Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தமிழக சட்டமன்றத் தொகுதிகள்: கள நிலவரம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடைத்தேர்தல் நடக்கும் நான்கு தமிழக சட்டமன்றத் தொகுதிகள்: கள நிலவரம் என்ன?

முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்
இடைத்தேர்தல்Getty Images கோப்புப்படம்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு ஏற்கனவே இடைத்தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்த வாய்ப்புள்ள இந்தத் தொகுதிகளின் நிலவரம் என்ன?

மொத்தமுள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து ஏப்ரல் 18ஆம் தேதியே வாக்குப்பதிவு நடத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கு மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

தமிழக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பனர்களில் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர். சூலூர், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்துவிட்டனர். ஓசூர் தொகுதியின் உறுப்பினராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி நீதிமன்ற வழக்கின் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆகவே தற்போது தமிழக சட்டப்பேரவையின் எண்ணிக்கை 212ஆகக் குறைந்துள்ளது. இதில் அ.தி.முகவின் பலம் சபாநாயகரைத் தவிர்த்து 115ஆக உள்ளது. 

மேலும் விருதாச்சலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவு அணியில் உள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அவர்கள் அரசை எதிர்த்து வாக்களிப்பார்கள் எனக் கருதப்படுகிறது. மேலும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரும் ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, அ.தி.மு.கவின் பலம் 110ஆகக் குறைந்துள்ளது. 

ஸ்டாலின்M.K.STALIN

ஆட்சியைத் தக்கவைக்க வேண்டுமானால், 22 தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலில் குறைந்தது எட்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ஆளும் அ.தி.மு.க. இருக்கிறது. ஆகவே, இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என்பதையும் தீர்மானக்கும் தேர்தலாகவும் இருக்கும். 

ஏற்கனவே, பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், திருவாரூர் ஆகிய 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிவடைந்துவிட்டது.

மீதமுள்ள திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. 

திருப்பரங்குன்றம்

மதுரைக்கு அருகில் உள்ள கோவில் தலமான திருப்பரங்குன்றம் தொகுதி, பொதுவாகவே அ.தி.மு.கவுக்கு சாதகமான தொகுதி. 1977ல் இருந்து இதுவரை எட்டு முறை அ.தி.மு.கவும் ஒரு தடவை அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.திகவும் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன. இரண்டு தடவைகள் மட்டுமே தி.மு.க. வெற்றிபெற்றிருக்கிறது. 

2016ஆம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எம். சீனிவேல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் மணிமாறனைவிட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இதற்குப் பிறகு 2016 நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட்ட ஏ.கே. போஸ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் டாக்டர் சரவணனைவிட சுமார் 42 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். 

ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது சுயநினைவின்றி அவரது கைரேகை பெறப்பட்டதாக வழக்குத் தொடர்ந்த சரவணன் அந்த வழக்கில் வெற்றிபெற்றார். ஆனால், அதற்குள் ஏ.கே. போஸ் மரணமடைந்தார். ஆகவே, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இப்போது மீண்டும் தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாகப் பணியாற்ற முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி தலைமையில் மிகப் பெரிய அணி களமிறங்கியிருக்கிறது. கடந்த முறை சரியாகச் செயல்படாத தி.மு.க. நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் தி.மு.க தரப்பு, போன தேர்தலில் எங்கெல்லாம் வாக்குகள் குறைவாக விழுந்ததோ, அந்தப் பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறது. 

ஏ.கே. போஸை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்றதால், மாநிலம் முழுதும் அறியப்பட்ட சரவணன் மருத்துவர் என்ற முறையிலும் தொகுதிக்குள் அறிமுகமானவர். 

