Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கோ… யாரோ… யாருக்காகவோ….!? … முருகபூபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ… யாரோ… யாருக்காகவோ….!? … முருகபூபதி.

  எங்கோ… யாரோ… யாருக்காகவோ….!? ( சிறுகதை) … முருகபூபதி.

“ சேர்… வவுனியா வந்திட்டுது.” சாரதி அருகில் அரைத்தூக்கத்திலிருந்த மூர்த்தியை தட்டி எழுப்பினான்.

அதிகாலை கொழும்பிலிருந்து புறப்படும்போது, ‘எப்படியும் காலை ஒன்பது மணிக்குள் வவுனியாவை வந்தடைந்துவிடலாம்’ என்று சொன்ன சாரதி சொன்னபடி நிரூபித்தும்விட்டான். அந்த வாகனத்தையும் சாரதியையும் வெள்ளவத்தையில் அறிமுகப்படுத்திய நண்பனுக்கு மனதிற்குள் நன்றி சொல்லிக்கொண்டார் மூர்த்தி.

போர் முடிந்து இரண்டுவருடங்களின் பின்னர் இலங்கை வந்திருந்த மூர்த்திக்கு இலங்கையில் பார்ப்பதற்கு சொந்தபந்தங்கள் என்று குறிப்பிடும்படியாக எவரும் இல்லை. பெரும்பாலானவர்கள் ஏதோ ஒரு நாட்டில் புகலிடம்பெற்று, கடைகள் நடத்தலாம். சங்கங்களில் இணைந்திருக்கலாம். கோயில்கள் கட்டியிருக்கலாம். கடன் அட்டை – சீட்டு மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம். எழுத்தாளர்கள் ஆகியிருக்கலாம்! அவர்களைப் பற்றிவரும் மின்னஞ்சல் தகவல்களும் தொலைபேசி அலட்டல்களும் மூர்த்திக்கு முக்கியத்துவமற்றுப்போய்விட்டன.

போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மாணவர்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கத்துடன் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் அதன் தொடக்க காலத்திலிருந்து இணைந்திருந்த மூர்த்தி, போருக்கு முன்னர் பலதடவைகள் இலங்கை வரமுயன்றும் சாத்தியமாகவில்லை.

பூகோள அரசியலுக்குள் சிக்கியதேசத்தில் பலதடவைகள் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானவேளையிலும் அந்த அறிவிப்பில் நம்பிக்கையிழந்தமையும் மூர்த்தியின் தாயகப்பயணத்தை தாமதிக்கச்செய்தது.

அந்தத்தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதியாக போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களையும் முன்னாள் போராளி மாணவர்களையும் இந்தப்பயணத்தில் சந்திக்கவும் நிதிக்கொடுப்பனவுகளை வழங்கவும் கலந்துரையாடவும் வவுனியா தொடர்பாளர்களுடன் ஏற்கனவே தீர்மானித்தவாறு இந்தப்பயணத்தை மூர்த்தி ஆரம்பித்திருந்தார்.

வவுனியாவில் அந்தக்காலைவேளை அமைதியாக உதயமாகியிருந்தது. பல வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்தபோது மோதல்களுக்கு கேந்திரமாக இருந்த பிரதேசத்தில் போருக்குப்பின்னர் அமைதி திரும்பியிருந்தாலும் சந்திக்குச்சந்தி சலிப்பின்றி நிற்கும் படையினரைப்பார்த்தபோது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவில் பணிகள் ஏதும் இல்லாமலிருந்த பிரிட்டிஷ் படையினரை என்ன செய்வது

என்று யோசித்துக்கொண்டிருந்த வின்சன்ட் சார்ச்சில், மூர்த்தியின் நினைவுக்கு வந்தார்.

இடைத்தங்கல் முகாம்களில் எஞ்சியிருக்கும் மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவேண்டும். விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள் பொது மன்னிப்பில் வீடு திரும்பவேண்டும். சரணடைந்து விடுவிக்கப்பட்ட போராளிகளில் மாணவர்கள் இருப்பின் அவர்கள் மீண்டும் தமது இடைநிறுத்திய கல்வியை தொடரவேண்டும், முதலான கோரிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்த தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் பல்கலைக்கழக பிரவேச பரீட்சை எழுதிய முன்னாள் போராளி மாணவர்களும் வவுனியா ஒன்று கூடலுக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்புடனேயே அந்தப்பயணத்தை மூர்த்தி மேற்கொண்டிருந்தார்.

