Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

*வேங்கை மகன் வேட்டையாட காடிருக்குமா..?*

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 
Image may contain: outdoor
Image may contain: outdoor
Image may contain: sky, tree, cloud and outdoor
Image may contain: one or more people
 
 

*வேங்கை மகன் வேட்டையாட காடிருக்குமா..?*

(உலகப் புலிகள் நாள் சிறப்புக் கட்டுரை)
- கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

*புலிகளைக் காக்க ஜூலை 29 'உலக புலிகள் நாள் ' கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஏனெனில், உலகிலேயே புலிகள் அதிகம் வாழும் நாடு இந்தியா; இந்தியாவின் தேசிய விலங்கு புலி.*
தமிழும் புலியும்!


புலிகளுக்கும், தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. தமிழ் இலக்கியங்களிலும் புலிகள் இடம்பெற்றுள்ளன. புலியை முறத்தால் துரத்திய பெண் வீரத்தமிழச்சியாகப் பார்க்கப்பட்டாள். புராணக்கதைகளில் ஐயப்பன் புலிப்பால் குடித்து, புலி வாகனத்தில் செல்வார். புலியோடு சண்டையிட்டவர்களுக்கு புலிக்குத்தி கல் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் தேவனூர்புதூர், தென்சேரிமலை எஸ்.குமாரபாளையம், சின்னமுத்தூர், ஏற்காடு நங்கவள்ளி, ஓசூர் பைரமங்கலம், தூத்துக்குடியில் வெள்ளாளன்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் அத்தகு புடைச்சிற்பங்கள் அல்லது நடுகற்கள் கிடைத்துள்ளன.


புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திரையில் புலியை அடக்கும் போதும், ’புலி.. புலி.. புலி.. புலி..’என்று விஜய் பாடும் போதும், ’வேங்கைமவன் ஒத்தையில நிக்கான் மொத்தமா வாங்கலே..’ என்று ரஜினிகாந்த் வசனம் பேசும்போதும், ரசிகர்கள் திரையைப் பார்த்து உற்சாகம் அடைவதற்கு, புலி வீரமிக்க விலங்கு என்ற உணர்வு நம் ஆழ்மனதில் இருப்பதுதான் காரணம். புலியின் கம்பீரமும், உறுமலும் அதற்கென தனித்துவத்தை உருவாக்கி வைத்துள்ளது. நீ என்ன பெரிய புலியா என்று நம்மைக் கேட்க வைக்கிறது. நம் கிராமங்களில் இன்னமும் புலி வேடமிட்டு வீரநடனம் ஆடுவது கிராமியக்கலையின் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது.


புலியே காட்டின் பொருள்
சூழலியல் அடிப்படையிலும் முக்கியத்துவம் பெற்றது புலி. உணவுச்சங்கிலியின் உச்சத்தில் இருக்கும், ஊனுண்ணியான புலியின் உணவாக மான், காட்டெருது, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் இருக்கின்றன. புற்கள், செடி, கொடி, இலைதழைகளை தாவர உண்ணிகள் உண்கின்றன. தாவரங்கள் உயிர்வாழ நிலவளம், நீர்வளம் அவசியம். ஆக, ஒரு புலி வாழும் காட்டைத்தான் சூழலியல் சமநிலை உள்ள நல்ல காடு என்று தீர்மானிக்கிறோம். காட்டின் வளத்தை அளவிடும் குறியீடுதான் புலிகளின் எண்ணிக்கை.
பெங்கால் புலி (Bengal Tiger), சைபீரியப்புலி (Siberian Tiger), மலேயப்புலி (Malayan Tiger), தென்சீனப்புலி (South Chinese Tiger), இந்தோ சீனாப்புலி (Indo – Chinese Tiger), இந்தோனேசியாவின் சுமத்ரா புலி (Sumatra Tiger) என ஐந்து வகைப் புலிகள் இந்தியாவில் இருக்கின்றன. மன்னர்கள், ஜமீன்கள், ஆங்கிலேயர்கள், நடிகர்கள், சட்டவிரோதகடத்தல்காரர்கள் அத்தனை பேரும் இந்தியப் புலிகளை வேட்டையாடியிருக்கிறார்கள். இதனால் புலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தன.


புலிக் காப்பகங்கள்
இந்தியாவில் புலிகளைக் காத்திட 1972இல் அறிவிக்கப்பட்ட புலிகள் பாதுகாப்புத்திட்டம் (Project Tiger) 01.04.1973 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக புலிகள் வாழிடம் 40145.30 சதுர கிலோ மீட்டர், புலிகள் வெளிநடமாடுமிடம் 32603.72 சதுர கிலோ மீட்டர், என மொத்தம் 72749.02 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஐம்பது புலிகள் காப்பகங்கள் இருக்கின்றன.


தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் தாலுகாவில் கேரளா எல்லை வரையுள்ள, 1988இல் அறிவிக்கப்பட்ட, ”களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்” 895 ச.கி.மீ. புலிகளின் வாழ்விடமாகவும், 706.54 ச.கி.மீ. புலிகள் நடமாடுமிடமாகவும், மொத்தம் 1601.54 சதுரகிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.


நீலகிரி மாவட்டம் கூடலூர், உதகமண்டலம் தாலுகாவிலுள்ள, 2007இல் அறிவிக்கப்பட்ட, “முதுமலை புலிகள் காப்பகம்” கேரளா, கர்நாடகா வனங்களை எல்லையாகக் கொண்டு, 321 ச.கி.மீ. புலிகளின் வாழ்விடமாகவும், 367.59 ச.கி.மீ. புலிகள் நடமாடுமிடமாகவும், மொத்தம் 688.59 சதுரகிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டம், இந்திரா காந்தி தேசிய உயிரியல் பூங்கா பகுதியில், கேரளா எல்லைவரையுள்ள, 2007இல் அறிவிக்கப்பட்ட, ஆனைமலை புலிகள் காப்பகம் 958.59 ச.கி.மீ. புலிகளின் வாழ்விடமாகவும், 521.28 ச.கி.மீ. புலிகள் நடமாடுமிடமாகவும், மொத்தம் 1479.87 சதுரகிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில், 2013இல் அறிவிக்கப்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கோவை, நீலகிரி மாவட்டங்களையும், கர்நாடகா மலைகளையும் எல்லையாகக் கொண்டு, 793.49 ச.கி.மீ. புலிகளின் வாழ்விடமாகவும், 614.91 ச.கி.மீ. புலிகள் நடமாடுமிடமாகவும், மொத்தம் 1408.40 சதுரகிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
புலிகள் வாழ்விடமாக கண்டறியப்பட்ட, விருதுநகர், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய, மேகமலை – திருவில்லிபுத்தூர் புலிகள் காப்பகம் 2014இல் தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பின் (NTCA) முதன்மை ஒப்புதலைப் பெற்று மத்திய அரசின் அறிவிப்பிற்காக காத்திருக்கிறது.


நூறாண்டுகளுக்கு முன்பு சென்னை வண்டலூர் வனத்தில் கூட புலிகள் இருந்திருக்கின்றன. இப்போது உயிரியல் பூங்கா கூண்டுக்குள்தான் பார்க்க முடியும்.


புலிவேட்டை
புலிகளின் தோல், எலும்பு, பற்கள், நகம் என ஒவ்வொரு உறுப்பும் மருத்துவக் குணங்கள் கொண்டதாக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதற்காக சட்டவிரோதமாக புலிவேட்டை நடக்கிறது. இரை உணவுகளைக் கொன்று, அதன் மீது நஞ்சு தடவியும் புலிகளைக் கொல்கிறார்கள்.


கடந்த 2012 முதல் 2018 வரை 657 புலிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு (NTCA) கூறுகிறது. அதில் 35 புலிகள் விபத்து உள்ளிட்ட காரணங்களாலும், 138 புலிகள் வேட்டையிலும் கொல்லப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் விபத்து உள்ளிட்ட காரணத்தால் 4 புலிகளும், வேட்டையால் 10 புலிகளும் கொல்லப்பட்டுள்ளன. மத்தியப்பிரதேசம், உத்தரகாண்ட், அசாம், சட்டீஸ்கர் கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேச மாநிலங்களில் அதிகளவு சட்டவிரோத வேட்டையில் புலிகள் கொல்லப்பட்டுள்ளன.
மனிதன் – புலி எதிர்கொள்ளல் சம்பவங்கள் உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அடிக்கடி நடக்கின்றன. அங்கே புலிகளைக் கொல்வதும் அதிகரித்து விட்டன.


2016ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் தும்மனட்டி பகுதியில் புலி தாக்கி, ஒரு பெண் உயிரிழந்தார். பொதுமக்களால் வனத்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது. மக்களின் கோபம் தணிக்க அங்கே புலி சுட்டுக்கொல்லப்பட்டது.