அ.தி.மு.க. சார்பில் அவனியாபுரம் செயலாளர் முனியாண்டி போட்டியிடுகிறார். தங்களது ஆதரவாளர்களைக் களமிறக்க அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் முயற்சித்தும் முனியாண்டிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது அ.தி.மு.க. தலைமை. தொகுதிக்குள் பெரிதாக அறிமுகமில்லாத முனியாண்டி, கட்சியின் பலத்தை நம்பி களமிறங்கியிருக்கிறார். முதல்வரும் துணை முதல்வரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதால் சற்று தெம்பாக இருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமிEDAPPADI PALAMNISWAMI / FACEBOOK

இந்தத் தொகுதியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுபவர் உசிலம்பட்டி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன். தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலான அணி இவருக்காகத் தீவிரமாக தேர்தல் பணியாற்றிவருகிறது. 

இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முனியாண்டியும் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் மகேந்திரனும் பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தொகுதியில் அந்த சமூகத்தின் வாக்குகளே அதிகம் என்பதால் இருவருமே ஜாதியின் பலத்தில் வெற்றிபெறலாம் என நினைக்கின்றனர். தி.மு.க. சார்பில் போட்டியிடும் சரவணன் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர். பிரமலைக்கள்ளர் வாக்குகளும் அ.தி.மு.க வாக்குகளும் இரண்டாகப் பிரிவதால் எளிதில் வெல்லலாம் என நினைக்கிறார் சரவணன். 

இந்தத் தொகுதியில் சுமார் 2,80,000 வாக்காளர்கள் இருக்கின்றனர். பிரதான கட்சியின் வேட்பாளர்களைத் தவிர, நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாண்டியம்மாள் என்பவரும் மக்கள் நீதி மையத்தின் சார்பில் சக்திவேல் என்பவரும் போட்டியிடுகிறார்கள். 

ஓட்டப்பிடாரம் (தனி)

இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் ஓட்டப்பிடாரம் தொகுதி மட்டுமே தனித் தொகுதி. தூத்துக்குடியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் முழுக்க முழுக்க ஊராட்சிப் பகுதிகளை உள்ளடக்கிய மிகவும் பின்தங்கிய தொகுதி. பொதுமக்களின் எதிர்ப்பைச் சந்தித்த ஸ்டெர்லைட் ஆலையும் இந்தப் பகுதிக்குள்தான் வருகிறது.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன், தி.மு.க. சார்பில் சண்முகைய்யா, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான சுந்தர்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

1977க்குப் பிறகு நடந்த பத்து சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. நான்கு தடவைகளில் வெற்றிபெற்றுள்ளது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. கிருஷ்ணசாமி இரு தடவைகளும் காங்கிரஸ் இரண்டு முறைகளும் சிபிஐ, தி.மு.க. ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் 65071 வாக்குகளும் தி.மு.க. கூட்டணியில் இருந்தபடி போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி 64578 வாக்குகளும் பெற்றனர். வெறும் 493 வாக்குகளின் இந்தத் தொகுதியில் வெற்றி - தோல்வி தீர்மானிக்கப்பட்டது. 

டாக்டர் கிருஷ்ணசாமிfacebook / PT PARTY

இப்போது புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது அ.தி.மு.க. தரப்பு. அமைச்சர் காமராஜ் தலைமையிலான ஏழு அமைச்சர்களின் அணி அ.தி.மு.கவின் தேர்தல் பணிகளைக் கவனித்துவருகிறது. ஆனால், இந்தத் தொகுதியின் வேட்பாளராக மோகன் அறிவிக்கப்பட்டதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சின்னதுரை, ஜெயலலிதா ஆகியோர் கடும் அதிருப்தியுடன் இருப்பது ஒரு பின்னடைவு. இருந்தபோதும் தங்களுக்கு சாதகமான தொகுதி என்பதால் வெற்றிபெற்றுவிடலாம் என நம்புகிறது அ.தி.மு.க. 

