Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மனித உரிமைகள் பேர­வையில் இலங்­கையின் நிலை என்ன?

Featured Replies

முன்னாள் மைத்திரி – ரணில் அரசு 2015 ஆம் ஆண்டு .நா.வின் மனித உரிமைப் பேரவையில் ஏற்றுக்கொண்ட 30/1 ஆம் 34/1 ஆம் 40/1 ஆம் பிரேரணைகளுக்கு இணை அனுசரணையிலிருந்து தான் விலகிக்கொள்வதாகவே இப்போது கோத்தபாய – மஹிந்த அரசு அங்கு கூறியிருக்கிறது. அதற்குப் பின்வரும் காரணங்களையும் கூறியிருக்கிறது.

30/1ஆம் 34/1ஆம் 40/1ஆம் பிரேரணைகள் இலங்கையின் யாப்புக்கு எதிரானவையாகும். அவை இலங்கையின் இறையாண்மையையும் மீறுகின்றன. அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி பெறாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். அதற்கு அப்போதைய அமைச்சரவையிடம் ஒப்புதல் பெறப்படவும் இல்லை. அதைப் பாராளுமன்றத்தில் அறிவிக்கவும் இல்லை. இவற்றால் ஜனநாயக விழுமியங்கள் மீறப்பட்டிருக்கின்றன.

இதை இலங்கையின் சார்பில் முன்வைத்த வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன 30/1 ஆம் பிரேரணை எந்த வகையில் இலங்கையின் யாப்புக்கு முரணாகிறது. இலங்கையின் இறையாண்மையை மீறுகிறது என்பதை கூறவில்லை.

உண்மையில் .நா.வின் மனித உரிமைகள் பேரவைக்கும் அரசுக்கும் தமிழ் தரப்புக்கும் மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக 30/1 ஆம் 34/1 ஆம் 40/1 ஆம் பிரேரணைகள் விரிவாகத் தெரிந்திருக்கின்றன. சிலருக்கு அவை பற்றி தெரிந்திருக்கின்றபோதும் 20 நிபந்தனைகளும் துலாம்பரமாகத் தெரியாது. முன்னாள் அரசு 30/1 ஆம் பிரேரணை யாப்புக்கு முரணல்ல எனவும் இறையாண்மைக்கு எதிரல்ல எனவும் ஏற்றிருக்கையில் இந்நாள் அரசு அதற்கு மாறாகக் கூறுகிறது.

முன்னாள் அரசு நாட்டின் பெரும்பான்மைச் சமூகமான சிங்களவரிடம் பகிரங்கப்படுத்தாதிருக்கவே மறைத்திருக்கலாம் என நினைக்கிறேன். மத்திய அரசு பேரின ஆதிக்கத்தில் இருந்ததாலும் இது போர்குற்ற விவகாரம் என்பதாலும் நாட்டின் முக்காற் பங்கினர் சிங்களவரே என்பதாலும் பாதுகாப்புத்துறையில் 100 வீதம் சிங்களவரே என்பதாலும் 30/1 ஆம் பிரேரணை கெடுபிடிகளின்றி .நா. மனித உரிமை ஆணையின் இணக்கப்பாட்டுடனேயே அமுலாவது தனக்கும் எளிது என்றே அந்த அமைப்பு திரும்பத் திரும்ப இருமுறை தவணைகளும் வழங்கியிருக்கலாம்.

எனினும் அதன் விட்டுக் கொடுப்பான இந்த அணுகுமுறை இப்போது கோத்தபாய– மஹிந்த அரசு இணை அனுசரணையிலிருந்து விலகியதுதான் சவாலுக்குட்படுத்தப்பட்டிருக்கிறது. மனித உரிமை ஆணையம் தமிழ் தரப்புக்கு எதையேனும் செய்தே ஆக வேண்டும் என்னும் நிலைப்பாட்டுக்கும் கொண்டு வந்திருக்கிறது. காரணம் இதில் அதன் சுயகெளரவமும் தமிழ் தரப்பின் நம்பிக்கையைத் தக்க வைப்பதற்கான கடப்பாடும் பொதிந்திருக்கிறது.

