Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடாவிடினும் சுடும் அமேசன் தீ !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொடாவிடினும் சுடும் அமேசன் தீ !

இந்தப் பூமி  தனி ஒருவருக்கு  சொந்தமானது அல்ல. மற்றும் மனிதன் என்ற ஓர் உயிரினம்  மட்டும் வாழ்வதற்கானதும் அல்ல. இது எல்லோருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் உரியது. மனிதன் எப்படி நீரை, காற்றை, நிலத்தை அனுபவிக்கிறானோ அதே உரிமை சிங்கத்துக்கும் சிட்டுக்குருவிக்கும் ஏன் கண்களுக்குப் புலப்படாத சிறு புழுவுக்கும் உள்ளது. இயற்கையின் படைப்பு எல்லோருக்குமானதே. ஆனால் மனிதன்மையை அழித்துவிட்டு மனிதன் என்ற  உடலுக்குள் இருக்கும் பேராசை கொண்ட  கொடூரமான பெருவிலங்குகள்  இயற்கையின் கொடைகளை அழித்து அத்தனையையும் வெறும் பணமாக்க முனைகின்றன. இந்தப் பேராசையின் விளைவுகள் உலகில் பெரும் இயற்கை அழிவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

ஓசோனில் ஓட்டை விழுந்ததற்கும்   பல நாடுகள் நீரில் மூழ்கி நிர்மூலமான தற்கும் சுத்தமான காற்று இல்லாமல் ஒட்சிசன் குறைபாட்டால் சில தேசங்கள் விழி பிதுங்கி நிற்பதற்கும் இதுவே மிக முக்கிய  காரணம்.  இந்த இயற்கையின் பேரழிவுகளை  யாருடை­ய விளைவால் யாருக்கோ நடப்பதாக எண்ணி நாம் கண்டும் காணததும் போல  விலகி  நடக்க முடியாது. ஏனெனில்  இந்தப் பூமிக்கிரகம் நம்முடையது. நமக்கானது. இதில்  எங்கு எந்த விளைவுகள் நடந்தாலும் அதற்கான பொறுப்பு நமக்கும் உள்ளது. 

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசன் தீ பற்றி எரிந்தமை உலக மக்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துள்ளதோடு இது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்துள்ளன. 

கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்கள் ஊடகங்கள் என அனைத்திலும் 'பூமியின் நுரையீரல் அமேசன்' என்ற வாக்கியத்தை நிச்சயம் கடந்து வந்திருப்பீர்கள். அறிவியல் ரீதியாக பார்த்தால் அது 100% உண்மைதான். ஒட்சிசன் வெளியிடுவது மட்டுமல்லாமல் நாம் வெளியிடும் கரியமி­லவாயுவை(காப­னீ­­ரொ­ட்­சைட்) உட்கொள்வதிலும் மிகப்பெரிய பங்கை அமேசன் காடுகள் வகிக்கின்றன. மாறிவரும் உலகில் காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் காடுகள்தான். அதில் அமேசன் மிக முக்கியமானது. 

காடுகள் தீப்பற்றி எரிவது வழமை. சில வெப்ப காலநிலைக் காலங்களில் உலகில் பல காடுகள் தீப்பற்றி எரிவதும் பின்னர் செழிப்பதும் இயற்கை. ஆனால் இயற்கைக்கு மாறாக அமேசன் பற்றி எரிவதுதான் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. அமேசன் மழைக்காடு என்பது 9 நாடுகளில் பரந்து விரிந்துள்ளதோடு  1100 நதிகளையும் ஒரு கோடிக்கும் அதிகமான  விலங்கு பறவை மற்றும்  பூச்சி வகைகளையும்  பல்லாயிரக்கணக்கான  மூலிகைத் தாவர வகைகளையும் கொண்ட ஒரு மாபெரும் வனப்பரப்பு. அமேசன் காடுகளின் பெரும்பாலான பகுதிகள் பிரேஸில் மற்றும் பொலிவியாவில் தான் உள்ளன. உலகின் வேறு எந்தப் பகுதிகளிலும் காணக் கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என்று பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக  இக்காடு உள்ளது. இப்படி பல்வேறு அற்புதங்களைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய  மழைக்காடான அமேசன் பூமிக்குத் தேவையான ஒட்சிசனில்  20 வீதத்தை  உலக மக்களுக்காக வழங்குகின்றது.

