Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'தனிமனித அவலத்தின் நினைவுகள் கூட்டு மனநிலையில் வடுவாக மாறுகின்றன.' பா.அகிலனின் 'அம்மை' கவிதை நூலை முன்வைத்து…

தேவகாந்தன்

 

book_ammai239.jpg

மறைந்த கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன்மூலம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் பா.அகிலனது கவிதைகளுடனான அறிமுகம் எனக்கு ஏற்பட்டது. இந்த அறிமுகத்தைத் தொடர்ந்தே 'பதுங்கு குழி நாட்கள்' தொகுப்புக்குள்ளான என் பிரவேசம் இருந்தது. அவரது அடுத்த கவிதைத் தொகுப்பு 'சரமகவிகள்' வெளிவந்தபோது, மேலும் அவரது கவிதைகளை அறிவதற்கான தரவுகளுடன் நான் இருந்திருந்தேன். 'அம்மை' தொகுப்பு வெளிவந்தபொழுது அவருடன் நேரடி அறிமுகமே உண்டாகியிருந்தது. கவிதைகளின் அகத்துள்ளும் அகலத்துள்ளும் சென்று தேட இது இன்னும் வாய்ப்பாக அமைந்தது.  
'அம்மை' தொகுப்பை புரட்டியதுமே என் மனத்தில் ஞாபகமானது சோ.ப.வின் 'தென்னிலங்கைக் கவிதைகள்' மொழிபெயர்ப்பு நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதியிருந்த 22 பக்க முன்னுரை. 'அம்மை'யிலும் கீதா சுகுமாரனின் அதைவிட நீண்ட பின்னுரையொன்று இடம்பெற்றிருக்கிறது. பா.அகிலனின் மூன்று கவிதைத் தொகுப்புகளினையும் உள்ளடக்கி பல தளங்களினூடாகவும் அலசிய ஆய்வு அது. எனினும் பின்னுரையின் தேவை பின்னாலேதான் ஏற்படுகிறது. அப்போது 'அம்மை' கவிதைகள் குறித்து வாசகன் இன்னும் கூடுதல் வெளிச்சம் பெறுகிறான்.

ஈழக் கவிதையாக வரலாற்றின் அடுக்கில் வைத்தும், இதிலிருந்து கிளைத்த புலம்பெயர் கவிதையென்ற புதிய வகையினத்துடன் ஒப்பவைத்தும், தமிழ்க் கவிதையானதால் தமிழக கவிதைகளுடனும் 'அம்மை' நோக்கப்படலாம். அது 'அம்மை'பற்றிய அகல்விரிவான ஒரு பார்வையைத் தருமென்பது மெய்யே. ஆனாலும் கவிதையென்ற ஒற்றைத் தளத்தில் இது அடையக்கூடிய பேறுகள் முக்கியமானவை. அதனால் இவ்வொப்பீடுகளின் கவனிப்பு அகன்றுவிடாதவாறு கவிதையின் நயம் காண்பதே எனது எண்ணம்.

நாற்பத்திரண்டு கவிதைகளைக்கொண்ட 'அம்மை' இருபத்தொன்பது கவிதைகளைக் கொண்ட 'காணாமற் போனாள்' என்றாகவும், மீதி பதின்மூன்று கவிதைகள் 'மழை'யென்றாகவும் அமைவுபெற்றிருக்கின்றது. ஆயினும் துல்லியமாய் வித்தியாசப்படும் பொருள்களைப் பேசுகிற கவிதைகளை இவை கொண்டில்லை. ஒரே விஷயத்தை அடிநாதமாய்க்கொண்டு வெவ்வேறு கதிகளிலும் ஆழங்களிலும் பேசுகிறவையாகவே அவை பெரும்பாலும் இருக்கின்றன. வேறுவேறு உணர்ச்சிகளைப் பேசுகிற கவிதைகளை தொகுப்பு உள்ளடக்கியிருப்பினும் அவை 'மழை'யென்கிற இரண்டாம் பகுதியிலேயே அதிகமாயும் உள்ளன. இந்த இரண்டு வகைக் கவிதைகளுக்கிடையிலும் கவிதைநிலை சார்ந்த வித்தியாசம் இருக்கவே செய்கிறது. அது அவை வெளிப்படுத்தும் கருத்துக்களின் காரணத்தாலாகும்.

