Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துத்தமிழ்க் கவிதையும் , ஜெயமோகனின் கூற்றும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துத்தமிழ்க் கவிதையும் , ஜெயமோகனின் கூற்றும்!

இவ்வுரையினை முறையாக உள் வாங்கி , அதனை ஏற்கவில்லையென்றால் ஏன் ஏற்கவில்லையென்று தர்க்கரீதியாக எதிர்வினையாற்றுவதற்குப்பதில் '200ற்கும் அதிகமான சிறந்த கவிஞர்கள் இருப்பின் அதற்கான தேவை அங்கில்லை. அவர்களைப் பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும்' என்று கூறியதைத் தூக்கிப்பிடித்துத் துள்ளிக் குதிக்கின்றார்கள். உண்மையில் இக்கூற்றினை அப்படியே விளங்கிக்கொள்ளக் கூடாது. பொதுவாக நாம் பேச்சு வழக்கில் 'இதற்குப் பதில் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப்போகலாம்' என்போம். அதற்காக அதனை அப்படியே உண்மையில் நாக்கைப்பிடுங்கிக்கொண்டு செத்துப்போக வேண்டுமென்று கூறுவதாக நாம் அர்த்தப்படுத்தக் கூடாது. ஆனால் ஜெயமோகன் கூறியதைப்போல் 'பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும்' என்பதுபோன்ற சொற்பதங்களை யாரும் பாவிப்பதில்லை. அதுவும் அழிக்க வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. 200 கவிஞர்கள் ஊரில் இருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேட்பதற்குப்பதில் கிருமிநாசினி குடித்து விடலாம் என்று ஜெயமோகன் கூறியிருந்தால் அதனைக் கேட்டு யாரும் கொதித்திருக்க மாட்டார்கள். ஜெயமோகனின் தாய்மொழி மலையாளம் என்பதால் அங்கு இவ்விதம் கூறுபவர்களைக் கிருமி நாசினி கொண்டு அழிக்க வேண்டும் என்று கூறுவதுபோன்ற வார்த்தைப்பிரயோகங்கள் பாவிக்கப்படுகின்றனவா, வழக்கிலுள்ளனவா என்பதை முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதனால்தான் ஜெயமோகனும் இவ்விதம் கூறினாரா என்பதும் தெரியவில்லை. மேலும் எதற்காக ஜெயமோகன் அடுத்து 'ஒரு நகரத்தில் இருநூறுக்கும் அதிகமான கவிஞர்கள் அலைந்தால் நாட்டின் சட்ட ஒழுங்கு என்னாவது? மகளிரின் கற்புக்கு என்ன பாதுகாப்பிருக்கு' என்று கூறினாரோ தெரியவில்லை. ஜெயமோகனுக்குக் கவிஞர்கள் மேல் அப்படியென்ன கோபமோ? மேலும் கற்பு என்னும் சொற்பதம் பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று புரிந்துகொள்ளப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் , அச்சொல்லுக்குப்பதில் 'பாலியல் வன்முறை' என்னும் சொல் பாவிக்கப்படும் இக்காலகட்டத்தில் இன்னும் எதற்காக ஜெமோ அச்சொல்லில் தொங்கிக்கொண்டிருக்கின்றார்? 

ஜெமோவின் சர்ச்சைக்குரிய கூற்றுள்ள காணொளிக்கான இணைப்பு:
 
பார்க்க: 19 நிமிடங்களில் இருந்து 22 நிமிடங்கள் வரை
 
 

இக்கட்டுரை பற்றி முகநூலில் வெளியான எதிர்வினைகள்:

Thillainathan Kopinath தளையசிங்கம் இறந்து 50 ஆண்டுகளும் கைலாசபதி இறந்து 40 ஆண்டுகளும் ஆகப் போகின்றன. ஜெமோவை விடுங்கள். ஈழத்தில் நவீன இலக்கியம் தோன்றியே 70-80 ஆண்டுகள்தான். 40-50 ஆண்டுகள் பெரிய இடைவெளி இல்லையா?

Giritharan Navaratnam:  அவர்கள் காட்டிய வழியில் அவர்கள் பாதைகளில் செல்பவர்கள் படைப்புகளை நோக்கும் விமர்சன மரபு இலங்கையிலுண்டு. கைலாசபதி, தளையசிங்கத்துடன் அம்மரபு முடிந்து விடவில்லை.

Vickneaswaran Sk : ஜெயமோகனுடைய உளறற் தகவல்கள் ஒன்றும் புதிதல்ல. இலங்கேசன் என்பவர் யார், க.நா.சு பற்றிய, செவ்வானம் பற்றிய கைலாசபதியின் கருத்து என்ன, செங்கை ஆழியானையும் முத்துலிங்கத்தையும் ஒரே பந்திப் பாயில் இருத்திய ஈழத்து விமர்சகர்யார், மு.பொ கொடுத்த பட்டியல் எது என்று அவரது வாயில் வந்தபடிக்கு சொன்னவற்றை யாரும் தேடி மினைக்கடத் தேவையில்லை...எல்லாம் ஒரு flowவிலை வாற விடயங்கள்.இந்தப்பேச்சில் முத்துலிங்கம், சோபாசக்தி,அனோஜன் மூன்றுப்பேரையும் அவர் தனது பட்டியலில் போடுமளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி உள்ளார். அவ்வளவு தான். :)

VA Junaid: நிதானமுள்ள பதிவு

Yamuna Rajendran:  உண்மையில் இக்கூற்றினை அப்படியே விளங்கிக்கொள்ளக் கூடாது - you are wrong. how can these kind of words come spantaneously in a literary speech? how come the comparision of women and poets come in this way unless he has mean mentality of women hood? please do not defend this kind of wordings. it is simply pathetic to dismiss this as just vedikkai. more over, dont you people have any kind of 'value system' to asses your literary merits on your own? is it not 'big boss' mentality?.


Ramanitharan Kandiah /உண்மையில் இக்கூற்றினை அப்படியே விளங்கிக்கொள்ளக் கூடாது/ அட! எப்பிடி ஒருவர் கூற்றை இன்னொருவர் விளங்கிக்கொள்வது என்பதற்கும் ஒரு பென்முரசு வந்திருக்கிறதா, என்ன? 


சிறீ சிறீஸ்கந்தராசா: சிறீ சிறீஸ்கந்தராசா இவர்களை நாங்கள் உயர்த்திப் பிடிப்பதால் வந்தவிளைவு இது!!

Aanantha Tha:  யமுனா சொல்வது சரி. இது ஒரு பெரியண்ணன் தோரணை தான். பாமினி எழுத்துரு விவகாரத்தில் காலச்சுவடு கண்ணன் எடுத்த நிலைப்பாட்டிலும், இப்போது ஜெயமோகன் செப்பியிருப்பதிலும் ஜெயமோகன் செப்பியதை வழிமொழிந்து அவர் திராவிட அரசியலை மனதில் வைத்துத் தான் சொல்லியிருப்பார் என்று ட்ரொட்கிஸ்ட்டான Koovam Kupusamy சல்லியடிப்பதிலும் அவர்கள் எத்தரப்பினராயினும் வேறு வேறு கருத்துநிலையினராயினும் ஈழம் என்’று வருகிற போது பெரியண்ணன் மனோபாவத்தடனேயே வருகிறார்கள் என்று புலப்படும்.