அண்மையில் தான் சமஷ்டி யாப்புக்கு முரணல்ல என உயர் நீதிமன்றம் பொருட்கோடல் செய்திருந்தது. எனவே பல்லின ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி வழங்கப்படுவதன் மூலம் தேசத்தின் இறைமை பாதிப்புறாது. இதை மத்தியில் கூட்டாட்சி மாநில சுயாட்சி என்பார்கள். பல்லின நாட்டில் இனங்களுக்குள் வழங்கப்படும் உள்ளக சுயநிர்ணயம் எனவும் இதைக் குறிப்பிடலாம்.  

பல்லின நாட்டில் ஓர் இனம் மட்டுமே அதிகாரப் பரவல் செய்யாது முழு சுய நிர்ணயத்தையும் முழு இறைமையையும் உரித்தாக்கிக்கொள்வதற்கே முனைகிறார்கள். இது சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணானதாகும்.

தினேஷ் குணவர்த்தன சிரேஷ்ட சமதர்மவாதியான பிலிப் குணவர்த்தனவின் புதல்வர். இவருக்கு இது தெரியாதிருக்காது. 2015 ஆம் ஆண்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்துக்கும் அறிவிக்காமலேயே அதிலிருந்து விலகுவதாக இந்நாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறுகிறார்.

இதன் மூலம் இவர் இணை அனுசரணையிலிருந்து மட்டுமே விலகியதாகிறது. மங்கள சமரவீர போர்க்குற்றத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்புக் கூறவும் ஒப்புக்கொண்டே 30/1 ஆம் பிரேரணையை அமுல்படுத்த இணைஅனுசரணையைப் பெற்றிருந்தார். எனவே இலங்கை இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலகினாலும்கூட போர்க்குற்றத்தை ஒப்புக்கொண்டதும் பொறுப்புப் கூறலை ஒப்புக் கொண்டதும் அப்படியே இருக்கும் அவற்றிலிருந்தும் இலங்கை விலகியதாகாது.

அதனால்தான் தினேஷ் குணவர்த்தன உள்நாட்டில் ஒரு நீதிபதியை நியமித்து விசாரிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். இதன் வெளிப்பாடும் என்ன? குற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்பது தானே?

ஆக மங்கள சமரவீரவைப்போல் தினேஷ் குணவர்த்தனவும் கூட குற்றத்தை ஏற்றுக் கொண்டு பொறுப்புக் கூறவும் ஒப்புக்கொண்டேயிருக்கிறார். அவர் 30/1 ஆம் பிரேரணையை ஏற்று இணை அனுசரணைக்கு இணங்கியிருக்கையில் இவர் 30/1 ஆம் பிரேரணையை ஏற்காமல் இணை அனுசரணையிலிருந்து விலகியிருக்கிறார்.

தினேஷ் குணவர்த்தன குற்றத்தை மறுக்கவுமில்லை. பொறுப்புக்கூறலை நிராகரிக்கவுமில்லை. அப்படிச் செய்தால் மனித உரிமை ஆணையத்தின் பிடி மேலும் இறுகும் என்பதாலேயே அவற்றைத் தவிர்த்திருக்கிறார். குற்றம் புரியவில்லை; பொறுப்பு கூறத் தேவையுமில்லை என்னும் நிலைப்பாடு அவரிடம் இருந்தாலும்கூட அதனால் விளையும் பாதிப்பை எண்ணியே அவர் அதைத் தவிர்த்திருக்கலாம் என நினைக்கிறேன்.

உள்நாட்டு விசாரணையை இவர் முன்மொழிந்ததற்கும் காரணம் குற்ற ஏற்பை மறுக்கவில்லை. அதற்கான பொறுப்பேற்றலை நிராகரிக்கவுமில்லை என்பதற்கேயாகும். இதன் மூலம் சர்வதேச விசாரணைக்கும் கலப்பு விசாரணைக்கும் உடன்படப்போவதில்லை என்பதே இவரது நிலைப்பாடாகத் தெரிகிறது. இணை அனுசரணை வேண்டாம் என ஏன் கூறுகிறார்? 30/1 ஆம் பிரேரணைக்குரிய 20 விடயங்களிலும் மனித உரிமை ஆணையத்தோடு இணைந்து செயற்படவேண்டும். அவற்றுக்கான சூழல் இலங்கையில் இல்லை என்பதனாலேயேயாகும். சர்வதேச விசாரணைக்கும் கலப்பு விசாரணைக்கும் இலங்கை விருப்பமில்லை. உள்நாட்டு விசாரணைக்கு தமிழ் தரப்பு விருப்பமில்லை. தினேஷ் குணவர்த்தன உள்நாட்டு விசாரணையை மட்டுமே முன்வைத்தபோது மனித உரிமை ஆணையாளர் அதை நிராகரித்துவிட்டார். காரணம் உண்மையான நீதிக் கட்டமைப்பு இலங்கையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றே அவர் நம்புகிறார். அதுபோல் சர்வதேச விசாரணை மூலமோ கலப்பு விசாரணை மூலமோ தீர்ப்பு ஒரு தலைப்பட்சமாகிவிடும் என்றே இலங்கை காரணம் கூறுகிறது. 30/1 ஆம் பிரேரணைக்கான செயற்பாடுகளில் மனித உரிமை ஆணையத்தையும் இணைத்துக்கொண்டாலும்கூட ஒருதலைப்பட்ச முடிவே கிடைக்கும் என்றே இலங்கை நினைப்பது போல் தெரிகிறது.