தனதும், பிறரதுமான போர்க்கால அனுபவங்களிலிருந்து சுழித்தெழுந்த இத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் ஊற்று மன உடல்ரீதியாக அடைந்த அவலங்களினதும் வடுக்களினதும் மய்யத்திலிருந்தே பீரிட்டெழுகிறது. கைகால்கள் போன்ற பொறிகள் மட்டுமில்லை, புலன்களும்கூட இழக்கப்பட்டன. மிகக்கொடூரமான மனித அவலம் சம்பவித்தது. ஆனால் அந்த அவல உணர்வுகள் மீளுதல் சாத்தியமற்ற நிர்கதியின் இருளாய் உறைவடைந்து மேலும் பகுக்கக்கூடிய திண்மமாய் 'அம்மை' கவிதைகளில் மாற்றம் பெறுகின்றன.  

போர்க்கால அவலங்களில் அமிழ்ந்துகிடந்து அவற்றின் உடலியற் துன்பங்களையும், மனோவியல் பாதிப்புகளையும் பொதுவில் பேசுகிற நிலையொன்று இருக்கிறது. இது வெளிப்படையானது. இன்னொன்று, தன்னை அவலத்தின் பின்னால் மறைந்திருந்துகொண்டு குரல்மட்டும் கொடுத்துக்கொள்கிற ஒரு நிலை.

ஒரு போர் மனித மனநிலையில் விளைக்கும் சிதைவுகளை அவல(Trauma)மென்ற ஒற்றைப்படைச் சொல்லில் அடக்கிவிடுவது எப்போதும் சரியாவதில்லை. அது உடம்பில் ரணமாக, மனத்தில் திகிலாக எப்போதும் பாதிக்கப்பட்டவரின் சகல உணர்வுகளையும் இடைஞ்சல் படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வகை அவலத்தின் அனுபவமாய்த் திரளும் நினைவு அவரை மெல்லமெல்லத் தின்று தீர்த்தும்விடுகின்றது. வெற்றியின் உவகையும், தோல்வியின் வடுவும் தம்மை இனங்காட்டுகிற புள்ளி இது.  

மனத்தையும் நினைவையும் இங்கு வேறுபடுத்திப் பார்க்கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவை இரண்டு விதங்களில் தொழிற்படுகின்ற காரணத்தால் இந்தப் பகுப்பு அவசியமென்று தோன்றுகிறது. நினைவு தனிமனித நிலையின் அம்சமாய் துக்கம், வலிகளைச் சுமந்துகொண்டு இருக்கிறவேளையில், மனம் ஒரு கட்டத்தில் கூட்டுச் சமூகநிலையின் கோலம் கொண்டுவிடுகிறது. அது ஞாபகங்களாலல்ல, கருதுகோள்களாலும் கனவுகளாலும் கட்டமைக்கப்படுகிறது. அப்போது தனிமனித அவலத்தின் நினைவலைகள் கூட்டுமனநிலையில் அவமானத்தின் எரி வடுக்களாக உறைக்கின்றன.  

இந்த வேற்றுமை 'அம்மை' தொகுப்பில் பகுதியாகப் பிரித்துப் பார்க்குமளவு அவ்வளவு தெளிவற்றவைதான். ஆனாலும் அவை இத் தொகுப்பில் இருக்கின்றனவென்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

akilan_pa.jpg

- கவிஞர் பா.அகிலன் -

இவற்றுக்கான உதாரணக் கவிதைகளினை நூலிலிருந்து காணவேண்டும்.  

