Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்ரு’ – பவா செல்லதுரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘சத்ரு’ – பவா செல்லதுரை

அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின் நுனியிலிருந்தார்கள். அவன் பிடிவாதமாய் கண் திறக்காமல் கிடந்தான். ரங்கநாயகி கிழவி தனி பொம்பளையாகப் பதட்டமின்றி, அவன் தலைமாட்டில் குந்தி இருந்தாள். அவள் நிதானத்தில் அனுபவம் குழைந்திருந்தது. மௌனம் எல்லோருக்கும் பொதுவாய் பரவி இருந்தது. அந்தச் சின்னக் குடிசை,தன் உள்புறம் இதற்குமேல் ஒரு ஆளையும் அனுமதிக்காத பிடிவாதத்தில் இருந்தது.

வீட்டின் வெளி, புதுசாய் பார்க்கிற எவரையும் பயமுறுத்தும். நீண்டு, அகன்று பரவியிருந்த பாறைகளின் நடுவில் ஒதுங்கியிருந்த மண்திட்டில், கட்டியிருந்த கூரையின் வெளியில் நின்று பார்த்தால்,கருங்கோடுகளாய் நீண்டு கொண்டே போகும் பனைமரக்கறுப்பும், பீவேலி மரங்களும்,கோடையின் உக்கிரத்தை அநாவசியமாக்கும் எட்டிமர இலைகளும்,இந்த அத்துவான வெளியில் வீடு கட்டின பாண்டு ஒட்டனின் தைர்யத்திற்குத் துணைநின்றன.

அவன் உளியின் நுனிகளால் பாறைகளைத் தின்று குழிகளாக்கினான். விழுந்த குழிகளில் கறுப்பு மருந்தேற்றி, திரி பற்ற வைக்கும் லாவகம் வேறெங்கும் காணமுடியாதது. வெடித்துச் சிதறிய கற்பாறைகளின் கங்குகளுக்கும், எழும் கரும்புகைக்கும் நடுவில் ஒவ்வொரு முறையும் வெற்றியோடு வெளிப்படுவான். பெரும் சத்தங்களையும், கலவரத்தையும், குழப்பத்தையும், ஆபத்துகளையும் சதா சந்தித்த அவன் விநாடிகள், நேர் எதிராக நிரந்தர அமைதி தேங்கி நின்ற இந்தப் பாறையின் நடுவில் நிலைத்திருந்தது கூரையாய்.

கண்டாச்சிபுரம், மேவாலைப்பக்கம் என கல் உடைக்கப் போனவன் இன்னமும் திரும்பவில்லை. காலம் அவனை மீட்டுத்தரும் நம்பிக்கையை இழந்து, அவன் பாறைகளுக்கு நடுவில் மறைந்தது குறித்து அவ்வப்போது எழுந்த கதைகளையும் ஈவிரக்கமின்றி அழித்து, அவன் பாறை வீட்டை ஊராருக்குப் பொதுவாக்கி தந்திருந்தது.
தேங்கிநின்ற மௌனத்தின் மீது, சிறு கல்லெறிந்து பார்க்கவும், அவர்களுக்குள் தயக்கம் இருந்தது. அவனுக்கு எதிரான உரையாடல் மொழி இழந்து, நடுக்கத்திலிருந்தது. இத்தனைக்கும் அவன் கண் திறக்காமலேதான் கிடந்தான். பின்கதவு சத்தமின்றித் திறக்கப்பட்டு, அவர்களைப் பின்புறப் பாறையில் உட்கார்த்தி வைத்தது.
சைகை மூலம் ரெங்கநாயகி கிழவி அழைக்கப்பட்டாள்.

அவர்களின் பேச்சு அவர்களுக்கே கேட்காதவாறு இரகசியமாக்கப்பட்டது. அவன் பிடிபட்டதின் அதிகபட்ச கஷ்டங்களும், அவன் மரணத்தின் அவசியமும் ஓரிரு வார்த்தைகளால் ரெங்கநாயகிக்கு சுருக்கப்பட்டது. விடிகிற பொழுதின் முதல் நாழிகை, அவன் பிணம் எரியூண்டப்பட வசதியாக அவன் மரணம் சௌகரியப்படுத்தப்பட்டது.

