Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டா Vs சஜித் தெரிவுக்காக காத்திருக்கும் தமிழ்ப் பேசும் சமூகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா Vs சஜித் தெரிவுக்காக காத்திருக்கும் தமிழ்ப் பேசும் சமூகம்

Editorial / 2019 ஓகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:59 Comments - 0

-அ. அகரன்

அதிகாரமிக்கவர்களுக்கான போட்டியில்; இலங்கையின் அரசியல் களம் சூடுபிடித்து, நாளுக்குநாள் புத்தம் புதிய தகவல்கள், சுவாரஸ்யமிக்கதாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

அந்தவகையில், ஜனநாயகத்துக்கான போராக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இருக்கவேண்டும் என்கின்ற கோரிக்கை, தற்போது வலுப்பெற்றுள்ள நிலையிலேயே ஜனாதிபதிக்கான வேட்பாளர்கள் தொடர்பில் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளோம்.

இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்னவென இருந்துவிட்டுப் போகும் நிலையில் சிறுபான்மைச் சமூகம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இருந்துவிட முடியாது என்பதே யதார்த்தம்.

ஏனெனில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமது வாக்குகளாலேயே ஜனாதிபதி உருவாக்கப்பட்டதாக மார்தட்டிக்கொண்ட சிறுபான்மைச் சமூகம், அவரால் எதனையும் சாதித்துகொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் பெரும்பான்மைச் சமூகத்தைத் திருப்திப்படுத்தும் ஒருவராகவே அவர் மாறிவிட்டதாகவும் எண்ணிக் கலங்கிய நிலை சிறுபான்மைச் சமூகத்திடம் காணப்படுகின்றது.

இந்நிலையில், சிறுபான்மைச் சமூகத்திடம் யார் யாரெல்லாம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரித்து வாக்களிக்குமாறு தெரிவித்தனரோ, அவர்கள் எல்லோரும் ஜனாதிபதியைக் குறைசொல்லும் நிலைக்குச் சென்றிருந்தமையை மறந்துவிடமுடியாது.

இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதிக்கு, மீண்டும் தான் அதே கதிரையில் அமர்ந்துப் பார்க்க வேண்டும் என்ற அவா முளைவிட்டிருந்தது. எனினும், நாட்டின் ஸ்திரத்தன்மை, ஊக்கமிக்கச் செயற்பாடு, தேசியப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்றபோது, மீண்டும் அவர் அரியாசனம் ஏறுவதென்பது சாத்தியமற்றுப் போயிருக்கின்றது.

ஏனெனில், இலங்கையின் பெரும்பான்மையினரைப் பொருத்தவரையில், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், நாடு என்ற எண்ணம் ஏற்கெனவே இருந்ததைவிட அது அவர்களுக்கு இப்போது தேசியவாதமாகத்  தலைதூக்கியுள்ளது. தொடர்ச்சியாக சிறுபான்மையினரின் தாக்குதல்களில் தமது நாடு துவண்டுபோவதை ஏற்றுக்கொள்ள முடியாத அடிப்படை தேசியவாதச் சிந்தனை ஊட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, ஜனாதிபதித் தேர்தலை இலங்கை எதிர்கொள்ளத் தயாராகின்றது.

பெரும்பான்மைச் சிங்கள மக்களின் மனங்களை வெல்லக்கூடிய ஒருவர் ஜனாதிபதியாக வேண்டுமாக இருந்தால், அவர் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் பௌத்த கொள்கையில் கடும் போக்குடையவராக இருத்தல் வேண்டும்.

மேற்குலகச் சித்தார்ந்தத்தைத் தலையில் வைத்து ஆடாத, நாட்டின் பாதுகாப்பைஉறுதிப்படுத்தக்கூடியவராக இருத்தல் வேண்டும். அதற்குமப்பால், சுயமுடிவு எடுக்கும் வலிமை கொண்ட நபராகவும் அவர் திகழவேண்டும் என்பதே உண்மை. 

எனினும், தனிச்சிங்கள வாக்குகளால் ஜனாதிபதி உருவாகிவிட முடியுமா என்ற கேள்வியை எழச்செய்திருக்கும் நிலையில், தமிழ் மக்களைப் பொருத்தவரையில், தற்போது தாம் அனுபவிக்கும் சுதந்திரமான நடமாட்டமும் காணாமல் செய்யப்படுதல் உட்பட அவர்கள் கடந்த காலங்களில் அனுபவித்த துன்ப துயரங்களில் இருந்து விடுதலை பெறத்தக்க ஒருவரை எதிர்பார்த்திருக்கின்றனர்.