நிலக்காட்சி: இரணைப்பாலை

அப்புறம் பிணக்காடு
தசையொட்டிய சுவர்கள்
இரத்தச் சூடடங்கா அவயவத் துண்டுகள்

ஏவுகணைகளின் பலவாய வெடிப்புகளுக்கு நடுவில்
உயிரைக் கையிற்கொண்டோடியபோது
நிலத்திருந்து நெடுத்து மறித்ததொரு குரல்

ஆடையிலா அப்பெண்ணின் மேலுடல் கண்டபோது  
கீழுடலிலா வெற்றிடத்தில்
இரண்டேயிரண்டு எலும்பு நீளங்களைக்  
கண்டேன், கண்டேன்.



தோற்றவர்கள் 02

இப்போது இங்கேயுள்ளோம்

கைகளின்றி உண்டு
கண்களின்றிப் பார்த்து
மரக்கால்களால் அடி நகர்ந்து

இங்கேயுள்ளோம்
உங்கள் பட்டொளிப் பதாகைகளின் கீழே
நாங்கள் தான் அது

இங்கேயுள்ளோம்
உமது குடையின் கீழ்
ஆறாப் புண்களின் சீறுஞ் சீழ் மேல்
வாரி நெருப்பை விடாதிறைத்தபடி

மிக நிமிர்ந்து
உம்மைப் பார்த்தபடி
நாங்கள் தான் அது

தோற்றுப் போனவர்கள்.


இந்த இரண்டு கவிதைகளிலும் முதலாவதான 'நிலக்காட்சி: இரணைப்பாலை'யில் காட்சியின் அவலம் வரிவடிவங்களாய் எழுந்திருக்கையில், இரண்டாவதான 'தோற்றுப்போனவர்கள் 02'ல் யுத்த முடிவில் எதிர்கொண்ட நம்பிக்கையின் தகர்வும் தோல்வியின் அவமானமும்கொண்டதாய் எழுத்துக்கள் நிமிர்ந்திருக்கின்றன.

முதலாவதுவகைக் கவிதையின் பாடுபொருளான அவலத்துக்கு இலங்கைக் கவிதை மரபில் சற்றொப்ப முப்பதாண்டுகளுக்கு மேலான வரலாறுண்டு. இரண்டாவது வகையினம் 2009இன் இறுதி யுத்தத்துக்குப் பின்னான காலத்தினைப் பாடுபொருளாகக்கொண்டு எழுந்திருக்கிறது. சமகால இலங்கைக் கவிதைகள் அவலத்தினைப் பாடுபொருளாய் நீண்டகாலம் கொண்டுவிட்டனவென்ற அயலகக் குரலின் பின்னணி இங்கே இருக்கிறது. அதுவே எதார்த்தமாக, அதுவே வரலாற்றுக்குத் தேவையான பதிவாக உள்ளபோதும் கவிதை வாசகன் ஒரு நீண்டகாலத்தை அவ்வாறான அனுபவப் பகிர்வில் அயர்ச்சி அடைகிறான். அது அத்தனை காலத்தில் சுதாரித்து மேலெழுந்து தன்னை நிறுதிட்டப்படுத்தி இருக்கவேண்டும். சுதாரிப்பதோடு மேல்வீழ்ந்த அவலங்களையும் வடுக்களையும் ஒரு தத்துவார்த்தப் புலத்தில் பொருத்தி காரண காரியங்களை வகுத்துப் பார்த்திருக்கவேண்டும். இந்த இரண்டும் ஈழக் கவிதைப்புலத்தில் நிகழவில்லை. அது துர்பாக்கியமானது.