meandering_amazon.jpg

ஆனால்  கடந்த சில வருடங்களாக இக்காட்டில் தீ விபத்து  ஏற்படுவது அதிகரித்துள்ளது. அதுவும் கடந்த வருடங்களை  விட இவ்வருடம் அதிகளவில் தீ பற்றி எரியும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 9500க்கும் மேற்பட்ட தீ விபத்துச் சம்பவங்கள் இக்காட்டில் இடம்பெற்றுள்ளன.   பிரேஸில் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இது தொடர்பில் கூறுகையில், கடந்த வருடத்தை விட 84 சதவீதம் அதிகமாக தீப்பற்­றி­ய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் முந்தைய காலங்களை விட  88 வீதம் அதிகமாக காடு அழிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக அமேசனில் கொழுந்துவிட்டு எரிந்த தீ உலக அளவில் இயற்கை ஆர்வலர்களிடமும், விஞ்ஞானிகளிடமும் பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத் தீ விபத்தில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் இயற்கை மருத்துவக் குணங்களைக் கொண்ட மூலிகைச் செடிகள், மரங்கள் என்பனவும் அழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு அக்காட்டில் வாழ்ந்த ஆதிவாசிகளின் நிலை என்னவாயிற்று என்பதும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. மேலும் பிரேஸில் அரசு இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்படவில்லை என்ற குற்றசாட்டு பரவலாகப் பேசப்படுகின்றது.

7.jpg

இது பிரேஸில் என்ற ஒரு தனி நாட்டுக்குரிய விடயம் அல்ல. இது இந்தப் பூமியின் பிரச்சினை.  அமேசனுக்குள் நடந்துகொண்டிருப்பதைச் சாதாரண இயற்கை நிகழ்வாகவோ விபத்தாகவோ கடந்துவிட முடியாது. இதற்குப் பின் இருக்கும் அரசியல் அவதானிக்க வேண்டிய மிக பெரியதொன்றாகும். 

இந்தப் பாதிப்புகளுக்கு பெரும் காரணமாகக் கூறப்படுபவர் தற்போதைய பிரேஸில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சொனாரோ.

2018 ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரத்தில்  அமேசன் காடுகளின் வளங்களை வணிகமாக்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்போம் என்பது அவரது முக்கிய கோஷமாக இருந்தது. அப்போதுதான் பிரேஸில் பொருளாதாரம் சரிவிலிருந்து மீளத்தொடங்கியிருந்தது. விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் முதல் எண்ணெய் எடுக்கக் காத்திருக்கும் பெரும் முதலாளிகள் வரை பலரும் இந்தக் கொள்கையால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். பிரேஸிலிலிருந்து பெருமளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி நடக்கிறது. பெருமளவில் இந்த மாடுகளை வளர்ப்பதற்கான மேய்ச்சல் நிலங்களாக அமேசன் அவர்களுக்குத் தேவைப்பட்டது. இப்படியான ஆசைகளிலிருந்துதான்  காடு அழிப்பு பிரச்சினை தொடங்கியதாக கூறப்படுகின்றது

இந்தத் தீ பரவல்  இயற்கையாக நடந்ததுதான் என்கிறார் பிரேஸில் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ். ஆனால், இதை முற்றிலுமாக மறுக்கின்றனர் சூழலியலாளர்கள். பொதுவாக இந்த ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலத்தில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம்தான். ஆனால், இது மனித நடவடிக்கைகளால் நடந்ததாகவே தெரிகிறது. எப்போதையும் விட இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் இந்த காட்டுத்தீ பாதிப்புகள் காணப்படுகின்றன. இதைப் பிரேஸில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையமே (INPE) உறுதி செய்கிறது. இந்தக் காட்டுத் தீ பாதிப்புகள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 84% அதிகம் என்கிறது அந்த அமைப்பு. பொல்சொனாரோ ஆட்சிக்கு வந்த பிறகு பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டிருப்பதையும் இந்த அமைப்பு கடந்த மாதம் சுட்டிக்காட்டியது. ஆயினும் "இது சுத்தப் பொய்" என்று மறுத்ததுடன் இந்த அமைப்பின் இயக்குநரான ரிக்கார்டோ கால்வோவை பணி நீக்கம் செய்தது பிரேஸில் அரசு. இதைப்போன்ற தவறான தகவல்களால் உலக அரங்கில் பிரேஸிலுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று இதற்கு விளக்கம் தெரிவித்தார் பொல்சொனாரோ. இதேவேளை முற்றிலும் வலதுசாரி சிந்தனைகள்கொண்ட பொல்சொனாரோ குறுகிய காத்தில் கிடைக்கும் பொருளாதார நன்மைகளை மட்டுமே பார்க்கிறார், அவருக்கு சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு மீது துளியும் அக்கறை இல்லை என்று பிரேஸில் சூழலியலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

