Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் சிரித்தது! …. எஸ்.அகஸ்தியர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடல் சிரித்தது! …. எஸ்.அகஸ்தியர்.

September 16, 2018
கடல் சிரித்தது!…  ( சிறுகதை )  …. எஸ்.அகஸ்தியர்.

சிறப்புச் சிறுகதைகள் (11) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – எஸ்.அகஸ்தியர் எழுதிய ‘கடல் சிரித்தது’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்.

thumbnail_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E

மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்து பிணமாகக் கிடந்தான். அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்து போய்க்கிடந்தன. மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும், கடல் அலைகளின் முரட்டு மோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில் சதா மோதிக் கொண்டிருந்தது. காகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டன. இன்னும் அதன் நாற்றம் ‘வெடில்’ அந்த ஊரை உசுப்பிவிட்டுக் கொண்டுதானிருந்தது. ‘பாவம்! நாலு வருடங்களுக்குமுன், அடைக்கலமாதா கோயிலில் அவனைத் தன்நாயகனாகச் சத்தியப்பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்ட மேரியைக்கூடத் தவிக்கவிட்டு அவன் செத்துப்போய்விட்டான்.’ ‘நாசமாய்ப் போக அவள்தான் அவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாள்.அதுதான் அவன் கடலில் விழுந்து செத்துப்போய்விட்டான்’. ‘பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா?’ ‘மாஞ்சோலை வேதசாட்சி கோயிலிலே போய்ப்பார் அப்போ தெரியும் பொய்யா, மெய்யா என்பது.’

கடற்கரைக் காற்றோடு அள்ளுப்பட்டு வந்த இந்த வார்த்தைகள் முத்துவின் தந்தை,கிழவன் கயித்தானுக்கு நன்றாகக் கேட்டன. ‘ஐயோ முத்து…..’ கிழவன் குரல் எடுத்துப்பலமாகக் கத்தினான். அவனுடைய கண்கள் அந்தக் கடலை வெறித்துப் பார்த்துச் சபித்தன. கடலையும் குடிசையையும் மாறி மாறிப் பார்த்துக் கடைசியில் கடல் மண்ணை அள்ளி எறிந்து திட்டி, ‘ஓ’ வென்று அழத கிழவன் மேலே பார்த்து, எதிலோலயித்தான். இருதயம் உருகியது, உருகிய அந்த இருதயத்திலே செத்துப்போன அவன் மகன்முத்துவும் அவன் கூட்டாளி மரியானும் பாசத்தின் சாயலில் தோன்றினார்கள்.

குமுறிப் பாயும் கடலலைகளைக் கிழித்துக்கொண்டு உலாஞ்சி உலாஞ்சித் தூக்கியெறியும் தோணியின் அணியம் முத்துவைத் தொட்டிற் குழந்தைபோல் ஆட்டியது. கருத்துத் திரண்டு வரும் மேகத் திவலைக் கூட்டங்கள் ‘சோ’ வென்று வெறிந்துச் சீறிப்பாயும் புயல் காற்றில் பட்டு மாய்ந்தன. கடல் உறுமியது, காற்றுப்பேயென அடித்துச் சீறியது. முத்து கோடாகத்தை இறுக்கிக் கட்டிக்கொண்டு கூதல் தீரச் சுருட்டு ஒன்றைப் பற்ற வைத்துத் ‘தம் பிடித்து’ இழுத்தான். கொண்டல் மழை குடியைக் கெடுக்கும் என்பது அவனுக்குத் தெரியும். இப்போ அவன்மனம் கொண்டல். கரையோரம் தாவியது. ‘மேரி என்ன பாடோ……?’