ஆட்கொல்லிப் புலி-தேவை தெளிவான பார்வை
ஆட்கொல்லி புலி குறித்த சரியான பார்வை நம்மிடம் இல்லை. அதனால்தான் மும்பை உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலோடு நம்மால் ஒரு புலியைக் கொல்ல முடிகிறது.
ஆட்கொல்லி புலியா (man-eaters) என்பதை கண்டறிய தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் விதிமுறைகளை வகுத்துள்ளது. நேரடியாக பார்ப்பது, கேமராவில் படம் பிடிப்பது, புலனாய்வு தகவல்கள் சேகரிப்பது, ஆய்வு செய்வது, எதுவும் இல்லாமல் ஆவ்னி (அப்புலிக்கு வைக்கப்பட்ட பெயர்) புலியைப் போன்று வேட்டைக்காரர்கள் மூலமாக சுட்டுக்கொல்வது வஞ்சம் தீர்ப்பதாகத்தான் கருதவேண்டியுள்ளது.


ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 2010 நவம்பர் 21 முதல் 24 வரை நடந்த ஆசிய நாடுகளின் கூட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரகடனத்தில் (St. Petersburg Declaration), ஆசியாவின் அடையாளமாகத் திகழும் புலிகள் ஒரு லட்சத்தில் இருந்து 3500 ஆக சுருங்கி விட்டன. அதனால் 2020க்குள் புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த வேண்டுமென தீர்மானமாக அறிவித்தார்கள். இந்தியா, வங்கதேசம், பூடான், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், ரஷ்யா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் அப்பிரகடனத்தில் கையெழுத்திட்டன.


இந்தியாவில் அதிகரிக்கும் புலிகள்
உலக புலிகள் மீட்புக்கான செயல்திட்டம் Global Tiger Recovery Programme (GTRP) உருவாக்கப்பட்டது. அம்மாநாட்டில்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 உலகப் புலிகள் நாள் (Global Tiger Day) கடைப்பிடிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக புலிகள் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுக்கப்பட்டன. புலிகள் காப்பகம் 18 மாநிலங்களில் இருந்தாலும், குஜராத், நாகலாந்து, மணிப்பூர், ஒடிசா காடுகளிலும், இந்திய எல்லையான நேபாளம், வங்கதேசம், பூடான் எல்லையோர காடுகளிலும் 2018ஆம் ஆண்டிற்கான புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. புலிகளின் எச்சம், கால்தடம், மரங்களில் ஏற்படுத்தும் நகக்கீறல்கள் மூலம் புலிகள் கணக்கெடுக்கப்படுகின்றன. மனிதனின் கைரேகைகள் போல, புலிகளின் உடலிலுள்ள கோடுகளும் வேறுபடுகின்றன. அதனை தானியங்கி கேமராக்கள் மூலமாக துல்லியமாக கணக்கிடுகிறார்கள்
இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அகில இந்திய அளவில் புலிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு முன்னர் 2006, 2010, 2014, 2018 ஆகிய ஆண்டுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்டுவரும் மத்திய அரசும், தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையமும் பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளைத் தணிக்க, புலிகளின் பொருளாதார மதிப்பு பற்றிய கணக்கெடுப்பையும் மேற்கொண்டுள்ளன. பரப்பளவு, மாதிரி அளவீட்டின் தாக்கம் மற்றும் கேமரா கண்காணிப்பு அளவுகளில் மேற்கொள்ளப்பட்டும் இந்தப் புலிகள் கணக்கெடுப்புப் பணியானது உலகின் மிகப்பெரிய வனவிலங்கு கணக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.


இந்தியாவில் 2006ஆம் ஆண்டு 1411, 2010ஆம் ஆண்டில் 1706, 2014ஆம் ஆண்டில் 2266 என புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 20.01.2015இல் அறிவித்தது. தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியபிரதேசம், உத்தராகண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் புலிகள் பெருகி வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தின் வடபகுதியில் எண்ணிக்கை குறைந்துள்ளன. தமிழ்நாட்டில் 2006இல் 76, 2010இல் 163, 2014இல் 229 என புலிகள் அதிகரித்திருக்கின்றன. 
2018 ஆம் ஆண்டில் நடந்த அகில இந்தியப் புலிகளுக்கான கணக்கெடுப்புக்கான அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்கில் இன்று (ஜூலை 29) வெளியிட்டார். அதன்படி, இந்தியாவில் தற்போது 2,977 புலிகள் இருக்கின்றன. இது 2006ஆம் ஆண்டில் இருந்த எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகமாகும். புலிகளுக்கான பாதுகாப்பு இடங்கள் 2015ஆம் ஆண்டில் 692லிருந்து 2018ஆம் ஆண்டில் 860 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2014இல் 229 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, 2018இல் 264ஆக உயர்ந்துள்ளன. கிட்டத்தட்ட 3,000 புலிகளைக் கொண்டுள்ள இந்தியா புலிகளுக்கான உலகின் மிகப் பெரிய, பாதுகாப்பான வாழ்விடமாகத் திகழ்வதாக நரேந்திர மோடி தெரிவித்தார். இது ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கத் தக்கதாக அமைந்திருக்கிறது. 


