Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அச்சமூட்டும் கட்டுக் கதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அச்சமூட்டும் கட்டுக் கதைகள்

முகம்மது தம்பி மரைக்கார் / 2019 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:10

மிகத் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே, பேரினவாதத்தின் இந்தச் செயற்றிட்டம் ஆரம்பித்து விட்டது. ஹலாலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை எல்லாம், அத்தனை இலகுவில் மறந்துவிட முடியாது. அதன் தொடர்ச்சிகளே, இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.    

கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம்களின் உரிமைகளைத் தட்டிப் பறிக்கும் செயற்பாடுகளில், சிங்களப் பேரினவாதிகள் மிகத் தீவிரமாக இயங்கி வருகின்றனர். ஆரம்பத்தில் முஸ்லிம்களின் உணவு, உடை போன்ற விவகாரங்களில் மூக்கை நுழைக்கத் தொடங்கியவர்கள், இப்போது சில ஈச்சை மரங்களை, முஸ்லிம் பகுதிகளில் உருவாக்கியமை குறித்தே, விசாரணை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

மிகச் சரியாகச் சொன்னால், இஸ்லாம் மீதும், முஸ்லிம்கள் தொடர்பிலும் அப்பாவிச் சிங்கள மக்களிடம் ஓர் ‘அச்சம்’ உள்ளது. இந்த அச்சம், அவர்களிடம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாகும். 

முஸ்லிம்களின் சனத்தொகை, இந்த நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதனால், ஒரு காலகட்டத்தில் அவர்கள், இந்த நாட்டின் பெரும்பான்மையாக மாறி விடுவார்கள்; அதற்கு முன்னதாகவே, அவர்கள் கிழக்கு மாகாணத்தைப் பிடித்து ‘கிழக்கிஸ்தான்’ ஆக்கி விடுவார்கள். 

மேலும், ஆயிரக் கணக்கான சிங்கள மக்களை, இஸ்லாத்தின் பக்கம், முஸ்லிம்களாக மாற்றியுள்ளார்கள்;  தொடர்ந்தும், மாற்றிக் கொண்டு வருகின்றார்கள். முஸ்லிம்களின் மதரஸாக்களில், பயங்கரவாதம் கற்பிக்கப்படுகிறது.

இப்படி, ஏராளமான அச்சமூட்டும் கட்டுக் கதைகளை, அப்பாவித்தனமான பாமரச் சிங்கள மக்கள் மத்தியில், பேரினவாதிகள் திட்டமிட்டு உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனால்தான், முஸ்லிம்கள் மீது, ஓர் அச்சமும் அதனூடான வெறுப்பும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

ஊடகமொன்றில், முன்னர் பணியாற்றிய முஸ்லிம் நண்பரொருவர், ஊவா மாகாணத்தில் ஆசிரியராகத் தொழில் செய்து வருகின்றார். அவர் பணியாற்றும் பாடசாலை, மிகப்பிரபல்யமானது. ஏப்ரல் 21ஆம் திகதி, ‘சஹ்ரான் கும்பல்’ தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாடசாலைகளிலும் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்யப் போகிறார்கள் என்கிற அச்சம் நிலவி வந்தது. இதன்போது, மேற்சொன்ன பாடசாலையில் கற்பிக்கும் சிங்கள ஆசிரியர்கள் சிலர், அவர்களின் சக ஆசிரியரான மேற்படி முஸ்லிம் ஆசிரியரிடம், “சிங்களப் பாடசாலையொன்றுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து அங்குள்ள 600 ஆண் பிள்ளைகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு, 600 பெண் பிள்ளைகளைக் கடத்திச் சென்று, அவர்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றத் திட்டமிட்டு இருக்கிறார்களாம். நீங்கள் இந்தக் கதையைக் கேள்விப்படவில்லையா” என்று கேட்டிருக்கிறார்கள். 