தற்போது இலங்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்துக்குக் கொண்டு வரப்பட்ட பிரேரணைக்கு இங்கிலாந்தே முன்னணி வகிக்கிறது. எனினும் சமீபத்தில் அங்கு வெளியான கன்சர்வேடிங் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையை இரண்டாகப் பிரித்துக் காட்டியிருக்கிறது. அதே கட்சியே அத்தேர்தலில் வெற்றி பெற்றும் இருந்தது. அதன் பிறகு முன்பு முதன் முதலில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணை கொண்டுவந்து முன்னிலை வகித்திருந்த அமெரிக்காவும் கூட சமீபத்தில் இலங்கைத் தளபதியும் அவரது குடும்பமும் தனது நாட்டுக்கு வரக்கூடாது எனத் தடை விதித்திருக்கிறது. இலங்கையின் மனமாற்றத்துக்கு இவைகளும் காரணங்களாக இருக்கலாம். இலங்கையை இரண்டாகத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டு அமைந்த ஆட்சியே இங்கிலாந்தில் தற்போது அமைந்திருக்கிறது. இங்கிலாந்தின் தலைமைத்துவத்திலேயே தற்போதைய பிரேரணையும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதனால் தான் இலங்கை மனித உரிமை ஆணையத்துடன் சேர்ந்து 30/1 ஆம் தீர்மானத்தில் செயற்பட மறுக்கிறதோ? சர்வதேச விசாரணையோ கலப்பு விசாரணையோ உள்நாட்டு விசாரணையோ இதுவரை நிகழாதிருக்கையில் அமெரிக்கா இலங்கைத் தளபதியைப் போர்க்குற்றவாளியாக அடையாளப்படுத்தி அவரும் அவரது குடும்பமும் தனது நாட்டுக்குள் நுழையக்கூடாது எனத் தடை செய்ததால்தான் இலங்கை சர்வதேச விசாரணைக்கும் கலப்பு விசாரணைக்கும் விருப்பமில்லை என இறுதியாக முடிவு எடுத்ததோ?

அதனால்தான் 30/1 பிரேரணையிலிருந்தும் இணை அனுசரணையிலிருந்தும் இலங்கை விலகியதாக நான் நினைக்கிறேன். அப்போதும் கூட இலங்கை முன்வைத்த உள்நாட்டு விசாரணை என்னும் மாற்று யோசனையை .நா.வின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் நிராகரித்திருந்தார். அவரது கருத்துக்கள் இப்படி அமைந்திருந்தன.

உள்ளக செயற்பாடுகளில் இலங்கை தொடராகத் தோல்வியுற்றிருக்கிறது.

இலங்கையில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி மறுக்கப்படுகிறது.

இலங்கையில் சிறுபான்மைகள் குறித்து அக்கறை அவசியம்.

இந்நிலையில் இன்னுமொரு விசாரணை ஆணைக்குழுவை நியமிக்க நான் இணங்கவில்லை. பாதிப்புற்றோர் நீதி மறுக்கப்பட்டோராகவே தொடர்ந்தும் இருக்கிறார்கள் என்றார். அத்தோடு அவர் இலங்கை அரசு நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் மனித உரிமையிலும் முன்பு வழங்கியிருந்த வாக்குறுதிகளுக்கு மாறாக வேறொரு அணுகுமுறையை முன்வைத்திருப்பது பற்றி நான் கவலைப்படுகிறேன். கடந்த கால மீறல்கள் மீளவும் நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எனவே, மனித உரிமைப் பேரவையானது இலங்கையின் விடயத்தில் தொடர்ந்தும் அவதானமாகவே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். பின்வரும் விடயங்களும் அவரது அறிக்கையில் காணப்பட்டன.