தி.மு.கவின் சார்பில் இந்தத் தொகுதியின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், தொகுதிக்குள் முக்கியத் தலைவர்களான அனிதா ராதாகிருஷ்ணனும் கீதா ஜீவனும் எதிரும்புதிருமாக இருப்பது தேர்தல் பணிகளை பாதிக்கக்கூடும் என கட்சியினர் கருதுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போதே, கனிமொழியுடன் சேர்ந்து தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குசேகரிக்க ஆரம்பித்துவிட்டார் சண்முகைய்யா. 

தற்போது கனிமொழி கிராமங்களில் ஒவ்வொரு தெருவாகச் சென்று வாக்குக் கேட்பது, தனக்கு சாதகமாக அமையுமென நினைக்கிறார் சண்முகைய்யா. 

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்ததால் பதவியிழந்த சட்டமன்ற உறுப்பினாரான சுந்தர்ராஜ் தொகுதி மக்களிடம் தனக்கு இருக்கும் அறிமுகத்தை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறார். பா.ஜ.க. அ.தி.மு.க. மீதான அதிருப்தி தனக்கு வாக்குகளைப் பெற்றுத்தரும் என நம்புகிறார். தொகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள தேவேந்திரகுல வேளாளர், நாடார் வாக்குகளையும் ஈர்க்க அ.ம.மு.க. தரப்பு பல முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. 

அ.தி.மு.க. - அ.ம.மு.க. இடையே வாக்குகள் பிரிவது, ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஏற்பட்ட அதிருப்தி ஆகியவை தங்களுக்கு சாதகமாக இருக்குமென தி.மு.க. நம்புகிறது. ஆனால், ஆளும்கட்சியாக இருப்பதும், புதிய தமிழகம் தங்கள் பக்கம் இருப்பதும் தங்களுக்கு சாதகமாக இருக்குமென அ.தி.மு.க. நினைக்கிறது. 

வாக்குப்பதிவுGetty Images

இந்தப் பகுதியில் பிரசாரம் செய்த கமல்ஹாசன், துப்பாக்கிச் சூட்டால் உயிரிழந்த நான்கு குடும்பத்தினரை மேடையேற்றியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் காந்தி கணிசமான வாக்குகளைப் பெறக்கூடும். நாம் தமிழர் கட்சியின் அகல்யா, சீமானால் ஈர்க்கப்படும் இளைஞர் வாக்குகளைக் குறிவைத்திருக்கிறார். 

சூலூர்

சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அ.தி.மு.கவைச் சேர்ந்த கனகராஜ் உயிரிழந்துவிடவே, இப்போது இடைத்தேர்தலைச் சந்திக்கிறது இந்தத் தொகுதி.

அ.தி.மு.கவின் சார்பில் கனகராஜின் ஒன்றுவிட்ட சகோதரர் வி.பி. கந்தசாமி போட்டியிடுகிறார். தி.மு.கவின் சார்பில் பொங்கலூர் பழனிச்சாமியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சுகுமாரும் போட்டியில் இருக்கிறார்கள். 

2009ல் தொகுதி மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி இது. 2011ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க. வேட்பாளர் கே. தினகரன் வெற்றிபெற்றார். 2016ஆம் ஆண்டுத் தேர்தலில் அ.தி.மு.கவின் ஆர். கனகராஜ் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனோகரனைவிட சுமார் 36,600 வாக்குகள் அதிகம் பெற்றார். 

இந்தத் தொகுதியில் முதலில் அ.தி.மு.கவின் செ.ம. வேலுச்சாமிக்குத்தான் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மரணமடைந்த கனகராஜின் ஒன்றுவிட்ட சகோதரரை நிறுத்துவதன் மூலம் அனுதாப வாக்குகளை பெறலாம் எனத் திட்டமிட்டிருக்கிறது அ.தி.மு.க. இதனால், வேலுச்சாமி ஆதரவாளர்கள் சற்று அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி போட்டியிடுகிறார். எ.வ. வேலுவின் தலைமையில் தேர்தல் பணிகளை தி.மு.க. செய்துவருகிறது. இந்தத் தொகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள அருந்ததியர் வாக்குகளைப் பெறும்வகையில், அவர்களது தெருக்கள் வீடுகளில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நேரடியாகச் சென்று வாக்குகளைக் கோரியது பலனளிக்குமென அக்கட்சி நம்புகிறது. 

அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் சுகுமார், தொகுதியில் உள்ள தேவர் சமுதாய வாக்குகளையும் அ.தி.மு.க. அதிருப்தி வாக்குகளையும் நம்பிக் களமிறங்கியிருக்கிறார். வேலுச்சாமி அதிருப்தியில் இருப்பதும் தங்களுக்குச் சாதகம் என நினைக்கிறது டிடிவி தரப்பு. 

விவிபேட்Getty Images

அரவக்குறிச்சி

இடைத்தேர்தலைச் சந்திக்கும் நான்கு தொகுதிகளில் மிகவும் அதிக கவனத்தை ஈர்த்திருக்கும் தொகுதி இது. அ.தி.மு.கவில் இருந்து வெற்றிபெற்று, டிடிவி தினகரன் பக்கம் சென்றதால், தகுதி இழப்பு செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, தற்போது தி.மு.க. சார்பில் போட்டியிடும் தொகுதி இது என்பது இதற்கு முக்கியமான காரணம். 

அ.தி.மு.க. சார்பில் வி.வி. செந்தில்நாதனும் அ.ம.மு.க. சார்பில் பி.எச். ஷாகுல் ஹமீதுவும் களத்தில் இருக்கிறார்கள். 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரவக்குறிச்சி தொகுதியில் இதுவரை நடந்திருக்கும் 16 சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மூன்று முறையும் அ.தி.மு.க. ஐந்து முறையும் தி.மு.க. நான்கு முறையும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சுதந்திரா கட்சி, சுயேச்சை ஆகியோர் தலா ஒரு முறையும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். 

வாக்குAFP

கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி. செந்தில்பாலாஜி சுமார் 88 ஆயிரம் வாக்குகளையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் கே.சி. பழனிச்சாமி சுமார் 64,400 வாக்குகளையும் பெற்றனர். 

கடந்த முறை வெற்றிபெற்ற செந்தில் பாலாஜியே இந்த முறை தங்கள் சார்பில் களத்தில் இருப்பதால் தி.மு.க. உற்சாகமாக இருக்கிறது. தொகுதிக்குள் முக்கியப் பிரச்சனையான குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பேன் என்பதை முக்கியமான வாக்குறுதியாகத் தருகிறார் செந்தில் பாலாஜி. தேர்தல் பணிகளுக்குப் பெயர்போனவர் என்பதால் மிகத் தீவிரமாக பணியாற்றிவருகிறார் அவர். ஆனால், இந்தத் தொகுதியின் முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தேர்தல் களத்தில் ஒதுங்கியே இருக்கிறார்கள். 

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வி.வி. செந்தில்நாதன், அக்கட்சியின் இளைஞர் பாசறையின் மாவட்டச் செயலாளர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பெரும் எண்ணிக்கையிலான நிர்வாகிகள் இவருக்காக பணியாற்றிவருகிறார்கள். செந்தில் பாலாஜியின் 'துரோகம்' குறித்துச் சொல்லி வாக்குகளைக் கவர முயற்சிக்கிறது அ.தி.மு.க. தரப்பு. 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் ஷாகுல் ஹமீது, தொகுதிக்குள் உள்ள இஸ்லாமிய வாக்குகளைக் குறிவைத்திருக்கிறார். இவரும் செந்தில் பாலாஜியின் துரோகம் குறித்தே பேசுகிறார். 

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் மோகன்ராஜுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே, ஒரு இந்து' என சொல்லிவிட்டுப்போக, அவர் பக்கமும் சற்று கவனம் திரும்பியிருக்கிறது

 

https://www.bbc.com/tamil/india-48288304

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.