Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? களத்தில் நின்ற வைத்தியரின் அனுபவ பகிர்வு!

Featured Replies

அடுத்தது

 

 

சில நாள்களுக்கு முன்னர், யூட்யூபில் முள்ளிவாய்க்கால் போர் நாள்களில் அங்கே பணிபுரிந்த மருத்துவர் டி.வரதராஜாவுடைய செவ்வியைப் பார்த்தேன். அது போர் மும்முரமாக நடந்த இறுதி நாள்களில், 2009 மே 15 அன்று எடுக்கப்பட்டது. போர் முடிவுக்கு வருவதற்கு மூன்றே நாள்கள் இருந்தன. முள்ளிவாய்க்காலில் அவர் கொடுத்த கடைசி நேர்காணல். அதிலே ஒரு கேள்வி. “உங்களுக்குச் சாவுக்குப் பயமில்லையா?” அவர் பதில் சொல்கிறார், “சாவுக்குப் பயமில்லாமல் இருக்குமா? நேற்று இரவு நான் வழக்கம்போல பதுங்குக் p94a_1535697453.jpgகுழிக்குள் இரவைக் கழித்தேன். சாவு எந்த நேரமும் வரலாம். அடுத்த 10 நிமிடத்தில் ஒரு குண்டு விழுந்து நான் இறக்கலாம். இன்று இரவை நான் காண்பேனோ தெரியாது.” இந்தச் செவ்வியைக் கொடுத்த மருத்துவர் வரதராஜாவுக்கு என்ன ஆனது? அவர் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அரசின் எச்சரிக்கையை மீறி, போர் நிலவரங்களைக் களத்திலிருந்து பி.பி.சிக்கும், ஐ.நாவுக்கும் அவ்வப்போது தொடர்ந்து அறிவித்தவர் இவர்தான். முள்ளிவாய்க்கால் பேரவலம், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு, போர்க்குற்றம் பற்றியெல்லாம் பின்னாளில் ஐ.நா பொதுச் சபையில் சாட்சியம் சொன்னவர், ஜெனீவா மனித உரிமை கண்காணிப்பகம் நடத்திய மாநாட்டில் பங்களித்தவர். நோபல் சமாதானப் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர். எப்படியோ அவரைத் தொடர்புகொண்டு சந்தித்தேன். முதல் கேள்வியாகக் கேட்டேன். “நீங்கள் முள்ளிவாய்க்காலில் 15 மே 2009-ல் கடைசியாகக் கொடுத்த நேர்காணலுக்குப் பின்னர் என்ன நடந்தது? நான் சொன்னதுபோலவே நடந்தது. அந்த நேர்காணல் முடிந்த 10-வது  நிமிடத்தில் என்மேல் குண்டுக்காயம் பட்டு அறிவிழந்து நிலத்தில் விழுந்தேன். பெரிய வெளிச்சம்தான் ஞாபகம் இருக்கிறது. என்னை ராணுவம் கைதுசெய்தது. என்னுடைய வலது கை, குண்டுபட்டு முற்றிலும் செயலிழந்துபோனது. எனக்குத் தகுந்த சிகிச்சையளிக்காமல் தாமதப் படுத்தினார்கள். நான் அரசாங்கத்தின் எதிரியாகவே கருதப்பட்டேன். நான் முல்லைத்தீவு மாவட்டம் பிராந்திய சுகாதாரச் சேவை பணிப்பாளர், அரச மருத்துவர். அப்படியிருந்தும் என்னை புலிகளின் ஆள் என்று சந்தேகப்பட்டார்கள். பேருந்தில் ஏற்றி என்னை வவுனியாவுக்குக் கொண்டுபோக முயற்சித்தபோது, பஸ்காரன் சொல்கிறான், “இவனுக்கு மேலே பஸ் ஏற்றுவேனே ஒழிய இவனை பஸ்ஸில் ஏற்றமாட்டேன்.” என்னைக் கொழும்புக்கு அழைத்துச்சென்று விசாரணை என்ற பெயரில் கொலை மிரட்டல் செய்தார்கள். பயங்கரவாதச் சட்டத்தின்கீழ் என்னை நான்கு  வருடம் சிறைக்கு அனுப்பப் போவதாக பயமுறுத்தினார்கள்.

