Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்குறள் பொது நூலா?

Featured Replies

  • தொடங்கியவர்

வேள்வி

திருக்குறள் வேள்வியைக் கண்டிக்கிறதாவென்பதைப் பார்க்க வேண்டும்.

'விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்' (88)

என்றது நூல். 'விருந்தினரை யோம்பி வேள்விப் பயனை யெய்தும் பொறியிலாதார்' என்பது உரை. அவ்வேள்விக்கு மானுடயாகம் என்று பெயர்.

'அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற

னுயிர்செகுத் துண்ணாமை நன்று' (259)

என்றது நூல். 'அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிதென்பதாம்' என்பது குறிப்பு.

பாவத்தைவிடப் புண்ணியஞ் சிறந்தது என்று சொல்வது அர்த்தமற்றது. ஒரு பாவத்தைவிட இன்னொரு பாவங் கொடியது எனச் சொல்லலாம். புண்ணியங்களுக்குட் பசு புண்ணியத்தைவிடச் சிவபுண்ணியஞ் சிறந்ததெனச் சொல்வது பொருந்தும். இங்கும் வேள்வியும் அறம், கொல்லாமையும் அறம். ஆயினும் முன்னையதைவிடப் பின்னையது மேல். அங்ஙனம் கொள்வதே நியாயம். திருவள்ளுவருக்கும் அதுவே கருத்து. இல்லாவிட்டால் அவ்விரண்டையும் அவர் ஓப்பு நோக்கியாராயமாட்டார். அவர் வேள்வியைப் பாவக் கூட்டத்திற் சேர்த்தாரென்பது மடமை.

'செவியுணவிற் கேள்வி யுடையா ரவியுணவி

னான்றாரோ டொப்பர் நிலத்து' (413)

என்றது நூல். 'அவியாகிய வுணவு தேவர்க்கு வேள்வித் தீயிற் கொடுப்பன. அறிவானிறைந்தமையான் ஆன்றா ரென்றும் துன்பமறியாமையாற்றேவரோ டொப்ப ரென்றுங் கூறினார்' என்பது குறிப்பு.

வேள்வியைச் சிறப்பித்தார் திருவள்ளுவர் என்பதை அதனாலுந் தெரிக. வேத வேள்வியை நிந்தனை செய்துழல்பவரைத் திருக்குறள் மதிக்குமோ?

  • Replies 130
  • Views 25.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலகம் அழிவது

உலகம் அழியாது, நித்தம்: உலகிலுள்ள பொருள்களே அழியும் என்கின்றன சில மதங்கள்,

'ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்' (156)

என்றது நூல். 'பொன்றுந்துணையும் - உலக மழியு மளவும்' என்பது உரை. ; உலகிற் கழிவுண்டென்பது அதனால் தெரிகிறது. உலகம் அழியாதென்ற சமயங்கள் அந்நூலுக்கு விலக்கன்றோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடர்ந்து முயற்சி பிறளாமல் எழுதுகின்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்.

திருக்குறளில் சமணம் பற்றி எவ்வித வசனமும் இல்லை. ஆனால் அதைத் தங்களின் நூலாக அடையாளம் காட்டச் சமணர்கள் முயல்கின்றார்கள். இதை நம்பி எவ்வித ஆதாரங்களுமின்றி, நடுநிலமை, உண்மை என்று தத்துவம் பேசுகின்ற வீக்கிபீடியாவில் சமண நூல்ப் பட்டியலில் இணைத்திருக்கின்றார்கள்.

திருவள்ளுவரும், ஒளவையாரும் சகோதரங்கள் என்றே சொல்லப்படுகின்றது. ஒளவையாரின் பெற்றோர்கள் பேர், ஆதி, பகவன் ஆவார். திருக்குறளில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்.... என்று வருகின்றதைப் பார்க்கின்றபோது, தன்பெற்றோரை முதல்நிலை வைத்துத் தான் சிந்தித்திருக்கக் கூடும் என்றே சிலர் சொல்கின்றனர்.

இதைத் தவிரவும், ஒளவையார் தான், திருக்குறளை அரங்கேற்ற உதவி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முருகபக்தராக ஒளவையார் இருந்தார் என்பதும் இத்தருணத்தில் நினைவூட்டப்பட வேண்டியதாகும்.

  • தொடங்கியவர்

நன்றி ஒற்றன் அவர்களே!

  • தொடங்கியவர்

புராணங்கள்

'ஐந்தவித்தான்' (25), 'அன்பிலார்' (72), 'கூற்றங் குதித்தலும்' (269), 'மடியிலா' (610), 'ஏந்திய கொள்கையார்'(899) என்ற பாக்களில் முறையே கெளதமர், ததீசி, மார்க்கண்டேயர், திரிவிக்கிரமன், நகுஷன் என்பவரின் சரித்திரங்கள் வருகின்றன. அவையெல்லாம் புராணங்களே. 'திங்களைப் பாம்பு கொண்டற்று' (1146) என்ற புராணப் பகுதியைக் கண் திறந்து நோக்குக. திருக்குறள் முழுவதிலும் இலெளகிகர் சிலரால் இப்போது மதிக்கப்பட்டு வருகிற வரலாற்றுக் கதைகளிலிருந்து ஒன்றேனும் எடுத்தாளப்படவில்லை. அதையுங் கருதுக. அங்ஙனமாகப் புராண நிந்தை கூறுஞ் சமயிகள் திருக்குறளிற் செல்லாமா?

  • தொடங்கியவர்

சாதி

பாரத தேசத்தில் சாதிபேதம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இத்தேசத்தை யாண்ட முந்திய வேற்றரசுகள் அதையழிக்கக் கடும் பிரயாசையெடுத்தன. இன்றைய அரசுக்கும் அப்பிரயாசையுண்டு. சதாசார அனுஷ்டானங்களைப் பரம்பரையாகக் கொண்டு வாழ்ந்த சாதிகள் சில. அங்ஙனம் வாழ மற்றைச் சாதிகள் இடங்கொடுத்தன. போதுமான அளவு சகாயமும் புரிந்தன. அவற்றிடம் அப் பழக்க வழக்கங்கள் இல்லாமற் போனாலும் மதிப்புப் பெற்றிருந்ததிற் குறைவில்லை. சாதி பேத மிகுந்த நாட்டில் வரவரச் சாதித் துவேஷங் கிளம்பலாயிற்று. எல்லாருக்கும் லக்ஷியம் ஒன்றானால் பேதத்தால் துவேஷ முண்டாகாது. லக்ஷியம்பிளந்தது. துவேஷமும் புறப்பட்டது. நல்ல பழக்க வழக்கங்கள் மதிக்கப்படவில்லை. அவற்றையுடைய சாதிகள் அவற்றைக் கைவிடுமளவுக்குப் பரிகசிக்கப் படுகின்றன. அச்சுறுத்தப்படுகின்றன. கலவைகளால் அவ்வொழுக்கங்கள் மறைகின்றனவே யன்றித் தாமில்லாத சாதிகளிற் பரவுவதாகத் தெரியவில்லை. புலாலுணவு கொள்ளாமை நல்ல பழக்கம். புலாலுண்ணாத சாதிகளிலும் இப்போது அவ்வுணவு புகுவது போலிருக்கிறது. பல்லாயிர வருடங்களாகக் காப்பாற்றப்பட்டு வந்த வொழுக்கம் அது. எவ்வளவு நெருக்கடியில் எவ்வளவு சிரமத்தோடு அது பரிபாலிக்கப்பட்டிருக்கும்! எவ்வளவு சிறந்த பாக்கியம் அது! அதனை யறியமாட்டாத, பொறுப்பற்ற சில விருதாக்கள் அச்சாதிகளில் தோன்றின. குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்புகளாயின அவை. அவை சகவாச தோஷத்தால் 'புலால்மறுத்த'லை விட்டன. 'சாதி வித்தியாசந் தொலைக' என்ற கூச்சலே அதற்குக் காரணம். அதற்குமுன் 'புலாலுணவு தொலைக' என்றன்றோ கூவ வேண்டும். அ·துண்டா? உண்மையில் உலக சுகானுபவத்துக்குச் சாதி வித்தியாசம் வேண்டாம். சாதி வித்தியாசமென்ன, முறை வித்தியாசமும் அநாவசியம். மிருக முதலிய பிற வர்க்கங்களில் அவ்விரண்டுமில்லை. அவையடையுஞ் சுகமும் அதிகம். ஆனால் உலக சுகத்தையுத்தேசித்ததல்ல அவ்விருவகை வித்தியாசங்களும். அதை நினைவிற் கொள்வது நலம். நல்ல பழக்க வழக்கமுள்ள சாதிகளின் இன்றைய நிலையைக் கவனித்தால் கந்தபுராணம், அசுரகாண்டம், தேவரையேவல் கொள்படலத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் பட்ட துயரத்தை அவையும் எய்த நேர்ந்திடுமோவென அஞ்சவேண்டியதிருக்கிறது.

