Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ – அனோஜன் பாலகிருஷ்ணன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போகன் சங்கரின் ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ – அனோஜன் பாலகிருஷ்ணன்

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் தொகுப்பை வாசித்து முடித்தபின் உடனடியாக எனக்குத் தோன்றியது பதற்றம் சுரக்கும் புதிர் நிறைந்த துயர்தான். சிக்காகிய நூல் பந்திலிருந்து நூலை விடுவிப்பது போல இந்தத் துயர் கழன்று கழன்று மேலும் சிக்காகியது.

போகன் சிருஷ்டிக்கும் உலகம் மிதந்தலையும் துயருக்குள் புறக்கணிப்பின் விளிம்பில் சுரக்கும் தாழ்வு மனப்பான்மையாலும் அன்பின் நேர்மறை சிடுக்குகளுக்குள் சிக்குண்டு அவஸ்தைப்படுபவர்களின் பதற்றம் கொண்ட அகவுலகத்தாலும் நிரம்பியுள்ளது. ஒருவகையில் அம்மானுடர்கள் அவ்விருத்தலை தத்தளிப்புடன் சிறுதயக்கத்துக்குப் பின் ஏற்கவும் செய்கிறார்கள்.

‘பாஸிங் ஷோ’ கதையில் இழந்து செல்லும் இளமையை மீட்டுக்கொள்ள தடுமாறும் பெண், ‘நிறமற்ற வானவில்’ கதையில் பார்வையற்ற நபர் தன் துயரை இன்னுமொருவரின் செவி வழிக்கதையில் இனம்கண்டு கண்ணீர் சொறிவது, ‘நடிகன்’ கதையில் கலையின் மீதான பிடிப்பற்ற துணையுடன் சீரழிந்து தன் ஆறுதலை கலைக்குள்ளே கண்ணுறும் நடிகன் என்று புறக்கணிப்பின் பிடிக்குள் சிக்குண்ட மனிதர்களின் கதைகளாகவே போகனின் கதைமாந்தர்கள் இருக்கிறார்கள். எதற்கோ ஒன்றுக்கு அஞ்சி தப்பித்துகொள்ள தற்காலிக வழிகளை இவர்கள் தேடித் தேடிப் பார்க்கிறார்கள்.

‘பொதி’ சிறுகதையில் புறக்கணிப்புக்கு உள்ளாகிய இளைஞன், இன்னுமொரு புறக்கணிப்புக்கு உள்ளாகிய பெண்ணொருத்தியை சந்தித்து, ஒரு புள்ளியில் ஒன்றாகிக் கலந்து பின்னர் கடந்து செல்கிறார்கள். அவன் கையில் எப்போதும் இறக்கி வைக்க முடியாத பொதி இப்போது இன்னும் கனம் அதிகமாக அவன் கைகளில் தங்கியிருக்கிறது. துயர் இன்னும் விரிகிறது. ‘அம்மா பாத வெடிப்புக்கு இப்படித்தான் மஞ்சள் பூசுவாள்’ என்பதிலிருந்து அப்பெண்ணின் மீது இன்னுமொரு தெய்வீகம் கலந்த அன்னையின் சாயல் கதைசொல்லிக்கு தென்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த தெய்வீகம் கலந்த சித்தரிப்புகள் துயர் மிகுந்த பெண்களின் மீது வெவ்வேறு கதைகளில் பயின்று வருகின்றன.