“தம்பி அந்த ஸ்கூலுக்கு பத்துமணிக்கு வருவதாகத்தான் சொல்லியிருக்கிறோம். நேரம் இருக்கிறது. வாரும் ஏதும் சாப்பிட்டுவிட்டுப்போவோம். பசிக்குது, மருந்தும் எடுக்கவேண்டும்.”

சாரதி மூர்த்தியை ஏறிட்டுப்பார்த்தான். “சேருக்கு சுகமில்லையா?”

“ டயபட்டீஸ், பிரஷர் இருக்கு.”

“ உங்கட நாட்டில குறிஞ்சா கீரை இல்லையா சேர். சாப்பாட்டில் உப்பையும் தேத்தண்ணியில் சீனியும் குறையுங்க சேர். எங்கட அப்பாவுக்கும் இருக்கு. ஆனால், அவர் கட்டுப்பாட்டில் இல்லை. நல்லாத்தண்ணி அடிப்பார். சிகரட்டும் ஊதுவார்.” சாரதியை தொடரவிட்டால் தனக்கும் மருத்துவம் பார்ப்பான் போலிருந்தது மூர்த்திக்கு. இந்தப்பயணத்தில் பேச்சுத்துணைக்கும் வழித்துணைக்கும் இருக்கும் ஒரே ஆள் அந்த சாரதிதான்.

இருவரும் ஒரு சைவ ஹோட்டலுக்குள் நுழைந்தனர். இடியப்பமும் வடையும் சாம்பார் சட்னியும் பால்சொதியும் மேசைக்குவந்தன. சாரதியே உரையாடலைத்தொடர்ந்தான்.

“சேர்… எங்கட அப்பாவுக்கு வெறிகூடினால் சொல்லுவார், ‘ உலகத்திலேயே இனிமையான மனிதர்கள் இந்த நீரிழிவு நோயாளிகள்தான்.’ என்று.

மூர்த்தி சாரதியை உற்றுப்பார்த்து “ என்ன? இனிமையான மனிதர்களா? எப்படி ?” என்று கேட்டார்.

“நிரிழிவு நோயாளிகளுக்கு உடலில் சீனி இருக்கிறதாம். அதனால் இனிமையான மனிதர்களாம்.”

மூர்த்திக்கு சிரிப்பு வந்தது. அதனால் புரைக்கேறியது.

“ தண்ணி குடியுங்க சேர்.” தண்ணீர் போத்தலை அவர் அருகே நகர்த்தினான் சாரதி.

“ அந்த போராளிப்பிள்ளைகளை நானும் பார்க்கலாமா சேர்? பாவங்கள். படிப்பைவிட்டிட்டு சண்டைக்குப்புறப்பட்டதுகள். அதிலை பொம்பிளைப்பிள்ளைகளை நினைச்சாத்தான் மனதுக்கு கஷ்டமாக இருக்குது சேர். பொம்பிளைப்பிள்ளைகளை அடக்க ஒடுக்கமாக வளர்த்த தமிழ் சமுதாயம் சேர். எப்படி துவக்கு தூக்கிச்சுதுகளோ தெரியாது.”

“ ஏன் அப்படி சொல்றீர் தம்பி. துவக்கு பிடிச்சதால அடக்க ஒடுக்கம் இல்லாமல் போயிடுமா.? தாங்கள் கட்டுப்பாடுள்ள இயக்கம் என்றுதானே சொன்னார்கள். பெண்கள் இப்போது விமானமும் ஓட்டுறாங்க. பொலிஸ், இராணுவத்திலும் இருக்கிறாங்க. அதனால் எங்கட பெண் பிள்ளைகள் ஒரு நோக்கத்துக்காக ஆயுதம் தூக்கினதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் இறுதியில் எல்லாம் வீணாகிப்போனதுதான் கவலை.” என்றார் மூர்த்தி.