சாதிபேதம் வேண்டுமா? வேண்டாமா? அது பற்றிய பேச்சு இங்கில்லை. அதனை வேண்டாமென்பவர் தம் கொள்கைக்கு சாதகமாக அறிஞர் பலரின் வாக்கியங்களையெடுத்துக் காட்டுகின்றனர். மேலை நாட்டார் எழுதியவற்றிலிருந்து அவர் எடுத்துக் காட்டலாம். அக்கொள்கையில் ஊறிப் போன இந்நாட்டவரெழுத்துக்களும் அவருக்கு உதவுக. ஆனால் சாதிவித்தியாசத்தைக் கண்டிக்கத் திருக்குறளிலும் ஆதார மிருக்கிறதாமே, அதைத்தான் யோசிக்க வேண்டும். பிறப்பால் சாதிப்பேதமில்லை. உயர்வு தாழ்வில்லையென்பதைப்

'பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யால்' (972)

என்றமையால் தெரிகவென்கிறாரவர். இச்செய்யுள் 'பெருமை' என்னும் அதிகாரத்தில் வருகிறது. அதற்கேற்ப அழகர் உரை வகுத்தார். 'செய்தொழில் வேற்றுமையால் சிறப்பு ஒவ்வா' என்ற பகுதிக்கு உரையு முண்டு. குறிப்பு முண்டு, 'சிறப்பொவ்வா' மைக்குக் காரணம் 'செய்தொழில் வேற்றுமை' யென நூலே கூறிற்று. 'பிறப்பொக்கும்' என்பதற்கு நூலிற் காரணமுண்டா? இல்லை, உரையிலுங் குறிப்பிலும் அழகர் சொல்லியுள்ளார். சாதிபேதம் வேண்டாதார் அதையேற்க வேண்டும். ஏற்பாராயின் சாதிபேதம் அவசியம் என்பது அந்நூலுக்குச் சம்மதமென அவர் கொண்டவராயினர். ஏற்க மறுத்தால் அவர் காரணமொன்று கண்டு வெளியிடுக. பிறகு அதனை ஆராயலாம். அவர் ஓருரை கூறத் துணியும் போது நானும் ஒன்று கூறினாலென்ன? அவருக்காக நானும் ஓருரை கூறுகிறேன். எல்லா உயிர்க்கும் - மனிதன், நாய், பன்றி, கழுதை முதலிய சகல உயிர்களுக்கும், பிறப்பு ஒக்கும் - தாய் வயிற்றிலிருந்து வெளியாவதே பிறப்பாதலால், அப்பிறப்புச் சமமாகவேயிருக்கும். செய்தொழில் வேற்றுமையால் - ஆனால் அவை செய்து, செய்கின்ற செய்யுந் தொழிற்பாடுகளின் வேறுபாட்டால் சிறப்பு ஒவ்வா - பெருமை சிறுமையென சிறப்பியல்புகள் சமமாகா என்பது. இவ்வுரையை அவர் சம்மதித்தால் மனிதன் தன் பிறப்பால் உயர்வடைய முடியாது. உலகில் மற்றைச் சீவவர்க்கங்களை விலக்கித் தனக்கேயுரிமை யுண்டெனக் கூற நியாயமுமில்லை.

சாதி பற்றிய உயர்வு தாழ்வுகளைத் திருவள்ளுவர் உடன்பட்டுள்ளரென்பதை இன்னுங் காண்க.

'ஒழுக்க முடைமை குடிமை யிழுக்க

மிழிந்த பிறப்பாய் விடும்' (133)

என்றது நூல். பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்க முடையராக உயர்குலத்தவராவராகலின் குடிமையா மென்றும் உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்திற் றவறத் தாழ்ந்த வருணத்தராவராகலின் இழிந்த பிறப்பாய் விடுமென்றுங் கூறினார். உள்வழிப்படுங் குணத்திலும் இல்வழிப்படுங் குற்றம் பெரிதென்றவாறு' என்பது குறிப்பு. இதில் குடிமை, இழிந்த பிறப்பு என்றவற்றின் வேற்றுமை நயம் புலப்படுத்தப்பட்டது. பிறப்பில் இழிவு உண்டென்பதனால் உயர்வுண்டென்பதும் பெறப்படும்.

'மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்

கற்றா ரனைத்திலர் பாடு' (409)

என்றது நூல். 'மேற்பிறந்தார் - உயர்ந்த சாதிக்கட் பிறந்தார். கீழ்ப் பிறறந்தும் - தாழ்ந்த சாதிக்கட் பிறந்து வைத்தும்' என்பது உரை.

'உடலோடொழியுஞ் சாதி யுயர்ச்சியினும் உயிரோடு செல்லுங் கல்வியுயர்ச்சி சிறப்புடைத் தென்பதாம்' என்பது குறிப்பு. உயிரோடு செல்லுங் கல்வி யுயர்ச்சி என்பது போல் உடலோடு செல்வது சாதியுயர்ச்சி யென்பது சரியே. ஆயினும் உடல் பற்றிய, சாதியின் உயர்ச்சி தாழ்ச்சிகள் உடலுக்குரியவாய்த் திருக்குறளாற் சம்மதிக்கப்பட்டனதானே.

'விளங்கொடு மக்களனைய ரிலங்குநூல்

கற்றாரோ டேனை யவர்' (410)

என்றது அடுத்த பாட்டு. 'விலங்கின் மக்கட் கேற்றமாய் உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினரல்ல ரென்பதாம்' என்பது குறிப்பு. அங்ஙனம் கல்லாதார் பிறப்பும் சுற்றார் பிறப்பும் ஒவ்வா என்றதால் கல்லாதாரை விலங்குக் பிறப்பினரெனச் சொல்லிவிடலாமா? விலங்கைப் போன்று அவரை நடத்தலாமா? நடத்தினால் நடத்துபவரை அவர் சும்மா விடுவாரா? கல்லாதவரைக் கற்றவராக்கி மனிதப் பிறப்பின் உயர்வை அவர் காப்பாற்றிக் கொள்ளும்படி செய்வதே முறை. அப்படியே அந்தந்த வருணத்தாரிடம் தவறுகள் காணப்பட்டால் அவற்றை நீக்கித் தந்தம் வருணத்துக்குரிய மதிப்பை அவரவர் காத்துக் கொள்ளுமாறு செய்யவேண்டும். திருவள்ளுவர் கருத்து அதுவே.

இனிப் 'பார்ப்பான் பிறப்பு' (134), 'அந்தணர்' (543), 'அறுதொழிலார்' (560) என வருகின்றன. அவை வந்துள்ள இடம் பற்றி நடு நிலைப் புத்தியோடு அவற்றை நோக்குக. அவை பார்ப்பனச் சாதிக்குரிய பெயர்களேயென்பது புலப்படும். அச்சாதி ஆண்டுப் போற்றப்பட்டிருப்பதும் உண்மை.