அவன் அவளுக்காக மேலே பார்த்துச் செபித்தான். ‘ஐயோ தேவனே!’ மீண்டும் இடி முழுக்கம், கண்களைப் பறிக்கும் வெட்டு மின்னல், இடி முழுக்கம், கண்களைப் பறிக்கும் வெட்டு மின்னல், இரைந்து கொட்டும் சோனாவாரி மழை, தொடர்ந்து அலறல் காற்று…… ‘அண்ணே, பாயை இழக்கு’ முத்து பலமாகக் கத்தினான். ‘டேய், நீ ஆத்தான் கயித்தை விடடா’ கடையாலிலிருந்து மரியான் உத்தரவிட்டான். அந்த உத்தரவுக் குரல் முத்துவின் காதுகளுக்கு எட்டவில்லை. ‘மரியான் அண்ணே, என்ன சொன்னாய்?’ என்று குரல்எடுத்துக் கேட்டான். ‘சனியனே, ஆத்தான் கயித்தை அவிட்டு விடடா. தோணி கடலுக்குள் சரியப் போகுது.’ முத்து பயந்துபோனான், மரக்கோல்களையும் சவளையும் எடுத்து அடங்க வைத்துவிட்டு, மரியான் இன்னும் தன் உயிரை வாங்கப் பார்ப்பானோ என்று எண்ணிஏங்க அவனை வெறிதுப் பார்க்கிறான். ‘சோப்பேறிக் கழுதை இங்கே வாடா’ மரியான் கோபத்தோடு அழைத்தான். கரிய இருளில் அவன் முகபாவத்தைக் காண முடியவில்லை. ‘நீ கடையாலிலே இரு, நான் அணியத்திலே நிற்கிறேன். என்ன நடுக்குகிறாய்? கூதலா? பல்லைக் கடித்துக் கொண்டு கம்பைப் போடு. கூதல் பறக்கும். என்ன நான் சொன்னது கேட்டதா?’ இவ்வாறெல்லாம் சொன்னபின் மரியானுக்கு அவன் மீது இரக்கம் பிறந்துவிட்டது. மீண்டும் ‘ஊண்டித் தாங்கடா தம்பி. அந்தக் கொட்டிலிலே போய் நெருப்பு எரித்துக் கூதல் காய்வோம்’ என்றான். முத்துவிற்கு இப்போ உற்சாகம் கரைபுரண்டோடியது. பரவைக் கடலைத் தேடி அணியத்து முனையை வைத்துத் தாங்கினான். எனினும்மனைவி மேரியின் நினைவு வந்ததும், அவன் பலமிழந்து சோர்வடைந்து விட்டான். ‘அடைக்கல மாதாவே, வீட்டிலே மேரி குளிராலும் என்நினைவினாலும் ஏங்கிச்சாவாளே… அவளுக்கு நல்ல ஆறுதலைக் கொடு.’ அவன் மேலே பார்த்து மீண்டும் வேண்டிக்கொண்டான்.