பின்னர், ஊடகவியலாளர் மாநாட்டைக் கூட்டி, அதில் நான் அன்று வரை கொடுத்த நேர்காணல்கள் எல்லாம் பொய்யானவை என்று சொல்ல வேண்டும் என என்னை நிர்ப்பந்தித்தார்கள். அப்படிச் செய்தால் எனக்கு விடுதலை கிடைக்கும். அப்படியே செய்தேன். உயிர் வாழ்ந்தால்தானே உண்மையை உலகத்துக்குச் சொல்லமுடியும். அமெரிக்கத் தூதரகத்தில் அரசியல் தஞ்சம் கோரினேன். அவர்களுக்கு என் கதை முழுக்கத் தெரியும். 2011 நவம்பர் மாதம் அமெரிக்கா வந்துசேர்ந்தேன். 

p94b_1535697540.jpg

ளப்பணியின்போது எடுக்கப்பட்ட, மருத்துவர் பாதுகாத்து வைத்திருந்த புகைப்படங்கள்.

“முள்ளிவாய்க்கால் வாழ்க்கையில் உங்கள் மனதைத் தாக்கிய சம்பவம் ஒன்றைக் கூறமுடியுமா?”

“ஒன்றல்ல, நிறைய இருக்கின்றன. ஒரு தாய் தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவருக்கு வேறு ஒருவரும் இல்லை. அந்த இரண்டு மகன்கள்தான் அவரிடமிருந்த சொத்து. ஒருவனுக்கு 10 வயது, மற்றவனுக்கு 8 வயது.  ‘என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ, என்ரை பிள்ளைகளைப் பாருங்கோ’ என்று கதறியபடியே இருந்தார். புளியமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த அவர் மடியின் மீது எட்டு வயதுப் பையனின் தலை கிடந்தது. மூத்தவன் கீழே வெறும் தரையில் சரிந்து படுத்திருந்தான். மூத்த பையனை நான் முதலில் சோதித்தேன். அவன் எப்போதோ இறந்துபோயிருந்தான். அந்த அம்மாவிடம் பையன் இறந்துபோனதைச் சொன்னேன்.  ‘ஐயோ, ஐயோ’ எனத் தலையிலடித்துக் கதறினார். ‘இவனைப் பாருங்கோ’ என்று மடியில் கிடந்த மற்றவனைக் காட்டினார். அவனுடைய தலையை ஒரு சன்னம் துளைத்து மறுபக்கம் போயிருந்தது. ‘ஒன்றுமே செய்ய முடியாது. சிறிது நேரத்தில் இறந்துவிடுவான்’ என்ற கொடூரமான வார்த்தைகளைச் சொன்னேன். இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது என் மேலேயே வெறுப்பு ஏற்படுகிறது. ஓர் ஆறுதல் வார்த்தைகூடச் சொல்ல நேரமில்லை. ஒவ்வொரு நோயாளரையும் பார்த்து முடித்த பின்னர் உதவியாளர்  ‘அடுத்தது’ (NEXT) எனக் கத்துவார். நோயாளி வருவார். அவர் போனதும் ‘அடுத்தது’ எனக் கத்துவார். இப்படி என் வாழ்க்கை யந்திரமயமாக மாறியிருந்தது.”

“உங்கள் இளமைக்காலம் பற்றிக் கூறுங்கள்?”

“ஒரு வார்த்தையில் சொல்வதானால்  ‘அலைச்சல்தான்’. 1975-ல் தம்பலகாமம் எனும் ஊரில் பிறந்தேன். எனக்கு 10 வயது நடந்தபோது, ராணுவம் ஊரைச் சுற்றிவளைத்தது; சிலரைக் கைதுசெய்து ஒரு கடையினுள் அடைத்து அதற்குத் தீ வைத்தது. சின்ன வயதில் அந்தக் கருகிய உடல்களைப் பார்த்தேன். அந்தக் காட்சி என்மனதில் என்றென்றுமாக நிலைத்துவிட்டது. ராணுவத்தின் பிடியிலிருந்து தப்ப முல்லைத்தீவுக்குக் குடிபெயர்ந்தோம். அங்கே படிப்பை விட்டுவிட்டு ஒரு கடையில் பொட்டலம் கட்டும் வேலை பார்த்தேன். நான் ஏற்கெனவே ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததாகச் செய்தி வந்தது. எனக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தம்பலகாமத்துக்கும் முல்லைத்தீவுக்குமாகப் பல தடவை அலைந்தோம். இறுதியில் முல்லைத்தீவுப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். எப்படியும் படித்து ஆளாக வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது. பள்ளிக்கூடத்தில் பகலிலும் அதே பள்ளிக்கூடத்தில்  அரிக்கன் லாம்பில் இரவிலும் படித்தேன். அங்கேயே பெஞ்சில் தூங்கினேன். அப்படித்தான் 94-ல் மருத்துவப் படிப்புக்குத் தெரிவுசெய்யப்பட்டேன். போரினால் பல தடவை படிப்புக்கு இடையூறு ஏற்பட்டாலும் தொடர்ந்து படித்து 2004-ல் மருத்துவப் பட்டம் பெற்றேன்.”

