Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காணாமற்போனவர்கள்- பொ.கருணாகரமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமற்போனவர்கள்- பொ.கருணாகரமூர்த்தி

 
%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%

நேற்று முழுவதும் வந்திருந்து முற்றத்தைத் தேய்த்து ஒராறு கண்ணீர் ஊற்றிவிட்டுப்போன அந்த நடுவயதுத் தம்பதி இன்றும் வந்திருந்து அரற்றினர். “ ஐயோ ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். யாரோ நாதாரியள் எங்கட பிள்ளை பார்த்தனன்தான் செம்மியனைப் போட்டவன் என்று கொடுத்த அநியாயத்தகவலால்………. அவனை உங்கட  தாசந்தான் பிடிச்சு வைச்சிருக்கிறாராம்.  அந்த அப்பாவிக்குழந்தையை  எங்களிட்ட மீட்டுத்தந்திடுங்கோ ஐயா…………” என்றபடி அவரின் கால்களில் விழுந்தனர்.

செம்மியன் பார்த்தனனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி அவனது ஐந்து இலட்சத்தை வாங்கி ஏப்பம் விட்டதால அவன்மீது கோபத்தில இருந்தவன்தான், ஆனாலும் அருளல் மறைத்தல் போன்ற சாங்கியங்களில் இறங்கக்கூடிய அளவுக்கு ஓர்மங்கொண்டவனல்ல.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு 200 கி.மீட்டர் தொலைவுதான், ஆனாலும் போர் உக்கிரமாயிருந்த காலத்தில் அத்தனை சோதனைச் சாவடிகளும் தாண்டிக்கொண்டு திருகோணமலைக்குச் சென்று திரும்புவதென்பது யாருக்கும் அத்தனை இலகுவான காரியமல்ல. போராளிகளின் சாவடிகளில் தான் இன்னாரின்  ‘அப்பா’ என்று சொன்னாலே போதும் தனிமரியாதை கிடைத்துவிடும், அதுவே இராணுவத்தின் சோதனைச் சாவடியில் தெரிந்துவிட்டால் அவரின் மீட்சியே கேள்விக்குரியதாகிவிடும். நவத்தாரின் சந்தனப்பொட்டும் புன்னகை நிறைந்த முகமும் அவரை ஒரு போராளியின் அப்பாவென நினைக்க வைக்காது, ஆனாலும் யாரேனும் சோஸியல் சேர்விஸ் நாராயணன்கள் அறிவித்துவிட்டர்களாயின் ஆபத்துத்தான். இடர்கழி (றிஸ்க்) நிரம்பிய ஒரு பயணம் அது. பார்த்தனனின் பெற்றோர்கள் ஒன்றுக்கு மூன்று தடவையாக வீடுதேடிவந்து அம்மாவும் அப்பாவுமாக அவர் காலைப்பிடித்துக்கெஞ்சியபோது அவராலும் வீட்டில் நிம்மதியாக இருக்கமுடியவில்லை.  ‘உங்கள் பயணத்துக்கான அத்தனை செலவுகளும் நாங்கள் தருகிறோம் அய்யா’என்றபோது அதை அவர் மறுத்துவிட்டார்.

கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஒன்றுக்கான காட்டிக்கொடுத்தலே சிக்கலுக்குக்காரணம். அவர்களது மகன் பார்த்தனனிடம் வெளிநாடு போவதற்கு என்னட்டை ஏஜென்ட் இருக்கு, கண்டிப்பாய்  நான் உன்னை இரண்டு மாதத்தில் பாரீஸுக்கோ பேர்லினுக்கோ அனுப்பித்தாறன்  பேர்வழியென்று செம்மியன் 5 இலட்சம் ரூபாவைச் சுருட்டிவிட்டான். ‘நீ வெளிநாட்டுக்கு அனுப்பாவிட்டாலும் பரவாயில்லை நான் தந்த ஐந்து லட்சத்தையும்  திருப்பித்தா அப்பனே’ என்று கேட்டபோது செம்மியன்  ‘அதெல்லாம் ஏஜென்டிடம் கட்டியாச்சு வேணுண்டால்….. நீயே போய் அவனிடம் கதைச்சு வாங்கிக்கொள்’ என்ற மாதிரிப்பேசி அனுப்பியிருக்கிறான், 

பார்த்தனுக்குக் குழப்பமாயிருந்தது நிஜமாகவே செம்மியன் வேறு ஏஜென்ட் யாரிடமோ பணத்தைக்கொடுத்து மாட்டிவிட்டனோ என்னதான் நடந்ததென்று தெரியவில்லை. அப்படி மாட்டியிருந்தால் அதுக்கான பொறுதியான ஒரு பதிலை அல்லவோ தரவேணும், அதைவிட்டிட்டு ஏதோ ஆயிரம் இரண்டாயிரம் ரூபாமாதிரி  நீயே போய்க்கதைச்சு வாங்கிக்கொள் என்றமாதிரியான செடில்கதைகளை   விடுகிறான். முள்ளில போட்ட சேலைமாதிரிப் பக்குவமாய்ச் சேதாரமில்லாமல் கழற்றி எடுக்கவேணும்.

