Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கைது செய்துவிட்டார்கள் என்பதற்காக, நான் எழுதியதை மாற்றிக்கொள்ள முடியுமா?" நக்கீரன் கோபால் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கோபால்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குறித்த ஒரு செய்திக்காக,

, கைதுசெய்யப்பட்டு பிறகு நீதிமன்றம் கைது ஆணை வழங்காததால் விடுவிக்கப்பட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், அந்த கைது விவகாரம் குறித்தும் ஊடக சுதந்திரம் குறித்தும் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து...

கேள்வி: செவ்வாய்க்கிழமையன்று விமான நிலையத்தில் நீங்கள் கைதுசெய்யப்பட்டபோது என்ன நடந்தது?

பதில்: அன்றைய தினம் காலையில் நானும் இன்னும் இருவரும் புனேவில் என் நண்பர் பாலா என்பவரைச் சந்திப்பதற்காக செல்ல விமான நிலையத்திற்கு வந்தோம். 8.50க்கு விமானம். 7 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய உதவியாளருக்கு விமான நிலையத்தின் உளவுத் துறை காவலர் ஒருவர் அடிக்கடி போன் செய்து, என்னைப் பற்றிய விவரங்களைக் கேட்பதாகத் தெரிவித்தார்.

பிறகு விமான நிலையத்திற்குள் வந்து, போர்டிங் பாஸெல்லாம் வாங்கிய பிறகு விமான நிலையத்தைச் சேர்ந்த துணை ஆணையர் விஜயகுமார் என்பவர் என்னைப் பார்த்து வணக்கம் சொன்னார்.

நான் என்னுடன் வந்தவர்களிடம் நீங்கள், நமக்கான வாயிலில் நில்லுங்கள், நான் மேல் தளத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்றுவிட்டு வருகிறேன் என்று சொன்னேன். அவர்களும் சென்றுவிட்டார்கள். பிறகு நான் லிஃப்டில் ஏறியபோது, உடன் அந்த துணை ஆணையரும் ஏறினார். நான் கேட்டதற்கு, உதவி ஆணையர் வரப்போகிறார் என்றார்.

உதவி ஆணையரும் விமானத்தில் பயணம் செய்கிறாரா என்று கேட்டுவிட்டு, விட்டுவிட்டேன். அதற்குப் பிறகு நான் கழிப்பறைக்குச் சென்று திரும்பியவுடன், என்னை நெருங்கிய துணை ஆணையர் விஜயகுமார், உங்களிடம் உதவி ஆணையர் பேச விரும்புகிறார். நாம் விஐபிக்களுக்கான இடத்தில் காத்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

பிறகு அங்கு சென்று காத்திருந்தோம். பிறகு விஜயகுமாருக்கு ஒரு போன் வந்தது. அதற்குப் பிறகு திடீரென பத்து பேர் சாதாரண உடையில் அறைக்குள் வந்தனர். வந்தவர்கள் உடனடியாக என் போனை பிடுங்கினர். நான் என்னைக் கைதுசெய்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை வெறும் விசாரணைதான் என்றார்கள். அதற்கு எதற்கு போனை பிடுங்குகிறீர்கள் என்றேன். பிறகு, என்னுடன் வந்திருப்பவர்கள் வெளியில் காத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு புனே நகரைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவர்களிடம் விவரத்தைச் சொல்லவாவது என்னை அனுமதியுங்கள் என்றேன். அவர்கள் புனே சென்றுவிட்டால், அவர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியாது என்றெல்லாம் சொன்னேன். இருந்தபோதும் காவல்துறை அதற்கு அனுமதிக்கவில்லை.

ஏதோ தீவிரவாதியைக் கைதுசெய்வதுபோல கைதுசெய்தனர். பிறகு உதவி ஆணையர் புறப்பட்டுவிட்டார். துணை ஆணையரிடம் என் மீது என்ன வழக்கு என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. வெளியில் வந்த பிறகு ஒரு பட்டாலியன் காவல்துறையினர் என்னைப் பின் தொடர்ந்தனர். முதலில் ஜாம் பஜார் காவல் நிலையம் செல்வதாகச் சொன்னவர்கள் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டுசென்றனர்.

அங்கிருக்கும்போது வைகோ என்னை சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். என் வழக்கறிஞர் சிவகுமாரும் காத்திருந்தார். இருவரையும் வரச்சொன்னேன். ஆனால், வைகோ சத்தம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். சிவகுமார் மட்டும் வந்தார். அவர்தான் வைகோ மறியல் செய்து கைதாகிவிட்டார் என்று தெரிவித்தார்.