p94c_1535697576.jpg

“உங்கள் மருத்துவச் சேவை முதலில் எங்கே தொடங்கியது?”

“திரிகோணமலையில் உள்ள ஒரு சின்ன ஊர் ஈச்சிலம்பற்று. 70,000 பேர் அங்கே மருத்துவ வசதியில்லாமல் கஷ்டப்பட்டார்கள். தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, ஆகவே ஒரு மருத்துவரும் அங்கே போகச் சம்மதிக்கவில்லை. நானாகவே போய் அந்த ஊருக்கு மாற்றல் கேட்டு மருத்துவராகப் போனேன். எப்படியாவது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என நினைத்தேன்.

போர் காரணமாக மக்கள் குடிபெயர்ந்தபோது, நானும் அவர்களுடன் மட்டக்கிளப்புக்குப் போனேன். அங்கே எனக்கு எதிரிகள் பெருகிவிட்டார்கள். ராணுவமும் கருணா அணியும் என்னைக் கொல்ல தருணம் பார்த்திருந்தனர். பல தடவை மயிரிழையில் உயிர்தப்பினேன். ஒவ்வொரு தடவையும் நான் பிறந்ததற்கான கடமை இன்னும் தீர்க்கப்படவில்லை என நினைத்துக்கொள்வேன். 2007 டிசம்பரில் முல்லைத்தீவுக்கு என்னை மாற்றினார்கள். அங்கே மே 2009-ல் போர் முடிவுக்கு வரும் வரைக்கும் சேவையாற்றினேன்.”

“முள்ளிவாய்க்காலில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்ததாகச் சொல்லியிருந்தீர்கள். அதிலெல்லாம் உங்களுக்குப் பயிற்சி இருந்ததா?”

“மருத்துவக் கல்லூரியில் எல்லாவிதமான நோய்களுக்கும் காயங்களுக்கும் சிகிச்சை முறை கற்பித்திருந்தார்கள். பல துறைகளிலும் அடிப்படை அறிவை வளர்த்துக் கொண்டேன். குண்டுபட்டு துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் போய் எனக்கு அதில் பயிற்சி கிடையாது என்று சொல்ல முடியுமா? ஏதாவது செய்து அவர் உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருந்தது.  ஒருவரையும் திருப்பி அனுப்ப முடியாது. இருக்கிற அறிவையும் உபகரணங்களையும் மருந்தையும் வைத்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்ய முயல்வோம்.

2009 பிப்ரவரி மாதம். புதுமாத்தளன் பாடசாலையில் ஆஸ்பத்திரி ஒன்று தொடங்க முடிவெடுத்தோம். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், எக்ஸ்ரே, ஆய்வு வசதி ஒன்றுமே கிடையாது. மிக முக்கியமாக ஜெனரேட்டர் இல்லை. ஆகவே, மின்சாரம் கிடையாது. அப்போது, அந்தக் கர்ப்பிணிப் பெண்ணைக் கொண்டுவந்தார்கள். பிரசவம் ஆகாமல் மூன்று நாள் கடும் அவஸ்தையில் இருந்தார். எப்படியும் சிசுவை வெளியே எடுக்க வேண்டும். எடுக்காவிட்டால் பிள்ளை செத்துவிடும். தாயும் இறந்துவிடுவார்.

