Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நள்ளிரவு!… அ.ந.கந்தசாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவு!… அ.ந.கந்தசாமி.

   

சிறப்புச் சிறுகதைகள் (14) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – அ.ந.கந்தசாமி எழுதிய ‘நள்ளிரவு’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்.

thumbnail_%E0%AE%85.%E0%AE%A8.%E0%AE%95%

‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான் அவன் சர்வதாரணமாக.அவன் பேச்சிலே துக்கமோ, துயரமோ, அல்லது ஏக்கத்தின் ரேகைகளோ தென்படவில்லை. அமைதியாகவும் ஒருவித விரக்தியோடும் பேசினான் அவன். என் மனதிலே சுந்தராம்பாள் பாடிய ‘சிறைச்சாலை ஈதென்ன செய்யும்’ என்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப்பாட்டிலே கூறப்பட்ட ‘சரீராபிமானமற்ற ஞான தீரரில்’ இவன் ஒருவனோ என்று என்னுள் நானே கூறிக்கொண்டேன். ஆனால் அவன் பேச்சில் விரக்தி மட்டுமல்ல ஒருவித ஆனந்தம்கூட அலை வீசியது. ஜெயிலுக்குப் போவதற்கா இவ்வளவு தூரம் சந்தோசப்படுகிறான் என்று எண்ணினேன் நான்.என்னுடன் பேசிய ‘அவன்’ ரொம்பக்காலம் என்னுடன் பழகியவன் அல்ல. அன்றுதான் அகஸ்மாத்தாக அவனைச் சந்தித்தேன். இரவு சினிமாவில் இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு தன்னந்தனியாக கொழும்பு நகரில் எனது அறையை நோக்கி வந்துகொண்டிருந்தேன். அப்போழுது திடீரென எங்கள் நட்புக்குதவியாக மழை பொழிய ஆரம்பித்தது. நான் ஓடோடிச் சென்று, மெயின்ஸ்ரீட்டும், பூந்தோட்ட வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டடத்தில் ஒடுங்கிக்கொண்டேன். பழைய கிறீஸ்தவ தேவாலயங்களைப் போல் பிரமாண்டமான வளைவுகள் உள்ள வராந்தாவுடன் கூடிய இக்கட்டடத்தைப் பல தெருத்திகம்பரர்கள் தமது திருப்பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம் என்பதை அப்படி ஒதுங்கியபோதுதான் தெரிந்துகொண்டேன்.

அங்குமிங்குமாய் சிலர் நீட்டி நிமிர்ந்தும் மடங்கி முடங்கியும் கூனிக் குறுகியும் படுத்துக் கிடந்தார்கள். ஒருசிலர் நித்திரையாகிவிட்டார்கள். இன்னும் சிலர் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் சிலர் மெல்லிய குரலில் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள். நான் அங்கே ஒதுங்கி ஒருசில வினாடிக்குள் மழையின் வேகம் அதிகரித்தது. சாரல் வராந்தாவின் உள் சுவர்வரை வீசி அடித்தது. படுத்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். அங்குமிங்குமாக தமது படுக்கை இடங்களை மாற்றிக் கொண்டார்கள், அல்லது மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அந்தக் காட்சி எல்லாம் எனக்குப் புதுமையாகவும் கவர்ச்சி நிறைந்ததாகவும் தோன்றியது. அவற்றைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுதுதான் அங்கு மழையோடு போட்டி போட்டு வந்து வராந்தாவில் ஏறினான் அவன். பக்கத்திலே சந்தியிலிருந்த மின்சார வெளிச்சம் மழையால் மங்கி இருந்தபோதிலும் வராந்தாவில் ஒரு சிறிது வீழ்ந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்திலே அவனைக் கவனித்தேன். உற்சாகமான சிரித்த முகம். சுத்தமான ஷர்ட்டும், கோடுகளிட்ட வெள்ளைச் சாரமும், இடையில் ஒரு புலித்தோல் பெல்ட்டும் காட்சி அளித்தன. வயதில் வாலிபன். நன்றாக நனைந்து போயிருந்தான். ‘இழவு பிடித்த மழை!’ என்று கூறிய அவன், என்னைப் பார்த்து “நீங்கள் மழையினால் இங்கு அகப்பட்டுக் கொண்டீர்களோ?” என்று கேட்டான். “ஆம்” என்றேன். அத்துடன் சம்பாஷிப்பது அந்த நேரத்திலே டானிக் போல உற்சாகம் தருவதாய் இருந்ததாலதனைத் தொடர விரும்பி “நீ எங்க அவசரமாய் போகின்றாய்?” என்றேன் சுமுகமாய்.