இன்னொரு முக்கிய விஷயம். உத்தமி வயிற்றிற் பிறந்தாரும் விபசாரி பயிற்றிற் பிறந்தாருமுளர். அவ்விருவகைப் பிறப்புக்களும் சமான கெளரவமுடையனவா? உயர்வு இழிவுகள் அவற்றிற் கிடையாவா? கிடையாவென்பவர் உத்தமி வயிற்றுப் பிறப்பையே யிகழ்பவர்ல்லரா? உத்தமிகளையே யிகழ்பவரல்லவா? அல்லது அதனையும் அவரையும் உதாசீனமேனுஞ் செய்பவரல்லவா? கற்பு வரம்பழிந்தவளது வயிற்றுப் பிறப்பைத் திருக்குறள் இகழ்ந்தது. அப்பிறப்புடையார் நல்ல செயல்களில் நாட்டம் வையார். அவர் போன்றார் பல்கிப் பெருகுவது நாட்டின் தரத்தையே கீழ்ப்படுத்திவிடும் என்றும் அது கூறியது.

'நலத்தின்க ணாரின்மை தோன்றி னவவைக்

குலத்தின்க ணையப் படும்' (958)

என்றது அது. ஆகவே சாதி, குலம் பற்றிய உயர்வு தாழ்வுகள் உளவென்பது திருக்குறளுக்கு முழுக்க அங்கீகாரமேயென்க. அதனை மறுக்குஞ் சமயங்கள் அந்நூலுக்கு அருகில் வரத்தானும் தகுதியுடையவாமா?

  • தொடங்கியவர்

முடிப்புரை

இப்படியே எழுதிக் கொண்டு போகலாம். 'ஒரு பானைச் சோற்றுக்குப் ஒரு சோறு பதம்' என்றபடி இவ்வளவில் இதனை நிறுத்துகிறேன். இதுவரை இங்குச் சொல்லப்பட்டதென்னை? மெய்யான சமயமாயிருந்து வருவது ஒன்றேயொன்றுதான். அது சித்தாந்த சைவமே. திருக்குறள் அச்சமயத்தையே அதன் சநாதன வுண்மை கெடாதபடி தன்பாற் கொண்டு போற்றுவது, அதனால் அச்சமயத்துக்கே உரியநூல், மற்றைச் சமயங்களெல்லாம் போலியே என்பதாம். திருக்குறள் சைவ சமய நூலேயென முன்னும் பலர் பேசியிருக்கின்றனர். எழுதியுமிருக்கின்றனர். ஆயினுமென்? அக்குறள் தமக்கும் பொதுவெனச் சொல்லிக்கொண்டு தம் ஆபாசக் கடையை விரிப்பதற்கு அந்நூலைப் பயன்படுத்திக் கொள்பவரும் இல்லாமற் போகவில்லை. என் செய்வது? அவருட் பலர் திருக்குறளாற் கடியப்பட்ட ஒழுகலாறுகளைத் தம் கொள்கைகளாகவுடையவர்.

'காட்சியே அளவை யாவதென்றும், நிலம், நீர், தீ, வளி யெனப் பூதம் நான்கே யென்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தாற் றோன்றிப் பிரிவான் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட் களிப்பு போல வெளிப்பட்டழியு மென்றும், இறந்தவுயிர் பின் பிறவாதென்றும், இன்பமும், பொருளும் ஒருவனாற் செய்யப்படுவன வென்றுஞ் சொல்லும் உலோகாயத முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து அவற்றிற்கேற்ப ஒழுகு' (281) வாரும்.

'மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளுமில்லையெனவும், மற்றுமித்தன்மையவுஞ் சொல்லும் மயக்கநூல் வாக்குகளை மெய்ந்நூல் வழக்கெனத் துணி' (351) வாருமாயிருப்பா ரவர். அவர் திருக்குறளையும் அப்படிப்பட்ட தொரு நூலென உலகிற்குக் காட்டவே அதனைப் பற்றிக் கொண்டு திரிகின்றனர். நாடு கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதென அரசியலார் பலரே இன்றுங் கூறி வருந்துவது பத்திரிகைகளிற் பிரசித்தம். அதற்கேற்பத் தொன்னூல்களையுஞ் சிதைத்துத் திரித்துப் பொருள் கூறி யலைந்தால் அவை இன்றையவுலகைக் கரையேற்றுமா?

போலிச் சமயங்களுக்கும் தம் கொள்கைகளுட் சில பலவற்றிற்கு அந்நூலிலும் பிரமாண வாக்கியங்கள் அகப்படக்கூடும். அவை அவற்றையெடுத்துக் காட்டலாம். 'அந்நிய நூலின் விதியவிரோதமே லுன்னேல் பழுதென் றுளத்து' என்றது சைவ சமய நெறி, அவ்விதிபற்றியது அவ்வெடுத்துக் காட்டு.

பலவூர்களிலும், பாடசாலை முதலிய பலவிடங்களில் திருவள்ளுவரின் பெயராலும், திருக்குறளின் பெயராலும் கழகங்களும், படிப்பகங்களும், நூல் நிலையங்களும் மலிந்துள்ளன. சைவ மக்கள் அது பற்றி மகிழ வழியில்லை. ஏன்? அங்குச் சைவ சமய சேவைக்கு இடங் கிடைப்பது வெகு சிரமம். திருவள்ளுவ நாயனார் திருநீறுங் கண்டிகையும் அணிந்திருப்பவராகப் பெரிய படங்கள் எழுதிப் பல பொது நிலையங்களில் வைக்கப்பட்டிருந்தது ஒரு காலம். இப்போது அச் சின்னங்கள் அழிக்கப்பட்டுப் போன படங்களே அக்கழக மாதியவற்றில் சாத்திவைக்கப்பட்டும் தொங்கவிடப்பட்டுமிருக்கின்ற

  • தொடங்கியவர்

காடுகளில் மான் முயல் முதலிய் ஏழைப்பிராணிகள் பல திரிகின்றன. அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்புடையார் அங்கு யாருமிலர். அவற்றை அன்பாலுரிமைகொண்டு பாலிருப்பா ரிருந்தாலும் அவற்றிற்கு அவ்வுணர்ச்சியுங் கிடையாது. நின்றவரை நெடுஞ் சுவர் விழுந்தபிறகு குட்டிச்சுவர் என்ற முதுமொழிக்கேற்ப அவை வாழ்ந்து வருகின்றன. அதனால் அவற்றுட் சில சிங்கங்களுக்கு இரை, சில புலிகளுக்கிரை, சில வேடர்களுக்கிரை, சில பிடிபட்டுக் கூண்டுச் சிறைகளிற் கிடக்கின்றன, சில பிடித்தவரது குற்றேவல்களைச் செய்து வயிறு வளர்க்கின்றன. அதை நினைத்துப் பார்க்க. சைவ சமூகத்தின் இன்றைய நிலையையும் எண்ணுக. அச் சமூகத்தவருட் சிலரை இசுலாமியர் கொண்டு போகின்றனர், சிலரைக் கிறிஸ்தவர் கொண்டு போகின்றனர், சிலரைச் சமணர், பெளத்தர் தட்டிக்கொண்டு போகின்றனர், சிலர் கறுப்புச் சட்டைக்குட் புகுத்தப்படுகின்றனர், சிலரை இந்துக்கள், கலவை சமயிகள் அடித்துக் கொண்டு போகின்றனர், சிலரைச் சில தனித்தமிழ் வெறியர் தமிழ்ச் சமயம் அல்லது தமிழர் சமயம் என்றொரு புதுமுக சினிமா நக்ஷத்திரத்தைக் காட்டி இழுத்துக் கொண்டு போகின்றனர். ஆகச் சைவ சமூகம் தன் சமயம் இன்னதென்றே தெரியாமல் தட்டுண்டு தடுமாறிச் சைவ சமயத்தின் விரோதிகளின் மடியில் வீழ்ந்து உறங்கிவிடுகின்றனர். சைவ மக்களுக்கு அது பெருமையா? இலாபமா? வாழ்வா?