p94d_1535697589.jpg

சிசேரியன் அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உயரமான கட்டில் இல்லை. சாதாரண கட்டிலில் உடலை வைத்துக் குனிந்துதான் செய்ய வேண்டும். உட்கார்ந்துகொண்டும் செய்ய முடியாது. பெண்ணின் இடுப்புக்குக் கீழே விறைக்கும் ஊசியைச் செலுத்திவிட்டுத் துணிந்து அறுவை சிகிச்சை செய்ய முடிவுசெய்தேன். ஒருவர் ரோர்ச் லைட்டை அடித்துப் பிடித்தார். குனிந்த நிலையில் வயிறைக் கிழித்து, கர்ப்பப் பையை வெட்டிச் சிசுவை வெளியே எடுத்தேன். சிறிது தாமதித்தாலும் குழந்தை இறந்திருக்கும். நஞ்சுக்கொடியையும் அகற்றிச் சுத்தம் செய்தோம். என் முதுகு தாங்கமுடியாமல் வலித்தது. கர்ப்பப்பையைத் தைத்தபோது ரத்தம் பெருகிக்கொண்டேயிருந்தது. ஊசியும் தெரியவில்லை நூலும் தெரியவில்லை. ஐந்து மணி நேரம் கடந்துவிட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. உதவியாளர் ஒருவர் ‘ஒரு மடிப்பு விட்டுப்போயிருக்கலாம், தடவிப் பாருங்கள்’ என்றார். உண்மைதான் விட்டுப்போன மடிப்பைச் சேர்த்துத் தைத்து ரத்தம் பாய்வதை நிறுத்தினேன். வயிற்றையும் தைத்து முடிக்க 8 மணி நேரம் ஆனது. எட்டு மணி நேரம் குனிந்து வேலை செய்ததால் தாங்க முடியாத முதுகு வலி. தாயையும் சேயையும் காப்பாற்றிய மகிழ்ச்சியில் அது மறைந்துபோனது.”

“போரில் ராணுவம் கொத்துக்குண்டு பாவித்ததா?”

“இலங்கை ராணுவம் (Cluster Bombs) கொத்துக் குண்டுகள் பாவிப்பதாக செய்திகள் வந்தன. ஏற்கெனவே அவை தடைசெய்யப்பட்டிருந்தன. ஆனால், எங்களிடம் அதற்கான ஆதாரம் கிடையாது.

2009 மே மாதம் போர் முடிவுக்கு வருவதற்கு இன்னும் சில நாள்களே இருந்தன. போர் உச்சத்தில் இருந்த காலம் அது. வழக்கம்போல அன்று காலை விடியும்போதே காயம்பட்டவர்களும் இறந்தவர்களும் நோயாளர்களும் அவர்கள் உறவினர்களும் மருத்துவமனையை நிறைக்கத் தொடங்கிவிட்டனர். ஆஸ்பத்திரி இயங்கியது புளியமரத்தின் கீழ்தான். பாயிலும், வெறும் தரையிலும், பிளாஸ்டிக் விரிப்பிலும் காயம்பட்டவர்கள் கிடந்தார்கள். 24 மணி நேரமும் ஒரு கூட்டு ஓலம் கிளம்பியபடியே இருந்தது. மருந்துகள் இல்லை; உபகரணங்கள் இல்லை; உதவி இல்லை. நூற்றுக்கணக்கானவர்கள் வெளியே வரிசையில் நின்றார்கள். மிகவும் ஆபத்துநிலையில் இருந்தவர்களுக்கு மாத்திரம் சேலைன் கொடுக்கப்பட்டது. அவை புளியமரத்துக் கிளைகளில் தொங்கின. பஞ்சுகூட இல்லை என்றபடியால் வேட்டியையும், சாரத்தையும் கிழித்து புண்களைத் துடைத்துச் சுத்தமாக்கினோம். இறந்துபோன உடல்களும் காயம்பட்ட உடல்களும் ஒரே வரிசையில் கிடந்தன. அறுவை சிகிச்சையில் வெட்டப்பட்ட கால்களும், கைகளும் மூலையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியில் குவிக்கப்பட்டிருந்தன. அன்று மாலை அவை பிணங்களுடன் புதைக்கப்படும். பார்வைக்கு இறைச்சிக் கடைபோலவே ஆஸ்பத்திரி இருந்தது. தரையில் எப்பவும் ரத்தம் ஓடும். ரத்தத்தில் தோய்ந்து என்னுடைய ஒரே சப்பாத்து உக்கி கிழிந்துவிட்டதால் கடைசி நாள்களில் நான் வெறும் காலுடனேயே நடந்து வேலை பார்த்தேன்.