பதட்டமற்று இருந்த கிழவியின் முகம் இருளத் துவங்கியது. புள்ளதாச்சி பொம்பளைகளுக்கு குச்சி வைத்து, ரத்தப் பெருக்கில் புரளும் சதைப் பிண்டங்களை வாரி வீசிய கைகள்தான் எனினும் ஒரு முழுமனிதனின் மரணத்தின் எதிர்கொள்ளல் அவளுக்கு நடுக்க மேற்படுத்தியது. சமாளித்துப் பேசினாள்.

“ஊராருக்கு நான் கட்டுப்படுறேன். ஆனா அவனை நேருக்கு நேரா மொகமெடுக்க முடியலை. வண்டி கட்டி என் வூட்டுக்கு ஆளனுப்பின நம்பிக்கையை நான் கெடுக்கலை சாமிகளா. இந்த பகலுக்கும்,மலைகாட்டுல சுத்தி வெஷத் தழ பறிச்சாறேன். என்கூட ஒரு ஆளு இருந்து, இருட்டனப்புறம் பாறையில கொட்டி, ஒட்ட, ஒட்ட அரைக்கணும், ரெண்டு வெண்கலச் சருவச் சட்டி வேணும். சீரா தண்ணி ஊத்தி, தழையை அரைச்சுட்டா போதும். விடியற நேரம் அவன் திமிராம கொள்ளாம நாலு பேரு புடிச்சிக்குங்க, ரெண்டு கையையும் ரெண்டுபக்க சருவ சட்டில தொவைச்சி புடிச்சிக்குங்க. ஒரே ஒரு மணி நேரம் தான். ஆளு வெரைச்சிடுவான்.
நான் ஒத்தை வீட்டு பொம்பளை. அவன் கை கால ஒதைச்சிகிறத பாக்க முடியாது, தழை அரைச்சி கொடுத்ததும் எனக்கு வெடை குடுங்க சாமிங்களா.

யோசனையின் கச்சிதம் எல்லோருக்குமே பிடித்திருந்தது. தலையில் முடி பொசுங்கும் அந்த மத்தியான அனலில், அவளும் சின்னாப்புவும் அனுக்குமலை காட்டுக்குள் நுழைந்து மலை ஏறினார்கள்.
கண் திறக்காமல் கட்டிலில் கிடக்கும் பொட்டு இருளனின் திருட்டுச் சாகசங்கள், அந்த மலைக்காட்டு மத்தியானத்தில் ரங்கநாயகி கிழவிக்குக் கதையாக்கப்பட்டு, பகல் நகர்ந்தது.

அந்தப் பஞ்சத்தின் உக்கிரத்தை சொல்லவாவது சில குழந்தைகளை நெட்டித்தள்ளி ஒதுக்க மிச்சமின்றி, பொசுக்கியது காலம். அந்த ஈரமற்ற நாட்களில் மனிதர்கள் உலர்ந்து, காய்ந்து கருகினார்கள். பிள்ளைப்பெற்ற பொம்பளைகளின் முலைக்காம்புகள், பச்சை குழந்தைகளுக்குச் சொரிவதற்கு ஒரு சொட்டுப் பாலின்றி வெடித்திருந்தன. வளர்ந்த குழந்தைகள், ஈரம் தேடி மலைக் காடுகளின் பாறை நிழலுக்குள் சதா அலைந்து திரிந்தன. வற்றி வெடித்த பூமியின் முகம் கோரமேறி மனிதர்களை விழுங்கிவிடத் தயாராய் இருந்தன. வைத்த ஒவ்வொரு அடியும், பூமியின் வெடிப்பில் விழுந்துவிடாதவாறு எச்சரிக்கை அடைய வேண்டியிருந்தது.
எட்டி மரங்களின் பச்சையும், காய்களின் சிவப்பும் பார்க்கிற எவரையும் ஏமாற்றி, சிரித்து ஏளனப்படுத்தியது. தண்ணி முட்லான் செடிகளின் காய்ந்து போகாத பசுமை, பள்ளிக்கூடம் விட்டகன்ற பிள்ளைகளுக்கு நம்பிக்கையின் மரணத்தைத் தள்ளிப்போட்டு வேடிக்கை காட்டியது.

