Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறிழைத்த ஒவ்வொருவரையும் பொறுப்புக்கூற வைப்பதே சட்டத்தின் ஆட்சியாகும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தவறிழைத்த ஒவ்வொருவரையும் பொறுப்புக்கூற வைப்பதே சட்டத்தின் ஆட்சியாகும்

- ஜெகான் பெரேரா 

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்த்தொடர் ஆரம்பமாகியிருக்கும் நிலையில் போரின் முடிவுக்குப் பின்னரான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் அதன் கவனத்தை மீண்டும் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைகள் சர்வதேச சமூகத்தின் அக்கறைக்குரியவையாகும்.

ranil.jpg

விடுதலை புலிகளை தோற்கடித்த இராணுவ நடவடிக்கைகளின் இறுதிக்கட்டங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற  மனித உரிமை மீறல்கள் உட்பட பொறுப்புக்கூறலுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் மனித உரிமைகள் பேரவையின் 2015 அக்டோபர் தீர்மானத்துக்கு இலங்கை வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெறுவது குறித்து பரிசீலிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் மீதான கடப்பாட்டில் இருந்து இலங்கை விலகவேண்டுமென்ற யோசனையை கடந்த செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு முன்னதாகவே ஜனாதிபதி சிறிசேன வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை மறுபுறத்தில், ஜெனீவா தீர்மானத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் காட்டிவந்திருக்கின்ற தாமதத்தைக் கண்டித்து வடக்கு, கிழக்கில் தமிழ்ப்பகுதிகளில் இவ்வார ஆரம்பத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. 

 இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்த குடிமக்களின் நிலங்களை மீள அவர்களிடம் கையளித்தல்,  விசாரணை எதுவுமின்றி நீணடகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்தல் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினை ஆகியவை இலங்கை இணை அனுசரணை வழங்கிய தீரமானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து அரசாங்கம் முகம்கொடுத்து வருகின்ற முக்கிய சவால்களில் அடங்கும். அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதிலும் அரசாங்கம் தற்போது கவனத்தைச் செலுத்துகின்றது.1979 ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆயுதக்களஞ்சியத்தில் நிலைபேறான ஒன்றாக இலங்கையின் சட்டப்புத்தகத்தில் மாறிவிட்டது.தமிழர்களின் கிளர்ச்சியையும் தெற்கில் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.)வின் கிளர்ச்சியையும் அடக்குவதற்கு இந்த சட்டம் முழு அளவில் பயன்படுத்தப்பட்டது.

இப்போது அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் வரைவை கொண்டுவந்திருக்கிறது. பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக இந்த வரைவு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. பெருமளவுக்கு மாற்றங்கள் செய்யப்படாமல் அது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விடவும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவு குறிப்பாக மனித உரிமைகளுக்கான பாதுகாப்புகள் தொடர்பில் கணிசமானளவுக்கு  முன்னேற்றகரமானதாக இருக்கிறது. பாதுகாப்பு படைகளுக்கு அளிக்கப்படுகின்ற ஒப்புதல் வாக்குமூலங்களை சட்டரீதியான நோக்கங்களுக்கு பயன்படுத்துவதை அனுமதிக்காத ஏற்பாடுகள் புதிய வரைவில் உள்ளடங்கியிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச்சடடத்தை விடவும் கூடுதலான அளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட வரைவு பாராளுமன்றத்தில் இனிமேல்தான் சமர்ப்பிக்கப்படவேண்டியிருக்கிறது.சட்டவரைவொன்றை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்துவதில் கடைமுடிவான அதிகாரத்தை பாராளுமன்றமே கொண்டிருக்கிறது.

