Jump to content

ஒரு கூடைக் கொழுந்து!.. - என்.எஸ்.எம்.இராமையா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு கூடைக் கொழுந்து!.. சிறுகதை…. என்.எஸ்.எம்.இராமையா.

 
ஒரு கூடைக் கொழுந்து!..  சிறுகதை…. என்.எஸ்.எம்.இராமையா.

சிறப்புச் சிறுகதைகள் (20) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – என்.எஸ்.எம்.இராமையா எழுதிய ‘ஒரு கூடைக் கொழுந்து’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்.

“அக்கா எனக்கு எது நெரை?”

கொழுந்து இல்லாத கூடையின் தலைக்கயிறு தோள் வழியாக இடதுகைக்குள் அடங்கியிருக்க, வெற்றுக்கூடை முதுகில் அசைந்துகொண்டிருந்தது. லட்சுமியின் கேள்வி யார் காதில் விழுந்ததோ என்னவோ? பதிலே இல்லை. மற்ற நாட்களாக இருந்தால் அந்த ‘வயசுப்பெண்கள்’ குழுவினர் அவளை ஆளுக்கொரு பக்கமாக இழுப்பார்கள்.

“இங்கே வாடி லெட்சுமி! என்கிட்டே நிரைதாரேன்”

“ஐயோ! லெட்சுமிக்குட்டி! என்கிட்டே நிற்கட்டுண்டி”

நாலாபக்கத்திலிருந்தும் வரும் அழைப்பைக்கண்டு அவள் அரிசிப்பல் தெரியச் சிரிப்பாள். அவளுக்குச் சற்றுக் கர்வமாகக்கூட இருக்கும். இவ்வளவு, கிராக்கியா என்று!

அப்படிப்பட்டவங்கள் இன்று ஒரே மெளனம் அனுட்டித்தனர். எதற்கு இந்த மெளனம் என்று புரியாமல் அவர்கள் முகத்தைப் பார்த்தாள் லெட்சுமி. நிரை பிடித்துக்கொண்டு நின்ற அவளுடைய ‘செட்டு’கள் எல்லாம் சொல்லி வைத்தாற்போல முகத்தை ஒரு மாதிரியாகத் தூக்கி வைத்துக்கொண்டு – கொந்தரப்பு காசும் கொழுந்து காசுமாக ‘முதல் நம்பர் சம்பளம்’ வாங்குபவளை எரிச்சலொடு பார்க்கும் பிள்ளைக்காரி மாதிரி – ஓரப் பார்வை பார்ப்பதைக் கண்டதும் அவளுக்கு எரிச்சலாக்கூட வந்தது.

“என்னடி ஆத்தா உங்களுக்கு வந்த வாழ்வு?” என்று ஒரு வெட்டு வெட்டிவிட்டுக் கடைசித் தொங்கலில் நிரை போட்டுக் கொண்டிருந்த கங்காணிக் கிழவனிடம் போனாள்.

“கங்காணி அப்பச்சி எனக்…”

வழக்கமாக அவளைக் கண்டதும், இருக்கும் இரண்டு முன்பற்களும் தெரியச் சிரித்தவாறு “என்ன ஆயி! இப்பத்தான் வாறியா? போ… போ… முப்பத்திரண்டாவது நிரை ஒனக்கு. அய்யா வர்றத்துக்குள்ளே ஓடு” என்று கனியும்… கிழவன்கூட இன்றைக்கென்று சடசடத்தான். “வாறாக, தொரைச்சாணி அம்மா! வங்க இப்பத்தான் விடிஞ்சுதோ? மொகறையைப் பாரு! நேரம் என்ன ஆவுது? சுணங்கி வாற ஆளுக்கு ஏன் வேலை கொடுத்தேன்னு ‘ஙொப்பன்’ குதிப்பதே! நீயா ‘வதிலு’ சொல்லுவே?”

விடியற்காலை வேளையிலே இப்படி வாங்கிக்கட்ட வேண்டி இருக்கின்றதே என்று அவளுக்கு அங்கலாய்ப்பாக இருந்ததுதான். ஆனால் கணக்கப்பிள்ளை ஐயாவிடமும் கங்காணியிடமும் அதைக் காட்டிக்கொள்ள முடியுமா? அப்புறம் தப்புவதாவது!

“சரி… சரி அப்பச்சி! காலங்காத்தாலே பேசாதீங்க. என்னமோ, என்னைக்கும்போல மத்தக் குட்டிக நெரை புடிச்சிருப்பாளு கன்னு நெனச்சேன். அவுகளுக்கெல்லாம் இன்னைக்கு என்னமோ வந்திருச்சி!”