சைவ சமயப் பெருமக்களே, நாடு சுதந்திரம் பெற்றது. நீங்களும் இந்நாட்டு மக்களே. உங்களுக்கென உயிர்நிலை இங்கொன்றுமில்லையா? உங்களுக்கெனச் சமயம், பிரமாண சாத்திரம், ஆசாரியர், சின்னங்கள், ஆதீனங்கள், கோயில்கள், வழிபடுமுறை, ஆசார அனுட்டான வகைகள் எல்லாப் பாக்கியமுண்டு. அவற்றை நீங்களே அறிந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும். அப்படியில்லாத நிலையில் இப்போது பிறர் கைவசப்பட்டுத் திருக்குறள் படுவது பாருங்கள். அதனாசிரியர் அசைவராக விளம்பரஞ் செய்யப்படுவது பாருங்கள். உங்களுக்காக வேறு யாருங் கைகொடுக்கமாட்டார். மற்றைச் சமயத்தார் உங்களிடம் வருவார், திருக்குறளைக் காட்டுவார், சமய சமரசம் பேசுவார். பணம் முதலிய சகாயங்களை உங்களிடமிருந்து பெற்றுப்போவார். அங்குப் போய்த் தம் சமயங்களின், கொள்கைகளின் வளர்ச்சிக்கே அவற்றைப் பயன்படுத்துவார். உங்களில் இரக்கமும் செல்வமுடையார் பலரிருப்பது தெரிந்ததே, யார் வந்தாலும் அவருக்கு நீங்கள் உதவி செய்யலாம். அதைத் தடுப்பாரிலர். ஆனால் அவரது சமயப் பிரசாரத்துக்கு மாத்திரம் நீங்கள் உதவுவது சரியன்று, சரியன்று. உதவினால் அது உங்கள் கண்ணான சைவ சமயத்துக்குத் துரோகஞ் செய்வதாய் முடியும். 'பழைய வைதிக சைவம் பரக்கவே' என்றருளினார் உமாபதி சிவனார். அதைக் கருத்திற் கொண்டு ஒருமுகப்படுங்கள், ஒதுங்காதீர்கள், பதுங்காதீர்கள், பராக்காக இராதீர்கள். மறைந்து கிடக்கும் ஆண்மையையும், அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்துங்கள். ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் சைவ சபை, சைவ சித்தாந்த சபை, சித்தாந்த சைவ சபையெனச் சமயப் பெயர்களாலேயே சபைகள் வைத்துச் சேவை புரியுங்கள். சிவ பரத்துவம், சைவாசிரியன்மார் பெருமை, சைவ சாத்திரங்களின் நுண்பொருள், சைவ ஆசார அனுட்டானங்களின் இன்றியமையாமை தமிழ் வடமொழிப் பயிற்சி, சிவங் கலந்த இன்னிசை, இலெளகிகத்தில் உங்கள் சமூகத்தின் முன்னேற்றம் முதலிய அனைத்தும் எடுத்துப் பேசப்படுவதற்கு அங்குத்தான் இடமுண்டு. சமய வரம்பு அழிந்தால் சமயமே அழிந்துபோம். அவ்வழிவு உங்கள் சமயதிற்றான் தலை காட்டுகிறது. அதற்கு அன்னிய சமயத்தா ரளவுக்கு உங்களிலும் பலர் காரணமாயிருந்து வருகிறார்கள். அவரிடமிருந்து சைவ சமூகம் விடுபட வேண்டும். அதனைச் செய்தற்கு நீங்கள் துணிந்து முன்னுக்கு வருவீர்களாக. ஸ்ரீபார்வதி சமேத ஸ்ரீபரசிவனார் உங்களுக்குத் துணை புரிவாரென்பது சத்தியம்.

பெருமழுவர் தொண்டல்லாற் பிறிதிசையோம்

பழைய வைதிக சைவம் பரக்கவே

மேன்மைகொள் சைவநீதி விளங்குக வுலகமெல்லாம்

'திருக்குறள் பொது நூலா?'

என்னும் இந்நூல் முற்றிற்று

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருவள்ளுவரின் சமயக் கொள்கை

(T.C.S.ராமச்சங்குப் பாண்டியன்)

திருவள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமயத்தைச் சேர்ந்தவராகக் கூறுகின்றனர்.

"மலர்மிசை ஏகினான்" என்பது பற்றிப் புத்தனைக் குறிக்கும் என்று பெளத்தரும், அருகனைக் குறிக்கும் என்று சமணரும் கூறுவர். மேலும் சமணர் எண்குணத்தான் என்புழி எட்டுக் குணங்களும் அருகனுக்குரிய கடையிலாவறிவு, கடையிலார் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா வின்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுவின்மை, அழியாவியல்பு என்பனவேயாகும் என்பர். சமணர் உலகம் நித்தியம் என்னும் கொள்கையர். "மூவா முதலா உலகம் ஒரு மூன்றும்" என்பது அவர் கொள்கை.

ஆயின் வள்ளுவர் உலகமும் அழிவதே என்னுங் கொள்கையர் அதனை "ஒறுத்தார்க்குகாருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்

பொன்றுந் துணையும் புகழ்" (156) என்றார்.

எனவே உலகம் அழியும்வரை நிற்பது புகழ் என்பது பெறப்படும்.

ஈண்டுப் "பொன்றுந் துணையும் புகழ்" என்று மட்டுமே கூறியதால் உலகம் பொன்றுந் துணையும் புகழ் எனக் கொண்டால் என்னை? எனின்; உடம்பு உள்ளளவும் உள்ளது ஒளி (உபசாரம்) எனவும், உடம்பு அழிந்த பின்னரும் நிற்பதே புகழ் என்பதே மரபு. நாலடியாருள்,

"உண்ணான் ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்

துன்னருங் கேளிர்துயர் களையான் - கொன்னே

வழங்கான் பொருள்காத் திருப்பானேல் ஆஅ

இழந்தா னென்றெண்ணப் படும்"

என்று ஒளி இறக்கு மட்டும் நிற்பது என்றும் புகழ் இறந்தபின் வருவது என்றும் கொள்ளப்பட்டது பெறப்படும். அம்முறையே வள்ளுவரும், ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்

கஃதிறந்து வாழ்து மெனல் (971) என்றும்

நிலவரை நீழ்புக ழாற்றுற் புலவரைப்

போற்றாது புத்தே னாலகு (234)

என்றும்

கூறுமாற்றான் ஒளி என்பதற்கும் புகழ் என்பதற்கும் உள்ள பொருள் வேறுபாட்டை மரபுப்படி கொண்டு பாடியுள்ளார் என்பது பெறப்படும்.

  • தொடங்கியவர்

எனவே "பொன்றுந் துணையும் புகழ்" என்பதற்கு உலகம் அழியும் வரை நிற்பது புகழ் எனக் கொள்ள வேண்டும். அங்ஙனமாக உலகத்தின் நிலையாமையை உடன்பட்டவர் என்பது பெறப்படும். அவ்வாறு கொண்டது "மூவாமுதலாவுலகம்" என்ற சமணக் கொள்கையை மறுக்குமாகலின் சமணர் ஆகார் என்பது பெறப்படும்.

