Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்ப்பாட்ட இடமும் புலிகேசிச் சிந்தனைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்ட இடமும் புலிகேசிச் சிந்தனைகளும்

 

என்.கே. அஷோக்பரன்  

இம்சை அரசன் இருபத்துமூன்றாம் புலிகேசி என்றொரு, கற்பனை வரலாற்று, அரசியல் நையாண்டித் திரைப்படத்தில் ஒரு காட்சி வருகிறது. அதில், மக்கள் கூட்டங்களிடையே தினம் தினம் நடக்கும் ஜாதிச்சண்டைகளுக்குத் தீர்வு தர விளையும் மன்னர் புலிகேசி, ‘வீணாக வீதிகளில் சண்டையிட்டு அரசாங்கச் சொத்துகளுக்குச் சேதத்தை விளைவிப்பதை விட, ஒரு மைதானம் அமைத்து, அதில் சண்டையிட்டு, அதற்கொரு வரியை விதித்தால், இந்த நாட்டுக்கு நிறைய வருமானம் வரும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம்’ என்று காரணம் சொல்லி, ஜாதிப் பிரிவினைகளால் உண்டாகும் சண்டைகள் இடம்பெறுவதற்கென்று ‘ஜாதிச்சண்டை மைதானம்’ என்று ஒன்றை அமைத்து, அதனைத் திறந்து வைப்பதாக ஒரு காட்சி வரும்.  

அண்மையில், கொழும்பு மாநகரில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டங்கள் அடிக்கடி நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் இருந்த வெற்றுக் காணியொன்றில் ‘ஆர்ப்பாட்ட இடம்’ (Agitation Site) என்று மும்மொழிகளிலும் பெயர்ப்பலகை ஒன்று பொருத்தப்பட்டிருந்தமை, அனைவரது கவனத்தைக் குறிப்பாக, சமூக ஊடக வௌியில் பலரது கவனத்தை ஈர்த்திருந்தது.  

image_30387a2505.jpg

ஆர்ப்பாட்டங்கள் கொழும்பு மாநகருக்குப் புதியதொன்றல்ல. மாணவர்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள், பௌத்த பிக்குகள் என, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாகக் கொழும்பின் சனநெருக்கடி நிறைந்ததும் அதிகார மய்யங்கள் அமைந்ததுமான பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்களும் உண்ணாவிரதங்களும் ஊர்வலங்களும் சத்தியாக்கிரகங்களும் இடம்பெற்றுக்கொண்டுதான் வருகின்றன.   

இவற்றால் ஏற்படும் வாகன நெரிசல், போக்குவரத்துக் கெடுபிடிகள் என்பவை, கொழும்பு வாழ் மக்களின் வெறுப்பை அதிகம் சம்பாதித்துள்ளன என்றால் அது மிகையல்ல.   

இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது, அந்த உச்சி வெயில் பொழுதில், வேலைப்பழுவின் நெருக்குதலுக்கு மத்தியில், அந்தப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது, கடுமையான ஆத்திரம் வருவது ஆச்சரியமானதல்ல; அது இயல்பானதே.   

ஆர்ப்பாட்டங்கள் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதுமான இந்த ஆத்திரமும் வெறுப்பும் கொண்ட அனுபவம், கொழும்பு வாழ் மக்களுக்கு இருக்கிறது. இந்த வெறுப்புத்தான் ‘ஆர்ப்பாட்ட இடம்’ என்று, இன்று உருவாகியிருக்கும் ஆட்சியாளர்களின் இந்த முயற்சிக்கு, சிலரிடமிருந்தான ஆதரவையும் வரவேற்பையும் பெற்றுத்தந்திருக்கிறது.  

இன்றைய ஆட்சியாளர்களின் தாரக மந்திரங்களில் ஒன்று, ‘ஒழுக்கமான’ நாட்டை ஏற்படுத்துதல் என்பதாகும்.   

‘ஒழுக்கம்’ என்பது கவர்ச்சியான விடயம்தான். சிறுவயது முதல் ‘ஒழுக்கம்’ பற்றிய பாடங்களைக் கேட்ட வளர்ந்த சமூகம் இது. “படிக்காவிட்டாலும் பரவாயில்லை; ஒழுக்கம் தான் முக்கியம்” என்ற சொல்லைப் பாடசாலைகளிலும் வீடுகளிலும் கேட்டு வளராதவர்கள் இங்கு அரிதே!   