இனப்பிளவினதும் அரசியல் பிளவுகளினதும் பல்வேறு தரப்புகளிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஒரு புறத்தில், புதிய வரைவை மனித உரிமைகள் கோணத்தில் இருந்துபார்ப்பவர்கள் அது துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக விமர்சனம் செய்கின்ற அதேவேளை, மறுபுறத்தில், தேசிய பாதுகாப்பு கோணத்தில் இருந்து நோக்குபவர்கள்  அது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்று கூறுகின்றார்கள்.இவர்களின் கருத்துக்களை மதிப்பவராகவே ஜனாதிபதி சிறிசேன பெருமளவுக்கு மாறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான கூட்டணி முறிவடைந்ததற்கு பிறகு  அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமற்போன நிலையில் இந்த புதிய வரைவு தொடர்பில் தீர்மானம் ஒன்றுக்கு வருவதென்பது சிக்கலானதாக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கம் கொண்டுவருவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்ற அடுத்த முக்கியமான சட்டமூலம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பானதாகும்.இந்த ஆணைக்குழு 2015 அக்டோபர் ஜெனீவா தீர்மானத்தின் பிரகாரம் போருக்குப் பின்னரான நீதியை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நான்கு பொறிமுறைகளில் ஒன்றாகும்.இந்த நான்கு பொறிமுறைகளில் ஒன்றையே இதுவரையில் அரசாங்கம் முழுமையாக நிறுவியிருக்கிறது. காணாமல்போனோர் விவகாரம் தொடர்பான அலுவலகமே அதுவாகும். அந்த அலுவலகம் அண்மைய வாரங்களாக மன்னார் புதைகுழிகள் தொடர்பில் விசாரணைகள் உகந்த முறையில் நடத்தப்படுவதை உறுதிசெய்வதில் துடிப்பான பங்கையாற்றிவந்திருக்கிறது. இந்த பொறிமுறைகள் சர்ச்சைக்குரியவையாக இருந்தாலும் மிக முக்கியமானவை என்பதை இது வெளிக்காட்டுகிறது. மன்னார் புதைகுழிகளில் இருந்து இதுவரையில் சுமார் 30 சிறுவர்கள் உட்பட 300 க்கும் அதிகமானவர்களின் உடலின் எச்சங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் சில எச்சங்கள் அவற்றுக்குரிய சடலங்கள் பதைக்கப்பட்டிருக்கக்கூடிய காலகட்டங்களை அறிந்துகொள்வதற்கான இரசாயனப்  பரிசோதனைக்காக அமெரிக்க ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

இழப்பீட்டுக்கான அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டத்தையும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. கடந்த வன்முறைக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கி சேதங்களை சாத்தியமான அளவுக்கு சீர்செய்வதே இந்த அலுவலகத்தின் செயற்பாடாக இருக்கும்.உயிரிழப்புகளின் விளைவாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது குறித்துரைக்கப்பட்ட்டிருக்கும் நான்குவிதமான சூழ்நிலைகளில் சேதமாக்கப்பட்ட சொத்துக்களின் உரிமையாளர்கள் இழப்பீட்டைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்றுஇழப்பீட்டு அலுவலகச் சட்டம் கூறுகிறது. அதை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மொத்தம் 225 உறுப்பினர்களில் வெறுமனே 59 பேரே ஆதரித்தனர்.43 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இது எந்தளவு அக்கறையுடன் போரின் முடிவுக்குப் பின்னரான நல்லிணக்கச்செயன்முறைகள் நோக்கப்படுகின்றன என்பதை பறைசாற்றுகின்றது. விடுதலை புலிகளின் குடும்பத்தவர்களுக்கும் இழப்பீட்டுக்கு உரித்துடையவர்களா என்பது பாராளுமன்ற விவாதத்தின்போது  கிளப்பப்பட்ட சர்ச்சைகளில் ஒன்று என்பது கவனிக்கத்தக்கது.

 உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் இன்னமும் பகிரங்கப்படுத்தவில்லை. 2015 அக்டோபரில் ஜெனீவா தீர்மானத்துக்கு அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியபோது மதத்தலைவர்களை உள்ளடக்கிய ஒரு கருணை கவுன்சிலுடன் கூடிய உண்மை நாடும் பொறிமுறை பற்றி அது குறிப்பிட்டிருந்தது.இரு தசாப்தங்களுக்கும் கூடுதலான காலத்துக்கு முன்னர் இயங்கிய தென்னாபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வழியில் மன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடொன்றை வகுப்பது குறித்தும் யோசனை தெரிவிக்கப்பட்டது.

  ஆனால்,  இடைப்பட்ட வருடங்களில் சர்வதேச சட்டம்  போர்க்குற்றங்கள் உட்பட குறிப்பிட்டவகையான குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு எதிராக கூடுதலான அளவுக்கு கடுமையான ஏற்பாடுகளை சேர்த்துக்கொண்டதாக  வளர்ந்துவிட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சட்டமூல வரைவு தயாரிக்கப்பட்டுவிட்ட அதேவேளை, அது ஜனாதிபதி சிறிசேனவின் சம்மதத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறது. இழப்பீட்டு அலுவலகத்துக்கான சட்டம் பாராளுமன்றத்தில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட பின்புலத்தில் நோக்குகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தேவையான வாக்குகளைப் பெறுவதற்கு ஜனாதிபதியின் அரசியல் ஆதரவு அத்தியாவசியமானதாக இருக்கும்.