”நீங்க பண்ணுற காரியங்களுக்கு நெரை வேறே புடிச்சித் தருவாகளோ: – கங்காணிக்கிழவன் எரிந்து விழுந்தான். “தொலைஞ்சுப்போ! கடேசித் தொங்கலுக்கு!”

கீழே இறகி வைக்கப்பட்ட வெற்றுக்கூடை மீண்டும் முதுகுக்குத் தாவியது. கடைசி நிரைக்குப் போய்க் கொண்டிருந்த லெட்சுமியின் பருவத்துப் பின்னழகை அந்தக் கூடையோ, சேலை மேல் கட்டியிருந்த முரட்டுப் படங்குச் சாக்கோ மறைக்கவில்லை.

வழக்கமாகச் கொஞ்சம் அதிகமாகவே றாத்தல் போட விரும்பும் எடுவைக்காரிகள் முதல் தொங்கல், கடைசித் தொங்கலுக்குப் போவதே இல்லை.

முதல் தொங்கலென்றால் ஒழுங்கான நிறை கிடையாது. எல்லாம் குறை நிறைகளாக ஆயிரம் தடவை ஏறி இறங்க வேண்டும். கடைசித் தொங்கலென்றால் பிள்ளைக்காரிகளோடை ‘மாரடிக்க’ முடியாது. ஆடி அசைந்து அம்மன் பவனி வருவதுபோல் எட்டுமணிக்குத்தான் வருவார்கள். ஒருமணிநேரம் ஏதோ பெயருக்கு நாலைந்து றாத்தலை எடுத்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் ‘அடியே ஏங்கொழுந்தையும் நிறுத்துர்றீ….’ என்று பல்லைக்காட்டிவிட்டு லயத்துக்கோ பிள்ளைக் காம்பிராவுக்கோ போய்விடுவார்கள். அவர்களுடைய கொழுந்தையும் நிறுத்துக்கொள்ள வேண்டும், கூடையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். போதா குறைக்கு அவர்களுடைய நிறையையும் சேர்த்து எடுத்துப் போக வேண்டும். இந்தத் தொல்லைகளுக்காகத்தான் அவள் அங்குமிங்கும் போவதில்லை. அவளுடைய கலகலத்த சுபாவமும் எளிமையான அழகும் மற்றப் பெண்களுக்கு மத்தியில் ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தி இருந்தன. ஆகவே அவளை மற்றப் பெண்களும் போகவிடுவதில்லை. ஆனால் இன்றோ?

”ஆமா! இந்தப் ‘பொட்டைச்சி’களுக்கு இன்னைக்கு என்ன வந்தது?” கடை நிரைக்கு வந்து நின்றாள். அந்த மலையிலேயே கடை நிரை, எல்லோரும் சேர்ந்து ஏதோ அவளை மட்டும் ஒதுக்கிவிட்டது போன்ற தனிமை உணர்வு அவளது மனதைப்பிழிய, கூடையை இறக்கி வைத்து இடையில் கட்டியிருந்த படங்குச் சாக்கை அவிழ்த்து, சேலையைச் சற்று முழங்காலுக்குமேலே தூக்கி – இல்லாவிடில் தேயிலைச்செடி கிழித்துவிடுமே! – மீண்டும் படங்கைச் சுற்றிக் கட்டினாள். கறுப்புநிறக் கயிறு அரைஞான் மாதிரி இடுப்பைச் சுற்றி வளைத்தது. கூடைக்குள்ளிருந்த தலைத்துண்டை உதறி, நெற்றியில் பூசிய இரட்டைக்கோடு விபூதி அழியாமல் தலையில் போட்டுக்கொண்ட கூடைக் கயிற்றையும் தலையில் மாட்டிக்கொண்டாள். கடைசியாகப் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த தலைத்துண்டின் பகுதிகளைக் கயிற்றை மறைப்பதுபோல் மடித்துக் கயிற்றுமேல் போட்டுக் கொண்டாள். ஆயிற்று. நிரைக்குத் தயார்!

அப்போதுதான் அவளைக் கவனித்த பக்கத்து நிரைக்கிழவி தன் பொக்கை வாயைப் பிளந்தாள்.

“என்னடி ஆயா அதிசயமா இருக்கு! என்ன இந்தப் பக்கமா காத்து வீசுது?”

கிழவியை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, சூழ்கொட்டிக் கொண்டாள்.

“என்னடி குட்டி கேக்குறேன் ச்சுங்குறே?”

”ஒண்ணுமில்லை அம்மாயி! சும்மாதான் வந்தேன்”

“ஆயாயே! பொல்லாதவதான். சும்மாகூடவர்ற ஆளு இல்லே நீ, என்னதான் நடந்தது?”