ஆனால், இந்த ஒழுக்கம் என்ற சொல்லுக்குள், நாம் தனிமனித ஒழுக்கத்தையும் பொது ஒழுக்கத்தையும் பொது ஒழு‍ங்கையும் கட்டுப்பாடுகளையும் ஒன்றாக அடக்கி விடுகிறோம்.   

தனிமனித ஒழுக்கம், விழுமியங்கள் என்பவை மிக முக்கியமானவை. வள்ளுவன் சொல்லும் ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது, தனிமனித ஒழுக்கத்தையே குறிப்பது ஆகும். அதேவேளை, ஒழுக்கம், கட்டுப்பாடு என்பவற்றின் பெயரால், அநீதிகளைக் கூடத் தட்டிக்கேட்காது இருப்பது என்பது, ஒழுக்கம் என்பதற்குள் வராது.   

ஆனால், ஒழுக்கம் என்ற புரிதலுக்குள் ‘அடங்கி நடத்தல்’ என்பதைக் கொண்டு வருவது, ஆட்சியாளர்களுக்கு மிகச் சாதகமானதொன்று. ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் என்பது, மாற்றுக் குரல்தான். 

ஜனநாயகமோ, வல்லாட்சியோ அதிகாரத்தை அடையும், அதனைப் பயன்படுத்தும் வழியில் வேறுபடுகிறதே அன்றி, அதிகாரத்தின் தாற்பரியம் என்பது மாறுவதில்லை. ஜனநாயகத்தில் மக்களால் வழங்கப்படும் அதிகாரத்தைத் தக்க வைப்பதே, அதிகாரத்தில் உள்ளவர்களின் பெருந்தேவையாக இருக்கிறது.   

ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்களின் அந்தத் தேவைக்கு, ஜனநாயகத்தின் அடிப்படையான மாற்றுக் குரல் என்பதும் தனிமனித சுதந்திரங்களும் உதவி செய்வதாக இல்லை. ஆகவே, ஏதேனும் ஒரு வழியில், அந்தச் சுதந்திரங்களை மட்டுப்படுத்தவே அவர்கள் எத்தனிக்கிறார்கள்.   

இதற்கு ‘ஒழுக்கம்’, ‘ஒழுங்கு’ என்ற எண்ணக்கருக்கள் அவர்களுக்குப் பெருந்துணை செய்கின்றன. ‘அடக்கமான சமூகம்’ என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளாத மக்கள் கூட, ‘ஒழுக்கமான சமூகம்’ என்று சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விடயத்தில், நாம் எடுத்து நோக்கக்கூடிய குறிப்பிடத்தக்க உதாரணம் ‘சிங்கப்பூர்’.  

இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் அரசியல்வாதிகள், தேர்தல் மேடைகளில் முழங்குகின்ற ஒரு பொதுவான விடயம், “எமது நாட்டையும் நாம் சிங்கப்பூர் போல ஆக்குவோம்” என்பதாகும்.   

இந்தச் சிங்கப்பூர் கனவுக்கு முக்கிய காரணங்களிலொன்று,  மிகச் சிறிய நாடான சிங்கப்பூர், மிகக் குறுகிய காலத்தில் அடைந்த பொருளாதார வளர்ச்சியாகும்.  லீ குவான் யூ நடத்திக்காட்டிய ஒரு வகையான வளர்ச்சிப் புரட்சி என்றுகூட இதனைச் சொல்லலாம். ஆனால், இந்த வளர்ச்சிக்கு, இன்னொரு முகமும் இருக்கிறது. அதுதான் மனித உரிமைகள், சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடு.   
எவரும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கும் இணைவதற்குமான சுதந்திரத்துக்கு உரிமையுண்டு என்று மனித உரிமைகள் தொடர்பிலான உலகப் பிரகடனத்தின் 20ஆவது உறுப்புரை (Article 20 of the Universal Declaration of Human Rights) உரைக்கிறது.   

இதன்படியான ‘அமைதியான ஒன்றுகூடலுக்கான சுதந்திரம்’ என்பது உள்ளிருப்பு, வெளிநடப்பு, விழிப்புணர்வு, குழு விவாதங்கள், நாடக நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதாகும்.   

