Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்: விக்னேஸ்வரன் வீசிய வலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்: விக்னேஸ்வரன் வீசிய வலை

Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, பி.ப. 12:08 Comments - 0

-இலட்சுமணன்

இலங்கை விவகாரத்தை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சமர்ப்பித்திருக்கின்றன. 

image_4074349ffe.jpgஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில், கிழக்கில் அரசியல் தலைமைகள், முக்கிய தீர்மானங்களை எடுக்கும் காலகட்டங்கள்  இருந்து வந்துள்ளன. அந்த நிலைமையில், இடைப்பட்ட காலத்தில், மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதற்கு,  நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து அமரர்களான நல்லையா மாஸ்டர், இராசமாணிக்கம், தேவநாயகம், பரீத் மீரா லெவ்வை, ராஜன்  செல்வநாயகம், தங்கத்துரை, நிமலன் சௌந்தரநாயகம், ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களைக் குறிப்பிடலாம். இவர்கள், கிழக்கின் முக்கியமான அரசியல் தீர்மானங்களை எடுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.  அதேபோன்று, இப்போது எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற செல்லையா இராசதுரை, வடக்கைச் சேர்ந்தவராக இருந்தாலும், வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள், கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்),  90களில்  டெலோவின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட கோவிந்தன் கருணாகரம் (ஜனா), தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.துரைராஜசிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ்இன் உப தலைவர் துரைரெட்ணம் போன்றவர்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.

இப்போது, கிழக்கு மாகாணத்துக்கென தனித்துவமான அரசியல் தலைமைத்துவம் தேவை; அதை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற கோணத்தில் பேசப்படுவதும், முன்னெடுப்புகள் குறித்து ஆராயப்படுவதுமான சூழ்நிலை தோன்றி இருக்கிறது. தமிழ்த் தேசிய அரசியலில், வடக்குத் தலைமைகளால் கிழக்கு புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்குத் தீர்வு காணப்படுவதே, இதற்கான ஒரே தீர்வு என்று உணரப்பட்டாலும், அதற்கான நிரப்பல்கள் நடைபெறவில்லை.

இந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மட்டக்களப்புக்கு ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அரசியல், மதத் தலைவர்கள், அமைப்புகளின் பிரதானிகளைச்  சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கிறார்.

image_3e6f67824b.jpg

இது, தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல் பரப்புரை நடவடிக்கையாக இருந்தாலும், முக்கியமாக கிழக்கில் புதியதொரு பலம்மிக்க அரசியல் தலைமையை உருவாக்குவதற்கான முயற்சியாகவும் இருந்திருக்கிறது.
இதை மிகவும் தெளிவாக உறுதிப்படுத்தும் வகையில், திங்கட்கிழமை (18) மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு அமைந்திருந்தது. இங்கு அவர், “கிழக்கு மக்கள், தாங்கள் தலைமை வகிக்கும் ஒரு கட்சியைத் தொடங்கி, வடக்கையும் சேர்த்து, தலைமை வகிக்கக்கூடிய தலைமைத்துவத்தைக் கொடுக்க முடியும். வடக்கில் இருந்து வருபவர்கள்தான் தலைமைத்துவம் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. உங்களுடைய தலைமைத்துவத்தில்தான் அனைத்தும் இருக்கின்றது.

எந்நேரமும் வடக்கில் இருப்பவர்கள் எம்மைப் பார்க்கின்றார்களில்லை என்று சொல்வது சரியானதல்ல. உங்களுடைய தலைமைத்துவத்தை நீங்கள் வளர்க்க வேண்டும். எங்களது கட்சியைப் பொறுத்தவரையில், வடக்கு, கிழக்கு தலைவர்கள் இருவரும் சேர்ந்து, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்துதான், நான் இங்கு வந்துள்ளேன்” என்று கூறியிருந்தார். 

அவர் மேலும் கூறுகையில், “தற்போதைய 13ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, நாங்கள் எதைச் சாதிக்கப் போகின்றோம்? மாகாண சபை இருந்த வரையில், நாங்கள் எங்களுக்கென்று ஓர் அடையாளத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தது. அந்த அடையாளத்தை நாங்கள் இழந்துவிட்டோம். தற்போது மத்திய அரசாங்கம், தான்தோன்றித்தனமாகத் தனக்குத் தேவையானவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில்தான், மாகாணசபைத் தேர்தலையும் தள்ளி வைத்துக் கொண்டு இருக்கின்றது.” என்றும் தெரிவித்திருந்தார். 

பிரதம நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட்டு, வடக்கு மாகாண முதமைச்சராக மாறிய சி.வி. விக்னேஸ்வரன், ஒரு குறிப்பிட்ட காலத்தில் அக்கட்சியின் எதிர்ப்பாளராக மாறி, இப்போது, தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியை உருவாக்கி இருக்கின்றார். 