Anaamikaa Rishi : விமர்சன மரபு என்பதற்கு நடப்பில் இன்னுமொரு அர்த்தமும் உண்டு. விமர்சனத்தின் அரசியல். இது இலங்கையில் எப்படியோ, தெரியாது. தமிழகத்தில் அதிகமாகவே, வெளிப்படையாகத் தெரியும் அளவு. இதில் இரண்டு போக்குகள் உள்ளன. ஒன்று, ஒற்றை வரியில் ‘இதெல்லாம் எழுத்தேயில்லை’ என்பதாய் sweeping statements தருவது. அல்லது மிக அகல்விரிவாகப் பேசும் பாவனையில் அதே ஸ்வீப்பிங் ஸ்டேட்ஸ்மெண்ட்’ஐ வரிவரியாய், பக்கம்பக்கமாய் தருவது. இதில் மூன்றாவது, மிக மிக எளிய விமர்சனப் போக்கும் உண்டு. ஒரு படைப்பைப் பற்றி, படைப்பாளியைப் பற்றி பாராமுகமாய் இருந்துவிடுவது!

மாதிரிக்கு ஒன்று, வட சென்னையை சேர்ந்த கவிஞர்கள் இதுவரை எந்தப் பொதுப்பட்டியலிலும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. தமிழ் மணவாளன், சொர்ணபாரதி, அமிர்தம் சூர்யா, ஆசு சுப்பிரமணியன் போன்றோர் தொடர்ந்து காத்திரமான, நவீன தமிழ்க்கவிதையை எழுதிவருபவர்கள். ஆனால், அவர்கள் பெயரை நான் எந்தவொரு தமிழ்க்கவிஞர் தரவரிசைப் பட்டியலிலும் கண்டதில்லை.

மேலும், சமகாலத் தமிழக விமர்சன மரபில் சுயாபிமானம், குழு அபிமானம், ஊர் அபிிமானம், சாதி அபிிமானம், கருத்தியல் அபிமானம், கோட்பாட்டு அபிமானம், அரசியல் கட்சி அபிமானம், அரசியல் சார்பு அபிமானம், அடிப்பொடியார் ரக அபிமானம், அடுக்குகளாலான அபிமானம், ஆதிக்கநிலை (ஆணாதிக்க, பெண்ணாதிக்க) அபிமானம், அவசரகால (உடனடித்தேவையைக் கருத்தில் கொண்ட) அபிமானம், சாதி அபிிமானம், கருத்தியல் அபிமானம், கோட்பாட்டு அபிமானம், அரசியல் கட்சி அபிமானம், இந்தியா -எதிர்ப்பு அபிமானம், இந்துமத - எதிர்ப்பு அபிமானம், மோடி-எதிர்ப்பு அபிமானம், பார்ப்பன-எதிர்ப்பு அபிமானம் ஆகிய பலவகை அபிமானங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன.

நாம் சிறந்ததாகக் கொள்ளும் எழுத்தைப் பற்றிக்கூட, எழுத்தாளர் உயிரோடிருந்த காலத்தில் எழுதாமல் அவர் மறைவுக்குப் பின், உயிரோடிருந்த காலத்தில் அவரைப் பொருட்படுத்தாதிருந்த பெரும் பதிப்பகம் மீள் பிரசுரம் செய்யும்போதுதான் பேசுவது என்பதான ‘கால-தேச-வர்த்தமான அபிமானமும் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எழுத்தின் மேல் கொண்ட ஆர்வமொன்றே காரணமாக கவிஞர்களும் கதாசிரியர்களும் இங்கேயும் எங்கேயும் இயங்கிக்கொண்டே இருக்கிறார்கள்; உருவாகிக்கொண்டேயிருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள்.

- தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன். -

 

http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4938:-324-&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

ஜெயமோகனின் சீடப்பிள்ளையான அனோஜன் ,மற்றும் தெய்வீகன் போன்றோர் இதற்கும் ஏதாவது விளக்கங்கள் வைத்திருக்ககூடும்.

7-8 பேர் தான் கவிஞர்கள் என தேறுவார்களாம் அந்த 7-8 பேர் யாரென இவர்கள் தங்களுக்குள் சட்டையை பிடித்து கொள்ளட்டும்..இலக்கியவாதிகளையும் பிரித்தாள முயற்சி செய்கின்றனர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோகன் வாறே !

jea

அன்பு ஜெ,

உங்களுக்கு ஜின்னாஹ் என்னும் மாகவிஞர் எழுதிய வசைக்கவிதையை அனுப்புகிறேன். வசைபட வாழ்தல் என நீங்கள் எழுதிய பழைய கட்டுரையை நினைவுகூர்க

இலங்கையில் கவிஞர்கள் இலையெனும் ஜெயமோகன்
இழிமொழி கேட்டு வியந்தேன்
மலப்புழு அறியுமோ மலர்மணம் நறைதரு
மதுரத்தை மோகன் வாறே
அலைகடல் தாண்டியவர் அறிந்தவை என்னவோ
அறிந்திலை யாதும் நெஞ்சில்
நிலைகொண்ட காழ்ப்பினை நெறிபிறழ்ந் துரைப்பது
நீசனின் செயலு மன்றோ!

என்னதான் அளவுகோல் எழுத்துக்கு யாரெவர்
இயற்றினர் சொல்லு வாரோ
தன்வழி மதிப்பிடத் தகுதியென் மோகனின்
தமிழென்ன அளவு கோலோ
புன்மையை வார்த்தையில் பொழிகின்ற பாங்கொரு
பண்பிலிச் செயலு மன்றோ
முன்பிருந் தின்றுமெம் மணித்திரு நாட்டினோர்
மன்னர்கள் தமிழி லறிவீர்!

கடன்வாங்கு மொழியினில் காதைகள் படைப்பவன்
கருவினில் திருவு டைத்தோன்
படைத்திடும் படைப்பினைப் பரிகசித் துரைப்பததைப்
பார்த்துநாம் பொறுத்தி லோமே
உடன்பாடு கொண்டவர் ஈழத்தோர் தமிழக
உயர்தமிழ் வித்து வத்தில்
உடன்பாடு கொண்டவர் உள்ளனர் ஆங்குமே
எம்மவர் படைப்பி லுணர்வீர்.

இலங்கையில் இருநூறு இருக்கிறார் கவிஞர்கள்
என்றதைப் புரியா மூடன்
இலங்கையை நகரமாய்க் கொண்டதில் நூறுபேர்
இருப்பதாய்க் கனவு கண்டால்
சொலவென்ன உண்டதோ தேரிலான் இலங்கையின்
தரைப்படம் இலங்கை நாடு
அலைகடல் சூழ்ந்ததோர் அழகிய புனிதமண்
அறிகுவாய் அறிவி லானே!

கவிஞர்கள் தொகையினில் கூடினால் பெண்களின்
கற்பினுக் கென்ன தீங்கோ
செவிகூசும் வார்த்தைகள் செப்பினான் கடைமகன்
சொல்லிழுக் கறிகி லானோ
இவன்கூற்றைக் கொண்டிடில் இழிவெங்கள் தமிழுக்கே
இழிகுலக் காமப் பித்தன்
பவமிவன் பற்றியே பேசுதல் பண்பிலான்
பழிபாவ மறியா தோனே!