‘படுதா’ சிறுகதை, காதல் தோல்வியால் துவண்டு சுருளும் ஆண் மனதின் கதை. அவளின் பிரிவு எல்லா அன்பின் துண்டிப்புப் போல் துயரை பொங்கத் தந்தாலும், இத்துயர் அவ்வளவு சீக்கிரம் கடந்து செல்வதில்லை. அது ஆழத்தில் மறைத்து வைத்திருப்பது காமத்தின் பிரிவின் வெடிப்பை. அது எத்தனை அந்தரங்கத்துக்கு உரிய வதை என்பதை அவன் கண்டறியும் போது கண்ணீர்தான் தன்னிச்சையாக வழிகிறது. எனக்குத் தெரிந்த அந்தரங்கம் அதன் ஸ்தானத்தை இழந்து செல்கிறதே என்பதன் பரிதவிப்பு, பரஸ்பர உடலை மீறிய மேலும் ஒரு தேடலுக்குள் ஒருகணம் மூழ்கியெழச் செய்கிறது. ஏற்கனவே சொல்லப்படவை தான் இக்கதையில் மீண்டும் குறிப்புணர்த்தப்படுவதாகத் தோன்றுகிறது. இருப்பினும் இக்தையின் சித்தரிப்பும் சொல்லிச்செல்லும் விதமும் கதையை புதுப்பிக்கிறது. இயற்கை மீதான கூரிய விவரிப்புகளில் கையாளும் உவமைகள் புத்தம் புதிதாக இருகின்றன.

‘யாமினியின் அம்மா’ கதையில் ஏதோவொரு அலைக்கழிப்பில் இருந்து விடுபட கதைசொல்லி தற்காலிக திரைக்குள் ஒளிந்து கொள்ள நேர்கிறது. அந்தத் திரை யாமினியின் அம்மாவின் மீது ஏற்படும் கருணையாக இருக்கிறது. அதில் ஏற்படும் சுமை அகத்தில் இன்னுமொரு அழுத்தத்தை வீரியமாகக் கொடுக்கிறது. இறுதியில் நிகழும் யாமினியின் மரணம் இரண்டு துயரையும் ஒன்றாக்குகிறது அல்லது ஒன்றுக்குள் ஒன்று அடைக்கலம் தேடுகிறது. இரண்டு துயர்கள் ஒன்றாகி எதாவதொரு கண்டடைதலை நிகழ்த்துவதை போகனின் கதையுலக மாந்தர்கள் திரும்பத் திரும்பச் செய்கிறார்கள். இரண்டு கதாமாந்தர்கள் தங்களுக்குள் தாங்கள் அடையாளமாகிறார்கள். இது கொடுக்கும் துயர் இன்னுமொரு முனையில் ஆறுதலையும் கொடுக்கிறது.

‘மீட்பு’ சிறுகதை இத்தொகுப்பிலுள்ள சிறந்த கதைகளுள் ஒன்று. அதீத துயரத்தில் அலைகழிக்க வைக்கும் கதை. எதிர்பாராத விபத்தில் பலிகொடுத்த குழந்தைகளின் சோகத்தில் தத்தளிக்கும் தம்பதிகள், அதிலிருந்து மீட்படைவதை நுண்மையாகச் சித்தரிக்கும் கதை. வண்ணத்துப்பூச்சிகள் கவியுருவமாக இக்கதையில் வருகின்றன. ‘யாமினியின் அம்மா’ சிறுகதையிலும் குழந்தையின் இறப்பு இருக்கும். மீட்பிலும் இதே வகையான இறப்பிருக்கும். இரண்டினது மீட்பின் சித்தரிப்பும் வெவ்வேறு வகையானவை. ஆனால், கூர்ந்து பார்த்தால் இரண்டின் அகவுலகமும் ஏறக்குறைய ஒன்று போலவே தோன்றுகிறது. மீட்பில் வரும் துயரத்தின் சித்தரிப்புகள் மிக உருக்கமாக வருகின்றன. அகப் பிறழ்வின் மீதான சித்தரிப்பே இக்கதையை அதிகம் நெகிழ்ச்சிக்கும் இட்டுச்செல்கின்றது. சாதத் ஹசன் மான்டோவின் ‘காலித்’ எனும் கதையில் இறக்கும் குழந்தையால் மனச் சிதைவடையும் தந்தையை ஒருகணம் நினைவு கொள்ளச் செய்கிறது. இரண்டும் வெவ்வேறு கதையாகினும் சிதைவுகளின் உருக்கம் ஒருபுள்ளியில் ஒரே பதற்றத்தைத் தருகிறது. மரணத்தால் மனம் சிதைவடைவதை புறவய வர்ணனைகளால் போகனால் கூர்மையாகச் சொல்லிவிட முடிகிறது.

