Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்ணிற் பெருந்தக்க யாவுள !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                 பெண்ணிற் பெருந்தக்க யாவுள !

-       சுப. சோமசுந்தரம்

                வாழ்வில் ஒவ்வொருவருக்கும் எத்துணையோ நல்ல விடயங்கள் அமைவதுண்டு. பொதுவாக நாம் அமையாதவற்றை நினைந்து ஏங்குவதும், அவற்றின் தேடலுக்கான முயற்சிகளில் இறங்குவதுமாக எப்போதும் எதையாவது விரட்டிக் கொண்டே வாழ்வைத் தொலைப்போம். இந்த விரட்டுதலை நியாயப்படுத்த ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை என்று நம்மில் சிலர் வள்ளுவனை வேறு துணைக்கு அழைப்பதுண்டு. இவ்வாறெல்லாம் இவற்றைப் பயன்படுத்துவோம் என்று தெரிந்திருந்தால் வள்ளுவன் இவ்வதிகாரங்களை அமைத்தே இருக்க மாட்டானோ, என்னவோ ! எனது இந்த பீடிகையைப் பார்த்து நான் ஏதோ பெட்ரன்ட் ரஸலைப் பின்பற்றி ‘சோம்பலுக்குப் புகழ்மாலை’ (‘In Praise of Idleness’ by Bertrand Russell) பாடப் போகிறேனோ என்று எண்ண வேண்டாம். அல்லது பெண் வடிவங்களில் எனக்கு வாய்த்த நல்லவற்றைத் தம்பட்டம் அடிக்கும் ஆணாதிக்க முயற்சியுமல்ல இது. சற்றே ஓய்வாய் அமர்ந்து நம் ஒவ்வொருவருக்கும் வாய்த்தவற்றை நினைவில் அசை போட வைக்கும் நல்லெண்ணத்துடன், ஈது என் அசை போடுதல் ஆமே !

                  எனக்கு வயது நான்கு இருக்கும். ஒரு கரிசல் காட்டுக் கிராமத்தில் அரசுப் பணியில் இருந்த என் தந்தையார் அங்கேயே ஒரு பள்ளியில் என்னைச் சேர்த்திருந்தார்கள். கரிசல் மண்ணிலும் பிள்ளைகள் படிப்பார்கள். அங்கு படித்தவர்கள் கவிஞராகவும் அறிஞராகவும் உருவாகவில்லையா என்ன ? செய்தி கேள்விப்பட்ட என் ஆச்சி (என் அப்பாவின் அம்மா) எங்கள் சொந்த ஊரான பாளையங்கோட்டை நகர்ப்புறத்திலிருந்து கிளம்பி வந்து விட்டாள். “என்னது, இந்த பட்டிக்காட்டிலா பிள்ளையைப் படிக்க வைப்பாய் ? நம் ஊரில் (அந்த காலத்திலேயே) உள்ள கான்வென்டைத் தேடி எங்கெல்லாமோ இருந்து வந்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள் !” என்று அப்பாவிடம் உரிமையாய்க் கடிந்து என்னைத் தூக்கி வந்து விட்டாள். அவளுக்கு ஆச்சி என்ற ‘அந்தஸ்தை’ அளித்த முதல் பேரன் நான். அப்போதே எங்கள் ஊரில் இருந்த பேபி கிளாசிலிருந்து இரண்டாம் வகுப்பு வரை என்னைச் சீராட்டி வளர்த்தாள் ஆச்சி. அப்புறம் என் அப்பாவும் எங்கள் ஊருக்கே மாற்றலாகி வந்ததால் தாய்-தந்தை வளர்ப்பில் மீண்டும் நான் என்பது அடுத்த கதை. என் ஆச்சி என்னை எப்படித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினாள் என்பதற்குச் சான்றாக ஒரு நிகழ்வு. என் சித்தப்பா ஏதோ கைரேகை சாத்திரப் புத்தகத்தை வாசித்து விட்டு வீட்டில் ஒவ்வொருவருக்காக ரேகை பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார். என் கைரேகையைப் பார்த்து அவ்வளவு விசேடமாகச் சொல்லவில்லை. என் முகம் ஏமாற்றத்தில் சுருங்கிப் போனதை என் ஆச்சி கவனித்து இருக்க வேண்டும். என்னை அள்ளியணைத்து அவள் மடியில் வைத்துக் கொண்டு என் சித்தப்பாவைப் பார்த்துச் சொன்னாள், “நீ பெரிய புரோகிதரு ! எம் பேரன் ராசா மாதிரி இருப்பான். நீங்கெல்லாம் அவனிடம் பிச்சைக்கு நிற்பீர்கள்”. தனது பேரனான என்னிடம் அவளது பிள்ளைகள் பிச்சைக்கு நிற்பதைப் பார்க்க அவளுக்கு அவ்வளவு ஆவல். முரட்டுத்தனமான பாசம். எனக்குக் கிடைத்த அந்த மூதுரை தெய்வத்திற்கு இப்போது வயது தொண்ணூற்று எட்டு. எனக்கு சுமார் அறுபது. இப்போது என் தந்தை இல்லை. என்னைக் கவனித்துக் கொள்ள அவரது தாய் இருக்கிறாள். பேரனான எனக்குப் பெறற்கரிய பேறு !