ஏழு முறை வாசித்தபின்னரும் இந்தக்கவிதையை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. மதுரத்தை மோகன் வாறே அலைகடல் தாண்டியவர் அறிந்தவை என்னவோ என்ற வரி உச்சம்.

இலங்கையை ஈசன் காக்கட்டும்

ராஜ்

 

 

https://www.jeyamohan.in/117883#.XFyuGS-nxR5

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்

 

 

வணக்கம் ஜெயமோகன் அவர்களே!

எனது பெயர் இளையதம்பி தயானந்தா புலம்பெயர்ந்த ஓர் ஈழத் தமிழ் ஊடகவியலாளன். தற்போது லைக்காவின் ஆதவன் தொலைக் காட்சி/வானொலியில் பணியாற்றுகிறேன்.

கடந்த ஆண்டு மீண்டு நிலைத்த நிழல்கள் நூல் வெளியீட்டில், நீங்கள் ஆற்றிய  உரையில், ஈழத்து படைப்பாளிகள் பற்றிய உங்கள் குறிப்பு, ஏனோ திடீரென சமூக வலைத் தளத்தில் ஈழத் தமிழர்களால், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.

ஆதவன் வானொலியில் என்னால் செய்யப்படும் வாராந்த நேரலை நிகழ்ச்சியில் இந்த விடயத்தை, அடுத்த வாரம்  எடுத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளேன். குறித்த நிகழ்ச்சி இலங்கை/இந்திய நேரப்படி இரவு 7.30 இற்கு ஞாயிற்றுக் கிழமை ஒலிபரப்பாகிறது. வாரம் ஒரு வலம் என்ற இன் நிகழ்ச்சியின் முன்னைய பதிவுகளை இதில் பார்க்கலாம்.

அடுத்த வார நிகழ்ச்சியில் உங்களால் பங்கேற்க முடியுமா? குறித்த நேரலை நேரத்தில் பங்கேற்க முடியாத நிலையிருப்பின், அதற்கு முன்னராக உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ள முடியுமா?

உங்கள் பங்கேற்பில்லாமல் இன் நிகழ்ச்சியை செய்தால் அது  அர்த்தமற்றதாக  அல்லது ஒரு பக்க சார்புடையதாக அமையும் என நினைக்கிறேன்.

அன்போடும், பதிலுக்கான எதிர்பார்ப்போடும்,

இளையதம்பி தயானந்தா

அன்புள்ள இளையதம்பி அவர்களுக்கு,

நான் சொன்ன கருத்து இலக்கியவிவாதம் என்னும் களத்திற்குள் நிகழ்வது. இலக்கியத்தில் ரசனை சார்ந்த கூரிய மதிப்பீடு எவ்வளவு தேவையானது என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். அதைப்பற்றி இப்போது பேசிக்கொண்டிருப்பவர்களின் குரல்களைக் கேட்டால் குமட்டலும் பரிதாபமும்தான் வருகிறது. அவர்களுக்கு இலக்கியம் என்பதே அறிமுகமில்லை. நகைச்சுவையை புரிந்துகொள்ளும் அறிவுத்திறனும் இல்லை. அதேசமயம் எளிய மனிதர்களாக, தங்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றில் தலையிடாமல் விலகிவிடவேண்டும் என்ற அடிப்படைப் பண்பும் இல்லை. வெறும் வெட்டிவம்புக்கும்பல்.

இலக்கியவிவாதங்களை அறிவுலகுக்கு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் பார்க்கும்போது நிகழும் வம்பு இது. இணையம் இப்படி சில இக்கட்டுகளை உருவாக்கிவிடுகிறது. இப்படி தலையும்காலும் தெரியாத கும்பல்களிடம் இலக்கியவாதி அமர்ந்து ‘விவாதிக்கவேண்டும்’ என்பது போல அசட்டுத்தனமும் வேறில்லை. எந்தத் துறையிலும் அதில் அடிப்படை புரிதல் இல்லாதவர்களின் குரல்களை புறக்கணிப்பதே ஊடகங்கள் உண்மையில் செய்யவேண்டியது. சமூகவலைத்தளங்களின் உளச்சிக்கல்களை திரும்ப பதிவுசெய்வது ஊடகங்களின் வேலை அல்ல.  உங்கள்  பரபரப்புத் தேவைக்கு வம்புகள் உதவுமென்றால் செய்க! எனக்கு ஆர்வமில்லை.

ஜெ

pus.jpg

அன்புள்ள ஜெ

மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் மீண்டு நிலைத்த நிழல்கள் குறித்த உரையாடலில் நீங்கள் சொன்ன சில கருத்துக்களை ஒட்டி இணையத்தில் சில ஈழத்தவர்கள் உங்களை வசைபாடி அவதூறுகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். கூட உள்ளூர் கும்பலும் சேர்ந்துகொண்டு கும்மியடிக்கிறது. நான் ஒருநாள் முழுக்க அமர்ந்து பெரும்பாலும் எல்லாக் குறிப்புகளையும் பார்த்தேன்.

இவர்களில் ஒருவர்கூட, ஒரே ஒருவர்கூட, அடிப்படை இலக்கியவாசிப்போ, அதுசார்ந்த நுண்ணுணர்வுகளோ கொண்டவர்களாக இல்லை. இலக்கியத் தற்குறிகள் என்றே சொல்லலாம். பலருக்கு உங்கள் பெயரே தெரியவில்லை. சினிமா வசனகர்த்தா என நினைக்கிறார்கள். பின்னூட்டங்களில் பலர் வந்து யார் இவர் என்று விசாரிக்கிறார்கள். ஆனால் அத்தனை பேருமே ‘கவிதை’ எழுதுபவர்கள். மேலோட்டமாக வாசிக்கும் எவரோ  ‘கொளுத்திப்போட’ இவர்கள் ‘அய்யகோ ஈழத்தை அவமதிக்கிறார்களே!” என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இந்த அசட்டுக்கூட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்தால் அதை ஈழம் பற்றிய விமர்சனமாக கட்டமைக்கிறார்கள். அந்த உரையை கேட்கும் அளவுக்குக் கூட பொறுமையோ அறிவோ இல்லை. ஆக, நீங்கள் ஈழ இலக்கியத்தைப்பற்றி சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நிரூபித்தே ஆகவேண்டும் என்று ஒருகூட்டம் களம் இறங்கியதுபோல் உள்ளது.

நீங்கள் சொன்னது ஒரு விமர்சனம். அதற்குப் பதிலாக உங்கள் சாதியை குடும்பத்தை எல்லாம் இழுத்து வசைபாடும் இந்தக்கும்பலுக்கும் இலக்கியத்திற்கும் என்ன சம்பந்தம்? இலக்கியம் என்னும் இயக்கம் மீது ஓர் அடிப்படை மரியாதை கொண்டவர் எவரும் ஓர் இலக்கியவாதியை இப்படி கீழ்த்தரமாக வசைபாட மாட்டார்கள். உண்மையிலேயே இந்தக்குப்பைகள் இப்படி கொட்டிக்குவிந்திருப்பதனால்தான் ஈழச்சூழலில் நல்ல எழுத்துக்கள் உருவாக முடியாதநிலை உள்ளது. நல்ல கவிஞர்களுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு அவர்களுக்குத்தெரியவில்லை என்றால் நல்ல கவிஞர்களுக்கு என்னதான் மதிப்பு?