இலங்கை அரசு எல்லா மக்களதும் தேவைகளையும் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும்.

முக்கியமாக சிறுபான்மைகளின் தேவைகளைப் பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக செயற்படுத்தப்பட்டவற்றை (30/1 ஆம் தீர்மானத்தில் உள்ளவற்றை)ப் பாதுகாத்துத் தொடருமாறு நான் இலங்கை அரசிடம் வலியுறுத்துகிறேன்.

காணாமற்போனோர் மற்றும் இழப்பீடு வழங்கல் அலுவலகத்திற்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒத்துழைப்பு வழங்கும்படியும் இலங்கை அரசிடம் வேண்டிக்கொள்கிறேன். காரணம் அவர்களின் குடும்பத்தினருக்கு நீதியையும் நிவாரணத்தையும் பெற உரிமை இருக்கின்றது.

19 ஆம் திருத்தச் சட்டப்படி இலங்கையின் சுயாதீன நிறுவனங்கள் பலமடைந்தன. இவை ஜனநாயகக் கட்டமைப்பின் முக்கிய விடயங்களாகும்.

சிவில் சமூகத்தின் சுயாதீன ஊடகத்துக்குரிய இடைவெளியும் பாதுகாக்கப்பட வேண்டும்.

சிவில் செயற்பாடுகள் பாதுகாப்பு அமைச்சுக்கு உட்பட்டு ஓய்வுபெற்ற படை அதிகாரிகளிடம் சென்றுள்ளன.

மனித உரிமை காப்பாளர்களும் ஊடகவியலாளர்களும் கண்காணிக்கப்படுகின்றனர்.

தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வைராக்கிய பேச்சுக்கள் அதிகமாவதைக் காணுகிறோம்.

கடந்த கால மனித உரிமை மீறல்களுக்குரிய தண்டனையற்ற கலாசாரம் தொடரவே செய்கிறது. இதுவே மிக அடிப்படைப் பிரச்சினையாக இருக்கிறது என்றெல்லாம் அந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

ஆக எல்லா மக்களது தேவைகள் எனவும் கூறிவிட்டு குறிப்பாக சிறுபான்மைகளின் தேவைகள் எனவும் கூறப்பட்டிருப்பதன் மூலம் பெளத்த சிங்களவரின் தேவைகள் மட்டுமே நிறைவேற்றப்படுகின்றன என்பதே அர்த்தமாகின்றது. கடந்த சில ஆண்டுகளாக செயற்படுத்தப்பட்டவற்றைத் தொடருமாறு கூறப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? 30/1 ஆம் பிரேரணையிலிருந்து அரசு விலகியதை .நா.வின் மனித உரிமை ஆணையாளர் ஏற்கவில்லை என்பதேயாகும். அதனால்தான் அவர் உள்நாட்டு விசாரணையையும் நிராகரித்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

காணாமற்போனோரின் குடும்பத்தினருக்கு நீதியையும் நிவாரணத்தையும் பெற உரிமை இருக்கிறது. அதற்கான இழப்பீடு வழங்கும் அலுவலகத்துக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் ஏன் குறிப்பிட்டார்? 30/1 ஆம் பிரேரணையிலிருந்து இலங்கை விலகுமாயின் அவற்றுக்கான செயற்பாடுகள் முடங்கிவிடும் என்பதற்காகவேயாகும். மிச்செல் பச்லெட் .நா.வின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் விடயத்தில் தொடர்ந்தும் அவதானமாகவே இருக்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறாரே. அதன்படி தான் இதுவரை அவதானித்தவற்றை பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

19 ஆம் ஷரத்துப்படி சுயாதீன நிறுவனங்கள் பலமடைந்தன. இவை ஜனநாயகக் கட்டமைப்பின் முக்கிய விடயங்கள்.சிவில் சமூக சுயாதீன ஊடக இடைவெளியில் பாதுகாப்பு இல்லை. சிவில் செயற்பாடுகள் பாதுகாப்பு அமைச்சுக்கு உட்பட்டு ஓய்வு பெற்ற படை அதிகாரிகளிடம் போயுள்ளன. மனித உரிமை காப்பாளர்களும் ஊடகவியலாளரும் கண்காணிக்கப்படுகின்றனர். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான வைராக்கிய பேச்சுக்கள் அதிகம். மனித உரிமை மீறல்களுக்குரிய தண்டனையற்ற கலாசாரம் தொடர்கிறது.