பெளத்தருள் மாத்தியமிகர் எல்லாஞ் சூனியம் என்பவர். யோகாசாரர் புறப்பொருள் சூனியம் என்பர். செளந்திராந்திகரும் வைபாடிகரும் நான்கு புதங்களை மட்டுமே உடன்படுவர். ஆயின் வள்ளுவர்

"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்

வகைதெரிவான் கட்டே யுலகு" (27) என்று

ஐம்பூதங்களையும் உடன்படுதலால் பெளத்தரும் ஆகார் என்பது பெறப்படும்.

ஏகான்மவாதிகள் பரப்பிமத்தோடு கூடுதலே - அஃதாவது குடம் உடைந்தவழிக் குடாகாயமும் மகாகாயமும் கூடுமாறு போலக் கூடுதலே - முத்தி என்பர். ஆயின் வள்ளுவர், "நற்றாள் தொழாஅர்" (2) என்றும் "மாணடி சேர்ந்தார்" (3) "வேண்டுதல் வேண்டாமையிலானடி சேர்ந்தார்" (4); "தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்" (7) "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்" (8), "எண்குணத்தான் தாளை வணங்காத் தலை (9), "இறைவனடி சேராதார்" (10) என்றும் அடி சேர்தலையே முத்தி எனக் கொள்கின்றார். பரப்பிரமத்திற்கு அடி முதலிய உறுப்புக்கள் இல்லாததால் ஏகான்மவாதியும் ஆகார் என்பது பெறப்படும். மேலும் "வகுத்தான் வகையல்லால்" (377) என்றும் "பற்றுக பற்றற்றான் பற்றினை" (350) என்றும் கடவுளும் உயிர்களும் வெவ்வேறு என்னும் கொள்கையர் என்பதால் ஏகான்மவாதியில்லை என்பது வலியுறுத்தப்படும்.

  • தொடங்கியவர்

இனி வள்ளுவரை வைணவர் எனலாமோ எனின் அதுவும் பொருந்தாது. ஏனெனில் வைணவ ஆகமங்களில் விண்டுவிற்கு எட்டுக் குணங்கள் கூறப்படவில்லை. அன்றியும் வள்ளுவர் காமத்துப் பாலில் புணர்ச்சி மகிழ்தல் என்னும் அதிகாரத்துள்

தாழ்வீழ்வார் மென்றோட் டுயிலினிது கொள்

தாமரைக் கண்ணா னுலகு (1103)

என்று வைகுண்டத்தைக் காட்டிலும் மொன்றொட்டுயில் இனிது என்று கூறுமாற்றான் வைகுண்டத்தைத் தாழ்த்திக் காட்டினார். வைணவராயின் அவ்வாறு கூறியிருக்கமாட்டார். எனவே வள்ளுவர் வைணவராகார் என்பது பெறப்படும்.

இனி எண்குணம் என்பதை அணிமாவை முதலாக வுடையன வெனவும் உரைபாருமுளர் என்று பரிமேலழகர் காட்டியுள்ளார். அணிமா முதலிய எட்டாவன:- அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன. அணிமா முதலியன மக்களாலும் முயன்று பெறப்படுதலின் குணமாக முடியாது. ஏனெனில் குணமாவது குணியோடு ஒற்றித்து. நிற்பதாகலின் அவ்வாறு ஒற்றித்து நில்லாது முயன்று பெறப்படும் சித்தியாகலின் அவற்றைக் குணமெனக் கொள்ள இயலாது.

  • தொடங்கியவர்

எனவே பரிமேலழகர் "இவ்வாறு சைவாகமத்திற் கூறப்பட்டது" என்றார். எண்குணங்களாவன;_

1. தன்வயத்தனாதல் - சுவதந்திரத்துவம்

2. தூயஉடம்பினனாதல் - விசுத்ததேகம்

3. இயற்கை உணர்வினனாதல் - நிராமயான்மா

4. முற்றுமுணர்தல் - சருவஞ்ஞத்துவம்

5. இயல்பாகவே பாசங்களினீங்குதல் - அனாதிபோதம்

6. பேரருளுடைமை - அலுப்த சத்தி

7. முடிவிலாற்றலுடைமை - அநந்த சத்தி

8. வரம்பிலின்பமுடைமை - திருப்தி.

"எட்டுவான் குணத் தீசனெம் மானை" என்று திருநாவுக்கரசரும், "இரும்புயர்ந்த மூவிலைய சூலத்தினானை யிறையவனை மறையவனை எண்குணத்தினானை" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அருளிச் செய்தவாற்றானும் "இறைவனுக்கு எண்குணமுண்மை சிவாகம நூற்றுணி வென்றறிக" என்று நாவலர் கூறுமாற்றானும் அறியப் படும்.

  • தொடங்கியவர்

சைவாகமத்திற் கூறப்பட்டது என்னுமாற்றான், ஒரு நூலை முன்னிட்டு கொள்ள வேண்டும் என்னுங் கொள்கையர் என்பது "சாதலறாய் கூறுமாக்கந்தரும்" (83) என்றும் "நூலோர் தொகுத்தவற்றாள் எல்லாந் தலை" (322) என்றும் கூறுமாற்றான் அறியப்படும். ஆயின் எண்குணம் என்புழி எந்நூலை முன்னிட்டுக் கூற வேண்டும்? "பொறிவாயிலைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறி" என்றும் அந்நெறி நின்றார். "நீடுவாழ்வார்" என்றும் வள்ளுவர் கூறுகின்றார்.

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்

` நிற்க அதற்குத் தக" (391)

என்றும் கூறுகின்றார். நிற்க என்ற தனால் ஒழுகு தலையும் கற்க என்றதனால் நூலையும் குறிக்கும் என்பது அறியப்படும். எனவே பொய்தீர் ஒழுக்க நெறி என்பது பொறிவாயில் ஐந்துவித்தானான் கூறப்பட்டது என்பது பெறப்படும். அது பற்றியே பரிமேலழகரும் "ஒழுக்கநெறி ஐந்த வித்தாறாற் சொல்லப்பட்டமையின் ஆண்டை யாறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது" என்றார். அவ்வாறு ஒழுக்கநெறிக்கண் நின்றார். நீடுவாழ்வார் என்று சாதனமும் பயனும் கூறப்பட்டமையின் ஒழுக்க நெறி என்பது நூலையே குறித்து வற்புறுத்தும் என்பது பெறப்பட்டது. எனவே அந்நூலுள் மேற்கண்ட எண்குணமும் கூறப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறான நூல் சைவாகம் ஆகலின் சைவாகமத்திற் கூறப்பட்டது என்க.

மேலும் வள்ளுவர் "நற்றாள்" (2) என்றும் "மாணடி சேர்ந்தார்" (3) என்றும் "வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்" (4) என்றும் "தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்" (7) என்றும் "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்" (8) என்றும் "எண்குணத்தான் தாளை வணங்காத் தலை" (9) என்றும் "இறைவனடி சேராதார்" (10) என்றும் அடிசேர் முத்தியையே விதந்து கூறினார். அடிசேர் முத்தி சைவ சித்தாந்தத்திற்கே ஏற்புடையதாகலின் அதனானும் வள்ளுவர் சைவ சித்தாந்தி என்பது பெறப்படும்.

  • தொடங்கியவர்

ஆயினும் அவரைச் சைவர் என்பதைச் சகித்துக்கொள்ள இயலாதார் தற்போது ஒரு புதுக் கொள்கையைப் புகுத்துகின்றனர். முதல் எட்டுக் குறளில் கூறப்பட்ட ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், இறைவன், பொறிவாயிலைந்தவித்தான், தனக்குவமையில்லாதான், அறவாழி யந்தணன் என்பனவே, ஒன்பதாவது குறளில் கூறப்பட்ட எண்குணங்களாகும் என்பர். ஆயின் அவர் அதிகாரத் தலைப்பாகக் கூறப்பட்ட கடவுள் என்பது ஒரு குணமாகலின் அதனைக் காணாததுபோல் விட்டனர். அதனைக் கூட்டினால் குணம் ஒன்பதாகுமாகலின் விட்டனர் போலும். அவ்வாறு மறைந்து குன்றக் கூறலாகுமே என்பதை மறந்தனர்.

