Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளாரிந்தா என்கிற கோகிலா.

Featured Replies

கிளாரிந்தா என்கிற கோகிலா.

தமிழின் முன்னோடி எழுத்தாளர் அ.மாதவையா நினைவு தினம்.... 22..அக்டோபர்...🌷💐🌷 மீள்பதிவு :
 
1915 ல் மாதவையா ஆங்கிலத்தில் எழுதிய வரலாற்று நாவல் ‘ கிளாரிந்தா’.... . பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்ணைப் பற்றியது. அதை மையமாக வைத்து  2002- ல் ’பெண்ணே நீ” இதழில் தோழர் பா.ஜீவசுந்தரி அவர்கள் எழுதிய கட்டுரை. 
 
எந்த ஒரு தனி நபரின் சாதனையும் அவர் வாழ்ந்த காலத்தின் சமூக, அரசியல் , பொருளாதாரப் பின்னணிகளோடு கலந்தே உருவாகியுள்ளது. அந்த சாதனைக்குரியவர் ஒரு பெண்ணாக இருந்தால் சிலுவையில் அறையப்படுவதை விட கொடுமையான துன்பங்களை  அவள் அனுபவித்தாக வேண்டும்.
 
வெகுவாக முன்னேறி விட்டதாகக் கூறும் 21-ஆம் நூற்றாண்டிலேயே  பெண்கள் படும் பாடு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லையென்றால், 19-ஆம் நூற்றாண்டில் ஒரு பெண் தமது சமூக  மூட நம்பிக்கைகள் குறித்துக் கேள்வி எழுப்பத் துணிந்தால் அவளைச் சும்மாவா விட்டு வைப்பார்கள்?
 
கணவன் இறந்தவுடன் அவனது சிதையில் மனைவியையும் சேர்த்து உயிரோடு எரிக்கும் வழக்கம் பெண்களின் மீது திணிக்கப்பட்டு வந்தது. அப்படிச் சிதையில் எரிந்து போன பெண்களைச் ‘சதி மாதா’ என்ற பெயரில் தெய்வமாக வணங்கி வருவதையும் வழக்கத்தில் கொண்டிருந்தார்கள் முந்தைய நூற்றாண்டில்… ஒரு சில பெண்கள் உடன்கட்டை ஏற மறுத்து முரண்டு பிடித்தபோது, அவர்களை வலுக்கட்டாயமாக சாத்திரத்தின் பேரால் தீயில் தள்ளிக் கொன்ற சனாதனிகள் நிறைந்த உலகத்தில் அதை எதிர்க்கத் துணிந்த புண்ணியவான்களும் இல்லாமலில்லை.
 
இருபதாம் நூற்றாண்டிலும், நம் சம காலத்தில் இராஜஸ்தானில் சதியில் விழுந்த ரூப் கன்வர் குறித்த வழக்குகளும் சச்சரவுகளும் தொடர்வது  வேடிக்கையான வேதனை என்றால், சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே உடன்கட்டை ஏற மாட்டேன் என மறுத்து, தங்கள் சமூகத்தாலேயே புறக்கணிக்கப்பட்ட பெண்மணியும் இருந்திருக்கிறார் என்றால் வியப்பேற்படாமல் இல்லை.
 
18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன்  பிரதாப் சிங் அரண்மனையில்  அரசு சோதிடராக இருந்தவர் மராட்டிய பிராமணர்  பண்டிட் ராவ். மன்னருக்கு நெருக்கமாக இருந்த அவர், தன் மகனைக் குலத்தொழிலில் ஈடுபடுத்தாமல்  ராணுவப் பயிற்சி பெற அனுப்பினார். பின்னர் சோதிடரின் மகன் ஒரு படைப்பிரிவுக்குத் தளபதியும் ஆனார். அறந்தாங்கி அருகே நடைபெற்ற போரில்  சோதிடரின் ஒரே மகன் இறந்த செய்தி கேட்டு அவரது மனைவி அதிர்ச்சியில் மரணமடைகிறாள். இவர்களின் ஒரே மகள் கோகிலா. வயது முதிர்ந்த சோதிடர் பண்டிட் ராவ் பேத்தியைப் பராமரித்து வந்தாலும் புத்திர சோகம் அவரைக் காவு வாங்கியது.  அதைத் தொடர்ந்து தாய், தகப்பன், பாட்டன் அனைவரையும் இழந்து நிராதரவாக நின்ற கோகிலாவைப் பராமரிக்கும் பொறுப்பை  மன்னரே ஏற்றுக் கொண்டார்.
 