நீங்கள் சொல்லியிருப்பது இந்த சருகுக்குவியலில் இருந்து நல்ல கவிஞர்களை மீட்டு தனியாக அடையாளம் காட்டப்படவேண்டும், படைப்பாளிகளின் நடுவே ஒரு தரவரிசையை வாசகனும் விமர்சகனும் சேர்ந்து உருவாக்கவேண்டும், அந்த வரிசை தொடர்ந்து விவாதிக்கப்படவேண்டும் என்றுதான். அப்படிச் சிறப்பாக எழுதிய அத்தனை பேரைப்பற்றியும் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். தமிழில் ஈழ இலக்கியவாதிகளைப் பற்றி மிக விரிவாக எழுதியவர் நீங்கள் – இந்த அளவுக்கு அங்குள்ளவர்கள்கூட எழுதவில்லை. அதில் பத்துவரியைக்கூட படித்துப்பார்க்காத, படிக்கும் அறிவில்லாத கும்பலின் இந்த வசை கசப்பூட்டுகிறது.

ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர்,

இந்தக் கூட்டம் உருவாக்கும் சத்தம் நல்லதுதான். அங்கேயும் இவர்கள் எழுதும் அசட்டுவரிகளைப் பார்த்து நுண்ணுணர்வு புண்பட்ட வாசகன், இளம்படைப்பாளி இருப்பான். அவன் இவர்களினூடாக என்னை வந்துசேர்வான். அவன் எண்ணுவதை, சொல்லத் தயங்கியதை ஒருவர் சொல்வதை கண்டுகொள்வான். இலக்கியமென்றால் என்ன என்று புரிந்துகொள்வான். அவ்வாறு ஐந்துபேர் என்னிடம் வருவார்கள், ஐநூறு அசடர்கள் கூச்சலிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிடுவார்கள். என்னிடம் வரும் அந்த ஐந்துபேர்தான் இலக்கியத்திற்கு முக்கியமானவர்கள். ஆகவே டமாரவாதிகள் வாழ்க!

ஜெ

அன்புள்ள ஜெ

நீங்கள் இந்த உரையில் சொல்லியிருப்பதைவிட மிகக்கடுமையாக மலேசியா நவீன் இலங்கைக்குச் சென்றபின் திரும்பிவந்து அங்குள்ள சூழலைப் பற்றி எழுதியிருக்கிறார். நீங்களும் அதை ஏற்று எழுதியிருக்கிறீர்கள். இந்த கூச்சலை வாசிக்கும்போது நவீன் சொன்னதே மிகமிக குறைவாகத்தான் என்ற எண்ணம் ஏற்படுகிறது

நா.ராஜீவ்

ஜெ,

மனுஷ்யபுத்திரனின் முகநூல் பக்கத்தில் உங்களைப்பற்றிய வசைகளை ஈழ எழுத்தாளர்கள் எழுதியிருந்ததைப் பார்த்தேன். ஒருவர் எழுதுகிறார். கண்ட இடத்தில் அடித்துக் கொன்றிருக்க வேண்டும் இந்தப் பார்ப்பனியக் காவி நாயை. இலக்கியவிமர்சனக்கருத்துக்கான எதிர்வினை இது.  ஈழத்தில் இத்தனை கொடூரமான சகோதரக்கொலைகள் ஏன் நிகழ்ந்தன என்ற கேள்வி எப்போதுமே தமிழர்களின் மனதில் உள்ளது. மதிக்கப்பட்டவர்கள் எல்லாம் நாயைப்போல சுட்டுக்கொல்லப்பட்ட வரலாறு நம் முன் உள்ளது. இத்தனை அழிவுக்குப்பிறகும் இவர்களில் பெரும்பாலானவர்களின் மொழிநடை இதுதான். இவர்களின் இந்தமனநிலைதான் அழிவை இன்னும்கூட உருவாக்கக்கூடியது. இந்தக்கும்பல் எத்தனை அழிவு வந்தாலும் அதற்கு தமிழகம்தான் காரணம், கலைஞர்தான் காரணம் என கூச்சலிடுவார்கள்.

ஜெயவேல்

 

https://www.jeyamohan.in/117861#.XFyu4C-nxR4

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டுதற்கோ…

ka

ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்

அன்புள்ள ஜெ

 

ஈழ எழுத்துக்கள் பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு வந்த கூச்சல்களைப்பற்றி எழுதியிருந்தீர்கள். அந்த இருநூறுபேர் எங்கேயும் இருப்பார்கள். அவர்கள் அனைவருமே ஒன்றேபோலத்தான் கூச்சலிடுவார்கள். இதில் ஈழம் என்ன தமிழ்நாடு என்ன? ரசனை சார்ந்த அளவுகோல் போல இவர்களைப் பயமுறுத்துவது எதுவும் இல்லை. கு.அழகிரிசாமி மலேசியா பற்றிச் சொன்னபோதும் சரி, வண்ணநிலவனும் பகீரதனும் இலங்கை பற்றிச் சொன்னபோதும் சரி இந்த கூச்சல்கள்தான் எழுந்தன.

 

ஆனால் இலக்கியத்தில் அழகியல்தரம் என ஒன்று உண்டு, வாசிக்கத்தக்க படைப்புகள் அல்லாத படைப்புகள் என்னும் வேறுபாடு உண்டு என்று அறிந்த சிலரும் அங்கு உண்டு. இது தெய்வீகன் முகநூலில் எழுதிய இரு குறிப்புகள். உங்கள் பார்வைக்காக

 

பிகு

 

அதற்கு அடியிலேயே  ‘அது சரி யார் இந்த ஜெயமோகன்? அவரது காத்திரமான படைப்பு ஏதாவது உண்டா?’ என்னும் ஆழமான இலக்கியக்கேள்வியும் இருந்தது

 

ராஜ்.

:அந்த இருநூறுபேர்

 

ஈழத்தின் அந்த இருநூறு கவிஞர்களுக்காகவும் கடந்த இரண்டு நாட்களாக இரவு – பகல் பாராது ஜெயமோகன் என்ற ஒற்றை ஆர்மிக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் பெரும்படையை பார்க்கும்போது ஈழ இலக்கியத்தின் எதிர்காலம் எங்கேயோ போய்விட்டது என்பதை தவிர வேறு எந்த உணர்வும் ஏற்படவில்லை. அதேவேளை, அந்த இருநூறு பேருக்கும் அடித்திருக்கும் அதிஷ்டத்தை நினைக்கும்போது கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கிறது. பரவாயில்லை, எங்களது ஆட்களுக்கு எல்லாம் காலம் தாழ்த்தி கிடைக்கும் அங்கீகாரம்தானே, விட்டுவிடுவோம்.