லெட்சுமிக்குக் கோபம் வந்துவிட்டது.

”ஒப்புராணை! ஒண்ணுமில்லேங்கிறேன்”

“சரி… சரி…. காலாங்காத்தாலே ஆணையிடாதே”

மெளனமாகத் தேயிலைச்செடியைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு, பனியில் நனைந்துநின்ற கொழுந்துகளைக் கிள்ளத் துவங்கினாள் லெட்சுமி. இரண்டு வீச்சிலே இரண்டு கையும் நிறைந்துவிட்டது. காம்புப்பகுதியைத் திருப்பிப் பார்த்தாள். பரவாயில்லை. எல்லாம் பிஞ்சுக்காம்புதான்! ‘நார்க்குச்சி’ ஒன்றுகூட இல்லை. கிழவியைத் திரும்பிப் பார்த்தாள். அப்போதுதான் கிழவி ஒவ்வொன்றாக மெல்லமெல்லக் கிள்ளிக் கொண்டிருந்தாள். காலைப் பனிக்கும், குளிருக்கும் அவள் கரங்கள் நடுநடுங்கிக் கொண்டிருந்தது.

“அம்மாயி! பொலி சொல்றியா, கொழுந்தைப் போட்டுக்கிர்றேன்…” முதல்பிடிக்கொழுந்தை கூடைக்குள் போடும்போது ‘பொலி’ சொல்வது ஒரு மரபு. சகுனம் பார்ப்பது மாதிரி! கிழவி ‘பொலி’ சொன்னாள்.

“போடு அப்பனே, சம்முகா! பொலியே… பொலி – பொலி – பொலி” லெட்சுமிக்குக் கை வேகமாக விழத்துவங்கியது. பங்குனி மாதப்பச்சை பார்ப்பதற்கே ஓர் அழகு. எடுத்து வெறிகண்டவர்களுக்கோ, அது ஓர் இன்பப்போதைதரும் விளையாட்டு. இளந்தளிர்கள் ‘சடசட’வென ஒடிந்து கொண்டிருந்தன. ஆனால் இன்பப் போதையோடு அல்ல! மனதுக்குள்ளே சிநேகிதிகளின் பாராமுகம் வண்டாக அரித்துக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவளுக்கு அந்திக்கொழுந்து நிறுக்கும்போதுதான் தெரிந்தது.

மாலை நாலுமணி சங்கு ஊதியதும் நிரையிலிருந்து இறங்கி அந்திவெயிலில் உடல் வியர்வையால் புழுங்க எல்லா ஆட்களும் ஸ்டோருக்கு முன்னால் வந்து குழுமினார்கள். கூடையை இறக்கி வைத்துவிட்டுத் தலைத்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள் லெட்சுமி. கூடையில் பொங்கி எழும்பிநின்ற கொழுந்தை ஐந்து விரல்களும் விரிய உள்ள்ங்கையால் அமுக்கிவிட்டுக் கொண்டாள். பெரும்பாலும் எல்லா ஆட்களும் வந்தாயிற்று என்று தெரிந்தவுடன் கங்காணி பணிவாக – முதுகு கூன – கணக்குப்பிள்ளை ஐயாவிடம் போய் “ஆளுக எல்லாம் வந்துருச்சி! நிறுக்கலாந்தானுகளே?” என்று மென்று விழுங்கிக்கொண்டு கேட்டான்.

செக்ரோல் புத்தகத்தில் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த கணக்கப்பிள்ளை ஐயா நிமிர்ந்து ‘லேபர்’ கூட்டத்தைப் பார்த்தார். எல்லோரும் வரிசையாக கூடையை வைத்துக்கொண்டு நின்றார்கள். விரிக்கப்பட்டுக்கிடந்த படங்குச் சாக்குக்கு முன்னால் போய் நின்று கொண்டனர். தராசுமரம் வந்தது. தட்டுக்கூடை வந்தது. நாலு பெண்களும் வந்தார்கள். தராசுமரம் பிடிக்கவும் தட்டுக்கொட்டவும், ஆயிற்று. நிறுக்க வேண்டியதுதான்.. அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்ததுபோல் ‘ஐயா’ ஒதுங்கி ஆட்களுக்கு முன்னால் வந்து நின்றார். அவர் அசைந்து வந்துநின்ற தோரணையும், ஆட்களைப் பார்த்த விதமும், ஏதோ தவறுதலாகக் கறுப்பாகப் பிறந்துவிட்ட வெள்ளைக்காரனைப் போலிருந்தது. பேச்சும்கூடச் சுத்தத் தமிழாக இருக்காது. வெள்ளைத்துரை ஒருவன் சிரமப்பட்டு ‘டமில்’ பேசுவது போலிருக்கும். நாமாக இருந்தால் சிரித்திருப்போம். ‘அது’கள் ‘லேபர்’ கூட்டந்தானே? என்ன தெரியும் அந்தக் ‘கண்ட்றி’களுக்கு? ‘அது’களுக்கு முன்னால் இப்படி ஐபர்தஸ்து பண்ணுவதில் ஒருசில விடலைப் பிள்ளைகளுக்கு என்னமோ ஓர் ‘இது’!