மேலும் பொய்தீர் ஒழுக்க நெறி என்பது பொறி வாயிலைந்தவித்தானாற் சொல்லப்பட்டது என்பதை மறந்தனர். அந்த ஒழுக்க நெறி நின்றாரே. நீடுவாழ்வார் என்று கூறியதையும் மறந்தனர். எனவே பொய்தீர் ஒழுக்க நெறியுட் கூறப்பட்ட எண்குணங்களே கொள்ளப் படுவதென்பதையும் மறந்தனர். எனவே ஒன்பது குணங்களை எட்டாக வெட்டி இழுக்கப்பட்டனர். அதனானும் அவர் சைவர் என்பதே வலியுறுத்தப்படும்.

ஆயின் கோ.வடிவேலுச் செட்டியார் "இவ்வதிகாரத்தின் 1,2,4,5,7,10 வது எண்ணுள்ள குறள் முதற் கடவுளையும் 3வது எண்ணுள்ள குறள் அயனையும், 6,8 வது எண்ணுள்ள குறள்கள் அரியையும், 9வது குறள் அரனையும் வாழ்த்துதலாம்" என்று கூறியுள்ளாரே எனிற் காணலாம்.

  • தொடங்கியவர்

பரிமேலழகர் முதற்குறளின் இறுதியில் "முதற்கடவுளதுண்மை கூறப்பட்டது" என்றபின் அதனைத் தொடர்ந்து வரும் மற்றக் குறட்பாக்களும் முதற்கடவுளைப் பற்றியே கூறுவதாகத்தான் அமையும். அது பற்றியே பரிமேலழகர் 2வது குறளில் "ஆகம வறிவற்குப் பயன் அவன்றாளைத் தொழுது பிறவியறுத்த லென்பது இதனாற் கூறப்பட்டது" என்றும் 6வது குறளுரையில் "இவை மூன்றுபாட்டானும் அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலும் செய்யா வழிப்படுங் குற்றங் கூறப்பட்டது" என்றும் 10 வது குறள் உரையில் "உலகியல்பை நினையாது இறைவனடியையே நினைப்பார்க்குப் பிறவி யறுதலும் அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அஃதருமையுமாகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன என்றும் கூறினார். மேலும் இடையிடையே தொடர்புப் பொருத்தம் இல்லாமல் அயன் அரி அரன் என்பவரையும் வாழ்த்தினார் என்பது பொருந்தாது. மேலும் அவ்வாறு வள்ளுவர் கருதியிருந்தால் அக்கருத்துக்களையும் ஆங்காங்கே பரிமேலழகர் எடுத்துக் காட்டியிருப்பார். மேலும் அயனையும் அரனையும் ஒவ்வொரு செய்யுளானும் அரியை மட்டுமே இருசெய்யுட்களால் வாழ்த்தினார் எனச் செட்டியார் கூறுவது பொருந்தாது. அவ்வாறு கொள்வது அரியை உயர்த்தியும் மற்ற இருவரையும் தாழ்த்திக் கூறுவதாக அமையும், அவ்வாறு வள்ளுவர் செய்யுள் செய்திருக்க முடியாது. எனவே வடிவேல் செட்டியார் வலிந்து பொருள் கூறியது வள்ளுவரின் கருத்துக்கு மாறுபட்டது என்பது பெறப்படும். எனவே வள்ளுவர் சைவசித்தாந்தி என்பது நாட்டப்படும்.

திருச்சிற்றம்பலம்

  • தொடங்கியவர்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

திருவள்ளுவர் சித்தாந்த சைவர்

(கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள்)

திருவாவடுதுறை ஆதீனம்

முதற்பதிப்பின் பதிப்புரை:

சமய உண்மைகள் அறிவு அளவாக ஆராயும் போது அறிவு நிலையாகும்; உணர்வு அளவாக நுகரும் போது உணர்வு நிலையாகும்.

திருவள்ளுவர் அருளிச் செய்த நூல் திருக்குறள்; திருவள்ளுவரைப் பற்றி ஆராய்வதற்கு இந்த நூல் ஒன்று தான் சான்றாய் உள்ளது. இருந்தாலும், இது, வலிய அகச்சான்றாய் உதவும்.

அறிவு ஆராய்ச்சியால் திருக்குறளைச் சிந்தித்து 'திருவள்ளுவர் சமயம் எது' என்பதை வடநூற் புலமையோடு சித்த மருத்துவத்திலும், தமிழ் இலக்கண இலக்கியங்களிலும், மெய்கண்ட சாத்திரங்களிலும் நிரம்பிய புலமையுடைய கொரடாச்சேரி திருமடத்தின் தலைவர், சிவத்திரு வாலையானந்த அடிகளார் இந்நூலில் முடிவு செய்திருக்கிறார்கள். எழுதுவதற்கும் பேசுவதற்கும் அறிவு நிலையே உதவுமாதலால், திருக்குறளிற் சிந்தனை இன்றியமையாததாயிற்று.

'திருக்குறள்' ஒருமறை நூல்; சமய நிலைக்கு அணுக்கமானது; பொதுமறையாய், மக்கள் வேதமாய், உலகுக்கெல்லாம் தனிச்சிறப்பான ஒன்றாய், அது விளங்குகிறது. அதன் ஆசிரியர் திருவள்ளுவர், தம் வாழ்க்கைத் திளைப்புக்கு ஏதேனும் ஒரு சமயத்தின் வழியே நின்றிருக்கவேண்டும்; ஒரு நெறியையும் பின்பற்றாமல் உலகப் பெரியோர் யாரும் இரார்.

  • தொடங்கியவர்

சமய நெறிகளில், 'சைவ சமயம்' என்பது, மற்ற எல்லாச் சமயங்களின் உண்மைகளையும் தன்னுட் கொண்டிருக்கிறது; அல்லாமலும், மற்றச் சமயங்களில் வராத உண்மைகளையும் சைவ சமயம் பெற்றிருக்கிறது. இப்படி இது நிறைவான சமயமாயிருக்கிறது. மேலும், உலகு முழுவதும் கடைப்பிடிக்கும்படி, பொது நெறியாகவும் சைவ சமயம் விளங்குகிறது; இந்தியச் சமயங்களேயன்றி உலகச் சமயங்கள் அனைத்தும் இச்சைவ சமயத்தில் அடங்கி விடுகின்றன. இவ்வாறு சிறந்த இச்சிவ நெறிக்குச் 'சித்தாந்த சைவம்' என்பதும் ஒரு பெயர்; 'சித்தாந்தம்' என்றே சொல்வதும் உண்டு.

சிவநெறியாளர் இங்ஙனம் உலகப் பொது நிலையாளர் ஆகின்றனர்; அவர்கள் சிவநெறியும் உலகப் பொது நிலையில் திகழ்கிறது. இச்சிறப்புகட்குரிய காரணங்களும், திருவள்ளுவர் சிவநெறியைச் சேர்ந்தவர் என்பதற்கான குறிப்புக்களும், இச்சிறு நூலில் விளக்கமாக வருகின்றன.