சாரதி தலையை குனிந்து சன்னமான குரலில் “ சேர்… நான் கேட்கிறேன் என்று குறைநினைக்கக்கூடாது…. நீங்களும் அவையளுக்கு ஆதரவா சேர்.”

“ இல்லை… அனுதாபம். போர் நீடிச்சிருந்தா இந்தப்பக்கம் வந்திருக்க வாய்ப்பில்லை. வெளியிலிருந்துகொண்டு கவனஈர்ப்பு, போர் நிறுத்தம் வேண்டும்… என்றெல்லாம் ஏதேதோ மற்றவர்களைப்போல செய்துகொண்டிருந்திருப்போம். ஆனால் இப்ப போர் முடிஞ்சுது. இனி நடக்கவேண்டியதைப்பார்க்கவேணும். அவ்வளவுதான்.” மூர்த்தி உணவுக்கும் உரையாடலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எழுந்திருக்கும்போது, “ தம்பி உமக்கு கோப்பியா , டீயா… வேணும்.”

“ டீ குடிப்போம் சேர். இங்க பால்தேத்தண்ணி நல்ல ருசி.”

இருவரும் கைகழுவிவிட்டு வந்து தேநீருக்காக அமர்ந்தனர். அப்போது மூர்த்தியின் கைத்தொலைபேசி ஒலித்தது.

மறுமுனையில் பாடசாலை அதிபர்.

“ வந்துவிட்டோம். கடையிலே சாப்பிட்டு ரீ குடிக்கப்போறோம். இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுவோம். எல்லோரும் வந்திட்டாங்களா?” மூர்த்தி கேட்டார்.

“ வளாக முதல்வர் வருவார். நிருபர்களுக்கும் சொல்லியிருக்கிறோம். உங்கட அமைப்பின் பிரதிநிதிகள் இரண்டுபேர் வந்திருக்கிறார்கள். சேர் உங்களில் எத்தனைபேர் வந்திருக்கிறீர்கள்?”

“ நான் மாத்திரம்தான். ஏன் கேட்கிறீங்க.?”

“ இல்லை சேர் மத்தியானம் சாப்பாட்டுக்கு ஒழுங்கு செய்யிறோம். அதுதான்.”

“ நன்றி. நேரம் இருக்குமா என்று பார்ப்போம். உங்கட நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நான் முல்லைத்தீவுக்கும் போகவேணும். மதிய உணவுக்கு ஏதும் ஏற்பாடு செய்திருந்தால் அந்தப்பிள்ளைகளுக்கும் சேர்த்து ஒழுங்கு செய்யுங்கோ.”

“ ஓகே… சேர்.” அதிபர் தொடர்பைத்துண்டித்துக்கொண்டார்.

சாரதி சொன்னதுபோன்று தேநீர் சுவையாகத்தான் இருந்தது. மூர்த்தி தனது தேநீருக்கு சீனி வேண்டாம் என்று சொல்ல மறந்துவிட்டதும் ஒரு காரணம்.

“ சேர் குளிசை போட்டீங்களா?” சாரதி அக்கறையுடன் கேட்டான்.

“ நீர் உம்மட அப்பாவிடமும் இப்படி தினமும் அக்கறையாக கேட்பீரா?”

“ இல்லை சேர். அவரும் நானும் சந்தித்துக்கொள்வது குறைவு. நான் இப்படி ஏதும் ஹயர் கிடைச்சால் புறப்பட்டுவிடுவேன். அடுத்த வாரமும் திரும்பவும்

ஒரு தூரப்பயண ஹயர் இருக்குது. கண்டி, சிகிரியா, நுவரேலியா பயணம். என்ர சீவியம் இப்படி ஊர் சுற்றுவதில் போகிறது.”

இருவரும் அந்த சைவஹோட்டலுக்கு வெளியே வந்தனர். வாசலில் நின்று வவுனியா நகரத்தை மூர்த்தி விநோதமாகப்பார்த்தார். ஒரு காலத்தில் பிச்சைக்காரர்கள் நடமாடாத பிரதேசம் என்று அந்தத்தொகுதியின் முன்னாள் எம்.பி. ஒருவர் பழைய பாராளுமன்றத்தில் பெருமையுடன் சொன்னது நினைவுக்கு வந்தது. இப்போது அரசிடம் சம்பளம் பெறும் சீருடையினரின் நடமாட்டம்தான் அதிகரித்திருக்கிறது.