இதேபோன்றே, முஸ்லிம் சமூகமும் தமக்கு அண்மையில் ஏற்பட்ட இடர்பாடுகள் மற்றும் சந்தேகங்கள் இன்றி  வாழும் சூழல் தற்போது உருவாக்கப்பட வேண்டும் என்ற எண்ணப்பாடு உள்ளவர்களாக இருக்கின்றனர்.

எனவே, இலங்கையில் வாழும் முக்கியமானதும் வாக்குப்பலம் கொண்ட மூன்று இனக்குழுமங்களும், மாறுபட்ட சிந்தனை கொண்டவர்களாக வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலை சந்திக்கப்போவது உறுதி. இச்சூழலில், தற்போது களமிறங்கப்போகும் வேட்பாளர்கள் தொடர்பிலான தேடல் வாக்காளர்களுக்கு அதிகரித்துள்ளது. சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் பலசுற்றுப் பேச்சுக்களை நடத்திய நிலையில், ஒருமித்து வேட்பாளரொருவரை நியமிக்க முடியாத நிலையில் பொதுஜன பெரமுன தனது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்கியுள்ளது.

இந்நிலையில், சுதந்திரக்கட்சி தனது ஆட்சேபத்தை வெளியிட்டுள்ள நிலையில், தமது ஆதரவின்றி வெற்றிபெறுவது கடினம் என்ற கருத்தையும் தமது கட்சியின் செயலாளர் தாயாசிறி ஜெயசேகர மூலமாக தெரிவித்துள்ளது.

எனினும், பொஜன பெரமுனவை பொறுத்தவரையில், கோட்டாபயவே நம்பிக்கை நட்சத்திரம். ஏனெனில், மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரர் என்பதற்கப்பால், சிங்கள மக்கள் மத்தியிலும் அவர்கள் எதிர்பார்க்கும் சிந்தனை கொண்டவராகவும் கோட்டாய உள்ளமையே அந்த நம்பிக்கைக்குக் காரணம் எனலாம்.

கோட்டாபய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, எவ்வாறு தனது செயற்றிறனைக் காட்டியிருந்தோரோ, அதேபோன்றதான செயற்றிறனை யுத்தத்தின் பின்னரான நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கொழும்புக்குப் புதிய வடிவம் கொடுத்திருந்தமையையும் மறந்துவிட முடியாது.

இதற்குமப்பால், தற்துணிவு, வேகம், பௌத்த சிந்தனையாளன், பயங்கரவாதத்துக்கு எதிரான போக்கு கொண்டவர், மேற்குலகின் கருத்தியலுக்கப்பால் தனது நாடு என்ற அதீத நம்பிக்கை கொண்ட ஒருவராகவே சிங்களச் சமூகம் பார்க்கின்றது.

எனினும், கடந்தகால வெள்ளை வான் கலாசாரம், மஹிந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், அச்சுறுத்தும் மனப்பான்மை என்பன சிங்கள மேல் வர்க்கத்திடம் கோட்டாபய தொடர்பிலான மாறுபட்ட சிந்தனையாகவே உள்ளது.

எனினும், கிராம மட்ட சிங்கள வாக்குகள் அதிகமாகவுள்ள நிலையில், அவை மஹிந்த ராஜபக்‌ஷ என்ற அலைக்குள் எடுபட்டுச் செல்லக்கூடியவையே என்பது மறுப்பதற்கில்லை.

ஆக, கோட்டாபய என்ற வேட்பாளர், சிங்கள மக்கள் மத்தியில் கணிசமான செல்வாக்குடையவராக இருந்தாலும்கூட, தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வாறான எண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர் என்பதையும் ஆராயத் தலைப்பட வேண்டும்.

யுத்த காலத்திலும் சரி அதன் பின்னரான 5 ஆண்டுக் காலமும் சரி, தமிழ் பேசும் மக்களின் கருத்துச் சுதந்திரம் மட்டுமல்லாது, நடமாடும் சுதந்திரமும் பறிக்கப்பட்ட அத்தியாயங்கள் இன்னும் மறைந்துவிடவில்லை.