16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த சைவ எல்லப்ப நாவலர் தாம் இயற்றியருளிய திருவருணைக் கலம்பகத்தில்,

சைவத்தின் மேற்சமயம் வேறில்லையதிற் சார்சிவமாம்

தெய்வத்தின் மேற் றெய்வமில்

என்ற கட்டளைக் கலித்துறைப் பாலில் குறிப்பிட்டுள்ள கருத்து இந்நூலுக்கு அரண் செய்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

  • தொடங்கியவர்

'சித்தாந்த நூல்கள்' எழுந்த காலத்திலும் முன்னும், மக்கள் பலவகையாக, உலகத்தைத் தத்தம் அறிவால் ஆராய்ந்து பார்த்திருக்கின்றனர். கடவுளைப் பற்றியும் உயிரைப் பற்றியும் மலங்களைப் பற்றியும் ஒவ்வொரு வகையாக முடிவு செய்திருக்கின்றனர். உலகாயதர், புத்தர், சமணர், மாயாவாதியர், பாஞ்சராத்திரிகள், ஐக்கியவாதிகள், பாடாணவாதிகள் முதலிய பல சமயத்தாராக அவர்கள் விளங்கினர். அக்காலத்தில் இருந்த பெரியவர்கள், எல்லாச் சமயங்களையும், 'புறம்புறம்', 'புறம்', 'அகப்புறம்', 'அகம்' என்று நான்கு வகையாகப் பாகுபாடு செய்து 24 பிரிவுகளில் அடக்கினர்; 'கிறித்துவம்', 'மகமதியம்' முதலிய பிற்காலச் சமயங்களும் இவற்றில் அடங்கிவிடும். இந்த 24 சமயங்களுக்கு வேறாக எந்தச் சமயக் கொள்கைகளும் உலகத்தில் இல்லை, முன்னும் இல்லை; பின்னும் இல்லை; 'சித்தாந்த சைவம்' ஒன்றே, இந்த 24 சமயங்களுக்கும் அப்பாற்பட்டதாய்த் தனி நெறியாய்த் திகழ்கிறது!

சமய நெறிகள், கொள்கையும் (தத்துவம்) ஒழுக்கமும் (ஆசாரம்) எனப் பொதுவாக இருவகைப்படும்.

'திருவள்ளுவர் சித்தாந்த சைவர்' என்னும் இந் நூலில் 24 சமயக் கொள்கைகளையும் ஒழுக்கங்களையும் எடுத்து, முறையே திருக்குறள் மறுப்பதையும், அவையெல்லாவற்றிற்கும் மேற்பட்ட உண்மைகளைத் தன்னுட் கொண்டு விளக்குவதையும், நூலாசிரியர், காரண காரியங்களுடன் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். நடுநிலையோடு அனைவரும் கருதிப் பார்க்கலாம்; உண்மை விளங்குவது கட்டாயமானது; 'பொது உண்மைகளைச் சொல்லுகிறவர்கள், தம் வாழ்க்கையில் ஒரு சமயத்தையும் சார்ந்திரார்' என்று தக்கோர் யாரும் கொள்ளார்.

  • தொடங்கியவர்

கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள் 1926-27 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி நான்காஞ் சிலம்பில் இந்த நூலினை மூன்று இதழ்களில் எழுதியுள்ளார்கள். இந்நூற் கருத்துக்களை இக்கால மக்களும் அறிந்து கொள்ளுதல் வேண்டும் என்ற எண்ணத்தோடு சிலர் வேண்டுகோளுக்கிணங்கித் தனி நூலாக இதனை வெளியிட்டிருக்கிறோம்.

தமிழ் இலக்கண இலக்கியங்களிற் சிறந்த புலமையும் சைவ சித்தாந்த நுண்பொருள்களோடு சமய நூற் புலமையும் மிக்க வரும் மறைமலையடிகளின் மாணவரும் ஆகிய தவத்திரு அழகரடிகள் அவர்களிடம் இந்நூலினை வெளியிடும் கருத்துப் பற்றி யாங்கள் தெரிவித்தபோது, இப்பணி சாலச்சிறந்ததென்றும், இன்றியமையாத நுண்கருத்துகள் இந்நூலின்கண் உள்ளனவென்றும், தமிழ் மக்கள் உண்மையுணர்தற்கு இந்நூல் வழியாகுமென்றும் எடுத்துக் கூறி, இதனை வெளியிடுதற்கு ஏற்பச் செவ்விதாக்கித் தந்தனர். அவர்களுக்குக் கழகத்தின் நன்றி என்றும் உரியதாகும்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் 'திருவள்ளுவர் கோட்டம்' அழகாகவும் மேம்பாடாகவும் தோன்றித் திருக்குறளை மேன்மேலும் ஆராய்ந்து வருகிறது; திருக்குறள் இன்ன கோட்பாட்டுக்கு உரியது, என்பதைச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், ஆராய்ச்சியாளர்க்கு எடுத்துக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. 'திருவள்ளுவர் சித்தாந்த சைவரே' என்று, ஆராய்ச்சிக்கு விருந்தாக நடுநிலையாளரை நோக்கி, இந்நூல் ஆக்கப்பட்டிருப்பதனால், இதனை வெளியிட விரும்பினோம். ஆராய்வார்க்குப் பயன்படுதலோடு திருவள்ளுவரின் விளக்கத்துக்கும் இது சிறப்புத் தரும் என்று நம்புகிறோம்.

அறிஞர்களும், அன்பர்களும் இதனை வாங்கி ஆராய்வதுடன் அடுத்த தலைமுறைக்கும் பயன்படும்படி கல்விச்சாலை இளைஞர்களுக்கும் உதவும்படி செய்ய வேண்டுகிறோம்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.

1976

  • தொடங்கியவர்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

பதிப்புரை

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்ச் சச்சிதானந்தமாய் விளங்கும் பரசிவன், ஆன்மாக்கள் உய்ய வேத சிவாகமங்களை அருளிச் செய்தான். தெய்வக் கோட்பாடுகளை ஆராய முற்பட்டவர்கள் தத்தம் ஞான வரம்புக்கு ஏற்ப வேத சிவாகமங்களை ஒட்டியோ மறுத்தோ வெவ்வேறு முடிபுகளைக் கண்டு அவற்றைப் பரப்பி வந்தனர். இத்தகைய முடிவு வேறுபாடுகளால் சமயங்கள் பலவாயின.

சிவஞானம் முதிர்ந்த சான்றோர்கள் அச்சமயங்களை 24 ஆக வகைப்படுத்தினர். அவற்றுள்ளே சைவ சித்தாந்தப் பேருண்மையை வெளிப்படுத்தி மெய்கண்ட சாத்திரங்களையும் பண்டார சாத்திரங்களையும் அருளிச் செய்தனர்.

இந்நிலையில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளைப் பொது மறை என்றும், தத்தம் சமய நூல் என்றும் ஒரு சிலர் சான்று காட்டி எழுதியும் பேசியும் வந்தனர். பஞ்சாக்கரபுரம் ஸ்ரீவாலையானந்த சுவாமிகள், திருக்குறளை நுணுகி ஆராய்ந்து, அதனை இயற்றிய திருவள்ளுவர் சித்தாந்த சைவரே என்ற முடிவுக்கு வந்து இதனை உலகறியச் செய்ய வேண்டும் என்று கருதி கட்டுரைகள் இயற்றினார்கள். திருவள்ளுவர் ஏனைய புறச் சமயத்தவரல்லர் என்பதை திருக்குறள் சான்றுகளால் நிறுவியும், திருவள்ளுவர் சித்தாந்த சைவரே என்பதையும் திருக்குறள் சான்று கொண்டு வலியுறுத்தியும் அக்கட்டுரைகளை எழுதினார்கள். அந்த கட்டுரைகள் 1926-1927 ஆம் ஆண்டுகளில் செந்தமிழ்ச் செல்வி என்னும் பத்திரிகையில் மூன்று இதழ்களில் வெளிவந்தன. பின்னர் 1976ஆம் ஆண்டில் சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தால் ஒரு நூலாக வெளியிடப்பெற்றது.