3.jpg

அமேசன் குறித்த இவரது திட்டங்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் கசிந்ததாக Open Democracy மற்றும் Independent ஆகிய இரண்டும் செய்தி வெளியிட்டன. அதில் அமேசன் காடுகளை அழிப்பதே பொல்சொனாரோவின் திட்டம் என்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

அமேசனில் 3  வாரங்க­ளாக  தொடர்ந்து எரிந்த தீ பல்வேறு அதிர்வலைகளை உலகளவில் ஏற்படுத்தியது. ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பெரிய வல்லரசு  நாடுகள் இதனை பெரிதுபடுத்தாமல் அமைதியாகவே இருந்துவிட்டன.  முதலில் இந்தத் தீயை அணைக்க போதிய சக்தி எங்களிடம் இல்லை, அமேசன் மீது எங்களுக்கும் அக்கறை இருக்கிறது எனக் கைவிரித்தார் பொல்சொனாரோ. மேலும், தன் மேல் வெறுப்புணர்வு கொண்ட NGO-க்களின் வேலைதான் இது என்றும் குற்றம் சாட்டினார். ஆனால், நேரில் களமிறங்கிய ஊடகவியலாளர்கள் பெரும்பாலும் பொல்சொனாரோ ஆதரவு விவசாயிகள் மற்றும் முதலாளிகள்தான் இதற்குக் காரணம் என்று தெரிவித்தனர். சிறிய பகுதிகளை கைவசப்படுத்திக்கொள்ள வைக்கப்பட்ட சிறிய நெருப்புகள் கட்டுக்கடங்காமல் பெரும் நெருப்பாக மாறியதாக நேரடி அறிக்கைகள் தெரிவித்தன. 

3.jpg

அமேசன் காட்டுத்தீ பெருமளவில் பரவத் தொடங்கியதும் "நமது வீடு எரிகிறது, நாம் விரைந்து செயல்பட வேண்டும்" என ட்வீட் செய்திருந்தார்  பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன். அதற்கு பொல்சொனாரோ, "இது காலனித்துவ மனப்பான்மையின் எடுத்துக்காட்டு" என தன் எதிர்ப்பை பதிலாக அளித்தார். 

g.jpg

இதேவேளை காட்டுத் தீ ஏற்பட்ட காலப்பகுதியில் நடைபெற்ற பொருளா தாரத்தில் உயர்ந்த நாடுகள் பங்கேற்கும் ஜி 7 மாநாட்டிலும் அமேசன் ஒரு முக்கிய பொருளாகப் பேசப்பட்டது. இதன்போது பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் அமேசன் காட்டுத் தீயை அணைப்பதற்கு பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உதவத் தயார் என்று தெரிவித்திருந்தார். ஆனால் ஜி -7 நாடுகள் கோரிய உதவியை பிரேஸில் அரசு நிராக்கரித்தது.

இது குறித்து பிரேஸில் ஜனாதிபதி ஜெர் பொல்சொனாரோவின் அலுவலக மூத்த அதிகாரியான லோரென்சோனி கூறும்போது, "நாங்கள் ஜி 7 - நாடுகளின் உதவியைப் பாராட்டுக்கிறோம். ஆனால் இதனை அவர்கள் ஐரோப்பிய நாடுகளின் மறுசீரமைப்புக்கு பயன்படுத்தலாம். பிரான்ஸின் உலக பிரசித்தி பெற்ற தேவாலயத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாதவர் மக்ரோன். அவர் என்ன பிரேஸில் நாட்டுக்கு பாடம் புகட்டுகிறார்” என்றார்.