இதற்குமப்பால், இன்று வடக்கு, கிழக்கை வியாபித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமைக்கும் இராணுவ மயமாக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கும், ஆளே இல்லா ஊரில் பௌத்த விஹாரைகளின் உருவாக்கத்துக்கும் வித்திட்டவர் கோட்டா என்ற எண்ணப்பாட்டில் இருந்து அவர்கள் வெளிவரவில்லை.

தமக்கான மாற்றுத்தெரிவையே அவர்கள் இன்றுவரை எதிர்பார்த்து நிற்கும் தருணத்தில், வடக்கு, கிழக்கில் கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தவுடன், வெடி கொழுத்தி பாற்சோறு கொடுத்துக் கொண்டாடியமை, வாதத்துக்கு  எடுத்துக்கொள்ளப்படலாம்.

ஆனால், ஒரு கட்சி அரசியல் என்பதும் அதன் செயற்பாடு என்பதும், தம்மை தேசியக் கட்சியாக வியாபித்துக் காட்டுவதற்கான சந்தர்ப்பத்தைத் தேடுவதாகவே அமைந்திருக்கும். அந்த வகையில், பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலர், ஆங்காங்கே இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் இக்காரியத்தில் ஈடுபடுவதை வைத்து, முழுத்தமிழ் பேசும் சமூகமும் இவ்வாறான நிலைப்பாடுடையவை என எண்ணிவிடுதல் தவறே.

எனினும், இவ்வாறான ஓர் உருவாக்கம் வடக்கு, கிழக்கில் தலைதூக்குவதற்குக் காரணமாக அமைந்தமை, தமிழர்களால் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் தலைமைகள் செய்த அல்லது செய்துவரும் செயற்பாடுகளும் அவர்கள் ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சியினால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் பெரியளவில் சாதிக்க முடியாமையுமே என்றால் அவை சாலப்பொருந்தும்.

இச்சூழலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யாராக இருக்குமென அறிவிக்கப்படாத நிலையில், சஜித் பிரேமதாஸவே ஜனாதிபதி வேட்பாளர் என்ற தோரணையில், தனது அமைச்சின் நிகழ்வுகளில் கலந்து கருத்துத் தெரிவித்து வருகின்றார்.

சஜித்தைப் பொறுத்தவரையில், சிங்கள மக்கள் விரும்பும் ஒருவராகவும் அவரது வேலைத்திட்டத்தில் திருப்தி கொண்டவர்களாகவும் உள்ளார்கள். அனைவருக்கும் வீடு என்ற அவரது தந்தையின் செயற்றிட்டத்தை முன்கொண்டு செல்லும் ஒருவர் என்பது மட்டுமல்ல, நாடு, பொருளாதார மேம்பாடு தொடர்பிலான சிந்தனை கொண்டவராகவும் காணப்படுகின்றார். இவற்றுக்குமப்பால், ஊழலற்ற ஓர் அமைச்சராக அவரைத் தற்போதைய ஜனாதிபதியே புகழும் அளவுக்கு, ஐ.தே.கவுக்குள் உள்ள ஒருவராகக் காணப்படுகின்ற சிறப்பம்சங்கள் அவருக்கு சிங்கள மக்கள் மத்தியில் உள்ள நல்ல அபிப்பிராயத்தை மேம்படுத்தும்.

எனினும், தேசிய பாதுகாப்பு, பௌத்த மேலாதிக்கச் சிந்தனை, மேற்கத்தைய நாடுகளின் தாக்கம் என்பவற்றின்பால் சஜித்தை சிந்திக்க வைக்கப்பட வேண்டிய ஒரு தலைவராகவே சிங்கள மக்களால் பார்க்கப்படுகின்றார். சிறுபான்மை மக்கள் மத்தியிலும், சஜித் தொடர்பான நல்லெண்ணம் இருக்கவே செய்கின்றது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களது இருப்பிடங்களை துரிதமாக அமைத்துக்கொடுக்கும் செயற்றிட்டத்தை வேகமாக நகர்த்திச்செல்வது, அவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடாகும்.