ஏற்கெனவே நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சி மன்ற அரசியலில் ஈடுபட்டு, தம்மை அரசியல் தலைவர்களாக வெளிக்காட்டியவர்கள் பலர், இப்போது ஏதுமற்றவர்களாக, அரசியல் சூழ்ச்சிகளில் மோதுண்டு அடிபட்டுப் போனவர்களாக இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்ப்பட்டியலை, நீட்டிக் கொண்டு போவதில் பயனில்லை.

இந்த இடத்தில் தான், சி.வி.விக்னேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (17) கல்முனையில் அரசியல் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.  அதேநேரம், மண்டூர், குறுமன்வெளியிலும் மக்கள் சந்திப்புகளை நடத்தியிருந்தார். திங்கட்கிழமை (18), மட்டக்களப்பு மறை மாவட்டப் பேராயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையைச் சந்தித்திருக்கிறார்.  அடுத்ததாக, பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தி, தன்னுடைய மட்டக்களப்பு, அம்பாறைக்கான விஜயம், செயற்பாடுகள், கிழக்கின் அரசியல் நிலைமை, அரசியல் தலைமை பற்றியெல்லாம் கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.  

image_172447e18c.jpg

கல்லடியிலுள்ள இராமகிருஷ்ண மிஷனின் தலைவர் சுவாமி தக்ஷயானந்தஜீ மகராஜைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அன்றைய தினம் மாலை, ஏறாவூர் பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தளவாய் கிராமத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். இரவு வேளையில் மட்டக்களப்பு சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

மாரச் 19அன்று, அவருடைய விஜயத்தின் நோக்கமான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டார். மாலை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியைச் சந்தித்தார். பின்னர் மட்டக்களப்பு, ஊறணியிலுள்ள அமெரிக்க மிஷனில் வைத்து, மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம், சர்வமதத் தலைவர்களுடைய அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளைச் சந்தித்திருக்கிறார். அன்றைய தினம் இரவு, கிழக்குத் தமிழர் ஒன்றியத்துடன் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. 

புதன்கிழமை (20) காலை, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடாகியிருந்தபோதும், அது நடைபெறவில்லை என்றே தெரிகிறது.

image_9e6c2f5966.jpg

இவ்வாறு, திட்டமிட்ட வகையிலான சந்திப்புகள், கலந்துரையாடல்கள், நிகழ்வுகளில் கலந்துகொண்ட முன்னாள் முதலமைச்சர், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் மாத்திரம்தான் கலந்து கொள்ள வந்தார் என்று, எவ்வாறு சொல்லிக் கொள்ள முடியும்?

கிழக்கில் இருக்கின்ற அரசியல் சூழல் பற்றி, பலரும் பலவாறாகக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டாலும், அதை நேரடியாகக் கள விஜயம் செய்து, நாடி பிடித்துப் பார்ப்பதற்காக வந்திருந்த விக்னேஸ்வரன், அதைப் பூரணப்படுத்தினாரா, இல்லையா என்பது, அவருக்கு மாத்திரமே விளக்கம்.

தொடர் கேள்விகள், தேடல்களின் ஊடாக, கிழக்குக்கென்று ஒரு திறமையான, இதயசுத்தியான, குரோதங்களற்ற தலைமைத்துவப் பண்புகளுடனான பலம் மிக்க அரசியல் தலைமையைக் கண்டுபிடிக்க வேண்டிய வேளையில், சீ.வி. விக்னேஸ்வரனால் சந்திப்புகளுக்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் சந்தித்தவர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கும்.

இருந்தாலும், கிழக்கின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு, உடனடியாக முடியாது என்று சி.வி. விக்னேஸ்வரன் நேரடியாகச் சொல்வது கூட, பிழையாகவே பார்க்கப்படும். ஆனாலும், எதிர்வருகின்ற தேர்தல்கள், கிழக்கில் பிளவுகளுக்கானதாக இல்லாமல், தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்கின்ற, மாகாண சபையைப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கக் கூடிய தேர்தல் வழிமுறையொன்று கண்டுபிடிக்கப்பட்டே ஆகவேண்டும்.

பொறுத்திருப்பதும் காத்திருப்பதும் தமிழர்களுக்கொன்றும் புதிய விடயமில்லை; அந்தவகையில், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் முயற்சிகளில், விக்கியின் அலையால் பாதிப்பு ஏற்படாமலிருந்தால் நல்லதே.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கின்-அரசியல்-தலைமைத்துவம்-விக்னேஸ்வரன்-வீசிய-வலை/91-231072

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.