது மிகவும் சிறந்தது! தெரிந்த உறவினர்களின் குழந்தைகளை தத்து எடுப்பதை விட அனாதை ஆசிரமத்திலிருந்து தத்து எடுப்பதால்  உரிமை கொண்டாடி யாரும் வர மாட்டார்கள் என்பது ஒருபக்கம் இருந்தாலும், ஆதரவற்ற ஒரு குழந்தைக்கு வாழ்வு கொடுப்பது எவ்வளவு உயர்ந்தது? ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில்தானே பிராமணர் அல்லாதவர்க்கு மகான் ஸ்ரீராமானுஜர் பூணூலை அணியச் செய்து அவர்களை எல்லாம் திருக்குலத்தார் என்று அழைத்தார்!  வர்ணாஸ்ரம தர்மமும் தீண்டாமையும் தலைவிரித்தாடியபோது இப்படி ஒரு புரட்சி செய்தார்! ஒருவேளை மலட்டுத்தன்மை அதிகமாகிவிட்டால்- ஜாதி பேதம் மிகவும் எளிதாக ஒழிந்துவிடும் என்று நினைத்தபோது,  அவன் சிந்தனை குரூரமாக இருந்தாலும் கணேசனுக்கு சிரிப்பு வந்தது. அனாதை ஆசிரமத்திலிருந்து தத்து எடுக்கும் குழந்தையின் பூர்விகம் யாருக்காவது தெரியுமா?
களிமண்ணோ, கல்லோ, எதுவாக இருந்தாலும் ஒரு வடிவம் கிடைக்கும்வரை அது கல்தான், மண்தான். கல்லாலோ, மண்ணாலோ உருவாகும் சிலைகள் வணங்கத்தக்க கடவுளின் திருமேனிகள் ஆவதில்லையா? வானத்தில் இருக்கும் வரை அது மேகம்; பூமியை அடையும்போது அது மழைநீர். அது விழும் இடத்தைப் பொருத்து  அதன் தன்மை வேறுபடுகிறது! கடலில் விழும் நீர் உப்பாகவும் நல்ல நிலத்தில் விழுந்த நீர் சுவையான குடிநீராவதில்லையா? குழந்தைகளைப் பொருத்தவரையில், அவர்கள் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள், தெய்வங்களுக்கு சமமானவர்கள்! எந்த மதமாகவும், ஜாதியாகவும் ஆவது சேரும் இடத்தைப் பொருத்தது. அவர்கள் மனதில் கள்ளம் இல்லை கபடம் இல்லை இவற்றையெல்லாம் கற்றுக் கொடுப்பது மனிதர்கள்தான்! 
தீர யோசித்து கணேசன் ஒரு முடிவுக்கு வந்தான். மாமா ருத்ரமூர்த்தி சாஸ்திரிகளிடம் பணிவுடனும் உறுதியுடனும் கூறினான்-

 


""தொப்புள் கொடி கூட அறுக்காத குழந்தையாக எடுத்துவந்த சிசுவுக்கு நானும் விமலாவும்தான் தாய் தந்தை எல்லாமே! இப்போது அவன் பெயர் சுப்பிரமணி. இவன் எங்கள் கையில் மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் இப்போது ஒரு அப்துல்லாவாகவோ, ஜோசப் ஆகவோ அல்லது ஏதோ ஒன்றாகவோ ஆகியிருக்கலாம். அல்லது நாய்கள் கடித்துக் குதறி இறந்து போயிருக்கலாம். 
எங்கள் கையில் கிடைத்த பின்னர் அவன் எங்கள் குழந்தைதான்! அவன் பிறப்பு, ஜாதி, மத்ததைப் பற்றி எங்களுக்கு என்ன  கவலை? என்னிக்காவது அவனைத் தேடிக்கொண்டு, அவனுடைய பெற்றோர்கள் என்று சொந்தம் கொண்டாடிக்  கொண்டு யாராவது வரும்போது, அதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம். அப்போது அவன் பிறப்பின் ரகசியம் தெரிந்து, அவன் யாரோடு போக நினைக்கிறானோ அப்படியே செய்து கொள்ளட்டும். இத்தனை வருஷம் அவனை வளர்த்து ஆளாக்கின எங்களுக்கு இல்லாத உரிமை, இப்போ வேறு யாருக்கு இருக்கு? எங்கள்  இருவருக்கும் மிகவும் அரிதான ஏ-பி நெகட்டிவ் ரத்தம். அவனுக்கும் ஏ.பி. நெகட்டிவ் ரத்தம்தான். இது ஒரு ஆச்சர்யமான விஷயம் இல்லை? பலருக்கும், பெற்றோர்களுக்கும், வேறுவேறு பிரிவு ரத்தமாக இருப்பதைப் பற்றிப் பார்த்ததில்லையா?அதனால் அவர்களுடைய பிள்ளைகள் இல்லை என்றாகிவிடுமா? அதுவும் இல்லாமல், இப்போது அவன் பிராமணன் இல்லை என்று சொல்வதால் பெரிதாக எதை சாதித்து விடப்போகிறீர்கள்? அவன் மனதில் தேவை இல்லாமல் காயம் ஏற்படுவதுதான் மிச்சம்.    