ஆனால், இப்போது இந்த “Two Hundred பாதுகாப்பு படையணி” வெறுமனே விழுந்த மாட்டுக்கு குறிசுடுவதுபோல ஜெயமோகனுக்கு எதிராக கிரனேட் அடித்துவிட்டு, அவரது கையிலிருக்கும் பூச்சி மருந்து போத்தலையும் பறிந்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறது போலிருக்கிறது. அது நடவாது. நடக்கவும் முடியாது. சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் யோ.புரட்சி தலைமையில் ஆயிரம் கவிஞர்களின் கவிதைப்புத்தக்கம் என்று நாலு கிலோவில் ஒரு புத்தகம் வெளியாகியிருந்ததை யாரும் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள். வெளியீட்டு நிகழ்வு கிட்டத்தட்ட சிட்னி ஹாபர் பிரிட்ஜில் புதுவருட வானவேடிக்கை நிகழ்ந்ததுபோல ஜெக ஜோதியாக நடந்து முடிந்தது.

இப்போது பிரச்சினை என்னென்றால், அந்தப்புத்தகத்தில் எழுதிய கவிஞர்களுக்கு எதிராகப்போராடவேண்டிய கட்டாயமும் இருக்கிறது என்பதை இந்த “Two Hundred பாதுகாப்பு படையணி” மறந்துவிடக்கூடாது. ஏனெனில், அந்தப்புத்தகம் நிச்சயம் ஜெயமோகனுக்கு இப்போதைக்கு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாலு கிலோ புத்தகத்தை விமானத்தில் கொண்டுபோய் கொடுக்க யாரும் உடன்பட்டிருக்கமாட்டார்கள். அனோஜன்தான் சிலவேளை கப்பலில் கொண்டுபோய்க்கொண்டிருக்கிறாரே தெரியவில்லை. அதுதான், கனகலமாக ஆளின் தொடர்பே இல்லை. ஆக, அந்தப்புத்தகம் ஜெயமோகனின் கைளில் கிடைத்தால் என்ன கதி? அவ்வளவுபேரையும் போட்டுத்தள்ளுவதற்கு அவர் அயல்நாட்டு படைகளின் உதவியை நாட மாட்டாரா?

ஆனால், என்னைப்போன்ற பாமர வாசகர்களுக்கு ஒன்று மட்டும் உடனடியாக புரிவதில்லை.

அதாவது வர்ண ராமேஸ்வரனையும் பொன் சுந்தரலிங்கத்தையும் தூக்கிவைத்துக்கொண்டாட தெரியாத எங்களுக்கு, எங்களுக்குள் ஒரு இசைக்கலைஞர் இருக்கிறார் என்று எங்களுக்கு காட்டுவதற்ககே விஜய் ரி.வி.யில் போய் ஜெசிக்கா பாடவேண்டியிருக்கிறது. அவளையும்கூட எங்களுக்குள் உள்ளவரை தூக்கிக்கொண்டாடமாட்டோம். ஆனால், விஜய் ரி.வி. முதல்பரிசு கொடுக்கவில்லை என்றவுடன் தொலைக்காட்சி முழுவதையுமே துரோகி என்று முத்திரை குத்துவோம்.

ஆக, இன்னொருத்தன் எங்களை திட்டும்போதுதான் எங்களுக்குள் யார் இருக்கிறான் என்பதே எமக்கு தெரிகிறது என்பது எங்களுக்கான வரலாறாக இருக்கிறபோது அந்த பூச்சி மருந்து அடியைத்தான் வாங்கித்தொலைவோமே. எங்களில் “விஷயம்” இருந்தால் எதிர்காலம் பயன்பெறட்டும். இல்லாவிட்டால் பூச்சி மருந்து கொம்பனியாவது ஜெயமோன் வழியாக பயன்பெறட்டும்.
டமாரவாதிகள் வாழ்க!

 

சமூக வலைத்தளங்களில் கும்பலாக நின்று ஒரு விடயத்தை கூப்பாடு போட்டால் அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான கோட்பாடுகளாகவே எடுத்துச்சென்றுவிடலாம் என்ற நம்பிக்கை தற்போதெல்லாம் வானுயர வளர்ந்துவருகிறது. சமூக ரீதியாக கவனஞ்செலுத்தப்படவேண்டிய சாபக்கேடான விடயம் இது.

இதன் நீட்சியைத்தான் கடந்த சில நாட்களாக ஜெயமோகனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வசைபாடல்களும் அந்தாதியாக நீழும் கொடுங்கீதங்களும் சாப பஜனை பாடல்களும் அம்மணமாக்கி காண்பித்துக்கொண்டிருக்கின்றன.

விவாதம் என்று வருகின்றபோது கருத்துநிலை சார்ந்து எதிர்ப்பதும் – கோட்பாட்டு ரீதியான எதிர்வாதங்களை முன்வைப்பதும்தான் உரையாடல் வெளியில் ஆரோக்கியமான படிமுறையாக அமையும். அதுதான் ஜனநாயகத்தின் அப்பியாசமும்கூட. சம பரிமாணமுள்ள உரையாடல்கள் பரஸ்பர கருத்துக்களை பரிமாறுபவர்களுக்கான பதில்களாக அமைவது மட்டுமல்லாமல் அந்த முரண்களில் பிறக்கும் கருத்துக்கள் சமூக எழுச்சிக்கான புதிய சிந்தனை வடிவங்களாகவும் அமையும். இலக்கியத்தில் அறம் எனப்படுவது பேசப்படும் உட்பொருள் மாத்திரம் அல்ல. பேசப்படும் முறையும்தான். இதனைத்தான் முன்னையவர்கள் செய்தார்கள். இப்போது மிகச்சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இதனை புரிந்துகொள்வதற்கு, விஷ்ணுபுரம் படிக்கத்தேவையில்லை. சாதரண பொது அறிவே போதும்.

ஜெயமோகனுக்கும் ஈழத்தமிழ் படைப்புலகத்துக்கும் இடையில் நடைபெறுகின்ற பேணிப்பந்து விளையாட்டுக்கள் கோவில் திருவிழாக்கள் போன்றவை. அநேகமாக வருடத்துக்கு ஒன்றாவது இடம்பெறும். ஆனால், அந்த பிரச்சினைகள் வரும்போதெல்லாம் ஈழத்தமிழர்கள் மத்தியிலிருந்து நடைபெறும் ஒற்றை எதிர்வினை ஒப்பாரி மாத்திரமே. இந்த ஒப்பாரிகள் இரு முனைகளில் நடைபெறும். ஒன்று, அது குறித்து எந்த விளக்கமும் இல்லாமல் உயர் சுருதியில் குழறும் ஒரு கூட்டம் வீடு வீடாக ஓடிஓடி ஆட்களை சேர்த்துக்கொண்டு வீதிகளில் ஓடிக்கொண்டிருக்கும். இன்னொரு கூட்டம், அந்த மனுசன் என்ன சொல்லியிருக்கிறார் என்று நன்றாகவே தெரிந்தும்கூட, இந்தப்பிரச்சினையில் நிலைப்பாடு எடுக்கிறோம், தொலைக்கிறோம் என்று தங்களது இருப்புக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடக்கூடாது என்ற உள்ளுணர்வோடு – நுணுக்கமாக சிந்தித்து – ஒட்டுமொத்த குழப்பத்துக்கு குழையடித்துக்கொண்டிருக்கும்.

இந்த இரண்டாவது வகையினர்தான் மிகவும் பொல்லதவர்களும் எல்லாவகையிலும் ஆபத்து நிறைந்தவர்களும் ஆவர்.