அவன் சிரித்தான். “இதுதான் எனது மாளிகை! படம் பார்த்துவிட்டு வருகிறேன், படுப்பதற்கு” இப்படியாக ஏற்பட்ட பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, எவ்விதமாகவோ வளைந்து வளைந்து சென்றது. அவன் நான் யார், எங்கிருக்கிறேன் என்பதையெல்லாம் விபரமாகக் கேட்டான். நான் பத்திரிகை ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவன் என்றால் அவன் பயந்து திகைத்து விடுவானோ என்று அஞ்சி ஒரு கடையிலே சேல்ஸ்மேன் என்று கூறினேன். பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் சர்வசாதாரணமாக கஞ்சாச் சுருட்டொன்றைப் பற்றவைப்பதகாக அதற்கு வேண்டிய முஸ்தீபுகளைச் செய்ய ஆரம்பித்தான். மடியில் கஞ்சாவை எடுத்து கையில் வைத்துக் கசக்கினான். பின்னால் சிகரட்டைச் சீர்குலைத்து அதனுள்ளே அதைப் பொதிந்தான். என்னைப் பார்த்து “நீங்கள் கஞ்சா பிடிப்பதில்லையா?” என்றான் சிரித்துக் கொண்டு. “இல்லை” என்ற பாவத்தை முகத்தில் பரவவிட்டேன். “குளிருக்குக் கொஞ்சம் சூடேற்றிக் கொள்ளலாம், குடித்துப் பாருங்கள்” என்று வற்புறுத்தினான். அவன் பேச்சு, அவன் புன்னகை எல்லாமே என்னை அடிமை கொண்டிருந்தன. குடித்துத்தான் பார்ப்போமே என்று சிகரெட்டை வாங்கினேன். அவன் தன் கையிலிருந்த நெருப்புப் பெட்டியால் பற்றிவைத்து விட்டான். கஞ்சாப் புகையை உள்ளே இழுத்தேன். அந்தக் குளிருக்கு அது சிறிது தெம்பு தரத்தான் செய்தது. மழையோ இப்போது மேலும் அடித்துப் பெய்யத் தொடங்கியது. பொட்டுப் பொட்டாக ஆங்காங்கு பரந்து கிடந்த மின்சார வெளிச்சத்தில் தார் ரோடு எண்ணெயால் மெழுகியதுபோலப் பளபளத்தது. எனக்குப் போதை உண்டாகியதோ என்னவோ தெரியாது; ஆனால் மஸ்துப் பொருட்களின் போதைக்கு ஒரு அபூர்வசக்தி உண்டு. மனிதனின் தன்னுணர்ச்சியையும், வெட்கத்தையும், பயத்தையும் போக்கடித்து விடுகிறது. இதன் காரணமாகத்தான் சிலர் போதையின் வயப்பட்டதும் வேதாந்தம் பேசுகிறார்கள்.