அந்தச் சிங்கள ஆசிரியர்களின் அப்பாவித்தனத்தை நினைத்து, சம்பந்தப்பட்ட முஸ்லிம் ஆசிரியர், நம்மிடம் கவலைப்பட்டார். இப்படியெல்லாம் நடப்பதற்கு சாத்தியமில்லை என்றும், அவ்வாறு, 600 பெண் பிள்ளைகளைக் கடத்திச் செல்லும் போது, படையினர் சும்மா விடுவார்களா என்று, தான் கேட்டதாகவும், 600 பிள்ளைகளைக் கடத்திச் சென்று வைத்திருப்பதிலுள்ள அசாத்தியங்கள் குறித்தும் அந்த ஆசிரியர்களுக்கு விளக்கிச் சொன்னபோதுதான், அந்தச் சிங்கள ஆசிரியர்கள், குறித்த கட்டுக் கதையைப் புரிந்து கொள்ளத் தொடங்கியதாகவும் முஸ்லிம் ஆசிரியர் நம்மிடம் விவரித்தார்.

“முஸ்லிம் ஹோட்டல்களில், சிங்களவர்களுக்கு வழங்கும் கொத்து ரொட்டிக்குள், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலந்து கொடுக்கிறார்கள்” என்பதும், இது போன்றதொரு கட்டுக்கதைதான். 
முஸ்லிம்கள் தொடர்பாக, ஏற்கெனவே சொல்லி வைக்கப்பட்டுள்ள அச்சமூட்டும் கதைகளை நம்பியமையால், அதன் பின்னர் வரும் எல்லாவிதமான கட்டுக் கதைகளையும் சிங்கள மக்களில் கணிசமானவர்கள் நம்பத் தொடங்குகின்றனர். அதனூடாக முஸ்லிம்கள் மீது கோபமும் குரோதமும் கொள்ளத் தொடங்குகின்றார்கள்.

ஒவ்வொரு சமூகத்தவர்களுக்கும் நம்பிக்கை ரீதியாகச் சில செயற்பாடுகளில் ஈடுபாடும் விருப்பமும் இருக்கும். உதாரணமாக, அரச மரத்தின் கீழ் அமர்ந்து புத்தர் தியானம் செய்து, ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகப் பௌத்தர்கள், அரச மரத்தைப் புனிதமாகக் கருதுகின்றனர். அந்த மரம் மீது அவர்களுக்கு ஆத்மீக ரீதியானதொரு விருப்பம் உள்ளது. அதனால் அரச மரத்தை அவர்கள் வணங்குகின்றனர்.

இந்து மதத்தில் வில்வ மரத்துக்கு முக்கிய இடமுள்ளது. வில்வ மரத்தை இந்துக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். இந்துக்களின் கோவில்களை அண்மித்து, வில்வ மரங்களை நாம் காண முடியும். சிவ வழிபாட்டில் வில்வ பத்திரபூசை முக்கியமானது, வில்வ இலை, திரிசூலத்தின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. 

இவை போலவே, கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்மஸ் மரம் புனிதமானதாக உள்ளது. இந்த ஊசியிலைக் கூம்பு மரத்துக்கு, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் முக்கிய இடம் உள்ளது. இந்த வரிசையில்தான், ஈச்சை மரங்களைக் காத்தான்குடியில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விரும்பி உருவாக்கியமையைப் பார்க்க வேண்டியுள்ளது.

image_cfff2e8e0f.jpg

முஸ்லிம்கள், இறைவனுக்கு அடுத்ததாக முஹம்மது நபியை நேசிக்கின்றனர். முஹம்மது நபி வாழ்ந்த பிரதேசத்தில், ஈச்சை மரம் பிரதானமாகக் காணப்படுகிறது. முஹம்மது நபியின் அன்றாட உணவில் ஈச்சம்பழம் இருந்திருக்கிறது. அவரின் வீடு, ஈச்சம் மரத்தாலும், அதன் ஓலைகளாலும் ஆனதாகும். முஹம்மது நபியவர்களின் சொல், செயல், அங்கிகாரங்களைப் பின்பற்றுவது, நன்மை தரும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஹம்மது நபியவர்கள் நோன்பு துறக்கும் போது, மூன்று ஈச்சம் பழங்களைப் புசிப்பார்கள் என்றும், அதேபோன்று நோன்பு துறக்கும் போது, மூன்று ஈச்சம்பழங்களைப் புசிப்பது நன்மைக்குரிய காரியம் எனவும் முஸ்லிம்கள் நம்புகின்றனர். 