சந்தானசாரியாருள் முதலாமவரும், சிவஞான போதம் என்னும் சாத்திர நூலை அருளியவருமான அருள்திரு மெய்கண்ட தேவரின் குருபூசை விழா, அவரது அவதாரத் தலமாகிய பெண்ணாகடத்திலும், சிவானந்தப் பேறு பெற்ற திருவெண்ணெய் நல்லூரிலும் ஆண்டுதோறும் முக்தித் திருநாளாகிய ஐப்பசி - சுவாதி தினத்தன்று ஆதீனத்தால் அபிடேக ஆராதனை, நூல் வெளியீடு, சாத்திர சொற்பொழிவு நிகழ்வுகளுடனும் இரவு மெய்கண்டார் திருவீதியுலாவுடனும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

  • தொடங்கியவர்

திருவெண்ணெய்நல்லூரில் 1951 முதல் 1969 வரை 19 ஆண்டுகள் மெய்கண்டார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று சித்தாந்த சைவமாநாடுகளும் நூல் வெளியீடுகளும் நடைபெற்று வந்தன.

அருள்மிகு மெய்கண்டார் திருக்கோயிலில் சிவாசாரியார்களைக் கொண்டு ஆறுகால யாகபூஜைகளை செய்வித்து, 19.6.1994-ல் சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்கள் தமது திருக்கரங்களால் கும்பாபிஷேகம் சிறப்புடன் செய்தருளினார்கள்.

மெய்கண்டார் அருளிய சிவஞானபோத செம்பொருளை யாவரும் அறிந்து பயன்கொள்ளும்வண்ணம் சீர்வளர்சீர் குருமகா சந்நிதானம் அவர்களின் அருளாணைவழி திருவாவடுதுறை ஆதீனம் சைவசித்தாந்த நேர்முக பயிற்சி மையம் என்ற அமைப்பு 12 ஆண்டுகளாக செயலாற்றி வருகிறது. இம்மையத்தின் மூலம் இதுவரை 5250 மாணவர்கள் பயிற்சி பெற்றும், தற்சமயம் 4280 மாணவர்கள் பயிற்சியிலும் உள்ளனர்.

சென்ற சில ஆண்டுகளில் சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்கள் அருளாணையின்வண்ணம் இக்குருபூசை தினத்தன்று (1) Theology of Tamil (2) சிவஞானபோதம் (3) அஷ்டபிரகரணம் 5,6 (4) குண்டவிதி (5) திருக்குறள் பொது நூலா? முதலிய நூல்கள் வெளியிடப்பெற்றுள்ளன.

இவ்வாண்டு குருபூசை விழாவில் (ஐப்பசி - சுவாதி) விசு ஆண்டு ஐப்பசித் திங்கள் 28ஆம் நாள் (14.11.2001) புதன்கிழமையன்று திருவாவடுதுறை ஆதீனம் சீர்வளர்சீர் குருமகாசந்நிதானம் அவர்களின் அருளாணையின்வண்ணம் திருவள்ளுவர் சித்தாந்த சைவர் என்னும் இந்நூல் மறுபதிப்பாக வெளியிடப்பெறுகிறது.

சைவ மெய்யன்பர்களின் இவ்வாதீன வெளியீடாகிய இந்நூலைப் பெற்றுப் பயின்று நலம் பெறுவாராக.

திருவாவடுதுறை ஆதினம்.

  • தொடங்கியவர்

திருவள்ளுவர் சித்தாந்த சைவர்

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.

கடவுளால் உதவப்பட்ட உடல் கருவி உலக (தநு கரண புவன) போகங்களை அடைந்த ஆன்மாக்கள், தமது வினைக்கீடாகப் பல திறப்பட்ட அறிவு விளங்கப்பெறும் (பல அறிவு) பேதத்தால் உயிர்கள் நுகரும் இன்ப நிலைகளும் பல திறப்படும். அவ்வின்ப நிலைகளையடைந்து இன்ப நுகர்ச்சியுறுங் காலமே 'சமயம்' எனப்படும்.

சமயம் புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என நான்கு வகைப்படும்.

புறப்புறச் சமயமாவது, வேத சிவாகமங்களையும், அவற்றின் விதி விலக்குகளையும் உடம்படாது, சிறிது கால இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.

புறச்சமயமாவது, சிவாகமங்களை உடம்படாது, வேதத்தை மட்டும் உடம்பட்டு, அதிற் கூறப்படும் நிலையில்லாத இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.

அகப்புறச் சமயமாவது, வேத சிவாகமங்களை உடம்பட்டு, அவற்றோடு ஓரோர் காலங்களில் மோகத்தினாற் சில உயிர்கள் செய்த 'தந்திர' கலைகளையும் உடம்பட்டு, அவற்றிற் கூறப்படும் நிலையில்லாத இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.

அகச் சமயமாவது, வேத சிவாகமங்களை உடம்பட்டு, இன்ப நுகர்ச்சி முறையில் பேதப்படும் இன்ப நிலைகளை உறுதியாகக் கொண்டது.

  • தொடங்கியவர்

புறப்புறச் சமயங்கள்:

உலோகாயதம், புத்த பேதங்கள் நான்கு, சமணம் எனும் ஆறும் அவற்றின் உட்பிரிவுகளுமாம்.

உலோகாயதத்தின் உட்பிரிவுகள்:

உடலே உயிர் என்னும் (தேகான்ம) வாதம், பொறிகளே உயிர் என்னும் (இந்திரியான்ம) வாதம், மூச்சை உயிர் என்னும் (பிராணான்ம) வாதம் என்பன.

புத்த பேதங்கள் நான்காவன:

மாத்தியமிகம், யோகாசாரம், செளத்திராந்திகம், வைபாடிகம் என்பன.

சமணத்தின் உட்பிரிவு:

நிகண்ட வாதமாம்.

புறச் சமயங்கள்:

தருக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம் பாஞ்சராத்திரம் எனும் ஆறும் அவற்றின் உட்பிரிவுகளுமாம்.

தருக்கத்தின் உட்பிரிவுகள்:

வைசேடிகம், நையாயிகம் என்பன.

மீமாஞ்சையின் உட்பிரிவுகள்:

பட்டம், பிரபாகரம் என்பன.

ஏகான்ம வாதத்தின் உட்பிரிவுகள்:

மாயாவாதம், பாற்கரிய வாதம், கிரீடாப் பிரமவாதம், சத்தப் பிரமவாதம் என்பன.

அகப்புறச் சமயங்கள்:

பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் ஐக்கவாத சைவம் என ஆறு.

அகச் சமயங்கள்:

பாடாணவாத சைவம், பேதவா சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுரவவிகாரவாத சைவம், சிவாத்துவிதவாத சைவம் என ஆறு.

இங்ஙனங் கூறிய சமய பேதங்களுள் நம் திருவள்ளுவ நாயனார் எச்சமயத்தைச் சார்ந்தவர் என ஆராய்வோம்

  • தொடங்கியவர்

(1) 'உலோகாயதர்' அல்லர்

(1) உலோகாயதர்கள் காட்சியளவை ஒன்றே கொள்வர்; கருதல் (அனுமானம்) உரை என்னும் அளவைகளை உடம்படார். நம் நாயனாரோ,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்றும்,

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு. 338

என்றும்,

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாணென்னும்

நன்மை குறித்தது சால்பு. 1013

என்றும்,

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122

என்றுங் கூறுமாற்றால் காட்சியளவை, கருதல் அளவைகளையும்,

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு. 610

என்று கூறுமாற்றால் அவர் உரையளவையையும் உடம்படுகின்றார்.

  • தொடங்கியவர்

(2) உலோகாயதர் காட்சியளவைக் கெய்துகின்ற நிலம், நீர், தீ, வளியெனும் நான்கு பூதங்களையே கொள்வர். நாயனார்.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும். 271

என்று கூறுமாற்றால் ஐம்பூதங்கள் உண்டெனக் கொள்கின்றார்.

ஆகையால் நாயனார் 'உலோகாயதரல்லர்' என்பதொருதலை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.