தொகுப்பிலிருக்கிற முதலாவது பகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகளின் பண்பும், இரண்டாவது பகுதியின் சில கவிதைகளின் பண்பும் இந்த வரையறைக்குள் அடங்குகின்றன. ஈழக் கவிதைகளை இந்த இடத்தில் வடக்கு, கிழக்கென்று அவை வெளிப்படுத்திய அர்த்தங்களின் மேலாய் இரண்டாகப் பிரிக்க முடியும்போல் எனக்குத் தோன்றுகிறது. யதார்த்தன், யாத்ரீகன், துவாரகன், மயூரரூபன், சிந்தாந்தன், தானா விஷ்ணு, தீபச்செல்வன், கருணாகரன் போன்றவர்களது கவிதைகளில் அவலத்தின் குரல் பேரலையாய் எழுந்துகொண்டிருந்த பொழுதில், கிழக்கிலே அனார், நவாஸ் சௌபிபோன்ற கவிஞர்களின் குரலில் அவலத்தின் பின்னால் அதற்கான காரிய காரணத் தேடலும் இருந்திருந்தது. இது ஒரு திரவநிலைத் தோற்றம். அறுதியாக அவ்வாறான ஒரு கோட்டை கிழித்துவிட முடியாதுதான். வடக்கின் பல கவிஞர்களது குரலில் பல புலம்பெயர் கவிஞர்களது குரலில்போல் யுத்தத்தின் எதிர்ப்புக்கூட இருந்திருக்கிறது. ஆனால் வடக்கினதும் கிழக்கினதும் கவிதை நிலைகளைப் பிரித்துப் பார்க்கிறபோது அப்படியில்லையென்று அதை மறுத்து சமர்ப்பிக்க வலுவான நியாயங்கள் இல்லை.

ஆயினும் அதைக் குற்றமென்றோ குறையென்றோ சொல்லிவிடவும் முடியாது. நீண்ட காலத்துக்கும் ஒலிக்கக்கூடியதான பெரும்பாதிப்பே அவர்கள்மீது வந்து விழுந்ததென்பது நிஜம். சமூகத்தின் இந்த கூட்டு மனநிலையின் வெளிப்பாடு அதன் அடுத்த கட்டமாக ஒரு செயற்பாட்டுத் தளத்தை அடைகிறபோதுதான் ஒரு மாற்றத்தை கவிதை காணமுடியும். இப்போதுள்ள முழுவதுமாய் வீழ்ந்துள்ளதான நிலை, கவிதையிலாவது அதன் அடுத்த கட்ட வாழ்வியக்கமாக உருக்கொண்டிருக்கவேண்டும். உடனடி நிவாரணியொன்று கண்டடையப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் எந்த அழிவின் அம்சத்தைவிடவும் நீண்டகாலத்துக்கு மனதைத் தொடரக்கூடியது. 'அம்மை'யின் முதலாம் பகுதியின் பெரும்பாலான கவிதைகளின் சோகம் இந்தப் பொருளிலிருந்தே குரலெடுக்கிறது. அதன் தலைப்புகூட 'காணாமற் போனாள்'. இது ஒருவகையில் மனவடுவையும் மீறி சம்பந்தப்பட்டோரை சிதறச் செய்துவிடுகிற ஒரு அம்சம்தான். உயிரோடு உடம்பையும் இழத்தலென்பது கொடுமைகளின் உச்சம். அதேவேளை இருப்போரின் வாழ்வும் முக்கியமானதென்பது நமது புரிதலாக இருக்கவேண்டும். வாழ்வு நந்தவனத்து ஆண்டியிடத்துக் கிடைத்த தோண்டியாகவே எப்போதும் இருந்துவருகிறதென்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.  

இத்தகைய மனவடு அழுத்தம்பெற்று மேலே செல்லச் செல்ல பித்தாக மாறிவிடுகிற ஒரு புள்ளியிருக்கிறது. தொகுப்பின் இரண்டாம் பகுதியின் சில கவிதைகளில் பித்தக நிலைகொள்ளும் தன்னிலைகளைக் காணமுடிகிறது. அதேவேளை, அதைக்கடந்தும் சூன்யத்தின் பித்துநிலை கொள்கிற தன்னிலைகளும் இங்கே உலவுகின்றன.  