தஞ்சை அருகேயுள்ள வல்லம் கிராமத்தில் பிராமணச்சூழலில் கோகிலா வளர்க்கப்பட்டாள்.  சாரதா என்ற சூத்திரப்பெண்  அவளுக்குப் பணிவிடைகள் செய்து வந்தாள். அச்சிறுமியின் பராமரிப்புக்காக மன்னர் வழங்கிய மானியத்தைச் சம்பந்தமேயில்லாத  வேறொரு கூட்டம் தின்று கொழுத்தது. கோகிலாவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறிய அரண்மனை திவான் , மன்னரை ஏமாற்றி 12 வயது கூட நிறையாத அந்தச் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டார்.  கோகிலாவின் பெயரில் இருந்த இரண்டு கிராமங்கள்  மற்றும் ஏராளமான சொத்துக்களை அபகரிக்கவே இந்தத் ‘திருமண’ நாடகம் அரங்கேறியிருக்கிறது.
 
அப்போது தஞ்சை அரசு மிகப்பெரிய அரசியல் சுழலில் சிக்கியிருந்தது. டச்சு, ஃபிரெஞ்சு, ஃபோர்ச்சுகல் படைகள் தஞ்சையை முற்றுகையிட்டுப் போர் புரிந்தன. திருச்சியில் இருந்த ஆங்கிலேயப்படை எதிர்பாராத விதமாக ஆதரவுக் கரம் நீட்டியதால் தஞ்சை அரசு பிழைத்தது. புதிய சூழ்நிலையில் பிரதாப் சிங்கின் மகன் சாயாஜி ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். தஞ்சை வீதிகளில் ஆங்கிலேயப் படைகள் சரளமாக நடமாடத் தொடங்கின.
 
கோகிலாவை மணந்து கொண்ட திவான் உடல்நலக் குறைவால் திடீரென இறந்து போனார். மராட்டிய பிராமணக் குடும்பங்களில் கணவர் உயிரிழந்ததும் மனைவியை உடன்கட்டை ஏறச் செய்யும் சதிக் கொடுமை நிலவியது. அவ்வழக்கப்படி கோகிலாவையும் அவள் கணவனின் உடலுடன் உடன்கட்டை ஏறச் செய்து கொளுத்தி விட்டால்… அவளின் சொத்து முழுவதையும் கவர்ந்து கொள்ளலாம் என்று இறந்து போன திவானின் உறவினர்கள் திட்டம் போட்டனர்.
 
’சதி’ என்ற கொடூரம் நிறைந்த மூடப்பழக்கம்  இடையில் வந்த சதிப்பழக்கம்  என்பதை அறிந்த கோகிலாவோ உடன்கட்டை ஏற மறுத்தாள். காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் சாத்திர, சம்பிரதாயங்களை  மறுக்கக் கூடாது  என அக்கூட்டம் வாதிட்டது. ஆனால், கணவர் இறந்ததும் மனைவியும் சாக வேண்டுமென்று எந்தப் புராணத்திலும் வேதத்திலும் சொல்லப்படவில்லை என்று கோகிலா மறுத்துக் கூறினாள். ’வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டியவள் வேதங்கள் பற்றியும் சாத்திரங்கள் பற்றியும் பேசுவதா?’  என ஆத்திரமடைந்த உறவுக்கூட்டம் கோகிலாவை வலுக்கட்டாயமாகச் சிதையில் ஏற்றித் தீ வைத்தது.
 
இந்த மூடப் பழக்கத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆங்கிலேய அதிகாரி லிட்டில்டன் சிதையில் பாய்ந்து கோகிலாவைக் காப்பாற்றினார். சுற்றியிருந்த கூட்டமோ கூப்பாடு போட்டது. அவர்கள் நடந்த ‘அநியாயத்தை’ சாயாஜி மன்னரிடம் தெரிவித்தனர். மன்னரும் லிட்டில்டனை அழைத்து , கணவனை இழந்த கைம்பெண்கள்  அவனுடனேயே உடன்கட்டை ஏறுவது காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் குல வழக்கம் என்றும் அதைத் தடுத்தது பெரும் தவறு என்றும் கடிந்து கொண்டார். ஆனால், லிட்டில்டன் அதனை ஏற்கவில்லை. அதற்கு கோகிலா பிடிவாதமாக இருந்ததும் ஒரு காரணம். உடன்கட்டை ஏற மறுத்ததன் காரணமாக இவள் குலமிழந்து விட்டதாகவும் அவளை இனி தங்களுடன் சேர்த்துக் கொள்ள முடியாதென்றும் அவளது உறவினர்கள் அவளைப் புறக்கணித்து விட்டனர். வேறு வழியில்லாமல் லிட்டில்டனுடன் தங்கியிருந்த கோகிலாவை கிறித்துவ மதம் ஈர்த்தது. தான் வாழும் உரிமையை மறுக்கும் தன் மதம் தனக்குத் தேவைதானா  என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது.
 