காடுகளின் தாங்கு திறன்
புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உணவு, நீர், வாழிடம், உயிர்ச்சூழல், கண்காணிப்பு, விழிப்புணர்வு, வேட்டைத்தடுப்பு, இடம்பெயர்வு இப்படி பல காரணிகள் உண்டு. புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே நேரத்தில் அவற்றின் உணவிற்காக இரை விலங்குகள், இரை விலங்குகளுக்குத் தேவையான தாவரங்கள், தாவரங்களுக்குத் தேவையான நீர், நிலவளம் வேண்டும். நம் காடுகளின் தாங்கும்திறன் குறைந்து வருகிறது. காடுகளின் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் புவி வெப்பமயமாக்கல், பருவநிலை மாற்றங்களின் விளைவுகளையும் எதிர்கொண்டு அரசு இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.


புலிகள் பாதுகாப்பிற்காக செயல்படும் அதேஅரசுதான், இன்னொரு புறம் பெருநிறுவனங்களின் வளர்ச்சித்திட்டங்களுக்கு தாமதமின்றி அனுமதி கொடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுகிறது. 
மத்தியப்பிரதேசம், ஒடிசா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா வனப்பகுதிகளில் கனிமவளங்களைச் சுரண்டும் சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன.


தமிழகத்தில் மலைக்குன்றுகள் உடைக்கப்படுகின்றன, குவாரிகள், மணற்கொள்ளைகள் நடக்கின்றன. சத்தியமங்கலம் காப்பக பகுதியில் காவலர் பயிற்சி மையம் செயல்படுகிறது; துப்பாக்கிச்சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. களக்காடு புலிகள் காப்பகத்தில் தனியார் எஸ்டேட்களும், தோட்டங்களும் இருக்கின்றன. முதுமலை புலிகள் காப்பகத்தில் உதகமண்டலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. ஆனைமலை காப்பகத்தில் சாலைப்போக்குவரத்து இருக்கின்றது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் வனஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன.


பழங்குடியினரோடு கை கோர்க்க வேண்டும்
உல்லாச விடுதிகள், வனவீடுகள், கல்லூரிகள், ஆயுர்வேதமையங்கள், ஆன்மீகத்தளங்கள், தொழில்நிறுவனங்கள் வரைமுறையின்றி பெருகி வருகின்றன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகளும், ரயில்வே தண்டவாளங்களும் அமைக்கப்படுகின்றன என்று இந்திய தலைமைக் கணக்காளரின் (CAG) அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது.
இயற்கையைக் காத்தால், இயற்கை நம்மைக் காக்கும் என்ற நம்பிக்கையில்தான் நம் முன்னோர்கள் இயற்கையை இறையுணர்வுடன் வழிபட்டனர். பல்லுயிர்ச்சூழலோடு ஒன்றி வாழ்ந்தார்கள். பழங்குடிகளின் குலதெய்வப் பெயர்கள், விலங்குகளின் பெயர்களாகவே இருக்கின்றன.


மலைவாழ் மக்களின், பழங்குடி மக்களின் ஒப்புதலோடு, ஒத்துழைப்போடு திட்டங்கள் செயல்படுத்தும் போது வெற்றிகரமாக அமையும். வனங்களை விட்டு பழங்குடிகளை வெளியேற்றிவிட்டு, வேட்டைதடுப்பு காவலர்களை நியமித்து, அவர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத நிர்வாக அமைப்பினால், எப்படி புலிகளைக் காக்க முடியும், காடுகளைக் காக்க முடியும்?
புலி பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திலும் பழங்குடிகளை வெளியேற்ற வேண்டும், மறுகுடியமர்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து தவறாமல் இடம் பிடிக்கிறது. அதே வேளையில் சூழலியல் சுற்றுலாவை ஊக்கப்படுத்துகிறது.


தமிழ்நாட்டில் புலிகள் காக்கப்பட்டால், நதிகளின் தாய்மடியாகிய காடுகள் பாதுகாக்கப்படும்; ஆறு மாநில தாகம் தீர்க்கும் நீரூற்றான, மேற்குத் தொடர்ச்சி மலைகள் காக்கப்படும்; சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்கும், தஞ்சைக்கும், திருச்சிக்கும் காவிரி வரும், தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருநை ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும். மனிதனும் வாழ்வான், காட்டுயிர்களும் வாழும். வேங்கை மகனும் காட்டுக்குள்ளேயே வேட்டையாடுவான்.


https://www.minnambalam.com/k/2019/07/29/37

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.