'மழை' பகுதி மயக்கம் கொண்டுள்ளது. அது கார்முகிலிலிருந்து சொரியும் மழை மட்டுமல்ல, அனுதாபம், அன்பு என பொழியும் மழையாகவும் படிமம் கொள்ளக்கூடியது. மழையின் வறட்சியில் வனங்கள் எரிவதுபோல், அன்பின் வறட்சியில் மனங்கள் எரிவதைச் சில கவிதைகள் கோடு காட்டுகின்றன. 'கோடைமழை' கவிதையை அவ்வாறாக விரித்துக் காணமுடியும். 'தாமரைச்செல்வியை நினைதல் 01', 'மழை', 'மாமழை', 'மழைவேனில்' ஆகிய கவிதைகளும் படிமமாய் இன்னும் விரிந்த பொருள் தரக்கூடியவைதான்.  

உறவுகள்கொள்ளும் விசித்திர உணர்வுநிலைகளை சில கவிதைகள் விரிக்கின்றன. தன்னையும் தன் உறவையும் வேறுபடுத்திக் காணவியலா தூரத்திற்கு நகர்ந்து செல்பவையாயும் இவற்றில் சில உள. இது இன்னொரு வகையான பித்தகநிலை.

உருக்குலைய இனியேதும் இல்லையென்ற போதிலும்
மனத் தசைகளில் கீறிய சித்திரங்களைப் பார்த்து  
வியந்து சிரித்துப் பரிகசிக்கிறேன் நான்
அவள் ஒரு பித்தனைக் காண்கிறாள்


என்ற அடிகளில் (பெரிடப்படவில்லை 01) முன்னதற்கான உதாரணமுண்டு.

நானற்றேன்
நீ மட்டும் எஞ்சினாய்;
நீதான் நானில்லை இது என்றாய்

ஒர் குளிர் வாடை வீசியடங்கியது

நானுமில்லை நீயுமில்லை எனில்?
தேகக் கோதுடைத்து
திரண்ட எண்ணவெளி நின்றவர் யார்?


என்ற வரிகளை (தாமரைச்செல்வியை எழுதுதல்) இரண்டாவதற்கான எடுத்துக்காட்டாகவும் சொல்லல்கூடும். 'அவன் தேவதைகளைக் கற்பித்தான்\ விநோதனானான் \ வேறொரு உலகத்தை விரித்துப் படுத்தான்' (மழைவேனில்) இறுதியானதற்கு எடுகோள்.

இந்த மூன்று எடுத்துக்காட்டுகளுமேகூட இரண்டாவது பகுதியான மழையிலேயே வருகின்றன.

எந்த ஒரு எழுத்தும் மௌனமாகக்கூட இருக்கும், ஆனால் அரசியலற்று இருந்துவிடாது எனச் சொல்லப்படுகிறது. பிரதியைக் கட்டுடைத்தல் செய்கிறபோது வெளிப்படுவது ஆசிரியனின் அரசியல்தான். அதுதான் எவ்வாறு அவாவாகத் தொழிற்பட்டுள்ளதென்பதை விளக்கமாய்க் காட்டுகிறது. அரசியலொன்றும் விலக்கப்பட்ட கனியல்ல, உரைநடைக்குப்போலவே கவிதைக்கும். ஆனாலும் உரைநடையைவிட கவிதையில் அரசியல் மிகுந்த உக்கிரத்துடன் வெளிவரும்; ஒளித்துவைத்தபோதும் தன்னை அடையாளம் தெரியும்படி வெளியே தலையை நீட்டும். இக்காரணம் சுட்டியே கலகக்காரக் கவிஞர்கள் அரசின் இரும்புக் கரம்கொண்டு எங்கெங்கும் நசுக்கப்படுகிறார்கள்.  

