Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீர்ச்செல்வத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்?

Featured Replies

நீர்ச்செல்வத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்?

 

ஆராய்ந்தாலே   நல்ல தீர்வு   கிட்டும்

உலகமே நீருக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நதியின் வருகையைக் கண்டு, ஒரு மக்கள் கூட்டம் அச்சப்படுவது இலங்கையில் தானாக இருக்க வேண்டும். இந்த அச்சம் நாற்பது ஆண்டுகளாக நீடிக்கிறது. இது மேலும் நீடிக்கலாம்.

“மகாவலிகங்கை வடக்கு நோக்கிச் செல்கிறது” என்று அரசாங்கம் அறிவிக்கும் போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பதைப்போடு தங்களுடைய நெஞ்சைப் பொத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் கடந்த 28ஆம் திகதி முல்லைத்தீவில் நாலாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி வடக்குக்கான மகாவலித்திட்டத்தை மறுதலித்துக் குரலெழுப்பியிருக்கிறார்கள். யுத்தத்திற்குப் பிறகு முல்லைத்தீவில் போராட்டமொன்றுக்காகக் கூடிய மிகப் பெரிய மக்கள் திரள் இது.

எப்படி இந்தளவு மக்கள் ஒன்று கூடினார்கள் என்பது பலருக்கும் ஆச்சரியம். அந்தளவுக்கு இந்தப் போராட்டம் – இந்த மகாவலி விவகாரம் - பெரியதா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.

வடக்கு நோக்கி வரும் மகாவலி விவகாரம் என்பது இனப்பிரச்சினையின் இன்னொரு வடிவமேயாகும். நேரடியாகச் சொல்வதென்றால், இன ஒடுக்குமுறை உத்திகளில் ஒன்றாக வடக்கு நோக்கிய மகாவலித்திட்டத்தை அரசாங்கங்கள் அல்லது பெரும்பான்மைத் தரப்புக் கையாள்கிறது எனலாம்.

வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் பேசும் சமூகங்களின் பாரம்பரிய வாழ்விடத்தைத் துண்டாடுவதற்கு முயற்சுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டே வந்துள்ளன. சட்டரீதியாக வடக்குக் கிழக்கு இணைப்பைப் பிரித்தது ஜே.வி.பி. புவியியல் ரீதியாகப் பிரிக்கிறது அரசாங்கம்.

ஆகவே, மக்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கை கள்ளத்தனமாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வடக்கிலே நீர்ப்பிரச்சினை உண்டு. மகாவலி ஆறு வடக்கிற்கு வருமானால் அதைத் தீர்க்க முடியும் என்பது பாதி உண்மையே. ஆனால், அது தற்போதுள்ள அரசியல்விதிமுறைகளின்படியோ, இலங்கையின் நதிநீர்க்கொள்கைகளின்படியோ வருமென்றால் அதனால் தமிழ்பேசும் சமூகங்களுக்கு கிடைக்கும் நன்மைகளை விடக் கூடுதலான தீமைகளே நிகழும் என்பது பலருடைய கருத்து. நிச்சயமாகக் கூடுதலான நெருக்கடிகளும் பேராபத்துகளும் நிகழ்வதற்கான வாய்ப்புகளே உண்டு.

இதனால்தான் வடக்கிற்கான மகாவலித்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் இதைக் கலவரத்தோடு பார்க்கிறார்கள். இதற்கு அண்மைய உதாரணங்களாக ஆறு பிரதான விடயங்களைக் குறிப்பிடலாம்.

1. 2007 இல் மகாவலி L வலயத்தின் கீழ் கரைதுறைப்பற்று (முல்லைத்தீவு நகரை உள்ளடக்கிய பெரும்பகுதி உள்ளடங்கலாக நாயாறு, கொக்கிளாய் கடல்வரை) பிரதேசம் உள்வாங்கப்பட்டமை. 1987 இல் மகாவலி L வயலம் உருவாக்கப்பட்டு முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு “வெலிஓயா” என்ற பேரில் தனியான பிரதேச செயலகம் ஆக்கப்பட்டிருந்தாலும் அப்பொழுது கரைதுறைப்பற்று அதற்குள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. மணலாற்றுடனேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அப்பொழுது கடலோரம் L வலயத்துக்குள் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இப்போது (2007) கடலோரத்தையும் L வலயத்துக்குள் உள்ளடக்கப்பட்டதால் வடக்குக் கிழக்கு புவியியல் ரீதியாகவும் குடிப்பரம்பல் ரீதியாகவும் துண்டாடப்படும் நிலைக்குள்ளாகியுள்ளது. இதிலும் இந்தப் பிரதேசம் 2007 இல் L வலயமாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டாலும் 2018 வரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது (2018 ஆகஸ்டில்) சிங்களவர் ஒருவருடைய காணிப் பிரச்சினையினால் நடைமுறைக்கு வந்ததை அடுத்து ஏற்பட்டுள்ள சட்டம் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள்.

2. கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொக்குத்தொடுவாய், நாயாறு தொடக்கம் கருநாட்டுக்கேணி, தென்னமரவாடி வரையான தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடத்திலுள்ள 2000 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது. கூடவே அதற்கான அனுமதிப்பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளமை.

3. இங்கிருந்த தமிழர்கள் இழந்த நிலத்துக்கு எந்தத்தீர்வும் வழங்கப்படாமை.

4. தமிழ் மக்கள் பாரம்பரியமாகவே வாழ்ந்து வந்த கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய இடங்களில் சிங்களவர் எட்டுப்பேருக்கு கடந்த 06.08.2018 இல் மகாவலி L வலயத்தின் கீழ் காணிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பது.

5. செம்மலை, கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி போன்ற இடங்களில் தமிழர்களின் மரபுரிமை வழிபாட்டிடங்கள், அடையாளங்களின் மீது பெரும்பான்மையினத்தவர்களின் மேலாதிக்க நிறுவுகை. குறிப்பாக செம்மலை நீராவிப் பிள்ளையார் ஆலயம் பௌத்த விகாரையாக்கப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை. இதுபோலப் பல.

6. நாயாறு, நந்திக் கடல் களப்புகள் தமிழ்மொழிச் சமூகத்தினரின் பாரம்பரியமான மீன்பிடிக்குரியவை என்ற நிலையை மறுக்கும் வகையில் இவற்றை இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளமை. இதைக்குறித்து சம்பந்தப்பட்ட மக்களுடனோ அவர்களுடைய மக்கள் பிரதிநிதிகளுடனோ அரசாங்கம் எத்தகைய பேச்சுகளையும் நடத்தாமலே இந்த அத்துமீறலை மேற்கொண்டிருப்பது.

மேற்படி ஆறு விடயங்களும் வேறு பல காரணங்களும் இந்தப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ்ச் சமூகத்தினரை வடக்கு நோக்கிய மகாவலி விரிவாக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்குத் தூண்டியுள்ளன.

இந்த அபாய நிலையைக் கிராமம் கிராமமாக விளக்கி, மக்களை ஒருங்கிணைத்தது, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அளம்பில் – செம்மலைப் பகுதியைத் தளமாகக் கொண்ட “மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை” என்ற அமைப்பாகும். இது, மகாவலியின் விரிவாக்கத் திட்டத்தின் அடுத்த கட்டமாக K, J ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் அதன் மூலமாக முல்லைத்தீவு தொடக்கம் மாங்குளம், மல்லாவி என விரிந்து மன்னார் வரையிலுமான பிரதேசம் மகாவலி அபிவிருத்தி சபையின் பிடிக்குள் போய் விடும். அப்படிப் போனால் மகாவலித்திட்ட விதியின்படி அங்கே உள்ள காணிகளை இலங்கையின் இனவிகிதாசார அடிப்படையிலேயே வழங்குவதாக அமையும். அப்படி அமைந்தால் இந்தப் பிரதேசங்கள் இலகுவாகச் சிங்களமயமாகி விடும். அதற்குப் பிறகு வடக்கில் சிங்கள விகிதாசாரம் பெருகிவிடும் என்ற விவரத்தை இந்தப் பேரவை கிராமங்களுக்கு விளக்கியது.

இதில் செயற்படும் களச்செயற்பாட்டாளர்களின் உழைப்பும் வெற்றியுமே இந்தப் போராட்டமும் இதில் அதிகளவானோர் கூடியிருப்பதுவும். இதில் முதன்மை ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு வருகிறார் நவநீதன் என்பவர்.

இதுவரையிலும் மகாவலி அபிவிருத்தித்திட்டம் என்பது முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் தென்பகுதிக் காடுகளிலேயே நடக்கிறது என்று கருதிக் கொண்டிருந்த மக்களுக்கு, அது முல்லைத்தீவு நகரையும் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவையும் வளைத்துப் பிடித்துள்ளது என்று சொன்னபோதே தங்களைச் சுற்றியிருக்கும் ஆபத்தைப்பற்றித் தெரிந்தது. இதனால்தான் அவர்கள் கோபத்தோடு தெருவில் இறங்கினார்கள் போராடுவதற்காக. இதுவே அந்தப் பெரிய கூட்டம்.

“மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை” வடக்கு நோக்கிய மகாவலி விஸ்தரிப்புத் தொடர்பாக பல்வேறு தகவல்களைத் தொடர்ச்சியாகத் திரட்டிவருகிறது. அதாவது உள்ளோடிப் பெறும் தகவல் திரட்டுகளைச் செய்கிறது. இதற்காக அது இந்தத் திட்டம் தொடர்பான தொடர் கற்கையில் ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு கற்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உள்நோக்கமுடைய இரகசிய நிகழ்ச்சி நிரலாக நடக்கும் விடயங்களின் நுட்பங்களைக் கண்டறிந்திருக்கிறது. இவ்வாறு கண்டறியப்பட்ட விடயங்களுக்கான எழுத்துமூல ஆதாரத் தகவல்களோடும் சட்ட நுணுக்கங்களோடுமே அது கடந்த 28ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுத்தது.

இதில் ஒன்றாக கடந்த ஆண்டு கருநாட்டுக்கேணி கடற்கரையில் றுக்மல் துஷார லிவேரா என்பவருக்கு மகாவலி L வலயத்திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இவரோடு மேலும் ஏழுபேருக்கு இவ்வாறான காணிகள் அவசர அவசரமாக வழங்கப்பட்டுள்ளன என்பதையும் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை கண்டறிந்தது. இதற்கான சான்றாதாரமாக மாதிரி அனுமதிப்பத்திரத்தையும் அது கைவசம் வைத்திருக்கிறது.

இதற்குப் பின்னால் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான கதை ஒன்றுண்டு.

2017 இல் கருநாட்டுக்கேணியில் கடற்கரையை அண்மித்ததாக றுக்மல் துஷார லிவேரா ஒரு பெரிய கட்டிடத்தைக் கட்டினார். இதற்கான சட்டரீதியான அனுமதியை அவர் எங்கேயும் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்ட காணி அரசுக்குச் சொந்தமானது. இதனால் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலகம் றுக்மல் துஷார லிவேராவின் மீது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம் “அனுமதியின்றிச் சட்டவிரோதமாகக் கட்டிடத்தை நிர்மாணித்த றுக்மல் துஷார லிவேரா அந்த இடத்திலிருந்து வெளியேற வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.

ஆனால், இந்தத் தீர்ப்போடு லிவேரா திரும்பிப் போய்விடவில்லை. அவர் வேறு யாருடையதோ தூண்டுதலின் பின்னணியில் கொழும்பு உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் எனக் குறிப்பிட்டு மேன்முறையீட்டைச் செய்வதற்கு முயற்சித்தார். எனினும் அந்த முயற்சி நிறைவேறவில்லை. உச்சநீதிமன்று அதற்கான வாய்ப்பை அளிக்க மறுத்தது.

இதனையடுத்து வவுனியா மேல் நீதிமன்றில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் தீர்ப்பை மேன்முறையீடு செய்தார் லிவேரா. வழக்கை விசாரித்துத் தீர்ப்பளிப்பதற்கான நாள் 07.08.2018 என்று தெரிவித்திருந்தது வவுனியா மேல்நீதிமன்றம். அதற்கிடையில் லிவேரா மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் மூலமாக தான் கோரிய காணிக்கான அனுமதிப்பத்திரத்தை எடுத்து விட்டார். இந்த அனுமதிப்பத்திரம் கிடைத்தது 06.08.2018 இல். அதாவது வவுனியா மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முதல்நாள்.

 

 
 

மறுநாள் 07.08.2018 வவுனியா மேல்நீதிமன்றத்தில் லிவேரா தனது அனுமதிப்பத்திரத்தைச் சமர்ப்பித்தபோது தீர்ப்பளிப்பதில் வவுனியா மேல்நீதிமன்றத்துக்குச் சிக்கல் உருவானது. இதனால் இப்பொழுது வழக்கு சட்டமா அதிபரின் திணைக்களத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏனெனில் இதுவரையிலும் கரைதுறைப்பற்றுப் பிரதேசத்துக்கு இருந்த காணிமீதான அதிகாரம் லிவேரா காண்பித்த “மகாவலி L வலயத்தின் அனுமதிப்பத்திரத்தோடு மகாவலி அதிகார சபைக்குரியதாக மாறி விட்டதா என அறிய வேண்டிய நிலை மேல்நீதிமன்றத்துக்கு உருவானது. இதனை இனிமேல் சட்டமா அதிபர் திணைக்களம்தான் தீர்மானிக்க வேண்டும்.

