Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்து கால் மனிதன் அ.முத்துலிங்கம்

Featured Replies

கடந்த வாரம், பனியால் மூடப்பட்ட ஒரு நாள், ரொறொன்ரோ மருத்துவமனை ஒன்றில் ஹெலன் என்ற பெண்மணியை சந்தித்தேன். பல வருடங்களுக்கு முன்னர் ஒரு சுப்பர்மாக்கெட்டுக்கு வெளியே சந்தித்து இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இவர் முகத்தை மறந்துவிட்டேன். ஆனால் அவர் என்னை அடையாளம் கண்டுவிட்டார். முதுகு எலும்பு எக்ஸ்ரே எடுப்பதற்காக வந்திருந்தார். இவருடைய கணவர் கடந்த 5 வருடங்களாக படுத்த படுக்கையாகக் கிடக்கிறார். தீராத முதுகு வலியால் ஹெலன் 24 மணிநேரமும் வேதனை  அனுபவிக்கிறார். அதே துப்புரவுத் தொழிலைத்தான் இப்பவும் செய்கிறார். எந்த நேரமும் வேலை போகக்கூடும். ஆனால் பழைய சிரிப்பு இன்னமும் போகவில்லை.  இவரிடம் நிறைய கற்க வேண்டியிருக்கிறது. 

 

*********"**"**""""*************************

இதோ அந்தக் கதை

நான் அமர்ந்திருந்தேன். சுப்பர்மார்க்கெட்டின் வெளியே காணப்பட்ட பல இருக்கைகளில் ஒன்றில். அந்தப் பெண் வந்து பொத்தென்று பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தார். சீருடை அணிந்திருந்தார். கையிலே பேப்பர் குவளையில் கோப்பி. தான் செய்த வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருந்தார். துப்புரவுப் பணிப்பெண் என்பது பார்த்தவுடன் தெரிந்தது. வயது 50 க்கு மேலே இருக்கும். கறுப்பு முடி, நீலக் கண்கள். வெண்மையான சருமம். கிழக்கு ஐரோப்பிய பெண்ணாக இருக்கலாம். ஒருவேளை ரஸ்யப் பெண்ணாகவும் இருக்கலாம். கோப்பியை சத்தம் எழுப்பாமல் குடித்தபடி யோசனையை எங்கோ தூரத்தில் செலுத்திவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தார். அந்தக் கண்களில் வெளிப்பட்ட துயரம் போல ஒன்றை நான் முன்னர் கண்டதில்லை. அதுவே அவருடன் என்னைப் பேசத் தூண்டியது.

’இன்றைய வேலையை முடித்துவிட்டீர்களா?’ என்று கேட்டேன். ’இல்லை, இன்னும் பாதி வேலை இருக்கிறது. ஓய்வெடுக்கிறேன்’ என்றார். அவருடைய அலங்காரம், பேச்சு, நடக்கும் தோரணை, ஆங்கில உச்சரிப்பு இவற்றை வைத்து பார்த்தபோது அவர் நீண்ட காலமாக ரொறொன்ரோவில் வசிக்கிறார் என்பதை உணர முடிந்தது. துப்புரவுப் பணியில் அநேகமாக புதிதாக குடிவந்தவர்கள் அல்லது அகதிக் கோரிக்கையாளர்கள்தான் வேலை செய்வது வழக்கம்.  நீண்டகாலம் வசிப்பவர்கள் சீக்கிரத்தில் வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள். ஆகவே இந்தப் பெண் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

‘நீங்கள் கனடாவுக்கு எப்பொழுது குடிபெயர்ந்தீர்கள்?’ என்று கேட்டேன். அவர் கிரீஸ் நாட்டைச் சேர்ந்தவர். அவருக்கு 13 வயது நடந்தபோது தனியாக கனடாவுக்கு வந்தார். அவருடைய தகப்பன் அவருக்கு ஹெலென் என்று பெயர் சூட்டினார். ஹோமருடைய இதிகாசத்தில் வரும் பேரழகி ஹெலென். பிறந்தபோது அவர் அத்தனை அழகாக இருந்தாராம். புராணத்தில் வரும் ஹெலெனை பாரிஸ் என்ற வீரன் கடல் கடந்து அபகரித்துப் போனான். ஹெலென் என்ற பெயரைக்கொண்ட இந்தப் பெண்ணும்  ஏறக்குறைய அம்மாதிரித்தான் கடத்தப்பட்டார். அவரே தன் மீதிக் கதையை கூறினார்.