bogan-179x300.jpg

வாழ்க்கையில் கிடைக்கும் துயரத்தை அவ்வாழ்க்கையில் இருந்தே மீட்புக்கான ஊடகத்தை கண்டறிந்து அதற்குள் மூழ்கி மீட்டுக்கொள்வதே கடந்து செல்வதற்கான வழியென இக்கதைகள் காட்டுகின்றன. தற்காலிகமாக இழப்பை மறந்து, துயரில் இருந்து விடுபட்டுச் செல்லக்கூட அவை தேவையாக இருகின்றன. அந்தத் தம்பதிகள் பட்டாம்பூச்சிகளின் வளர்ப்பு ஊடாக மீள்வதை ஃபாதரின் மூலம் கேட்கும் கதைசொல்லி, தன் துயரில் இருந்து மீண்டு கொள்வதற்கான சிகிச்சையாகக் கொள்கிறான். போகனின் கதைமாந்தர்கள் துயரின் சிகிச்சையாக இன்னுமொரு துயருக்குள் நுழைந்து தம் துயரை பெருக்குகிறார்கள். கலைவதூடாகவே முன்னகர்ந்து செல்கிறார்கள்.

‘ஆடியில் கரைந்த மனம்’ சிறுகதை புறவய அழுத்தத்தால் அகவயம் சிதையும் உணர்வைக் கதையாக்குகிறது. இப்படியொரு புள்ளியில் கதையை சித்தரித்து எழுத இயலும் என்பதே கூர்மையான கற்பனைத்திறன் தான். விளக்கிக் கண்டறிய முடியாத மர்மம் ஒளிந்திருப்பதே இக்கதையை இன்னும் மேலெழுப்புகிறது. அழுத்தமான கதையாக இருந்தாலும் மொழி நடையில் துமிக்கும் நகைச்சுவையான சித்தரிப்புகள், அதன் தீவிரத்தைக் குறைத்தும் விடுகின்றன. சைக்கிளில் மிதிபட்ட நாய்க் குட்டியை மீட்டெடுக்கும் இடங்கள் மீதான சித்தரிப்புக்கள் போகனின் படைப்புலகத்தின் நெகிழ்ச்சியை துலங்கக்காட்டும் தனித்துவ இடங்கள்.

‘சுரமானி’ என்கிற சிறுகதை வேடிக்கையான குறும்புத்தனத்துடன் ஆரம்பித்தாலும் இக்கதை எழுத்தாளர்களின், கவிஞர்களின் கோணலை சித்தரிப்பது. இயல்புவாழ்க்கையில் ஒட்டமுடியாத அவர்களின் பிளவுகளைச் சுட்டுகிறது. அதனால், அவர்களைச் சார்ந்திருப்பவர்கள் அடையும் சிக்கல்களை, தொந்தரவுகளை, இழப்புகளை, உடைவுகளை வீரியமாக இக்கதை சொல்கிறது. ரயிலில் அல்வா விற்பவர் தெரிந்தவராக இருக்கிறார், முன்னம் இருந்த வேலையை ஏன் விட்டீங்கள் என்று கேட்க, “அதான் சொன்னனே, நான் கவிதை எழுதுவேன். அதான்” என்கிறார். கதை சொல்லி எனக்குப் புரிந்தது என்கிறார். சுரமானிகள் ஒரு உலோகத்தின் அதிர்வெண்ணை கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்படுபவை. எழுத்துக்காரர்களின் அதிர்வெண்ணை கண்டுபிக்க கூடவிருக்கும் எல்லா சுரமானிகளாலும் இயலாதுதான்.