அதற்கிடையில வேற ஆட்கள்  ‘இரண்டு இலட்சம் கட்டினால் கட்டாருக்கும் பாஃறேனுக்கும் போகலாம்……….. செம்மியனை ஊம்பிற நேரம் வாடா அங்கபோவம்’ என்றெல்லாம் அழைத்தார்கள். கிடந்த நகைநட்டெல்லாம் விற்றுக்கொடுத்த ஐந்து இலட்சத்தை விட்டிட்டு கட்டார் போனால் செம்மியனிடம் பிறகு காசைவாங்கவே முடியாதென்பதால் அவர்களையெல்லாம்  ‘கொஞ்சம் பொறுங்கோடா இந்தக்காசுக்கு ஒரு வழிகண்டிட்டுத்தான் நான் வெளிக்கிடுவன்’ என்று சொல்லிச்சுணங்கினான். 

இரும்புக்கடைமாதிரி ஒரு மிதியுந்தில உன்னிக்கொண்டுதிரிந்த செம்மியன் இப்போது Yamaha 250 Twin  விசையியுருளியில பறக்கத்தொடங்கவும் பார்த்தனின் சந்தேகம் வலுக்கத்தொடங்கியது. அதன் பின்னாலே வேறு ஆட்களிடமும் வெவ்வேறு இடங்களில் விசாரித்ததில் பார்த்தனுக்கு செம்மியன் மற்றும் பலரிடம்  இதே மாதிரி  ‘உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன்’ என்று சொல்லி இதேபோல் பல இலட்சங்களைச் சுருட்டிய செய்தி மெல்லமெல்லத் தெரிய வருகிறது. ஒருநாள் ஆற்றாமையில்போய்  “ நீ வாங்கினமாதிரி ஒரு மாதத்துக்குள்ள என்னுடைய காசைத்திருப்பேல்ல என்றால் அதுக்காக பின்னர் நீர் கவலைப்பட வேண்டிவரும்……… அதைத்தான் கடைசித்தடவையாக உனக்குத் தெரிவித்துப்போக வந்திருக்கிறேன்” 

“என்ன ஏதோ புடுங்கியடிச்சுப்போடுவன் என்றமாதிரிப் புளுத்திறாய்……….. இயக்கத்திட்டச்சொல்லிப் பிடுங்கிப்போடுவியாக்கும்…….. எங்களுக்கும் இயக்கத்தில செல்வாக்கு இருக்காக்கும் உந்தப்பருப்பெல்லாம் என்னட்ட வேகாது கண்டியோ…… நீ மெல்ல மாறு” என்று அவன் எகிறவும் இவன் ரத்தம் தகிக்கத் திரும்பி வந்து விட்டான். 

இரண்டாம் நாள் விசையுந்தில் தனிய வந்துகொண்டிருந்த செம்மியன் ஒழுங்கைக்குக்குறுக்கே கம்பியைக்கட்டி விழுத்தியும் மண்டையில் அடித்தும் நாரி முறித்தும் கொல்லப்பட்டான். வி.பு.இயக்கத்தின் காவல்துறை முதலில் பார்த்தனனைக் கைதுசெய்தது.

நவத்தார் சிற்றுந்துகள் பலமாறி ஒரு பகல் முழுக்கப்பயணித்து திருமலையை அடைந்தபோது  அவருக்கு யாரை விசாரிப்பதென்று தெரியவில்லை. இரண்டு இயக்கப்பெடியள் சீருடையில் ஏறிக்கொண்டு வந்த ஒரு விசையுந்தை மறித்து  “தம்பியவை நான் ஈழமோகனின் அப்பா………. அவரை எங்கள் குடும்ப அலுவல் நிமித்தம் அவசரம் ஒருக்கால் சந்திக்கவேண்டிக்கிடக்கு, என்னை அவரிட்ட  கூட்டிப்போகமுடியுமே….?” என்றார்.

இருவரும் உடனே ஒன்றுஞ்சொல்லவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதிகாத்து நின்றனர்.

“ என்னாம்பியவை ஒண்டுஞ்சொல்றியளில்லை……………”

“ அப்பா அவரை நினைச்ச மாத்திரத்தில யாரும் பார்க்கேலா……… உதிலவாற கடையில  ஒரு தேத்தண்ணி குடிச்சுக்கொண்டிருங்கோ…….. நாங்கள்போய் மேல பொறுப்பாளரிட்ட விசாரிச்சுக்கொண்டுவந்து முடிவு சொல்றம் ”

என்றுவிட்டு விசையுந்தை முடுக்கிக்கொண்டு இருவரும் பறந்தனர். 