அவர்கள் காய்ந்த பூமியில் கால் பதித்து, வெறி கொண்டு கிழங்கு தோண்டினார்கள். பூமி தன் இரகசிய மார்பில், தான் தேக்கி வைத்திருந்த தண்ணி முட்லான் கிழங்குகளின் ஈரத்தைத் தன் குழந்தைகளின் நாக்கில் நனைத்து, தன் ஈகையில் நிலைத்தது.

அந்தப் பஞ்சத்தை வகைப்படுத்த முடியாது. தலைமுறைகளில் தப்பிப் பிழைத்திருந்த கிழவன்களும், கிழவிகளுமே பார்த்திருந்திராத பஞ்சமது. அரசாங்கப் புள்ளி விவரங்களுக்குள் வர மறுத்து, ஊர் பொதுத்திட்டில் வைத்து, அளக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு அடங்க மறுத்த பசித்த மனிதர்களைப் போல.

தானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வலைதோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும், கள்ளிகளடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதைகளிலும் பாம்புகளின் எலும்புக்கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்துத் தெரிந்த, ஊர்ந்த அதன் முள்ளெலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.
பிறக்கும் குழந்தைகள் இரத்த பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து, ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டிஇருந்தன. ஒரு சிறு குச்சியின் உராய்வில், ஒரு சிறு கல்லின் விழுதலில்,உடைந்து சிதறும் அதன் மக்கிய ஓட்டின் சத்தமே, நண்டுகளின் வாழ்ந்த காலத்தின் ஞாபகத்தில் மீந்தது.

மலைக்காட்டுப் பாறை பொந்துகள் வெப்பத்தால் வெளியேற்றிய, காட்டுப் பன்னிகளும்,குள்ளநரிகளும், பெரும் கூச்சல்போட்டு பஞ்சம் நெருக்கியிருந்த குரல்வலைகளைத் தங்கள் அகோர சப்தத்தால் நிறுத்தின.
ஆடுகளும், மாடுகளும் வந்த விலைக்கு, கிடைத்த சோளத்திற்கு, கம்பந்தட்டைகளுக்கென்று கைமாறின. பூர்சமரக்கிளைகளில் உரிக்கப்பட்ட ஆடுகளின் வரிசை தெரிந்தது. மக்கள் உப்பு போட்டு அவித்து இறைச்சி தின்றார்கள். ஊராகாலி மாடுகள் யாருமற்ற அனாதைகளாயின. யாரும் யாரையும் தின்றுவிடக்கூடிய கொலை வெறியைப் பஞ்சம் மனித மனங்களில் ஏற்றியிருந்தது. மனிதர்கள் அவர்கள் வீட்டு ஆடுகள், மாடுகள் போல், அவர்கள் மலைகளின் பெருநரிகள் போல் சிரிப்பற்றுப் போன முகத்தோடு திரிந்தார்கள். அவர்களின் ஒட்டுமொத்தத் தேடலும், ஒருசொட்டு ஈரத்தை நோக்கியதாய் மட்டுமே இருந்தது.

அந்தத் துளியூண்டு ஈரம் மாரியம்மனின் கண்களுக்குள் இருப்பதாக உறுதியாய் நம்பினார்கள். அதைத் தொட்டு உணர்ந்துவிடக் குதிர்களைத்துடைத்து, பானைகளை அலசி, கதிர் அறுத்து நாள் கடந்த வயல்களைப் பெருக்கிச் சேர்த்த எட்டு மரக்கா கேவுறும், அஞ்சி படி கம்பும் தான் மாரியம்மனின் கருணை நிறைந்த கண்களுக்குப் படைக்கப்படப் போகும் கூழ் ஊற்றல். நம்பிக்கையின் கடைசிப்படியில் ஒட்டியிருந்த இரவில்தான் பொட்டு இருளன் அதில் கை வைத்து,கையும் களவுமாய்ப் பிடிபட்டது.