கே. நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

ப. நீதிமன்றத்தில் நீதிபதி என்னைப் பார்த்து, உங்கள் மீது என்ன வழக்கு என்று தெரியுமா எனக் கேட்டார். தெரியாது என்றேன். பிறகு அந்த நக்கீரன் இதழைக் காண்பித்தார். நீங்கள் வெளியிட்ட கட்டுரைக்காக உங்கள் மீது 124வது பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது என்றார்.

கே. இன்னமும் நீங்கள் எழுதியது சரிதான் என சொல்கிறீர்களா?

ப. என்னைக் கைதுசெய்துவிட்டார்கள் என்பதற்காக, நான் எழுதியது தவறு என மாற்றிக்கொள்ள முடியுமா? நாங்கள் எழுதியது பத்தோடு பதினொன்றாக கடந்துசெல்லக்கூடிய செய்தி அல்ல. நித்யானந்தா விவகாரத்தைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டபோது, 2 ஆயிரம் மறுப்புக் கடிதங்கள் எங்களுக்கு வந்தன. அந்த மறுப்பை வெளியிட்டோம். ஆனால், 2010ல் ஆர்த்தி என்ற பெண் வெளிப்படையாகவே புகார் கொடுத்தார். சிடிக்களும் வெளிவந்தன.

கே. எந்த ஒரு செய்தியையும் வெளியிடும்போது, யாரைக் குற்றம்சாட்டுகிறோமோ அவர்களுடைய தரப்பையும் கேட்க வேண்டுமல்லவா, இந்த விவகாரத்தில் ஆளுநரின் கருத்தைக் கேட்க முயன்றீர்களா?

ப. ஆம். போனில் தொடர்பு கொண்டோம். இந்தச் செய்தி எப்படி வெளியானது என்று சொல்கிறேன். எனக்குச் சொந்த ஊர் அருப்புக்கோட்டை. அந்தப் பகுதியின் செய்தியாளர் ராமகிருஷ்ணன். எப்ரல் மாதத்தில் எனக்கு அருப்புக்கோட்டையிலிருந்து ஒரு போன் வந்தது. போன் செய்தவர், தான் கேள்விப்பட்ட செய்தியால் மனமெல்லாம் பாரமாக இருப்பதாகச் சொன்னார்.

தன்னை வந்து சந்திக்க முடியுமா எனக் கேட்டார். நான் ராமகிருஷ்ணனை அனுப்பினேன். அந்த நபர், ஒரு ஆடியோவைக் கொடுத்தார். அந்த ஆடியோ எங்களைப் பதற வைத்தது. அதை நூல் பிடித்து சென்றோம். நிர்மலா தேவி தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பேசி வலைவிரிக்கும் ஆடியோதான் அது. அதற்குப் பின், கல்லூரி நிர்வாகம், மதுரைப் பல்கலை, துணைவேந்தர், வேந்தர் என்று முடிவுக்கு வந்தது. இதைப் பற்றி விளக்கம் கேட்டபோது அவர்கள் மறுத்தார்கள்.

மூத்த பத்திரிகையாளர் என். ராம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் Image caption மூத்த பத்திரிகையாளர் என். ராம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

கே. இந்தக் கைது நடவடிக்கையின்போது, எல்லாக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்த நிலையில், டிடிவி தினகரன் ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதாவது இதுபோல நீங்கள் அவரைப் பற்றி ஆதாரமில்லாமல் வெளியிட்டதற்காக ஆறு மாத தண்டனை கிடைத்ததாக சொன்னார். அது உண்மையா?

ப. டிடிவி தினகரனைப் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டோம். அதற்காக அவர் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு ஆண்டுக் கணக்கில் நடந்தது. முடிவில் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அந்தத் தண்டனையை வழங்கிய நீதிபதி, எங்களை அறைக்குள் அழைத்து, 'நீங்கள் மேல் முறையீட்டில் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று சொன்னார். மேல் முறையீட்டில் விடுதலையானோம். எங்கள் பக்கம் நியாயம் இருந்ததால் விடுதலையானோம்.

தினகரனின் பூர்வீகத்தைப் பற்றி பல செய்திகளை வெளியிட்டிருக்கிறோம். அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது, எப்படி பணம் கொடுத்து வென்றார் என்றெல்லாம் வெளியிட்டிருக்கிறோம். தினகரனுடன் இருப்பவர்கள் பெரும் பணத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் வந்த வழியைச் சொல்லியிருக்கிறோம். அதை யூ டியூப் வீடியோவாகவும் வெளியிட்டோம்.

கே. நீங்கள் ஒரு செய்தி குறித்து கேட்கிறீர்கள். அவர்கள் பதிலளிக்கவில்லை அல்லது மறுக்கிறார்கள். இருந்தும் அந்த செய்தியை நீங்கள் வெளியிட்டால், அது அவதூறாக இருப்பதாக அவர்கள் கருதினால், பாதிக்கப்பட்டவர் என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?