இவ்வாறு முதலில் பிரேஸில் விவகா ரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்று கூறிய பொல்சொனாரோ உலக அளவில் தரப்பட்ட பெரும் அழுத்தத்தால் இந்தத் தீயை கட்டுக்குள் கொண்டுவர இராணுவப் படைகளை பணியமர்த்தினார். இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மனுவல் மக்ரோனின் திடமான எதிர்ப்புதான். ``பிரேஸிலில் பிரச்சினை கையாளப்படும் விதத்தைப் பார்த்தால் கடந்த ஜூன் மாதம் ஜப்பானில் நடந்த G20 மாநாட்டில் என்னிடம் அவர் பொய் கூறியிருக்கிறார்" என பொல்சொனாரோவை கடுமையாக சாடியிருக்கிறார் மக்ரோன். மேலும், இந்த நிலை நீடித்தால், ஐரோப்பிய ஒன்­றி­­ய­த்­துடன் பிரேஸிலுக்கு இருக்கும் வர்த்தகத் தொடர்பை துண்டிப்போம் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார் மக்ரோன். முக்கியமாக பிரேஸிலிலிருந்து வரும் மாட்டிறைச்சி இறக்குமதியை தடுக்கத் திட்டம் போடப்பட்டது. இதற்கு அயர்லாந்து போன்ற நாடுகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. இதற்குப் பணிந்துதான் பொல்சொனாரோ பணிகளை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

பிரேஸில் நாட்டிலுள்ள அமேசன் காடு அதற்கு மட்டும் சொந்தமாக இருக்கலாம். ஆனால், அது இருப்பதால் பெய்யும் மழை உலக நாடுகளுக்குக் கொடையாகவும் உரிமையுள்ளதாகவும் திகழ்கிறது. கனிம வளத்துக்காகவும் தொழில் துறை வளர்ச்சிக்காகவும் அந்த அமேசன் காட்டின் பெரும் பகுதியை வேறு பயன்பாட்டுக்கு மாற்றிக்கொண்டிருக்கிறார் பிரேஸில்  ஜனாதிபதி பொல்சனாரோ என்பது சூழலியலாளர்களின் குற்றச்சாட்டு.இதனை  முழுமையாக தடுத்து நிறுத்தாவிட்டால் அழிவுகள் வரப்போவது அனைவருக்கும்தான். புவி வெப்பமாவதால் ஏற்படும் தீமைகளையும் மாற்றங்களையும் உணர்ந்துள்ள உலகம், அதற்கு மேலும் காரணமாக இருக்கப்போகும் அமேசன் காடு அழிப்பை எப்படி தடுக்கப்போகின்றது என்பது கேள்விக்குறியே. மனிதனின் நுரையீரலில் புகை புகுந்தாலே புற்றுநோய் போன்ற கொடுமைகள் அவனை கொன்று புதைத்து விடுகின்றன. இன்று பூமியின் நுரையீரலில் பற்றியுள்ள தீ அதனால் உண்டான புகைமூட்டங்கள் எத்தனை கொடுமைகளை காலநிலை மாற்றங்களாக எமக்குத் தரபோகிறதோ தெரியவில்லை. 

1ZHQtlZq.jpg

எது எப்படியோ இன்று அமேசன் காடு எரிவது அனைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பற்றிக்கொள்ளக் கூடும். இந்தத் தீ நாம் அருகில் இல்லை என்பதற்காக எம்மைச் சுடாது, எமக்கு எந்தத் தீங்கும் வராது என்று நாம் அமைதியாக இருக்க முடியாது. இதனை நாம் நெருங்காவிடினும் இதை நாம் தொடாவிடினும் இயற்கைப் பேரழிவுகளாக என்றாவது எம்மை சுட்டே தீரும். காலநிலை மாற்றங்கள் உருவாகும். ஆனாலும் நாம் இயற்கையை காதல் கொள்வோம்.  

மரம் வளர்போம். அமேசனை மட்டுமல்ல நம் அருகிலுள்ள காடுகளையும் பாதுகாக்க முயற்சிப்போம். 

குமார் சுகுணா

 

https://www.virakesari.lk/article/63743

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.