இத்தொகுப்பின் தலைப்புக் கதையான ‘கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்’ சிறுகதை சுரமானி சிறுகதை போன்று வேடிக்கையாகச் சொல்ல ஆரம்பிக்கப்பட்டு இறுதியில் ஒரு மர்மத்தன்மையை நெருங்கி தன்னைக் கலைத்து அடங்குகிறது. கதை சொல்லியின் நண்பர்கள் குழாமால் விசேஷ கவனத்திற்கு உட்படும் ‘உம்மினி சேச்சி’ கிருஷ்ணின் மீது பெரும் உவகையில் இருக்கிறார். அவர் வரையும் கோலங்கள் திரும்பத் திரும்ப கிருஷ்ணனின் உருவத்தை பிரதிபலிப்பன. அவர் திடீரென்று வேறொரு ஆடவனுடன் காணாமல் போகிறார். போனவர் குழித்துறை ஆற்றில் மீன்களால் கோரையாக்கப்பட்டு நிர்வாண சலடமாக ஒதுங்குகிறார். அவ்வாறு அவரை ஆக்கியவரை போலீஸ் கண்டுபிடித்தப் பிறகு, ‘இவனுடன் எப்படிச் சென்றாள் இவள்?’ என்று வியக்கிறார்கள். காரணம் அவனுக்கு கருப்பு உடல், சொட்டைத் தலை. ‘அவளும் சரசாரிப் பெண்தான் நாம்தான் அவளை காவியப்படுத்திவிட்டோம்’ என்று சமாதானம் ஆகிறார்கள். பிற்பாடு தெரிகிறது அவனின் பெயரும் கிருஷ்ணன்தான் என்று. இறுதியில் அவிழும் முடிச்சு இதுவரை கதை சொல்லியால் புரிந்து கொள்ளவே முடியாத ஒன்றை புதிராக ஒப்பேற்றுகிறது. கிருஷ்ணன் அரூபமான படிமமாகத் துலங்கத் தொடங்குகிறார்.

போகன் சித்தரிக்கும் கதைகள் குமரி மாவட்டத்தையும் குழித்துறை பகுதிகளையும் களமாகக் கொண்டவை. இயல்பாகவே ஒரு மலையாள வாடை கதைகளில் வந்துவிடுகிறது. அதுவே கதைகளை விசேஷப்படுத்துகிறது. துண்டு துண்டாக அதீத அலங்காரம் இன்றி எழுதப்படும் வர்ணனைகள் கொடுக்கும் கிளர்ச்சிகள் இதுவரை சிறுகதைகளில் சொல்லப்படாதவை. இயல்பிலே போகன் கவிஞராக இருப்பதால் அவருக்கு இது சாத்தியமாகிறது. படுதா கதையில் காடுகளின் மீதான வர்ணனைகள் அவற்றுக்கு சாட்சி. “மேலுதட்டில் வியர்வை பூத்து இருந்தது உயிரை எரித்தது” என்று உணர்வுகளை புதிதாக வரைந்து தாண்டிச் செல்ல இயலுகிறது. ‘குதிரை வட்டம்’ சிறுகதையில் “மெல்லத் தயக்கத்துடன் படுக்கையை விட்டு எழுந்துபோகும் பெண்ணின் பாவாடை போல அதன் மீதிருந்து கிளம்பிப் பரவும் புகை” என்று தேநீர் குவளையில் இருந்து வெளியேறும் ஆவியை காட்சி ரீதியாக நுணுக்கமாகச் சித்தரிக்க முடிகிறது. அ.முத்துலிங்கம் பயன்படுத்தும் உவமைகளுக்கு பிற்பாடு இன்னும் நவீனமான உவமைகளை சிறுகதைகளுக்குள் நகர்த்தியவர்களில் போகனின் இடம் முக்கியமானது என்று எண்ணத் தோன்றுகிறது.