எனினும், அதற்குமப்பால் அரசியல் செயற்பாடுகளில் சஜித் தனது சிறுவயது முதலே ஈடுபட்டு வந்தாலும்கூட, தமிழ் மக்கள் சார்பு அமைப்பொன்றினால் தனது தந்தை படுகொலை செய்யப்பட்டமையும் அதன் பின்னராக அவர்களது குடும்பம் எதிர்கொண்ட துயரங்களும், அவரது மனதில் இருந்து அகன்றிருக்கும் என சொல்வதற்கில்லை.

வெறுமனே வீடுகளை கட்டிகொடுப்பதால், தமிழ் மக்களின் மனங்களை வென்றுவிட முடியுமா என்ற கேள்வி நிறைந்தேயுள்ளது. 

யுத்தத்தின் பாதிப்புகளில் இருந்து மீள முடியாதுள்ள தமிழ்ச் சமூகம், இன்று காணாமற்போன தமது உறவுகளைத் தேடியும் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பிலும் போராடிவரும் நிலையில், தமது அரசியல் தீர்வுக்கான ஏக்கத்துடனும் காத்திருக்கின்றது. இந்நிலையில், சஜித் பிரேமதாஸ, இதுவரை இவ்விடயங்கள் தொடர்பில் வாய் திறக்காத நிலையே காணப்படுகின்றது.

வடபகுதியில் அவரது உரைகளின் போது, பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பில் அதிக கரிசனை கொள்ளப்பட்டுவரும் நிலையில், மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் அவரது கரிசனை காணப்படாமை வெளிப்படையாகியுள்ளது.

சஜித் பிரேமதாஸவுடன் மேடைகளை அலங்கரிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியாக சஜித் வரவேண்டும்; அவரூடாகத் தீர்வு கிடைக்க வேண்டுமென்றெல்லாம் பேசிய போதிலும், அவரது உரைகளில் இவ்விடயங்களுக்கான பதில்கள் பிரதிபலித்ததாகத் தெரியவில்லை.

எனவே, வெறுமனே தமிழ்த் தலைமைகள், செவிடன் காதில் ஊதிய சங்காகப் பேச, அவை உதாசீனம் செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வி நிறைந்துள்ளது.

இச்சூழலிலேயே, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ், சஜித்தை விமர்சித்துள்ளமை கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான மாறுபட்ட கருத்தின் பரிமானத்தை வெளிக்காட்டி நிற்கின்றது.

இந்நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மஹிந்த அணியைச் சந்தித்துக் கலந்துரையாடியும் இருக்கின்றார். இச்சந்திப்புக்குக் காரணங்கள் பல கூறப்பட்டாலும்கூட, அதன் உள்ளார்ந்த நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் மாறுபட்ட கருத்துகளின் வெளிப்பாடாகவும் தேவையேற்படின், மஹிந்த அணியுடன் இணைந்துச் செயற்படும் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான முனைப்பாகவும் பார்க்கப்படுகின்றது.

எனவே, ஜனாதிபதித் தேர்தல் என்ற களம் சூடுபிடித்துவரும் நிலையில், கோட்டாவா சஜித்தா என்ற தேடலுக்காக, இரு தரப்பு நன்மை, தீமைகள் தொடர்பான ஆய்வுகளும் அதிகரித்தே செல்கின்றன.

கோட்டாவைப் பொறுத்தவரையில், அவர் புதிய புத்தகம் அல்ல. பலராலும் வாசிக்கப்பட்ட புத்தகமாகவே உள்ள நிலையில், புத்தகத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அனைவருக்கும் அதிகம் தெரிந்திருக்கும். சிலவேளைகளில், அதன் உள்ளடக்கங்கள், அதன் மதிப்பு கருதி திருத்தப்பட்ட பதிப்பாகவும் வெளிவரும் வாய்ப்புள்ளது. 

ஆனால், சஜித் இன்னும் எவராலும் சரியாக வாசிக்கப்படாத புதிய புத்தகம். அது இனி வாசிக்கப்படும் போதே அதன் உள்ளடக்கங்கள் தெரியவரும். அப்போது 5 வருடங்கள் கடந்து சென்றுவிடும் என்பதும் உண்மை.