பத்துநிமிடத்தில் அவர்களின் வாகனம் அந்தப்பாடசாலை கட்டிடங்கள் அமைந்திருந்த நிலப்பரப்புக்கு வந்துவிட்டது. அதிபரின் பெயர் தெரியும். உருவம் தெரியாது. தானாகவே சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளவேண்டியதுதான்.

பாடசாலை அலுவலக வாசலில் நின்றுகொண்டு வாகனம் திரும்புவதை பார்த்துவிட்ட அதிபரே விரைந்துவந்து “ சேர்… நீங்கள்தானே மிஸ்டர் மூர்த்தி,” என்றார்.

“ நீங்கள்தானே பிரின்ஸிபல்.” என்றார் மூர்த்தி. கைகுழுக்கிக்கொண்டனர்.

சாரதி இருவருக்கும் அருகில் வந்து தயங்கிநின்றான். அதிபர் புரிந்துகொண்டார். “உதிலை பார்க் பண்ணலாம்.”

சாரதி வாகனத்தை எடுத்து வந்து பார்க்பண்ணியபின்னர் மூர்த்தி தனது பீறீவ்கேசை அதிலிருந்து எடுத்துக்கொண்டு அதிபருடன் அவரது அலுவலகத்துக்கு வந்தார். அங்கே இருந்த ஆண், பெண் ஆசிரியர்கள் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். வவுனியா தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளையும் ஆசிரியர்களையும் அதிபர் மூர்த்திக்கு அறிமுகப்படுத்தினார்.

தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளைக்கண்டதும் மூர்த்தியின் முகம் சற்று பிரகாசமாகியது.

அந்த இரண்டு பிரதிநிதிகளையும் தனியே அழைத்துக்கொண்டு அதிபரின் அலுவலகத்திற்கு வெளியே வந்து சன்னமான குரலில் “அந்தப்பிள்ளைகள் வந்துவிட்டார்களா?” என்று கேட்டார் மூர்த்தி.

இருவரும் உதடுகளை பிதுக்கினர். “எல்லோரும் பெற்றோரிடம் போய்விட்டார்கள். சொல்லி அனுப்பியிருந்தோம். வருவார்களா என்பது சந்தேகம் சேர்.” என்றார் ஒரு பிரதிநிதி.

“ அதோ அவர்களின் சீர்மிய ஆசிரியை வந்திருக்கிறா. அவவிடம் கேட்போம்.” மற்ற பிரதிநிதி, சற்றுத்தூரத்தில் நின்ற குறிப்பிட்ட ஆசிரியரை அழைத்துவந்து மூர்த்திக்கு அறிமுகப்படுத்தினார்.

“ மிஸ்…. இவர்தான் வெளிநாட்டில இருந்து வந்திருப்பவர். அந்தப்பிள்ளைகளை வெளியில் எடுத்து படிக்கவைத்து பரீட்சை எழுதுவதற்கு பலவழிகளிலும் உதவிய அமைப்பிலிருந்து வந்திருக்கிறார். இன்றைக்கு நிகழ்ச்சியில் இந்த மாவட்ட பிள்ளைகளுக்கு பாடசாலை சீருடைகளும் நிதிக்கொடுப்பனவுகளும் வழங்கும்போது அந்தப்பிள்ளைகளையும் சந்திக்க விரும்பியிருந்தார். நாங்களும்

எல்லாப்பிள்ளைகளுக்கும் சொல்லியிருந்தோம். வருவார்களா என்று சேர் கேட்கிறார்,”

அந்த சீர்மிய ஆசிரியர் உதடுகளை திறவாமல் தயக்கத்துடன் சிரித்தார். சில கணங்கள் அங்கு மௌனம் நீடித்தது. அந்தப்பிள்ளைகள் வரமாட்டார்கள் என்பதை மூர்த்தியால் சிரமமின்றி புரிந்துகொள்ள முடிந்தது.