ஆக, உள்ளோடிய அரசியலாக இருப்பதுமட்டுமல்ல, வெளிப்படையான அரசியல் பேசுவதாகக்கூட பிரதி இருக்கட்டும். 'என் எழுத்துக்களுக்கு ஒரு கூர்மையான சிறுபான்மை அரசியலுண்டு என நினைக்கிறேன்' என்ற பா.அகிலனின் கலைக்கொள்கைப் பிரகடனத்தில் (பின்னுரை பக்:63) தயக்கம் தெரிகிறது. அது தேவையில்லை. அதில் அரசிலுண்டுதான். அவரது அரசியலை அவர் பேசுகிறார். ஆனாலும் வரலாற்றுப் பதிவெழுத்துக்களின் சாங்கம் கவிதையின் கழுத்தை நசிக்குமளவு அனுமதித்துவிடாதிருந்தால் சரிதான்.  

இலங்கையில் தங்கியிருந்த கவிஞர்களுக்கு மட்டுமே 2009இன் பின்னான காலத்தினை அச்சொட்டாகப் பாடும் வாய்ப்பு கூடியிருக்கிறது. இது புலம்பெயர் கவிஞர்களுக்குச் சாத்தியமில்லை. அவை இயக்க முரண்களையும், யுத்தத்தின் அழிவுகளையும் அவலங்களையும் நிலமிழத்தலையும் அலைந்துழல்வையும் பாடியதுபோல் இறுதியுத்தத்தின் அழிவுகளையோ அவலங்ளையோ விளைந்த ஆறா வடுக்களையோ உரைத்தல் கூடிவிடாது. தமிழக நிலைமையோடும் ஈழத்தின் இந்தவகைக் கவிதைகளை ஒப்பிட்டு எழுத்திவிடுதல் சாத்தியமில்லை. ஆயினும் கவிதைத்தனத்தில் சில கவிதைகளோடு உள்ளுள்ளாகவேனும் மனம் ஒப்பீட்டில் முனைவது தவிர்க்க முடியாதது.

கவிதையே மொழியின் உயர்ந்தபட்ச சாத்தியத்தின் அடைதலெனக் கூறுகிறார்கள். அதை நவீனகவிதையாய், புதுக்கவிதையாய் பரந்த தமிழுலகு கண்டுகொண்டிருக்கிறது. இன்றைய நவீன கவிதைதான், புதுக்கவிதையின் துளிர்ப்பு அறுந்து புதியவொரு தளத்தில் மிதந்துகொண்டு இருக்கிறதெனவும் கூறப்படுகிறது. இந்த வடிவ ஆய்வுக்குள் புகாமல் மேலோட்டமாய் ஓரிரண்டு ஒப்பீடுகளுடன் இதை முடித்துக்கொள்வது சிலாக்கியம்.  

தமிழ்நாட்டில் சமீபத்தில் எழுபத்தொரு கவிதைகளைக்கொண்ட எஸ்.சண்முகத்தின் 'ஈர்ப்பின் பெருமலர்' என்கிற தொகுப்பு போதிவனம் வெளியீடாக வந்திருக்கிறது. இதை அண்மையில் வெளிவந்த முக்கியமான கவிதைத் தொகுப்புகளிலொன்று என நான் எண்ணுகிறேன். இந்த எழுபத்தொரு தலைப்பற்ற கவிதைகளும் நீண்ட, இடைத்தரமான, சிறியவென பல அளவினதான இருக்கின்றன. தலைப்பற்ற கவிதைகள் இன்னுமின்னும் கூடுதலான அவதானிப்பை வாசகனிடத்தில் கோரிக்கொண்டு இருப்பவை. தன்னிச்சையாக முன்னனுமானமின்றி வாசகன் கவிதையுள் புக வாய்ப்பாக அமைபவையும். அது 'ஈர்ப்பின் பெருமல'ரில் கூடிவந்திருக்கிறது.  