பயத்தாலோ வெட்கத்தாலோ அவர்கள் உள்ளக் கூஜாக்களில் அடைபட்டிருந்த வேதாந்தம் மெல்ல மெல்ல வெளியே கிளம்ப லாகிரிப்போதை மூடியைத் திறந்து விடுகின்றது. நானும் நண்பனும் அளவளாவிப் பேசிக்கொண்டிருந்தோம். நான் ஐந்தாறு தடவை கஞ்சாவை இழுத்த பின்னர் குறைச் சிகரட்டை அவன் வாங்கிக் கொண்டான். நான் கேட்டேன்: “நீ நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன் என்றாயே, ஏன் போகிறாய்? என்ன குற்றஞ் செய்தாய்?” அவன் சிரித்தான். “அதோ பார்த்தீர்களா ஒரு பெண் முடங்கிப் படுத்திருக்கிறாள்! அவளைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு” “ஒருநாளிரவு கள்ளுக்கடை முடுக்கிலே அவளைப் பலாத்காரம் செய்கையில் பொலிசார் பிடித்து வழக்குப் போட்டுவிட்டனர்” என்று கூறி அவன் கலகலவெனச் சிரித்தான். “யார் அந்தப் பெண்?” என்றேன் ஆவலுடன். “அவளா? யாரென்று யாருக்குத் தெரியும்! ஆனால் அவள் பக்கத்திலே படுத்திருக்கிறதே குழந்தை, அது என் குழந்தைதான்!” “அப்போ அவள் உன் மனைவியா?” அவன் முகத்தைச் சுளித்தான். “அவள் எல்லோருக்கும் மனைவிதான். ஆனால் என்னிடம் மட்டும் அவளுக்குச் சிறிது அதிகப் பிரியம்! நானும் அப்படித்தான்!” எனக்கு ஒரு விசயம் ஒரே புதிராகிவிட்டது. கஞ்சா மயக்கத்தில் முன்னுக்குப் பின் முரணாக அவன் பேசுகிறானோ, அல்லது எனக்குத்தானவன் ஒன்றுபேச வேறொன்று கேட்கிறதா என்ற சந்தேகம் ஜனித்தது. எனது நண்பன் இப்பொழுது அந்தப் பெண்ணிருந்த பக்கத்துக்குச் சென்றான். நிச்சிந்தையாகத் துயின்று கொண்டிருந்த அவளுக்கு அருகில் சென்று, “பேபி பேபி” என்று கூப்பிட்டான். அதை அவள் எதிர்பார்த்துத் துயின்றுகொண்டிருந்தவள் போல எழுந்து உட்கார்ந்தாள். கண்களை கசக்கி விட்டுக் கொண்டாள். பின் அவர்கள் இருவரும் ஏதோ சில வார்த்தைகள் குசு குசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். இரண்டு நிமிஷத்தில் நண்பன் மீண்டும் என்னிடம் வந்தான். அவன் கையில் வெற்றிலை பாக்கு நிறைய இருந்தது. “நீங்கள் வெற்றிலை பாக்கு போடுவீர்களா?” என்று என்னிடம் கேட்டான் அவன். நான் வெற்றிலை பாக்குப் போடுவதில்லை. என் மனதில் ஆச்சரியமும் இந்த வினோதமான காதலர்களின் தன்மையை அறிவதில் அவாவும் அதிகமாகி இருந்தது. இவர்கள் காதலர்களா? அல்லது பலாத்கார வழக்கிலே சம்பந்தப்பட்ட இ பகைவர்களா? அவன் கூறுவதின்படி அவர்கள் இண்டுமென்று அர்த்தமாகிறது. குளிர்ந்த நீர் கையை வைத்ததும் கையைச் சுட்டது என்று கூறுவது போல் இந்தது, இத வினோதச் செய்தி. இன் பூரா விபரங்களையும் அறிய வேண்டுமென்ற ஆவல் அடக்க முடியாமல் என் மனதிலே கிளம்பியது. மீண்டும் சம்பாஷணையில் ஓட்டத்தை உண்டாக்குவதற்காக “நீ என்ன தொழில் செய்கிறாய்?” என்று அவனிடம் கேட்டேன். அவன் அர்த்தபுஷ்டியுடன் புன்னகை புரிந்தான். “தொழில் எதுவென்றிருக்கிறது? எப்படியும் ஜீவனோபாயம் நடந்தாற் சரிதானே?” என்று வேதாந்தி போல் பேசினான் அவன். “அப்படியானால்..” என்று ஆரம்பித்த வசனத்தை பூர்த்தி செய்யாது நிறுத்தினேன் நான். அவன் சிரித்தான்.