இதேவேளை இவ்வாறான அனுமதிப்பத்திரம் எதுவும் யாருக்கும் வழங்கப்படவே இல்லை என்று கடந்த 27 ஆம் திகதியன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லியிருக்கிறார்.

மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமைப் பேரவையின் போராட்டத்தில் கலந்து கொண்டபோது இந்தத்திட்டத்தின் பின்னுள்ள அபாய நிலையைப்பற்றியும் யதார்த்தச் சூழலைப்பற்றியும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவர்களுக்கும் ஓரளவு புரிந்திருக்க வேண்டும். இதற்கு முன்பு 1988 இல் இதைப்பற்றி விரிவாக ஈரோஸ் இயக்கம் தனியான ஒரு பிரசுரத்தை வெளியிட்டிருந்தது.

இதற்குப் பிறகும் இவர்களில் யாரும் இந்தப் பிரச்சினையைப் பற்றி அரசாங்கத்திடமோ ஜனாதியிடமோ உடனடியாக எடுத்துச் சொல்லவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தோடு நெருக்கமாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்கள் இந்த விடயத்தின் பாரதூரத்தன்மையை எடுத்துக்கூறி லிவேரா தரப்பினருக்கு வழங்கப்பட்டிருக்கும் அனுமதிப்பத்திரத்தை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.

மக்கள் தங்களுக்குச் சாத்தியமான வரையில் முதற்கட்ட எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அரசியல் சார்பில்லாது விட்டாலும் ஒரு சமூகச் செயற்பாட்டியக்கம் என்ற அளவில் மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை தன்னாலான பணிகளைச் செய்திருக்கிறது. இனி மேல் செயற்பட வேண்டியது அரசியற்தரப்புகள். அதிலும் கூட்டமைப்பினருக்குக் கூடுதல் பொறுப்புண்டு. அவர்களே இன்று அதிகாரத்திலிருப்பவர்கள்.

வேண்டுமானால், இதற்காக மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமைப் பேரவையின் அறிக்கையையும் பிற பிரசுரங்களையும் அனைவரும் ஆழமாக வாசித்தறியலாம். இந்தப் போராட்டத்தின் தேவையை - இதன் தாற்பரியத்தை விளக்கும் வகையில் “மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை”யின் அறிக்கை குறிப்பிடுகிறது.

அதனுடைய

கோரிக்கைகளில் சில -

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் மற்றும் கருநாட்டுக்கேணி கடற்கரையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் சிங்கள மீனவர்களுக்கு மகாவலி அதிகார சபையால் வழங்கப்பட்டுள்ள காணி அனுமதிப்பத்திரங்கள் உடனடியாக மீளப் பெறப்பட வேண்டும்.

1984 வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு சொந்தமான, நீதிக்கு புறம்பாக பெரும்பான்மையின மக்களுக்கு பிரித்து வழங்கப்பட்ட 2000 வாழ்வாதார நிலங்கள் அதன் உண்மையான உரிமையாளர்களான தமிழ் மக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும்.

தமிழர்களின் மரபுரிமையை திட்டமிட்டு சீரழிக்கும் நோக்குடன் மாவட்ட அரசாங்க அதிகாரிகளையும் கிராமிய அமைப்புக்களையும் கலந்துரையாடாது வரலாற்று திரிபை ஏற்படுத்தும் நோக்கோடு தன்னிச்சையாக செயற்படும் நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.

வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக பிரிக்கும் நோக்கோடு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு எல்லைக் கிராமங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களை உடன் நிறுத்தத் தவறும் பட்சத்தில் அது இன நல்லிணக்கத்தை மிக மோசமாக பாதிக்கும்.

ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு இயற்கைப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நந்திக்கடல், நாயாற்றுக் களப்புக்கள் மீண்டும் சட்ட ரீதியாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட வேண்டும்.

தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களவர்களை அரச செலவில் குடியேற்றுவதன் மூலம் வட-கிழக்கு மாகாணத்தின் குடித்தொகையில் படிப்படியான மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில் – அவர்களது தந்தையும் – தாயும் மகிழ்ந்து குலாவி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்த மண்ணில்- சிறுபான்மையர்களாக மாற்றுவதே அரசுகளின் குறிக்கோளாக இருந்து வருகிறது.