அந்த ஊரே விசித்திரங்களால் அடுக்கப்பட்டிருந்தது. கல் மலைகளும், தரையில் படர்ந்திருந்த பாறைகளும், பாறைகளுக்குள் அடங்கி இருந்த குகைகளும், அங்கங்கே தெரிந்த மண் திட்டுகளில் கட்டியிருந்த வீடுகள், தெருக்கள் என்ற ஒழுங்குக்குள் வர மறுத்தன. பாறைகளுக்குள் மறைந்து கொண்ட வெப்பால மரத்து வேர்கள் இக்காய்ச்சலுக்கும் தாக்கு பிடித்தன.

துவரம் மிளாறுகளிலான பட்டிகளில், ஒலித்த ஆடுகளின் குரல்கள், இரவுகளில் படிந்து, அந்த ஊரின் விசித்திரத்திற்கு சப்தமேற்படுத்தி தந்திருந்தது.

பாறையைத் துளைத்து உரல் குடையப்பட்டிருந்தது. எட்டு பங்காளிகளின் வீடேறி, கொண்டு வந்த கம்பு அடிபட்டு மாவாகிக் கொண்டிருந்தது. இடிப்பவளின் முகமே இருண்டிருந்தது. உலக்கையின் நிழலோடு இன்னொரு நிழல் விழுவதைக் கவனித்தாள். கை தானாக நின்று முகம் திருப்பினாள்.
மூன்று பொம்பளை புள்ளையோடு ஒருத்தி. முகம் வேற்றுமுகம். சாயல் அவளூர் சாயல் இல்லை. கெழக்கத்தி கூட்டமா? நிதானிக்க முடியவில்லை.

பார்வையால் அவர்கள் நால்வரும் பாறையில் திரண்ட, பச்சை மாவைத் தின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பார்வைகள் மீறி, மாவிடித்தலுக்குக் கைகள் வலுவற்று இருந்தன.

‘என்ன தாயீ பாக்கற?’ பதிலற்ற கேள்விகள் தொடர்ந்தன.

கெழக்கத்தி பொம்மனாட்டியா நீ?

‘கழுத்துல ஒண்ணேயும் காணோம். புருஷன் செத்துட்டானா? இந்தப் பஞ்சத்துல எவன் பொழைச்சான்?’
அவளின் தொடர்ந்த கேள்விகள் எதிர் நிற்பவளின் கறுத்த முகத்தில் மோதி, பாறைகளில் விழுந்தன.பசியின் பார்வைகள் பச்சை மாவைக் கேட்பது போல் அவள் உணர்ந்து,

“மாவு வேணுமா?”

“ஆமா என் புள்ளைங்களுக்கு, கூழுக்கு, மாவுகரைக்க மாவு தர்றீயா? நாளைக்கே திருப்பி தர்றேன்.’’

“அதெப்படி நாளைக்கே திருப்பி தருவெ? இங்க என்ன மழை ஊத்தி, வெள்ளம் பொத்து,வெள்ளாமையை அறுக்க முடியாம அருவா ஒடிஞ்சி ஒலக்கடத்துக்கா நடக்கறோம்.’’

“நாளைக்கு திருப்பி தந்துடுவேன்.’’

அவள் குரலில் தெறித்த உறுதி இவளை நிலை குலைய வைத்தது.

“அதான் எப்படி?”

“நாளைக்கு சத்திமா திருப்பி தந்துடுவேன். என் புள்ளைங்க வயிறு குளிரணும் தாயி..’’

அவள் குரலில் குழைந்திருந்த கனிவும் அதுவரை அவள் கேட்டிராதது.