மேற்படி வரலாறு, நம்பிக்கைகளின் பின்னணிகளின் அடிப்படையில்தான் முஸ்லிம்களுக்கும் ஈச்சை மரத்துக்கும் இடையிலான உறவை வைத்து நோக்க வேண்டியுள்ளது. காத்தான்குடியில் ஈச்சை மரங்களை ஹிஸ்புல்லாஹ் ஏன் உருவாக்கினார் என்பதை, இந்தப் பின்னணியை வைத்து விளங்கிக்கொள்ள முடியும். எவ்வாறாயினும், இஸ்லாத்தில் ஈச்சை மரத்துக்கு எந்தவிதமான புனிதத் தன்மைகளும் கிடையாது.

இந்த நிலையில்தான், ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவினர், ஹிஸ்புல்லாவை அழைத்து ‘காத்தான்குடியில் ஏன் ஈச்சை மரங்களை நட்டீர்கள்’ என்று கேட்டுள்ளார்கள்.

ஈஸ்டர் தினத் தாக்குதல்களுக்கும் காத்தான்குடியில் ஈச்சை மரங்களை நட்டதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஈச்சை மரங்களை நட்டதன் மூலம், காத்தான்குடியை ஹிஸ்புல்லாஹ் அரபு மயப்படுத்தி விட்டார் என்பதுதான் குற்றச்சாட்டாகும். உலகம் வளர்ச்சியடைந்து, செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்துவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், ஈச்சை மரத்தை நடுவது பயங்கரவாதத்துக்குத் துணை போய் விடும் என்கிற கோணத்தில் நம்மில் ஒரு சாரார் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நினைக்கையில், கவலையாக உள்ளது.

மறுபுறம், முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் ஏற்பட்டுள்ள அச்சமும் அதனூடான கோபமும் பேரினவாதிகளுக்கு அரபு மொழி மீதும் குரோதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்துக் கடந்த வாரமும் எழுதியிருந்தோம். 

பொது இடங்களில் காட்சிப்படுத்தும் பதாதைகளில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று, பொது நிருவாக அமைச்சு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில், அரபு மொழி பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்கு, கறாரான உத்தரவைப் பிறப்பித்தவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார். அதேவேளை, வீடுகள், தனியார் நிறுவனங்கள், பள்ளிவாசல் போன்ற இடங்களில், அரபு மொழியைப் பயன்படுத்துவதில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்றும் அமைச்சர் மனோ குறிப்பிட்டுள்ளார்.

image_d482addc21.jpgஆனால், அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள மர்கஸ் பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கும் ‘அபூபக்கர் சித்தீக்’ எனும் பெயருடைய மதரஸாவின் பெயர்ப்பலகையானது, பள்ளிவாசல் வளவுக்குள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதனை அகற்றுமாறு பொலிஸாரும் இராணுவத்தினரும் உத்தரவிட்டிருந்தனர். அதன் காரணமாக, குறித்த பெயர்ப்பலகையை அதன் நிருவாகத்தினர் அகற்றியுள்ளார்கள். 

சனிக்கிழமையன்று, ஏறாவூரிலுள்ள பள்ளிவாசல்களுக்குச் சென்றிருந்த ஏறாவூர் பொலிஸார் “ஒரு மணி நேரத்துக்குள் பள்ளிவாசல்கள், வீடுகளிலுள்ள அனைத்து குர்ஆன்,  ஹதீஸ் பிரதிகளையும் அகற்றுங்கள்” என உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதனால், அந்தப் பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஏறாவூர் பள்ளிவாசல்கள்,  முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் வாஜித் மௌலவி என்பவர், ஏறாவூரைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு,  விடயத்தை கூறினார்.

இதையடுத்து, உடனடியாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பெரேரா, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நளின் ஜயசுந்தர ஆகியோரைத் தான் தொடர்பு கொண்டதாகவும் “சட்டமாக்கப்படாத எந்தவொரு விடயத்தையும் தற்றுணிவின் அடிப்படையில் பொலிஸார் அமுலாக்க முயற்சிப்பது நல்லதல்ல” என்று அவர்களிடம் கூறியதாகவும் இதனையடுத்துப் பொலிஸாரின் அந்த உத்தரவு மீளப்பெறப்பட்டதாகவும் அலிசாஹிர் மௌலானா தெரிவித்திருக்கிறார்.