(வி.பு. இயக்கம் ஒருகாலம் நடுவயது கடந்த அனைவரையும்  ‘அப்பா’ என்றே அழைத்தனர்) அவர்கள் காட்டிய திக்கில் நவத்தார் தேடியபோது அங்கே தேநீர்க்கடைகள் எதையும் காணவில்லை. நாலுமுழ வேட்டியை மடித்துச்சண்டிகட்டிக்கொண்டு மேலும் அவர்கள்போன திசையில் நடந்தார். வீதியோரத்தில் ஒரு பாலைமரத்தின் அருகில் நாலு காயாமரக்கம்புகளை நட்டு தரப்பாள் கூரைபோட்டு அதனுள் சாரமணிந்து மேலே பெனியன் மட்டும் போட்டிருந்த ஒருவர் தேநீர்க்கடை வைத்திருந்தார். அவரிடம்

“தம்பி ஒரு பிளேன்டீ போடும்” எனவும் கடைக்காரர்:

“ அப்பா…….. ஒரு தேநீர் அல்லது சாயநீர் போடுங்கோ என்று சொல்லுங்கோ…….. இயக்கம் அறிஞ்சால் பிசகு “ என்றார்.

“ அப்ப அந்தப்பெட்டிக்குள்ள வட்டமாய் குண்டாய் இருக்கிறதை நான் பணிஸ் என்று சொல்லலாமோ…….அல்லது அதுக்கும் வேறேதும் பெயர் சூட்டியிருக்கிறியளோம்பி…. ” 

“ அப்பா பணிஸை நீங்கள் மெதுவன் அல்லது வெதுப்பு-அப்பம் என்றுதான் சொல்லவேணும்”

“ அப்ப ஒருவேளை உம்மட்டை பாலப்பமும், வெள்ளையப்பமும் இருந்துதென்றால்…….. அதுகளை நான் என்னெண்டு சொல்றது……….தம்பி ”

“ அப்பம் எண்டுறது அச்சாத்தமிழ்ச்சொல்லுத்தானே…… அதுகளை நீங்கள் பாலப்பம், அப்பம், வெள்ளையப்பம் என்றெல்லாம் வடிவாய்ச்சொல்லலாம்.”

“ ஏம்பா எதை எப்படிச்சொல்றது என்று ஒரு போட்டை எழுதிவைக்கலாமே நீர்”

“ அட நீங்களொண்ணு…கடையையே இன்னும் இரண்டுகிழமையில தூக்கவேணுமெண்டு உத்தரவு வந்தாச்சு……. இதுக்குள்ள போட்டை எங்க நான் வைக்கிறது………”

“ யார் அப்பிடி உத்தரவு போட்டாக்கள்?”

“ என்ன அப்பா தெரியாத மாதிரிக்கேட்கிறிய………இப்ப ஆரிஞ்ச பெரிய ஆட்கள் அவையள்தான்….”

” அய்யா……… தொலைவிலயிருந்து வாறியளோ…… பேச்சைப்பார்க்க யாழ்ப்பாணம்  போலகிடக்கு ”

ஈழமோகன் இப்போ திருமலை மாவட்டத்தின் உளவுத்துறையின் தலைவனாகிவிட்ட விஷயம் எதுவும் தெரியாமல் நவத்தார் தேநீர்க்கடைக்காரரிடம் பழமைபேசியபடியே மெதுவனுடன் தேநீரைச் சுவைத்துக்கொண்டிருந்தார்.

“ அய்யா காத்திருக்கிறதைப்பார்க்க யாரையோ எதிர்பார்த்திருக்கிற மாதிரிக்கிடக்கு”

“ எனக்கு ஒரு சொந்தப்பிரச்சனை சம்பந்தமாய் ஒரு இயக்க ஆளைத்தான் சந்திக்கவேண்டியிருக்கு., அதுதான் காத்திருக்கிறன்”

“ ஏதோ பேசி நல்லமுடிவாய் எடுத்தால்ச் சந்தோஷந்தான் ” 

இப்போது இரண்டு விசையுந்துகள் சீறிக்கொண்டு வந்தன. ஒன்றில் முன்னர் வந்த போராளிகள் இருவரும் இருந்தனர், மற்றையதில் புதியவன் ஒருவன் இருந்தான். முதல் வந்த போராளிகள் ஐம்பது மீட்டர்கள் முன்னே விசையுந்தை நிறுத்திக்கொள்ள மற்றவன் தேநீர்க்கடையடியில் வட்டமடித்து  “அப்பா வாங்க……” என்று நவத்தாரிடம் சொல்லிவிட்டு தனது விசையுந்தை மற்ற விசையுந்து நின்றவிடத்துக்குச் செலுத்தினான். நவத்தார் அவர்களை அண்மிக்கவும் முதலில் வந்தவர்களில் ஒரு போராளி சொன்னான் “ஈழமோகன் இப்போ பணியில இருக்கிறார் அய்யா, அவரை இன்றைக்கு நீங்கள் பார்க்க முடியாது, அடுத்த கிழமை தானே வீட்டுக்குவந்து உங்களைப் பார்க்கிறதாகச் சொல்லியிருக்கிறார் அய்யா……….”