நிமிடத்துக்கு நிமிடம் வேறுபட்ட அவள் வார்த்தைகளுக்கு இவள் ஆச்சரியப்பட்டாள்.

அந்த வார்த்தையில், காய்ந்து வெடித்திருந்த அவள் முலைக் காம்புகள் பால் சொரிந்தது மாதிரி உணர்ந்தாள்.

“சட்டி வச்சிருக்கியா தாயி?”

அவள் மூத்த மகள் கருஞ்சட்டியை நீட்டினாள். கம்பம்மாவு சட்டியில் நிரம்பியது.. போட.. போட.. நிரம்புகிறது.. இன்னும்.. இன்னும்.. பாறையின் குழி அவள் மார்மாதிரி சுரந்து, நிரம்பிக் கொண்டே இருக்கிறது.. அவள் இடக்கண் முந்திக் கொண்டு ஒரு சொட்டை உதிர்க்கிறது.
காலம் கருணையில் நிரம்பி வழிந்தது.

உச்சி மத்தியானத்தில், மாரியம்மன் சிலையின் இடக் கண்ணிலிருந்து ஒரு சொட்டு விழுந்ததை கூட்டாத்தான் பார்த்ததைத் திருப்பி, திருப்பி சொல்லிக் கொண்டிருக்க, தலைமுடி பொசுங்க, மலைக் காட்டில் விஷத்தழைபறிக்க அலைந்த ரங்கநாயகியின் நெற்றிப் பொட்டில் அத்துளி விழுந்தது.

பூமியை இருளின் நாக்கு ஒரே நொடியில் கவ்விக் கொண்டது. வானம் கிழித்து ஊற்றுகிறது. எதன் பொருட்டும் அதன் உக்கிரம் குறைய வழி இல்லை. மரங்கள் முறிய, பாறைகள் கரைய, நீரின் வன்மம், விநாடிக்கு விநாடி அதிகரித்துக் கொண்டே போகிறது. மலர்தலுக்குப் பதிலாக மனித முகங்களில் பீதி பற்றிக் கொண்டது.
இனி விடிதலுக்கான, சாத்தியமற்ற இருள் அது. மழையினால் பூமியைத் தின்ன, வெறி பிடித்து வானம் வாய்பிளந்து நிற்கிறது.

மடியில் பறித்த விஷத்தழைகளோடு, பாறைச்சுனையில் ரெங்கநாயகி கிழவி மல்லாந்திருந்தாள். விஷத்தழை ஊறின உடல், யானையளவிற்குப் பெருத்து மிதந்தது.

சின்னாப்பூ அனுக்குமலைக் காட்டில் ஏதாவதொரு பாறையிடுக்கில் குரல்வலை அறுபட்டுக் கிடக்கக் கூடும்.
நீரின் வன்மம் பெருகிக் கொண்டே போகிறது. இத்தனை வருடத்து பூமியின் வெடிப்பை, ஒரே நொடியில் இட்டு நிரப்பிச் செல்கிற காலத்தின் விசித்திரத்தில் ஊர் கிடந்தது.

கதவிடுக்குகளின் இடைவெளிகளில் பார்த்த கண்களுக்கு நீரின் மட்டம் பாறைகளில் தெரிந்தது.
ஒரு நீண்ட ராத்திரியின் மிச்சத்தில் மாட்டி, ஒரு பகல் முழுக்க கண் திறக்காத பிடிவாதத்தில் கிடந்த பொட்டு இருளனை, மழை தான் எழுப்பியது. சுற்றிலும் ஆட்களற்ற பாண்டு ஒட்டனின் வீடு,அவனை பெரிதும் பயமுறுத்தியது. மரணவெறி கொண்ட சில மனிதர்கள் கூடப் பக்கத்தில் இருந்தால் தேவலாம் போல் உணர்ந்தான். இந்தப் பிரளயத்தை மூழ்கடிக்கும் வல்லமையோடு மல்லுக்கட்டும் மழை கொடுத்த தனிமை அவனால் தாங்கிக் கொள்ள முடியாததாய் இருந்தது. விசித்திரமான ஒலிகளை மாற்றி மாற்றி எழுப்பித் தன் தனிமையை வென்றுவிட முயன்றான்.