ப. முதலில் விளக்கம் கேட்க வேண்டும். கோர்ட் நோட்டீஸ் அனுப்பலாம். இல்லையென்றால் அவதூறு வழக்குத் தொடரலாம். இல்லாவிட்டால், உயர்நீதிமன்றத்தை அணுகி என்னைப் பற்றி எழுதக்கூடாது எனத் தடை வாங்கலாம். இத்தனை வழி முறைகள் இருக்கின்றன.

கே. ஏப்ரலில் வந்த செய்திக்கு இப்போது வழக்குத் தொடர்ந்தது ஏன் என நினைக்கிறீர்கள், நீங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டது இதற்குக் காரணமா? செப்டம்பரில்கூட இந்தச் செய்தியுடன் ஒரு இதழ் வந்தது...

ப. அந்த இதழும் ஒரு காரணம். அது மட்டுமே காரணமல்ல. சில நாட்களுக்கு முன்பாக, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசும்போது, இந்த விவகாரம் வெளியில் வந்தால் பல அரசியல் தலைகள் உருளும் என்கிறார். இதைத்தானே நக்கீரனும் சொன்னது. ஐந்து இதழ்களுக்கு முன்பாக செப்டம்பரில் வெளிவந்த இதழில், ஸ்வாதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இறந்த ராம்குமாரைப் போலவே இந்த நிர்மலா தேவியும் கொல்லப்படலாம் என ஒரு செய்தியை எழுதினோம்.

கே. நீதிமன்றத்தில் இந்து என். ராமிடம் நீதிபதி பேசும்போது, நக்கீரன் இதழைக் காண்பித்து இது போன்ற படத்தை நீங்கள் வெளியிடுவீர்களா என்று கேட்டபோது, ராம் நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்றார்..

ப. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இந்த செப்டம்பர் இதழைக் காண்பித்து, இப்படி செய்தி வெளியிடலாமா என்று கேட்டார். அப்போதுதான் நீதிபதி ராமிடம் அவ்வாறு கேட்டார். ராமும் நான் அப்படி வெளியிட மாட்டேன் என மறுத்தார். ஆனால், அவுட்லுக்கும் இந்தியா டுடேவும் இது போன்ற அட்டைப் படங்களை வெளியிட்டிருக்கிறார்கள் என்றார். அப்போது எங்களுடைய வழக்கறிஞர் பி.டி. பெருமாள் குறுக்கிட்டு, இந்த வழக்கில் இந்த இதழ் குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து காவல்துறையிடம் நீதிபதி கேட்டார். இல்லை என்றவுடன் அவர் அந்த இதழைத் தூக்கிப்போட்டுவிட்டார். அவர்கள் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தினார்கள்.

 

கே. பத்திரிகைகளுக்கான சுதந்திரம் என்பது ஒரு கட்டற்ற சுதந்திரமா, எதை வேண்டுமானாலும் எழுத முடியுமா?

ப. முடியாது. எப்படி எழுத முடியும்?

கே. அப்படியானால், நிர்மலா தேவியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொன்னீர்கள்? யூகத்தின் அடிப்படையில் இப்படி ஒரு செய்தியை எழுத முடியுமா?

ப. இதைத்தான் ராம்குமார் விவகாரத்திலும் சொன்னார்கள். ஆனால், அவர் கொல்லப்பட்டுவிட்டாரே.

கே. யூகத்தின் அடிப்படையில் ஒரு செய்தியை இப்படி வெளியிடும்போது, பாதிக்கப்படுபவர்களுக்கு பதில் என்ன?

ப. இந்த நிர்மலா தேவி விவகாரத்தை முழுமையாகச் சொல்கிறேன். ஆடியோ வெளியானதும் தமிழக அரசு பல்கலைக்கழக வேந்தரை அழைத்து இதனை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்கச் சொன்னது. உடனே வேந்தர், அதாவது ஆளுநர், ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்தார். ஐந்து பேர் குழு கலைக்கப்பட்டது. அதே நேரம், இந்த வழக்கை சாத்தூர் காவல்துறை விசாரிக்காது, சிபிசிஐடி விசாரிக்குமென அரசு அறிவித்தது. சிபிசிஐடிக்கு அப்போது தலைவர் ஜெயந்தி. அவர் மாற்றப்பட்டு, அமரேஷ் புஜாரி நியமிக்கப்பட்டார். வேகமாக நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்கள், அவ்வளவுதான். முருகனின் மனைவி சுஜா என்பவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன் கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறார். இதைவிட என்ன வேண்டும்?