இயல்பாகவே மரபார்ந்த சொற்களை ஓரளவு தன் பாவிப்பிலிருந்து ஒதுக்கிக்கொண்டு சீரிய, தீவிர சொல்லெடுத்து பிறந்திருக்கும் இக் கவிதைகள் தலைப்புமற்ற வரிசை எண்களுமற்ற இந்த அடுக்கில் மேலும் இறுக்கத்தைச் சேர்த்துவிடுகின்றனவென்பது மெய்யே. ஆனால் அது உண்மையில் இறுக்கமல்ல, வாசகனின் முழுக் கவனத்தையும் கவிதைத் தலைவி தனக்கென கேட்பதாகவே கொள்ளவேண்டும். கரணம் தப்பினால் மரணம்போல, இங்கே கவிதை கவனம் தப்பினால் புதிர் என்றாகிவிடக்கூடும்.

கவிதைகள் வெளிப்படுத்தும் அர்த்தங்கள் வெவ்வேறாயினும் அவை கட்டமைக்கும் கவிதையுடல் ஒத்த தன்மை கொண்டுள்ளதாய் நான் காண்கிறேன். பா.அகிலனின் கவிதைகளிலும் இந்த கவிதையிறுக்கம் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. அது முன்னரே சுட்டிக்காட்டியதுபோல் இறுக்கம்கூட இல்லை, வாசகனின் முழுக் கவனத்தையும் அவாவி நிற்றலேயாகும். எஸ்.சண்முகத்தின் சொற்குதம்போல் பா.அகிலனதும் குறிப்பிடக்கூடியது. அது ஈழத்தில் மு.பொ. கொள்ளும் பிடிவாதமான கருத்துச் செறிவையும் கட்டிறுக்கத்தையும் (காலி லீலை) வேறுபட்ட இயல்பிலும், புழக்கத்திலும் ஆற்றும் செயற்பாட்டுத் தனம் கொண்டதாயிருக்கிறது.  

வேறொரு நாளும்
இன்னும் பலநாளும்
பின்பொரு நாளும் வந்தனவாயினும்

'இழந்த நாளெல்லாம் திரும்பியேகா' என  
இன்னொருவனிடம் இவனும்
இவனிடத்து அவளும் கூறினர் (பெயரிடப்படவில்லை 02) என்றும்,

பரந்து விரிந்த கூடங்களில் தனித்தலைந்தாள்
நட்சத்திரங்களின் வெற்றொளிமீது
தேய்ந்த நிலாமீது வெறுப்புக் கொண்டாள்  
பனி அவள் துயர்மீது விடாது பெய்தது


பைத்தியமானாள் (சுதேஷனா) என்றும் வருகையில் சொற்செட்டுடன் கவிதை உருக்கொள்வதைக் காணமுடியும். சித்த இலக்கியத்தினின்று வெகுவாய் விலகிப்போய்விடாத தோற்றம் இது.

'யானைச் சட்டை எனும் கவிதை' எனும் கவிதை தொகுப்பிலுள்ள 'அம்மை' கவிதையைவிடவும் விஷேசமானது. அது சுருங்கிய வரிகளில் எடுத்திருக்கும் விகாசம் பிரமாண்டமானது. சங்கக் கவிதைகளில் கண்ட பிரகாசமும் வரிகளில் வெடித்தெழுகிறது. அது இது:

யானைச் சட்டை எனும் கவிதை

மஞ்சளில் ஒரு ஊதா நிறத்து யானை  
மேலே இன்னொரு கொட்டைப் பாக்குக் குருவி
குருத்துப் பச்சைப் புற்களில்
செந்நிறத்தும் நீலநிறத்தும் சிறுபூக்கள்
இருண்டு வரிகளிற் பயணஞ் செய்யும் நீரலைகள்

பெட்டியுள் இருக்கிறது இப்போதும்
நீ கழற்றி வீசிய  
சிறு பராயத்து 'யானைச் சட்டை'.