“ அய்யோ….. தம்பிமாரே ஒரு முக்கியமான தலைபோகிற காரியம் நான் அவனை ஒரு பத்து நிமிஷம் என்றாலும் இண்டைக்குப் பார்த்துக் கதைக்கவேணும் அதுதான் இவ்வளவுதூரம் செலவை அலைச்சலைப்பாராமல் வந்தனானென்று அவனிட்டச் சொல்லுங்கோ”

“ இருங்கோ அப்பா…….. இன்னுமொருக்கால் கேட்டுப்பார்க்கிறம்……… ” என்றுவிட்டுச் சற்றுத்தள்ளிப்போய் தொலைப்பன்னியை நோண்டினார்கள். அதிலிருந்து சிள்வண்டுபோலொரு இரைச்சல் வந்தது. ஈழமோகன் என்ன சொன்னானோ தெரியவில்லை. புதியவனின் விசையுருளியில் அவரை ஏறச்சொன்னார்கள்.

திருகோணமலையிலிருந்து மூதூர் செல்லும்  A15 வீதியில் விசையுருளிகள் அரைமணிநேரம் விரைந்தன. இருமருங்கிலும் மந்துக்காடுகளும், ஈச்சம்பற்றைகளுமே இருந்தன. திடுப்பென விசையுந்தை இடதுபக்கமாகத் திருப்பி ஒரு சிற்றொழுங்கைக்குள் திருப்பினர், அதிலும் நாலைந்து கி.மீட்டர் சென்றபின்னர்  “ கொஞ்சம் இறங்குங்கோ அப்பா இனி எங்களுடைய நடைமுறை ஒன்றிருக்கு’ என்று அவரை இறக்கிவிட்டு அவர் கையில் வைத்திருந்த பையை ஒருவன் வாங்கிக்கொள்ளவும்  மற்றவன் அவரின்கண்களை கறுப்புப்பட்டியொன்றினால்  சுற்றி கட்டினான். மறுபடியும் அவரை ஏற்றிக்கொண்டு விசையுந்துகள் மேடும்பள்ளமுமாயிருந்த பாதையில் விரைந்தன. பிறகும் அரைமணிநேரம் சுழன்று சுழன்று ஓடியபின் வெளித்தோற்றத்தில்  வயற்காடுகளில் காவலுக்குப் போடும் குடிசைபோல ஆனால் சற்றே விஸ்தீரணமாய் ஒரு வீடுபோலிருந்த  குடிசை முன்பதாக விசையுந்துகள்  நின்றன. அங்கே சில போராளிகள் வாழ்ந்தார்கள். சிலபோராளிகள் முன்னே வந்து இவர்களை அடையாளங்கண்டபின்னரே உள்ளே செல்ல அனுமதித்தார்கள். இவரது கறுப்புப்பட்டி அவிழ்க்கப்பட்டது. முன்பக்கத்தில் தரைக்குச்சீமெந்து மெழுகிய ஒரு சிறிய விறாந்தை. அதில் நாலுகதிரைகள் போடப்பட்டிருந்தன. அடுத்து பலகையால் அடைப்பிடப்பட்டிருந்த ஒரு செவ்வகஅறை அதன்பின் ஒரு சாய்மானத்துடன்கூடிய ஒத்தாப்பிருந்தது, அவ்வொத்தாப்புக்குட்தான் சமையலாக இருக்கவேண்டும்.” ஐயா இருங்கோ  தோழர் வருவார்…………” என்றுவிட்டு போராளிகள் ஒத்தாப்புக்குள் நுழைந்தார்கள். எந்தப்பாதையால் எப்படி ஓடினாலும், Clappenburg இராணுவமுகாமுக்கண்மையில்த்தான் இவர்களது பாசறையும் இருக்கிறது என்பதை நவம் அறிவார், ஆனாலும்  அதுபற்றி அவர் மூச்சுவிடாமலுமிருந்தார். முகாம் அமைக்க இடமில்லாமல் இராணுவத்தின் கவட்டுக்குள் கொண்டுபோய் போட்டிருக்கிறாங்கள். அவர்களது அத்துணிச்சல் நவத்தாருக்கு  அசட்டுத்துணிச்சலாகவும்,  அடிமுட்டாள்த் தனமாகவுமிருந்தது சற்று நேரத்தில் இவரை அழைத்துவந்த போரளிகளிலொருவன் ஒரு கிளாஸில் தேநீரும் சிறிய பனங்கட்டித்துண்டும் இன்னொரு கிளாஸில் தண்ணீரும் கொண்டுவந்து கொடுத்தான். நவத்தார் அதைக்குடித்து முடித்துவிட்டுக் காத்திருந்தார். ஆறேழு மணி நேரம் பயணம் செய்துவந்தவருக்கு கதிரையில் நிறுதிட்டமாக உட்கார்ந்திருக்க அசௌகரியமாக இருந்தது. எழுந்து விறாந்தையில்  நடந்தார். யாரோ மாவீரர்களுடையதாக இருக்கவேண்டும் பயில்முறைத்தனமாக (கத்துக்குட்டித்தனமாக) வரையப்பட்டு சட்டமிடப்படாது அங்கே தொங்கிக்கொண்டிருந்த இரண்டு படங்களை மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தார். அலுப்புத்தட்டவும் அடிவயிற்றில் மெல்லக் கிளம்பிய பசியையும் பொருட்படுத்தாது  விறாந்தையில் மேலும்கீழும் நட்ந்தார், அவருக்கு விறாந்தையை அடுத்துள்ள அறைக்குள் யாரோ நடமாடுவதன் அசுமாத்தமிருக்கவும் பலகை இடுக்குக்குள்ளால் உள்ளே பார்த்தார். அரைக்காற்சட்டையும் கைகளில்லாத நீல பெனியனும் அணிந்திருந்த ஈழமோகன்,  அங்கே யாரிடம் பிடுங்கியதோ கொலுவாகநின்ற Triumph Thunderbird  விசையுந்தொன்றை தேய்த்துத் துடைத்துப் பளபளப்பாக்கிக் கொண்டிருந்தான். 

