Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புல்வமா தாக்குதல்: தேசபக்தியும் தேசவிரோதமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புல்வமா தாக்குதல்: தேசபக்தியும் தேசவிரோதமும்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 பெப்ரவரி 28 வியாழக்கிழமை, மு.ப. 01:13Comments - 0

image_2db9b7392a.jpgபயங்கரவாதத் தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை. ஆயுதப் போராட்டத்தைத் தவிர்க்கவியலாத சூழல்களும் உண்டு. ஆனால், பயங்கரவாதத் தாக்குதல்கள் பிரச்சினைக்கான தீர்வல்ல.   

மக்களைக் குறிவைத்த தாக்குதல்களை, யாருமே நியாயப்படுத்த முடியாது. இவ்வாறான விவகாரங்களில் எது சரி, எது பிழை என்ற தெளிவு, அதற்குப் பொறுப்பானவர்களுக்கு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த இயலாது என்கிற தெளிவு, மக்களுக்கு அவசியமானது. இல்லாவிடின், தேசபக்தி என்பதன் பேரால் அநியாயங்களுக்கும் அல்லல்களுக்கும் துணைபோக நேரும்.   

கடந்த 14ஆம் திகதி, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் உட்பட்ட காஷ்மிரின் புல்வமா மாவட்டத்தில், வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இந்திய இராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 46 இராணுவத்தினர் பலியானதோடு, 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது இந்தியாவெங்கும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது.   

இதையடுத்து, பாகிஸ்தானின் எல்லைக்குள் விமானத் தாக்குதலை, இந்தியா நடத்தியதாகவும், அதில் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது, இந்திய ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கொண்டாடப்படுகிறது.   

புல்வமாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலும் அதைத் தொடர்ந்த எதிர்வினைகளும் சில உண்மைகளை எமக்குச் சொல்கின்றன.   

அதில் முதன்மையானது, காஷ்மிர் பற்றியது. காஷ்மிர் என்றென்றைக்கும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததல்ல. காஷ்மிர் இந்தியாவின் பகுதியோ, பாகிஸ்தானின் பகுதியோ அல்ல. அது சுதந்திரமாக இருக்க விழைந்த ஒரு நாடு.  

 1947இல் அதை, இந்தியா, தற்காலிகமாக இணைத்துக் கொண்டபோது, ‘காஷ்மிரியர்கள், இந்தியாவின் பகுதியாக இருக்க விரும்புகிறார்களா அல்லது தனிநாடாக இருக்க விரும்புகிறார்களா’ என்பதை, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் முடிவுசெய்ய வேண்டும் என்று உடன்பாடு எட்டப்பட்டது.   

ஆனால், இன்றுவரை அது நடக்கவில்லை. இதனாலேயே இன்றுவரை, “காஷ்மிரிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும்; இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து காஷ்மிரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்று காஷ்மிரியர்கள் கோருகிறார்கள்.   

இன்று, உலகிலேயே காஷ்மிர் பள்ளத்தாக்குத்தான், மிக அதிக எண்ணிக்கையில் இராணுவம் குவிக்கப்பட்ட பகுதி என்று, மனித உரிமை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.   

உலகில், தொடர்ச்சியாகக் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாகிவரும் சமூகங்களில், பலஸ்தீனியர்களும் காஷ்மிரியர்களும் முதன்மையானது.  

எந்த நாடு, வலுக்கட்டாயமாகத் தான் பிடித்து வைத்திருக்கும் பகுதியின் மக்கள் மீது, மிக மோசமான அடக்குமுறையைப் பிரயோகிக்கிறதோ, அந்நாடுதான், தமிழ் மக்களின் விடுதலையை வென்றுதரும் என்பது, எவ்வளவு பெரிய அபத்தம். ஒடுக்குமுறையாளனாக இருப்பவன், ஒடுக்கப்படுவோருக்காக நியாயமாகக் குரல்கொடுப்பான் என்பது, ‘ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை’தான்.  

புல்வமா தாக்குதல் நிகழ்ந்து, இந்தியாவே அதிர்ச்சியில் இருந்த வேளை, ஏற்கெனவே திட்டமிட்டபடி, அந்தநாள் முழுவதும், தனது தேர்தல் பிரசாரப் படப்பிடிப்பை, பிரதமர் மோடி நடத்தி முடித்தார் என்பதைச் சில ஊடகங்கள் படங்களுடன் வெளியிட்டுள்ளன.   

எதுவித படபடப்பும் இன்றி, நாள் முழுவதும் மோடி இருந்தது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு, இந்தியா தயாராகிவரும் நிலையில், இத்தாக்குதல் தேசியவாத அலையையும் தேசபக்தியையும் கிளறிவிட்டுள்ளது.   