பிராமண விதவைப் பெண்ணொருத்தி வெள்ளைக்காரன் ஒருவனுடன் வசிப்பதால் மராட்டிய பிராமணர்கள் ஆத்திரமடைந்தனர். திருச்சியில் இருந்த ஆங்கிலேய அரசிடம் முறையிட்டனர். லிட்டில்டனுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து நெருக்குதல் உருவானது. கோகிலாவோ மதம் மாறி விடத் துணிந்தாள். ஆனால், மத மாற்றத்துக்கும் அனுமதி கிடைக்கவில்லை.
லிட்டில்டன் தஞ்சையிலிருந்து திருநெல்வேலிக்கு மாறுதல் வாங்கிக் கொண்டு, கோகிலாவையும் உடன் அழைத்துச் சென்றார். அவளுடன் பணிப்பெண் சாரதாவும் உடன் சென்றாள். திருநெல்வேலியிலும் கோகிலாவின் மத மாற்ற முயற்சி தொடர்ந்தது. கிறித்துவ தேவாலயம் அவளுக்கு ஞானஸ்நானம் செய்து வைக்க மறுத்தாலும், அவள் தானாகவே கிறித்துவத் தொண்டில் ஈடுபடத் தொடங்கினாள். பெயரையும் கிளாரிந்தா என மாற்றிக் கொண்டாள். சாத்திரப் புதரின் நடுவே மூச்சு முட்ட வாழ்ந்து பழகிய கோகிலா, இங்கு புதிய காற்றைச் சுவாசித்தாள். ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதும் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதும் அவளது வாழ்க்கைக்குப் புதிய அர்த்தத்தைத் தந்தன. சுற்று வட்டார கிராம மக்கள் ‘ராசா கிளாரிந்தா’ என்றே அவரை அழைத்தனர்.
 
இந்நிலையில் விக்டோரியா மகாராணி அழைப்பின் பேரில் 1773-ம் ஆண்டில் இங்கிலாந்து சென்ற லிட்டில்டன்  பின்னர் இந்தியா திரும்பவேயில்லை. ஏற்கனவே உடல் நலக் குறைவோடு இருந்த அவர் , தனது தாய்நாட்டிலேயே உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. தனது சொத்துக்கள் முழுவதையும்   கிளாரிந்தா பெயருக்கு எழுதி வைத்து விட்டே லிட்டில்டன் சென்றிருக்கிறார். 
 
லிட்டில்டனின் மரணம் கிளாரிந்தாவைத் துயரமடையச் செய்தாலும் ஒரேயடியாக அவர் உடைந்து போய் விடவில்லை; தற்கொலை செய்து கொள்ளவுமில்லை. துணிச்சலுடன் வாழ்க்கையை எதிர்கொண்டார். கிறித்துவப் பாதிரியார் ஷ்வார்ட்ஸின் என்பவரை அடிபணிந்து 1778-ஆம் வருடம் மார்ச் மாதத்தில் கிறித்துவ மதத்துக்கு மாறினார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கிளாரிந்தாவுக்கு ஞானஸ்நானம் செய்து வைக்கப்பட்டது. அவரது பணிப்பெண் சாரதா சாரா ஆனார். வளர்ப்பு மகன் கோபால் ஹென்றி லிட்டில்டன் ஆனார்.
 
அதுவரையில் தான் வசித்து வந்த இடத்திலேயே 1785-ஆம் ஆண்டில் நெல்லைச் சீமையின் முதல் தேவாலயத்தை கிளாரிந்தா கட்டினார். புனிதமடைந்த இடமாக அவர் கருதிய அதே இடத்திலேயே , அதே  ஆண்டில் பள்ளிக்கூடம் ஒன்றையும் துவங்கினார். திருநெல்வேலிச்  சீமையிலேயே தொடங்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம் என்ற பெயரையும் பெருமையையும்அந்தப் பள்ளிக்கூடம்  பெற்றது.
 
உடன்கட்டை ஏற மறுத்த முதல் பெண்மணி, முதல் கிறித்துவப்பள்ளி துவங்கிய பெருமை, கிறித்துவ மதத்துக்கு மாறிய முதல் பெண்மணி, முதல் தேவாலயம் கட்டிய பெண், முதல் சமூகசேவகி என்று பலப்பல பெருமைகள்  கிளாரிந்தாவுக்கு உண்டு….!
 
கிளாரிந்தா மறைந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. 228 ஆண்டு கால வரலாற்றைக் கோகிலா என்ற பெயரில் செய்ய முடியாத கிளாரிந்தா செய்து விட்டுச் சென்றிருக்கிறார். கிறித்தவக் கல்விக்கூடங்களால் நிறைந்திருக்கும் பாளையங்கோட்டை நகரமே அதற்கு சாட்சி…
 
 large.5E83B7AB-1A47-4C81-8AD3-B59D39E35EE8.jpeg.409d0399884ca2bd592eefe55f36fe15.jpeg

நன்றி

பா.ஜீவசுந்தரி...
Thanks + Manavai Jeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.