மழை இப்பொழுது முன்னிலும் திடீர் வேகத்தோடு பெய்ய ஆரம்பித்தது. இடிகள் வானவெளியிலே உருண்டுருண்டு சப்தித்தன. வானம் தன் மூடிய கண்களைத் திறந்து உலகை ஒருதடவை பார்த்து பின் படீரென்று இமைக் கதவுகளை மூடிக்கொள்வது போல மின்னல் ஒன்று பளிச்சிட்டு மறைந்தது. எனக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. புத்திசாலியாகவும், நேர்மை உள்ளவனாகவும் தோன்றும் இவன் பிக்பாக்கட்டா? ம். அவன் நேர்மையுள்ளவன்தான். இல்லாவிட்டால் தான் பிக்பாக்கட் என்பதைக் கூறிவிடுவானா? இந்த முடிச்சுமாறிக்கும் சமூகத்தின் இதர கள்வர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அவர்கள் தம் போக்கை மூடி மறைத்துக் கண்ணியம் நிறைந்தவர்களாக நடிக்கிறார்கள். இவனோ உண்மையைக் கூறிவிடுகிறான். இதன் காரணமாக என் உள்ளத்தில் ஒரு மகாத்மாவாக, சத்தியவந்தனாகத் தோன்றினான் அவன். “அப்படியானால் உனக்கு ஒழுங்கான வருமானம் கிடைக்காதே! ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பாய்?” என்று சாதாரணமாகக் கேட்டேன். உலகத்திலே எல்லோரும் பிக்பாக்கட்டைப் பற்றிப் பேசுகிறார்கள். ட்ராமிலும், பஸ்ஸிலும், சினிமா நெருக்கடியிலும், அங்கிங்கெனாதபடி நிறைந்திருப்பவன் போல, நகரத்தில் மடியில் கனமுள்ள எவரும் அவனை ஞாபகப்படுத்தி அஞ்சிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஆயிரத்தில் ஒருவனுக்குத்தானும் அவன் நேரில் காட்சியளிப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒருவகை உடையைக் கொண்டு இவன் பிக்பாக்கட்டாயிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறதே அல்லாமல் நிச்சயம் செய்து கூறுவதற்கில்லை. பழைய காலத்து ‘சதாரம்’ நாடகத்தில் கள்ள உடைபோட்டு ‘கொள்ளையடிக்க போவோமடா’ என்று பாடிவரும் கொள்ளைக்காரர்கள் நாடகத்திற்குத்தான் சரியேயல்லாமல், வாழ்க்கையில் நாம் காணக்கூடியவர்கள் அல்ல.

பிக்பாக்கட்டுக்கள் தீயணைக்கும் வீரர்கள் போல் அதற்கென்றுள்ள உடையை உடுத்துக்கொண்டா தமது தொழிலுக்குப் போகப் போகிறார்கள்? – பார்க்கப்போனால் கடவுள் போல் இவர்களும் பலர் மனதிலே அரூபிகளாகத்தான் விளங்க முடியும். ஒரு சிலர் பிடிபடுவதும் உண்மைதான்! ஆனால் அவர்கள் உண்மைக் குற்றவாளிகள்தாம் என்பதை யார் கண்டார்கள்? என் மனதிலும் ‘பிக்பாக்கெட்’ என்பவன் நகரில் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் ஒரு அரூபியாகத்தான் இதுவரை இருந்தான். ஆனால் இப்பொழுதோ என் கண்முன் காட்சி தந்துவிட்டான். என்புதோல் போர்த்த சதையுடம்புடனே நிற்கும் அவனது அந்தரங்கங்களை எல்லாம் கூடிய அளவு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை, அந்த ஆசையில்தான் ‘எவ்வளவு சம்பாதிப்பாய்?’ என்ற கேள்வி என் உள்ளத்தில் ஜனித்து வாயினால் வெளிப்பட்டது. “மாதம் முடிந்ததும் இவ்வளவு கிடைக்கும் என்று நிச்சயமாய்ச் சொல்லக்கூடிய தொழிலல்ல இது. சில சமயம் ஒன்றுமே கிடைக்காது.” எனக்கு இதிலே மனம் படியவில்லை. என் உள்ளத்தை அலைக்கழித்த அந்தப் பெண்ணின் விவகாரத்திற்கு எப்படி வருவது என்று தெரியவில்லை. இருந்தும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு “ஆமாம், நீ நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறாயே, உனக்கு கவலையாய் இல்லையா? பயம் கிடையாதா?” என்று அந்தத் திசைக்கு சம்பாஷணையைத் திருப்புவதற்குச் சாதகமான முறையில் என் பேச்சை ஆரம்பித்தேன். அவன் இதற்கும் தன் புன்னகையுடனேயே பதிலளித்தான். “பன்னிரண்டாவது தடவையாக ராஜா வீட்டுக்குப் போகிறேன், பயமா? எதற்கு?” என்றான் அவன்.