அப்பாவை வெளியே காத்திருக்க வைத்துவிட்டு உள்ளுக்கு நிதானமாக விசையுந்தைத் துட்டைத்துக்கொண்டிருக்க எப்படி முடிகிறது இவனுக்கு? தெருமின்விளக்குக்கம்பத்தையே முதுகுக்குப்பின்னால் ஒளித்துவைக்கக்கூடிய உயரம். பத்தாவதே சித்தியெய்தாமல் தவண்டை அடித்துக்கொண்டிருந்தான், 

பின் படிப்பிலிருந்து விடுதலைபெற்றுக்கொண்டுபோய் திருவையாறிலும் விசுவமடுவிலும் மிளகாய்பயிரிட்டான். மிளகாய்ப்பயிர் மதாளித்து வளர்ந்து காய்த்துக்குலுங்கவும் தருமபுரத்திலிருந்து கூலிக்குப்பெண்களைப்பிடித்துவந்து ஆய்வித்தான். அப்படிப்பழங்களை ஆயவந்தவர்களில் கவுணோ, பாவாடையோ எது அணிந்துவந்தாலும் மேலே துப்பட்டாவோ துண்டுத்தாவணியோ என்று துணியமுடியாதபடியான  துணி ஒன்றைச் சுற்றிக்கொண்டு வந்து வேலைசெய்த சுதாகினி என்பவளின்  பேச்சுப்பாவனைகளில் கொஞ்சம் படிப்பு வாசனை வீசவும் அந்நங்கையை அணுகி அவள் பூர்வீகத்தை விசாரித்தான்,  அவளின் கதையோ சோகம் மிகைத்துச் சிக்கல்களோடு வேறுமாதிரியானதாக இருந்தது. கொத்தனாரான அவளின்  அப்பா இவளையும் மூன்று சகோதரங்களையும் தாயையும் தவிக்கவிட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன்போய் வாழ்வதாகவும், இப்போ தன் குடும்பம்  தர்மபுரத்தில் புறம்போக்கு நிலமொன்றில் குடிசைபோட்டு வாழ்வதாகவும் வயிற்றுப்பாட்டுக்காகவே தான் தாயுடன் மிளகாய் ஆயவந்ததாகவும் சொன்னாள். தகப்பன் இப்படித் தங்களைக் கைவிடாவிட்டால் இவ்வேளை தான் இளங்கலை தேறியிருப்பேன் என்றும், முன்னம் தன்னில் மிகுந்த பாசமாயிருந்த அப்பன்காரன் சிறிதுகாலம் தன்னைக் கூட்டிக்கொண்டுபோய் சித்தியுடன் வாழ்ந்த வீட்டில் வைத்திருந்ததாகவும், நாளாகவாக வழக்கமான சித்திகளைப்போல் அவளதும் செடிலும் சேட்டைகளும் தாங்கமுடியாமல் தான் அவர்களை விட்டுவிட்டு தாயுடனேயே வந்துவிட்டதாகவும் சொன்னாள்.