மறுநாள், தாக்குதல் குறித்துக் கருத்துரைத்த பிரதமர் மோடி, இராணுவத்துக்கு முழுச் சுதந்திரம் வழங்கியிருப்பதாகவும் இதைப் பின்னாலிருந்து இயக்கும் பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று சொன்னார். தனது பேச்சுகளில், தேசியவாதத்தையும் தேசபக்தியையும் தொடர்ந்து எதிரொலித்தார்.   

கடந்த சில மாதங்களாகத் தொழிலாளர் போராட்டங்களாலும் வேலை நிறுத்தங்களாலும் இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஆட்டங்கண்டு வருகிறது. இந்தியப் பொருளாதார மந்தநிலை, ரஃபேல் விமான ஊழல் எனத் தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்திந்து வந்திருக்கும் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சிக்கு, இத்தாக்குதல் மிகப்பெரிய வாய்ப்பாகி உள்ளது.   

தேசபக்தியையும் தேசிய வெறியையும் தூண்டி, அடுத்த தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்தியுள்ளது. இதன் அடுத்த கட்டமே, இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்திய விமானத் தாக்குதல்.   

புல்வமா சம்பவம் நிகழ்வதற்கு, இந்தியப் பாதுகாப்புத்துறையின் ஓட்டைகளே காரணம் என்ற விடயம், இதுவரை கலந்துரையாடப்படவில்லை. இந்தியாவுக்குள் 300 கிலோ வெடிமருந்தைக் கொண்டுவந்து, வெடிக்க வைக்கும் அளவுக்கு, பாதுகாப்புக் குறைபாடுகள் இருந்தன என்ற உண்மை மறைக்கப்படுகிறது. அதுகுறித்துப் பேசுவது, தேசவிரோதம் என்று ஆளும் பா.ஜ.க அரசாங்கம் சொல்கிறது.   

இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்-ஈ-மொஹமட் அமைப்பின் தலைவர் மசூத் அன்ஸாரை, 1999ஆம் ஆண்டு, பா.ஜ.க அரசாங்கமே விடுதலை செய்தது என்பதைச் சுட்டிக்காட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான நவ்ரோஜ் சிங் சித்துவை, தேசவிரோதி எனப் பா.ஜ.க தேசபக்தர்கள் விமர்சிக்கிறார்கள். அவர்களுடன், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து கொள்கிறார்கள்.   

சமூகவலைத்தளங்களில் இந்தத் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும் என்று எழுதப்படுகிறது. பாகிஸ்தானுடனான இன்னொரு போர் தவிர்க்கவியலாதது என்று ஊடகங்கள் உசுப்பி விடுகின்றன.   

image_5189021086.jpg

இத்தாக்குதல் நிகழ்ந்து சில நாள்களில் இந்நிகழ்வைக் கண்டித்த பதிவுகள், பாகிஸ்தானில் இருந்து ஒலிக்கத் தொடங்கின. செஹிர் மிர்சா என்ற பாகிஸ்தானிய ஊடகவியலாளர், “நான் ஒரு பாகிஸ்தானி; நான் புல்வமா தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்திய படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனை ஏனைய பாகிஸ்தானியர்களும் செய்யும்படி கேட்டுக்கொண்டார்.   
அவர் தனது பதிவில், பிரபல உருதுக் கவிஞரான சாகீர் லுதியன்வியின் பின்வரும் கவிதை வரிகளைப் பகிர்ந்தார்.   

குருதி எங்களுடையதாயினும் அவர்களுடையதாயினும்  

அது மனிதகுலத்தின் இரத்தம்.   

கிழக்கிலும் மேற்கிலும் என எங்கு போர்கள் நடந்தாலும் 

அது உலக அமைதியைக் கொலை செய்யும்.   

போர் என்பது தன்னளவிலேயே ஒரு பிரச்சினையாகும்.   

அது எவ்வாறு பிரச்சினைகளுக்குத் தீர்வாகும்?  

இதைத்தொடர்ந்து ஏராளமான பாகிஸ்தானியர்கள் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பதிவுகளைத் தொடர்ச்சியாகப் பதிந்து வருகிறார்கள்.   

இது, மனிதாபிமானத்தின் குரல்கள்; பாகிஸ்தானில் இருந்தும் ஒலிப்பதைக் காட்டுகிறது. ஆனால், இவை ஊடகக்கவனம் பெறவில்லை. இந்திய ஊடகங்கள் தொடர்ந்தும், இன்னொரு இந்திய-பாகிஸ்தான் போர் பற்றிப் பேசி வருகிறார்கள்.   

இதன் ஒருபகுதியாக, Zee தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்து பேசிய ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் தேவேந்திர பால் சிங், இந்தியாவெங்கும் ஊட்டப்படும் தேசபக்தி வெறியையும் போர் நாட்டத்தையும் கடுமையாகச் சாடினார். அவர், “நீங்கள் எல்லோரும் இன்னொரு போர் பற்றிப் பேசுகிறீர்கள். போரின் அவலத்தின் எல்லைகள் உங்களுக்குத் தெரியுமா” என்று சக பங்கேற்பாளர்களிடம் கேள்வி எழுப்ப, அனைவரும் ஆடிப்போனார்கள்.   