“ சரி போவோம். எங்கட ஏனைய பிள்ளைகளைப்பார்ப்போம்.” மூர்த்தி அலுவலகப்பக்கம் திரும்பினார். மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்த ஒரு யுவதி சற்றுத்தூரத்தில் அவ்வளவுநேரமும் தன்னையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு முகத்தை உடனடியாகத்திருப்பி மாமரத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். மரத்தில் ஒரு அணில் சுதந்திரமாக ஓடிக்கொண்டிருந்தது.

மூர்த்தியும் அந்த அணிலை ரசித்தார். அவரும் நீண்ட காலத்தின் பின்னர் அணிலைப்பார்க்கிறார். அவர் வாழும் நாட்டில் அணில்களை அரிதாகத்தான் பார்க்கமுடியும்.

அந்தப்பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் போரில் கணவன்மாரை இழந்த விதவைத்தாய்மார் திரளாக அமர்ந்திருந்தனர். அதிபர் மூர்த்தியையும் பல்கலைக்கழக வளாக முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் பதிவாளர் கல்வித்திணைக்கள பணிப்பாளர், அதிகாரிகளை அழைத்துக்கொண்டு முன்னே வந்தார்.

அதிபர் அலுவலகத்திலிருந்து அந்த பிரதான மண்டபம் வரையில் இருமருங்கும் சீருடை அணிந்த மாணவர்களும் மாணவிகளும் வரிசையாக நின்றனர். மூர்த்தி கூப்பிய கையுடன் மாணவர்களைப்பார்த்து முறுவலித்தவாறு அதிபருக்கு பின்னால் நகர்ந்தார். மண்டப வாசலில் நிறைகுடம் குத்துவிளக்குகள். மேடையில் ஒரு புறம் ஒலிவாங்கி மறுபுறம் பெரிய ஆளுயர குத்துவிளக்கு. ஊர்வலமாக வந்தவர்கள் மண்டபத்துக்குள் பிரவேசித்தபோது அங்கிருந்த அனைவரும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றுவிட்டு பின்னர் அமர்ந்தனர். அதிபர் அந்த நிகழ்ச்சிக்கு வந்த மூர்த்தியையும் மற்றும் சிறப்பு விருந்தினர்களையும் முன்வரிசை ஆசனங்களில் அமரவைத்துவிட்டு, மேடையில் ஒலிவாங்கியின் முன்னால் நின்ற ஆசிரியருக்கு சைகை காட்டினார்.

அந்த ஆசிரியர் தொண்டையை செருமிவிட்டு பேசினார்.

அவர் வரவேற்புரை நிகழ்த்துவதற்கு முன்னர், போரில் உயிரிழந்த அனைவருக்கும் ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டிப்போம் என்றதும் அனைவரும் எழுந்து நின்றனர்.

அதன் பின்பு மங்கல விளக்கேற்றல் நடந்தது. ஒரு ஆசிரியை மெழுகுவர்த்தியுடன் அந்த பெரிய குத்துவிளக்கிற்கு அருகில் நின்றவாறு வரவேற்புரை நிகழ்த்த வந்த ஆசிரியர் பெயர் சொல்லி அழைத்த ஒவ்வொருவருக்கும் அதனை நீட்டினார். விளக்கேற்றலின்போது மூர்த்தி அந்த மண்டபத்தில் அந்தப்பிள்ளைகளும் வந்திருப்பார்களா என்ற எதிபார்ப்புடனேயே சில கணங்கள் சபையை பார்த்தார். அந்தக்கணங்கள் எண்ணையில் ஊறியிருந்த குத்துவிளக்குத்திரியும் மெழுகுவர்த்தியின் தீ முத்தமிடுதலை தாமதமாக ஏற்றுக்கொண்டது. அந்தக்கணங்களில் சபையை உற்று நோக்கிப்பார்த்துக்கொண்டார் மூர்த்தி.

வரவேற்புரை, அதிபர் உரை, வளாக முதல்வர் உரை, கல்விப்பணிப்பாளர் உரை என்று பல உரைகளையடுத்து மூர்த்தியின் முறை வந்தது.