ஆட்கள் எல்லோரையும் அலட்சியத்துடன் ஒருமுறை பார்த்தார் ஐயா, வலதுபுறத்திலிருந்து நேராக ஓடிவந்து கொண்டிருந்த பார்வை லெட்சுமியிடம்வந்ததும் சற்று நின்று மேலும் கீழுமாக ஏறி இறங்கிவிட்டு மீண்டும் இடது கோடிவரை ஓடியது. பிறகு கங்காணி பக்கம் திரும்பி ‘கங்காணி’ என்று கூப்பிட்டார். அதுவரை அவரின் செயல்களைக் கவனித்துக்கொண்டு என்னவோ ஏதோவென்று நின்ற கங்காணி ஓடிவந்து ‘ஐயா’ என்றான். இந்த ஐயாப்பட்டம் போடும்போது ஏந்தான் முதுகு கூனுகிறதோ?

“லெட்சுமியை வர்ச்சொல்லுங்க”

கிழவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. லெட்சுமியை அனுதாபத்தோடு பார்த்துவிட்டு உரத்துச் சத்தமிட்டான்.

“இந்தா ஆயி! இப்பிடி வா, ஐயா கூப்பிடுறாரு…”

லெட்சுமிக்கு குடல் மார்புவரை ஏறி இறங்கியது பயத்தால்.

“நானா அப்பச்சி”

“ஆமாங்கிறேன்”

லெட்சுமி வாய்க்குள்ளே பயத்தால் முனகிக்கொண்டாள்.

“ஐயோ! என்னா எழவு இது!” ஏற்கனவே வெயிலில் கன்றிப் போயிருந்த அவள் முகம் இப்போது பயத்தால் கூம்பியது. அந்தப் பெரிய கூட்டத்துக்கு முன்னால் உடம்பெல்லாம் கூசிக் குறுக வந்துநின்றாள். கைகளைப் பின்புறமாகக்கட்டி, வலது குதிக்காலை ஊன்றி கட்டை விரலினால் தரையில் அரைவட்டம் வரைந்து கொண்டிருந்த கணக்குப்பிள்ளை ஏறிட்டு லெட்சுமியைப் பார்த்தார். லெட்சுமி தலை குனிந்து கொண்டாள்.

“லெட்சுமி”

“ஏன்ங்க” – அவள் பார்வை சற்று மேலேறி இறங்கியது.

”நாலைஞ்சு நாளைக்கு முந்தி இருபத்தஞ்சாம் நம்பர் மலையிலே கொழுந்து எடுத்தேயே, அன்னைக்கு நீ ஒருமணிக்கு எத்தனை றாத்தல் எடுத்தே…?” தனக்குள் இருந்த நினைவு மெல்ல வெளிவந்தது. ஆம், ஐம்பத்தி ஏழு!

“அம்பத்தி ஏழுங்க”

“அம்பத்தி ஏழா! நான்கூட மறந்திட்டேன். ஆனா ஆளுக மறக்க மாட்டாக போலே இருக்கு….” பொறுப்புக் கலந்த ஒரு பார்வை ஆட்கள்மீது ஓடியது. “லெட்சுமி இன்னொருமுறை, அதேமாதிரி, ஒன்பது மணிக்கும் ஒரு மணிக்கும் ஊடே அம்பத்தி ஏழு றாத்தல் எடுத்துக்காட்ட முடியுமா/”

லெட்சுமியின் புருவங்கள் கேள்விக்குறியாக வளைந்தன. மீண்டும் அதேமாதிரி ஐம்பத்தி ஏழு றாத்தலா? ஏன்… எதற்காக…? கங்காணி பக்கம் திரும்பினாள்.

“அப்பச்சி! ஐயா என்ன இப்படி கேட்கிறாரு…?”

“என்னைக் கேட்டா? ஐயாவையே கேளு…”

’ஐயா’வைக் கேட்க முடியுமா? ஆனால் தன்னைக் கேட்பதாக நினைத்துக் கொண்டு பேசத் துவங்கினார். அவர் முகம் சொல்லக்கூடாத விஷயத்தைச் சொல்லச் சங்கடப்படுவதுபோல் சுருங்கியது.