அமைதி வழியிலான ஆர்ப்பாட்டங்களை ஆதரிப்பதற்கான நியாயம் யாது என்று நாம் சிந்திக்கும் போது, ஐ.நாவுக்கான விசேட அறிக்கையாளராக இருந்த மாய்னா கியாய் குறிப்பிட்ட கருத்தை கவனத்தில் கொள்ளலாம்.“அமைதியான போராட்டங்களில் பங்கேற்பது என்பது வன்முறை, ஆயுத பலம் மூலமான எதிர்ப்பு, மாற்றத்தை உருவாக்குவதற்கான வழிமுறைக்கான ஒரு மாற்றாகும். இந்த மாற்று வழியை நாம் ஆதரிக்க வேண்டும். இதன் காரணத்தால் இது பாதுகாக்கப்பட வேண்டும்; அதுவும் மிக வலுவாகப் பாதுகாக்கப்பட வேண்டும்” என்கிறார் அவர்.   

சிங்கப்பூரைப் பொறுத்தவரை, இந்த ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் என்பது, சிங்கப்பூரின் பொது ஒழுங்குச் சட்டத்தாலும் பொதுக் களியாட்டச் சட்டத்தாலும் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகிறது.   

சிங்கப்பூரில் இந்த உரிமையானது, அங்கமைந்துள்ள ‘ஹொங் லிம்’ பூங்காவின் ஒரு மூலைக்கென மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கிறது. ‘ஹொங் லிம்’ பூங்காவின் அந்தப் பகுதிக்கு ‘பேச்சாளர்களின் மூலை’ (Speaker’s Corner) என்று பெயர்.   

சிங்கப்பூரின் குடிமக்கள், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் ஆகியோர் அரசாங்க இணையதளத்தில் முன் பதிவுசெய்த பிறகு, ‘பேச்சாளர்களின் மூலையில்’ ஆர்ப்பாட்டங்கள், கண்காட்சிகள், நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்பதுடன், அவ்விடத்தில் பெரும்பாலான தலைப்புகளில் சுதந்திரமாகப் பேசலாம்.   

இத்தகைய நடவடிக்கைகள், சிங்கப்பூரின் பிற பகுதிகளில் பெருமளவுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்தப் ‘பேச்சாளர் மூலை’ என்பதே, மிகப் பிற்காலத்தில் 2000ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது.   

2008இற்கு முன்னர் இந்த உரிமை மேலும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. அதாவது, 2008இற்கு முன்னர் ‘பேச்சாளர் மூலை’இல் பேசுவதற்கோ, ஒரு நிகழ்வை நடத்துவதற்கோ பொலிஸாரிடம் முன் அனுமதி பெற வேண்டியதாகவே சட்டம் அமைந்திருந்தது. 2008இற்குப் பின்னர், இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. சிங்கப்பூரின் அரசமைப்பு, சிங்கப்பூர் குடிமக்களுக்கான பேச்சு, ஒன்று கூடல் சுதந்திரங்களை அங்கிகரித்தாலும் பொது ஒழுங்குச் சட்டம் அனுமதி பெற வேண்டிய மட்டுப்பாட்டை கொண்டிருக்கிறது. சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சியும் அதனால் ஏற்பட்ட பொருளாதாரம், உட்கட்டமைப்பு, வாழ்க்கைத்தர ரீதியாக முன்னேற்றங்களும் மிகுந்த போற்றுதலுக்கு உரியவை.   

ஆயினும், பொருளாதார வளர்ச்சி மட்டுமே, யாவரும் விரும்பும் மகிழ்ச்சிகரமானதும் திருப்திகரமானதுமான வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. 2015ஆம் ஆண்டின் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வறிக்கையில், ஆசியாவிலேயே அதிகளவு மனவழுத்தப் பிரச்சினை கொண்ட நாடாக, சிங்கப்பூர் காணப்படுகிறது எனக் கூறப்பட்டுள்ளது.   

 மனிதன் ஒரு சமூக விலங்கு; மனிதன் ஓர் அரசியல் விலங்கு; அதனால் தான் மனித வரலாற்றில் தனது அரசியல், சமூக உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள மனிதனானவன் எதையும் இழக்கவும் தியாகம் செய்யவும் தயாராக இருந்ததைக் காணலாம்.   

மனித உரிமைகளும் சுதந்திரங்களும் இல்லாத அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஆனால், பொருளாதார ரீதியான வசதி வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கை என்பது, மனிதனைப் பொறுத்தவரையில் ஒரு வசதியான சிறையாகும் என்பதுதான் உண்மை.   

காட்டில் இயற்கையாகவும் சுதந்திரமாகவும் வாழும் விலங்கொன்றைப் பிடித்து வந்து, அனைத்து வசதிகளும் கவனிப்பும் உள்ள மிருகக்காட்சிச் சாலையில் அடைப்பதைப் போன்றதுதான், சமூக, அரசியல் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்ட மனித வாழ்க்கையும் ஆகும்.  