’எங்கள் குடும்பத்தில் நாங்கள் ஏழு பிள்ளைகள். நான் ஆறாவது. என் அப்பாவுக்கு ஒரு கால் கிடையாது. அவர் எப்பொழுதும் குதிரையில் ஆரோகணித்திருப்பார். படுக்கும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் அப்பாவை குதிரையின் மேல்தான் காணலாம். அவருடைய வேலை பிரபுக்களை வேட்டைக்கு அழைத்துப் போவது. அவரும் நன்றாக வேட்டையாடக் கூடியவர். குறிதவறாமல் சுடுவார். எங்கே எந்த நேரம் எந்த எடத்தில் என்ன பறவைகள் கிடைக்கும், என்ன மிருகங்கள் அகப்படும் என அவர் ஒருவருக்கே தெரியும். ஆகவே அப்பாவை தேடி பிரபுக்கள் வருவார்கள். அதிக வேட்டை கிடைத்தால் அப்பாவுக்கு அதிக பணம் கிடைக்கும். நான் பிறந்த பிறகு பிரபுக்கள் வேட்டையில் பெரிதாக முன்னர்போல ஆர்வம் காட்டவில்லை. படிப்படியாக அப்பாவின் வருமானம் குறைந்தது. அப்பாவுக்கு வேறு வேலை தெரியாது. அவராகவே ஆள் சேர்த்துக்கொண்டு வேட்டைக்கு போவார். அவரை எங்கள் கிராமத்தில் ‘ஐந்து கால் மனிதன்’ என்றே அழைப்பார்கள். எனக்கு 11, 12 வயது நடந்தபோது நிலைமை மோசமானது. வீட்டிலே நாங்கள் அடிக்கடி பட்டினி கிடக்க நேரிட்டது. அப்பா தொடர்ந்து குடும்பத்தை பராமரிப்பதற்கு பெரும் சிரமப் பட்டார்.

நான் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தேன். தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு. கிரேக்க காவியங்களும் என்னைக் கவர்ந்திருந்தன. பண்டைய கிரேக்க மொழியை படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் நிறையவிருந்தது. நவீன கிரேக்கம் வேறு, பண்டைய கிரேக்கம் வேறு. எழுத்துக்கள் ஒன்றாக இருந்தாலும் உச்சரிப்பு வேறு. பொருளும் வேறு. பண்டைய இலக்கியங்களை என்னால் வாசிக்க முடியும் ஆனால் பொருள் விளங்காது. 

என் அம்மாவின் தங்கை கனடாவில் வசதியாக வாழ்ந்தார். அவர் என்னை அழைத்தார். கனடாவில் என்ன வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று ஆசை காட்டினார். ஏனோ நான் மகிழ்ச்சியில் குதித்தேன். அந்த வறுமையிலும் என் அம்மாவுக்கு நான் புறப்படுவதில் சம்மதம் இல்லை. ஆனால் என் அப்பாவுக்கு பெருமை பிடிபடவில்லை.  நான் கனடாவுக்கு படிக்கப் போகிறேன் என்பதை நாலு தடவை ஊர் முழுக்க குதிரையில் சுற்றியபடி அறிவித்தார். 1969 ம் ஆண்டு டிசம்பர் மாதக் குளிரில் நான் மொன்ரியல் வந்து சேர்ந்தேன். என்னுடைய சின்னம்மாவுக்கு இரண்டு பிள்ளைகள். நான் வந்த அன்றே என்னை அவர்கள் அறையில் தூங்க அனுமதித்தார். அவர்கள் கட்டிலில் படுத்தார்கள். நான் தரையில் படுத்தேன். அடுத்த நாள் காலையே எனக்கு உண்மை புரிந்துவிட்டது. நான் வேலைக்காரியாகத்தான் வந்திருந்தேன். 