55 வயது மதிக்கக்கூடியப் பெண்ணைத் தூக்கிவந்தார்கள். பெரிய காயம்பட்டு முழங்கால் சில்லு வெளியே தெரிந்தது. சதைகள் தொங்கி, ரத்தம் ஒழுகியது. அவருடைய புண்ணைச் சுத்தமாக்கச் சொல்லிவிட்டு அடுத்தவரைப் பார்த்தேன். பாதியில் எல்லோரும் வெளியே ஓடினார்கள். மருத்துவர்கள், உதவியாளர்கள், நோயாளர்கள் எல்லோரும் இடித்துப் பிடித்து வெளியேறினார்கள். காரணம், அந்தப் பெண்ணின் முழங்காலுக்குள் ஒரு குண்டு புதைந்துபோய்க் கிடந்ததுதான். டோர்ச் பாட்டரியிலும் பார்க்கக் கொஞ்சம் பெரிய குண்டு. கொத்துக்குண்டிலிருந்து புறப்பட்டப் பல குண்டுகளில் ஒன்று அவர் காலுக்குள் ஆழமாகப் புதைந்துவிட்டது. எந்த நேரமும் அது வெடிக்கலாம். அந்த பயத்தில் ஆள்களெல்லாம் வெளியேறி விட்டார்கள். காயம்பட்டப் பெண்ணுக்கு விசயம் தெரியாது. அவர் கத்தியபடியே கிடந்தார். தெரிந்தாலும் எங்கே ஓடுவது? அவர்தானே குண்டு.

வெளியே நானும் மற்ற மருத்துவர்களும் கூடி ஆலோசித்தோம். முதல் தடவையாக ராணுவம் கொத்துக்குண்டு பாவித்திருப்பதற்கானத் தடயம் எங்களுக்குக் கிடைத்திருந்தது. மருத்துவர்கள் பயத்தை வெளியே காட்டினால் மருத்துவமனையை மூட வேண்டி வரும். அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்றுவது முடியாத காரியம். எந்த நேரமும் குண்டு வெடிக்கலாம். அப்போது நோயாளியுடன் மருத்துவரும் இறந்துபோவார். 17 வயது இளம்பெண் ஒருவர்தான் ஆலோசனை சொன்னார். தொடைக்குக் கீழே, முழங்காலுக்கு மேலே  அவருடைய காலை மெதுவாக அதிர்ச்சி தராமல் கம்பி வாளால் அறுத்தோம். வெட்டிய காலை வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்று தூரத்தில் புதைத்தோம். அந்தப் பெண்மணியின் உயிரைக் காப்பாற்றியது பெரிய சாதனையாக அமைந்தது. அவர் சுகமாக இருக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் எனக்குக் கிடைத்திருக்கிறது.”

“உங்களுக்குச் சவால் கொடுத்த சம்பவங்கள் ஏதாவது இருக்கின்றனவா?”

“மருத்துவ வாழ்க்கை முழுக்கச் சவால்தான். எல்லா அறுவை சிகிச்சைகளும் வெற்றியிலேயே முடிந்தன என்று சொல்ல முடியாது. ஆகக் குறைந்த வசதிகள், ஆகக் குறைந்த உபகரணங்கள் ஆகக் குறைந்த மருந்துகள் இவற்றை வைத்துக்கொண்டு சமாளித்ததுதான் பெரிய விசயம். ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணை கொண்டுவந்தார்கள். அதைப்போல ஒரு காட்சியை நான் என் மருத்துவ வாழ்க்கையில் கண்டது கிடையாது. குண்டு, வயிற்றைத் துளைத்துப் பின்னர் கர்ப்பப்பையையும் துளைத்து வெளியேறியிருந்தது.  குழந்தையின் கை, குண்டுத்துளை வழியாக வெளியே வந்துவிட்டது. நச்சுக்கொடியும் துவாரத்திலிருந்து வழிந்தது. குழந்தையில் குண்டு பட்டிருந்ததால் அது இறந்துவிட்டது. தாயைக் காப்பாற்றலாம் என்று பார்த்தால், அவருடைய உடலில் பல பாகங்கள் சிதைந்துபோயிருந்தன. அவரையும் காப்பாற்ற முடியவில்லை.”

“புலிகளுடன் உங்கள் உறவு எப்படி இருந்தது?”