தொடர்ந்து பேசிய அவர், “நான் கார்ஹில் போரில், ஒரு காலை இழந்தவன். நான், எனது ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக ஏழு ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. நீதிமன்றக் கதவுகளைத் தட்ட வேண்டியிருந்தது. அப்போது, எங்கே போனது உங்கள் தேசபக்தி. இராணுவ வீரர்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர்கள் இறந்துவிட்டால், அவர்களது மனைவிமார் சொல்லொணாத் துயரங்களைச் சந்தித்து, வழக்காடி நிவாரணம் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்கள். முடிவெய்தாத இவ்வாறான ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. போர் வேண்டும் என்கிறவர்கள், இராணுவத்தில் குடும்பத்தவரை உடைய குடும்பங்களிடம், ‘போர் வேண்டுமா’ என்று கேளுங்கள். ‘உங்கள் குடும்ப உறுப்பினரை, இழக்கத் தயாரா’ என்று கேளுங்கள். பழிக்குப் பழி, அதற்குப் பழி என்ற சுழற்சியில் உயிரிழப்புகளே மிஞ்சும். தீர்வை நோக்கிச் சிந்திப்போம்; அடுத்த தலைமுறைக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டிய பொறுப்பு எம்மிடம் உண்டு” என்று பேசினார்.   

தீவிர உணர்ச்சிப் பெருக்கிலும் இந்திய தேசபக்தியிலும் திளைத்துள்ள ஊடக உலகில், தேவேந்திர பால் சிங்கின் கருத்துகள் யதார்த்தத்தையும் வாழ்வியலையும் பிரதிபலித்தன. போரை வேண்டுவோர் யார்? என்ற வினாவும் அவர்கள் அதை ஏன் வேண்டுகிறார்கள் என்ற வினாவும் சிந்திக்க வேண்டியவை.   

பாகிஸ்தானின் எல்லைக்குள், இந்தியா நடத்தியுள்ள தாக்குதல், சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். ஆனால், இந்தியா ‘தற்காப்பு நடவடிக்கை’ என்ற கவசத்தைப் போர்த்திக் கொள்கிறது. இக்கவசத்தை முதலில் எடுத்தவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்.  

ஈராக் மீதான தாக்குதலுக்கு, ‘தற்காப்பு நடவடிக்கை’ என்று பெயர் கொடுத்தது அமெரிக்கா. இருந்தபோதும் இது, சர்வதேச சட்டங்களையும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபைத் தீர்மானங்களையும் மீறும் செயல் என்று கண்டிக்கப்பட்டது.   

இவ்விடத்தில், 2008ஆம் ஆண்டு, இந்தத் தற்காப்பு நடவடிக்கை தொடர்பில், ஆய்வு செய்து எழுதிய லக்னோவ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சஞ்சய் குப்தா, ‘தற்காப்பு நடவடிக்கை, சர்வதேச சட்டங்களுக்கும் ஐ.நாவின் கொள்கைகளுக்கும் எதிராக இருந்தபோதும், இது குறித்து எதையும் செய்யவியலாத, ஐ.நாவின் கையறுநிலை, அமெரிக்க, இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுக்கு வாய்ப்பானது. இதைப் பயன்மிக்க விருத்தியாக, இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் பார்க்கிறார்கள்’ என்று எழுதியிருந்தார். (பார்க்க: The Doctrine of Pre-emptive Strike, Sanjay Gupta, International Political Science Review 29(2)) இதையே இன்று, இந்தியா செய்திருக்கிறது.   

தனது அரசியல் காரணிகளை முன்னிறுத்தி, இன்னொரு போருக்கான சங்கை, இந்தியா ஊதமுனைகிறது. போர் ஏற்படுத்தும் விளைவுகள், மொத்த தென்னாசியாவிலும் எதிரொலிக்கும்.   

பிராந்திய மேலாதிக்கத்துக்கான போராக விரிவடையும் ஆபத்துள்ள இந்நெருக்கடி, நீண்ட, தீராத போருக்கான அனைத்து வாய்ப்புகளையும் கொண்டது.  

போர் மக்களுக்கானதல்ல; மக்கள் விரும்புவதுமல்ல. ஆனால், அரசியல்வாதிகளின் அதிகாரத்துக்கான ஆவல் கணக்குகளில், மக்கள் ஒரு பொருட்டல்ல என்பது மீண்டுமொருமுறை நிரூபணமாகிறது.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புல்வமா-தாக்குதல்-தேசபக்தியும்-தேசவிரோதமும்/91-230148

  • கருத்துக்கள உறவுகள்

பா.ஜ.க மீண்டும் ஆட்சியை பிடிக்க யாரையும் பலி கொடுக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.