ஆரம்பத்திலிருந்தே அவன் பேச்சு, செயல் எல்லாம் எனக்குப் புதுமையாயிருந்தன. ஆனால் இப்பொழுதோ அந்தப் புதுமையின் உச்சியை நான் எட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. அவன் மேலும் தொடர்ந்தான். “ஜெயிலிலே எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான். உண்மையில் அங்கிருந்து நான் வெளியே வந்து ஒண்ணரை மாதந்தான் ஆகிறது. பத்துப் பன்னிரண்டு பேர்களைத் தவிர அனேகமாக மற்ற நண்பர்களெல்லாம் இன்னும் அங்குதான் இருப்பார்கள்..” ஏதோ நண்பர்களைச் சந்திக்க வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு செல்லும் ஒருவன் போல அவன் பேசினான். மறியற்சாலை அவனைத் தன் இருண்ட அறைகளைக் கொண்டு பயமுறுத்தவில்லை. அவன் வர்ணனையைப் பார்த்தால் அவனை அது மயக்கி அழைப்பது போலத் தெரிந்தது. நான் அவன் முகத்தை நோக்கினேன். கஞ்சா நெருப்பு இப்பொழுது தன் முடிவான கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. மழை நேரத்தில் குளிர்ந்த பாரமான காற்றினாற் போகும் புகை விரைவாக மேலெழுந்து மறையவில்லை. ஆறுதலாக சுருள் சுருளாக மாடிப்படிகளில் சிரத்தையோடு ஏறும் ஒரு குழந்தை போல மெல்ல மெல்ல எழுந்து கொண்டிருந்தது. அதனூடாக அவன் கண்களைப் பார்த்தேன். அதில் ஒளியும் இன்பமும் அலைவீசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், ஆச்சரியம் மேலும் அதிகமாகியது. “அப்போது சிறைக்குப் போவது உனக்குப் பிரியமென்று சொல்லு!” “சந்தேகமில்லாமல்”

“ஏன்? அங்கே என்ன அவ்வளவு விஷேசமிருக்கிறது?” “என்ன இருக்கிறதா? அப்போது உங்களுக்குச் சிறையைப் பற்றி ஒன்றுமே தெரியாதென்று சொல்லுங்கள்” குருவின் சொற்களை ஆவலுடன் எதிர்நோக்கும் பக்தி நிறைந்த ஒரு சிஷ்யன்போல அவன் வார்த்தைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். “இந்த மழை ஓய்ந்ததன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டுக்கோ கடைக்கோ செல்வீர்கள். அடைமழை இரவுக்கும் நித்திரைக்கும் நல்ல பொருத்தம். நன்றாகத் தூக்கம் வருமல்லவா?” நான் தலையை ‘ஆம்’ என்ற பாவனையில் அசைத்தேன். “எனக்கும் தூக்கம் வரும். ஆனால் துங்கத்தான் இடமில்லை! பார்த்தீர்களா நமது மாளிகை எப்படி ஈரமாய் போய்விட்டதென்று.” கதை சுவாரஸ்யத்தில் ஈடுபட்டிருந்த நான் அப்போது தான் நிலத்தை நோக்கினேன்; காலிலே செருப்பு அணிந்து இருந்ததால் சுற்றிலுமிருந்த ஈரம் என்னை அவ்வளவாகத் தாக்கவில்லை. அவன் கால்களை நோக்கினேன். அவை ஈரத் தரையில் பதிந்து சிறிது வெளிறி இருந்தன. குளிர்ந்த காற்றொன்று மழைச் சாரலை உள்ளே அடித்து வீசியது. உடம்பிலே சிலிர்ப்பும் நடுக்கமும் சிறிது தோன்றின. “நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?” என்று என்னை விசாரித்தான் அந்த அதிசய நண்பன். “சாப்பிட்டுவிட்டுத்தான் படம் பார்க்கக் கிளம்பினேன்” என்றதும் அவன் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். எதையோ பேச அவன் கூச்சமடைந்தானென்று தெரிந்தது.