கிரேக்க புராணத்தில் ஒரு கதையுண்டு. திரோய் அரசன் தன் நகரத்தைச் சுற்றி பிரம்மாண்டமான சுவர் எழுப்ப திட்டம் போட்டான். அதற்காக அதிவீரன் அப்பொல்லோவையும் கடல் கடவுளான போஸிடோனையும் நியமித்தான். சுவரைக் கட்டி முடித்தபிறகு அவர்களுக்கு தகுந்த சன்மானம் தருவதாக வாக்குக் கொடுத்தான். ஆனால் அவர்கள் சுவரைக் கட்டி முடித்த பிறகு அவர்கள் சம்பளத்தை கொடுக்காமல் ஏமாற்றினான். கிரேக்க புராணம் சொல்லும் ஏமாற்றுக்காரர்களில் இவனே அதிகம் சிறப்புவாய்ந்த  ஏமாற்றுக்காரன். என் சின்னம்மாவும் அப்படித்தான். சிறு பெண்ணான என்னைத் திட்டமிட்டு ஏமாற்றினார். காலையில் அவர் வேலைக்கு போய்விடுவார். நான் இரண்டு பிள்ளைகளையும் பார்ப்பேன். சமைப்பேன். துவைப்பேன். தரையை கூட்டி சுத்தம் செய்வேன். பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று நான் கேட்டபோது பனிக்காலம் முடியட்டும் என்று சொன்னர். பனிக்காலம் முடிந்தபோது செப்டம்பரில்தான் பள்ளியில் புது ஆட்களைச் சேர்ப்பார்கள் என்றார். இப்படியே புதுப்புது விதமான சாட்டுகளை உருவாக்கினார். என்னைக் கடைசி வரை அவர் பள்ளிக்கு அனுப்பவில்லை.

நான் வீட்டுக்கு எழுதும் கடிதங்களை படித்து கிழித்துவிட்டு திரும்பவும் எழுதச் சொல்வார். அவரே என் கடிதத்தை உறையிலிட்டு தபால்தலை ஒட்டி அனுப்புவார். நான் கண்டது காலை, மதியம், மாலை, இரவு, அவ்வளவுதான். என்னை வெளியே கூட்டிப் போனது கிடையாது. எனக்கு பிரெஞ்சு மொழியும் தெரியாது. நான் ஓர் அடிமை வாழ்க்கை வாழ்ந்தேன். ஆனால் என் அப்பா நான் பெரிய படிப்பு படிக்கிறேன் என்ற ஆனந்தத்தில் இருந்தார். என்னுடைய சின்னம்மா கடிதத்தில் என்ன எழுதுவாரோ தெரியாது, ஆனால் அப்பா எனக்கு எழுதும் கடிதங்களில் ‘நல்லாகப் படி. அடுத்த சோதனையிலும் முதல் ஆளாக நீ வரவேண்டும்’ என்று எழுதியிருப்பார்.  

என்னுடைய பல பிறந்த தினங்கள் வந்து போயின. அது என் ஒருத்திக்கு மட்டுமே தெரியும். யாரும் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடவில்லை. ஒருநாள் இரவு எல்லோரும் உறங்கிய பின்னர் நான் கண்ணாடிக்கு முன் நின்று என்னைப் பார்த்தேன். நான் இளம் குமரியாக நின்றது எனக்கே ஆச்சரியமாக  பட்டது.  என்னையே பார்த்துக்கொண்டு நெடுநேரம் நின்றேன். அன்று  மாலை சின்னம்மா அடித்ததில் கைவிரல்கள் பதிந்த அடையாளம் கண்ணாடியில் என் கன்னத்தின் பிழையான பக்கம் தெரிந்தது. அந்த வீட்டுத் தரைவிரிப்பை பாதி சுருட்டியபடி விட்டிருந்தேன். அதை மறுபடியும் விரிக்க மறந்துவிட்டேன். அதற்கான தண்டனைதான் என் கன்னத்தில் பதிந்து கிடந்தது.  என் நிலையை எண்ணியபோது எனக்கே மிகவும் பரிதாபமாகப் பட்டது.