ஜெயமோகனின் தாக்கம் தன் சில சிறுகதைகளில் நிஜமாகவும் நிழலாகவும் இத்தொகுப்பில் இருப்பதாக முன்னுரையில் போகன் சொல்கிறார். ‘பூ’ கதையை வாசிக்கும்போது அந்த எண்ணம் இலகுவில் வந்துவிடுகிறது. எனினும் ஜெயமோகனின் அகவுலகமும், போகனின் அகவுலகமும் வெவ்வேறு வகையானவை என்பதை இத்தொகுப்பை வாசிக்கும் திறமையான இலக்கிய வாசகர்கள் இனம் கண்டு கொள்வார்கள். போகனின் கதாமாந்தர்கள் தேடிக் கண்டடையும் கேள்விகளுக்கு பலசமயம் விடைகள் இருப்பதில்லை. விடுவிக்க முடியாத துயரை ஏற்றுக்கொள்ளவும் முனைபவர்கள். ஒரு துயரில் இருந்து விடுபட அல்லது தற்காலிகமாக அதைக் கடந்ததாக ஏமாற்ற ஏதோவொரு பாவனையை போகனின் கதாமாந்தர்கள் விரும்புகிறார்கள்.

புறக்கணிப்பு கொடுக்கும் தனிமை, மனித வாழ்க்கையின் ஆகக் கடைசியில் இருக்கும் தடித்த துயர். கூட்டு வாழ்க்கையிலிருந்து துண்டித்து ஒதுங்கி அல்லது ஒதுக்கப்பட்ட மனிதர்களின் இருத்தலியல் சிக்கல்களே போகனின் படைப்புலகமாக இருக்கின்றன. வலிகள் மீதான உணர்ச்சிகள் இறப்பின் வழியாக சித்தரிக்கப்படுவதூடாக போகன் உருவாக்கும் உலகம் மீள மீள ஒரே வகையானவையாக இருகின்றன. சமீபத்தில் எழுதிய ‘சிறுத்தை நடை’ சிறுகதை வரை இதே அக அலைச்சல்தான் படைப்பின் வழியாக மோதுகின்றது. போகனின் பால்யம் கைவிடலின் துயரால் நிரம்பியிருக்கலாம். அதை இரண்டு வகையான பாவனைகளால் எழுத்தின் மூலம் கடந்து செல்ல போகன் பிரியப்படுவதாகவே தோன்றுகிறது. ஒன்று, பகடி மற்றும் குறும்புத்தனம் மிக்க சீண்டல் கொண்ட உலகம் (போக புத்தகம், முகநூல் பதிவுகள்) இரண்டு, அவமதிப்புகள் மீது துருப்பிடித்த வலிகளை களைய மீண்டும் துயரை உருப்பெருக்கிப் பார்க்கும் உலகம். இரண்டு உலகமுமே தன்னைக் கடந்து செல்ல அணியும் எழுத்து முறையினால் ஆனதே. இந்த எல்லைகளின் முழு சாத்தியத்தை கடக்க முடியவில்லை என்ற களைப்பே போகனை அதே வகையாக மீண்டும் மீண்டும் எழுத வைக்கின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.

போகனின் படைப்புலகத்தில் தடுமாறும் மனிதர்களின் பதற்றத்தை கலை அமைதிக்குள் கொண்டு செல்வதே இக்கதைகளை முக்கியமானவையாக ஆக்குகின்றன. இந்த அமைதித் தருணங்களை தோற்றுவிப்பதன் ஊடாக போகன் அடையும் உச்சப்புள்ளிகள் ஆன்மிக தளத்துக்குள் ஒரு தேடலை நிகழ்த்தி ஓய்கின்றன. இந்த இடங்கள் எழுத்தாளனுக்கு சிகிச்சையாகவும், வாசகருக்கு கலையனுபவத்தில் முதன்மையான அனுபவமான உன்னதமாக்கலுக்குள்ளும் இட்டுச்செல்கின்றன. இந்த உச்சத்தை கவித்துவ தருணங்களால் கதைகளுக்குள் எட்டிப் பிடித்திருப்பதாலேயே எனக்கு இக்கதைகள் இன்னும் முக்கியமானவையாக இருக்கின்றன.

கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்

வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்

விலை : ரூ.175

 

http://tamizhini.co.in/2018/11/14/போகன்-சங்கரின்-கிருஷ்ணன/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.