“மருத்துவரீதியாக அவ்வப்போது உதவினார்கள். போர்முகத்தில் நான் வேலை செய்ததால், பல விநோதமான சம்பவங்கள் நேர்ந்தன. ஒரு நாளைக்கு 200 பேரைப் பார்க்க வேண்டும். 18 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தாலும் முடிவுக்கு வருவதில்லை. யுத்த வலயத்தில் 3,00,000 பேர் சிக்கியிருந்தார்கள். ஆனால், 80,000 பேர்தான் என அரசாங்கம் ஊடகங்களுக்குத் தொடர்ந்து அறிவித்தது. 2,20,000 ஆள்கள் அழிந்தாலும் கணக்குக் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஆஸ்பத்திரியில் நாங்கள் நோயாளர்களின் விவரங்களைக் கடைசி நாள் வரை பதிவுசெய்யத் தவறவில்லை.

அதிகாலை நேரம் ஒரு பெண்ணைக் கொண்டுவந்து இறக்கினார்கள். நடு இரவு பங்கரிலிருந்து வெளியே சிறுநீர் கழிக்கப் போயிருக்கிறார். அந்த நேரம் RPG (Rocket Propelled Grenade) அதாவது, நுனியில் குண்டு பொருத்திய ரொக்கட் ஆகாயத்திலிருந்து கீழிறங்கி அவருடைய ஒரு தொடையைத் துளைத்து மற்றொரு காலையும் துளைத்து வெளியேறமுடியாமல் அப்படியே நின்றுவிட்டது. அதிர்ஷ்டவசமாகக் குண்டு வெடிக்கவில்லை. ஏவுகணையின் நுனியில் பொருத்தியிருந்த குண்டு எந்த நேரமும் வெடிக்கலாம். ரொக்கெட்டை நடுவே வெட்டி இரண்டு பக்கமும் உருவி எடுத்துவிட்டுத்தான் சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஆனால், முதலில் குண்டைச் செயலிழக்கச் செய்ய வேண்டும். புலிப்படை வீரர் ஒருவர், செய்தி கேட்டு எங்கேயோயிருந்து வந்து, குண்டைச் செயலிழக்கவைத்தார். அதன் பின்னர்தான் நாங்கள் சிகிச்சையை ஆரம்பிக்க முடிந்தது. பெண்ணும் மரணத்திலிருந்து தப்பினார்.”

“நீங்கள் 2011-ல் அமெரிக்கா புறப்பட்டபோது, இலங்கை அரசு அதைத் தடுக்க முயலவில்லையா? வேறு ஏதாவது விதத்தில் தொந்தரவு கொடுத்ததா?”

“நான் அமெரிக்கா புறப்படுவது அவர்களுக்குத் தெரியாது. முன்னரே தெரிந்திருந்தால் எப்படியும் தடுத்திருப் பார்கள். நான் இந்தியா சென்று அங்கேயிருந்து ரகசியமாக அமெரிக்கா வுக்குப் பயணமானேன். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகப் பேசிவிடுவேன் என்று அவர்களுக்குப் பயமிருந்தது. 2014-ல் இலங்கைக் குற்றப் புலனாய்வுத் துறை எனக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில், சித்திரவதைக் கூடம் என அறியப்பட்ட கொழும்பு 4-ம் மாடிக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் வரும்படி எனக்கு ஆணை பிறப்பித்திருந்தது. என் தங்கை ‘அவர் இங்கே இல்லை’ என்று சொன்னபோது... அவர்கள் சொன்னார்கள், ‘அவர் இல்லாவிட்டால் என்ன? நீ வா... அது போதும்.’ ”

“இப்போது அமெரிக்காவில் என்ன செய்கிறீர்கள்?”

“அமெரிக்காவில் திரும்பவும் மருத்துவம் படித்து, பரீட்சைகள் எழுதி, எல்லாச் சோதனையும் பாஸ் பண்ணினேன். மருத்துவப் பணிக்குப் பல ஆஸ்பத்திரிகளுக்கு விண்ணப்பித்திருக்கிறேன். அன்றாடம் சாப்பாட்டுக்குத் தொழில்நுட்ப உதவியாளர் வேலைசெய்கிறேன். தினம் நல்ல செய்தி வருகிறதா என்று குறுஞ்செய்தியையும் மின்னஞ்சல்களையும் வீட்டுத் தபால்பெட்டியையும் பார்க்கிறேன். அடுத்தது என்னவென்று காத்திருக்கிறேன்.”

- அ.முத்துலிங்கம்

 

https://www.vikatan.com/thadam/2018-sep-01/interview/143824-dr-varatharajan-about-tamil-eelam.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.