இந்த விடயங்களையெல்லாம் நோக்கும் போது, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அமுலாக்குவதில் ‘கம்பெடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்’களாகச் செயற்படுகின்றமை புரிகின்றது. இத்தனைக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரும், அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கையில்தான் இத்தனையும் நடக்கின்றன என்பதுதான், இங்கு முரண்நகையாகும். 

அரபு மொழியும் மனோவின் நிலைப்பாடும்

  பொது இடங்களில் அரபு மொழி பயன்படுத்தப்படுவதைத் தவிர்த்து, இலங்கை அரசமைப்பு ஏற்றுக் கொண்டுள்ள மூன்று மொழிக் கொள்கையைக் கறாராக முன்னெடுக்கும்படி பிரதமர்தான் உத்தரவிட்டார் என்றும், பிரதமரின் கருத்தைக் கடைபிடித்துக் கண்காணிக்குமாறு மட்டுமே, தனது அமைச்சின் மொழி விவகார அதிகாரிகளைத் தான் அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருக்கிறார்.  

அரபு மொழியைப் பொது இடங்களில் தடைசெய்வதற்கான நடவடிக்கையை அமைச்சர் மனோ கணேசன்தான் மேற்கொண்டதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் இந்தப் பதிவை அமைச்சர் இட்டுள்ளார்.

இது தொடர்பில், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

“மொழி தொடர்பான எந்தவொரு சுற்று நிரூபத்தையும் எனது அமைச்சு இதுவரை வெளியிடவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிரதமரும் நானும் கூறுவதை முதலில் தெளிவாகப் புரிந்துக்கொள்ள முயலுங்கள்.

அரச நிறுவனங்கள், வீதிகள், சாலைகள் ஆகிய பொது இடங்கள் ஆகியவற்றில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே பெயர்ப்பலகைகள் இடம்பெற வேண்டும். இது கொள்கை மட்டுமல்ல, இந்நாட்டுச் சட்டமுமாகும்.

அரபு மொழியும் அரசு சார்ந்த பொது இடங்களில் இடம்பெற வேண்டுமென்றால், அதனை அரசியல் கோரிக்கையாக முன்வைத்து, போராடி, வெற்றி பெற்று, அரசமைப்பில் இடம்பெறச் செய்து, இலங்கையின் மொழி சட்டத்தை ‘மூன்று மொழி’ என்பதிலிருந்து ‘நான்கு மொழி’ என மாற்றுங்கள்.மற்றபடி, உங்கள் வீடுகளிலும் தனியார் நிறுவனங்களிலும் பள்ளிவாசல்களிலும் உங்களுக்கு விருப்பமான மொழிகளை, நீங்கள் பயன்படுத்த எந்தவொரு தடையும் கிடையாது. அந்த மொழி அரபுவோ, பாரசீகமோ, உருதுவோ, மலாயோ எதுவாகவும் இருக்கலாம். அதுபற்றி அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை.

ஆகவே, ஏதோ அரபு மொழிப் பாவனையை அரசாங்கம் தனியார் இல்லங்களிலும் பள்ளிவாசல்களிலும் தடை செய்து விட்டது போன்ற இல்லாத போலிப் பிரமையை உருவாக்க வேண்டாம்.

உண்மையில் சொல்லப்போனால், அரபு மொழியின் தாயகமான, சவுதி அரேபியாவில் இருப்பதை விட, நூறு மடங்கு அதிக சுதந்திரமும் உரிமையும் சகோதர மொழிகளுக்கும் மதங்களுக்கும் இலங்கையில் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உண்மையை மனசாட்சியுடன் சிந்திக்கும் ஒவ்வோர் இலங்கையரும் அறிவார். உங்களுக்கு இது தெரியாவிட்டால், நீங்கள் இலங்கையராக இருக்க முடியாது. இந்த அடிப்படை உண்மையைப் புரிந்துக் கொண்டு, இலங்கையில் இலங்கையராகத் தாய் மண்ணையும் தாய் மொழியையும் நேசித்து வாழப் பழகுங்கள்”

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அச்சமூட்டும்-கட்டுக்-கதைகள்/91-234309

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.