மேரியை அவன் கைப்பிடித்து ஒரு ஆண்டு கழியவில்லை என்பது மரியானுக்குத் தெரியும்: கிண்டல் பண்ணினான். ‘பொன்னையா வீட்டிலே கட்டிப்பிடித்துக் கொண்டிருக்காமல் உழைச்சுக் கொட்டவந்திட்டியா? அங்கேயும் இங்கேயும் மனம் ஓடினால் தொழில் உருப்பட்ட மாதிரித்தான்.’ இதைக் கேட்டு முத்து தன்னை மறந்து சிரித்தான். அவள் கொடுக்கும் கொள்ளை இன்பத்தைப் புலன்களில் செலுத்திக் களித்தான், உடல்திரண்டது. கடல் ஒய்ந்தது. காற்று அடங்கியது. விடிவெள்ளி கிளம்பிவிட்டது. மேரி தவியாய்த் தவித்தாள். இன்னும் அவள் கல்யாணப் புதுப்பெண்தான். ஒரு பூவோ பிஞ்சோ பிடிக்காதது அவளுக்கு ஒரே மனக்குறை. அவனைக் கேட்பானேன். தன்னந் தனிமையில் அவள் அன்று இரவு மட்டும் சீறிய புயல் காற்றினால் அவனை எண்ணிப் பட்டபாடு…..அப்பப்பா….! அவன் இன்னும் வரவில்லை. அவள் நெஞ்சு இருண்டது. மனம் நிலைகொள்ளாது அலைந்தது. மேலே பார்த்து மேரி மாதாவை வேண்டிச் செபம் செய்தாள். வலையையும் பறியையும் தோளில் போட்டுக்கொண்டு குடிசை நோக்கி வந்துகொண்டிருந்த முத்துவைக் கண்ட மேரி அழுதாள். அவள் கண்கள் வீங்கிப் போயிருந்தன. ‘கடந்த இரவு அவள் என் உயிருக்குப் பயந்திருப்பாள். அதனால்தான் இந்த நிலைக்குஆளாகித் தவிக்கிறாள். என்ன இருந்தாலும் பெண் அல்லவா?’ என்பது அவன் அபிப்பிராயம். அதிலே அவனுக்கு ஒரு பெருமிதம். ‘நான்தான் வந்துவிட்டேனே, இன்னும் ஏன் அழுகிறாய்? கஞ்சி கிடந்தால் போய்க் கொண்டு வா, போ.’ வாழ்க்கைச் செலவு கோரி அரசாங்க ஊழியர்கள் செய்த வேலை நிறுத்தம், கறுப்புச்சந்தைக்காரர்களுக்கு யோகம் அடித்துவிட்டுது. சீனிக்கும் மாவுக்கும் தடடுப்பாடு, அவன் பனங்கட்டியையும் சுடு தேனீரையும் கொடுத்தாள். அவன் சுவைத்துக் குடித்தான். அவன் கன்னத்திலே ஒடடியிருந்த கடற்பாசி ஒன்றை அவள் தன் மெல்லிய விரல்களால் அழுத்திப் பரிவோடு எடுத்து அப்புறப்படுத்திவிட்டு அருகில் அமர்ந்து விட்டாள். அவன் கண்கள் அவளைக் கொஞ்சலாகப் பார்த்தன: அவள் சிரித்தாள்.

‘ஏய் இப்படி வா’ அவன் அழைத்தான்: அவள் எழுந்தாள். ‘ராத்திரிப் பயந்திட்டியா?’ அன்பு வெறி அவன் கண்களை மயக்கியது. அவள் அட்டைபோல் சுருண்டு அவன்மடியில் கிடந்தாள். ‘நீ………!’ இறந்துபோய்க் கொண்டிருக்கும் ஜீவனுக்கு ஒரு பேச்சு வேறா? அவளால் பேச முடியவில்லை: அவனும்……..! இரவிரவாக் கடலில் மாய்ந்து நான்தான் விதியினால் மடிந்து சாகிறேனென்றால், அவளும் அதற்காகத் தனிமையில் இரவு முழுவதும் பயந்து சாவதா? என்ற ஒருஎண்ணம் அவனை வாட்டியது. ஒரு குழந்தை குட்டியாவது கிடைத்திருந்தால் கொஞ்சம் துணையாகக்கூட இருக்கும்…….. மேரியில் வைத்த உயிர் அன்பு, எப்படியெல்லாமோ சிந்திக்க வைத்தது. இப்போது அவனுக்குத் தன் சித்தப்பன் மகன்மீது மனம் போய்விட்டது. அவனும் சிறுபயல்தானே! தின்று கொழுத்துச் சும்மா திண்ணைக்கு மண் எடுப்பவன், அண்ணை பெண்சாதிக்குத் துணையாய் இருக்கட்டுமே! முத்து மறுநாளே மாணிக்கத்தின் சுதந்திரத்தில் மண்ணை போட்டுவிட்டான்.