                  ஈன்று புறந்தந்த என் தாய் மட்டும் சளைத்தவளா என்ன ! வீட்டு வேலைகளைச் சடசடவென்று முடித்து பாத்திரங்களைக் கழுவி  அடுக்கி, வீட்டைச் சுத்தம் செய்து அமர்ந்தால்தான் அன்றைக்குப் பொழுது விடிந்ததற்கே அர்த்தமுண்டு என்று எண்ணும் சராசரி பெண் ஜென்மம் தான் அவள். ஒத்தாசையாக இருக்கட்டுமே என்று வீட்டு வேலை செய்யும் பெண்ணொருத்தியை ஏற்பாடு செய்தால், அம்மாவுக்கு ஒத்துவரவில்லை. வேலையானது தான் நினைப்பது போல கனகச்சிதமாய் அமைய வேண்டும் எனும் உளவியல் பிரச்சினை. நாமே காபி போடுவோமே என்று அடுப்படி பக்கம் போனால் தொலைந்தேன். “தூரப்போ ! பொம்பள மாதிரி அடுப்படி பக்கம் என்ன வேலை ?” என்ற அர்ச்சனையோடு அடுத்த ஐந்து நிமிடங்களில் காபி என் முன்னால். இத்தனையும் மீறி நான் குடிக்கிற அளவுக்கு எனக்கு காபி, டீ போடத் தெரியும்; நான் சாப்பிடுகிற சுவையில் சுமாராக சமைக்கத் தெரியும் என்பதை நீங்கள் பாராட்டாமல் இருக்க முடியாது. இவையனைத்திற்கும் உச்சமாக, நான் முதுகலை முடித்து மேற்கொண்டு படிக்க வெளியூர் செல்லும் வரை நானோ என் தம்பிமார்களோ எங்கள் துணிகளை நாங்கள் துவைத்ததில்லை. நான் வட இந்தியா சென்று படித்ததால், வருடத்தில் ஒரு மாதம் மட்டும் ஊருக்கு வருவதுண்டு. அப்போதும் கூட என் துணிகளை நான் துவைக்கச் சென்றால், ”அங்கேயிருக்கும் போது துவைத்துக் கொள் ; இங்கே குளியலறையில் போட்டு விட்டுப் போ !” என்ற உரிமை அதட்டல். இதையெல்லாம் தம்பட்டம் அடிக்க வெட்கமாக இல்லையா என்ற தங்களின் மெல்லிய பொருமல் கேட்கிறது. உங்களைத் தேற்ற ஒன்று சொல்கிறேன். எங்களை மேனி வலிக்காமல் வளர்த்த என் தாய்க்கு மற்றபடி உலகியல் விடயங்களில் எரிச்சலும் கோபமும் ஏற்படுவதுண்டு; உங்கள் தாய்க்கு அப்படியில்லை என்று நீங்கள் சமாதானம் கொள்ளத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படியெல்லாம் வளர்த்தால் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் வளர்வார்கள் என்பது உலக நியதியாய் இருக்கலாம். எந்த விதிக்கும் விலக்கு உண்டே ! நானும் என் சகோதரர்களும் அவ்வாறே என்பதில் பெருமிதம். இது அப்பட்டமான தம்பட்டம்தான். வீட்டு வேலைகளைச் செய்ய விடாததை மட்டும் பேசுவதாக நினைக்க வேண்டாம். இது ஒரு குறியீடு. அவ்வளவே. எனக்கு நோய் மற்றும் துன்பங்கள் நேரிட்டால், என் ஆச்சியோ அம்மாவோ காட்டும் கரிசனை உங்கள் கற்பனைக்கு.