இரத்தினச்சுருக்கமாகவே மூர்த்தி பேசினார். இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த அதிபரிடமும் வவுனியா தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளிடமும் நாட்டுக்கு வருமுன்னரே தொலைபேசியில் சொல்லியிருந்த நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக்கொண்டதற்கும் அதன்பிரகாரம் நடந்துகொண்டதற்கும் மூர்த்தி தமது வெளிநாட்டு தொண்டு நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொண்டார். அந்த நிபந்தனைகள்: குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அரசியல்வாதிகள் வரக்கூடாது. மாலை மரியாதைகள் இடம்பெறக்கூடாது. அநாவசிய புகழாரங்கள் தவிர்க்கப்படல்வேண்டும்.

அந்த நிபந்தனைகள் பற்றி எதுவுமே தெரியாத சபையிலிருந்த மாணவர்களும் விதவைத்தாய்மாரும் மற்றும் ஆசிரியர்களும் பலத்த சிரிப்புக்கிடையே கரகோஷம் எழுப்பினர்.

அடுத்த நிகழ்ச்சியாக மாணவர்களின் நிதிக்கொடுப்பனவுகளும் பாடசாலை சீருடை விநியோகமும் நடந்தன. சிறப்பு விருந்தினர்கள் அடுத்தடுத்து மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினர். சில மாணவர்கள் காலில் விழுந்து வணங்கி ஆசியும் பெற்றனர். மூர்த்திக்கு அந்த சம்பிரதாயம் சங்கடமாக இருந்தது. முன்பே தெரிந்திருந்தால் இந்த சம்பிரதாயமும் வேண்டாம் என்ற நிபந்தனையையும் விதித்திருக்க முடியும்.

அனைவருக்கும் குளிர்பானங்கள் வந்தன.

பின்வரிசையிலிருந்த மூர்த்தி பயணித்து வந்த வாகன சாரதி குளிர்பானங்கள் எடுத்துவந்து கொடுத்துக்கொண்டிருந்த ஒரு மாணவியை அழைத்து மூர்த்தியை விரலால் சுட்டிக்காண்பித்து, “ பிள்ளை அந்த சேருக்கு கேட்டுக்கொடுங்கோ. குடிப்பாரோ தெரியாது. அவருக்கு இனிப்பான குளிர்பானம் கூடாது.” என்றான். இதைக்கேட்டு சிரித்தவாறு திரும்பிப்பார்த்த மூர்த்தி, “பரவாயில்லை பிள்ளை. இன்றைக்கு குடிக்கிறன். கொண்டுவாரும்.” என்றார்.

“ பரவாயில்லை சேர் உங்கட சாரதி நல்ல அந்தரங்க செயலாளராகவும் இருக்கிறார்.” என்று சற்று உரத்துச்சொன்னார் பாடசாலை அதிபர். அருகிலிருந்த அனைவரும் அதற்காக சிரித்ததுடன் நிறுத்தியிருக்கலாம் என்று பட்டது மூர்த்திக்கு. சிரிப்புக்கும் அப்பால் ஒவ்வொருவரும் தத்தமக்குள்ள நோய் உபாதைகளைப்பற்றியும் சொல்லத்தொடங்கிவிட்டனர். நிவாரணிகளையும் நிவர்த்திக்கும் வழிமுறைகளையும் அவர்கள் மாறி மாறி சொல்லத்தொடங்கவும் மூர்த்தி நேரத்தைப்பார்த்தார். மதியம் ஒரு மணி கடந்துவிட்டிருந்தது. தனது வெளிநாட்டு நேரத்துடன் அந்த நேரத்தை ஒப்பிட்டு மணக்கணக்குப்போட்டார்.

நிகழ்ச்சி நிறைவுற்றதும் ஒவ்வொருவராக விடைபெற்றனர். முல்லைத்தீவுக்கு புறப்படும் அவசரத்தில் இருந்த மூர்த்தி, சாரதியை அருகில் அழைத்து வவுனியா – முல்லைத்தீவு பாதை பற்றி கேட்டார்.

“பள்ளமும் திட்டியுமாகத்தான் இருக்கும் சேர். மெதுவாகப்போவோம். இப்போது புறப்பட்டால் இருட்டுவதற்கு முன்பு போய்விடலாம். ஒட்டுசுட்டானில் சாப்பிடலாம் சேர்.”