இயக்கத்துக்கு ஓடி விட்டதை, இயக்கத்தால் பிடித்துக்கொண்டு போகப்பட்டுவிட்டதை, காணாமலாக்கப்பட்டதை, திருமணமாகிப் போய்விட்டதை, விரும்பியவருடன் ஓடிவிட்டதையென பல கதைகளை இந்த வரிகளின் ஊடுகளிலிருந்து புனைய முடியும். அத்தனைக்கு இவற்றினுள் பொதிந்திருக்கும் கதைகள் அனந்தம்.

இந்தத் தொகுப்பிலுள்ள பா.அகிலனின் இன்னும் சில கவி விசேஷங்களை இனிக் காணலாம்.

'யுத்த ஆடைகளின் மெய்யுருக்கள்', 'அம்மை', 'கோடை மழை'போன்ற ஒருசில கவிதைகள் தவிர மீதி யாவும் அளவில் சிறியன. உணர்வலைகளின் வீச்சைமட்டும் காட்டி பின்னணியை ஊகமாய்த் தெரிவிக்கும் திறன் அச் சீறடிப் பாடல்களுக்கு உண்டுவென நினைக்கிறேன். மேலும் இவற்றின் இன்னொரு சிறப்பம்சம் இவற்றின் இறுதி அடிகள்.

பின்னர் தரப்பட்டது குருதி காய்ந்தொட்டிய பிணம்
புதிதாகச் சூடிக் கொள்ளவென்றொரு பெயர்
முடிவடையாதவொரு கண்ணீர்த் தெரு
 (விதவைக் கவிதை 01) என்றும்,

நகரா நாட்களை நகர்த்தி
மரணத்துக்குக் காத்துக் கிடந்தாள் தாய் 
(ஒளிப்படத் தொகுப்பேடு) என்றும்,

எல்லாப்பொழுதும் என் பின்னால் யாரோ வருகிறார்கள்
ஒளித்து என்னை வைக்க ஓர் இடமுண்டா உலகத்தில்?
 (அவள்) என்றும்,

நேசமொன்றுக்காய்
வாழ்வெறிந்து மரணமேற்றுப் போனார்கள்
என்பது உன் சரித்திரத்தில் பதியப்பட்டுள்ளதா?
 (அன்ரிகனி) என்றும்,  

அவள் சிற்றுடல் சுருண்டெழுந்து
விண்ணேறி

பத்ம வியூகத்துள் வீழ்ந்தபோது இருளுச்சியை அடைந்தது
 (சுபத்திரா) என்றும்,

அவன் பாவக் கடல் பெருகி
அவன் குரல் வாங்கியழித்து பாழில் மிதந்தது
 (விம்பம்) என்றும் வரும் ஈற்றடிகள் மிக நேர்த்தியாய் அமைந்து, சுள்ளிடும் ஒரு விசையோடு கவிதையை முடித்துவைக்கின்றன. சில இடங்களில் கவிதையே அந்த அடிகளுடன்தான் உயிர்பெறுகிறதென்றும் சொல்ல முடியும்.

'கணவன் உயிர்வேண்டி போனாள்… போனாள் முடிவின்றிப் போனாளெ போனாள்' எனவும், 'இரண்டேயிரண்டு எலும்பு நீளங்களைக் கண்டேன்… கண்டேன்' எனவும் வருமிடங்கள்கூட இசை நிரப்பவல்ல, இந்த சுரீர் உறைப்பை விளைக்க சொல்லின் மீளுருக் கொள்வனதாகக் கருதமுடியும்.  

இந்தக் கவிதைகள் நேற்றுப்போல் இன்று இல்லை. புதிதுபுதிதான கருத்துக்களையும், புதிது புதிதான அனுபவங்களையும் வாசகனுக்கு உத்தரவாதம் செய்கிறது தொகுப்பு. அதன்மூலம் பல்வேறு கவிதைச் சிந்தனைகளை, பல்வேறு வாசிப்புச் சுகங்களைத் தந்தமைக்காக பா.அகிலனுக்கு என் நன்றி.

 

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4699:2018-09-15-01-34-25&catid=57:2013-09-03-03-55-11&Itemid=74

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.