 

            இவர்கள் இருவரும் பிரம்மனிடம் எனக்காகவே ‘ஆர்டர்’ கொடுத்து செய்தது போல் வந்தாளே மகராசி – என் சகதர்மிணி ! பாரதிதாசனின் ‘குடும்ப விளக்கை’ வாசித்த பின்னர்தான் என் வாழ்க்கைப் படகில் ஏறியிருப்பாள் போலும் ! அதற்கும் ஒரு படி மேல்தானோ ? (தீவிர பெண்ணியவாதிகள் பார்வையில் ஒரு படி கீழ்தான் என்று வைத்துக் கொள்வோமே !) என்னைப் பேணி வளர்த்தாள், அல்லும் பகலும் எனைக் காத்து நின்றாள் என்பதை எனக்குத் தெரிந்தவரை கவிதையாக்கட்டுமா ? என் படகில் ஏறியவள், துடுப்பை நான் வலித்தால் என் கை வலிக்கும் என்றெண்ணித் தானே வலித்தாள். “அந்த வானத்து நிலவையும், அந்த மலை முகட்டையும் எனக்கு மொழிபெயர்த்துச் சொல்லுங்கள், போதும்” என்றாள். நான் முன்னொரு சமயம் ஒரு வருடம் வெளிநாட்டில் இருந்தபோது எனக்குக் கிடைத்த இத்தாலியத் தோழி எலியனோரா சுமார் இருபது நாட்கள் நெல்லையில் எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தாள். இடதுசாரிச் சிந்தனையுடன் சிறந்த பெண்ணியவாதி. என் வீட்டில் என் ஆச்சி, அம்மா, மனைவி, எனது இரண்டு மகள்கள் (Note the point Your Honour ! குழந்தைகள் விடயத்திலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்) என்று ஒரு பெண்கள் பட்டாளத்தில் நீ மட்டும் ஆணாக, உனக்கு எப்படி ஒத்துப் போகிறது என்று வேடிக்கையாய் ஆரம்பித்தாள். இவர்கள் அனைவருக்கும் நான் செல்லப் பிள்ளையாய் வலம் வருவதைக் கண்டு எப்படியும் ஒரு நாள் திட்டப் போகிறாள் என்று நினைத்தேன். ஐந்தாறு நாட்கள் கழித்துச் சொன்னாள், “வந்த புதிதில் நீ வீட்டு வேலையெதுவும் செய்வதில்லையே என்று நினைத்தேன். மனைவி மக்களை அலுவலகத்திற்கு, பள்ளி, கல்லூரிக்கு அழைத்துச் செல்வதும் வருவதும், பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதும், இடையிடையே கடைக்குச் செல்வதும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் நன்றாகத்தானே செயல்படுகிறாய் !” என்றாள். நானே இதுவரை யோசிக்காததைச் சொல்லித் தந்தாள். நல்ல வேளை, பிழைத்தேன். இல்லையென்றால் போகும்போது என்னையும் விமானத்தில் ஏற்றி வழியில் ஆழ்கடலில் தள்ளி விட்டிருப்பாள்.

            எம் நன்கலம் நன்மக்கட் பேற்றினை ஏற்கெனவே அறிமுகம் செய்து விட்டேன். ஒரு நாள் ஏதோ நினைவில் நான் சாப்பிட்ட தட்டை நீரில் அலச ஆரம்பிக்க, என் பெண்பிள்ளைகளில் ஒருத்தி, “அப்பா ! ஆச்சி (என் அம்மா) பார்த்தால் பொறுக்க மாட்டாள். தூரப் போ !” என்றாளே பார்க்கலாம். என் அம்மாவின் அதட்டல் அப்படியே இவளிடம் ! ஏதோ மரபணு சார்ந்த விடயம் என்கிறார்களே ? இதுதானோ ! நன்றாகத்தான் குழந்தைகள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். ‘அடேய், கிராதகா !’ என்று இப்போதே ஆரம்பிக்காதீர்கள். நான் அடுத்த வரியை முடித்த பிறகு வைத்துக் கொள்ளலாம். எனக்கு ஊட்டி வளர்க்கப்பட்ட நம்பிக்கை – எனது பிள்ளைகளுக்குத் திருமணமாகி நிச்சயம் எனக்குப் பேத்திகள்தான் !

            வீட்டில்தான் இந்தக் கதை என்றால், அலுவலகத்தைப் பற்றி சுருக்கமாக முடித்துக் கொள்வோமா ? இடமாறுதலில்லாத துறையில் பணி புரிபவன் நான். (அப்போ கொழுப்பு நிறையச் சேருமே !). எனது துறையில் ஒரே பெண் பேராசிரியர் கலா – மங்கையர் திலகம். எல்லோருக்கும் ஒருவர் நல்லவராய் இருக்க முடியாது என்பது விதியாக இருக்கலாம். முன்னம் சொன்னது போல் விதியென்றால் விலக்கு என்று ஒன்றுண்டு. இந்த விதிக்கு அவர்தான் விலக்கு. அதிலும் எனக்கு அ(!)நியாயத்திற்கு நல்லவர். நட்பின் இலக்கணம் ; அன்பு இலக்கியம். வலது கை, இடது கை என்றெல்லாம் சொல்வார்களே ! அவர் எந்தன் கை. கற்றலும் கற்பித்தலும் மட்டுமே என் விருப்பம் என்பதையறிந்து மற்ற வீணாய்ப் போன வேலைகளை அவரே பார்த்துக் கொள்வார்.