இன்று கொழும்பு வாழ் மத்திய தர, உயர் மத்திய தர, மேற்தர மக்கள், தம்முடைய போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிக்காது, தமது வசதியீனங்களைக் களையும் ஓர் அற்புதமான ‘ஒழுக்கம்’ மிகுந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக ‘ஆர்ப்பாட்ட இடத்தைப்’ பார்க்கலாம்.   

ஏனெனில், இலவசக் கல்வியும் தொழில்வாய்ப்புகளும் ஊதிய அதிகரிப்புகளும் அவர்களது முக்கிய பிரச்சினையாக இல்லாது இருக்கலாம். ஆனால், அவர்கள் மார்ட்டின் நியோமெல்லரின் கவிதையொன்றை ஞாபகம் வைத்திருக்க வேண்டும்.  

‘முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளுக்காக வந்தார்கள்  
நான் பேசவில்லை; ஏனென்றால் நான் ஒரு சோசலிஸ்ட் அல்ல.  
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள்  
நான் பேசவில்லை; ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி அல்ல.  
பின்னர் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்  
நான் பேசவில்லை; ஏனென்றால் நான் ஒரு யூதர் அல்ல.  
பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள்  
எனக்காகப் பேச யாரும் இருக்கவில்லை.  

கொழும்பில் நடக்கும் எல்லா ஆர்ப்பாட்டங்களும் உண்மையானதொரு பிரச்சினைக்காகவும் நியாயமானதொரு காரணத்துக்காகவுமே நடக்கிறது என்று சொல்வதற்கில்லை. அப்படி நடக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை.   

ஒரு மனிதன் தன்னுடைய ஆதங்கம் மற்றவர்களுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய பிரச்சினை அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதற்காகவும் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துத் தனது பிரச்சினைக்கொரு தீர்வைப் பெறுவதற்கான ஆதரவை அவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்வதற்காகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறான். அவனை யாருக்கும் தெரியாத ஒரு மூலைக்குள் அடக்குவது, அவனுடைய அந்த முயற்சியின் அடிப்படையையே இல்லாதொழிப்பதாகவே அமையும்.  

19ஆம், 20ஆம், 21ஆம் நூற்றாண்டுகளில் மனித உரிமைகளின் பெறுமதியையும் மனித உயிர்களின் பெறுமதியையும் உலகம் புரிந்துகொள்ள, இரண்டு உலகப் போர்களும் பல கோடி உயிரிழப்புகளும் தேவைப்பட்டன.   

அப்படி மாபெரும் விலைகொடுத்துப் பெற்றுக்கொண்ட உரிமையையும் சுதந்திரங்களையும் இலகுவில் விட்டுக்கொடுத்துவிடுவதைப் போன்றதோர் அபத்தம் இருக்கமுடியாது. சிலவேளைகளில், மற்றவர்கள் தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி, இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களைச் செய்வது உங்களுக்கு வசதிக்குறைவை ஏற்படுத்தலாம். அப்படியாக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களின் கோரிக்கைகள் உங்களுக்கு அர்த்தமற்றதாகத் தெரியலாம்; அவர்களின் நியாயங்கள், தத்துவங்கள், அரசியல், எண்ணங்கள் என்பவற்றுடன் நீங்கள் உடன்படாது இருக்கலாம். ஆனால், இந்த இடத்தில் உரிமைகளின் தாற்பரியத்தை அனைவரும் புரிந்துகொள்வது அவசியம்.   

வோல்டேயர் இதை இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு எடுத்துரைக்கிறார். “உன்னுடைய கருத்துடன் நான் உடன்படிவில்லை; ஆனால், அதைச் சொல்வதற்கு உனக்கிருக்கும் உரிமையைப் பாதுகாக்க, என் உயிரைக் கூடத்தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்”.    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஆர்ப்பாட்ட-இடமும்-புலிகேசிச்-சிந்தனைகளும்/91-245212

"ஒரு மனிதன் தன்னுடைய ஆதங்கம் மற்றவர்களுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய பிரச்சினை அனைவருக்கும் தெரியவேண்டும் என்பதற்காகவும் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துத் தனது பிரச்சினைக்கொரு தீர்வைப் பெறுவதற்கான ஆதரவை அவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்வதற்காகவே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறான். அவனை யாருக்கும் தெரியாத ஒரு மூலைக்குள் அடக்குவது, அவனுடைய அந்த முயற்சியின் அடிப்படையையே இல்லாதொழிப்பதாகவே அமையும்."

image_494b706a87.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.