திருவிழா, பேசும்படம், முச்சந்திச்சிரிப்பு ஆகியவைகளுக்கு மாணிக்கம் இனி முழுக்குப் போட வேண்டியதுதான். அதனால் ஆத்திரம்தான் என்றாலும் அண்ணன்சொல்லை எப்படித் தட்டுவது ஒப்புக்கொண்டான். அன்றும் கடல் கொந்தளித்தது. ஆனால் அவள் உள்ளமோ குதூகலித்தது. மூன்று வருடங்களாக இத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனையோ தடவைகள் நடந்தன. முத்து ஒரு அப்பாவி அவன் மனம் பேதலிக்கவில்லை. அன்றொரு நாள்…… காற்று விட்டுவிட்டு ‘வெருக்’ கென்று உதறித் தள்ளியது. மழைத்தூறல் ஓயவில்லை. மேகமண்டலத்தில் அலைகள் கருங்குருவிகள் போல் திரண்டுபடை படையாகப் பறந்தன. தோணியில் இடிந்துபோய் இருந்த முத்து மேரியை நினைத்துச் செபமாலை ஓதினான். மீண்டும் இடிமுழக்கம்…. கண்களைக் குருடாக்கும் திடீர் மின்னல். வாரிப்பொழியும்மழை, காற்று…. மீண்டும் தொடர்ந்து காற்று…. புயல்….! ‘தேவமாதாவே!’ அவன் மேரியை நினைத்துப் பலமாகக் கத்தினான். ‘என்னடா பயித்தியம்? ஆண்டவனிலே பழியைப் போட்டுக்கொண்டு தோணியைத் தள்ளித் தாங்கு.’ முத்துவிற்கு மரியான் தைரியம் கூறினான். ‘எனக்கு என்னண்ணை தெரியும் அவள் என்னை எண்ணிச் செத்துப்போவாளே?’ மரியான் சிரித்தான். ஊரிலே மேரியையும் மாணிக்கத்தையும் பற்றிப் பேசப்படுவதை மரியான் அறிந்து வைத்திருந்தான். ‘ஏண்டா முத்து, உன் பெண் புதிதா உன்னை நேசிக்கிறாவா? எப்ப தொடக்கம்?’ முத்து பரபரப்படைந்தான். எதிர்பாரத கேள்வியாதலால். ‘என்ன அண்ணே அது? என்ன கேட்டாய்?’ என்றான். ‘சரி சரி ஊண்டித் தள்ளித் தாங்கு’ என்றவாறு ஏதோ கூறிப் பேச்சை வேறு பக்கம்திருப்பினான் மரியான். எப்படியோ மூன்று கூடைகளும் இரண்டு பறிகளும் நிரம்ப மீனும் இறாலும் பிடித்து விட்ட சந்தோஷத்தில் முத்து தடுமாறினான். முத்து வலையையும் பறியையும் மாட்டித் தோளில் போட்டுக் கொண்டு துள்ளி ஆடிக்கொண்டு குடிசை நோக்கி நடந்தான். வழக்கத்திற்கு மாறாக வீடும் பூட்டியிருந்தது. செத்தையின் ஒலைக் கீற்றுத் துவாரங்களினூடே தன் கண்களை அகலத் திறந்து பார்த்தான் முத்து. அவளைக்காணவில்லை. ‘ஐயோ கடவுளே!’ அவன் ஏங்கிப்போனான். மாணிக்கம்……..? அவனையும் காணவில்லை! மரியானின் எதிர்பாராத கேள்வி அவன் மனத்திரையில் அப்போது பளிச்சிட்டது. ‘அடைக்கல மாதாவே!’ என்று அவன் வாய் முணுமுணுத்தது. அவன் ஓடினான். வாழ்வளித்த ஆழிக்கே ஓடினான். அது சிரித்து அவனை வரவேற்றது. காற்று ஓய்ந்தது. சிறிது நேரத்தில் தனது அலைக் கரங்களால் கடல் தாய் அவனைத் தாலாட்டி மீளாதநித்திரைக்கு ஆளாக்கினாள். (18-01-1959)

 

http://akkinikkunchu.com/?p=63457

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

முத்து அவசரப்பட்டு விட்டான். பொறுமையாய் வீட்டில் படுத்து உறங்கி இருக்கலாம்....அவர்கள் தனித்தனியாக கூட வெவ்வேறு தேவைகளுக்காக வெளியே போய் இருக்கலாம். கண்ட எல்லாத்துக்கும் சந்தேகப் படுவதே ஆண்களுக்கும் ஆசிரியருக்கும் வேலையாய் போய் விட்டது......!   tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.