            பட்டியல் இவ்வளவுதானா ? அதெப்படி ? சிறுவயதில் எனக்குத் தமக்கை இல்லாத குறைபோக்கிய என் அத்தை (அப்பாவின் தங்கை), எனது தாய் நிகர் மாமியார், தனது கணவர் பெயர் எனக்கு சூட்டப்பட்டதால்  என் மீது பாசம் பொழிந்த விக்கிரமசிங்கபுரத்து ஆச்சி என்றெல்லாம் உண்டு. வாசிக்கிற உங்கள் பொறுமைக்கும் எல்லையுண்டே !

            ஆண்சிங்கம் என்றெல்லாம் எனக்குத் தோள்கள் தினவெடுப்பதில்லை. இத்தனைப் பெண்களால் கட்டமைக்கப்பட்ட எனக்கு சுயம் என்ற ஒன்று உண்டா என்றே தெரியவில்லை. மனதில் ஒரு ஆசை மட்டும் உண்டு. மறுபிறவி என்று ஒன்று வேண்டும். அதில் நான் சலவைத் தொழிலாளியாகவோ சமையற் கலைஞனாகவோ பிறந்து பெண் குலத்திற்கு வாழ்நாள் சேவை செய்ய வேண்டும். போனால் போகிறது என்று என்னைப் போன்று வீணாய்ப் போன ஆண்களுக்கும் சேர்த்துதான்.

பின்குறிப்பு : கிடைத்த வரத்தை இப்பிறவியில் அனுபவித்தே தீர்வது என முடிவெடுத்து விட்டமையால், எழுத்தாளர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் போன்றோர் கண்ணில் எனது இப்பதிவைக் காட்டுவதில்லை என்பது என் முடிவு.

'பாவநாசம்' திரைப்படத்தில் (கதையில் வரும் கொலை, சிக்கல் போன திரைக்கதைக் கருக்களைத் தவிர்த்துவிடவும்) கமல்ஹாசன் கிட்டத்தட்ட தம் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து, அனுபவித்து வாழ்ந்திருப்பார்.

திரைக்கதை என்பதால் அவ்வாறு அமைத்திருக்க இயலும்தான்; அதிலும், நடிப்பில் யதார்த்தத்தை அற்புதமாகத் தருவதில் கமல் ஒரு பிறவிக் கலைஞன். நம் வாழ்விலும் நாமும் நமக்குக் கிடைத்த அற்புதமான தருணங்களை இவ்வாறு உணர்ந்து, ரசித்து, ருசித்து, பாராட்டி வாழ்ந்தால், இன்னும் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கவைத்த திரைப்படம். ஒரு சில நாட்கள் தொடர் நினைவில் நின்று, பின் அவ்வப்போது நிழலாடிப் போகும்.

இப்பதிவை வாசித்தபின், நிஜங்கள், நிழல்களைவிட அற்புதமானவை என்ற உணர்வைத் தந்தன. அட, நம் வாழ்விலும் வந்த எத்தனையோ உறவுகளையும், நிகழ்வுகளையும் அசைபோட வைத்தன உயிர்ப்பான எழுத்துக்கள்.

வாழும்போது, நமக்காக வாழ்பவர்களை உணர்ந்து, பாராட்டி, உயிர்த்து வாழ்ந்தால் வாழ்வு எத்துணை சொர்க்கம் என்று உணர்த்திய எழுத்துக்கள்.

வீடுபேற்றைப் பார்க்காதவர்களுக்கு,  'வீடுபேறு என்பது இதைப்போல் இன்பமாக இருக்குமடா' என்று சொல்லும் எழுத்துக்கள்!

மனித வாசிப்பு நல்ல படைப்புக்களைத் தரும். தன்னையே வாசித்தால், அற்புதமான, அழகான படிப்பினங்களை சக மனிதர்களுக்கு தர இயலும் என்று சொல்லாமல் சொல்லும் (சோம)சுந்தரமான படைப்பு இது!
   

  • 8 months later...

மகிழ்ச்சி... பணிநிறைவுக்கு பிறகு இன்னும் முழுமையாக ( பேத்திகளோடு) தங்கள் வாழ்வை ரசிக்க வாழ்த்துக்கள்...

- சங்கர் ராஜ் வைத்திலிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.