தமிழ்நதியையெல்லாம் ஒரு படைப்பாளியாக மதித்து விகடன்மேடை வரை அழைத்து விருது கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அவரைப்போலவே, “ஈழப்போர்க்கதைகளின் ஒற்றைப்படையினர் தாங்கள் மாத்திரமே” – என்று அகரமுதல்வன் அறிவித்த பட்டாலியனின் மூத்த தளபதி குணா கவியழகன் வருடத்துக்கு ஒரு நாவலாவது எழுதி தனது முகவரி – அகவரி அனைத்தையும் பறைசாற்றிவருகிறார்.

ஒரு இனத்தின் இலக்கியப்பெரும்புலத்திற்கு உரிமை கோருகின்ற இவர்கள் எல்லாம், ஜெயமோகன் முன்வைக்கும் கருத்துக்களுக்கு என்ன செய்திருக்கவேண்டும்?

“இந்தாடா நீ கேட்ட ஈழத்தமிழ் இலக்கியப்பெரும்புலம்” “இந்தா நீ கேட்ட கவிஞர்கள்” “இந்தா, இப்படிப்பட்ட ஈழத்தமிழ் கவிதைகளைவிட, தமிழகத்திலேயேகூட கவிதைகள் இருக்கின்றனவா காட்டு” என்று இவர்கள் கேட்டிருக்கவேண்டாமா? ஒரு குழுவாக இணைந்துகூட ஜெயமோகனின் அந்த குற்றச்சாட்டு என்று இவர்கள் கருதுவதை முறியடித்திருக்கவேண்டாமா?

ஆனால், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

சிரிப்பு பொலீஸாட்டம் ஒளிந்திருந்து கல் எறிந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஜால்ரா போடுவதற்கு கொஞ்சக்கூட்டம் வேறு!

ஆடு புழுக்கை போட்ட மாதிரி முகநூல் பதிவுகளில் பதில் சொல்லுமளவுக்குத்தான் ஈழத்தமிழ் கவிதைப்புலமிருக்கிறதா? அல்லது அவ்வளவுக்குத்தான் இவர்களுக்கு ஈழத்தமிழ் படைப்புலகத்தைப்பற்றி தெரிந்திருக்கிறதா?

ஜெயமோகன் நகைச்சுவையாக சொன்னதுகூட இவர்களுக்கு சீரியஸான சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தால், கண்கள் சிவக்க கன்னம் துடிக்க துடிக்க இவ்வளவு காலத்தில் யாராவது ஒருவர் ஈழத்தமிழ் கவி உலகின் உத்தம பாத்திரத்தை பொதுவெளியில் போட்டு விளாசிக்காட்டியிருக்கவேண்டாமா?

இங்கே இலக்கியவாதிகள் என்று வெளிக்களக்கொப்பியில் வெட்டி ஒட்டி தமக்கு தாமே கிரீடம் மாட்டிக்கொண்டு திரியும் பலருக்கு இருக்கின்ற பொதுப்பிரச்சினைதான் இது. அதாவது, தாங்கள் முட்டாள்களாக இருப்பதில் இவர்களுக்கு வெட்கம், சூடு சொரணை எதுவும் கிடையாது. ஆனால், அதனை இன்னொருத்தன் பொதுவெளியில் போட்டு உடைத்துவிடுகிறான் என்றவுடன் அத்தனை சொரணைகளும் இவர்களுக்கு திரண்டு வந்துவிடுகிறது. “உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா” என்று மதிலுக்கு மேல் குந்தியிருந்து கத்திவிட்டு குதித்தோடிவிடுகிறார்கள்.

இதற்கு அடிப்படை காரணமே ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பில் உரையாடல் தளம் என்பது மிக மிகக்குறைவு என்பதுதான். விவாதங்களை எதிர்கொள்வதும் அதற்கு பதில் கொடுப்பதும்கூட ஒருவித தெருச்சண்டைகள்போலவே நடைபெறவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யாராவது ஒருவர் தங்களது படைப்பு குறித்து சிறிய கருத்தைக்கூறிவிட்டலே, தலையணைக்கு அடியில் ஒளித்து வைத்துக்கொண்டிருந்த கத்தியை எடுத்துக்கொண்டு கலைக்கத்தொடங்கிவிடுகிறார்கள். எல்லோரும் எப்போதும் எங்களை புகழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும் என்ற போதை மனநிலையைத்தான் இந்த குறுமனங்கொண்டவர்கள் விரும்புகிறார்கள்.

ஒரு நகைச்சுவையைக்கூட ரசிக்க தயாரில்லாத கடுப்பான உருங்களிலிருந்துதான் இலக்கியம் கசிந்து வழியும் என்று திடமாக நம்புகிறார்கள். என்ன சொல்லப்படுகிறது என்பதைவிட யார் சொல்கிறார்கள் என்பதில்தான் இலக்கியத்தின் ஆள்கூறுகள் தீர்மானிக்கப்படுவதாக நம்பும் அப்பாவிகளாக வாழ்வதை விரும்புகிறார்கள்.

இன்னொரு புறம் பார்த்தால், ஈழத்தமிழ் படைப்புலகில் விமர்சன மரபு செத்துப்பலகாலமாகிவிட்டது. முருகபூபதி போன்ற ஒரு சிலர் ஆங்காங்கே முந்தைய படைப்பாளிகள் குறித்த சிறியளவிலான பதிவுகளை தொடர்ந்து எழுதுகிறார்களே தவிர ஆழமான ஆய்வுகள் கிஞ்சித்தும் கிடையாது. நூல் வெளியீடுகள் என்பவை கூடிக்கலைகின்ற “இலக்கிய சாம்ராஜ்யங்களாக” பெருமை கொள்ளப்படுகின்றனவே தவிர, அங்கு வெளியிடப்படும் நூல்கள் குறித்து குறைந்தது ஒரு வருடத்துக்காவது உரையாடப்படுவது கிடையாது. சிற்றிதழ் போக்கும் அப்படித்தான். தமிழகத்துக்கு போட்டியாக சிற்றிதழ்களை கொண்டுவந்து தங்களை இயங்குநிலை இலக்கிய பெருஞ்சிங்கங்களாக காண்பிக்க விரும்புகிறார்களே தவிர, அதன் அடர்த்தி பற்றி எந்த கரிசனையும் கிடையாது. ஆளுக்காள் மாறி மாறி சோப்பு போடுவதுபோல, இதழ்களை தொடங்கிய மடப்பள்ளியினர்களே ஏதேதோ எழுதி பக்கங்களை நிரப்பிவிடுவதுடன் சரி. ஈழத்து எழுத்தாளர்கள் குறித்த சிறப்பிதழ்களை செய்யலாமே என்று கேட்டால் , ஏதோ சம்பந்தரிடம் தீர்வு பற்றி கேட்டதுபோல முறைக்கிறார்கள்.

இதையெல்லாம் ஜெயமோகனாவது சொல்கிறாரே என்று புரிந்துகொள்ள முயற்சிசெய்யாமல், போயும் போயும் ஜெயமோகன் சொல்வதா என்று கோபத்தின் வழியாக ஈழத்து இலக்கியம் பீறிட்டுப்பாய்வதுதான் இங்கு பெருஞ்சோகம்.