“லெட்சுமி! உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரியும். கணக்குப்பிள்ளைக்கு ‘பொம்புளை கேஸ்’ எவ்வளவு ஆபத்தானதுன்னு. அதிலேயும் நான் கல்யாணம் கட்டாதவன். அப்படிப்பட்டவங்களுக்கு சும்மா கட்டுக்கதையைக் கட்டி விட்டாக்கூட நெசம்னு எங்க மேலிடம் நம்பும். இது உனக்கு நல்லா தெரியும், உன்னைவிட நல்லா எடுக்கக்கூடிய ஆளுக உனக்கு முந்தியே பேரு பதிஞ்சு எத்தனையோ வருஷம் ‘சர்வீசு’ உள்ள ஆளுக இங்கே இருக்கு. அவுகளை எல்லாம்விட போனவருஷம் வேலைக்கு வந்த நீ ஐம்பத்தி ஏழு றாத்தல் எடுத்தது எல்லோருக்கும் ரொம்ப சந்தேகத்தைக் குடுத்திருக்கு. ஆனா இன்னம் யாராவது என்கிட்டே நேரே கேட்கலை. அவுங்களுக்குள்ளே பேச்சு நடக்குதாம்…” கங்காணி, பேச்சு விரசமாய் போவதைக் கவனித்துவிட்டு ஊடே புகுந்தான்.

”இப்ப… அது கிடந்திட்டு போகுதுங்க…”

“இல்லை கங்காணி! நான் இந்தமாதிரி ‘பப்ளிக்’கா விசாரிக்கப்படாதுதான். ஆனா விஷயம் என் சம்பந்தப்பட்டது. அதனாலேதான் ‘ஒடச்சு’ பேச விரும்புகிறேன். அத்தோட லெட்சுமி எங்களுக்கு சொந்தக்காரச்சின்னு ஒரு பிரச்சினை இருக்கு. அதனாலேதான் ஒடச்சிப்பேச நினைக்கிறேன்…” லெட்சுமி பக்கம் திரும்பினார். “லெட்சுமி! என் நிலைமை புரியும்னு நினைக்கிறேன். உன்னாலே மறுபடி எடுத்துக்காட்ட முடியுந்தானே?”

குனிந்திருந்த தலை சட்டென்று நிமிர்ந்தது. ஐயாவை, கங்காணியை அப்புறம் ஆட்களை ஒருமுறை சிலிர்த்துப் பார்த்தது. தூங்கிக்கொண்டிருக்கும் புலியை விலாவில் குத்தினால் இப்படித்தான் துள்ளி எழுந்து முறைத்திருக்கும்.

என்னபுள்ளே மொறைக்கிறே! ஐயா கேட்டதுக்கு வதிலு சொல்லு?”

”எதைச் சொல்வது? ‘ஐயா’ பூடகமாகப் பேசிவிட்டு சும்மா இருந்துவிட்டால், அந்தக் ‘கறை’ நீங்கிவிடுமா? ஐயா முகத்தை ஏறிட்டு வெறித்துப் பார்த்துச் சொன்னாள் லெட்சுமி.

“யாரு முடியாதுன்னா? என்னாலே எடுக்கமுடியும். எடுத்துக் காட்டறேன்” பொங்கி வந்த கண்ணீரை மறைப்பதற்காகப் தலை குனிந்து கொண்டாள். மேட்டிலிருந்து பள்ளத்துக்கு சரேலென இறங்கும் சாரைப்பாம்பு மாதிரிக் கண்ணீர் வழிந்தது. குழுமிநின்ற ஆட்கள் மெளனமாக நடப்பைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளுக்குள்ளே ’என்னதான் நடக்கிறது பார்ப்போம்’ என்கிற மனநிலை இருந்தாலும், வெளிக்குப் ‘பசு’வாக நின்று கொண்டிருந்தார்கள்.

பொதுவாக தோட்டத்துப் பெண்களுக்கு இது ஒரு விதமான மனநிலை. நேரடியாக ஐயாவை, கங்காணியை பகைத்துக்கொள்ளவோ வாதாடவோ முடியாது. பயம், ஆனால் தங்கள் புகைச்சலைச் சுற்றிவளைத்து அவர்கள் காதுக்கு எட்டும்படி செய்துவிடுவார்கள். விஷயம் உடைபடும்போது எல்லோரும் நல்ல பிள்ளைகள் மாதிரி காட்சியளிப்பார்கள். “ஐயோ கடவுளே! எவளோ பொடசக்காரி இப்படி அநியாயமாகச் சொல்லியிருக்கிறாளே!’ என்று அவர்கள் அங்கலாய்க்கும்போது பார்க்கவேண்டுமே! இந்தப் பூனையும் பால் குடிக்குமா கதைதான்.

எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு ஐயா கூறினார்: “ரொம்பச் சந்தோஷம் லெட்சுமி. அதேமாதிரி மறுபடியும் எடுக்கமுடியுங்கிறே. முடியுமோ முடியாதோ எனக்குத் தெரியாது” அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு கூறினார் “நீ கட்டாயம் எடுத்துக் காட்டத்தான் வேணும். இல்லையோ…” அவர் முகம் கடுகடுத்தது. “அப்புறம் நான் பொல்லாதவனா இருப்பேன்” தலைத்துண்ண்டை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டாள் லெட்சுமி. அமைதியாக அவர் பேச்சை ஏற்றுக் கொண்டாள். அவளைப் பயமுறுத்தும் கட்டளையோ பழிவாங்கலோ அல்ல! அவள் கண்ணியத்துக்கு விட்ட சவால்!

சின்னதொரு தகரலாம்பு மினுக்மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. அடுப்பில் சாம்பல் பூத்துக்கிடந்த நெருப்பைக் குனிந்து ஊதிவிட்டான் ஆறுமுகம். நெருப்பு இலேசாகக் கனன்றது. பக்கத்தில் கட்டிக்கிடந்த தேயிலை மிலாருக் குவியலில் இரண்டொரு குச்சியை இழுத்து ‘படக் படக்’கென்று ஒடித்து, அடுப்பில் வைத்து ஊதினான். குப்பென்று தீப்பிடித்தது. குளிருக்கு அடக்கமாக கைகளை நெருப்பருகே காட்டியவாறு ஏறிட்டு லெட்சுமியைப் பார்த்தான். அவளும், அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதைத்தான் எதிர்பார்ப்பதுபோல அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள். அடுப்பருகே சற்று நெருங்கி உட்கார்ந்தவாறு ஆறுமுகம் கேட்டான். “ஆமா! அப்ப என்னதான் செய்யப்போறே?” கனன்று எரிந்த தீயின் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜுவாலை ஒளி அவன்மீது வர்ணப்பூச்சு செய்துகொண்டிருந்தது. “பரிசா அத்தனை கூட்டத்துக்கும் மத்தியிலே வீறாப்பு பேசிட்டாப்புலே பத்தாது, சொன்னமாதிரி செய்யணும். முடியுமா உன்னாலே?”

வலதுகாலை மடக்கிப் பாதத்தை சுவர்மீது பதித்து, சுவரில் சாய்ந்தவாறு அவனைப் பார்த்துச் சிரித்தாள் லெட்சுமி.

“முடியாதுன்னு தெரிஞ்சா சபதம் போடுவேனா?”

“ஆ! கிழிச்சீங்க, அன்னைக்கு என்னமோ நான் சோத்துக்கு வாறப்போ ரெண்டு மூணு ‘ரப்பு’ எடுத்துக் குடுக்காட்டி எடுக்கிறவுக இல்லே…”

லெட்சுமியின் எதிர்காலக் கணவன் அவன். சாயந்தர வேளைகளில் அவன் அவள் வீட்டுக்கு வந்தால் கொஞ்ச நேரம் எல்லாருடனும் பொதுவாகப் பேசிவிட்டு லெட்சுமியுடன் தனியாகக் கொஞ்சம் பேசுவான். அம்மாதிரிச் சமயங்களில் லெட்சுமியின் ‘ஆயாளும் அப்பனும்’ கெளரவமாக ஒதுங்கி விடுவார்கள். அவனும் வரட்டுக் கெளரவத்துடன் திண்ணையிலிருந்தவாறு இரண்டு பேச்சுப் பேசிவிட்டு ஓடிவிடமாட்டான். குடும்பப் பிரச்சினை, வேலைப் பிரச்சினை எல்லாம் அவள் காதுக்கும் சற்று ஈயப்படும். இரவு ஏழரை எட்டுமணிவரைக்கும் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் தன் லயத்துக்குப் போய்விடுவான். அப்படிப்பட்ட காதலனோடு உலகையே மறந்து போதையிலே எதேதோ உளறிக்கொட்டிச் சிரிக்கவேண்டிய வேளையிலே –