இவைபோக, இந்தப் பிரச்சினையின் உள்விவரங்களை மேலும் அறிய வேண்டுமாயின், அன்றைய (1980களில்) விவசாய, துரித மகாவலி அபிவிருத்தி அமைச்சு செயற்பட்ட விதத்தைப் பற்றி துரித மகாவெலி சபை அதிகாரிகளில் ஒருவரான ஹேர்மன் குணரத்தின சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் எழுதியிருந்தார்

‘நிலத்தைப் பிடிக்கவே எல்லா யுத்தங்களும் மேற்கொள்ளப்படுகின்றன". யான் ஓயா மற்றும் மதுறு ஓயாப் பள்ளத்தாக்கில் (சிங்கள) குடியேற்றத்தை அமுல் படுத்துவதற்கு வேண்டிய திட்டம் 1983ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்துக்கு முன்னரே தீட்டப்பட்டுவிட்டது. உண்மையில் இந்தத் திட்டத்தின் சிற்பிகள் மகாவலியில் பணியாற்றிய மெத்தப் படித்த அறிவாளிகள் ஆவர். இவர்கள் இப்போது அனைத்துலக மட்டத்தில் பெரிய பதவிகளில் பணியாற்றுகிறார்கள். இந்தத் திட்டத்தில் எனது பாத்திரம் அதனை நடைமுறைப் படுத்துவதே.

”இந்தத் திட்டத்தை நாம் சிந்தித்து நிறைவேற்றியதின் காரணம் ஸ்ரீலங்காவின் பிரதேச கட்டுமானத்தை நீண்ட காலத்துக்கு உறுதிப்படுத்துவதே. மதுறு ஓயா பள்ளத்தாக்கை உள்ளடக்கிய மட்டக்களப்புக்கும் பொலநறுவைக்கும் நாங்கள் காணிக்கு அந்தரித்த 45,000 மக்களைக் கொண்டு சென்று குடியேற்றினோம். அடுத்ததாக இதேபோல் யான் ஓயாவில் குடியேற்ற நடவடிக்கை எடுத்தோம். மூன்றாவதாக ஈழத்துக்கு எதிரானவர்களை மல்வத்து ஓயாவின் கரைகளில் குடியேற்ற முடிவுசெய்தோம்.

‘மதுறு ஓயாவில் குடியேற்றுவதன் மூலம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தனியரசுக்கு எதிரான ஒருதொகை மக்களை உருவாக்கினோம். யான் ஓயாவில் பிரிவினைக்கு எதிரானவர்களைவர்களை குடியேற்றுவதன் மூலம் மக்கள் தொகை 50,000 ஆகக் கூடியிருக்கும். இதன் மூலம் போராளிகளிடம் இருந்து திருகோணமலையை முற்றாகக் காப்பாற்றி விடலாம்.’

இவ்வாறு எழுதிச் செல்கிறார் ஹேர்மன். இதையெல்லாம் படித்துக் கொண்டும் பார்த்துக் கொண்டும் வாழாதிருக்கப்போகிறதா தமிழ்ச் சமூகம்?

முல்லைத்தீவில் கூடிய எதிர்ப்புத் தெரிவித்த மக்களின் போராட்டங்களைப் போலப் பலவற்றை அரசாங்கம் எப்போதும் கண்டு கொண்டேயிருக்கிறது. மக்கள் போராட்டங்களுக்கு மதிப்பளிக்கும் மாண்பைக் கொண்டதல்ல இலங்கையின் அரசியற் களம். ஆகவே இந்த மக்கள் போராட்டத்தை அரசியல் ரீதியாக மேலே கொண்டு செல்லும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஊடகங்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் செயற்பாட்டியக்கங்களுக்குமே உண்டு. இதிலும் மக்கள் பிரதிநிதிகளுக்கே அதிக பொறுப்பு.

நதி என்பது நீர்ச் செல்வமாகும். உலகமெங்கும் நீருக்காகப் பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அப்படியான நீர்ச் செல்வம் தங்கள் பகுதிக்கு வருவதை ஏன் மக்கள் எதிர்க்கிறார்கள்? என்பதைக் கண்டறிந்தால் இந்தப் பிரச்சினை நல்ல முறையில் தீரும்.

கருணாகரன்

http://www.vaaramanjari.lk/2018/09/02/செய்திகள்/நீர்ச்செல்வத்தை-ஏன்-எதிர்க்கின்றார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.