எனவே, சிறுபான்மைச் சமூகம் ஆழ ஆராயந்து முடிவெடுக்கும் நிலைக்குத் தம்மைத் தயார்ப்படுத்த வேண்டுமே தவிர, கடந்தமுறை போன்று தமிழ்த் தலைமைகளின் வீராப்புக்காக தமது வாக்குகளைப் பயன்படுத்துவது மீண்டும் தவறாகிப்போகும் என்பதே ஜதார்த்தம்.

‘தமிழர் பிரச்சினையை தீர்ப்பவருக்கே ஆதரவு’

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் கருத்து:

நாடுபூராவும் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு பக்கம் பொதுஜன பெரமுன சார்பாக கோட்டாபய ராஜபக்‌ஷவின் பெயரும் மறுபுறம், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட இன்னும் பலரின் பெயர்களும் பத்திரிகைகளில் வந்தவண்ணம் உள்ளன. 

இவர்களில், எந்த வேட்பாளர்களுக்கு எந்தக் கட்சியினர் ஆதரவளிக்கப் போகின்றார்கள் என்ற விடயமும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

“ஜனாதிபதி வேட்பாளராக யார் வந்தாலும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் குறிப்பாக, இரண்டு வருடங்களுக்கு முன்னதாக வழிநடத்தல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட யாப்பு சார்ந்த விடயங்களில், தமிழ் மக்களின் காணிகளுக்குள் பூர்வீக நிலங்களுக்குள் நடைபெறும் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் தொடர்பாகவும், தமிழ் பகுதிக்குள் அதிகளவான மாற்று இன அரச நியமனங்கள் வழங்கல் தொடர்பாகவும், எல்லாவற்றையும் விட அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் விதமாகப் பகிரங்கமாக இவற்றை எல்லாம் சரியான முறையில் நிறைவேற்றித் தருவதாக, யார் வாக்குறுதி தருகின்றார்களோ அவர்களுக்கு மத்திரமே இம்முறை தமிழ் மக்களும் ஆதரவு கொடுப்பார்கள். நானும் ஆதரவு கொடுப்பேன்” என, சார்ள்ஸ் நிர்மலநாதன் மன்னாரில் தெரிவித்திருந்தார். 

“அதற்குமப்பால், 25 வீடுகளைக் கட்டி கொடுத்து, 30 போஸ்டர்களை ஒட்டுவதும் வெறுமனே கால்பந்து விளையாடிவிட்டு வாக்களிக்குமாறு கோருவது வெறும் அரசியல் நிகழ்வே.
“இங்கு வீடுகளைக் கட்டிகொடுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, முல்லைத்தீவு - கொக்குளாய் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் சிங்களக் குடியேற்றம் ஒன்றை அமைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். அதை நாங்கள் தடுத்து நிறுத்திய போதும், அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி வீடுகள் அமைத்து வருகிறார்.

“அப்படியென்றால், இப்படியான ஒரு நிலைப்பாட்டில் இருக்கும் ஒரு அமைச்சருக்கு நாங்கள் எவ்வாறு ஆதரவை வழங்குவது என கேள்வி எழுப்பியுள்ளார்.

“அத்துடன், கோட்டாபய ராஜபக்ஸ, அண்மையில் தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாவிட்டாலும் நான் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்ததாக ஊடகங்கள் மூலமாக அறிந்தேன். உண்மையில், சஜித் பிரேமதாஸாவாக இருந்தாலும் கோட்டாபய ராஜபக்‌ஷவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், சிறுபான்மைச் சமூகத்தின் வாக்குகள் இல்லாமல் நிச்சயமாக ஜனாதிபதியாக முடியாது. கோட்டாபய ராஜபக்‌ஷ, இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் கருவறுத்தவர் அவர். எந்த அடிப்படையில் தமிழ் மக்களின் வாக்கைக் கோருகின்றார்” எனவும் இதன் போது சார்ள்ஸ் தெரிவித்திருந்தார்.

எனவே, தேர்தல் அறிவிப்பு வரும்போது, யார் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகத் தீர்த்துத் தருவதாக வாக்குறுதி வழங்குகிறார்களோ அவர்களுக்கே, எங்கள் ஆதரவு இருக்கும் என்ற தொனியில் சார்ள்ஸ் நிர்மலநாதனின் கருத்து அமைந்திருந்தது.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கோட்டா-Vs-சஜித்-தெரிவுக்காக-காத்திருக்கும்-தமிழ்ப்-பேசும்-சமூகம்/91-236664

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.