வயிற்றுப்பிரச்சினைதான் காதல் பேச்சாக இருந்தது. ஐம்பத்தி ஏழு றாத்தல் பிரச்சினை கூட அவனால் வந்து விடிந்ததுதான். ஆண்களுக்கு வேலை ஒருமணியோடு முடிந்துவிடும். ஆனால் பன்னிரண்டு மணிக்கே கங்காணியிடம் பல்லைக் காட்டிவிட்டு நழுவிவிடும் துணிச்சல்பேர்வழிகளில் அவனும் ஒருவன். அப்படி ஒருநாள் பகல் ‘சோத்து;க்குப் போய்க் கொண்டிருக்கும்போதுதான் அவள் லெட்சுமி மலையின் ‘வங்கி’ ஓரத்திலே தனியாக நின்று கொழுந்து எடுத்துக் கொண்டிருந்தாள். அவளோடு சற்றுப் பேசப்போனவன், பேசிக்கொண்டே கொழுந்து கிள்ளிக் கொண்டிருந்தான். உழைக்கும் கையல்லவா? வாய், பேச்சை மறக்காதபோது கையும் உழைப்பை மறக்கவில்லை. சாகும்வரை அது மறப்பதில்லை! அந்தக் கொழுந்துதான் ஐம்பத்தி ஏழு றாத்தலாக இருந்து ஐம்பத்தேழு பிரச்சினைகளையும் கிண்டிவிட்டிருக்கிறது!

”ஆமா, இப்பிடி செஞ்சா என்ன?” அவனுக்கு ஒரு யோசனை.

“அன்னைக்கு மாதிரி பன்னெண்டு மணிக்கு வந்து எடுத்துத் தரவா?”

“ஐயய்யோ”

“இனி எல்லோருக்கும் என்மேலேதான் கண்ணிருக்கும். இன்னொருத்தர் எடுத்துக் குடுக்கிறதே குத்தம். அதுவும் இப்பவோ?” இரண்டு கரங்களாலும் கன்னத்தைப் பொத்திக்கொண்டு தோள்களைக் குலுக்கினாள். “வேறே வெனை வேண்டியதில்லை”

“அப்ப என்னதான் செய்யிறது?”

“நானே எடுக்கிறேன். முடிஞ்சமட்டும் எடுக்கிறது. முடியாட்டி துண்டு வாங்கிக்கொண்டு மத்த மலைக்குப் போறேன். இல்லே இஸ்டோருக்கு எல பொறக்கப் போறேன். மலையில இருந்தாத்தானே ஐயாமேல சந்தேகப்படுவாங்க?”

பெருமூச்சோடு ஆறுமுகம் எழும்பினான். ‘என்னமாச்சும் பண்ணு’ என்று சொல்லிக்கொண்டு தோளில் கிடந்த மப்ளரைத் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு புறப்பட்டான். லெட்சுமியின் தாய் திண்ணையிலிருந்தவள் மருமகனைக் கண்டதும் பவ்வியமாக எழும்பி ஒதுங்கி நின்றுவிட்டு உள்ளே ஓடிவந்தாள். “ஆயி, அத்தானுக்கு தேத்தண்ணி ஊத்திக் கொடுத்தியா” என்றாள்.

“குடிச்சிட்டுத்தான் போறாக” வாயிற்புறம் அரைத்தூக்கம் தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று ஆறுகுகத்தைக் கண்டதும் இரண்டுதரம் குரைத்துவிட்டு வழக்கமாக வருகிற ஆசாமி என்று தெரிந்ததும் மீண்டும் சுருண்டுபடுத்தது.

ஒருமணிக்கொழுந்து நிறுவையாகிக் கொண்டு இருந்தது. அது நல்லகொழுந்து உள்ள மலை; ஆகவே எல்லோரும் சாப்பிடப்போகாமல் நின்று எடுத்திருந்தார்கள். நாற்பது ஐம்பது என்று றாத்தல் விஷமாக ஏறிக்கொண்டிருந்தது. படங்குச்சாக்கில் ஓர் ஆள் உயரத்துக்குக் கொழுந்து எழும்பி நின்றது. சாக்கிலே கொழுந்து அமுக்கும் பெண்களும் சாக்குப்பிடிக்கும் பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். நிறுப்பதற்காக காத்து நின்ற வரிசை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. லெட்சுமியின் முறை வந்தது. சாக்குக்காரன் லெட்சுமியின் கூடையைத் தூக்கினான். அது கல்லாகக் கனத்தது. அடியிற் கையைக் கொடுத்துத்தூக்கித் தட்டில் கொட்டப் பார்த்தான். முடியவில்லை. காலால் மிதித்து அமுக்கப்பட்ட கொழுந்து சீமெந்து மாதிரி இறுகிப்போய் இருந்தது. மாமுல்படி தனது முழங்காலால் கூடையின் வாயிற்புறத்தை இரண்டு மோது மோதி நாலைந்துதரம் உலுப்பினான். கொழுந்து பிரிந்து கொட்டத் துவங்கியது. கட்டி மண்ணாக பொல பொலவென்று உதிர்ந்து கொட்டிய கொழுந்து தட்டைக் கூடையில் நிரம்பி தராசு அடிதொட்டி எழும்பி, கோபுரம் கட்டியதைப் பார்த்ததும் கணக்கப்பிள்ளையை திரும்பிப் பார்த்தாள், லெட்சுமி!