அவர்கள் கைதான பிறகு, 15 முறை ஜாமீன் கோரியிருக்கிறார்கள். கிடைக்கவில்லை. ஒருவர் கைதுசெய்யப்பட்டு 90 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லையென்றால் அவர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் என்கிறது. அல்லது குற்றப்பத்திரிகை தாக்கலான பிறகு பிணையில் விடுவிக்கலாம். 90 நாட்களும் கடந்து, குற்றப் பத்திரிகையும் தாக்கலான பிறகு, இந்த மூவருக்கும் இதுவரை பிணை கிடைக்கவில்லை. இப்படித்தானே ராம்குமார் விவகாரத்தில் நடந்தது.

நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக திரண்ட மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ Image caption நக்கீரன் கோபாலுக்கு ஆதரவாக திரண்ட மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ

கே. ஆளுநர் மாளிகை என்ன செய்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்..

ப. அவதூறு வழக்குத் தொடர்ந்திருக்கலாமே.. ஏன் 6 மாதங்கள் காத்திருந்தார்கள்? விஷயம் அப்படியே போய்விடும் என்று நினைத்தார்கள். நாங்கள் தொடர்ந்து செய்தியை வெளியிடுவதால் எங்கள் குரலை அமுக்கப் பார்க்கிறார்கள்.

கே. உங்களை நீதிமன்றம் விடுவித்ததை சரி என்கிறீர்கள். அதே நீதிமன்றம்தான் நிர்மலா தேவிக்கு பிணையை கொடுக்கவில்லை. ஆனால், அதை ஏற்க மறுக்கிறீர்கள்?

ப. அப்படிச் சொல்ல வரவில்லை. யார் எப்படி நீதிமன்றத்தை அணுகுகிறோம் என்பதில் இருக்கிறது. நிர்மலா தேவி எப்படி நீதிமன்றத்தை அணுகுகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். எங்கள் விவகாரத்தில் நீதிமன்றம் எங்கள் பக்கம் நின்றது பெரிய விஷயம். அதற்காக ஒரு நீதிமன்றத்தைப் பாராட்டி, இன்னொரு நீதிமன்றத்தைக் குறை சொல்ல முடியாது.

கே. உங்களுடைய நீண்ட பத்திரிகை அனுபவத்தில் பல வழக்குகளைச் சந்தித்திருக்கிறீர்கள். பல அரசுகளால் கைதுசெய்யப்பட்டிருக்கிறீர்கள். குறிப்பாக ஜெயலலிதா தலைமையிலான அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்போதைய அரசுக்கும் முந்தைய அரசுகளுக்கும் என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்..

ப. ஜெயலலிதா காலத்தில் இருந்த துன்புறுத்தல் இப்போது இல்லை. சில நாட்களுக்கு முன்பாக டிவி விவாதம் ஒன்றில் பேசிய அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருவர், 'நாங்கள் என்ன முன்பைப்போல, அலுவலகத்தைத் தாக்கினோமா, ஆட்டோவை அனுப்பினோமா, வழக்குதானே போடுகிறோம்' என்கிறார். அப்படியானால், அந்த காலத்தில் என்ன செய்தோம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இப்போது அப்படியெல்லாம் கிடையாது என நம்புவோம். ஜெயலலிதா காலத்து துன்புறுத்தல் இல்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

 

கே. தனிநபர் வாழ்க்கை குறித்த செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ப. எது தனி நபர் வாழ்க்கை என்பதில் தெளிவு வேண்டும். நித்யானந்தா போன்ற ஒரு சாமியார், ரஞ்சிதாவுடன் சல்லாபம் செய்யும்போது எப்படி..

கே. இல்லை. அதற்குள் செல்ல வேண்டாம். யாரும் புகார் கொடுக்காத நிலையில் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் ஊடகம் எப்படி நுழைய முடியும்? பொதுமக்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக புகார் கொடுக்காத நிலையில், மூன்றாம் நபரின் அந்தரங்கத்தில் நாம் தலையிட முடியுமா?

ப. இல்லை.முடியாது.

கே. ஒரு பத்திரிகையாளரின் சுதந்திரம் யாரால் வரையறுக்கப்படுவதாக நினைக்கிறீர்கள்? சுய கட்டுப்பாடா, அரசா, நீதிமன்றமா?

ப. அந்தப் பத்திரிகையாளர், ஒரு செய்தி எழுதும்போது அதற்கான வரையறையுடன் எழுத வேண்டும். அதைத் தாண்டிச் சென்றால் நீதிமன்றம் தலையிடும்.

கே. ஒரு செய்தியை வெளியிடும்போது, அதன் முழுமைத் தன்மையை ஆராய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ப. நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன். நிர்மலா தேவி விவகாரம் நாங்கள் சொன்னதுபோல நடக்கும்போது, நீங்கள் மீண்டும் என்னை வந்து சந்திப்பீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.