ஆக இவ்வாறு 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கையை .நா.வின் மனித உரிமைகள் ஆணையம் அவதானித்துக் கொண்டிருக்கும்போது 2015 ஆம் ஆண்டு குற்றத்தை ஒப்புக் கொண்டு பொறுப்புக் கூறலையும் ஏற்று 30/1 ஆம் பிரேரணையையும் ஏற்று இணை அனுசரணையையும் பெற்றுக் கொண்ட இலங்கை முழுமையாக இதில் ஈடுபாட்டைக் காட்டாததோடு பல விடயங்களில் உதாசீனமும் காட்டியது. கட்சி வேறுபாடின்றி எல்லோரும் இதில் ஒத்தொருமித்திருக்க வேண்டும். இவ்விடயத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உட்பட எல்லாமே தவறிழைத்திருக்கின்றன. அப்படி 74வீத சிங்கள மக்களிடமும் உரிய விளக்கத்தை வழங்கி இதை சாதித்திருக்க வேண்டும்.

ஜனாதிபதிக்குக் கூறவில்லை, அமைச்சரவைக்குத் தெரியாது, பாராளுமன்றத்தில் சொல்லவில்லை, யாப்புக்கு முரண் இறைமை மீறல் என்னும் காரணங்களை இப்போது திடீரெனக் கூறினால் அவற்றுக்கு இத்தனை கால விரயம் செய்ய வேண்டியதில்லை. தேசிய நிலைப்பாட்டை எடுத்து உடனே மனித உரிமை ஆணையத்திடம் விளக்கப்படுத்தியிருக்க வேண்டும்.

ஜனாதிபதிக்குக் கூறவில்லை. அமைச்சரவைக்குத் தெரியாது. பாராளுமன்றத்தில் சொல்லவில்லை என்பனவெல்லாம் உள்நாட்டு விவகாரம் அதற்கு மனித உரிமைகள் ஆணையம் பொறுப்பல்ல. இவ்வார்த்தைகளால் இலங்கையே தன்னை சர்வதேசத்திடம் மலினப்படுத்திக் கொள்கிறது. அறையின் ஆட்டத்தை அம்பலத்திலும் காட்டுவதா.

இலங்கையின் யாப்புக்கு முரணாகவும் இறைமைக்கு ஆபத்தாகவுமா .நா.வின் மனித உரிமைகள் ஆணையம் 30/1 ஆம் தீர்மானத்தை வழங்கி இணை அனுசரணையைக் கோரியது? அதன் 20 அம்சங்களிலும் எவை யாப்புக்கு முரணானவை, எவை இறைமைக்கு எதிரானவை என்றாவது தெளிவுபடுத்தியிருக்க வேண்டாமா?

ஒருவேளை யாப்புக்கான இலக்கணமும் இறைமைக்கான விதிமுறையும் பல்வேறுபட்டவை என்பதாலேயே அவை பற்றி விளக்குவதை தினேஷ் குணவர்தன தவிர்த்திருக்கலாம். இலங்கையிடம் இருக்கும் பேரின யாப்பும் பேரின இறைமையும் இந்த பல்லின நாட்டில் பல்லின தனித்துவ சமூகங்கள் மத்தியில் ஏற்புடையதல்ல என்பதே உண்மையாகும்.

நான் சிங்கள மக்களால் ஜனாதிபதியானவன் அவர்கள் விரும்பினால் தான் தமிழருக்கு எதையும் கொடுக்கலாம். அவர்கள் சுயநிர்ணயம், இறைமை, அதிகாரப் பரவல் என்றெல்லாம் கேட்கக்கூடாது. தொழில் வாய்ப்பும் அபிவிருத்தியுமே அவர்களுக்கு வழங்கப்படும். பெளத்த சிங்கள நாட்டைக் காப்பதே நான் பெற்ற மக்களாணை. அதற்காகவே எல்லாளன் என்னும் தமிழ் மன்னனை ருவன்வெலிசாயவில் கொன்ற சிங்கள மன்னனாக துட்டகைமுனுவுக்கு மாலை சூடி பதவியேற்றேன் என கோத்தபாய ராஜபக் கூறியிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தான் இலங்கை .நா.வின் மனித உரிமைகள் ஆணையத்துக்குப் போயிருக்கிறது.

https://www.virakesari.lk/article/77225

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.