சின்னம்மாவிடம் விலை மதிக்க முடியாத பொருள் ஒன்று இருந்தது. படிகக்கண்ணாடியால் செய்த ஏழு காம்புகள் கொண்ட மெழுகுதிரி தண்டு. அதை நான் துடைத்துக்கொண்டிருந்த போது அது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. என்னுடைய சின்னம்மா எங்கிருந்தோ சத்தம் கேட்டு ’உடைத்துவிட்டாயா?’ என்று கத்திக்கொண்டு கையை ஓங்கியபடி ஓடிவந்தார். அன்று எனக்கு என்ன நடந்தது என்று தெரியாது. நான் 18 வயது யுவதி. கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு அவரை நேருக்கு பார்த்து ‘அதற்கு என்ன இப்போ?’ என்று கேட்டேன். அவர் அப்படியே நின்றார். முகத்தில் முதல் தடவையாக ஒருவித அச்சத்தை கண்டேன். புகைப்படம் எடுக்க மெதுவாக பின்னுக்கு நகர்வது போல நகர்ந்தார். தரையில் இருந்து விளையாடிய கைக்குழந்தையை சட்டென்று தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு  அகன்றார். அன்றைக்கு உடைந்த கண்ணாடிச் சில்லுகளை நான் கூட்டி அள்ளவில்லை. அப்படியே போய் படுத்துவிட்டேன். என் வாழ்நாளில் அதுவே நீண்ட இரவு. அடுத்த நாள் அதிகாலை பஸ் கட்டணத்துக்கு வேண்டிய பணத்தை திருடிக்கொண்டு 
ரொறொன்ரோவுக்கு பஸ் பிடித்தேன்.’

ரொறொன்ரோவில் சந்தோஷமாக இருந்தீர்களா? ’ரொறொன்ரோ வந்து இறங்கிய அன்றுதான் வசந்தம் தொடங்கியிருந்தது. வானம் தொடக்கூடிய தூரத்தில் தெரிந்தது. மரங்கள் துளிர்த்து புது ஆரம்பத்தை நினைவூட்டின. மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.  ஒரு தொழிற்சாலையில் உடைகளில் பொத்தான் தைக்கும் வேலை கிடைத்தது. மிகவும் சுதந்திரமாக இருந்தேன். அங்கே வேலை செய்த ஒருவரை மண முடித்தேன். ஒரு மகன் பிறந்தான். எல்லாம் நல்லாகவே போனது. திடீரென்று ஒரு நாள் என் கணவர் உணவகம் ஒன்று திறக்கலாம் என்று யோசனை சொன்னார். சேமிப்பில் வைத்திருந்த அவ்வளவு பணத்தையும் போட்டு கிரேக்க உணவம் ஒன்றை தொடங்கினோம். சில வருடங்களுக்கு பின்னர் அது லாபத்தில் ஓடியது. ஆனால் என் கணவர் இறந்தபோது நான் அதை நட்டத்திற்கு விற்க நேர்ந்தது. 

’நீங்கள் உங்கள் சின்னம்மாவை பிறகு சந்திக்கவே இல்லையா?’   
நான் மொன்ரியலில் போய் இறங்கிய அன்று சின்னம்மா என் நாடியை பிடித்து இங்கும் அங்கும் திருப்பி ஒவ்வொரு கோணத்திலும் என்னை உற்றுப் பார்த்தார். நான் நினைத்தேன் சின்னம்மா என்மீது அன்பு காட்டுகிறார் என்று. அது அப்படியில்லை.  அவர் என் விலையை தீர்மானித்தார் என இப்போது தோன்றுகிறது. என்னிடமிருந்து எவ்வளவு வேலை வாங்கலாம் என்றுதான் அவர் கவலைப் பட்டார். எத்தனை கொடூரமாக என்னை அவர் நடத்தியிருந்தாலும் அவர் சொன்ன ஒரு வாசகத்தை மாத்திரம் இன்றைக்கும் என்னால் மறக்க முடியாது. ’நீ எதற்காக படிக்கவேண்டும், படிக்கவேண்டும் என்று அலைகிறாய். துடைப்பக்கட்டையோடு நிற்கும்போது நீ நல்ல அழகாய்த்தானே தெரிகிறாய்.’ இதுதான் சின்னம்மா. இறக்கும் வரைக்கும் என் அப்பாவுக்கு நான் ஏமாற்றப் பட்டது தெரியாது. ரொறொன்ரோ வந்த பின்னர் நான் எழுதித்தான் அம்மாவுக்கு தெரியும். அவர் சின்னம்மாவை மன்னிக்கவே இல்லை. நான் மன்னித்துவிட்டேன், ஆனால் அந்தக் காயம் இன்னும் ஆறாமலே கிடக்கிறது.