தலை விரித்தாடிய தாண்டவம் முடிய ஒரு முழு இரவு தேவைப்பட்டது. வானத்திலிருந்து சொட்ட இனி ஒரு துளியும் மீதியில்லை என்ற உறுதியில் அது தன் கோர ஆட்டத்தை நிறுத்தினபோது,விடிந்தது. இரவில் நீடித்த வன்முறையில் நிலவும், நட்சத்திரங்களும் எங்காவது தெரித்து விழுந்திருக்கலாம்.
அவர்கள் பத்திருபது பேர், ஈரப் பாறைகளில் கால் மாற்றி, கால் மாற்றி வைத்து, பாண்டு ஒட்டனின் வீட்டை அடைவதற்குப் பல மணி நேரம் தேவைப்பட்டிருந்தது.

ராக்கண் விழித்து, பெரும் கலக்கத்திலிருந்த அவனுக்கு அவர்களைப் பார்த்த விநாடி, மீண்டும் தான் மரணத்தின் பற்களில் நசுங்கப்போகும் கனம் நினைவு வந்துவிட்டது. ஆனால் தெப்பலாக நனைந்திருந்த அவர்களின் முகங்களில் தெரிந்த கருணை, ஒரே கணத்தில் அந்த நினைப்பைப் புரட்டிப் போட்டது.
ஒரு குழந்தை மாதிரி மலங்க மலங்க அவன் அவர்களைப் பார்த்தான்.

காசிரிக்கா நாரின் இறுக்கம் தளர்த்தப்பட்டு, கட்டு அவிழ்க்கப்பட்டது. புஜத்தில் கசிந்த ரத்தம் கண்டு அவர்களில் பலர் “இச்’’ கொட்டினார்கள். நடப்பது குறித்த பிரக்ஞையற்று இருந்தான்.

அவர்கள் முகங்கள் வன்மமற்று, குழந்தை முகங்களாகி, புன்னகை புனைந்திருந்தது.
“இனி ஜென்மத்துக்கும் திருடாத. மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா. போ போய் பொழைச்சிக்க’ எல்லோர் குரலும் நனைந்திருந்தது.

அலைகள் மாதிரி, நீர் தளும்பிய சத்தம் கேட்டுக் கொண்டே ஏரிக்கரையின் முடிவிலிருந்த தேவதானப்பேட்டை மலை மீது கால் வைத்து நிமிர்ந்தான்.

வெள்ளம் மலை முழுக்க, சிறு அருவிகளாகி இறங்கிக் கொண்டிருக்கும் பேரழகை எதிர்கொண்டு ஏறுகிறான். நீர்த்துளிகள் முகத்தில் மோதி, சிதறி மலையில் தெறிக்க, தெறிக்க… ஏறித் திரும்பினான்.
ஊர் ஈரத்தில் நனைந்திருந்தது.

[16-5-2014 முதல் 18-5-2014 வரை ஊட்டியில் நிகழ்ந்த குரு நித்யா நினைவு இலக்கியச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட கதை]

   https://www.jeyamohan.in/55388#.W6VXbqTTVR4

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.கதையில் வர்ணனைகள் தூக்கலாக இருக்கு....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தரிப்பு இல்லாமல் வாசகரை கதையின் களத்திற்கு அழைத்துச்செல்ல முடியாதுதானே. அது சுவியருக்கு நன்றாகத் தெரியும்!

இந்தக் கதையில் மரணதண்டனை கொடுக்கவிரும்பிய ஊர்மக்கள் மழைக்குப் பின்னர் மனம் மாறியதற்கு என்ன காரணம் என்பதுதான் வாசகரிடம் நிற்கும்.  வர்ணனைகள் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.