அன்புள்ள ராஜ்,

 

நான் சொல்வதற்கு ஒன்றே. நான் அழகியலை அளவுகோலாக்கி இலக்கியத்தை அணுகுபவன். இலக்கிய அழகியல் என்பது முந்தைய இலக்கியப்படைப்புகளால் உருவாக்கப்படுவது. இலக்கியவிமர்சகர்களால் திரட்டப்படுவது. ஒவ்வொரு பண்பாட்டுக்கும் உரிய தனித்தன்மைகளுடன் உலகளாவிய இயல்புகளும் கொண்டது. வரிசை அறியாது கொடுத்த பரிசில்களை தூக்கி வீசிய கவிஞர்களின் நாடு இது. புலவர்களின் நிலைவரிசையை உருவாக்குவதில், தேர்ந்த பாக்களின் தொகுப்புகளை அமைப்பதில், இலக்கிய நெறிவகுப்பதில் முன்னோடியான ஒரு பண்பாடு நம்முடையது. இங்கே என்றும் விமர்சனம் இருக்கும். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் என பாரதி ஒரு பட்டியல் இட்டபோது அன்றும் நாநூறு சில்லறைகள் எம்பிக்குதித்திருக்கும். ஒன்றுதான் சொல்லுதற்கு

குட்டுதற்கோ  பிள்ளைப்பாண்டியன் இங்கில்லை
    குறும்பியளவாக் காதைக் குடைந்துதோண்டி
எட்டினமட் டு அறுப்பதற்கோ வில்லியில்லை
    இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவி ஒட்டக் கூத்தனில்லை
    விளையாட்டாக் கவிதைகளை விரைந்துபாடித்
தெட்டுதற்கோ அவறிவில்லாத் துரைகளுண்டு
    தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே

ஜெ

 

 

https://www.jeyamohan.in/117904#.XF3ZSS-nxR4

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
jayamohan.jpg
ஜெயமோகன் முக்கியமான ஈழத்துக் கவிஞர்கள் என்று எட்டுப் பேரின் பெயரை ஒரு விமர்சனத்தில் குறிபிட்டாராம். அதற்கு எதிர்வினையாக மு.பொன்னம்பலம் அவர்கள் "ஜெயமோகனின் பட்டியல் உள்நோக்கம் கொண்டது. ஈழத்தில் எழுதிக் கொண்டிருக்கும் நல்ல கவிஞர்களை ஜெயமோகன் குறிப்பிடவில்லை" என்று விமர்சித்து விட்டு  இருநூறுக்கு மேற்பட்ட ஈழத்துக் கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு ஒரு கடிதம் ஜெயமோகனிற்கு எழுதினாராம். மு.பொன்னம்பலம் அவர்களின் கடிதத்தைக் குறிப்பிட்டு ஜெயமோகன் ஒரு கூட்டத்தில் பேசும் போது "இருநூறுக்கு மேற்பட்ட உண்மையான கவிஞர்கள் ஈழத்தில் இருந்தால் அதற்கு எதாவது பூச்சி மருந்து கண்டு பிடித்து அழித்து விட வேண்டும்" என்று நஞ்சு கக்கினார்.
 
கவிஞர்களை கொல்ல வேண்டும் என்ற கொலைவெறியுடன் அவரது பாசிச மண்டைக் கோளாறு நிற்கவில்லை. "இருநூறு கவிஞர்கள் அலைந்தால் அந்த இடத்தின் சட்டம் - ஒழுங்கு என்ன ஆகிறது"? "மகளிருடைய கற்பிற்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது"? என்று ஆபாசமாக இளிக்கிறார். அது உண்மை தான். ஜெயமோகன் போன்ற பொறுக்கிகள் இருநூறு பேர் இருந்தால் பெண்களிற்கு பாதுகாப்பு இருக்காது என்பது உண்மை தான். ஜெயமோகன் தன்னை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிறார். எத்தனையோ ஆயிரம் பக்கங்களில் எழுதும் நவீன தமிழ் எழுத்தாளன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். ஆனால் தற்காலத்தில் ஓரளவு சிந்திக்கக் கூடியவர்களே பயன்படுத்தாத பெண்ணடிமைத்தனச் சொல்லான கற்பு என்ற சொல்லைப் பாவிக்கிறார். அத்துடன் பெண்கள் என்றவுடன் பாலியல் வன்முறை தான் அவரது வக்கிரம் பிடித்த மனதில் இருந்து வெளி வருகிறது.
 
ஜெயமோகனும் அவர் போன்றவர்களும் இவ்வாறு பேசுவது வெறும் உளறல்கள் அல்ல. உலகு எங்கும் உள்ள மத வெறியர்கள், இனவாதிகள், பாசிச பயங்கரவாதிகள் இப்படித் தான் கொலைவெறியர்களாக இருக்கிறார்கள். கொலைகாரர்களாக இருக்கிறார்கள். ஆணாதிக்கவாதிகளாக இருக்கிறார்கள். இவர்கள் ஏழை மக்களை சக மனிதர்களாக என்றைக்கும் நினைப்பதில்லை.  ஊழல்கள், அராஜகங்கள் செய்யும் அதிகார வர்க்கத்தினரை தூக்கிப் பிடிப்பார்கள்; அவர்களின் அநியாயங்களை நியாயப்படுத்தி எழுதுவார்கள். அதற்கு உதாரணமாக "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல. இலங்கை அரசு தனக்கு எதிரானவர்களைக் கொன்றது என்றுதான் பார்க்கிறேனே தவிர, அதை இனப்படுகொலை என்று பார்க்கக் கூடாது" என்று இலங்கை அரசிற்கு ஆதரவாக அழைப்பில்லாமலே அதிமேதாவியான அண்ணன் முன்னொருமுறை வக்கீல் வண்டு முருகன் போல  வாதாடினார்.
 
"இலங்கை அரசு, தமிழர்களை மட்டும் கொல்லவில்லை. இலங்கையைச் சேர்ந்த இடதுசாரி இயக்கமான ஜே.வி.பி-யைச் சேர்ந்த 72,000 பேரையும் அதே அரசுதானே கொன்றழித்தது? கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்கள்தானே? எங்கே இரக்கம் காட்டியது சிங்கள அரசு? ஜே.வி.பிக்கு ஓர் அணுகுமுறை, புலிகளுக்கு ஓர் அணுகுமுறை என்றால்தான், அது சிங்கள இனவாதமாக இருக்க முடியும். ஆக, அங்கே நடந்தது அரச வன்முறை" என்று பொழிப்புரை எழுதுகிறார்.. அண்ணே!, மக்கள் விடுதலை முன்னணியினரை (J.V.P) அவர்கள் சிங்கள மக்கள் என்பதற்காக கொல்லவில்லை. அவர்கள் இலங்கை அரசிற்கு எதிராக போராடினார்கள் என்பதற்காக கொன்றார்கள். ஆனால் தமிழ் மக்களை அவர்கள் தமிழர்கள் என்பதற்காகவே கொன்றார்கள். உங்கள் கண்டுபிடிப்புப்படி பார்த்தால் "இனப்படுகொலை" என்ற சொல்லே தேவையில்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் இனப்படுகொலை இருக்கிறது. நாசிகளிற்கு எதிராக நடந்த "நூரம்பேர்க் விசாரண, ருவண்டா விசாரணை, சேர்பியாவின் மிலாடிக் மீதான பொஸ்னிய இனப்படுகொலை விசாரணை என்பவை இனப்படுகொலைகள் என்றே தீர்ப்பளிக்கப்பட்டவை. கண் முன்னே இவ்வளவு உதாரணங்கள் இருக்கும் போது எல்லாவற்றையும் ஞானக்கண் கொண்டு பார்க்கிறேன் என்னும் அறிவுக்களஞ்சியம் இலங்கைத் தமிழ் மக்கள் மீதுள்ள வெறுப்பில் முட்டாள்தனமாக பிதற்றுகிறது.
 