ஈழமோகனின் வீட்டுக்கு தெற்குப்புறமாக சிறிய தோட்டமொன்று இருந்தது. தோட்டத்துக்கும் பின்னால் சிறிய பனங்கூடல். அவனது தாயார் வண்ணக்கிளி வெங்காயம் அறுவடை செய்திருந்த தோட்டத்தில் ஆடுகளை மேயக்கட்டிக்கொண்டிருக்கையில் பனங்கூடலுக்குள் ஷெல்லொன்று விழுந்து வெடித்தது. நல்வாய்ப்பு எவருக்கும் எந்தப்பாதிப்பும் இல்லை என்று மகிழ்ச்சியாக இருந்தார்கள். இரண்டுமணிநேரம் கழித்து வர்ணக்கிளிக்கு வலதுமார்புக்குக்கீழாக ஒரிடத்தில் எரிச்சலாகவும் எதுவோ குத்தியதைப்போலுமிருக்க இரவு நவத்தாருக்கு மட்டும் சொன்னாள். அவர் ஏதும் பூச்சியைப் பூரானைக்கடித்திருக்கும் என்றுவிட்டு பிளாஸ்டர் போட்டுவிட்டார். அது சிலதினங்களிலேயே அக்காயம் ஆறிவிட்டது. பின்னர் ஒரு ஆறு மாதங்கள் கழித்து அதேயிடத்தில் சற்று ஆழமாக வலியிருக்கவே யாழ்ப்பாணம் ஆஸ்பத்தரிக்குப்போகவும் அவர்கள் தங்களிடம் எக்ஸ்கதிர்க்கருவிக்கான ஃபில்ம் தீர்ந்துவிட்டதாகவும் இரண்டுவாரங்கள் கழித்துவரச்சொல்லிப்பணித்தனர்.  நெஞ்சின் கொதிவலியைத்தாங்கிக் கொண்டு போனபோது எக்ஸ்கதிர்ச்சோதனையில் அவளது நெஞ்சறையின் இணைக்கசியத்துள் மூன்றாவது விலாவெலும்பின் மட்டத்தில் ஷெல்லின் உடைந்த சிம்பொன்று இறுகியிருப்பதையும் அதைச்சூழவுள்ளகாயம் நீர்கட்டி வனைஞ்சிருப்பதையும் கண்டுபிடித்துச் சத்திரசிகிச்சை செய்தனர்.

 “எங்க அம்மாவுக்கும் மார்பில் செய்தவொரு ஒப்பிரேஷனுக்குப்பிறகு கொஞ்சம் பலவீனமாய் வீட்டில இருக்கிறா, உமக்குச் சம்மதம் என்றால் நீர் எங்கடவீட்டிலபோய் அம்மாவுக்கு ஒத்தாசையாய் இருக்கிறீரா……… அங்கே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சோறுவடிச்சுக்கொடுத்தால் சரிதான், அதைவிட உமக்குப் பெரிசாய் வேலை ஒன்றுஞ்செய்யவேண்டியிருக்காது,.”

அவள் சம்மதிக்கவும் ஈழமோகன் அவளை அழைத்துக்கொண்டு சுந்தராவத்தைக்கே வந்துவிட்டான். யார்வீட்டுக்குமரோ ஏதேனும் இசகுபிசகாக நடந்திட்டால் யார் பொறுப்புக்கூறுவது என்று அவன் அம்மா வண்ணக்கிளிதான் கொஞ்சம் தயங்கினார், பின்னம் வண்ணக்கிளியின் உடல் தேறியதும் சுதாகினி யாருக்கும் இடைஞ்சல்தராமல் ஒருதரம் வீட்டைபோட்டுவாறேன் என்று போனவள் திரும்பவேயில்லை, அவளாகவே  வி.புலிகள் இயக்கத்தில் போய்ச்சேர்ந்துவிட்டாள்.