அதிபர் மதிய உணவுக்கு வருந்தி அழைத்தார். கைகுலுக்கி, “ எல்லோரையும் பார்த்ததே மன நிறைவு. இப்போது பசியில்லை. நான் பயணங்களில் சாப்பாடு விடயத்தில் சரியான கவனம் ஐயா. உடம்புக்கு ஏதும் ஆகிவிட்டுதெண்டால் வந்த விடயங்கள் குழம்பிப்போகுமே என்ற கவலைதான். சரி… நாங்க புறப்படுகிறோம்.”

மூர்த்தியும் சாரதியும் அதிபரிடம் விடைபெற்றுக்கொண்டு வாகனத்திற்கு அருகில் வந்தனர். வாகனம் அந்த மாமர நிழலில் நின்றது. அங்கே அந்த சீர்மிய ஆசிரியையுடன் அந்த மஞ்சள் சுடிதார் யுவதி.

மூர்த்தி சிரித்துக்கொண்டே அருகில் வந்தார்.

“ சேர்… இந்தப்பிள்ளை உங்களோடை பேசவேணுமாம் சேர்….” என்றார் சீர்மிய ஆசிரியை.

“ அப்படியா…நீங்கள் எங்கே படிக்கிறீங்க…?”

“ பல்கலைக்கழகத்தில் சேர்….”

“ வாழ்த்துக்கள்… என்ன விசயம்? என்ன பேசவேணும்? சொல்லுங்கோ… நாங்களும் முல்லைத்தீவுக்குப்போகும் அவசரத்தில் இருக்கிறோம்… சொல்லுங்கோ….” என்றார் மூர்த்தி.

“ சேர்…..” என்று இழுத்த அந்த மஞ்சள் சுடிதார், ஏனோ தயங்கியவாறு நிலத்தை நாணத்துடன் பார்த்தது. அருகில் சாரதி நிற்கின்றமையால் பேசத்தயங்குகிறாள் என்பதை மூர்த்தி புரிந்துகொண்டு, சாரதி பக்கம் திரும்பி கண்ணால் சைகை காட்டினார். அவன் அந்த இடத்திலிருந்து அகன்று வெளிவீதிப்பக்கம் சென்றான்.

“ சரி சொல்லுங்கோ.”thumbnail_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0

“ சேர் நீங்க தேடி வந்த பிள்ளைகளில் நானும் ஒருத்தி. எங்கட மிஸ் இவங்கதான். நீங்கள் எங்களையெல்லாம் பார்க்கவேணும், பேசவேணும் என்று சொன்னதாக மிஸ் வீடுதேடி வந்து சொன்னாங்க… ஆனால்… சேர். இங்க இப்போது நடந்ததுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை சேர். உங்கட அந்த வெளிநாட்டு அமைப்பு எங்களை வெளியில் எடுத்து படிக்கவைச்சதுக்கும் பரீட்சை எழுத வைச்சதற்கும் எங்கட அம்மா, அப்பா சகோதரங்களுடன் சேரவைச்சதற்கும் காலம் பூராவும் நன்றி சொல்லுவோம் சேர். சுருக்கமாகச்சொன்னால் நாங்கள் மறுபிறவி எடுத்திருக்கிறோம். இப்போது படிக்கிறோம். பல்கலைகழகம் போய்விட்டோம். இனி எங்கட காலம் வேறுவிதமாகத்தான் இருக்கும். அதனால் இன்றைக்கு நடந்ததுபோன்ற நிகழ்ச்சிகளில் தோன்றி இங்க வரும் பேப்பர்காரர்களுக்கும் அவர்களுடன் வரும் படப்பிடிப்பாளர்களுக்கும் காட்சி கொடுத்து பேட்டி கொடுப்பதற்கு நாங்கள் தயார் இல்லை சேர். மீண்டும் மீண்டும் முன்னாள்… முன்னாள்… முன்னாள்… என்று எத்தனை நாளைக்குத்தான் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறார்கள். எழுதிக் கொண்டிருக்கப் போகிறார்கள். சொல்லுங்க சேர்…” என்று தனது பெயரையே சொல்லாமல் அதேநேரம் மூச்சுவிடாமல் சொன்னாள் அந்த மஞ்சள் சுடிதார் யுவதி.