இலங்கை அரசைக் காப்பாற்ற வாள் சுற்றிய யோக்கியவான் இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களை மட்டும் ஒத்துக் கொள்வாரா?  "இந்திய அமைதிப்படை பற்றி பெருமளவில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் உருவானது பிரேமதாசாவுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வுக்குப் பின்னர் தான். இந்தியா மீதான கடும் வெறுப்பை உருவாக்குவது சிங்கள தேசியத்தின் தேவை. அதை உருவாக்க புலிகளை பிரேமதாசா பயன்படுத்திக்கொண்டார். இன்று கூட இந்திய அமைதிப்ப்டை அதிகாரிகளுக்கு அன்றைய அரசியல் சுழற்சிகள் புரியவில்லை. ராஜீவ்காந்தி கொலைக்குப் பின்னர் தான் அப்பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. புலிகளின் அரசியல் உத்திகளை ஒட்டி இப்பிரச்சாரங்கள் வடிவமைக்கப்பட்டன"  என்று காங்கிரஸ் கயவர்களை விட கேவலமாக பொய் சொல்கிறார். 
 
இந்திய இராணுவம் இலங்கையில் கொன்ற ஆயிரக்கணக்கான எமது மக்களின் குடும்பத்தவர்களின் கண்ணீர் இன்னும் காயவில்லை. யாழ்ப்பாணம் மருத்துவ மனையில் வைத்தியர்கள், தாதிகள், நோயாளர்கள் என்று பலரைக் கொன்றார்கள். அந்தக் கயவர்களினால் பாலியல் வன்முறை செய்யப்பட்ட எமது சகோதரிகளின் வாழ்வில் மாறாத வடுவாக அந்த அவலம் பதிந்திருக்கிறது. குடிசை வீடுகளில் கூட கொள்ளையடித்துச் சென்றார்கள். இலங்கையில் இந்திய இராணுவத்தின் வன்முறைகளிற்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள், மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள் என்று பல ஆவணங்கள் சாட்சியங்களாக இருக்கையில் எமது மக்களை துடிக்க துடிக்க கொன்ற அந்தக் கொலைகாரர்களை நியாயப்படுத்தி இவை புலிகளின் பிரச்சாரம் என்று இந்த அற்பம் புலம்புகிறது.
 
ஜெயமோகன் இலக்கிய ரசனை என்று பேசுபவர்.  வாசிப்பவர்களிற்கு விளங்காமல் எழுதுவதைத் தான் இவர் போன்ற பரமார்த்த குருக்கள்  இலக்கிய ரசனை என்று  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மக்களிற்கு விளங்க வேண்டும் என்று மக்களின் மொழியில் மக்களின் பிரச்சனைகளை எழுதுவது இலக்கியம் அல்ல என்பது இவர் போன்றவர்களின் கண்டுபிடிப்பு. அதனால் தான் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் செ. கணேசலிங்கம் அவர்களின் "செவ்வானம்" நூலை தமிழின் தலை சிறந்த நாவல் என்று குறிப்பிட்டதை கிண்டல் அடிக்கிறார். செ.கணேசலிங்கத்தின் "செவ்வானம்" நாவலை யாராவது வாசித்தீர்களா என்று கூட்டத்திற்கு வந்தவர்களிடம் கேட்டு விட்டு "ஒருவரும் இருக்க மாட்டீர்கள்; ஏனென்றால் அதைப் படிச்சிருந்தா அவங்க இலக்கியத்திலே தொடர்ந்து வந்திருக்க மாட்டார்கள்" என்று மூஞ்சி முழுக்க நக்கல் சிரிப்போடு சொல்கிறார்.
 
இலங்கை சாகித்திய மண்டல சபையின் பரிசைப் பெற்ற "நீண்ட பயணம்"; தமிழக அரசின் விருது பெற்ற "மரணத்தின் நிழலில்" மற்றும் சமூக, அரசியல் கட்டுரைகளை மிக இயல்பான தமிழில் எழுதிய "அறிவுக் கடிதங்கள்", "குந்தவிக்குக் கடிதங்கள்", மான்விழிக்குக் கடிதங்கள்", "குமரனுக்கு  கடிதங்கள்" உட்பட பல நூல்களை ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எழுதியும்; தனது "குமரன் பதிப்பகம்" மூலம் சமூகம், வரலாறு, அரசியல், இலக்கியம் என்று மிகச் சிறந்த ஆய்வாளர்கள், எழுத்தாளர்களின் பல நூல்களை வெளியிட்டும் முனைப்புடன் செயற்பட்ட செ.கணேசலிங்கம் அவர்களினது எழுத்தினைத் தான் மூன்றாந்தர தமிழ்ப்படங்களிற்கு வசனம் எழுதும் பிழைப்புவாதி ஜெயமோகன் இலக்கியம் இல்லை என்கிறார்.
 
ஜெயமோகன் ஒரு இந்துத்துவ ஆதரவாளர். இந்திய ஆளும் வர்க்கத்தை ஆதரித்து எழுதுபவர். பெரியார் இறந்து நாற்பத்தைந்து வருடங்களாகி விட்டன. அவரது பேச்சுக்களை, எழுத்துக்களை, போராட்டங்களை இன்று வரை இலட்சக்கணக்கான மக்கள் வாசிக்கிறார்கள்; பின் தொடர்கிறார்கள். அந்த ஈரோட்டுக் கலகக்காரன் ஈ.வே.ராமாசாமியினதும் அவனது தோழர்களினதும் பகுத்தறிவுச் சிந்தனைகள் பார்ப்பனிய பயங்கரவாதத்தை ஓட, ஓட விரட்டுகின்றதைப் பொறுக்க முடியாமல் பார்ப்பனிய அடிமையான ஜெயமோகன் "தனக்கு சற்றும் தெரியாத விசயங்களை வசைபாட தனக்கு உரிமை இருப்பதாக எண்ணியவர் ஈ.வே.ரா" என்று சொல்லும் அளவிற்கு மண்டை கழண்டு போய் இருப்பவர். அவர் தன் பாட்டுக்கு எதையாவது புலம்பி விட்டு இருக்கட்டும். நமக்கு கவலை இல்லை. ஆனால் "கற்பழித்ததா இந்திய ராணுவம்? என்ற அபத்தத்தை 16.05.2012 இல் எழுதிய பின்னும் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களினால் "இயல் விருது" 2014 ஆம் ஆண்டு ஜெயமோகனிற்கு வழங்கப்பட்ட கொடுமையை என்னவென்று சொல்ல!. "இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை" என்று "தடம்" இதழில் வன்மமாக உளறிய பின்பும் சில ஈழத்து இலக்கியக் குஞ்சுகள் ஜெயமோகன் எங்களது ஆசான் என்று காலில் விழும் முட்டாள்தனங்களை எதைக் கொண்டு சாத்துவது?.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.