000000000000000000000000000

அவ்வளவுக்கு இளகிய இதயமும் பிறன்பால் பரிவுமுடைய தாசன் எப்படி இத்தனை முரடாகிப்போனான் என்பது நவத்தாருக்கு வியப்பாயிருந்தது. அதே ஆண்டில் யாழ்மீதான இராணுவத்தின்  ‘சூரியக்கதிர் தாக்குதல்கள்’ உக்கிரமடைய முன்பதாக ஈழமோகனும் வி.புலிகள் இயக்கத்தில் சேர்ந்துவிட்டான். அவன் வீட்டில் இருந்திருந்தால் தன் மரவேலைப் பட்டறையில் கடைசி தான் அறுக்கும் வாளின் நுனியிலாவது பிடித்து இழுத்து ஜீவிதத்தை ஓட்ட உதவுவான் என நவத்தார் நினைத்திருந்தார். ஆனால் போர் உக்கிரம் அடையவும் பலரது வீடுகளும் உடைபட்டன. எவரும் தம்வீடுவாசல்களைத் திருத்தவோ, புதுவீடுகளைக் கட்டும் முனைப்புக்களோ இல்லை. தப்பிப்பிழைத்திருக்கும் வீடுகளும் எந்நேரமும் தாக்குதல்களில் உடைந்துபோகலாமென்ற எதிர்பார்த்திருந்தார்கள். ஈழமோகன் எதோ தனது எண்ணத்தில் தோன்றியபடி இரணுவத்தை எதிர்த்துப்போராடும் ஒரு இயக்கத்தில் சேர்ந்துகொண்டுள்ளான் எனமட்டும் அவர் எண்ணினார்.

மணலாறு எல்லைக்கிராமங்களின் தாக்குதலில் வி.புலிகள் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளில் கிறிஸ்கத்திகளைச் சொருகிப்பலியெடுத்த நிகழ்வுகள் நவத்தார் கேள்விப்பட்ட நேரந்தொடக்கம் நம்பிக்கொள்ள முடியாததாகவும், தாங்கிக்கொள்ளமுடியாதாகவும் இருந்தது. ஒவ்வொரு போராளியும் கொலைகாரனாகவே அவருக்குத் தெரிந்தான். அச்சம்பவத்தின் பின் ஈழமோகன் வீட்டுக்கு வந்தபோது முதற்காரியமாக “ ஏண்டா தேசத்தை விடுவிக்கவென்று புறப்பட்ட நீங்கள் தமிழ் என்றால் என்ன சிங்களம் என்றால் என்னவென்றே தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்த அப்பாவிக் குழந்தைகளைக் கொள்ள எப்டீடா உங்களுக்கு மனம் வந்துது……… உங்களை எப்படி விடுதலை வீரர்கள் என்றது……… இனி இந்தப்பழிகளை எங்கதான் கொண்டுபோய்க்கழுவுறது” என்று கேட்டபோது அலட்சியமாய்ப்பதில் சொன்னான் : “ உங்களுக்கு உலகப்போராட்டங்கள் பற்றி ஒரு மண்ணுந்தெரியாது, இப்ப எனக்கு விரிவான பதில் சொல்லேலாது, வேலை இருக்கு, சுருக்கமாய்ச்சொல்றன், முடிஞ்சதைப்பிடியுங்கோ………….. போர் என்று வந்திட்டால் குழந்தை குமர் ஆண் பெண் கிழடுகட்டை என்றெல்லாம் தவத்தித் தவத்திப் போராடேலாது. போரில் அழிவுகள் சகஜம். அந்தக்கஷ்டம் களத்தில நிற்கிற எங்களுக்குத்தான் தெரியும்……….. இப்ப  ஆளைவிடுங்கோ……..” 

தான் பெற்று உச்சிமோந்த செல்வம்  ‘போராட்டங்கள்பற்றி உங்களுக்கு ஒரு மண்ணுந்தெரியாது’ என்று சொன்ன நிகழ்வோடு மற்றைய சம்பவங்களும் ஆலையின் பட்டிபோலத் திரும்பத்திரும்பச்சுழன்று வந்துகொண்டிருந்தன.

பிறகும் ஒரு இளைஞன்வந்து “ அய்யா……… ஏதாவது குடிக்கிறியளோ………” தணிந்த குரலில் கேட்டான். தாசன் சொல்லிவிட்டுத்தான் அவன் கேட்கிறான் என்பது அவருக்குபுரிந்தது.  “ வேண்டாம் ராசா………..  நீங்கள் தந்ததே போதும் ” என்றார் கடுப்புடன்.

அரைமணிநேரம் கழித்து அவனே திரும்பவும் வந்து “ தோழர் உங்களைக் கூப்பிடுகிறார் வாங்கோ ” என்று சொல்லி அந்த அறைக்குள் கூட்டிப்போனான்.