எங்கள் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. சப்பாத்து விற்பனைக்காரன் முழங்காலில் உட்கார்ந்து ஆகவேண்டும். வேலைக்காரியாக என்னை சின்னம்மா ஆக்கிய பின்னர் நான் அவரிட்ட கட்டளையை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா? சின்னம்மா தன்னைப் பெரிய அழகியாக நினைத்திருந்தார். அப்படியல்ல, அவர் தண்ணீரில் ஊறவைத்ததுபோல ஊதிப்போய் இருப்பார். ஆனால் திறமையான எசமானி. அவர் கண்கள் பூச்சியின் கண்கள் போல சுழன்றபடி இருக்கும். என்னுடைய வேலைகளில் குறைகண்டபடி இருப்பது அவர் பொழுதுபோக்கு.  தவறுசெய்தால் வசவு கிடைக்கும். என்னிடம் சாதாரணமாக கிரேக்க மொழியில் பேசுவார் ஆனால் திட்டும்போது ஆங்கிலத்துக்கு மாறிவிடுவார். நான் ஆங்கிலம் கற்றுக்கொண்டது அப்படித்தான். 

உங்களுக்கு மகன் இருக்கிறான் அல்லவா? என்றேன். ’நான் படிக்க முடியாத பெரிய படிப்பை என் மகன் படிப்பான் என நினைத்தேன். ஆனால் அவன் பள்ளிக்கூட படிப்பைக்கூட முடிக்கவில்லை. பத்து நாள் பழக்கமான ஒரு பெண்ணை எனக்கு தெரியாமல் மணமுடித்தான். அந்தப் பெண் சிரிக்கும்போது சிகரெட் புகை வெளியே வரும். அவளைக் கூட்டிக்கொண்டு அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்துக்கு போய்விட்டான். ஏன் அங்கே போனான் என்ற காரணத்தை யாராவது கேட்டால் சிரிப்பார்கள். அங்கேதான் வாத்து சுடலாம் என்கிறான். ஏர்னெஸ்ட் ஹெமிங்வே என்ற எழுத்தாளர் வாத்து சுட்ட மாநிலமாம். நான் ஒரு வாத்திலும் கீழாகிவிட்டேன். தாயை விட்டு ஒரு மகன் பிரிவதற்கு இது நல்ல காரணமா? என்னோடு ஒருவித தொடர்பும் அவனுக்கு கிடையாது. எனக்கு ஒருவருமே இல்லை, நான் தனியாகத்தான் வாழ்கிறேன். அடிக்கடி என் அப்பாவை நினைத்துக்கொள்வேன். அவர் இறக்கும்வரை உழைப்பதை நிறுத்தியதே இல்லை. ஊரிலே  ‘ஐந்து கால் மனிதன்’ என்று அவரை பழித்தபோது அவர் அதை பொருட்படுத்தவில்லை. சோர்ந்து போனதும் கிடையாது. ஒருநாள் குதிரையில் அமர்ந்தபடியே இறந்துபோனார். ஒரு கால் மட்டுமே இருந்தாலும் அவர் அயராமல் உழைத்தார். ஆனல் எனக்கு இரண்டு கால்கள் இருக்கின்றனவே’ என்று சொல்லி சிரித்தார். 

ஹெலென் என்று அருமையாக பெயர் சூட்டப்பட்ட கிரேக்கப் பெண் சட்டென்று எழுந்து நின்று தன் ஆடையை தட்டி சரி செய்தார்.  ஒரு காலத்தில் அவர் பேரழகியாய் இருந்திருப்பார் என்றுதான் தோன்றியது. கோப்பிக் குவளையை, சற்றுமுன் அவர் சுத்தமாக்கிய குப்பைத் தொட்டியில் எறிந்தார். துடைப்பக்கட்டை, தண்ணீர் கலம், சோப் வாளி, கிருமி நாசினி ஆகியவை நிறைந்த வண்டிலைத் தள்ளிக்கொண்டு புறப்பட்டார். புறப்படும் முன்னர் அவர் கடைசியாகச் சொன்ன வாசகம் ஒரு சிறுகதையின் முடிவுக்குரிய லட்சணத்தோடு வெளிவந்தது. ‘நான் 13 வயதில் துடைப்பத்தை கையிலெடுத்து சுத்தம் செய்தேன். இன்று 55 வயதிலும் அதையே செய்கிறேன், இன்னும் மோசமாக.’

END

Facebook

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.