“ அது இல்லையம்மா…. இன்னும் ஒரு வாரத்தில் நான் வெளிநாட்டுக்குத்திரும்பிப்போகப்போறன். உங்களுக்கு உதவி செய்த அமைப்பிடம் நான் தகவல் சொல்லவேணும். அதற்காகத்தான் சந்திக்கவும் பேசவும் விரும்பினேன்.”

“ நல்லது சேர். சந்திக்கலாம்… பேசலாம்… ஆனால் என்ன நடக்கும்? நாளையோ நாளன்றைக்கோ பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் எங்கட படம் பெயர் எல்லாம் வரும். ஏதோ புண்ணியம் செய்திருப்பதாக உங்கட அமைப்பு பற்றி பக்கம் பக்கமாக எழுதுவாங்க. அதற்கு விமர்சனமும் சொல்வாங்க. படிப்பை குழப்பிக்கொண்டு போனவர்களுக்கு ஏன் உதவினீர்கள் என்று உங்களை கேட்பதற்கும் எங்கள் மத்தியில் ஆட்கள் இருக்கினம். போராடச்சென்ற இவையள் ஏன் சரண் அடைஞ்சார்கள். கழுத்தில் குப்பி இருக்கவில்லையா என்றும் கேட்பார்கள். சரி அதெல்லாம் போகட்டும். நாங்க வாழவேணும். ஒரு காலகட்டத்தில் தேவையின் நிமித்தம் துப்பாக்கி ஏந்திய என்போன்ற பெண்களை மணம்முடிக்க வருபவர்களின் பெற்றோர்களின் விமர்சனங்களை சந்திக்கவேணும். நாங்கள் திருமணம் செய்யவும் வேணும். எங்கட சமூகம் பற்றி இதற்குமேல் நான் என்ன சொல்ல முடியும் சேர். எங்களைப்பார்க்கவேணும் என்ற விருப்பத்துடன் வந்ததற்கு மிக்க நன்றி சேர். உங்கட உதவியை நாங்க மறக்கமாட்டோம்.” என்று சொல்லி அந்த யுவதி விடைபெறும்போது மூர்த்திக்கு தொண்டை அடைத்தது. வந்த விம்மலை சிரமப்பட்டு அடக்கினார்.

“ ஓகே அம்மா, கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். நன்றாக படியுங்க. வேறு ஏதும் உதவி தேவைப்பட்டால் இந்தாங்க…” மூர்த்தி தனது விஸிட்டிங் கார்டை நீட்டினார்.

“ வேண்டாம் சேர். வாழ்நாள் பூராகவும் நாம் பிறரில் தங்கியிருக்கக்கூடாது என்று எங்கட அந்த வகுப்புகளில் படித்திருக்கிறோம். போயிட்டு வாங்க சேர். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்போம்.” அந்த மஞ்சள் சுடிதார் யுவதி சீர்மிய ஆசிரியையும் அழைத்துக்கொண்டு வேகமாகச்சென்றாள்.

அந்த மாமரத்தின் அணிலும் வேகமாகத் தாவி மறைந்தது.

வாகனத்திற்கு அருகில் நின்ற சாரதி கேட்டான், “ யார் சேர் அந்தப்பிள்ளை? உங்களுக்கு முன்பே தெரியுமா? ஏதும் உதவி கேட்டாவா சேர். நீங்கள் அதிபரின் அறையிலிருக்கும்போது என்னிடமும் வந்து பேச்சுக்கொடுத்தாள். உங்களைப்பற்றி விசாரித்தாள். அதுதான் கேட்டேன். யார் அந்தப்பிள்ளை.”

“ பல்கலைக்கழக மாணவி.” என்று சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறினார் மூர்த்தி.

( 2009 இல் ஈழப்போர் முடிவுற்றபின்னர் 2012 இல் எழுதப்பட்ட சிறுகதை)

 

http://akkinikkunchu.com/?p=68602

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மஞ்சள் சுடிதார் மாணவி சொல்வது அத்தனையும் உண்மை......!  tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.