அவரைக் கண்டமாத்திரத்தில்

“என்னப்பா………….. என்ன இழவென்றாலும் நீங்கள் இங்கே எல்லாம் வரக்கூடாதென்று எத்தனைதரம் உங்களுக்குப் படிச்சுப் படிச்சுச் சொல்லியிருக்கிறன். ” என்று பாய்ந்தான். அவர் எதுவும் பேசாமல் வண்ணக்கிளி அவனுக்கு ஆசையோடு சுட்டுக்கொடுத்த கீரைவடையை அவனிடம் நீட்டவும் அதை வெடுக்கெனப்பிடுங்கி அங்கிருந்த மேசையில் போட்டான். ஈழமோகன் கோபம் தணிந்திருக்கையில் மெல்ல பார்த்தனனின் விஷயத்தை எடுத்துச்சொன்னார். அவர் பெற்றோர் தண்ணீர் வெந்நீர் இல்லாமல் புலம்பிக்கொண்டிருப்பதைக்கூறவும் சொன்னான்” “ அப்பிடியான கிறிமினல் குற்றங்களோடு சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சனைகளை எமது காவல்துறைதான் விசாரித்துத்தண்டனை வழங்கும், நான் எதுவும் அவர்களின் கடமையில தலையிடமுடியாது………… அது வேற டிப்பார்ட்மென்ட், கைதுசெய்யப்பட்டவன் விசாரணையில் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டால் பிரதிவாதி உடனே விடுதலை செய்யப்படுவான், சும்மா எல்லாரையும் கட்டிவைத்து எங்களுக்கும் சாப்பாடுபோடேலாது. உங்களைக்  கும்பிட்டுக்கேட்கிறன் இனிமேல் இப்படியான பனாதிகளின் கேஸுகளைக் கேட்டுத்தூக்கிக்கொண்டு நீங்கள் இஞ்சவந்து எங்களுக்கு அலுப்புத் தராதையுங்கோ…………   சரியா?” அப்படி ஒரு ரௌத்திரமுகத்தோடு நவத்தார் முன்னம் அவனைப்  பார்த்ததே இல்லை.

வி.புலிகள் இயக்கத்தில் சேர்ந்தபின்னால  இவனை திருமலையில் நிதிச்சேகரிப்பில் ஈடுபடுத்தியபின் விரைந்து நிதிப்பொறுப்பாளராக நியமித்திருந்தார்கள். அதில் நாலைந்து ஆண்டுகள் இருந்தபின் உளவுப்பிரிவுள் புகுத்தப்பட்டான். துப்பாக்கிகள் வைத்திருந்தவர்கள் மாத்திரமல்ல அவர்களுக்கு நிழல்கொடுத்தவர்களும் அல்லக்கைகளுங்கூட யாரும் எதிர்த்துக் கதைக்கமுடியாதபடி சண்டியர்களாக ஊரில் மாறிவிட்டிருந்தனர். போராளிகளின் உளவுப்பகுதியால்  குற்றங்காணப்பட்டுக் கைப்பற்றப்பட்ட எவரும் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை, அதிலும் ஈழமோகனதும் அவனுடைய சகாக்களாலும் கைப்பற்றப்பட்டிருந்தால் அவர்கள் மீண்டுவருதல் சாத்தியமில்லையென்பதை நவத்தாரும் அறிந்திருந்தார். 

நாச்சிக்குடாவில் ஆரம்பித்த இராணுவத்தின் தாக்குதல் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது ஈழமோகனும் சகாக்களும் (2009) மேமாத ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் போராளிகள் சேனையொன்றைச் சுற்றிவளைத்திருந்த இராணுவமுற்றுகையை ஊடறுத்து வெளியேற முயன்றபோது இராணுவத்தின் நெற்றிக்கு நேரான தாக்குதலில் அழிந்துபோயினர் என்று சொல்கின்றனர். சிலர் ஈழமோகன் சுதாகினியோடு சேர்ந்து ஒன்றாக வாழ்ந்தான், அவர்களுக்கு குழந்தைகூட ஒன்றிருந்தது என்கிறார்கள். போர் முடிவடைந்தபோது இராணுவத்தினரிடம் குடும்பமாகச் சரணடைந்தார்கள் என்பாருமுளர். முள்ளிவாய்க்கால் பேரழிவின்பின்பு அவர்களை  நேரிற்கண்டவர்கள் எவருமில்லை.  

வலிந்து காணாமலாக்கப்பட்டோரை மீட்டுத்தரக்கோரி ஊண்மறுப்பு விரதங்கள், சத்தியாக்கிரகங்கள் இருந்த மக்களோடு சேர்ந்து சிலகாலம் நவத்தாரும் வண்ணக்கிளியும் ஈழமோகனோடு சேர்ந்தெடுத்த புகைப்படத்தையும் உருப்பெருக்கம் செய்யப்பட்ட அவனது தனியான கருப்பு வெள்ளை அடையாள அட்டைப்படத்தையும் தூக்கிப்பிடித்துக் குரலையும் உயர்த்திக் கோஷித்தபடி  இருந்தார்கள். பின் காலவோட்டத்தில் நவத்தாரும், வர்ணக்கிளியும் காலகதியடைய காணாமற்போவோரும் அவர்களைத் தேடுவோரும் காணாமற்போனார்கள்

karunaakaramoorthi.jpg?resize=287%2C326

19.1.2018 பெர்லின்

பொ.கருணாகரமூர்த்தி-ஜெர்மனி

 

http://www.naduweb.net/?p=8962

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.