பேசிக்கொண்டிருந்தவர்கள் மெளனமாகியதும் காதிலே மழையின் ‘ஓ’வென்ற இரைச்சல் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அந்த ஓசையிலே ஒரு தனிமையுணர்ச்சி இருப்பது போல எனக்குப் பட்டது. வானம் யாரை நினைத்து இவ்வளவு கண்ணீரையும் கொட்டி ஓவென்று அழுதுகொண்டிருக்கிறதோ? என்ற வினோதமான கற்பனை என் மனதிலே தோன்றியது. “நீ சாப்பிட்டு விட்டாயா?” என்றேன். “இன்று இந்தக் கஞ்சாவோடு சரி! ஒரு டீ அடித்துவிட்டுப் படுக்க வேண்டியதுதான்! ஆமாம், நீங்கள் கேட்டீர்களே, ஜெயிலிலே என்ன சுகமென்று. நேரத்துக்கு உணவு! இது போன்ற அடைமழை நேரத்தில் இருண்ட சிறைச்சாலை ‘கம்’ என்றிருக்கும். நல்லாக நித்திரை வரும்! அந்தக் கருங்கற் சுவர்களை மீறிக் குளிர் உள்ளே நுழைந்துவிட முடியாது..” நான் திகைத்து விட்டேன்.

அடிமைத்தனத்திலே கிடைக்கும் சுகத்தை விரும்பிய இவன் சிறையை நாடுகிறான்! என் மனதைச் சிறிது நேரத்தின் முன் கவர்ந்து நின்ற அவனது உருவம் இப்பொழுது வெறுக்கத்தக்கதாகத் தோன்ற ஆரம்பித்தது. இப்படியும் ஒரு மனித ஜன்மம்! ஒருவேளை ஆகாரத்துக்காக தனது சுதந்திரத்தையே விற்கத் தயாராகி விடுகிறதா? “அப்படியானால் உன் சுதந்திரம் பறிபோவதைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா?” என்றேன் நான். “சுதந்திரம்!.. ஜெயிலுக்குப் போனதும் அடுத்த வேளை உணவு எங்கே கிடைக்கும் என்பது போன்ற கவலையிலிருந்து விடுதலை கிடைக்குமல்லவா?” என்றான் அவன். என் சிந்தனையில் புதிய அலைகளைக் கிளறிவிடும் அவன் பிக்பாக்கட் என்று என்னால் நம்ப முடியவில்லை. என் உள்ளத்திலே மீண்டும் மோகனரூபம் பெற்றான் அவன். “அப்படியானால் ஜெயிலுக்குப் போக நீயேதான் சந்தர்ப்பத்தை சிருஷ்டித்துக் கொண்டாயா?” அவன் இதற்கும் தன் சிரிப்புடனேயே பதில் தந்தான். அவனது கசந்த வாழ்விலே எப்படி இந்தச் சிரிப்பென்னும் இனிமை உதயம் ஆகிறது என்று ஆச்சரியப்பட்டேன் நான். “ம் அந்தப் பெண்ணின் ஒத்தாசையால் அது முடிந்தது. நான் என்ன சொன்னாலும் அவள் அதை மறுக்கமாட்டாள். அவளுக்கு என் மீது அவ்வளவு பிரியம். அன்று பொலீஸ்காரர் ரோந்துவரும் நேரத்தில் பலாத்கார நாடகத்தை நடத்தினோம். அவள் பலே கெட்டிக்காரி. ‘டவர்ஹால்’ நடிகைகள் கூட அவள்மாதிரி நடிக்க மாட்டார்கள்! அவ்வளவு கூச்சல் போட்டாள் அவள்.. அடுத்த நாள் கோட்டில் ஜரானோம்” என்று கூறிச் சற்று நிறுத்தினான் அவன். “அங்கே குற்றத்தை ஒப்புகொண்டாயாக்கும்” என்றேன் நான். “இல்லை! நாளைத் தவணையன்றுதான் ஒப்புக்கொள்ளப் போகிறேன்” என்று விளக்கினான் அவன். இதுவரை பிணையிலிருந்து வருவதாகவும் அவனது கோஷ்டியில் ஒருவன் இப்பொழுது வர்த்தகத் துறையில் சிறிது முன்னேறி வந்ததாகவும் அவனே தனக்குப் பிணை கொடுக்க முன்வந்ததாகவும் மற்ற விபரங்களையும் தெளிவுபடுத்தினான். “நாளை குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த பட்சம் ஆறுமாதம் சிறைவாசம் நிச்சயம்!” விஷமம் செய்து ‘ஓ’வென்று கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்த இளம் சிறுமி ஒருத்தி படிப்படியே காரம் குறைந்து பின்னர் நீண்ட நேரம் சிணுங்கிக்கொண்டு உட்கார்ந்து விடுவது போல வேகமும், வலியும் குன்று மழை மந்த நடை போட்டுக் கொண்டிருந்தது. என்னுடைய உள்ளத்தில் தாண்டவமாடிய பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விட்டதால், அங்கும் சிந்தனைக்குகந்த ஒரு மந்தமான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.