ஐயா குவிந்து நின்ற கொழுந்தைப் பார்த்தார். கொழுந்தா அது? நார் பிடித்த வெறும் முற்றல் இலையும் மொட்டைப் புடுங்குமாக இதையெல்லாம் எடுத்திட்டா சரியா? கங்காணியைக் கூப்பிடு என்றார்.

“என்ன கங்காணி கொழுந்தா இது… லெட்சுமிகிட்ட கொழுந்து இன்னைக்கு எடுக்கவா சொன்னீங்க?”

“ஆமாங்க! ஒம்பதுமணி நிறுவைக்குப் பொறகு வந்து இன்னைக்கு எடுத்துக்காடறேன்னு சொல்லிச்சுங்க. சாச்சிக்கு நாலு ஆளைவச்சு எடுக்கச் சொன்னேங்க”

“சரி, ஆனா இப்படியா எடுக்கிறது? நாருக்குச்சியும் முத்த எலையுமா இதா கங்காணி கொழுந்து?”

”துப்பரவுபண்ணி தரச்சொல்றேன். றாத்தலைப் பாருங்க”

தராசுமரம் பிடிக்கும் பெண்களைப் பார்த்தார். அந்தப் பெண்கள் தராசில் கயிற்றை மாட்டிக் தூக்கினார்கள்.

தூக்கிய கைகள் நடுங்கின. தராசில் றாத்தல் காட்டும் கம்பி ‘ஜம்’மென்று மேலே ஏறி கீழே இறங்கி ஆடி நின்றது. அறுபத்தி ஒன்று!

சொன்னதுக்கு மேலாக நான்கு றாத்தல் கூடவே இருந்தது.

“அறுவத்தியோர் றாத்தல் இருக்குது கங்காணி. யாரு வேணும்னாலும் வந்து பார்த்துக் கொள்ளலாம்”

ஐயா ஒதுங்கி நின்றார். ஆனால் யாரும் போய்ப்பார்க்கவில்லை. அவ்வளவுக்குத் துணிந்து யார் போவார்கள்?

தராசுமரம் பிடிக்கும் பெண்களின் கரங்கள் வேகமாக நடுங்கத்துவங்கின. தட்டை இறக்கிவைக்குபடி கையை அமர்த்திவிட்டுக் கங்காணியைப் பார்த்து ‘ஐயா’ கூறினார்.

”ஆனா கங்காணி இந்த அறுவத்தியோர் றாத்தலையும் தர முடியாது. இருவது றாத்தல் வெட்டப்போறேன். கொழுந்திலே அவ்வளவு பழுது இருக்கு” லெட்சுமிக்கு தூக்கிவாரிப் போட்டது. கங்காணிக்கும் கூடத்தான்.

“ஐயா!” கங்காணிக்கிழவன் வெறித்துப் பார்த்தான். விடுவிடென்று லெட்சுமி அருகில்போய் அவளது வலதுகையின் ஆள்காட்டி விரலைப்பிரித்து அவர் முன் காட்டினான். அந்த விரலின் ஓரப்பகுதிகள் இரண்டும் தோல் கிழிந்து இரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தன!

“இதைப் பார்த்துவிட்டுப் பேசுங்க ஐயா, இது நல்ல கொழுந்தோ, கெட்ட கொழுந்தோ, இவ்வளவையும் எடுத்தது இந்தக் கையி! இந்த றாத்தலைத் தரமாட்டேன்னு சொல்றீங்க.”

லெட்சுமியின் கைகளைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார். அவர் கை தானாகவே துண்டை வாங்கிக் காலைக் கொழுந்தின் றாத்தலோடு அறுபத்தி ஒரு றாத்தலையும் கூட்டிப்போட்டுத் திருப்பிக் கொடுத்தது.

சபதம் நிறைவேறாவிட்டால் மற்ற மலைக்கு மாறிப் போகிறேன் என்று சொன்னவள் சபதம் நிறைவேறிய பின்பும் அந்த மலையில் நிற்க விரும்பவில்லை. அவள் போனபிறகுதான் ‘ஐயா’வுக்கு அவள்மீது உண்மையில் காதல் பிறக்கத் துவங்கியது!

 

http://akkinikkunchu.com/?p=69396

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தினக்கூலி வேலைகள் நடக்கும் இடத்தில் இதுபோன்ற கூத்துக்கள் நடப்பது வழமைதான்.அதுவும் கொழுந்து எடுக்கும் இடத்தில் சொல்லி வேல இல்ல....!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.