 


பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்பதுதான் நிஜம். பூமியில் பிறந்த அனைவரும் ஒரே இனம்! மனிதர்கள் என்கிற ஒரே இனம்தான்! அவர்களின் வளர்ப்பைப் பொருத்துதான் அவர்களுடைய குணங்கள், பழக்க வழக்கங்கள் வேறுபாடுகள் தோன்றுகின்றன! ஓர் அனாதை ப்ராம்மணக் குழந்தை, வேறு ஜாதியில், வேறு ஒரு குடும்பத்தில் வளர்ந்தால் அவன் முஸ்லிமாகவோ கிறிஸ்தவனாகவோ ஆகிறான். அவன் இந்திய மண்ணில் பிறந்தவன். முதலில் அவன் ஒரு  இந்தியன், பின்னர்தான் ஹிந்து. பூணூல் போட்டவர்கள் மட்டும் தவறாமல் நித்யகர்மாக்களை செய்கிறார்களா?
மாமா, ரொம்ப பேசிவிட்டேன்! மன்னித்துக் கொள்ளுங்கள். அவன் பிராமணன்தான்! தயவு செய்து இனிமேலே இந்த ஆத்தில் அவன் பிறப்பைப் பற்றிப் பேசாதீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். 

 


ஒரு நல்ல குடும்பத்தில் குழப்பம் விளைவிக்காதீர்கள்! அவனுக்குப் பூணூல் போட்டு வைத்ததால், அதனால் எனக்குப் பாவம் வந்தால் வரட்டும். திருக்கோஷ்டியூர் நம்பி ராமானுஜருக்கு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து வைத்ததை, அவர் ஜாதி பார்க்காமல் ஊர் மக்களுக்கு உபதேசம் செய்யவில்லையா? பின்னர் திருக்கோஷ்டியூர் நம்பியே தனது தவறை உணர்ந்து ராமானுஜரின் பெருந்தன்மையைப் பாராட்ட வில்லையா?'' என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தான் கணேசன்.
ருத்ர தாண்டவம் ஆடப் போகிறார் ருத்ரமூர்த்தி சாஸ்திரிகள் என்று பயந்தபடியே அண்ணாவின் முகத்தைப் பார்த்தாள் மங்களம். 
சிறிது நேரம் மாமா எதுவுமே பேசவில்லை. சிறிது நேரம் கழித்து அவரேதான் மெளனத்தைக் கலைத்தார்.
""கணேசா! சுப்புணியைக் கொஞ்சம் கூப்பிடு!'' என்றார்.


சுப்புணி என்கிற சுப்பிரமணியன் வந்தான்.
""உள்ளே போயி கொஞ்சம் குடிக்க ஜில்லுனு பானைத் தீர்த்தம் கொண்டு வா!'' என்று அவனை அனுப்பிவிட்டு, ""மங்களம்! உன் பேரனுக்கு எப்போ பூணூல் முஹூர்த்தம் வச்சிருக்கே! எல்லா வேலையும் கணேசன் ஒருத்தனே  செய்ய முடியுமா? ஒரு வாரம் முன்னாலேயே நானும் ஒன் நாத்தனாரும் வந்துடறோம்!'' என்றார் ருத்ரமூர்த்தி, சாந்த மூர்த்தியாக!

http://www.dinamani.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.