மணிக்கூண்டுக் கோபுரம் சமீபத்தில்தான் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். இரண்டு மணிக்கு பதினைந்து நிமிசங்கள் இருந்தன. ஒரு கூப்பிடு தொலைவில் தேநீர்க்கடை இருந்தது. தூறலிடையே அங்கு நண்பனையும் அழைத்துச் சென்று தேநீர் அருந்தினேன். நானே தேநீருக்குப் பணத்தைச் செலுத்தினேன். கடையிலிருந்து வெளியே வரும்போது மழை முற்றாக நின்று விட்டது. அவனிடம் விடைபெற்றுக்கொண்டு நான் ஜம்பட்டா வீதியில் உள்ள என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். சிறையை விரும்பி அங்கே செல்ல முனைந்த அந்த இளைஞன் எழுப்பிய எண்ணங்கள் மனதிலே சுழன்று கொண்டிருந்தன. அவன் கல்லால் ஆகிய சிறையை விரும்புவது நாட்டிலுள்ள பசி பட்டினி என்னும் சிறைகளிலிருந்து ஓரளவு விடுபடவே என்பதை நினைத்ததும் தான் அச்சிறைகள் எவ்வளவு பயங்கரமானவை என்பது எனக்குத் தெரிய ஆரம்பித்தது. குற்றம் புரியாமலே குற்றம் புரிந்ததாகச் சட்டத்தை ஏமாற்றி அதனால் கிடைக்கும் தண்டனையை அடைந்து சுகிப்பதற்கு ஒருவன் முன்வருகிறான் என்றால் அது நம் சமுதாய அமைப்பின் ஓட்டையையே காட்டுகிறது என்ற எண்ணமும் என் உள்ளத்தில் பளிச்சிட்டது.

வீதியிலே யாருமில்லை. என் செருப்பின் சப்தம் மட்டுமே என்னைப் பயமுறுத்துவதுபோல ஒலித்துக் கொண்டிருந்தது. யாரோ ஒருவன் ஒரு குறுக்குத் தெருவில் இருந்து ஒரு ‘கொக்கை’த்தடியுடன் அங்கே பிரசன்னமானான். மழையின் காரணமாக எங்கோ ஒதுங்கி இருந்து விட்ட நகரசபையின் இருட்டடிப்புத் தொழிலாளியான அவன் மின்சாரதீபங்களை அணைத்துச் சென்று கொண்டிருந்தான். இருளின் தூதுவனாக நடந்து கொண்டிருந்த அவன் மக்கள் வாழ்வில் இருளைப் பரப்பி நின்ற இன்றைய சமுதாயத்தைத்தான் எனக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருந்தான்! “உழைக்கப்பிறந்தவர்கள்”  

1950

 

http://akkinikkunchu.com/?p=65003

  • கருத்துக்கள உறவுகள்

விளிம்புநிலை மனிதனின் பிரச்சினையை விவரிக்க முயல்கிறார்......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.