2015 அக்டோபர் ஜெனீவா தீர்மானத்துக்கான இலங்கையின் கடப்பாடுகளில் நிறைவேற்றுவதற்கு மிகவும் சிக்கலானது போர்க்குற்றங்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதற்கான நீதிவிசாரணைச் செயன்முறையேயாகும். போரில் வெற்றியீட்டித்தந்த படைவீரர்களை இது இலக்குவைப்பதாக பொதுமக்கள் நோக்குகிறார்கள்.அரசாங்கத்தை அரசியல்ரீதியாக எதிர்ப்பவவர்களும் அவ்வாறே பிரசாரங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆயுதப்படைகளை பாதுகாக்கப்போவதாக ஜனாதிபதி சிறிசேன பல தடவைகள் கூறியிருக்கிறார். சர்வதேச நீதிபதிகள், வழக்குத்தொடுநர்கள் மற்றும் விசாரணையாளர்களின் பங்கேற்புடன் கூடிய நீதிவிசாரணைப் பொறிமுறையொன்றை ஏற்படுத்தவேண்டும் என்றே ஜெனீவா தீர்மானம் கோருகிறது.ஆனால், இலங்கையின் சுயாதிபத்தியத்தைப் பாதுகாக்கவேண்டும் என்று குரல்கொடுப்பவர்கள் அதை அடியோடு வெறுக்கிறார்கள். அத்துடன் பொறுப்புக்கூறுதல் விவகாரத்தை முன்னாள் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.கட்டளையிடும் பொறுப்பு தொடர்பான சர்வதேச சட்டக் கோட்பாட்டின் ஊடாக தாங்களும் பொறுப்பாளிகள் ஆக்கப்படும் நிலை உருவாகும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

அண்மையில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த கால மனித உரிமை மீறல்கள் பிரச்சினை குறித்து பிரஸ்தாபித்திருந்தார்.விடுதலை புலிகளின் முன்னாள் நிருவாகத் தலைமையகமாக விளங்கிய கிளிநொச்சி நகரில் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், "  கவலைக்குரிய கடந்தகால வரலாற்றை இலங்கைச் சமூகங்கள் மறந்து மன்னிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.நாமெல்லோரும் செய்த தவறுகளை ஒத்துக்கொள்ளவேண்டும்.பரஸ்பரம் மன்னித்து  நல்லிணக்கத்தைச் சாதிப்பதற்காக முன்னோக்கிச் செல்லவேண்டும்" என்று கூறினார். போருக்குப் பின்னரான நல்லிணக்க விவகாரத்தைக் கையாளுவதற்கான உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி குறிப்பிட்ட பிரதமர்  உரிமைமீறல்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதனால் எதையும் சாதிக்கமுடியாமல் போகலாம்.ஆனால், கடந்த காலத்தை மறந்து மன்னிப்பதன் மூலமாக பல விடயங்களைச் சாதிக்கலாம் " என்று குறிப்பிட்டார்.

ஆனால், பிரதமரின் இந்தக் கருத்துகள் எதிர்பார்த்தவாறு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.வெறுப்புணர்வையும் வஞ்சம் தீர்க்கவேண்டும் என்ற எண்ணத்தையும் கைவிடுவது மனித உரிமைகள் மற்றும் மனிதகௌரவ மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் முனனோக்கிச்செல்வதற்கு சிறந்தவழி என்று உளவியல் ஆய்வுகளில் இருந்து தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.ஆனால், தனிமனிதர்கள் மறக்கவும் மன்னிக்கவும் கூடும் என்கிற அதேவேளை,  தவறிழைத்தவர்கள் ஒவ்வொருவரையும் - அவர்கள் எந்த தரத்தில் இருந்தாலும் -  பொறுப்புக்கூறவைக்கவேண்டியது அரசைப் பொறுத்தவரை அவசியமானதாகும். அதுவே சட்டத்தின் ஆட்சியாகும்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச்செயல்களுக்கு பாதுகாப்பு படைகளும் விடுதலை புலிகளும் பொறுப்பு என்று அண்மையில் கூறியிருந்தார். அந்தக் குற்றச்செயல்கள் போருடன் சம்பந்தப்பட்டவை இல்லையானால் , அவை உண்மையாகவே நடைபெற்றிருந்தால், குற்றவாளிகள் தண்டிக்கப்படடேயாக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.ஒரு தரப்பை மன்னித்து மறுதரப்பைத் தண்டிக்கும் கெள்கையையே ராஜபக்ச ஆட்சேபித்திருக்கிறார்.கிளிநொச்சியில் தான் வெளியிட்ட கருத்துகள் கடந்த காலத்தின் மீது கதவைச்  சாத்திவிடவேண்டும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டவையல்ல, நல்லிணக்கத்தை குறிக்கோளாகக்கொண்ட ஒட்டுமொத்த பின்புலத்தில் குற்றச்செயல்கள் மற்றும் தண்டனைகளுடன் தொடர்புடைய விவகாரங்களைத் தொடர்ந்து கையாளுவதை நோக்கமாகக்கொண்டவையே என்பதை பிரதமர் விக்கிரமசிங்க தெரியப்படுத்தியிருக்கவேண்டும்.

 

http://www.virakesari.lk/article/50973

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.